நாம் பேசலாம். அதனால் என்ன பிரயோஜனம்? பசியில் வாடிவதங்கி; வயிறு சுருங்கி வாழ்வே இருண்டு வாடிக்கிடக்கும் ஈழத்தமிழனின் வாழ்வில், தமிழகத்தில் நாம் போடும் கூட்டங்களோ, ஆயிரம் பேர் அல்ல 5 ஆயிரம் ேர்க் கூடி எழுப்பும் கோஷங்களோ எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிடாது; ஈழப்பிரச்சனை உள்ளூர் அல்லது உள்நாட்டுப் பிரச்சனையில் இருந்து உலக, சர்வதேசப் பிரச்சனையாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. 85 களில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களிடத்தில் பத்திரிக்கை நிரூபர் ஒருக் கேள்வி கேட்கிறார். அமேரிக்கா எந்த அடிப்படையில் இலங்கை அரசுக்கு உதவுகிறது? அதற்க்கு தலைவரின் பதில் : இலங்கையில் உள்ள திரிகோண மலை அடிவாரத்தில் ஒரு நிலையான கப்பல்ப்படை தளத்தை அமைத்துக்கொள்ள அமேரிக்கா விரும்புகிறது; அப்படி அமைத்துக்கொண்டு தெற்காசிய நாடுகளையே தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமேரிக்கா விரும்புகிறது; அதற்க்கு இலங்கை அரசின் ஆதரவு தேவைப்படுகிறது; அதனால் அமேரிக்கா இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது என்று சொல்லி இருக்கிறார். தலைவரின் பதிலின் மூலமே ஈழம் 85 களிலே சர்வதேசப்பிரச்ச்சனையாக உருவெடுத்து இருப்பதை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆகவேதான் சொல்கிறோம் ஈழத்தை சர்வதேசக் கண்ணோட்டத்தில் பாருங்கள்; உலக அரங்கில் ஈழப்பிரச்சனையை பேசுங்கள்; உலகத்தின் செவுட்டுக் காதுகளில் கேட்குமாறு உரத்துப் பேசுங்கள் என்று. அன்றி அப்படி இல்லையேல், சர்வதேசக் கண்ணோட்டத்தில் பாராமல் உள்ளூர் அரசியல் பகையை வைத்து அரசியல் செய்ய நினைத்துக்கொண்டு பேசுவோமானால் இங்கே நாம் போடுகிற கூட்டங்களும், கோஷங்களும், கொள்கை முழக்கங்களும், முத்துக்குமார், கடலூர் அன்னவள்ளியை சேர்ந்த ஆனந்த், ஜெயந்கொண்டம் ராஜசேகர், புதுக்கோட்டை பாலசுந்தரம், நெல்லை குருவிக்குளம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் சிவானந்தம், சீர்காழி ரவிச்சந்திரன், கடலூர் சுப்பிரமணி, சிதம்பரம் ராஜேந்திரன், விஜயராஜ் போன்ற தியாகிகளின் தியாகங்களும் மண்ணுக்கு இரையாகுமே ஒழிய எம்மக்களின் நீண்டநெடிய லட்சியத்தை அடையவோ, பால்சுரக்காத தாயின் மார்பை சப்பி பால்...பால் என்று அழும் பிஞ்சுகளின் பசியைப் போக்கவோ உதவாது என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.
இங்கே சிலர் ஈழப்பிரச்சனையை வைத்து பகடி ஆடுகிறார்கள். தமிழர்களை பிரித்தாள நினைக்கிறார்கள்; அவர்கள் வேறு யாருமல்ல, அதிதீவிர தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் என்று தம்மைத்தாமே அடையாலப்படுத்துக் கொண்டு புகழ்ந்துக் கொள்ளும் கோமாளிகள். வேட்டிப் பேச்சிலும் வீண் பொழுதுப் போக்கிலும் நேரத்தை கழித்து தமிழர்களை திரையரங்க இருளில் மூழ்கடித்த காலி டப்பாக்கள். இவர்கள் தான் கனடாவில் விடுதலைப்புலிகளின் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு இளையராஜாவின் இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கோமாளிகள், காலி டப்பாக்கள் நவம்பர் மாதம் துக்க மாதம் எனவே கொண்டாட்டங்கள் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மாவீரர்கள் தினம் துக்க தினமா? மேதகு பிரபாகரன் அவர்கள் சொல்வதையே கேட்போமே... 1989 ஆம் ஆண்டு முதல் மாவீரர்கள் தின உரையில் தலைவர் பேசும் போது, கார்த்திகை திங்கள் நவம்பர் 27 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் சங்கர் என்ற போராளியின் நினைவுதினம் நவம்பர் 27, அந்த தினத்தை தான் நாம் மாவீரர்கள் தினமாக அறிவித்து உள்ளோம். இயக்கத்தின் முக்கியதளபதியாக இருந்தாலும் கடைசி வீரராக பணியாற்றிய போராளியாக இருந்தாலும் எல்லோரும் சமம் என்பதை உணர்த்தவே அனைத்து போராளிகளின் நினைவாக நவம்பர் 27 யை மாவீரர்கள் தினமாக கொண்டாடுகிறோம். எம் இனம் இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது அதற்க்கு இயக்கத்திற்கும், தமிழீழத்திற்கும் தம் இன்னுயிரை நீத்த 1207 போராளிகளின் தியாகமே காரணம். இந்த தியாகிகளின் தியாகத்தால் எம் இனம் உலக அரங்கில் பெருமை கொள்கிறது. இதை இனி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவோம் என்று பிரகடனப்படுத்தினார். அடுத்து 1990 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாவீரர்கள் தின உரையில், எம் இன சுதந்திரத்திற்காக எம் மக்களின் கவுரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை நீத்த இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எம் இதயக்கோவிலில் வைத்து பூசிக்கப்படவேண்டியவர்கள் என்று கூறினார். அடுத்து 1993 ஆம் ஆண்டு மாவீரர்கள் தின உரையில் தலைவர் இவ்வாறு பேசியுள்ளார்.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே...
இன்று மாவீரர் நாள் !
நமது தேசவிடுதலை இயக்கத்தின் வரலாற்றுச் சிற்பிகலான, நம்மைவிட்டுப் பிரிந்த மாவீரர்களின் நினைவுநாள். இன்று அடிமைத்தளையும், எவலார்கலாயுமிருந்த நிலையையை மாற்றி நமது தேசத்தை விடுதலைப் பூமியாக்க ஒரு வீரமிக்க போரை இந்த மண்ணின் விடுதலைக்காக ஆற்றிய அம்மாவீரர்களின் நினைவை நெஞ்சிற் சுமந்து போற்றுகின்றோம். பராதீனம் செய்ய முடியாத நமது தாய் மண்ணிற்கான உரிமையை " எங்கள் நாடு எமக்கே உரியது" என்ற கோட்பாட்டுடன் சர்வதேச அளவில் அந்தப் போராளிகள். மாவீரர் நாள் என்பது ஒரு துக்கநாளோ, அழுதுப் புலம்பும் நாளோ அல்ல. அந்நாள் ஒரு புத்துயிர்க்கும் நாள்.பிரதிக்ஞ்சையும் உறுதிப்பாடும் கொண்ட நமது தேசிய எழுச்சி நாள்!
(நன்றி: மாவீரர் உரைகள் நேர்காணல்கள் புத்தகம்)
மாவீரர் தினத்தின் உண்மையான நோக்கத்தை அல்லது நியாயத்தை தலைவரின் சொல்லில் இருந்தே பார்த்தோம். அப்படித்தான் மாவீரர்கள் தினம் உருவாக்கப்பட்டது. தமிழ்தேசத்திர்க்கு விலைமதிப்பில்லாத தம் இன்னுயிரை துறந்து மண்ணின் விடுதலைக்கு களமாடிய, இன்னமும் களமாடிக்கொண்டிருக்கிற தியாகிகளை நினைவுகூர்ந்து, எந்த லட்சியத்தை தம் நெஞ்சில் சுமந்தார்களோ, எந்த கொள்கைகாக்க தம் உயிரை நீத்தார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று சூளுரைக்கும் அல்லது உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் நாளே மாவீரர்கள் நாள். மாவீரகள் சாவிற்கு அஞ்சக்கூடியவர்கள் அல்ல. அவர்களின் இறப்பு சாதாரண நிகழ்வும் அல்ல. கண்ணீர் சிந்தி, அழுது புலம்பி அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் கோமாளிகள் இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.
நாம் ஏன் இளையராஜாவை ஆதரிக்கிறோம்? உலகில் பத்துக்கோடிக்கும் மேல் தமிழர்கள் இருக்கிறார்கள்; அந்த பத்துக்கோடிக்கும் அதிகமான தமிழர்கள் அனைவருக்கும் ஈழ விவகாரம் சென்றடைந்ததா? ஈழத்தமிழர்கள் ஆடும் இன்னல்களை கண்டும், கேட்டும் அதனால் அவன் மனம் வெந்து வீதிக்கு வந்தானா? என்பது ஆயிரம் மில்லியன் கேள்விதான்; ஆனால் அந்த பத்துக்கோடிக்கும் மேலான தமிழர்கள் மட்டுமில்லாது தமிழர்கள் அல்லாத பிற மொழித் தோழர்களும் இளையராஜாவின் இசைக்கு கட்டுப்பட்டவர்கள். ஆகவேதான் இளையராஜா அங்கெ சென்று இசைநிகழ்ச்சி நடத்தும் போது அது அவரது ரசிகர்கலானவர்களின் கவனத்தில் நிச்சயம் பதியும். எதற்க்காக அந்த நிகழ்ச்சி என்று அவர்கள் ஆராயும் வேளையில் தமிழீழத்தின் நோக்கமும் புலிகளின் நோக்கமும் அவர்களை சென்றடைந்து அது ஒரு பேரெழுச்சியாகவும் மாற வாய்ப்புள்ளது. எனவே தான் இளையராஜாவின் கனடா நிகழ்ச்சியை நாம் வரவேற்கிறோம்; ஆதரிக்கிறோம்.
அடுத்ததாக இலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, சுதந்திரமான நீதி விசாதரனையை ஐ.நா மேற்கொள்ள வலியுறுத்தியும் லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்தில் ‘பிரித்தானியா தமிழர் பேரவை’ சார்பில் உலகத் தமிழர் பன்னாட்டு தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை பிரிட்டன் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழுவும் இணைந்து நடத்துகின்றன. இந்த மாநாட்டில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து தி.மு.க வின் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், தி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. எம்.பி.கள் தி.ஆர்பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கறிஞர் கே.எஸ்.இளங்கோவன் போன்றோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு லண்டன் சென்று உள்ளனர்.ஆனாலும் தமிழ்தேசியக் களத்தில் நிற்கும் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொது செயலர் வைகோ, கொளத்தூர் மணி, சீமான் போன்ற சிலர் இம்மாநாட்டை புறக்கணித்து உள்ளனர். இவர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேட்டால் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொள்வதனால் அங்கெ நாங்கள் கலந்து கொள்ளமுடியாது என்றும், வழக்கம் போலவே சேற்றை வாரி இறைக்கும் செயலில் முனைப்பு காட்டி உள்ளனர். உலகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டிய சர்வதேசப் பிரச்சனையை உள்ளூர் அரசியல் பகையை காரணம் காட்டி புறக்கணிப்பது சரியான நிலைப்பாடுதானா என்பதை அவர்களே சிந்தித்துப் பார்க்கட்டும்...
முனைவர் அ .ப.அறவாணன் அவர்கள் சொல்வதைப்போல இதுநாள் வரையில் தமிழர்கள் மத்தியில் உள்ளது கூட்ட உணர்ச்சியே ஒழிய கூட்டு உணர்ச்சி அல்ல என்பது நூறு சதவிகிதம் பொருத்தமே... தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் கூட்டு உணர்ச்சியை உருவாக்க முன்வரவேண்டும்
தமிழினத்தை ஒடுக்க ஏன் முழு உலகமும் முனைப்பு பெற்று நின்றது? தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிக்க ஏன் முழு உலகமும் முனைப்பு பெற்று நின்றது? நம் கண்முன் கிடக்கும் இருபெரும் கேள்விகள். அதைப் பற்றி யோசிக்க மறுக்கிறோம்... உடனே நம்மிடம் இருந்து பதில் காங்கிரஸ் காரணம், கருணாநிதி காரணம் என்று மிக எளிதாக சொல்லிவிட்டு அரசியல் செய்ய போய்விடுகிறோம்...
அங்கே தமிழினம் அழிவதற்கு காங்கிரசும் ஒரு காரணம். ஆனால் காங்கிரஸ் மட்டும் தான் காரணம் அல்ல... 30ஆண்டுகால ஆயதப் போராட்டக் காலத்தில் எந்த நாடு புலிகளை ஆதரித்தது. ஈழத்தை அங்கீகரித்து... புலிகள் இயக்கம் என்பது வெகுமக்கள் இயக்கம் தான் என்பதை இதுநாள் வரையில் நம்மால் உலக குருட்டுக் கண்களுக்கு நிருபிக்க முடிந்ததா? குறைந்தபட்சம் இந்திய அளவிலாவது எடுத்து செல்ல முடிந்ததா?
உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் - பெரிதும் அறியப்படாத ஒரு மிகச் சிறிய மக்கள் இனத்திற்குள் இருந்து - உருவாகிய ஒரு இயக்கம், உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றுக்குமே ஒரு முன்னுதாரணமாக ஆகி, தனித்துவமாய் எழுந்து நிற்பதை இந்த உலகத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த ஒரு நாட்டிருக்கும் எதிரான இயக்கம் இல்லை என்றபோதிலும் பெரும்பாலான நாடுகளில் இயக்கத்திற்கு தடை உள்ளதே ஏன்? இப்படி ஒவ்வொரு நாட்டிலும் போராளிக்குழுக்கள் ஆயுதத்துடன் கிளம்பிவிடுவார்களோ? அதற்க்கு புலிகள் இயக்கம் முன்மாதிரியாக இருந்துவிடுமோ என்று அச்சப்படுகின்றன! எனவே தான் உலக நாடுகளில் தமிழன் எங்கு சென்றாலும் அடிக்கின்றான். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இன்னமும் இலங்கையில் புலிகள் இயக்கத்திற்கு தடையே கிடையாது. தற்போதுதான் தடை விதிக்கலாமா என்பதையே விவாதித்து கொண்டு இருப்பதாக கேள்வி பட்டேன்... எனவே தான் சொல்கிறேன் நம் பிரச்சனையை மெதுவாகவோ அல்லது உள்ளூரில் வைத்தோ பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் தமிழீழத்தின் அவசியத்தை, தமிழர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை, விடுதலைப் புலிகள் உருவாக நேரிட்ட சூழ்நிலையை உலகத்திற்கு சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை நாம் எல்லோரும் சேர்ந்துதான் செய்யவேண்டும். ஒன்றுபடவேண்டிய காலம் வந்துவிட்டது; அவசியம் இருக்கிறது. புலிகள் வலுவாக இருந்த காலத்தில் நாம் செய்திருக்க வேண்டிய பணிகள் தான் இவை. ஆனால் அதை நாம் செய்யத் தவறிவிட்டோம். உலகில் எந்த ஒரு போராளிக்குழுக்களுக்கும் இல்லாத சிறப்பு விடுதலைப் புலிகளுக்கு உண்டு என்றால், பிரபாகரனால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அவரை தாண்டியும் வளர்ந்தது என்பதுதான்; அப்படி ஒரு சிறப்பான கட்டுமானப் பணியை செய்து முடித்த மாவீரன் தான் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன். அவரை தாண்டியும் வெற்றிகளை குவிக்க வல்ல மாவீரர்களை உருவாக்கினார். ஆனால் இன்று புலிகள் சிதறிக்கிடக்கிறார்கள்; இல்லை, இல்லை தாயக விடுதலைக்காக வெடித்து சிதறி இருக்கிறார்கள்! மீண்டும் புலிகளே எழுந்து வந்து போராடவேண்டும் என்று விரும்புவது அல்லது வலியுறுத்துவது தவறான கருத்தியல். தமிழீழப் போராட்டம் என்பது இரண்டு கட்டங்களை தாண்டிவிட்டது, அதாவது ஈழத்தந்தை செல்வா தலைமையிலான அமைதிப் போராட்டம் அது நிறைவேறாமல் போகவே தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார் எம் பிள்ளைகள் ஆயுதம் ஏந்தியும் போராடுவார்கள் என்று. அந்தப் பிரகடனத்தை உள்வாங்கிக்கொண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டம் நடந்தது. மீண்டும் ஆயுதப்போராட்டம் என்பது கடினமான ஒன்றாகவே பார்க்கமுடிகிறது. எனவே அடுத்தக்கட்டமான அரசியல் ரீதியான முன்னெடுப்புகளை முன்னெடுத்து அரசியல் போராட்டம் செய்யவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். தெற்கு சூடானுக்கு ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி விடுதலைப் பெற்று தந்ததைப் போல தமிழீழத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதற்க்கு உலகத்தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை களத்தில் நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. தமிழீழம் என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய விடுதலை கோட்பாடு. இருப்பினும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை காக்கவேண்டிய தலையாய கடமையும் நம் தலையிலே விழுந்திருக்கிறது. அதுதான் இன்றைய அதிமுக்கிய கோரிக்கையாகவும் உள்ளது. திட்டமிட்டு நடைபெறும் இனக்கலப்பை தடுக்கவும் கலாசார சீரழிவை தடுக்கவும் உலக நாடுகளின் கதவை தட்டவேண்டிய கடமை நம்முன் கிடக்கிறது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்ககூடிய நாம் இலங்கைக்கு எதிராக அமேரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஏன் ஆதரித்தோம்? முரண்பாடுகள் இருந்தாலும் உலகப்பார்வைக்கு தமிழீழம் செல்லும் என்ற நம்பிக்கையில் தானே; அதே கொட்ப்பட்டுடன் தான் இன்று பிரித்தானியா தமிழர் பேரவை நடத்தும் மாநாட்டையும் ஆதரிக்கிறோம்; வரவேற்கிறோம்....
எழுச்சித் தமிழர் திருமா சொல்வதைப் போல
"உத்திகளும் செயல்தந்திரங்களும் மாறலாம்;
பாதைகளும் கூட மாறலாம்; ஆனால் ஈழ
விடுதலைக்கான நோக்கமும், இலக்கும்
மாறாது! காலம் தள்ளிப் போகலாம் ;
ஆனால் கடமை மறந்துப் போகாது !
புலிகள் மீண்டும் எழுவார்கள் !
இந்த நம்பிக்கையை வளர்ப்பதும்
தமிழீழ அரசியலை அடைகாப்பதும்
தமிழகத்தின் கடமையாகும் - குறிப்பாக
விடுதலை சிறுத்தைகளின் கடமையாகும் !
கனவை நிறைவேற்றப் போராடுவோம் !
புலிகளின் கனவை நனவாக்கக் களமாடுவோம் !!
இந்தக் கருத்தியலை விடுதலை சிறுத்தைகள் மட்டுமல்லாது தமிழீழத்தை எதிர்நோக்கும் ஒவ்வொருத் தமிழனும் நெஞ்சில் நிறுத்திக் களமாட வேண்டியது கடமையாகிறது.
ஒன்றுப் பட்டு உலக கதவுகளை தட்டுவோம் !!
மாவீரர்களின் ரத்தத்தில் வரையப்பட்ட
தமிழீழத்தை கட்டி எழுப்போவோம் !!
தாயக விடுதலைக்கு தன்னுயிரை நீத்த மாவீரர்களுக்கு ஆயுதம் ஏந்தாத விடுதலைப் புலியாக, விடுதலை சிறுத்தையாக எம் செம்மாந்த வீரவணக்கத்தை சொல்லிக் கொள்கிறேன்...
தமிழர்களின் தாகம் ...தமிழீழ தாயகம்...
-----------------------------
என்றும் அன்புடன்
அங்கனூர் தமிழன்வேலு