புதன், 4 டிசம்பர், 2013

எங்கே செல்கிறது அரசியல்?

வழக்கத்துக்கு மாறாக நேற்று  காலை 7 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன். வழக்கமாக 9 லிருந்து 9.30 மணிக்குள் எழுந்து, அவசர அவசரமா குளிச்சிட்டு ஆபிஸ் செல்வது தான் என் அன்றாட காலைப்பணி. இன்று சீக்கிரமே எழுந்ததால் அலமாரியில் இருந்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்களின் ஒரு துண்டு நிலம் என்ற நூலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சுவர் விளம்பர ஆய்தம் எனும் கட்டுரைத் தொகுப்பு தொண்டர்கள் யார் என்பதை மிக தெளிவாக உணர்த்தியது. சமகால அரசியல், உறவுகளுக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிரிவினையை பேசியது. தேர்தல் நேரங்களில் யாரோ முகம் தெரியாத வேட்பாளருக்காக சுவர் விளம்பரம் செய்ய ஒரே கிராமத்து சொந்தங்கள் மோதிக் கொண்டு வாய் வார்த்தை முத்தி, கை கலப்பாகி கலவரம் வரை எப்படி செல்கிறது என்பதை பற்றியெல்லாம் ரொம்ப ஆழமா விவாதித்து இருந்தார். அந்த சிந்தனை மாறாத முகத்தோடு டீக்கடைக்கு டீ குடிக்க சென்ற போது ஒரு செய்தியைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். "ஏற்காடு இடைத்தேர்தல் இறுதி நாள் பிரச்சாரத்தில், தி.மு.க. - அ.தி.மு.க. வினரிடையே ஏற்பட்ட மோதலில் தி.மு.க. கள்ளக்குறிச்சி தியாகதுருகம் ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ராஜ்முருகன் இறந்து விட்டார் என்பது தான் அந்த அதிர்ச்சிகரமான செய்தி." தேர்தலில் வெற்றி, தோல்வி மாறி மாறி வரும், ஆனால் இனி எந்தக் காலத்திலும் ராஜ்முருகனின் உயிர் திரும்பி வருமா? அதைப் பற்றி எவரும் யோசிக்க கூட தயாரில்லை. ராஜ்முருகனின் மரணம் தற்செயலாக நடந்த ஆக்சிடெண்ட் என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் அது கொலை, நடந்தது அதிகார வெறி தாக்குதல், பதவி வெறி தாக்குதல்... 

கட்சித் தலைவனுக்கு பேனர் வைப்பதில் தொடங்கி, கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு சுவரொட்டி ஓட்டுவது வரை எதிர்க்கட்சிக்காரன், மாற்றுக் கட்சிக்காரனோடு சண்டைப் போடுவதில் தொடங்குகிறது இன்றைய அரசியல் கட்சி தொண்டர்களின் மக்கள் தொண்டு (?). தொண்டர்கள் என்பவர்கள் மக்களுக்கு தொண்டாற்றுபவர்கள், ஏழைகளுக்கு, முதியவர்களுக்கு உதவி செய்வது, படிப்பறிவு இல்லாதவர்களுக்கு வழிகாட்டுவது என்பது தான் அவர்களின் பணி. ஆனால் இன்றைக்கு எந்த கட்சியிலும் தொண்டர்கள் இல்லை, எல்லோரும் குண்டர்களாகவே இருக்கிறார்கள். நேரடியாக எடுத்த எடுப்பிலே தொண்டர்களை குறை கூறிவிட முடியாது. இவர்களின் தலைமை எப்படிபட்டது என்பதை பொருத்து தான் இவர்களின் செயல்பாடுகளும் அமைகிறது. பெரும்பாலும் இன்றைய கட்சித் தொண்டர்களிடம் தொண்டு மனம் கொஞ்சமும் கிடையாது. கட்சிக்கு கிடைக்கும் வெற்றிக் கணியில் ஒரு சிறிய துண்டாவது நமக்கு கிடைக்காதா? என்ற சுயநலமே மேலோங்கி நிற்கிறது. கட்சி தலைமைகள் கூட்டணி வைத்து எப்படியாவது வெற்றியை ஈட்டிவிட வேண்டும் என்ற நப்பாசை மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதனால் தொண்டர்கள் தங்களின் ஆவேசக் குரலை உயர்த்தி கட்சித் தலைமையின் கடைக்கண் பார்வையை தம் பக்கம் திருப்பிவிட முடியும் என்ற தவறானப் பாதையை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். இதுபோன்ற  சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, அரசியல் வாதிகள் தங்களின் கள்ள மவுனத்தின் மூலம் இதனை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார போதையில், பதவி வெறியில் மக்களாட்சித் தேர்தலை ஒரு யுத்தக் களத்தைப் போல வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் எதிர்கட்சிக் காரன் கொல்லப்பட வேண்டியவன் என்ற கொடிய மனத்தை தொண்டர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். பொதுவாகவே அரசியல் தலைமைகள்  தொண்டர்களை சிந்திக்க விடுவதில்லை. கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போல, சிறிதளவு நெல்மணியை அள்ளிப் போட்டதும் சீட்டு எடுத்துக் கொடுக்கும் கிளியைப் போல, கை செலவுக்குப் பணமும், போதைக்கு மதுவும் கொடுத்து வாக்கு சேகரிக்கசொல்லி கட்டாயப் படுத்துகிறார்கள். இதுவரை எந்த கட்சி தலைமையும் வன்முறையில் ஈடுபட்ட தொண்டர்களை கட்சியில் இருந்து நீக்கியதாக வரலாறு கிடையாது, மாறாக பதவி உயர்வு கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். "தம்பி மக்களிடம் சென்றிடு, மக்களிடம் கற்றிடு, மக்களுக்காக பணியாற்றிடு" என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் மக்கள் இன்றைக்கு அரசியல்வாதிகளை கண்டாலே பயந்து நடுங்குகிறார்கள். ஏற்கனவே மதமெனும், சாதியெனும் நஞ்சுப் பிரிவினைகள் மக்களை, உறவுகளை ஒன்றுகூட விடாமல் தடுத்துக் கொண்டிருக்க, போதாக்குறைக்கு மக்களுக்கு தொண்டாற்ற வேண்டிய அரசியல், பிரிவினையாய் உருவெடுத்து மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அழகாக சிரிக்கும் நிலவும், இடைவிடாமல் சிணுங்கும் விண்மீனும், ஆக்க வரும் மழையும், ஏன் அழிக்க வரும் சுனாமி கூட பேதம் பார்ப்பதில்லை; உயர்சாதிக்காரர், கீழ்சாதிக்காரர், நல்லவர், கெட்டவர், ஏழை, பணக்காரன், ஆண், பெண் இப்படி எந்த வித பேதத்தையும் கணக்கில் கொள்ளாமல் அது தன்னுடைய கடமையை அல்லது சேவையை எல்லோருக்குமாய் செய்துவிட்டு தான் செல்கிறது. எனக்கு தெரிந்தமட்டில் மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும் பேதம் பார்ப்பதில்லை. ஆனால் மனிதனுக்குள் மட்டும் சாதிய பிரிவினை, மத பிரிவினை, வர்க்க பிரிவினை, கலாசார பிரிவினை, இன பிரிவினை, மொழி பிரிவினை, பாலின பிரிவினை என ஏராள பிரிவினைகள் ஒருவரோடு ஒருவரை நெருங்க விடாமல் தடுக்கும் சக்திகளாக வளர்ந்து நிற்கின்றன. இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு  புதிய பிரிவினை வாத கலாச்சாரமாக உருவெடுத்து நிற்கிறது அரசியல் பிரிவினை வாதம். 

அரசியல் பிரிவினை வாதம் என்ற மோசமான கலாச்சாரம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய தேதிக்கு, மாற்று கட்சிகாரர்களை சந்திப்பதே பெரும் பாவம், மன்னிக்க முடியாத குற்றசெயல் என்று கட்சி தலைமைகள் கருதுகின்றன. கடந்த காலங்களில் அரசியல் நாகரிகம் எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக இரண்டு நிகழ்வுகளை சுட்டிக் காட்டுகிறேன். ஒன்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கை நிரந்தர எதிரியாக கருதப் பட்டவர் ராஜாஜி. ஆனால் தம் இரண்டாவது திருமணத்திற்கு ஆலோசனையே ராஜாஜியிடம் தான் தந்தை பெரியார் அவர்கள் கேட்டுக் கொண்டார்.இரண்டாவது நிகழ்வு  1967 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காமராஜர் விருதுநகர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இது அன்றைய தி.மு.க. தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் " குச்சியை உடைத்து வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். மரத்தையே  சாய்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை" என்று காமராஜர் தோல்விக்காக வருத்தப்பட்டதோடு மட்டுமில்லாமல் தம் அமைச்சர்களை காமராஜரின் வீட்டிற்கே அழைத்து சென்று வாழ்த்து பெற்றதோடு எங்கள் அரசுக்கான அறிவுரைகளை அவ்வப்போது வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதுபோன்ற நாகரிக சூழ்நிலைகள் தற்போது அரசியலில் இல்லை.அப்படிப்பட்ட உறவுகள் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறதே என்பது தான் வருத்தம்..

தமிழக சட்டமன்றத்திற்கு ஏராளமான பெருமைகளும், மாண்புகளும் உண்டு என்று சொல்வார்கள். ஆனால் அவையெல்லாம் இனி இருக்குமா? என்று தெரியாது. அ.தி.மு.க. வின் கடந்த ஆட்சிகாலத்தில் கலைஞரை "கிழிந்த ஜிப்பா, தகர டப்பா" என்று கிண்டல் அடித்தார்கள். இன்றைய ஆட்சிகாலத்தில் கலைஞரை தள்ளுவண்டி என்றும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்தை தண்ணியிலே இருப்பவர் என்றும் பகடி செய்து மகிழ்ந்தார்கள். கண்டிக்க வேண்டிய சபாநாயகரும் கண்டிக்கவில்லை, அவையில் இருந்த முதல்வரும் கண்டிக்கவில்லை. மாறாக அப்படி பேசியவருக்கு மறுநாளே அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கலைஞரை கருணாநிதி என்று ஒருமையில் அழைத்தமைக்கே, அப்படி சொன்னவரை எம்.ஜி.ஆர். கண்டித்தார் என்பது வரலாறு. ஆனால் அவர் வழி வந்த ஜெயலலிதாவோ பதவி உயர்வு கொடுத்து அழகு பார்க்கிறார். அதுபோல தமிழக சட்டமன்றத்தில் வைத்தே ஜெயலலிதாவின் சேலையை உருவ முயன்றார்கள் என்பதும் பழைய அவமானகரமான சோக வரலாறு. இந்த ஆட்சி காலத்திலே கூட தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ வை தே.மு.தி.க. உறுப்பினர்களே தாக்க முயன்றார்கள் என்பதும் தமிழக சட்டமன்ற வரலாற்றில் அழிக்க முடியாத ஆவணமாக நிற்கப் போகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மக்கள் பிரச்சனையைப் பற்றி பேசாமல் ஒருவரை ஒருவர் அருவருப்பாக வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களே இப்படி இருக்க, இவர்கள் பெற்றிருக்கும் தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்? 

ஒரு அரசியல்வாதி, தன் மகள் வேறொரு கட்சிக்காரரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் மகளின் திருமணத்திற்கே செல்லவில்லையாம். முன்பெல்லாம் இந்த பிரச்சனை சாதியில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. வேறொரு சாதியில் மகனோ, மகளோ காதலித்து திருமணம் செய்து கொண்டால் மகனையோ, மகளையோ தள்ளிவைத்து விடுவார்கள். ஆனால் இன்று அது அரசியலிலும் தொடருகிறது. இந்த கட்சிக்காரன், அந்த கட்சி காரனோடு பேசுவதில்லை, உறவு வைத்துக் கொள்வதில்லை. மீறினால் கட்சியில் பதவி போய்விடும் என்ற அச்சம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்சிக்காரன் வைத்த பேனரை அந்த கட்சிக்காரன் கிழிப்பது, அந்த கட்சிக் கொடி கம்பத்தை இவன் வெட்டி சாய்ப்பது, ஒருவன் செய்திருக்கும் சுவர் விளம்பரத்தில் இன்னொருவன் வந்து சாணி அடிப்பது இவையெல்லாம் எதை எதிர்பார்த்து செய்யப்படுகின்றன? தன் கட்சித் தலைவன் கைதானால் பேருந்தை மறிப்பது, மீறினால் பேருந்தை கொளுத்துவது, பேருந்தில் இருக்கும் மக்களையும் சேர்த்து கொளுத்துவது, அப்பாவிகளின் குடிசைகளை தீவைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது, இவையெல்லாம் எதை எதிர்பார்த்து நடக்கின்றன? எல்லாவற்றிற்கும் வாய் கிழியப் பேசும் அரசியல்வாதிகள் இதுபோன்ற விஷயங்களுக்கு மவுனம் சாதிக்கிறார்கள்... மவுனத்தின் மூலம் ஆதரவு அளிக்கிறார்கள்...

ஏற்காட்டில் நடந்த சம்பவம் பதவி வெறியில் நடந்தது. தேர்தல் வெற்றிக்காக நடத்தப்பட்டது. அவர்களுக்கு தம் கட்சியின் கொள்கை மீதெல்லாம் சிறிதும் நம்பிக்கையில்லை. எதிர்கட்சிகாரனை அழித்துவிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார்கள் போலும். மக்களுக்காக சேவை செய்வதாக சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்..! சாமானிய மக்களிடமும் போய் சேரவேண்டிய அரசியல் சாமான்ய மக்களை அழித்தொழிக்கும் ஆபத்தான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படித்த தொண்டர்களை பதவி வெறியர்களாகவும், படிப்பறிவு அற்றவர்களை அடியாட்களாகவும் மாற்றி வைத்திருக்கும் இன்றைய அரசியல் கட்சிகளின் கொள்கைகளால், அமைதியாக நடக்க வேண்டிய தேர்தல்களம், யுத்தகளமாக மாறியிருக்கிறது.மக்களுக்குப் பயன்படவேண்டிய அரசியல் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மண்ணையும், மக்களையும் செல்லரித்துக் கொண்டிருக்கிறது. அன்பும், அறனும் போதிக்கப்படவேண்டிய அரசியல் கட்சிகளின் மேடைகளில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. சமத்துவமும், சகோதரத்துவமும் கற்பிக்கவேண்டிய அரசியல் கருத்தரங்ககள் வெறுப்பு பிரச்சாரங்களை பயிற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலை முற்றிலுமாக மாறவேண்டும், மாற்றம் நம்மில் இருந்தே தொடங்கட்டும்... இல்லையென்றால் நந்தவனமாக இருக்கவேண்டிய தமிழகம், நம் கண் முன்னாலே  நாசக்காடாக மாறுவதை  காண்பதை தவிர வேறு வழியில்லை ..!     

- தமிழன் வேலு

வியாழன், 28 நவம்பர், 2013

கடவுள் சாட்சியாக சங்கர் ராமன் கொல்லப்பட்டது உண்மை... ஆனால் தீர்ப்பு?

பொதுவாகவே நம்மவர்களிடம் ஒரு பழக்கம் தொன்று தொட்டே இருந்து வருகிறது. ஒருவரிடம் இருந்து உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் "கடவுள் சாட்சியாக சொல்" என்று சத்தியம் வாங்குவார்கள். அந்த பழக்கம் முக்கியப் பதவிகளுக்கு பதவி பிரமாணம் செய்து கொள்பவர்கள் கூட "கடவுள்  ஆணையாக உண்மையாக இருப்பேன்" என்று சத்தியம் செய்வார்கள். பின்னாளில் திராவிட இயக்கங்களின் மூலம் பகுத்தறிவு பிராச்சாரத்தின் பயனாக "உளமாற உறுதியளிக்கிறேன்" என்று பதவியேற்றுக் கொள்ளும் வழக்கம் வந்தது. இந்த "கடவுள் சாட்சியாக" என்பது தான் ஒருவரின் உச்சபட்ச நம்பகத்தன்மையை தீர்மானிக்கும் சொல்லாக பரவலாக இருந்து வருகிறது. கடவுளின் மீது சத்தியம் செய்துவிட்டு தவறு செய்பவர்களை கடவுள் நேரடியாக தண்டிப்பார் என்றும், கடவுள் மீது சத்தியம் செய்த ஒருவர் தவறு செய்யமாட்டார் என்றும் தப்பபிராயம் கற்பிக்கப்பட்டுள்ளது. சில கடவுள் அபிமானிகள் கூட சொல்வார்கள் கடவுள் நம்பிக்கை என்பது ஒருவனை நேர்வழி படுத்தும் அவன்  தவறு செய்யும் போது தயக்கம் உண்டாகும் என்பார்கள். 

ஆனால்


கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி, பட்டபகலில் கடவுளின் சன்னிதானத்தில், "கடவுள் சாட்சியாக" காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர் ராமன் கொலை செய்யப்பட்டார். கடவுள் வரதராஜ பெருமாள் சாட்சியாக நடந்த இக்கொலையை தடுக்க கடவுளும் முன்வரவில்லை, கொலை செய்தவருக்கு எவ்வித கடவுள் பயமோ, குற்ற உணர்ச்சியோ, கடவுள் அபிமானிகள் சொல்வதைப் போல தயக்கமோ கூட ஏற்ப்படவில்லை என்பது தனிக்கதை. 

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன், விஜயேந்திரன் பெயர் அடிபடத் தொடங்கியது. 2004 நவம்பர் 11ம் தேதி ஆந்திர மாநிலம் மெஹபூப் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார் ஜெயேந்திரன். அது தீபாவளி நாள். 2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விஜயேந்தினும் கைதானார்.9 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக 10 ஆண்டாக நடந்து கொண்டிருந்த வழக்கில் நேற்று (27.11.2013) புதுச்சேரி நீதிமன்றம் "கூட்டுச் சதிக்கான ஆதாரம் இல்லாததால் ஜெயேந்திரன், விஜயேந்திரன் உட்பட 23 பேரையும் விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி முருகன் தீர்ப்பளித்திருக்கிறார். பரபரப்பான இந்த வழக்கில் அரசு முன்வைத்த சாட்சிகளில் 83 பேர் அரசுத் தரப்புக்கு ஒத்துழைப்பு தராமல் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர் என்பது தான் வழக்கின் தீர்ப்பையே தீர்மானித்து இருக்கிறது. இத்தனைக்கும் ஜெயேந்திரன் நீதிபதியிடம் பேரம் பேசிய ஆடியோ சிடி வெளியான பிறகுதான் இந்த தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது." 81 பேர் பிறழ் சாட்சியாளர்களாக ஆனதுதான்-ஆக்கப்பட்டதுதான். இதுவரை எந்த ஒரு வழக்கிலும் இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் பிறழ் சாட்சியானது கிடையாது. குற்றத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் எப்படி இதனை அனுமதித்தனர் என்பது மிகவும் முக்கியமானது. புலனாய்வுக்கென்றே காவல் துறையில் தனிப் பிரிவே இருக்கிறது. 81 பேர் பிறழ் சாட்சியாகும் அளவுக்கு எப்படி கோட்டை விட்டனர்" என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் எஸ்.வி.சேகர் 'நீதி நிலைநாட்டப்பட்டது' என்கிறார், சுப்ரமணியசாமி ஜெயலலிதா ஜெயேந்திரரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை ஆனது மகிழ்ச்சி என்கிறார் சுஸ்மா ஸ்வராஜ்.

எஸ்.வி.சேகருக்கோ, சுப்ரமணிசாமிக்கோ, சுஷ்மா சுவராஜுக்கோ சங்கர் ராமன் கொலையைப் பற்றி கவலையில்லை. ஏழைப் பார்ப்பானாகிய சங்கர் ராமன் கொலைக்கு நீதி வேண்டும் என்பதிலும் அக்கறையில்லை. ஆனால் சங்கராச்சாரியார் விடுதலை ஆனது அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. கொண்டாடுகிறார்கள். இத்தனைக்கும் சங்கர் ராமன் இந்து மத புனிதத்திற்கு எதிராக செயல்பட்டவர் கிடையாது. கடவுள் மறுப்பு கொள்கையை பேசியவர் கிடையாது. இந்து மதத்தின் புனிதத்தை காக்க ஆச்சாரம் பேணும் பார்ப்பன குடியில் பிறந்தவர் தான் அவரும். உள்ளபடியே சங்கர் ராமன் கொலைக்கும் சங்கராச்சாரிக்கும் சம்மந்தம் இல்லை என்றால், சங்கர் ராமனை கொன்றது யார் என்ற கேள்வியை அவர்கள் தான் முதலில் எழுப்பி இருக்க வேண்டும். சங்கர் ராமன் கொலைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீதி கேட்டு அவர்கள் தான் போராடி இருக்க வேண்டும். அவர்கள் கனத்த மவுனம் காக்கிறார்கள். அதனால் நீதி நிலை நாட்டப்படவேண்டும், உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் நாமே அந்த கேள்வியை எழுப்புகிறோம்.

கடவுள் சாட்சியாக 
சங்கர் ராமன் கொல்லப்பட்டது 
உண்மை... 

குற்றவாளிகள் என்று 
சொல்லப்பட்ட சங்கராச்சாரிகள்
விடுதலையாகி விட்டார்கள். 

அவர்கள் கொல்லவில்லை 
என்றால், கொன்றவர்கள் 
எவர்கள்? 

நீதிமான்கள் வாய் திறக்க 
மறுக்கிறார்கள் ... 
இப்போதாவது வாய் திறப்பாரா
 வரதராஜ பெருமாள்? 

என்ற கேள்வியை நாமே எழுப்புகிறோம்...


சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கையில், செய்தி தாளில் ஜெயேந்திரன் பற்றிய செய்தியை படித்துவிட்டு சங்கர் ராமன் கொலை வழக்கைப் பற்றி விவாதத்துக்கு இழுத்துவிட்டேன். அப்போது நண்பர் ஒருவர் சொன்னார். கடவுள் இருப்பதால் தான் இந்த வழக்கே இவ்வளவு நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் எப்போதோ ஓத்தி மூடி இருப்பார்கள். இக்கொலையின் நேரடி சாட்சி வரதராஜ பெருமாள். நீதியை அவர் வென்று தருவார்" என்றார. நேற்றிரவு நான் அவருக்கு போன் செய்து தீர்ப்பை பற்றி சொல்லி, வரதராஜ பெருமாள் நீதியை நிலைநாட்டி விட்டாரா? என்றேன். "ஒருவேளை ஜெயேந்திரன் ...."என்று பதில் சொல்ல ஆரம்பித்தார். "டேய்... டேய் திருந்துங்கடா.." என்று போனை துண்டித்துவிட்டேன். அவர் கூற்றுப்படி வரதராஜ பெருமாள் தொடுத்த வழக்கில் ஜெயேந்திரன் வென்றுவிட்டார். வரதராஜ பெருமாள் தோற்றுவிட்டார். தீர்ப்பளித்தவர், பிறழ் சாட்சிகளாக மாறியவர்கள் அனைவரும் கடவுள் வரதராஜ பெருமாளை விட, அவருக்கு பூசை செய்யும் ஜெயேந்திரனுக்கே சாதகமாக நடந்து கொண்டார்கள். இதிலே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் "இந்நாட்டில் சாமியை விட, சாமியார்களே வலுவானவர்களாக இருக்கிறார்கள்.."     

இந்த வழக்கில் கொலையாளியும் பிராமிணர், கொலை குற்றம் சாட்டப்பட்டவரும் பிராமிணர், தீர்ப்பை கொண்டாடி வரவேற்கும் சு.சாமி, எஸ்.வி.சேகர் போன்றவர்களும் பிராமிணர்கள். இந்த வழக்கின் தீர்ப்பை சாதி தீர்மானிக்கவில்லை, மதம் தீர்மானிக்கவில்லை, வர்க்கம் தீர்மானித்திருக்கிறது. சொந்த சாதிக்காரனாக இருந்தாலும் ஏழை பிராமிணன் சங்கர் ராமனைப் பற்றி சு.சாமி, எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்கு எவ்வித கவலையும் இல்லை...

சங்கரராமனுக்காக பேச கடவுள் வரதராஜ பெருமாள் கூட வரவில்லை. ஒருவேளை சங்கரராமன் சங்கராச்சாரியை கொலை செய்திருந்தால் வரதராஜ பெருமாள் முந்திக் கொண்டு வந்து சாட்சி சொல்லி இருப்பார், நீதி விரைவில் கிடைத்திருக்கும். சங்கரராமனுக்கு தூக்கு தண்டனையோ, ஆயுள் தண்டனையோ கிடைத்திருக்கும். சு.சாமியும், எஸ்.வி.சேகரும் சங்கரராமனை தூக்கில் போட வலியுறுத்தி வாதாடி இருப்பார்கள்...

எப்படி என்று கேட்கிறீர்களா?
அதான் கடவுள் எல்லாருக்கும் போதுவானவரே, 
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாரே...

சங்கரராமனை வரதராஜ பெருமாள் மட்டும் கைவிடவில்லை... நீதிமன்றமும் கைவிட்டு விட்டது...

தீர்ப்பு வெளியான மகிழ்ச்சியில் ஜெயேந்திரன் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு, திருப்பதிக்கு சென்று கடவுள் பெருமாளை சந்திக்க இருக்காராம்... பொய் சாட்சி சொன்னதுக்கு கூலி கொடுக்கணும் ல.... 

தீர்ப்புக்குப் பின் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர ராமனின் மகன் ஆனந்த சர்மா "இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.. எங்களால் நம்பமுடியவில்லை. என்னுடைய தந்தையார் தானே வெட்டிக் கொண்டு சாகவில்லை. எங்கள் தந்தையை யார் வெட்டி கொலை செய்தனர் என்பதை அறிய விரும்புகிறோம்" என்று கூறி இருக்கிறார். அரசும் நீதிமன்றமும் என்ன செய்யப் போகிறது? மீண்டும் வழக்கை விசாரிக்கப் போகிறதா? இல்லை வழக்கை ஊத்தி மூடப் போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....

- தமிழன் வேலு  

புதன், 27 நவம்பர், 2013

தீர்ப்புக்கு முன் உத்தரவு !

இன்று
அவர்களை
விடுதலை செய்கிறேன்
என்று தீர்ப்பளித்தார் !

ஆனால்

நேற்றிரவே
சங்கர ராமனுக்கு
உத்தரவிட்டு விட்டார் !

அந்த உத்தரவு
இப்படியும் இருக்கலாம்

"சங்கர ராமா ...
அவர்களை
விடுதலை
செய்யப் போகிறேன்

மீண்டும் எழு
கத்தியை எடு
உன் தலையை நீயே
பிளந்து கொள் !"

- தமிழன் வேலு

செவ்வாய், 26 நவம்பர், 2013

ஏற்காடு - எச்சரிக்கை !

மலைப்பகுதியான ஏற்காடு தொகுதி, இடைத்தேர்தல் பிரச்சாரத்தால் அனலாய் தகிக்கிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வோடு, தி.மு.க. நேருக்கு நேர் மோதுகிறது. 2011 சட்டமன்ற தேர்தல் முடிவுப்படி ஏற்காடு அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி தான். ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க.வின் வேட்பாளராக சரோஜாவும், தி.மு.க.வின் வேட்பாளராக மாறனும் களத்தில் நிற்கிறார்கள். 

ஏற்காட்டில் தி.மு.க. வெற்றி பெற்றால் கூட அ.தி.மு.க. அரசுக்கு எவ்வித சிக்கலும் கிடையாது. அது போலவே மீண்டும் அ.தி.மு.க. வே வென்றாலும் கூட அ.தி.மு.க. வுக்கு கூடுதல் பலம் கிடைத்துவிடப் போவதில்லை. தன்னுடைய பழைய உறுப்பினர் பலத்தை தக்கவைத்துக் கொள்ளும் அவ்வளவே. அதுபோலவே தி.மு.க. வென்றாலும் தி.மு.க.வுக்கு கூடுதலாக ஒரு உறுப்பினர் கிடைப்பதை தாண்டி வேறெந்த பயனும் கிடையாது. ஒருவேளை தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. க்கள் ஆறுபேரையும் விஜயகாந்த் கட்சியை விட்டு நீக்கினால், அவரது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 23 ஆக குறையும். அந்த சூழ்நிலையில் ஏற்காட்டில் தி.மு.க. வென்றால் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 23 லிருந்து 24 ஆக உயரும். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் விஜயகாந்த் அதிருப்தி எம்.எல்.எ.க்கள் ஆறுபேரையும் நீக்குவாரா? என்பது கேள்விக்குறி. 

அப்படி விஜயகாந்த் அதிருப்தி உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்காத பட்சத்தில் தி.மு.க.வுக்கு இந்த வெற்றியால் கூடுதல் உறுப்பினர் கிடைப்பதை தவிர வேறெந்த பயனும் இல்லை. கூடுதலாக உறுப்பினர் கிடைத்தாலும் ஏற்கனவே இருக்கும் 23 உறுப்பினர்களோடு 24வது உறுப்பினராக அவரும் அவைக்கு குந்தகம் விளைவித்தார் என்று அவையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்பது ஒருபுறமிருக்கட்டும்... 

நிலவரம் இப்படியிருக்க, ஆளும் அ.தி.மு.க. வுக்கு நேரடியாக எவ்வித கூடுதல் லாபமும் இல்லாத சூழலில் ஏற்காட்டில் அ.தி.மு.க. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், என்று என்று படை பரிவாரங்களோடு மல்லுகட்டுகிறது.போதாக்குறைக்கு ஜெயலலிதா வரும் 28ஆம் தேதி சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஏன்? வெற்றி பெற்றால் தான் ஆட்சி நீடிக்கும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. 150 சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.

இருந்தாலும் ஏன்? ஏன்? ஏன்? என்ற கேள்வி நீள்கிறது ...

உண்மையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் விரும்பும் ஆட்சியை அவர்கள் நடத்தி இருந்தால் ஏற்காட்டில் படை பரிவாரங்களோடு மல்லுகட்ட வேண்டிய அவசியமே கிடையாது. ஏற்காடு இடைதேர்தல் வெற்றி சான்றிதழ் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகாலம் நாங்கள் சிறப்பான ஆட்சியை நடத்தி இருக்கிறோம். அதற்கு சாட்சி இந்த ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி, ஏற்காடு மக்களின் அமோக ஆதரவு" என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளவே அவர்களுக்கு இந்த வெற்றி அவசியமாகிறது. மேலும் அவர்கள் மக்கள் விரும்பும் ஆட்சியை தந்திருந்தால் பறக்கும் குதிரையின் இறக்கைக்கும், மூலிகை இலைகளுக்கும் கூட அவசியம் வந்திருக்காது என்பது தனிக்கதை... 

மேலும் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் நாடாளுமன்ற தேர்தலும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஏற்காட்டில் மீண்டும் அ. தி.மு.க.வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிகளின் பேரம் பேசும் ஆற்றலை குறைக்க முடியும் என்பதும் அவர்களின் வியூகமாக இருக்கலாம்...

ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றியை காட்டி, வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு கேட்க முடியும் என்பதும் அவர்களின் நோக்கமாக இருக்கலாம். "இதோ பாருங்கள் நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்கிறோம் என்று ஏற்காடு மக்களே சொல்லிவிட்டார்கள்" என்று வெற்றி சான்றிதழை காட்டுவார்கள்..! எச்சரிக்கை..!

- தமிழன் வேலு

26.11.2013 அன்று Fesbook யில் எழுதியது

வெள்ளி, 22 நவம்பர், 2013

வைகோ நேர்மையானவரா? - குறுந்தொடர் 2


"அரசியலில் நேர்மை ! பொதுவாழ்வில் தூய்மை ! லட்சியத்தில் உறுதி !" என்ற முழக்கங்களை கட்சியின் அதிகாரப்பூர்வ முழக்கமாகவே வைகோ அறிவித்திருக்கிறார். அதுபோக வைகோ பற்றி பொதுவாகவே நடுநிலை பேசுபவர்கள் மத்தியில் அவர் நேர்மையானவர், சிறந்த தலைவர், ஊழல் கரை படியாதவர் என்ற பொதுக் கருத்து ஒன்றும் இருக்கிறது. ஆகவே தான் அவரது நேர்மை, தூய்மை, உறுதிகளை நாம் உரசிப் பார்த்ததில் அனைத்துமுமே போலி கோஷங்களாகவே அம்பலப் பட்டு நிற்கின்றன. 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஐந்து உயிர்களை காவு வாங்கி கொண்டுதான் உதயமானது என்பது வரலாறு. தி.மு.க-வில் இருந்து வை.கோபால்சாமி என்கிற வைகோ மீது கொலைப் பழி சுமத்தி நீக்கப்பட்ட போது, அதை எதிர்த்துத் தி.மு.கழகக் உடன்பிறப்புகள் நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகிய ஐந்து பேரும் தீக்குளித்து மாண்டார்கள். அவர்களின் வெந்த உடல்களை பார்த்த வைகோ இனி 'தி.மு.க.வோடு ஓட்டும் இல்லை, உறவும் இல்லை' என்று கர்ஜித்தார், ஆனால் அதே வைகோ தான் பின்னாளில் திராவிட முன்னேற்ற கழகத்தோடு தம் உறவை புதிப்பித்துக் கொண்டார். அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் பொடா வழக்கில் சிறைபடுத்தபட்ட வைகோவை கலைஞர் சென்று சந்தித்தார். இதற்காகவே காத்திருந்தவர் போல, சிறையில் இருந்து வெளியேறி 28.09.2003 அன்று ஆனந்த விகடனில் "என் வாழ்வில் நான் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரே மனிதர் கலைஞர் தான். அவரால் தான் வார்க்கப்பட்டேன், வளர்க்கப்பட்டேன். காலம் எங்களை காயப்படுத்தியது. அதே காலம் எங்கள் காயங்களுக்கு களிம்பும் தடவியது. சிறையில் இருந்த என்னைப் பார்க்க அன்பு மேலோங்க வந்தார் தலைவர் கலைஞர், அவர் வந்து என்னைப் பார்த்ததால் என் மனச்சுமை குறைந்து போனது, அரசியலில் எதுவும் நேரலாம். ஆனால் இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கவே மாட்டேன். காலம் எனக்கு கற்றுக் கொடுத்த பக்குவம் இது" என்று மிகவும் உணர்ச்சி பொங்க பேட்டி அளித்திருந்தார். அன்றிலிருந்து இவருக்காக தீக்குளித்து இறந்து போன அந்த ஐந்து பேரின் ஆன்மா இன்றும் கேவிக் கொண்டே இருக்கிறது. அந்த ஐந்து பேரின் மரணம் சொல்லும் செய்தி அரசியல்வாதிகள் நேர்மையானவர்கள் கிடையாது; இனி எந்த அரசியல்வாதிக்காகவும், எந்த தொண்டனும் எந்த தியாகத்தையும் செய்யக்கூடாது என்பதே. 

யாருடையை செயல்பாடுகளை எதிர்த்து யாருக்காக ஐந்து பேரும் உயிர் நீத்தார்களோ, அவர்கள் இருவரும் மீண்டும் ஒட்டிக் கொண்டார்கள். ஆனால் இறந்துப்போன ஐந்து பேரின் குடும்பத்தின் நிலை என்னவானது? இவையெல்லாம் வைகோவின் நேர்மையை பறைசாற்றுகிறதா? 

வைகோவின் நேர்மை கோஷம் போலியானது என்பதற்கு இன்னொரு தகவல் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலே கிடைத்தது. 05.02.1989 அன்று கலைஞருக்கு வைகோ எழுதிய கடிதத்தில் "13 ஆண்டுகளுக்குப் பிறகு வராது வந்த மாமணிபோல் தமிழகத்தில் அமைந்திட்ட நமது கழக ஆட்சிக்குக் குன்றிமணி அளவுகூட குந்தகம் ஏதும் ஏற்பட விடாமல்" என்று குறிப்பிட்டிருக்கும் வைகோ அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தில்  "1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், தி.மு.கழகம் படுதோல்வி அடைந்தது. அவரால் கழகம் அவமானத்துக்கு உள்ளாகி, கூனிக்குறுகியது. அடுத்த 13 ஆண்டுகள், தொடர்ந்து மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில், கருணாநிதி தலைமையில், தோல்விமேல் தோல்விகளைச் சந்தித்தது தி.மு.கழகம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். 1977 ஆம் ஆண்டு கருணாநிதியின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோது வைகோ கருணாநிதிக்கு எப்படியெல்லாம் வக்காலத்து வாங்கி மேடையில் கர்ஜித்தார் என்பதை தமிழகம் அறியும். தேர்தல் அரசியலுக்காக முதல் நாள் ஒன்று பேசி, மறுநாளே அதற்கு முரணான நடப்பது அரசியல்வாதிகளின் வழக்கம். ஆனால் வைகோ அதற்கும் ஒருபடி மேல்சென்று தன்னுடைய ஆரம்ப கால அரசியல் பயணத்தின் மீதே சேற்றை வாரி இறைக்கிறார். மேலும் அவரது இணையதளத்தில் "சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் ஆட்சியையும், கட்சித் தலைமையையும் கைப்பற்றிக்கொண்ட கருணாநிதி, கழகத்தில் தமக்குப் பிடிக்காதவர்களை ஓரங்கட்டி ஒழிக்கத் தொடங்கினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இயக்கத்திலும், மக்களிடமும் செல்வாக்குப் பெருகியதைக் கண்டு பொறுக்காமல், வீண்பழிகளைச் சுமத்தி, அவரை இயக்கத்தை விட்டே வெளியேற்றினார். அண்ணா காலத்தில் தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களாகத் திகழ்ந்தவர்கள் அனைவரையும் அவமதித்து, படிப்படியாக வெளியேற்றினார்; அரசியலை விட்டே விலகச்செய்தார். கட்சியையும், ஆட்சியையும் பயன்படுத்தி, தமது குடும்பத்துக்காகச் சொத்துகளைக் குவிக்கத் தொடங்கினார்" என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் ஆட்சியையும், கட்சித் தலைமையையும் கருணாநிதி கைப்பற்றிக்கொண்ட போதும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கிய போதும், தமது குடும்பத்திற்காக கலைஞர் சொத்துக்களை குவித்துக் கொண்டிருந்த போதும் வைகோ எங்கிருந்தார்? யாரோடு உறவு வைத்திருந்தார்? யாருக்காக மேடைகளில் கர்ஜித்தார்? என்ற கேள்விகளை நீங்களே எழுப்பிக் கொள்ளுங்கள் வைகோவின் நேர்மை புலப்படும். 

அவரே 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், தி.மு.கழகம் படுதோல்வி அடைந்தது. அவரால் கழகம் அவமானத்துக்கு உள்ளாகி, கூனிக்குறுகியது என்கிறார். ஊழல்கறை படிந்த (?) கருணாநிதியை விழுந்து, விழுந்து 1993 வரை ஆதரித்து கொண்டிருந்த வைகோ ஊழல் கறைபடியாதவர் என்ற கூற்றுக்கு பொருத்தமானவரா? 90களுக்கு முந்தையை தி.மு.க.வின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் வைகோவுக்கும் பங்குண்டு என்பதே உண்மை.

- தொடரும்...        

புதன், 20 நவம்பர், 2013

வைகோ நேர்மையானவரா? - குறுந்தொடர் 1


அண்ணன் ஒருவர் இப்படி எழுதி இருந்தார்...

"பாராளுமன்ற தேர்தலில் மதிமுக தனித்து போட்டி - வைகோ 

ஒரு நேர்மையான தமிழின போராளியை மதவாத கட்சியான பாஜக வோடு இணைத்து அவரின் போராட்ட குணத்தை கூர் மழுங்க செய்யும் சதிவலையை விரித்த தமிழருவிமணியணின் கள்ள நாடகத்தை முறியடித்தார் வைகோ"
--------------

முற்றிலும் முரணான கருத்து இது. நேர்மை என்ற பேச்சுக்கெல்லாம் வைகோவின் தேர்தல் அரசியலில் இடமே கிடையாது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல் அரசியலில் வைகோவின் நிலைப்பாடுகளே அதற்கு சாட்சி. தனித்துப் போட்டி என்று இன்றைக்கு நீட்டி முழங்குகிறார் வைகோ. ஆனால் இதே தமிழருவி மணியன் வைகோவை மேடையில் வைத்துக் கொண்டுதான் பா.ஜ.க.வோடு மதிமுக - தே.மு.தி.க. கூட்டணி என்ற திட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்காக பக்கம் பக்கமாக வார ஏடுகளில் கட்டுரை வரைந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் வாதாடினார். கோயம்பேடு விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் பேரம் பேசினார். அப்போதெல்லாம் உள்ளூர வைகோ அதை ரசித்துக் கொண்டிருந்தார். உண்மையில் வைகோவின் திட்டம் தான் அது. வைகோ தமிழர்களை கோமாளிகள் என்று நினைத்திருப்பார் போலும், காங்கிரஸ் எதிர்ப்பலையில் பி.ஜே.பி. படகில் வைகோ ஏறினாலும் தமிழர்கள் துடுப்பு போடுவார்கள் என்று நினைத்தார். அது நடக்கவில்லை. தனித்து தான் போட்டி என்று இன்றைக்கு சொன்னதை தமிழருவி மணியன் தன் திட்டத்தை வெளிப்படுத்திய அன்றே சொல்லி இருந்தால் இத்தனை வாதப் பிரதிவாதங்கள் நடந்திருக்காது. இத்தனை விமர்சனங்கள் எழுந்திருக்காது. விமர்சனங்கள் கடுமையாக எழவே மணியனை வசதியாக மாட்டிவிட்டுவிட்டு வைகோ தப்பிக்கப் பார்க்கிறார். பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், தற்சமயம் தன் திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கிறார். தன்மீதான விமர்சனங்களுக்கு தற்சமயம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் முற்றுப்புள்ளி அருகில் கமா போட்டு மீண்டும் அவரே துவங்கி வைப்பார். அதாவது நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பி.ஜே.பி. படகில் வைகோ ஏறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமே கிடையாது. பி.ஜே.பியையும், வாஜ்பாயையும் புகழ்ந்து பேசி, பி.ஜே.புயுடன் கூட்டணிக்கான சிக்னலை காட்டியவரே வைகோ தான் என்பதை நினைவுப் படுத்துகிறேன்...

- தொடரும்....

ஞாயிறு, 10 நவம்பர், 2013

முற்றத்தை யாருடைய கண்களால் பார்ப்பது? உதயகுமாருக்கு ஒரு கடிதம் !

அரசு இயந்திரங்களை கண்டு அஞ்சாமல், நெஞ்சுரத்தோடு அணுஉலை எதிர்ப்பு களத்தில் நிற்கும் தோழர் சுப.உதயகுமார் அவர்களே... வணக்கம். நீங்கள் நலமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். அப்படியே இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். 

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனே போராட்டாகாரர்கள் மீதும், அப்பாவி மக்கள் மீதும், சிறுவர்கள், முதியவர்கள் என்றுகூட பாராமல் கடும் தாக்குதலை மத்திய, மாநில கூட்டு சேர்ந்து தொடுத்தன. அன்றைக்கு அந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்து நெஞ்சம் வெடித்து "மற்றுமோர் முள்ளிவாய்க்கால்" கூடன்குளமும், கொலவெறியும் என்று எழுதினேன். மத்திய மாநில அரசுகள் கண்கொத்திப் பாம்பாக தங்களை கண்காணித்துக் கொண்டிருக்கையில், எங்கோ ஒரு குக்கிராமத்தில், ஓலைக்குடிசையில், எழுதப்படிக்க தெரியாத தமிழனுக்கும், தமிழச்சிக்கும் பிறந்த என்னை தாங்கள் அறிய வாய்ப்பில்லை. நீங்கள் அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு நான் பெரிதாக எதையும் சாதித்து விடவும் இல்லை. அவ்வப்போது எம் மக்களின் குரல்வளைகள் நெரிக்கப்படும் போது என்னால் முடிந்தமட்டில், எனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி எதிர்த்து பேசி இருக்கிறேன் அவ்வளவே. அணு உலை எதிர்ப்பு விவகாரத்தில் என்னால் முடிந்தமட்டில் சிறிதளவேனும் கருத்து பரப்பலை செய்திருக்கிறேன், அந்த மக்களின் நியாயத்தை, உரிமைகளை, உங்கள் ஒருங்கிணைப்பின் அவசியத்தை என் சுற்றத்தில், என் நட்பு வட்டங்களில் எடுத்து கூறி இருக்கிறேன் என்ற நம்பிக்கையிலே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

நவம்பர் 8 ஆம் தேதி முகநூல் பக்கத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் குறித்து பதிவை வெளியிட்டு இருந்தீர்கள். அது கொஞ்சம் நீண்ட பதிவுதான், அதில் போஸ்னியா-ஹெர்செகோவினா, ருவாண்டா போன்ற இடங்களில் நடைபெற்ற இனப்படுகொலைகளை நினைவு கூறி, வியட்நாம் வெடெரன்ஸ் மெமோரியல், அமெரிக்கத் தலைநகராம் வாஷிங்டனில் உள்ள யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஹோலோகாஸ்ட் மெமோரியல் மியூசியம் போன்ற நினைவு சின்னங்களை மேற்கோள் காட்டி அப்படியே சிங்களப் பேரினவாத அரசோடு உலகநாடுகள் பலவும் கூட்டு சேர்ந்து தமிழீழத்தில் நடத்திய இனப்படுகொலையை பற்றி எழுதி இருந்தீர்கள். தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை பாரெங்கும் எடுத்துரைக்க தஞ்சையில் கட்டப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை பற்றி பேசி, "முற்றம் அற்றம் காண வேண்டும் – தமிழ்ச் சுற்றம் ஏற்றம் பெற வேண்டும்!" என்று அழைப்பு விடுத்திருந்தீர்கள். அருமையான பதிவு அது. 

ஆனால் நீங்கள் சுட்டிகாட்டிய உலக வரலாறுகளும், நினைவு சின்னங்களும் எதையோ மறைக்கின்றன, முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கும் பணியில் நடந்தேறிய அருவருப்பான அரசியல் கோமாளித்தனங்களை மூடி மறைக்கின்றன என்ற ஐயத்தில் தான் அதே பதிவில் பின்னூட்டம் வழியாக "அண்ணா, உங்கள் மீது வைத்திருக்கும் மிகுந்த மரியாதையினால் உண்டான உரிமையில் கேட்கிறேன்.. 'நீங்கள் அடையாளம் காட்டிய ஆபத்தான ஆறுகட்சிகளில் பி.ஜே.பியும் ஒன்று. ஆபத்தானவர்களோடு மேடை ஏறுவது உங்களுக்கு எற்புடையது தானா?" என்று தங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்டேன். அதற்கு தாங்கள் "மனிதன் என்பதால் அவரும் தவறுகள் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை, இந்துத்வா சகதிகளை, குஜராத் இனப்படுகொலையாளர்களை அந்த நிகழ்வுக்கு அழைத்தது தவறுதான். அழைக்கப்பட வேண்டிய சில தலைவர்களை, இயக்கங்களை அழைக்கத் தவறியதும் தவறுதான். சில தன்னலவாதமிக்க ஆற்றலில்லா ஆளுமைகளை அணைத்துக் கொள்வதும் தவறுதான். தவறுகளை உரிமையுடன் சுட்டிக்காட்டுவோம், அன்புடன் தட்டிக்கேட்போம். நிகழ்வுக்குப் போய் நமது கருத்துக்களை, நிலைப்பாட்டை நாகரீகமாகப் பதிவு செய்வோம். நிகழ்வு வெற்றிபெறட்டும்." என்று எனக்கு பதில் அளித்தீர்கள். அந்த பதில் என்னை சமாதானப் படுத்தவில்லை, திருப்தி அளிக்கவில்லை. உங்கள் மீது நான் கொண்டிருந்த மதிப்பை ஓர் அங்குலம் குறைத்துவிட்டது. ஓர் அங்குலம் தானே குறைந்துவிட்டது, மீதம் எத்தைனையோ அங்குலம் மரியாதை இருக்கிறதே, அண்ணனிடம் கேள்வி கேட்க உரிமையும் இருக்கிறதே என்ற நம்பிக்கையில் தான் மீண்டும் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

உலக வல்லரசுகளோடு கரம் கோர்த்து கொண்டு, இந்திய வல்லாதிக்கத்தின் துணையோடு சிங்களப் பேரினவாத அரசால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட  நம்  ஈழ சொந்தங்களின் வலியை, தமிழீழத்தின் அவசியத்தை, நம் சொந்தங்களின் கோரிக்கையின் அவசியத்தை பாரெங்கும் எடுத்துரைக்க ஒரு நினைவு சின்னம் அமைப்பதில், அதுவும் நம் தமிழகத்தில் உருவாவதில் எனக்கொன்றும் மாற்றுக் கருத்தில்லை. உள்ளம் இனிக்க, இனிக்க சொல்வேன் நிச்சயமாக வரவேற்க கூடியதே. ஆனால் அந்த நினைவு சின்னம் யாரால் கட்டப்பட வேண்டியது? யாரோடு கூட்டு சேர்ந்து கட்டப்பட வேண்டியது என்பதில் தான் முரண்பட்டு நிற்கிறேன். உலகில் பல்வேறு நாடுகளில் இனப்படுகொலைகள் நடப்பதற்கு எது காரணம்? அந்த நாட்டின் ஏகாதியபத்திய சிந்தனையே. முதலாளித்தவ மனப்பான்மையே. அடிமை நிலையில் இருக்கும் மக்கள் வெகுண்டெழுந்து தங்களுடைய அடிப்படை உரிமைகளை கோரும் போது தான் அங்கே அடக்குமுறையும், வல்லாதிக்கமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தமிழீழத்தில் நடந்ததும் அதுவே தான். கூடங்குளத்தில் நடந்த அரச பயங்கரவாதத்திற்கு காரணமும் அதே தான். கூடங்குளம் அணு உலை திறக்கட்டுமே என்று தாங்களும், இடிந்தகரை மக்களும் அமைதி காத்திருந்தால் இந்த அரசுகளுக்கு  நீங்கள் தங்கமான பிள்ளைகளாக இருந்திருப்பீர்கள். கூடங்குளம் அணு உலையை நிறுவ இந்த அரசுகள் தீவிர முனைப்பு காட்டுவதற்கு அவர்கள் சொல்வதைப் போல நம் மக்களின் நலன் காரணமல்ல, நம் நாட்டில் இருக்கும் மின் பற்றாக்குறையை தீர்க்கவேண்டும் என்பதும் அவர்களின் நோக்கமல்ல,ரஷ்ய  முதலாளிகளின் நலன்களை கருத்தில் கொண்டுதான் என்பதை தாங்கள் அறிவீர்கள்.சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூட அமெரிக்க முதலாளிகளின் நலனையே கருத்தில் கொண்டது. ஆனால்  சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கடுமையாக எதிர்க்கும் இந்திய / மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் இடிந்தகரை மக்களுக்கு எதிராக நிற்கிறார்கள். சில பார்ப்பனிய ஊடகங்களும், இந்திய அரசும் இதை இடிந்தகரை மக்களின் பிரச்சனை என்றளவிலே பரப்புரை செய்கிறார்கள். ஆனால் நாமோ இது ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்சனை என்கிறோம். கம்யூனிஸ்டுகளின் காதுகளுக்கு மட்டும் நம் பரப்புரை போய் சேரவில்லை போலிருக்கு. அதே போல தமிழீழ விவகாரத்தில் கூட மக்களுக்கு எதிராகவே நிற்கிறார்கள். ஈழம் என்ற சொல்லைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி இருக்கும் சூழலில் தமிழீழத்தின் வலிகளை பாரெங்கும் எடுத்து சொல்ல அமைக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு தமிழ்தேசிய கருத்துடையவர்களோடும், தமிழீழ விரும்பிகளோடும் எவ்வித ஆலோசனைகளையும் கேட்காமல், தமிழர்களிடம் நிதி வாங்காமல், ஒட்டுமொத்த தமிழினத்தின் விழாவிற்கு ஒரு குறிப்பிட்ட பண முதலைகளிடம் மட்டும் காசை வாங்கிகொண்டு முற்றம் அமைத்திருக்கிறார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பதை நீங்களே தெளிவுபடுத்துங்கள். நன்கு வளர்ந்து நிற்கும் மரம் கூட சொல்லும் அது வளர்ந்த மண் வளத்தையும், அதை பராமரித்தவரின் பெருமையையும். தமிழீழத்தின் வலிகளை பாரெங்கும் எடுத்து சொல்ல அமைக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு தமிழ்தேசிய கருத்துடையவர்களோடும், தமிழீழ விரும்பிகளோடும் எவ்வித ஆலோசனைகளையும் கேட்காமல், தமிழர்களிடம் நிதி வாங்காமல், ஒட்டுமொத்த தமிழினத்தின் விழாவிற்கு ஒரு குறிப்பிட்ட பண முதலைகளிடம் மட்டும் காசை வாங்கிகொண்டு முற்றம் அமைத்திருக்கிறார்கள். அதன் விளைவாக வரும் காலங்களில் அந்த முற்றத்தை பார்வையிடுபவர்களின் கண்களில் ஈழத்துயரமோ, தமிழினத்தின் சிறப்போ தெரியபோவத்தில்லை. மன்னார்குடி மன்னர் நடராசனின் கொடைவள்ளல் தன்மையும், பெருமையுமே எஞ்சி நிற்கும் என்பது மட்டும் நிச்சயம்.

ஜெயலலிதா முதல் முறை தடா ஆட்சி நடத்தினார், இரண்டாம் முறை பொடா ஆட்சி நடத்தினார், மூன்றாம் முறை தடாலடி ஆட்சி நடத்துகிறார் என்று மக்கள் பாவலர் இன்குலாப் எழுதினார். அதுபோலவே அவர் இரண்டாம் முறை ஆட்சி செய்த பொழுது"இம்மென்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்"என்ற கொடுங்கோன்மை ஆட்சி நடத்தினார். தமிழீழ உணர்வாளர்களை பொடா எனும் கொடிய சட்டத்தின் மூலம் அச்சுறுத்திக் கொண்டிருந்த காலம் அது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டு பொடாவை ஆதரிக்கிறேன் என்று வைகோ சொன்னாலும் பொடாவின் வெளிப் பாய்ச்சலுக்கு வைகோவும் பலியானார். புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார். மேலும் கோவை ராமகிருட்டிணன்,  ஆறுச்சாமி போன்றவர்களை  இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது. பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ( தகவல்கள் : பல்வேறு இணையதளங்கள்)

 இப்படி தமிழினத்திற்கும், தமிழீழத்திகும் எதிர் நிலைப்பாட்டில் இருந்த ஜெயலலிதாவோடு நட்போடு இருந்த நெடுமாறன் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, பொடா சட்டத்தை ஆதரித்து, அதிலே ஜெயலலிதா ஆட்சியிலே கைதாகி மீண்டும் அவரோடு அரசியல் உறவை ஏற்ப்படுத்திக் கொண்ட வைகோ மீது நம்பிக்கை இருக்கிறது, அவர்தான் நல்ல தலைவர் என்று நீங்கள் சான்று அளிக்கிறீர்கள். ஆனால் பொடாகாலத்தில் கூட தமிழீழ கருத்துக்களை துணிந்து பரப்புரை செய்த சுப.வீ., திருமாவளவன் போன்றவர்களை நெடுமாறன் துரோகி என்கிறார். அவரிடம் எதிர்த்து ஒருவார்த்தை உங்களால் பேச முடியவில்லை. இங்கே நெடுமாறனின் கவனத்திற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூற விழைகிறேன். 10.03.2003 அன்று பாண்டிச்சேரியிலே ஒரு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மார்ச் 10 என்பது நெடுமாறனின் பிறந்ததினம். அப்போது அவர் பொடா கைதியாக சிறையில் இருக்கிறார். பாண்டிச்சேரியில் நடந்த நிகழ்வு நெடுமாறனின் பிறந்தநாளை பொடா எதிர்ப்பு நாளாக கொண்டாடினார்கள். அந்நிகழ்விற்கு தோழர் அழகிரி தலைமை தாங்கினார். பேராசியர் கல்யாணி, புலவர் பச்சையப்பன், திருச்சி சவுந்திரராசன், திருமாவளவன், பாவலர் இன்குலாப் போன்றவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு அது. (தகவல் : பாவலர் இன்குலாப் அவர்களின் எதிர்ச்சொல் நூல்) நெடுமாறன்,வைகோ போன்றவர்களின் கைதை கண்டித்து பேசியமைக்காகவே சுப.வீ கைது செய்யப்பட்டார். பொடா எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் திருமாவளவன். இன்று அவர்களெல்லாம் துரோகியாகிப் போனார்களோ? என்று நெடுமாறன் அவர்களிடம் வாய்ப்பிருந்தால் நீங்களே கேளுங்கள்...

திருமாவளவன், சுப.வீ. போன்றவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள், அதற்கு ஒரு காரணத்தையும் அவர்கள் சொல்கிறார்கள். அது போகட்டும் பரவாயில்லை. தமிழகத்திலே தமிழினத்தின் மீட்சிக்காகவே தொடர்ந்து களமாடி, இந்தி எதிர்ப்பு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் புகைப்படம் தவிர்க்கப்பட்டது ஏன்? யார், யார் புகைப்படங்கோ வைத்திருக்கிறார்கள், தந்தை பெரியார் தமிழினத்திற்குஅப்படி என்ன துரோகத்தை செய்து விட்டார்? பகுத்தறிவு கருத்துக்களை தமிழ்மண்ணில் விதைத்தது தவறா? சுயமரியாதை சுடரை தமிழகமெங்கும் ஒளிர விட்டது தவறா? மூடநம்பிக்கை களுக்கு எதிராக போராடியது தவறா? உச்சிக்குடுமிகளின் ஆதிக்கம் அடங்கவேண்டும், சாதியும், சாதியை காப்பாற்றும் இந்துமதமும் வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிய வேண்டும் என்று போராடியது துரோகமா? பெரியாரின் புகைப்படம் தவிர்க்கப்பட்டதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் (1) இந்துத்துவத்திற்கு எதிராக அவர் ஆடிய கோர தாண்டவமாக இருக்கலாம். (2) தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தம் வாழ்நாள் முழுவதும் மூத்திரப் பையுடன் சூத்திர வேதங்களை கண்டித்ததிற்காக இருக்கலாம். (3) மோடி மஸ்தான் களை மகிழ்விப்பதற்காக இருக்கலாம்.

அண்ணன் வைகோவிடம் என் சார்பாக நீங்கள் இந்த கேள்வியை கேளுங்கள் "பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் புகைப்படம் முற்றத்தில் தவிர்க்கப்பட்டது சரியா? என்று. அண்ணே, நான் உங்களிடம் கேட்கிறேன் தந்தை பெரியாரை தவிர்த்து விட்டு தமிழகத்தில் எந்த களத்தில் நீங்கள் நிற்பீர்கள்? பெரியாரை புறக்கணித்துவிட்டு தமிழினத்தின் வரலாற்றை எழுதிவிட முடியுமா?

அண்ணே... இறுதியாக 

மனிதன் என்பதால் அவரும் தவறுகள் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை, இந்துத்வா சகதிகளை, குஜராத் இனப்படுகொலையாளர்களை அந்த நிகழ்வுக்கு அழைத்தது தவறுதான் என்று தாங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். அவர் மட்டும் தான் மனிதரா? மனிதர் என்ற பட்டியலில் கலைஞரும், ஜெயலலிதாவும், சோனியாவும் கூடத்தான் அடங்குவார்கள். அவர்கள் செய்யும் தவறுகளையும் நாம் மன்னித்துக் கொள்ளலாமா? என்ற ஐயம் உண்டாகிறது. ஒருவேளை நெடுமாறனுக்கு காங்கிரசின் மீதான பழைய காதல் நினைவுக்கு வந்து காங்கிரசில் இருந்து யாரையாவது அழைத்திருந்தால் கூட அப்போதும் நீங்கள் இதே பதிலை தான் சொல்வீர்களா? அப்படியெல்லாம் நடக்காது என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. ஏனெனில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஈழத்தமிழர்களுக்கு பி.ஜே.பி. உதவி செய்தது என்று இன்றைக்கு வைகோவும், நெடுமாறனும் சொல்கிறார்கள். ஆனால் இதே வைகோவும், நெடுமாறனும் தான் 2004 ஆம் ஆண்டு பி.ஜே.பியை தோற்கடிக்க, காங்கிரசுக்கு ஒட்டுக் கேட்டார்கள் என்பதும் வரலாறு. மேலும் 'இந்துத்வா சகதிகளை, குஜராத் இனப்படுகொலையாளர்களை அந்த நிகழ்வுக்கு அழைத்தது தவறுதான்' என்கிறீர்கள். இதை உங்களின் மனசிறையிலே பூட்டி வைத்திருப்பதால் என்ன பயன்? உண்மையில் காங்கிரஸ் தலைவர்களைப் போல அல்லாமல் காங்கிரஸ் நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் கூட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டியவர் என்ற கருத்து நிலவுகிறது. அவர்களோடு பழகியதில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் தலைமைக்கு அஞ்சி தங்கள் மனசாட்சியைப் பூட்டிவைத்து விட்டு வெளி வேஷம் போடுகிறார்கள். அப்படித்தான் நீங்கள் சொல்வதும். ஒரு கருத்தை வெளிப்படையாக எடுத்து வைக்கும் போது தான் அது வலுப்பெறுகிறது, இல்லையென்றால் அது எவ்வித மாற்றத்தையும் உண்டாக்காது. பொதுவாகவே மனிதர்கள் தமக்கு வேண்டாதவர்கள் செய்யும் சிறு தவறை கூட பெரிது படுத்தி பேசுவார்கள், தமக்கு வேண்டியவர்கள் செய்யும் பெரிய தவறை அலட்சியப்படுத்தி சிறுமை படுத்துவார்கள். அப்படி நீங்களும் சாதாரண மனிதர்களைப் போல பேசுவது வேதனை அளிக்கிறது. காரணம் நாங்கள் உங்களை சாதாரண மனிதராக பார்க்கவில்லை. அசுர பலம் கொண்ட அரசுகளை எதிர்த்து நிற்கும் போராளியாகத்தான் பார்க்கிறோம். உங்களின் நேர்மைத்திறன் மிகவும் வேதனை அளிக்கிறது. குஜராத் இனப்படுகொலையாளர்களை நாம் எதிர்ப்பது வெறுமனே மத அளவுகோல் மட்டும் காரணமல்ல, உழைக்கும் மக்களை சுரண்டி முதலாளிகளை மகிழ்விக்கிறார் மோடி என்பதும்  முக்கிய காரணம்.

ஜெயலிதாவோடு இருந்தாலும் நெடுமாறன் தமிழினத்திற்காக பேசுவார், வைகோ வாதாடுவார் என்று நினைக்கிற உங்களால் கலைஞரோடு இருந்தாலும் திருமாவளவன் தமிழினத்திற்காக போராடுவார் என்று ஏன் நினைக்கத் தோன்றவில்லை? இந்த இடத்திலே ஒரே ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் கூடங்குளம் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடும் வெயில் என்றும் பாராமல் கோயம்பேட்டில் நடுரோட்டில் அமர்ந்து கைதான ஒரே தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும்  திருமாவளவன்  என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். வைகோ நல்ல தலைவர் என்று எழுதுகிற உங்களால் திருமாவளவனை புறக்கணித்தது தவறு, இந்துத்துவா சக்திகளை வரவேற்றது தவறு என்று ஏன் எழுத முடியவில்லை? மேலும் இந்துத்துவா சக்திகளை அழைத்ததை தோழர் கொளத்தூர் மணி, தோழர் ஜிவாஹிருல்லா போன்றவர்கள் கண்டித்திருக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு நினைவு கூறுகிறேன். 

முற்றத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைத்தமையால் தான் இக்கடிதத்தை உங்களுக்கு எழுத நேர்ந்தது. தங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கமெல்லாம் எமக்கில்லை, ஒருவேளை நான் குழப்பத்தில் இருந்தால் தெளிவு பெற்றுக் கொள்ளலாமே என்ற நேர்மறை சிந்தனை தான் எமக்கு இக்கடிதத்தை எழுத தூண்டியது. முற்றத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைக்கிறீர்கள் அனால் முற்றத்து புகைப்படங்களை காணும் போதெல்லாம் நெடுமாறனின் சந்தர்ப்பவாதமும், நடராசனின் முதலாளித்தவமும் தான் என் கண்களுக்கு தெரிகிறது. வந்தால் முற்றத்தை யாருடைய கண்களால் பார்ப்பது?

உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் தம்பி...
தமிழன்வேலு

வியாழன், 7 நவம்பர், 2013

கடைசி மனிதனின் கோபங்கள் - 3 ( மங்கள்யான் பெருமையா? )

ஏய்... வள்ளி, 'வாயேண்டி போயிட்டு வந்திடுவோம்' அவசரப்படுத்தினாள் சரோசா. செத்த இருக்கா சுமதியும் வாரேன் ன்னு சொன்னா, சேர்ந்தே போயிட்டு வந்திடுவோம் என பதில் சொல்லிக்கொண்டே வீட்டை பெருக்கி கொண்டிருந்தாள் வள்ளி. சுமதி புதுசா கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்தவ, அசலூர்க்காரி. பாத்தாவது வரை படித்திருக்கிறாள். சரோசா இந்த ஊருக்கு கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்து 25 வருஷம் ஆவுது. ரெண்டு பொம்பள புள்ளைங்க மட்டும்தான். ரெண்டாவது மவள போன வருஷம் கட்டிகொடுத்தாங்க. வள்ளிக்கு  ஒண்ணாவது படிக்கிற பொம்பள புள்ளையும், ரெண்டு வயசு  பையன் ஒருத்தனும். சரோசாவும், வள்ளியும் கூட்டாளிக. அவங்களோட புதுக்கூட்டாளி தான் சுமதி. சந்தைக்குப் போறது, மோட்டாருக்கு துணி துவைக்க போறது, வீடு மொழுக, விடியகாலையில வாசல்ல தெளிக்க சாணி எடுகக போறது, குளிக்க போறது, கக்கூஸ் போறது வரைக்கும் மூவரும் கூட்டுதான். இப்பகூட கக்கூஸ் போகத்தான் சரோசா வள்ளியை அவசரப்படுத்திக் கொண்டு இருக்கிறாள். "கக்கூஸ் போறதுக்கு கூட கூட்டாதான் போவிகளோ?" ன்னு நகர்ப்புறங்களில், எப்பவும் ஒன்னாவே திரியுற பசங்ககிட்ட பெருசுகள் கேட்பதுண்டு. நகர்ப்புறங்களில் கூட்டு சேர்ந்து கக்கூஸ் போக வேண்டிய  அவசியமில்ல, ஏன்னா அங்க வீட்டுக்கு வீடு கழிவறை இருக்கு. கழிவறையில ஒரு நேரத்துக்கு ஒருத்தர் தான் போகமுடியும். ஆனா கிராமப்புறங்களில் கழிவறை இல்ல, விடியகாலை நேரத்திலும், பகல் நேரத்திலும் காட்டுப்பக்கம் மறைவான இடமும், இரவு நேரங்களில் ரோட்டோரமும் தான் அங்க இருக்க மக்களுக்கு கழிவறை. ஒரே நேரத்துல அம்பது, அறுவது பேர்கூட போகமுடியும். மானத்தை அடகுவச்சி தான் கக்கூஸ் கூட போகமுடியும், எங்கிருந்து எவன்  வந்து அம்மண குண்டியா உக்கார்ந்திருக்கிற பொம்பளைகளை பார்த்திருவானோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம். குளிப்பது கூட அப்படி ஒரு போராட்டம் தான்.

"பொழுதே போ..போ.., இரவே வா.. வா.." என்று அன்றைய நாளை வழிநடத்திக் கொண்டிருக்கிறது நிலவு. கிராமத்தை முற்றாக கவ்வி கொண்டது இருள். தெரு முக்கில் சோலார் லைட்டு எரிந்து கொண்டிருக்கிறது. சில வீடுகளில் சொந்த சர்வீஸ் கரண்ட் வாங்கி இருக்கிறார்கள். பெரும்பாலான வீடுகள் அரசாங்க இலவச மின்வசதி தான். சொந்த சர்வீஸ் எடுத்தவங்க வீட்டில் பளீரென்ற வெளிச்சமும், இலவச மின்சாரம் உள்ள வீட்டில் மங்கலான குண்டு பல்பும் எரிந்து கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு வீடுகள்   காரை வீடுகளாகவும், பெரும்பாலான வீடுகள் கருப்பஞ்சருகு வேய்ந்து, களிமண் சுவரால் ஆன கூரை வீடுகளாகவும் தான். காரை வீடு உள்ளவங்க வீட்டில கூட கழிவறை கிடையாது. 

புருஷனுக்கு சோறு குடுத்திட்டு பளீரென்ற சிரிப்போடு சுமதி வெளியே வருகிறாள். வள்ளியும் வீட்டு வேலைகளை முடிச்சிட்டா, ரெண்டுபேரும் சரோசா வீட்டுக்கு போய் "வாக்கா, போயிட்டு வந்திடுவோம்" என்க மூவருமாக கிளம்பிட்டாங்க. வறண்ட பட்டிக்காடு என்பதால் ரோட்டில் போக்குவரத்து பகல் நேரத்தில் கூட கம்மிதான். ஒரு நாளைக்கு நாலுமுற தான் பஸ் கூட வரும். இரவு என்பதால் ரோட்டில் ஆள் அரவமே இல்ல. இவங்கள மாதிரி கக்கூஸ் போக வரவங்க வந்தாதான். இல்லாட்டி ஆத்திர அவசரத்துக்கு யாராச்சும் வந்தா தான் உண்டு. ரோட்டோரத்தில், காடுகளில் திறந்த வெளியில் கக்கூஸ் போவது என்பது,  அது ஒரு நரக வேதனை.  அவசரமா பேண்டுகிட்டு இருக்கும் போது  யாராவது எதிரில் வருவது போல நினைத்துப் பாருங்களேன், அந்த நரக வேதனையை உங்களாலும் உணர முடியும். ஊருக்குள்ள இருக்க நாலஞ்சி காலிப்பயலுவ வேணுமுன்னே அந்தபக்கமா போவதும் உண்டு. மூவருமாக சீரியல் கதை, மாமியார் கதை, ஊருக்குள்ள ஓடிகிட்டு இருக்க காதல் கதை, அதுபோக வேண்டாதவங்க பத்தி அப்படி, எப்படி கிசு கிசு பேசிகிட்டே போவதுண்டு. அன்னைக்கு மாட்டுனது மூனாவது தெரு முனியன் பய கதை. அவன் தான் ஊருக்குள்ள இருக்க ஒன்னாம் நம்பரு காலிப்பய. எங்கயோ போயி சாராயத்தை ஊத்திகிட்டு வந்து 'எனக்கு கண்ணாலம் பண்ணி வைய்யுன்னு' அந்த கிழவன் - கிழவியை அடிச்சி ரோட்டுல இழுத்து போட்டுட்டானாம். இவிங்க பேசிகிட்டே போகும் போதே இவங்களுக்கு முன்ன போனவங்க திரும்பி வந்துகிட்டு இருக்காங்க. இவிங்க அவங்கவங்களுக்கு இடம் பார்த்து, யாரும் அந்த இடத்தில கக்கூஸ் போயிருக்காங்களா ன்னு செக் பண்ணிட்டு, பூச்சி பூரான் எதுவும் இருந்தா ஓடிபோகட்டும் ன்னு ச்சூ...ச்சூ... ன்னு சத்தம் போட்டு, எதுவும் பிரச்சனை இல்ல உக்காரலாம் ன்னு தீர்மானம் பண்ணிக்கிட்டு உக்கார்ந்தாங்க. 

உக்காந்து கிட்டே

ஏய்...சுமதி ன்னு மூணு பேருக்கு மட்டும் கேக்குறாப்ல மெல்ல குரல் குடுத்தாள் சரோசா

சொல்லுக்கா ன்னு சுமதி பதில் சொல்ல

இப்படித்தான் ஒருமுறை நம்ம பக்கத்துக்கு வீட்டு முருகாயி கிழவி இருக்குல்ல, அதுக்கு அவசரமா வந்திருக்கும் போல வேகமா ஓடிவந்து ஒரு எடத்துல உக்காந்து போகும்போது பின்னாடி கட்டுவிரியன் பாம்பு ஒண்ணு இருந்திருக்கு, அவசரத்துல அத கிழவி பாக்குல போலிருக்கு. பாம்பு பின்னாடியே கொத்திபிச்சு...

அப்புறம் என்னக்கா ஆச்சு?

வைத்தியர் வந்திருக்காரு , கிழவி கூச்ச்சபட்டுகிட்டு காட்டமாட்டேன் ன்னு உறுதியா சொல்ல கொஞ்சநேரத்துல கண்ணு சொருகிடுச்சு. தர்ம ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடுனா முடியாது பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போ ன்னு சொல்லிட்டான். அப்புறம் மல்லிகா ஆஸ்பத்திரியில தான் பணம் கட்டி தான் கிழவியை காப்பாத்துச்சு...

'பாம்பு கூட இங்க இருக்காக்கா' ன்னு பயந்துகிட்டே சுமதி கேட்க

"இருக்காதுடி, எப்ப வந்தாலும் பூச்சி, பூரான் இருக்கான்னு பாத்திட்டு மெதுவா சத்தம் போட்டு உக்காரு. ஒன்னும் ஆகாது" அறிவுரை சொன்னாள் சரோசா

எக்கோ யாரோ வர்ர்றாங்க எந்திருக்கா ன்னு வள்ளி சொல்ல

டபக்குன்னு சேலையை கீழ வுட்டு மூணுபேரும் எந்திருச்சி, எங்கன்னு பாக்க...

ஒரு முன்னூறு அடி தூரத்துல டார்ச்சு வெளிச்சம் கிட்ட வருவது போல இருந்தது..

இப்ப இன்னும் கொஞ்சம் கிட்ட வந்துடுச்சு...

வருது...வருது...

இப்ப கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் மங்கலாக தெரிய.. 

என்னன்னு பார்த்தா மின்மினி பூச்சி...

அடி போடி பொச கெட்டவள... 'வந்ததும் உள்ள போய்டுச்சு இனி எப்ப வருமோ? 'ன்னு அங்கலாய்த்தாள் சரோசா

ஏக்கா... இப்பவே இப்படின்னா மழைக்காலத்துல என்ன பண்றது? ன்னு சுமதி கேட்க...

ஹ்ம்ம்... சட்டியில பேண்டு வெளியே வந்து கொட்ட வேண்டிதான்னு சரோசா கிண்டலடித்தாள்...

'கோவிக்காதக்கா தெரியாமத்தானே கேக்குறேன் சொல்லுக்கா' மீண்டும் சுமதி...

ஒங்க அப்பன் வீட்டுல மொசகல்லு வச்ச பாத்ரூம்லய போன, உனக்கு தெரியாதா? சரோசா மறுகேள்வி எழுப்பினாள்...

இல்லக்கா எங்கூர்ல பக்கத்துலையே ஆறு இருக்கு... அங்க போவோம் சுமதி பதில் சொல்ல...

முழங்காலு சேத்துல தான் அந்த காட்டுக்குள்ள போகணும், இல்லாட்டி அங்க தூரத்துல பாழடைந்த ரைஸ் மில் ஒன்னு இருக்கு. அங்க போகணும்... வேற வழி? அலுத்துக்  கொண்டாள் சரோசா...

எல்லாவற்றையும் சிரித்துக் கொண்டும், வேதனை பட்டுக்கொண்டும் கேட்டுகிட்டு இருந்த வள்ளி 'ஏக்கா என் பையன் அழுவான்' வாங்க போகலாம் என்று எழுந்து கொண்டாள். மூவரும் கிளம்பி கொஞ்சதூரம் நடக்க, காணாமல் மறைந்து போன அந்த மின்மினி பூச்சி இவர்களை பார்த்து கண்ணை சிமிட்டி சிமிட்டி சிரித்துக்கொண்டே முகத்துக்கு நேராக வந்தது... 'கிண்டலாப் பண்ற ஒன்ன எண்ணப் பண்றேன் பாரு'ன்னு அதை பிடிக்க சரோசா தாவ அது மேல பறந்து ஓடிப்போகவும் சரோசா தடுமாறி விழுந்தாள். சுமதியும், வள்ளியும் கொல்லென்று சிரித்தார்கள்.. மீண்டும் தெருவு கிட்ட வரவும், அடுத்த க்ரூப் இப்ப போறாங்க...

அவரவர் வீட்டுக்கு அவரவர் போயிட்டாங்க...

பிளாஸ்டிக் ஜெக்குல தண்ணி எடுத்திட்டு வீட்டுக்கு பின்னாடி போனாள் சுமதி...

'இவ்ளோ நேரம் எங்கடி போனான்'னு சுமதி வீட்டுக்காரன் கேட்டுகிட்டே கலைஞரய்யா ஆட்சில கொடுத்த டிவி ல நியூஸ் கேட்டுகிட்டு இருந்தாப்ல ...

செய்தியில் ...

மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்றும், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். செய்தி வாசிப்பாளர் பூரிப்படைந்து சொல்லி கொண்டிருந்தார். அடுத்ததாக  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தனர்.

அந்த நேரம் வீட்டுக்குள்ள நுழைந்த சுமதி "இந்த நாட்டுல பொம்பளைங்க கற்புக்கும் பாதுகாப்பில்ல, கக்கூஸ் போகவும் பாதுகாப்பில்ல" இதுதான் இந்த நாட்டுக்கு பெருமையா போல ? என்று வாய் விட்டு சொல்லி கோபபட்டாள்... 

... தொடரும்...

வியாழன், 24 அக்டோபர், 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு : நெடுமாறன் வீட்டு காதணி விழாவா?

'தமிழீழ விடுதலை' எனும் உயரிய கோரிக்கையை நெஞ்சில் ஏந்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிஞ்சிற்றும் சமரசமின்றி ஆயுதப்போராட்டம் செய்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் நாள் முல்லிவாய்க்காலில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும், போர் முடிந்தது எனவும் சிங்களப் பேரினவாத அரசு அறிவித்தது. முள்ளிவாய்க்கால் பேரவலம் மனிதகுல வரலாற்றிலே மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. கொத்துகொத்தாக தமிழர்கள் சாகடிக்கப்பட்டார்கள். அந்நாளை நினைக்கும் போதெல்லாம் கண்களில் இன்றைக்கும் நீர் கசியாமல் இல்லை; உள்ளமெல்லாம் குமுறுகிறது; இதயமே நின்றுவிடும் போலிருக்கிறது. இனவிடுதலைக்காக எந்த ஒரு இழப்பையும் ஏற்க தயங்காதவர்கள் விடுதலைப்புலிகள். தாயக விடுதலைக்கு தன்னுயிரை நீத்த மாவீரர்கள் மரணத்திற்கு அஞ்சவில்லை; மாறாக மரணத்தை நெஞ்சிலே (சயனைட்) கட்டி தொங்கவிட்டிருந்தார்கள். இனவிடுதலை ஒன்றை தவிர வேறெந்த சமரசத்தையும் ஏற்காமல் களப்போரில் வீரச்சாவடைந்த மாவிரர்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் ஆன்மா இன்றைக்கும் தமிழீழ விடுதலையை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. 'விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த வீரர்கள் அனைவரும் சமமே', யாருக்கும் கூடுதல் சிறப்போ, சலுகையோ கிடையாது என்ற உயரிய நோக்கத்தில் தான் மாவீரர்கள் நாள் என்ற ஒற்றை நாளை அறிமுகம் செய்தார் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன். ஆனால் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டதாக சொல்லும் பழ.நெடுமாறனோ பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் பிணத்தின் மீது கேவலமான, அருவருப்பான அரசியலை அரங்கேற்ற துணிந்துவிட்டார். யாழ் பல்கலை கழகத்தை எரித்த சிங்களப் பேரினவாதிகளுக்கும், பாபர் மசூதியை இடித்து, குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கோரதாண்டவம் ஆடிய மோடிமஸ்தான்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை அகராதியில் தேடிப்பார்க்கிறேன் எந்த வேறுபாடுகளும் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. ஆனால் நெடுமாறன் போன்றவர்களின் கண்களுக்கு மட்டும் ராஜபக்சே படுபாவியாகவும், மோடி தமிழர்களை காக்க வந்த இரட்சகராகவும் தெரிகிறார் போலிருக்கு. அதிதீவிர இந்துத்துவவாதி பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு நெடுமாறனின் உலகத் தமிழர் பேரமைப்பு மூலம் உலகப் பெருந்தமிழர் பட்டத்தைக் கொடுத்த போதும், அதே மேடையில் அதை எதிர்த்த தோழர் நீலவேந்தன் அவர்களை அவமானப்படுத்தி அனுப்பியபோதே நெடுமாறனின் காவிமுகம் அம்பலப்பட்டு போனது. இது மறு பதிப்பு என்று நினைக்கிறேன்.           

களப்போரிலும், சிங்களப் பேரினவாத அரசாலும் படுகொலை செய்யப்பட மாவீரர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் நினைவாக தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைத்திருக்கிறார்கள். அதன் திறப்புவிழா முறையே நவம்பர் 08,09,10 மூன்று நாட்களில் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தனியார் வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் நெடுமாறன் "எந்தவொரு அரசியல் சார்பும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழினத்தின் விழாவாக இதை அரங்கேற்ற இருக்கிறோம்" என்று சொல்லி இருக்கிறோம். இங்குதான் எனக்கு முரண்பாடு ஏற்படுகிறது. இதுநாள் முள்ளிவாய்க்கால் முற்றத்தை நடராசன் தன் சொந்தக்காசில் செய்கிறார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் நெடுமாறன் இப்போதுதான் சொல்கிறார் இது ஒட்டுமொத்த தமிழினத்தின் விழா என்று. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, தமிழ்தேசிய கருத்துடையவர்களோடும், தமிழீழ விரும்பிகளோடும் எவ்வித ஆலோசனைகளையும் கேட்காமல், தமிழர்களிடம் நிதி வாங்காமல், ஒட்டுமொத்த தமிழினத்தின் விழாவிற்கு ஒரு குறிப்பிட்ட பண முதலைகளிடம் மட்டும் காசை வாங்கிகொண்டு முற்றம் அமைத்திருக்கிறார். இக்கட்டுரையை நான் எழுதும் போது என்னோடு பணிபுரியும் தெலுங்குதேச நண்பர் உடனிருந்தார். என்ன கட்டுரை என்று விவரம் கேட்டதும், நான் எனக்கு தெரிந்த ஈழ வரலாறையும், ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் கூறி அதற்கான நினைவு சின்னங்களை அமைக்கிறார்கள் என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்னார் 'இது ஒட்டுமொத்தமாக தமிழினத்தின் விழா என்று சொல்கிறீர்கள், அப்படியானால் இதில் ஒட்டுமொத்த தமிழர்களின் பங்களிப்பும் ஏன் புறக்கணிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும் முன்னிறுத்துகிறார்கள்" என்று. என்ன செய்ய நாங்கள் பெற்றிருக்கும் தலைவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்று சொன்னேன். மேலும் அவரிடம் நான் சொன்னேன் 'நன்கு வளர்ந்து நிற்கும் மரம் கூட சொல்லும்  அது வளர்ந்த  மண் வளத்தையும், அதை பராமரித்தவரின் பெருமையையும்' ஆனால் ஒட்டுமொத்த தமிழினத்தின் சார்பாக நினைவு முற்றம் அமைக்கும் பெரும்பணியிலே " ஈழம் அமைந்துவிடாதா? எம்மக்களின் கண்ணீருக்கும், செந்நீரும் ஆறுதல் கிடைத்துவிடாதா?" என்ற ஏக்கத்தோடு தெருவில் நின்று போராடிய எம்போன்ற சாமான்யர்களை புறக்கணித்துவிட்டு, சாதியவாதிகளோடும், மதவாதிகளோடும் கூட்டு சேர்ந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் சிறப்பையும், வலிகளையும், வேதனைகளையும் அவர்கள் காலடியிலே சமர்ப்பிக்கிறார்கள். 'இன்றைக்கும் வார ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள் முற்றம் தந்த முனைவரே நீவிர் வாழிய பல்லாண்டு என்று'. வரும் காலங்களில் அந்த முற்றத்தை பார்வையிடுபவர்களின் கண்களில் ஈழத்துயரமோ, தமிழினத்தின் சிறப்போ தெரியபோவத்தில்லை. மன்னார்குடி மன்னர் நடராசனின் கொடைவள்ளல் தன்மையும், பெருமையுமே எஞ்சி நிற்கும். இது தமிழினத்திற்கு செய்யும் துரோகமில்லையா? என்று கேட்டு வெட்கம் விட்டு அழுதேன்...                      

அதிலே இன்னொரு கேவலமும் அரங்கேறுகிறது.  '80 காலகட்டங்களில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் தோளோடு தோள்நின்ற அய்யா வீரமணி, இலைங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இனப்படுகொலையை நிறுத்தக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை துறக்க துணிந்த தொல்.திருமாவளவன், பல ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து போராடிவரும் சுப.வீ, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தகூடாது, மீறி நடத்தினால் மாநாட்டிலே இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காக தன்னுயிரையும் இழக்க துணிந்த தோழர் தியாகு போன்றவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்'. நிலைமை அப்படி இருக்க எம்போன்ற சாமான்யன்யர்களின் நிலையெல்லாம் அப்படி ஒன்றும் மோசம் இல்லை என்றே நினைக்கிறேன். அதே வார ஏட்டில் 'பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு அனுப்புவோம், ஆனால் ஈழப்படுகொளைகளுக்கு துணைபோன துரோகிகளுக்கு நாங்கள் அழைப்பு அனுப்பவில்லை' என்று நெடுமாறன் அறச்சீற்றம் காட்டி இருக்கிறார். தேர்தல் அரசியலிலே அவரவருக்கென்று ஒருப் பார்வையும், தனிப்பட்ட விருப்பங்களும் இருக்கவே செய்யும். அதையெல்லாம் மனதிலே வைத்துக்கொண்டு ஈழவிடுதலை பேரில் இதுபோன்ற இழிவான அரசியலில் ஈடுபடுபவர்களை அந்த மாவீர்களின் ஆன்மா கூட நிச்சயம் மன்னிக்காது. ஈழப்போர் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அது உள்நாட்டு சிக்கல் என்றளவிலே உலகநாடுகளும், இந்தியாவும் கருதின. 1983 ஜூலையில் வெலிக்கடைச் சிறையில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகுதான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசு நடத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாதம் அம்பலபட்டது. திருமாவின் ஈழவிடுதலைப் போரும் அப்போதே தொடங்கிவிட்டது. அப்போது திருமா கல்லூரி மாணவராக இருந்தவர். விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பை தொடங்குவதற்கு முன்பாகவே திருமாவளவன் ஈழவிடுதலைக்காக போராடி இருக்கிறார். கல்லூரி மாணவராக இருந்த போது கண்ணதாசன் இலக்கிய பாசறையின் பொது செயலாளராக இருந்த அவர் அந்த இலக்கிய பாசறையை கொண்டு மயிலாப்பூர் நகர் முழுதும் ஈழவிடுதலையை ஆதரித்து சைக்கிள் பேரணி செய்தவர் அவர். இப்படி கையில் ஒவ்வொன்றையும் கருவிளாக்கி ஈழவிடுதலைக்காக போராடியவர்களை எல்லாம் புறக்கணித்து விட்டு பொன்.ராதாகிருஷ்ணனை முள்ளிவாய்க்கால் முற்ற நிகழ்வுக்கு அழைத்து சிறப்பு செய்வதன் மூலம், தமிழர்களின் ஈழ உணர்வை, இந்திய ராஜபக்சே நரேந்திரமோடியின் காலடியில் அடகு வைக்க துணிந்து விட்டாரோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

திருமா, சுபவீ இருவர்களும் கலைஞரை  ஆதரிக்கிறார்கள், அதனால் அவர்கள் துரோகியாகிப் போனார்கள், பாவம்... தோழர் தியாகு அப்படி என்ன மன்னிக்கவே முடியாத குற்றத்தை செய்துவிட்டார்? 'தமிழ் ஈழத்தின் தவம்' என்று பிரபாகரனால் பாராட்டப்பட்ட (?) நெடுமாறன் எதிரிகளை இடிக்காமல், தோழமைகளை புறந்தள்ளுவது சங்கடமாக இருக்கிறது. மேலும் துரோகத்தை பற்றியெல்லாம் பேசும் யோக்கிதை நெடுமாறனுக்கு இருக்கிறதா? எதோ ஒரே நாளில் துரோகம் நடந்துவிட்டதை போலவும், அதற்கு கலைஞரும், அவரோடு கூட்டணியில் இருந்தவர்களும் துணைபோனார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இதே நெடுமாறன் 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதும் புலிகளை ஆதரித்து பேசியதற்காகவே பொடா சட்டத்தில் 18 மாதம் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து விடுதலையான நெடுமாறனை சிறுத்தைகள் தான் வரவேற்றார்கள். பொடா சட்டத்தை எதிர்த்து மேடைக்கு, மேடை முழங்கியவர்கள் திருமாவும், அய்யா சுப.வீ அவர்களுமே. ஆனால் சிறையில் இருந்து வெளியான நெடுமாறன் என்ன செய்தார்? ஜெயலலிதாவை எதிர்க்க, நேராக கோபாலபுரம் சென்று தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு 2004 நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்கவில்லையா? 2004 யிலே ஈழமக்கள் சுபிட்சமாக இருந்தார்களா? போர் நடைபெறவில்லையா? இப்படி தன்னுடைய வசதிக்கும், சுயநலத்திற்கும் ஏற்ப சர்வதேச அளவில் பேசப்படவேண்டிய ஈழ சிக்களை, வெறும் கருணாநிதி எதிர்ப்பாக மட்டுமே சுருக்கிய பெருமை நெடுமாறன் வகையறாக்களையே சாரும். அவர்கள் பாணியிலே சொல்லவேண்டுமானால் உணர்வாளர்களை புறக்கணித்ததை விட தீவிர இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான பி.ஜே.பி.யின் பொன்.ராதாகிருஷ்ணனை சிறப்பு செய்ததன் மூலம் உலகத்தமிழர்களுக்கே துரோகம் இழைக்கிறார் நெடுமாறன். விடுதலைப்ப்புலிகளுக்கோ, ஈழத்தமிழர்களுக்கோ சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடாதவர்கள் பி.ஜே.பி யினர். ஆனால் விடுதலை சிறுத்தைகளோ ஈழத்திற்காகவே முழுநேரமாய் போராடினார்கள். 2009 ஆம் சனவரி திங்களில் மறைமலை நகரில் நடந்த உண்ணாவிரதப் போரில் 360 சிறுத்தைகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். 36 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். ஆதிக்க சாதிக்காரர்களின் அடாவடி இன்றைக்கும் சேரியில் நடந்துகொண்டிருந்தாலும் 'ஈழத்தமிழனுக்காக சேரித்தமிழர்களை ஒருங்கிணைக்கும் திருமாவின் முயற்சி நல்ல பலனளிக்கும்' என்று இதே நெடுமாறன் தான் திருமாவின் களப்பணியில் கால்நூற்றாண்டு எனும் ஆவணப்பதிவில்  கூறி இருக்கிறார். 

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தவர் சு.சாமி, இலங்கை தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை என்று சொன்னவரும், இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்ஷேவை இந்தியாவுக்கு (சாஞ்சி) சிவப்பு கம்பளம் விரித்து அழைத்தவர் சுஷ்மா சுவராஜ், இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொன்னவர் 'ரவிசங்கர பிரசாத்' இப்படிப்பட்ட தமிழீழ விரோத கருத்துக்களை கொண்டவர்கள் அனைவரின் இருப்பிடமும் பி.ஜே.பி.  அப்படிப்பட்ட பி.ஜே.பியின் பிரிதிநிதியாக பொன்.ராதாகிருஷ்ணனை அழைக்கும் நெடுமாறனுக்கு... 

(1) 1983 ஆம் ஆண்டு பிரபாகரன் தமிழக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது மாணவர் படையை கூட்டிக் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட சொன்ன, 1983 ஆம் ஈழ விடுதலைக்கு ஆதரவாக மாணவர் போராட்டம் நடத்திய, 'விடுதலை புலி' எனும் கையெழுத்து ஏடு நடத்திய, 80களில் வைகோவை வைத்து பச்சையப்பன் கல்லூரியில் "இந்திய அரசின் கொலைக் குற்றம்" (பின்பு அது கலைஞரின் அறிவுறுத்தலால் "குற்றவாளிக் கூண்டில் இந்திய அரசு" என்று பெயர் மாற்றப் பட்டது) என்ற கருத்தரங்கை நடத்திய திருமாவை மட்டும் அழைக்க மனமில்லை. காரணம் திருமா தி.மு.க. கூட்டணியில் இருந்தார். அதனால் துரோகியாகிப் போனாரா?  

(2) கம்யுனிஸ்ட் கட்சியை கூட்டணியில் வைத்துக் கொண்டே, வைகோவை கூட்டணியில் வைத்துக் கொண்டே, பழ நெடுமாறனோடு நட்பு பாராட்டிக் கொண்டே, காங்கிரசை விட்டு தி.மு.க விலகினால் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்த ஜெயலலிதாவை வைகோ உள்ளிட்டவர்கள் ஆதரிக்கலாம், புலிகளால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்ன சொன்னவரோடு , பிரபாகரனை கைது பண்ணிவந்து இந்தியாவில் தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவரோடு, போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவரோடு, அய்யா நெடுமாறனை 18 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவரோடு, அண்ணன் வைகோவை 10 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவரோடு அவர்கள் கூட்டணி அமைக்கலாம். ஆனால்  ‘தி.மு.க. அணியும் வேண்டாம்; அதிமுக அணியும் வேண்டாம்.  தமிழ்த் தேசிய தோழமைகள் அனைவரும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டுவோம்!’ என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தொடர்ந்து அறைகூவல் விடுத்து, அதற்கு யாரும் செவிமடுக்காத சூழலில் தி.மு.க.வோடு கூட்டணியில் இருந்த திருமா மட்டும் துரோகியாகிப் போனாரா?

(3) தி.மு.க. அணியில் இருந்தாலும் அ.தி.மு.க. அணியில் இருக்கிற கம்யுனிஸ்ட் கட்சியோடு, அ.தி.மு.க. அணியில் இருக்கிற ம.தி.மு.க வோடு, அ.தி.மு.க. அணியில் சேர இருந்த பா.ம.க. வோடு, அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு அளித்து வந்த பழ.நெடுமாறனோடு, அ.தி.மு.க. வுக்கு எல்லா வேலைகளையும் செய்து வந்த எம். நடராசனோடு எதைப் பற்றியும் கவலைப்படாமல், கூட்டணியைப் பற்றி கவலைப் படாமல், அரசியல் ஆதாயத்தை பற்றி கவலைப் படாமல், தேர்தலைப் பற்றி கவலைப் படாமல் ஆறு மாதம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் கைகோர்த்து களப்பணியாற்றிய திருமா மட்டும் துரோகியாகிப் போனாரா?

(4) தமிழீழம்  என்ற கருத்தியலையே ஏற்றுக்கொள்ளாத கம்யூனிஸ்டுகள் அ.தி.மு.க. அணியில் இருந்ததாலே தமிழீழ தோழமைகள் ஆகிப்போனார்கள்; ஆனால் இந்திய நாடாளுமன்றத்திலேயே, 'தமிழீழம் ஒன்றே இறுதி தீர்வு' பேசிய திருமா தி.மு.க. அணியில் இருந்ததாலே துரோகியாகிப் போனாரா?

(5)  1983 ஆம் ஆண்டு தோழர் தியாகு சிறையில் இருந்த போது 1500 சிறை கைதிகளோடு சேர்ந்து ஈழத்திற்காக  போராட்டம் நடத்தினார் . மார்சிய கம்யூனிஸ்ட்  கட்சியின் , ஈழ எதிர்ப்பு கொள்கையை கண்டித்து பேசியதால் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு தான் தமிழ்தேச பொதுவுடைமை கட்சி யை துவங்கினார். ஈழ கோரிக்கையை ஏற்றுகொள்ளாத கம்யூனிஸ்டுகள் அ.தி.மு.க. அணியில் இருந்ததாலே தோழமைகளாகி போனார்கள். ஆனால் இதுநாள்வரை கலைஞரை எதிர்த்தும் பேசி இருக்கிற தியாகுவின் உண்ணாவிரத பந்தலுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் வந்ததாலே துரோகி ஆகிப்போனாரா?

(6) ஈழத்தை ஆதரித்து பேசியதற்காகவே நெடுமாறனையும், வைகோவையும் பொடாவில் கைது செய்த ஜெயலலிதாவின் அண்டர்கிரைவுன்ட் ஆலோசகர் நடராசன் தோழமை; ஆனால் பொடா சட்டம் அமலில் இருந்த காலங்களில் கூட  ஈழ அரசியலை துணிந்து பேசிய அய்யா சுப.வீ துரோகியாகிப் போனாரா?      

(7) தமிழினத்திற்காவும், தமிழீழ களங்களிலே கூடுதலாக செயல்படவேண்டிய தேவை இருந்ததாலுமே அய்யா சுப.வீ அவர்கள் தன்னுடைய ஆசிரியர் பணியைக்கூட துறந்தார். ஈழத்தமிழகளுக்ககே சிறை சென்றவர். பொன்.ராதாகிருஷ்ணன், நடராசன் போன்றவர்கள் ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்தார்கள்? என்பதை நெடுமாறன் நாட்டுமக்களுக்கு விளக்கவேண்டும்.     

2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் பொடாசட்டம் அமலில் இருந்த அது; அதே  2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ மாநாட்டுக்கு தலைவர் பிரபாகரனால் அழைக்கப்பட்ட  திருமா, பொடா சட்டத்தை எதிர்த்து போராடிய அய்யா சுபவீ, தோழர் தியாகு போன்றவர்களை புறக்கணித்ததன் மூலம் இன்னொரு சந்தேகமும் வலுப்பெறுகிறது. அதாவது '2009 நாடாளுமன்ற தேர்தலின் போதுதான் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. அதிலே இருந்தவர்கள் அனைவரும் அ.தி.மு.க. அணியை சார்ந்தவர்கள், ஆதரவாளர்கள் திருமாவை தவிர. அந்த இயக்கத்தை கட்டியதில் நடராசனின் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால் அதற்கு முதலில் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்றே பெயர் வைத்தார்கள். கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பால் தான் அது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரே மாற்றப்பட்டது. இது ஒருபுறமிருக்க துரதிஷ்டவசமாக 2011 யில் ஜெயலலிதா முதல்வரானதும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடங்கிப்போனது. அதன் பிறகு எவ்வித செயல்பாடுகளிலும் அது ஈடுபவில்லை. ஜெயலிதாவை முதல்வராக்கவே இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்தவர்கள். இப்போது 2014 இலே நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிற சூழலில் தான் நவம்பரில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா நடைபெறுகிறது. இதிலே பி.ஜே.பி.யின் பொன்.ராதாகிருஷ்ணன், இந்துமுன்னணி அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். அதையும் இதையும் பொருத்தி பார்த்தால் மோடியை பிரதமராக்குவதற்கே முற்றம் அமைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க. வை அமர்த்தியத்தை போல காங்கிரசுக்கு மாற்றாக பி.ஜே.பியை அமர்த்த துடிக்கிறார்கள். ஈழ விவகாரத்திலே பி.ஜே.பி.யின் கொள்கை என்ன? அதன் வெளியுறவு கொள்கை என்ன? காங்கிரசின் கைகளில் படிந்திருக்கும் ரத்தத்தை கொண்டு மோடியின் மீது வழிந்தோடும் ரத்தத்தை துடைத்து விட முடியுமா? 

தமிழீழத்திற்காவும், தமிழினத்திற்காகவும் தொடர்ந்து போராடிவரும் உணர்வாளையும், ஒட்டுமொத்தமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தையும் புறக்கணித்து விட்டு சாதியவாதிகளோடும், மதவாதிகளோடும் கூட்டு சேர்ந்துகொண்டு அமைக்கும் இது நினைவு சின்னமல்ல; தமிழினத்தின் அவமான சின்னமாக அமையப்போகிறது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலைஞரை புறக்கணிக்க ஜெயலலிதா என்னென்ன வழிமுறைகளை செய்தாரோ, அதே வழிமுறையைத்தான் இன்று முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கும் பணியில் உணர்வாளர்களை புறக்கணிக்க நெடுமாறனும் கடைபிடிக்கிறார்..! மாவீரர்களின் தியாகங்களை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தமிழர்களின் உணர்வுகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து விட்டு சொந்த விருப்பத்திற்கு ஏற்ப மதவாதிகளோடும், சாதியவாதிகளோடும் கூட்டணி சேர்ந்து மாவீரர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் நெடுமாறன் போன்றவர்கள் துரோகத்திலும் துரோகம் இழைக்கிறார்கள். தன் வீட்டு காதணி விழாவை நடத்துவதைப் போல முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கும் பணியில் நெடுமாறன் செயல்படுவது கண்டத்திற்குரியது. இதன்மூலம் ஈழ உணர்வையும், தமிழகத்தில் நடைபெறும், நடைபெற்ற ஈழப்போராதடத்தையும் மன்னார்குடி மன்னர் நடராசனுக்கு தாரை வார்க்கிறார் நெடுமாறன். 


இனிவரும் காலங்களில் ஈழ துயரங்களையும், தமிழகத்தில் நடைபெற்ற ஈழப்போராட்டத்தையும் காழ்ப்பு அரசியல் பார்வையில் இருந்து விலகி இனவிடுதலை என்ற ஒரே புள்ளியில் நின்று உற்று நோக்கும் எவருடைய கண்களுக்கும் ஆசிரியர் வீரமணி, திருமா, அய்யா சுப.வீ., தோழர் தியாகு போன்றவர்களின் உழைப்பும், உணர்வும் புலப்படுவதை எத்தனை நெடுமாறன்கள் வந்தாலும் தடுக்க முடியாது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை..!

மிகுந்த வேதனையுடன்... 
தமிழன் வேலு.       

திங்கள், 7 அக்டோபர், 2013

தீண்டாமைக் கொடுமை !

வெள்ளைக்காரன் இந்தியர்களை
அடிமைப்படுத்தினான் என்று வரலாறு
சொல்பவர்கள் - இந்துக்கள்,
தாழ்த்தப்பட்டவர்களை கொடுமை
செய்தார்கள் என்பதை வசதியாக
மறந்துவிடுகிறார்கள் !
 

****

சாணியை மிதித்து விட்டு காலை
மட்டும் கழுவும் பார்ப்பான் 
தாழ்த்தப்பட்டவனை தொட்டுவிட்டால்
மொத்த உடலையுமே கழுவுகிறான் !


-தமிழன் வேலு

திங்கள், 30 செப்டம்பர், 2013

சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா? - ஜெயமோகர் கவலை


தன் கவலையை ஜெயமோகர் இப்படி தொடங்குகிறார் "இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். ஒரு பெரிய குடும்பத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய பந்தலில் இரவு ஒன்பது மணியளவில் குழந்தைகளும் பெண்களும் பாட்டிகளும் தாத்தாக்களுமாகப் பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஒரு பெண்ணைப் பாடும்படி சொன்னார்கள். அவள் ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு ஒரு சினிமா பாட்டைப் பாடினாள்.அதன் பின்பு கூச்சம் விலகி எல்லாருமே பாட ஆரம்பித்தனர். சிறுமிகளும் சிறுவர்க ளும் ஆடினர். ஒரு தாத்தா ஓட்டன்துள்ளல் என்ற நையாண்டி நடனத்தை ஆடிக்காட்ட, சிரித்து உருண்டார்கள். ஒருவர் விகடக் கச்சேரி மாதிரி ஏதோ செய்தார். அப்போது கமுகறை புருஷோத்தமன் பந்தலுக்கு வந்தார். முறையாகச் சங்கீதம் படித்தவர். ஐம்பது அறுபதுகளில் மலையாள சினிமாவில் வெற்றிகரமான பாடகர். மணப்பெண்ணின் அப்பா அவரைக் கூட்டிவந்து, நடுவே நாற்காலி போட்டு அமரச் செய்து, பாடும்படி கட்டாயப்படுத்தினார். கமுகறை புருஷோத்தமன் பாட ஆரம்பித்தார். அற்புதமான ஓங்கிய குரல். நுணுக்கமான உணர்ச்சிகள் வெளிப்படும் பாடும் முறை. அவரே பாடிய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள். ஆனால், மெல்ல மெல்ல கூட்டத்தில் உற்சாகம் வடிந்தது. பிள்ளைகள் படுத்துத்தூங்கிவிட்டன. கொஞ்ச நேரத்தில் பாதிப் பேர் எழுந்து சென்றார்கள். அவரும் அந்த மனநிலையை யூகித்துப் பாட்டை நிறுத்திவிட்டார். அன்று அந்த மகா கலைஞனுக்காக மிகவும் வருத்தப்பட்டேன்."

அங்கு நடந்த நிகழ்வுகளை ஜெயமொகரே சொல்லி இருப்பதால் நம்மால் ஓரளவு அந்த சூழலை உணர்ந்து  முடிகிறது. மணப்பெண் சிறந்த பாடகியில்லை என்று தெரிந்து தான் அங்கிருந்தவர்கள் பாட சொல்கிறார்கள். அதுவும் மிகுந்த கூச்ச்சப்பட்டவரை கட்டாயப்படுத்தி பாட சொல்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த சங்கீதத்தை கேட்கவேண்டும் என்பதல்ல நோக்கம், அந்த சூழலின் மகிழ்ச்சியை அவர்களின் குரலால் ரசிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். சிறந்த சங்கீதத்தை கேட்கவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் என்பதாக இருந்திருக்குமானால் நல்லதொரு  வித்வானை வரவழைத்து கச்சேரி நடத்தி ரசிச்சிருப்பார்கள். பெரிய இடத்து குடும்பம் என்பதால் பணப்பிரச்ச்சனையும்  வர வாய்ப்பில்லை. அடுத்ததாக கமுகறை புருஷோத்தமன் என்ற மகா கலைஞன் அவமானப்படுத்தப் பட்டதாக வருந்துகிறார். அங்கிருந்த யாருக்கும் கமுகறை புருஷோத்தமன் அவர்களின் சங்கீதத்தை கேட்கவேண்டும் என்ற விருப்பமே இல்லை. மணப்பெண்ணின் அப்பாவின் விருப்பத்திற்கு இணங்கவே அவரும் பாடினார். அவர்கள் எல்லோரும் மணப்பெண்ணை  பாட சொல்லும்போதே மணி 9ஐ கடந்துவிட்டதாக ஜெயமொகரே சொல்கிறார். அவர்கள் பாடி, ஆடி மகிழ்ந்ததில் எப்படியும் ஒரு ஒருமணிநேரம் கடந்திருக்கலாம் என்ற தோராயமாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் கமுகறை புருஷோத்தமன் பாட ஆரம்பிக்கும் போது மணி 10 க்கு மேலிருக்கும். அவர் பாடி கொஞ்சநேரத்திற்கு பிறகு தான் கூட்டம் கலைந்ததாகவும், சிறுவர்கள் தூங்கிவிட்டதாகவும் சொல்கிறார். அந்நேரத்திற்கு மேல் இயல்பாகவே சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தூக்கம் வருவது இயல்புதானே. இதில் மகா கலைஞன் எங்கே அவமானப்படுத்தபட்டார்? ஒரு மிகப்பெரிய பாடகரின் பாடல் சிறுமைப் படுத்தப்பட்டதற்கு 'அங்கே தனித்திறமையோ பயிற்சியோ தேவையில்லை. எவரும் எதையும் பாடலாம் ஆடலாம் என்ற சூழல் இருந்ததுதான்' காரணம் என்கிறார் ஜெயமோகர். இந்த கோவம் பாடுவதில் எந்த நிபுணத்துவமும் இல்லாத ரஜினிகாந்தின் மருமகன் பாடுகிறேன் என்று 'கொலைவெறி'யோடு கத்தியபோது வந்திருக்கணும். அப்போது கோவப்பட்டிருந்தால் ரஜினிகாந்த் என்ற மகா நடிகரின் மருமகனையே கேவலப்படுத்தியமையால் ஜெயமோகருக்கு சினிமாப்படத்திற்கு கதை எழுத வாய்ப்பு கிடைக்காது. என்பதால் இங்கே வந்து சாமான்யன்கள் மீது பாய்கிறார்.

அடுத்ததாக தனக்கே உரிய ஆற்றாமையோடு சாமான்யன் எழுதலாமா? சாமான்யன் பாடலாமா? சாமான்யன் பேசலாமா? என்றல்லாம் அபத்தமாக எழுதியிருக்கார். சாமான்யனுக்காக மாடி வீட்டு கோமான் எழுதும்போது, பேசும் போது சாமான்யனுக்காக சாமான்யனே எழுதுவதிலும், பேசுவதிலும் என்ன தவறு இருந்துவிடப் போகிறது? தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு அடக்குமுறையையும் அவரவரே எதிர்த்துப் பேசவும், எழுதவும், போரிடவும் தயாராக இருக்கவேண்டும். அப்போது தான் ஒரு சமூகம் வளர்ந்த, முன்னேறிய அறிவார்ந்த சமூகமாக இருக்கமுடியும். ஆனால் ஜெயமோகரோ ஒரு துறையின் நிபுணன் என்பவன், ஒரு சமூகத்தில் நிகழ்ந்த ஓர் உச்சப்புள்ளி. அச்சமூகத்தில் பரவலாக உள்ள ஒரு திறமையை ஒரு மனிதன் தன் தனித்தன்மையாகக்கொண்டு அதில் தன்னை அர்ப்பணித்து, அதன் மிகச் சிறந்த சாத்தியத்தைத் தொட்டுவிடுகிறான். அவனைத்தான் அச்சமூகத்தில் உள்ளவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும். அப்போதுதான் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான திறமை தொடர்ந்து வளர்ச்சியடையும்' என்கிறார். இது கிட்டத்தட்ட ராஜாஜி சொன்ன குலக்கல்வி திட்டத்தை போன்றது தான். 'எழுத்தாளனின் வாரிசு, எழுத்தாளன், செருப்பு தைத்தவனின் வாரிசு செருப்பு தைப்பவன்' என்கிற தொனியில் தான் 'அடுத்த தலைமுறை அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும்' என்கிறார். யாரும் இல்லை என்றாலும் இந்த சமூகம் வாழும் என்பதுதான் எதார்த்தம். அப்படி இருக்கையில் ஏன் ஒருவனையே சார்ந்திருக்க வேண்டும்? அடுத்தபடியாக 'பாடத் தெரியாதவர் பாடும்போது இவர்களும் கூடவே பாடுகிறார்கள். ஒரு சாமானியன் அரசியலையும் சமூகவியலையும் பற்றி ஏதாவது சொல்லும்போது இவர்களும் அதில் பங்கெடுத்துக்கொண்டு தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். நிபுணர்களின் நிகழ்ச்சிகளில் இவர்கள் வெறும் பார்வையாளர்கள். ஆனால். இவற்றில் இவர்கள் பங்கேற்பாளர்கள்' எந்தவொரு  சமூகத்திலும்  எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு. அதுவே சமூகநீதி. ஆனால் ஜெயமோகரோ ஒரு சிலர்  மட்டும் தான்  சமூகத்தின் மையப்புள்ளி என்றும் அவர்களை பெருவாரியான பலர்  வெறும் பார்வையாளராக இருந்து அவர்களின் பல்லவிக்கு வாயசைக்க சொல்கிறார். இதைதான் மநுவும் சொல்கிறது. பிராமிணர்கள் தான் வேதம் எழுத வேண்டும், பிராமிணர்கள் வேதம் படிக்க வேண்டும், அவர்கள் தான் சத்திரியர்களுக்கு வேதம் சொல்லிகொடுக்கவேண்டும். தப்பு தவறிக்கூட சூத்திரர்கள் வேதம் படிக்கவோ, படிப்பதை காதால் கேட்கவோ கூடாது. அப்படி கேட்டுவிட்டால் அவர்கள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுங்கள் என்றது. அதைதான் நம்ம ஜெயமோகர் ரொம்ப சாப்டாக, மறைமுகமாக  சொல்கிறார்.

அடுத்ததாக 'இதழியலில் எழுத்தாளர் - வாசகர் என்ற பிரிவினை இருந்தது. இணையத்தில் இருவரும் ஒருவரே. எழுத்தாளனாக ஆவதற்குத் திறமையும் பயிற்சியும் தேவைப்பட்டது. இணையத்தில் எழுத எதுவுமே தேவை இல்லை. இன்று ‘ஃபேஸ்புக்’ போன்ற தளங்களில் எல்லாரும் எதையாவது ஒன்றை எழுதுகிறார்கள். தங்களைப் போன்றவர்கள் எழுதுவதை மட்டும் படிக்கிறார்கள்' என்கிறார்.  எழுத்தாளருக்கும், வாசகனுக்கும் உள்ள இடைவெளி இன்றைக்கும் அப்படியே  இருக்கிறது. வாசகர்களை எழுத்தாளர்கள் குறைந்தபட்ச அறிவுடையவர்கள் என்றளவில்  கூட மதிப்பதில்லை. ஆனால் வாசகர்களோ எழுத்தாளர்களை கொண்டாடுகிறார்கள். பேஸ்புக்  போன்ற சமூக வலைதளங்கள் எழுத்தாளர்களோடு வாசகர்களை நெருங்க வைத்திருக்கிறது. அதுதான் ஜெயமோகர் போன்ற எழுத்தாளர்களுக்கு பிடிக்கவில்லை.அவர்கள் வாசகர்கள் தங்களை தேவ தூதர்களைப் போல் கொண்டாடவேண்டும், அவர்களுக்கு எளிதில் காட்சி அளிக்கக்கூடாது என்பதிலும், தம்மைப் பற்றி  வாசகர்கள் மத்தியில் உள்ள உயர்ந்த பிம்பம் கரைந்துவிடக்கூடாது என்பதிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் கல்லெறிந்து விட்டன. அதனால் தான் ஜெயமோகருக்கு இதன் ஜனநாயத்தில் சந்தேகம் வந்துவிட்டது. சமூக வலைதளங்கள் ஜனநாயக களமாக இருக்கவேண்டும் என்பதோ, இந்த சமூகம் ஜனநாயக சமூகமாக இருக்கவேண்டும் என்பதோ ஜெயமோகரின் கவலை அல்ல, அப்படி நினைத்தால் நம்மைவிட அதிசிறந்த முட்டாள்கள் வேறு எவருமில்லை. இந்த சமூகம் தன்னையும், தன்னைப் போன்றவர்களையும் மட்டுமே கொண்டாடவேண்டும் என்பது தான் அவரின் நோக்கம். அதில் சமூக வலைதளங்கள் கல்லெறிந்துவிட்டதால் தான் சமூக வலைதளங்களின் ஜனநாயகத்தைப் பற்றி கவலை கொள்கிறார். இதைதான் 'நம்ம ஊரில் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது' என்று சொல்வார்கள்.  சாமான்யன் நிபுணனை பார்த்து பொறாமை படுவதாக சொல்கிறார் அவர், ஆனால் அவர் எழுத்துக்களை வாசிக்கும் பொழுது சாமான்யங்களின் அறிவுத்திறனைப் பார்த்து நிபுணன் தான் பொறாமைப் படுவதாக தோன்றுகிறது. சாமான்யங்களின் அன்றாட வாழ்வியலை பாதிக்கும் அரசியலையும், சமூகவியலையும் பற்றி நிபுணன் தான் தொலைகாட்சி போன்ற ஊடகங்களில் கருத்து சொல்லவேண்டும் என்று எண்ணுவது எவ்வளவுப் பெரிய அயோக்கியத்தனம். அதைதான் ஜெயமோகர் சரி என்கிறார். 'ஆனால், இன்றைய சாமானியர்களின் ஊடக அலையில் நிபுணர்களும் கலைஞர்களும் வெளியே தள்ளப்படுகிறார்கள். ஒரு சமூகமே தனக்கு ஏற்கெனவே என்ன தெரியுமோ அதை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறது' என்று சொல்லும் ஜெயமோகர் நேற்றைய காலம் வரை நிபுணன்களும், கலைஞர்களும் சாமான்யன்களை வலுக்கட்டாயமாக அடித்து துரத்தினார்கள் என்பதை வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். எந்த நிபுணர்களுக்கும் இந்த சமூகம்  முழுவதும் அறிவார்ந்த சமூகமாக உற்பத்தியாவதில் உடன்பாடில்லை என்ற உண்மை வாதத்தையும் புறந்தள்ளுகிறார். உண்மையான அறிவையும், கலையையும் எல்லோருக்கும் கிடைக்கும்  படி செய்பவனே நிபுணன், மக்கள் நலன் சார்ந்த முற்போக்குவாதி எல்லாமே. அதைவிடுத்து இந்த சமூகம் முழுவதும் எல்லாவற்றிற்கும் தன்னையே சார்ந்திருக்க வேண்டும், தன்னைப் போன்ற சிலரையே சாந்திருக்க வேண்டும் என்று நினைப்பவன் குறுகிய மனநோயாளி என்பதை ஜெயமோகருக்கு சொல்லிக் கொள்ள கடமைபட்டிருக்கிறேன்..

- தமிழன் வேலு 

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ். சின் திடீர் தமிழ்ப்பாசம்

எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரன் ஒருவன் தப்பும் தவறுமாக தமிழில் பேச முயன்றுவிட்டாலே தமிழ் வளர்ந்து விட்டதாக நினைத்து வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் தமிழர்களை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று என்று ஆர்.எஸ்.எஸ். கும்பலும் உணர்ந்து கொண்டதாகவே கருதுகிறேன். என் சந்தேகத்தை உறுதிபடுத்தும் விதமாகவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. யின் சமீபகால செயல்பாடுகளும் அமைந்து வருகிறது. எந்த சூழலிலும், எந்த முகமூடியோடும் தமிழகத்திற்குள் காலூன்ற முடியாமல் திணறும் சங்பரிவார் கும்பல் தமிழகத்தை நோக்கி வேகமாக காய் நகர்த்தி வருகிறது. அதற்காக அவர்கள் தற்போது எடுத்திருக்கும் ஆயுதம் தான் தமிழ். அதனால் தான் திருச்சி இளந்தாமரை மாநாட்டில் மலைக்கோட்டை என்பதை 'மலை கொட்டை' என்று மோடி தமிழை கொலை செய்ததற்கே  'மோடி தமிழில் பேசினார் ... தமிழ் வாழ்க !' என்று முகநூளில் பதிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட தமிழர்கள் இருக்கும் வரை மோடி மஸ்தான்கள் அல்ல, கேடி மஸ்தான்களே தமிழர்களை வீழ்த்திவிடுவார்கள். வெளிநாட்டுக்காரன் ஒருவன் தமிழ்நாட்டில் வந்து பிச்சை எடுக்கவேண்டும் என்றால் தமிழில் தான் பிச்சை எடுக்க வேண்டும். அப்போது தான் அவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்துகொண்டு பிச்சை போடுவார்கள். இதுவே வெளிநாட்டிலோ அல்லது வெளிமாநிலத்திலோ சென்று அந்தந்த மொழியில் பிச்சை கேட்டால் அந்தந்த மொழிக்காரன் எவனும் தம் மொழி வளர்வதாக எண்ணி பெருமை கொள்ளமாட்டான். ஆனால் தமிழன் மட்டும் பெருமை கொள்கிறான். இது எந்த மாதிரியான தமிழ் பற்று என்று புரியவில்லை.

தலைப்பு திசை மாறுவதாக உணர்கிறேன் மன்னிக்க... என் சந்தேகத்தை நாடாளுமன்றத்தில் பேசிய உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி தருண் விஜயின் பேச்சும், திருச்சி இளந்தாமரை மாநாட்டின் தீர்மானங்களும் உறுதி செய்கின்றன. அந்நிகழ்வுகள் தான் நம்மை எச்சரிக்கின்றன..  


தமிழை இரண்டாவது தேசிய மொழி ஆக்குங்கள் :

'இந்தியாவின் வடக்குப் பகுதியில் வாழும் நம்மில் பலரும், ஒருவிதமான அகங்காரத்திலேயே இருந்துவிட்டோம். அதனால்தான் நம் சொந்த நாட்டில் பேசப்படும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், அதன் அருமை பெருமைகளையும்  அறிந்துகொள்ளவில்லை. ஏழு கடல்களையும் மலைகளையும் தாண்டி தமிழ் மொழியின் தாக்கம் பன்னெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. நம் நாட்டில் ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கிய தமிழ் மொழிக்கு, உரிய மதிப்பையும் உயரிய நிலையையும் நாம் கொடுக்கத் தவறி விட்டோம். அதனால், இப்போதாவது விழித்துக்கொள்வது நல்லது. இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழைப் போதிக்கும் திட்டங்களை நாம் வகுத்தாக வேண்டும். தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களும் தமிழ் மொழியைக் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்' என்று தமிழ் மீதான திடீர் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யும், இந்திய அரசால் நான்குமுறை தடை செய்யப்பட இயக்கமான ஆர்.எஸ்.எஸ் சை சேர்ந்தவருமான தருண் விஜய். பி.ஜே.பியை சேர்ந்த ஒருவர், அதுவும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தமிழின் பெருமைகளை இப்படி உயர்த்தி பேசி இருப்பதால் உலக தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை உண்டாகிவிட்டதாக சிலர் பெருமை பேசுகிறார்கள். அவருக்கு வாழ்த்து செய்தியை அனுப்புகிறார்கள்.

இந்த தருண் விஜய், இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஹிந்தி மொழி ஆலோசனை குழுவில் இவர் இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ வார இதழான 'பாஞ்ஜன்யா' வின் ஆசிரியராக 1986 முதல் 2008 வரை இருந்திருக்கிறார். 'இந்து - இந்தி - இந்தியா' என்ற கொள்கையை தாங்கி கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸில் முக்கிய பங்காற்றிய தருண் விஜய்க்கு திடீர் என்று தமிழ் காதல் வருவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வியில் தான் இந்துத்துவவாதிகளின் சூட்சமம் அடங்கியிருக்கிறது. இதை தான் தமிழ் பார்ப்பன ஊடகங்கள் வானளாவ புகழ்ந்து பேசுகிறார்கள். 'ஆர்.எஸ்.எஸ். காரரே தமிழின் பெருமைகளை பேசுகிறாரே, தமிழ் வாழ்க' என்று சிலாகித்து எழுதுகிறார்கள். ஒருவேளை நாளைக்கே ராஜபக்சே தமிழ்தான் உலகிலேயே சிறந்தமொழி, தமிழை உலகத்தின் முதல் மொழியாக அறிவிக்கவேண்டும்' என்று சொல்லிவிட்டால் ராஜபக்சேவுக்கே தமிழ்ப் போராளி, பட்டம் கொடுத்து விடுவார்கள் போலிருக்கு.      


பி.ஜே.பி இளந்தாமரை மாநாட்டு தீர்மானம் :

இலங்கையில் சமீபத்தில் நடந்த வடக்கு மாகாண தேர்தலில் ஆட்சி அமைக்க தேர்வு பெற்றுள்ள விக்னேஸ்வரனுக்கு இம்மாநாடு வாழ்த்து தெரிவித்து கொள்கிறது. இலங்கையில் வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைய உள்ள அரசின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு பணிகளை விரைவாக செய்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்வது. இலங்கையில் 13–வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. 

 கச்சத்தீவு நமது சொத்து. கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா, இந்திராகாந்தியால் தாரைவார்த்தபோது வாஜ்பாய் பாராளுமன்றத்தில் அதை எதிர்த்தார். கச்சத்தீவில் நமக்கு உள்ள உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது. தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ். க்கு  திடீர் தமிழ்ப்பாசம் ஏன்?

தமிழக அரசியல், மற்றும் சமூகத்தை பொருத்தமட்டில் பெரியார் ஒரு சகாப்தம். அவரை கடந்து தமிழக வரலாற்றை தீர்மானிப்பதே கடினம் என்பது போல அவரின் உழைப்பும், சமூகத்திற்காக தன் மொத்த வாழ்நாளையே அர்ப்பணித்து கொண்ட சமூக பொறுப்புமே அதற்கு காரணம். இந்நாட்டில் எத்தனையோ மதக்கலவரங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட முசாபர் கலவரம் கூட அதற்கு சாட்சி. ஆனால் தமிழகத்தில் அப்படி எவ்வித அசாம்பவிதங்களும் நடந்ததே கிடையாது. அந்த அளவுக்கு இங்கே இந்து - முஸ்லிம் ஒற்றுமை பேணப்பட்டு வருகிறது. ஆரியப்புளுகுகளையும், மனுதர்மத்தையும் நாறு நாராக கிழித்து தொங்கப்போட்டவர்கள் இருவரே. ஒருவர் புரட்சியாளர் அம்பேத்கர், மற்றொருவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். அதோடு மட்டுமின்றி கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து இந்தியாவிலேயே போராட்டம் வெடித்தது தமிழகத்தில் மட்டும்தான். அதை வீரியத்தோடு முன்னெடுத்தவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெரியார் பிறந்த மண்ணுக்கு இந்துத்துவவாதிகளால் அவ்வளவு எளிதில் கால்வைத்து முடியுமா? அதற்குத்தான் தேவைப்படுகிறது இந்த தமிழ் முகமூடி. மேலும் பல ஆண்டுகளாக தமிழகத்தில் எப்படியாவது ஒரு அரசியல் சக்தியாக எழுச்சி பெற வேண்டும் என்ற பா ஜ கவின் கனவு இன்று வரை நினைவேறாமலேயே  இருந்து வருகிறது . தமிழகத்தில் நடந்த சில தேர்தல்களில் திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்த பிறகும்  தங்களுக்கான ஒரு நிரந்தரமான வாக்கு வங்கியை உருவாக்க முடியாத சூழலில் ,பா ஜ க வினர் தங்களை  தமிழ் மொழி மீது அக்கறை கொண்டவர்களாக  அடையாளப்படுத்திக்கொள்ள  முயல்கின்றனர். NCERT பாட புத்தகத்தில் தமிழக மாணவர்களையும்  ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்று இருந்த  கார்ட்டூன் தொடர்பாக பா ஜ க , அல்லது அதன் தோழமை இந்து  அமைப்புகள் மேற்கொண்ட போராட்டங்கள் என்ன ? அதோடு மட்டுமின்றி தமிழ் , தமிழ் தேசியம் என்ற பெயரில்   சில தமிழ் அமைப்புகள் பெரியாருக்கு எதிரான கருத்துகளை தமிழ்நாட்டில் பரப்புரை செய்ததின் விளைவு தான் , பெரியாரிய எதிர்ப்பு கொள்கை கொண்ட பா. ஜ. க இப்போது  இந்துதுவதிற்கு வலுசேர்க்க  தமிழ் முகமுடியை அணிந்து கொள்ள துடிக்கிறது.

எந்த காலத்திலும் ஈழத்தமிழர்கள் பற்றியோ, தமிழக மீனவர்கள் பற்றியோ கவலை கொள்ளாத பி.ஜே.பி இன்று தன்னுடைய மாநாட்டில் ஈழத்தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் தீர்மானம் நிறைவேற்றுகிறது என்றால் அதன் தமிழர்ப் பாசத்திலும், தமிழ்க்காதலிலும் உள்ள உள்ளரசியலை நாம் உற்று நோக்கத்தான் வேண்டும். வட மாநிலங்களிலே காங்கிரசுக்கு நிகராக உள்ள பி.ஜே.பி தென் மாநிலங்களில் கால் பதிக்க  முடியவில்லை.குறிப்பாக தமிழகத்திற்குள். அருகிலே இருக்கும் கர்நாடகாவில் கூட பி.ஜே.பியால் ஆட்சி அமைக்க முடிகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு MLA சீட் கூட வாங்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் காங்கிரசும், பி.ஜே.பி யும் ஒரு மொழி ஆட்சி கொள்கையை கொண்டவர்கள். ஆனால் திராவிட இயக்கங்களால்  தமிழகத்தில்  மாநில சுயாட்சி உரிமை முழக்கம் உருவானது. ஈழம் பற்றி எரிந்துகொண்டிருந்த போதே, தமிழகம் ஈழத்தமிழர்களுக்காக கொதித்தெழுந்த போதே எவ்வித சிறு சலசலப்பையும் காட்டாமல் மவுனம் காத்துக் கொண்டிருந்த பி.ஜே.பி இன்று ஈழத்தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றுகிறது என்பது ஏமாற்றுவேலை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? தமிழகத்தில் உருவாக்கி இருக்கும்  காங்கிரசுக்கு எதிரான மனோநிலையை அறுவடை செய்ய பி.ஜே.பி முயல்கிறது என்பதை தவிர இதற்கு வேறேதும் காரணமிருக்க முடியாது. மேலும் கடந்த காலங்களில் தமிழகத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியின் ஆதரவோடு தான் மத்தியில் ஆட்சி அமைந்திருக்கிறது. தமிழகத்தில் செல்லாக்காசான பி.ஜே.பி.யோடு கூட்டு சேர திராவிடக் கட்சிகள் எதுவும் தயாராக இல்லாத நிலையில், தமிழ்தேசியம் பேசும் சிலர் காங்கிரஸ் எதிர்ப்பில் பி.ஜே.பி யை முன்னிறுத்த துணிவதை பி.ஜே.பி யும், ஆர்.எஸ்.எஸ்சும் வெகுவாக ரசிக்கிறார்கள். இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் இயக்கங்கள் தமிழகத்தில் தம் கிளையை தொடக்கி கொள்ளவும், தென் மாநிலத்தில் குறிப்பாக மதக்கலவரம் அற்ற தமிழகத்தில் பிரிவினை உணர்வை தூண்டி அதன் மூலம் தன்னுடைய பாரத  கொள்கையை விரிவாக்கி  கொள்ள முயல்கிறது. காங்கிரசின் இரண்டகத்தால் தமிழகம் கொதித்தெழும் போதெல்லாம் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் பி.ஜே.பி தலைவர்கள், காங்கிரஸ் எதிர்ப்பை பி.ஜே.பி ஆதாரவாக மாற்ற முயன்றதை தவிர தமிழர்களின் நலன்களுக்காக சிறு துரும்பையும் அவர்கள் கிள்ளிப் போட்டதில்லை. அதே போல தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலே தமிழக பிரச்சனையை கூட்டாக முன்வைக்கும் போதே அல்லது நாடாளுமன்றத்தில் தமிழர் பிரச்சனை எழும் போதே அதை அவர்கள் 'காங்கிரஸ் எதிர்ப்பு தங்களுக்கு சாதகம்' என்றளவிலே கையாண்டு வந்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானாலும், அரசியல் கட்சி தொடங்க வேண்டுமானாலும் 'தமிழ், தமிழர் உரிமை' என்பதை பெயரளவிலாவது கொண்டிருக்கவில்லை என்றால் அவர்களால் இங்கே கட்சி நடத்த முடியாது. அதனால் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது  வெறுப்பு பிரச்சாரம் செய்து  அரசியல் ஆதாயம் தேட முனைபவர்களுக்கு கூட 'தமிழ் தேசிய போராளி' பட்டம் கொடுக்கிறார்கள் தமிழர்கள். 'என்னதான் ஒருவன் சாதி வெறியனாக இருந்தாலும், மத வெறியனாக இருந்தாலும் அவன் தமிழ் மொழியை உயர்த்திப் பேசினாலோ, ஈழத்தமிழர்களுக்காக அறிக்கை கொடுத்துவிட்டாலோ அவன் புனிதனாகிவிடுகிறான்'. இது தமிழகத்தின் சாபக்கேடு. இந்தி மொழிக் கொள்கையிலோ, மூன்று தமிழர்கள் தூக்குதண்டனை விவகாரத்திலோ, கூடங்குளம் அணுஉலை விவகாரத்திலோ, முல்லைப் பெரியாறு, காவிரி போன்ற தமிழர்களின் இத்யாதி, இத்யாதி பிரச்சனைகள் எதிலும் காங்கிரசுக்கும், பி.ஜே.பிக்கும் ஒரே பார்வை தானே ஒழிய வேறல்ல. இந்தியாவில் பி.ஜே.பியை ஆட்சிக்கு கொண்டுவர, மோடியை முன்னிறுத்துகிறார்கள். ஆனால் மோடியோ 'நான் ஒரு இந்து தேசியவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்' என்கிறார். இந்து தேசிய பெருமை பேசிக்கொண்டு தமிழகத்தில் கால்வைக்க மோடிக்கோ, அவரது அல்லக்கைகளுக்கோ துணிவில்லை. அதனால் தான் அவர்கள் தமிழ், தமிழ்தேசிய பெருமை பேசிக்கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனையாளர் தோழர் வே.மதிமாறன் அவர்களிடம் கேட்டதற்கு 'தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேரெதிர் கொள்கையை கொண்டுள்ள பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இந்துமதத்தை தீவிரமாக தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவதும், அம்பேத்கரே ஆர்.எஸ்.எஸ். முகாமுக்கு வந்திருக்கிறார் என்று புளுகுவதும், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அம்பேத்கர் மீது கொண்டுள்ள அபிரிமிதமான நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களை தன்வயப்படுத்தும் யுக்தியை போல, தமிழர்கள் தமிழ் மொழி மீது வைத்திருக்கும் பற்றை  பயன்படுத்தி தமிழகத்திற்குள் நுழையும் சந்தர்ப்பவாத முயற்சியாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. இன்று  தருண் விஜய் தமிழை உயர்த்தி பேசிவிட்டார், மோடி தமிழில் பேசிவிட்டார் என்று பெருமை கொள்பவர்கள் மோடி சமஸ்கிருதம் கலக்காத தூயத்தமிழில் சிறுபான்மை பெண்களின் வயிற்றை கிழித்து வயிற்றில் இருக்கும் குழந்தைகளை கொள்ளுவோம் ,பாபர் மசூதியை இடித்ததை நியாயப்படுத்தி ராமருக்கு கோவில் கட்டுவோம், இந்தியாவை இந்து தேசமாக அறிவிப்போம்' என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?' என்று எதிர் கேள்வி எழுப்புகிறார்.

மோடி மஸ்தான் வித்தைக்காரர்கள் எதையும் செய்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தீவிர பார்ப்பனிய கண்ணோட்டம் கொண்டவர்கள் தமக்கு உடன்பாடில்லாத கொள்கையை கூட தன் சொந்த நலனுக்காக பயன்படுத்துவார்கள் என்பதையே இதில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்...

உணர்ந்து கொள்ளுவார்களா தமிழ்தேசிய வாதிகள்?

- தமிழன் வேலு