ஞாயிறு, 30 டிசம்பர், 2012

மனிதநேயமே உந்தன் விலை என்ன?


                வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் ! உலகில் எல்லா உயிர்களின் மீதும் நேசம் செய்ய வேண்டும் என்று இதை விட அழகாக சொல்லிவிட முடியாது; எம் தமிழ் தமிழ் பாட்டன் வள்ளலார் சொன்ன வரிகள் இது; அவர் பிறந்த இதே என் தாய் தமிழகத்தில் மனித நேயத்தாலும் மறுக்கப்பட்ட ஒருவர் இருக்கிறார்  என்றால் என் சகோதரன் அபுதாஹீர் தான்; காக்கைக்கும் குருவிக்கும், நிலத்திற்கும், நீருக்கும் கரிசனம் காட்டும் என் தாய் தமிழகம், என் சகோதரன் அபுதாஹீர் மீது  பரிதாபம் கூட காட்ட மறுக்கிறதே; அப்படியானால் இங்கே மனிதநேயம் இருக்கிறதா? விடுதலை என்ற சொல்லலை உச்சரிக்க யோக்கிதை எவருக்கும் இருக்கிறதா? என்று கேட்கத்தான் எத்தனிக்கிறேன்; ஆனால் மரணத்தின் படுக்கையில் இருக்கும் என் சகோதரனின் உயிரை காக்க உங்கள் கரங்களை பற்றத் துடிக்கிறேன் தோழர்களே ! என் சகோதரன் இறுதி மூச்சையாவது  சுதந்திரமாக விடட்டுமே உதவுவீர்கள் என்று நம்புகிறேன்; 

யார் இந்த அபுதாஹீர்? ஏன் சிறைக்கு சென்றார்? இப்போது  அவருக்கு என்ன ஆயிற்று? ஏன் அவருக்கு நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்? என்று கேட்கிற தோழர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்; அவர்களுக்காக அபுதாஹீர் பற்றிய சிறு குறிப்பு...

கோயம்புத்தூரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் தான் அபுதாஹிர். கோவை குண்டுவெடிப்பில் பொய்யாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் வாடிவரும் 33 வயது இளைஞர். கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்.இவருக்கு 18 வயதாக இருந்தபோது மதுரையில் நிகழ்ந்த ஒரு படுகொலையில் இவர் உட்பட மூவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 1998ல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.2003ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. இளம் வயதில் சிறைக்குள் தள்ளப்பட்ட அபுதாஹிர் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்டவராவார். ஆனால் சிறை வாழ்க்கை காலத்தில் மிகுந்த ஆர்வமுடன் கல்வி கற்றார். இளங்களை நிர்வாக இயல் ((B.B.A)) மற்றும் முதுகலை வரலாறு (M.A) ஆகிய பட்டப்படிப்புகளை கற்றுத் தேர்ந்தார்.

இந்த இளைஞனுக்கு SYSTEMIC LUPUS ERYTHEMATOUS என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நோயின் குணம் என்னவெனில், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்து கொண்டே இருக்கும். அபுதாஹிரின் பார்வை குறையத் தொடங்கிவிட்டது. சிறுநீரகங்களும் ஏற்கனவே பாதிப்படையத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் அபுதாஹிருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. அவர் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.இவரது இறுதி நாட்களை நிம்மதியாகக் கழிக்க அந்த விடுதலை உதவும் என அபுதாஹிரின் குடும்பத்தினர் கருதுகின்றனர்.

மேலும் துன்பப்படாமல் நிம்மதியாக மரணிக்க அரசு உதவவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார் அபுதாஹிரின் சகோதரர் சிக்கந்தர் பாஷா. இவர் கோவை உக்கடம் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.என் தம்பியின் வாழ்நாள் உடல் அளவிலும் மனரீதியாகவும் எண்ணப்பட்டு வருகிறது என்றார் அவர். மேலும் அபுதாஹிருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகள் குறித்து சிறைத்துறை கவனம் செலுத்தவில்லை என அவரது நண்பர் சம்சுதீன் கூறுகிறார். அபுதாஹிரின் உடல்நலக் குறைவை சீர்செய்யும் அளவு சிகிச்சைக்கான வசதிகள் கோவை மருத்துவக் கல்லூரியில் இல்லை. இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக நாங்கள் அறிந்துகொண்டோம் என்று கூறும் அபுதாஹிரின் நண்பர் சம்சுதீன் அபுதாஹிரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அவரது மோசமான உடல்நிலையில் இருந்து ஓரளவாவது அவரை மீட்க அரசு ஆவன செய்யவேண்டும் என்றார்.

அபுசித்தப்பா உடம்பு சரியில்லாத நிலையிலேயே ஒரு தடவை (பரோலில்) எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் சாப்பிடும் உணவைவிட அதிகமாக அவர் சாப்பிடும் மாத்திரைகள் இருந்தன. சித்தப்பா எப்போது வருவார் என ஏங்குகிறார் அபுதாஹிரின் அண்ணன் மகள் ஆறு வயது சுஹைபா. ( தகவல் : TMMK Website)

அபுதாஹீரை கைது செய்யும்போது அவருக்கு வயது 18. 18 வயதில் ஒருவர் குற்றம் இழைத்திருந்தால் அவரை கைது செய்யும் போது அது சிறுவர் குற்றமாகத்தான் கருதப்படும்; ஆனால் காவி காவல்துறை திட்டமிட்டே அவரது வயதை உயர்த்தி வழக்கமான வழக்காக பதிவு செய்தது; 15 ஆண்டுகாலம் சிறையில் வாடி வதங்கி தன் சொந்த தேவைகளுக்கே (கழிவறை செல்லக்கூட ) மற்றவர்களின் துணையை எதிர்பார்க்கும் நிலையில் உள்ள அபுதாஹீரை உடனடியாக பரோலில் விட உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது; ஆனால் காவி நெஞ்சம் கொண்ட காவல்துறையோ வெளியே விட மறுக்கிறது; நம்முடைய சட்டம் என்ன சொல்கிறது என்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டுகளுக்கு மேலாக ஒழுக்கமாக, குற்ற செயல்களில் ஈடுபடும் மனநிலையில் இல்லாமல் இருப்பாரேயானால் அவருக்கு  நன்னடத்தை அடிப்படையில் தண்டனையை குறைக்க அல்லது நீக்க பரிந்துரைக்க அரசுக்கு அதிகாரம் உண்டு; அந்த அடிப்படையில் பார்த்தால் கூட அபுதாகிர் சிறை வாழ்க்கை காலத்தில் மிகுந்த ஆர்வமுடன் கல்வி கற்றார். இளங்களை நிர்வாக இயல் ((B.B.A)) மற்றும் முதுகலை வரலாறு (M.A) ஆகிய பட்டப்படிப்புகளை கற்றுத் தேர்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவே இருந்துள்ளார்; ஆனால் பரிந்துரைக்க அரசுக்கு ஏன் மனம் இல்லை? அவரை வெளியே விட்டால்,  வெளியே வந்தவுடன் குற்றசெயல்களில் ஈடுபடுவார் என்று அரசு சந்தேகிக்குமானால் அதைவிட முட்டாள்கரமான அரசு வேறெங்கும் இருக்க முடியாது. இன்றைக்கு தேதியில் அபுதாகிர் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருக்கிறார் என்பது அரசுக்கு தெரியாதா? அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டிய தமிழகம் மவுனம் சாதிப்பதன் நோக்கம் என்னவென்று  என்னால் புரிந்துகொள்ள முடிகிறது; தமிழகம் மனிதநேயத்திற்கு பெயர் போனது என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்; அந்த மனித நேயம் யாருக்கானது? அதற்க்கு ஏதாவது விதிமுறை உண்டா? என்பதுதான் என்னுடைய கேள்வியே... 

 இந்திய / தமிழக அரசின் காவி துரோகங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன; ஆனால் தட்டிக் கேட்கவேண்டியயவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது; கடந்த ஆண்டு தமிழகத்தின் வீதிகளில் தொடர் முழக்கங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன; பள்ளிக் கல்லூரிகளை  மாணவர்கள் புறக்கணித்துவிட்டு வீதிக்கு வந்தனர்; வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தார்கள்; வேலூர் மத்திய சிறையை  நோக்கிய அந்த முழக்கம் தமிழக  அரசின் கள்ள மவுனத்தையும் கலைத்தது; ஆனால் இன்று கள்ள மவுனத்தில் இருப்பது இதே தமிழகம் தான்,  தமிழகமே உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறது!  ஆம், முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று தமிழர்களின் உயிர்களை காக்க ஒட்டு மொத்தமாக தமிழகமே வீதிக்கு வந்தது என்றுதான் சொல்லவேண்டும்; ஆனால் உடல்நிலை நலிவுற்று, தம் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் எம் சகோதரர் அபுதாஹீரின் விடுதலையில் அக்கறை இல்லையா? இந்த  தமிழகத்திற்கு... முருகன், சாந்தன், பேரறிவாளன் அவர்களை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று சொன்ன இதே தமிழகமும் இன்று  கள்ள மவுனம் காக்கிறதே; தமிழர்களுக்கு இருப்பது மனிதநேயமா? மத நேயமா? என் அன்பு சகோதரர் அபுதாஹீர் இசுலாமியர் என்பதால் தான் இந்த கள்ள மவுனமா? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது தோழர் ஒருவர் சொல்லி இருந்தார். "இந்த நாட்டில் நீ அதிகாரபதவிகளுக்கு வரவேண்டுமானால்... நீ கொல்லைகாரனாக இருக்கலாம்; கொலைகாரனாக இருக்கலாம்... அடுத்தவன் குடியை கெடுப்பவனாக இருக்கலாம்... ஆனால் முஸ்லிமாகவோ...தலித்தாகவோ மட்டும் இருக்க கூடாது" இந்த வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது; அவர் சொன்னது இந்திய அரசின் அவலட்சணத்தை சுட்டிக்காட்ட தான் கூறினார், ஆனால் அபுதாஹீரின் விஷயத்தில் 100% பொருந்துகிறது ! என் தாய் தமிழகத்தில் சுற்றுசூழல் மாசுபட்டால் கூட பொங்கி எழும் ஆர்வலர்கள் இருக்கிறார்கள்; ஆனால் ஒரு தலித்தோ, இசுலாமியரோ நாசப்பட்டால் கூட,எங்களுக்கு ஆதரவாக பேச யாரும் முன்வராத  நாதியற்ற மக்களாக நாங்கள் இருக்கிறோம் !

மற்றவர்களை விடுங்கள்!  அபுதாஹீர் விடுதலையில் இசுலாமியர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்த்தால் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது; நபிகள் நாயகம் அவர்களை இழிவுபடுத்தி, அமெரிக்க ஏகாதிபத்திய அரசு எடுத்த ஒரு திரைப்படத்திற்காக உலகில் உள்ள ஒட்டுமொத்த இசுலாமியர்களும் களத்தில் குதித்தார்கள்; அமெரிக்காவை அதிரசெய்யும் அளவுக்கு போராட்டம் வெடித்தது என் தாய் தமிழகத்தில் தான்; சென்னை மாநகரத்தில் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் பங்கு கொண்டார்கள்; அமெரிக்க தூதரகத்தை பந்தாடினார்கள் ! அந்த எழுச்சி ஏன் இப்போது அபுதாஹீருக்காக எழவில்லை? இறைதூதரின் மீது உள்ள பற்று, இறப்பின் விளிம்பில் நின்று தவிக்கும் நம் சக தோழன் மீது இல்லையா? நான் இசுலாமியர்களை விமர்சிக்கவில்லை; இது சுய விமர்சனம், உங்களோடு என்னையும் சேர்த்துதான் விமர்சிக்கிறேன்.  அபுதாஹீரின் விடுதலைக்காக பாடுபடுவதும் இசுலாமியர்கள் தான்; அவர்கள் ஒரு சிலரே! ஒரு சில இயக்கங்களே ! இசுலாமியர்கள் ஒன்றுபட்டால் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்துவார்கள்  என்பதை அமெரிக்க திரைப்படத்தின் மூலம் நான் கண்டு வியந்தேன்; ஏன் அப்படி ஒரு எழுச்சி அபுதாஹீரின் விடுதலைக்கு இல்லாமல் இருக்கிறது? பெரிதாக எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவு இல்லாமல் அமெரிக்காவையே தாக்க முனைந்த நம்மால், இந்த காவி அரசுகளை பந்தாட முடியாதா? சிந்தித்து கொள்ளுங்கள் தோழர்களே... நம்முடைய பலவீனம் தான் நம் எதிரிகளின் பலம்; நாம் அலட்சியாமாக இருக்கும் வரை, அவர்கள் லட்சியத்தை( நம்மை அழிப்பதை) நிறைவேற்றிக் கொள்வார்கள்...   

தமிழக அரசே இன்று நாங்கள் அபுதாஹீரை  விடுதலை செய்யுங்கள் என்று கேட்க காரணம், மரணப்படுக்கையில் இருக்கும் எம் அன்புசகோதரன் அபுதாஹீர், தம் இறுதி மூச்சையாவது சுதந்திரமாக விடட்டுமே என்ற நியாயமான கோரிக்கையில் தான். மரணத்தின் வாசலில் நின்றுகொண்டிருக்கும் அவர் கழிவறை செல்லும் போது  காவல்துறை கண்காணிப்பு செய்கிறதே ! இது நியாயமா? இதுதான் என் தாய் தமிழகம் சொல்லும் மனிதநேயமா? என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்..... 

- அங்கனூர் தமிழன்வேலு     

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக