செவ்வாய், 18 டிசம்பர், 2012

சுயமரியாதைப் பாதைக்கு திரும்பிய கதை - அங்கனூர் தமிழன் வேலு



என் 18 ஆவது வயதில் தான் சாதியத்தின் கொடுமையை உணர்ந்தேன். பெரும்பாலான அறிவுஜீவிகள் கிராமங்கள் தான் இன்னமும் சாதியத்தை கெட்டியாகப் பிடுத்து தொங்குகின்றன; சென்னை போன்ற வளர்ந்த நகரங்களில் சாதியெல்லாம் யாரும் பார்ப்பதில்லை; எல்லோரும் சமமாகத்தான் வாழ்கிறார்கள் என்று சொல்கின்றனர், எழுதுகின்றனர். ஆனால் நான் சாதியத்தின் கோரமுகத்தை கண்டது அறிஜீவிகள் சொல்லும் நாகரிகம் வளர்ந்த சென்னையில் தான் ! ஒரு வகையில் நான் சென்னைக்கு நன்றிதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்ட கொடுமையை எனக்கு சென்னை அறிமுகபடுத்தாமல் இருந்திருந்தால் நானும் ஒரு சுயசாதி பற்றாளனாகவே இருந்திருப்பேன். அதனால் நானும் இச்சமூகத்திற்கு பரிகாரமில்லா பாவத்தை அல்லது தீங்கை செய்தவனாகவே இருந்திருப்பேன்.

                 பள்ளி இறுதி ஆண்டு படிப்பு முடிந்தது ! மேற்கொண்டு கல்லூரி படிக்க வசதி இல்லாத சூழல், அதனால் சென்னைக்கு ஓடி வரவேண்டிய நிலை, டீக்கடையில் க்ளாஸ் கழுவுவது, ஹோட்டலில் பென்ச் துடைப்பது, தட்டு கழுவது இப்படித்தான் சென்னையில் என் அறிமுகம் ! பிறகு தெரிந்தவர் மூலம் ஒரு எலெக்ட்ரிகல் கடையில் வேலைக்கு சேர்ந்து, அவங்க வீட்டிலே தங்கி வேலை செய்தேன்; அங்கயே தங்குவதால் சாப்பாடும் அங்கேதான். முதல்நாள் சாப்பிட அமர்ந்தேன்; அந்த வீட்டு சிறுவன் ஒரு சில்வர் தட்டை கொண்டுவந்து வைத்தான். நான் அந்த வீட்டுக்கு புதியவன் என்பதால் அமர்ந்தபடியே வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தேன். "க்ரீச் என்ற சத்தம் கேட்டு திரும்பி தட்டை பார்க்கும் போது ஒரு அலுமினிய தட்டு இருந்தது !" எனக்குள் பெரிய குழப்பம். ஏன் என்றால் எனக்கு இதுவரை அப்படி எந்த அவமதிப்பும் நிகழ்ந்ததில்லை; சரி போகட்டும் என்று சாப்பிட்டு, கடைக்கு சென்றுவிட்டேன், இரவு திரும்பியவுடன் என்னிடம் தம்பி அந்த அறையில் தங்கி கொள் என்றார்கள். எனக்கு மிகுந்த சந்தோசம் ! இதுநாள்வரை ஓலைகுடிசையில் அம்மா, அப்பா, அக்கா என்று எல்லோரும் ஒரே இடத்தில் படுத்திருந்தவனுக்கு தனி அறை என்றால் சந்தோசம் வரத்தானே செய்யும், ஆர்வத்தோடு ஓடினேன். ஓடிய வேகத்தில் திரும்பவும் மொட்டைமாடிக்கு ஓடிவிட்டேன். ஒரே அழுகை; அழுது தீர்த்தேன் ! வீட்டில் சிலகாலம் சாப்பாட்டுக்கு வழியில்லாத நாளில் கூட நான் அழுததில்லை அன்று அழுதேன். அந்த அரை வாழிங்மெஷின் ரூம் . கழிவறையை விட கொஞ்சம் பெருசு.  அங்கேதான் கிழிந்த துணிகள் எல்லாம் கிடந்தன.மறுநாள் அனைத்தையும் நானே சுத்தம் செய்தேன். அந்த வாழிங்மெஷினை வெளியே எடுத்து வைத்துவிடலாம் என்று நினைத்தால் மழையில் நனைந்தால் அது கெட்டுவிடுமாம் ! அதனால் உள்ளேயே இருக்கட்டும் பா... என்றார்கள்... 1 அடிக்கு 6 அடி அளவில் இரண்டு பென்ச் கொடுத்தார்கள். படுத்துக் கொள்ள; காலையில் நான் 9 மணிக்கு கடைக்கு சென்றுவிடுவேன் அப்போதெல்லாம் துணியை மெஷினில் போடலாம், ஆனால் அவர்கள் காலை 6 மணிக்கே வந்து போடுவார்கள்; இரவு 10 மணிவரை வேலை செய்த களைப்பில் அசந்து தூங்க நினைத்தால் முடியாது; இரவில் கொசுக் கடி தாங்காது; ஆகவே மொட்டை மாடிதான் என் படுக்கை அறையாக இருக்கும்; மழை நாள் என்றால் எம் பாடு திண்டாட்டமே; எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அங்கெ வேலை செய்ய எனக்கு என்ன தலைவிதியா? ஆம் ! தலைவிதி தான். வீட்டில் வறுமை என்ன செய்ய? என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன். சமாதனம் சொல்லிக்கொண்டேன் என்பதை விட எதிர்ப்பு மனநிலை இல்லை; அடிமைபுத்தி என்றுகூட சொல்லலாம். அங்கெ வேலை செய்த இரண்டு வருடம் கழித்து தான் வந்தது எனக்கு தன்மானம், சுயமரியாதை எல்லாம். அதுவும் கடைக்கு வரும் ஒரு கஸ்டமர் ஒருத்தர் அம்பேத்கர் புத்தகத்தை மறந்து விட்டுட்டு போய்ட்டார். போன் பண்ணி சொன்னேன்; அதற்க்கு அவர் நான் அடுத்த வாரம் தான் வருவேன் அப்போது வாங்கி கொள்கிறேன் என்று சொன்னதால் இரவில் அதை படித்தேன். அந்த வாஷிங்மெஷின் ரூம்ல தான் எனக்கு அம்பேத்கர் அறிமுகம். அடுத்த ஒருவாரத்தில் வீட்டிற்கு கேஸ் புக் பண்ண மறந்து விட்டேன் என்பதால் கடையில் வைத்து கஸ்டமர் இருக்கும் போதே திட்டினார்கள்; கோவம் பொத்துக்கொண்டு வந்தது; இனி என்னால் வேலைசெய்ய முடியாது என்று சொல்லிவிட்டு மறுநாள் காலையிலே வெளியேறினேன். 

.........இன்னமும் இருக்கு  காத்திருங்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக