வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் !

தோழர் வே.மதிமாறன் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும் “காந்தி நண்பராதுரோகியா?” நூலை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பை பெற்றேன். வாசித்து முடித்தவுடன் வேறு யாருக்காவது கொடுக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். அப்படியே எனக்கு நன்கு அறிமுகமான 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு கொடுத்தேன்.  அவர் காந்தியின் தீவிர விசுவாசியாக இல்லாவிட்டாலும் காந்தியின் மீது வெறுப்பு கொண்டவர் இல்லை; பெருமதிப்பு உடையவர். புத்தக தலைப்பை பார்த்தவுடனே ஒரு முறை என்னை ஆழமாக பார்த்தார். படித்துவிட்டு சொல்லுங்கள் என்று கிளம்பிவிட்டேன்.
இரண்டு நாள் கழித்து அவரிடம் சென்றேன்; புத்தகம் படித்தீர்களா? என்றேன். படித்தேன், என் நண்பருக்கு அந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன் என்றார். அவரையும் அறிமுகம் செய்துவைத்தார். அவர் படித்துவிட்டு அவருடைய நண்பருக்கு அதை படிக்க கொடுத்திருக்கிறார்; அவர் அவருடைய நண்பருக்கு கொடுத்திருக்கிறார். இப்படியே பலரையும் தாண்டி பயணித்து இறுதியாக ஒரு பள்ளி சிறுவனுக்கு அதை கொடுத்திருக்கிறார்கள். பலரையும் கடந்து வந்த புத்தகத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்த முதியவரிடம் கேட்டேன்.
அவர் “புத்தகத்தின் மீது என்னால் மறுப்புரை சொல்ல முடியவில்லை; காந்தியின் சத்திய (பொய்) சோதனையில் இருந்தே விமர்சனம் செய்திருப்பதால் யாராலும் மறுப்பு சொல்ல இயலாது. நல்ல பயனுள்ள நூல் கொடுத்தமைக்கு நன்றி” என்று மிகவும் நேர்மையான மதிப்பீட்டை வழங்கினார். அவருடன் பேசியதில் “காந்தியின் மீது அவர் வைத்திருந்த பெருமதிப்பில் தோழர் வே.மதிமாறன் அவர்கள் கல்லெறிந்து விட்டார் என்பது மட்டும் நிச்சயம்” என்று புரிந்துகொண்டேன்.
 அந்த மகிழ்ச்சியோடு, காந்தி நண்பராதுரோகியா?” நூலை வாசித்ததன் மூலம் நான்  பெற்ற அனுபவத்தையும், அதன் மீதான மதிப்பீட்டையும் வழங்க விரும்புகிறேன்.
 வருடத்தில் மூன்று மாதங்கள் காந்தி பக்தர்களுக்கு கொண்டாட்டம் தான். ஜனவரி 15 முதல் 26 வரை, ஆகஸ்ட் முதல் தேதி முதல் 15 வரை, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களில் கலைக் கூத்தாடிகளின் அரை நிர்வாணப் படத்திற்கு தடா. அதற்குப் பதில் காந்தி வருவார் அரை நிர்வாணத்தில். அதை கண்டுகளித்து மகிழும் காந்தி பக்தர்களின் கனவில் கல்லெறிந்து விட்ட வே.மதிமாறன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் (?) …!
ஒருவன் என்ன தான் பொதுநலன் குறித்து சிந்திக்க கூடியவனாக இருந்தாலும் சாதிப்பித்து கொண்டவனாக  இருப்பானேயானால் அவனின் பொது நலன் சார்ந்த சிந்தனைகள் அனைத்துமே சாதியின் கோரமுகத்தின் வடிவாகவே இருக்கும். அப்படித்தான் இந்நூலின் மூலம் காந்தியின் அஹிம்சை “கோடானு கோடி மக்களை எப்படி இம்சித்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம்”
 ஸ்ரீ ராமனுக்கு பெரியார் என்றால் பயம். அப்படித்தான் “காந்திக்கு பீமாராவ் என்றால் பயம்,  என்பதை இந்நூலின் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் காந்தியின் அண்டப்புளுகு ஆகாசப் புளுகையும், துரோகத்தையும் காந்தியின் சத்திய (பொய்) சோதனையில் இருந்தும், புரட்சியாளர் அம்பேத்கரின் மூலமும் தோலுரித்திருப்பது சிறப்பு…!
அவற்றில்…
“இந்திய கிராமங்கள் தீண்டப்படாதவர்களை சுரண்டி வாழ்வதற்காக இந்துக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வகை காலனி ஆதிக்கமே” என்று காந்தியின் கிராமராஜ்ஜியத்தையும்
“காந்தியைப் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்” என்று புரட்சியாளரின் வாய்மூலமாக தாழ்த்தப்பட்டவர்களை எச்சரிப்பதை  மனமார வரவேற்கிறேன். காந்தியைப் பற்றி மட்டுமல்ல; காந்தியின் பக்தர்களிடம் கூட ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.
“காந்தி கறுப்பர் என்பதால்   ரயிலில் இருந்து வெள்ளையர்கள் இறக்கி விட்டதாகவும், அதனால் ஏற்றத்தாழ்வுகளை கண்டு மனம் நொந்து மக்களுக்காகப் பாடுபட வந்தார் காந்தி மகான் என்று காந்தியின் காவடி தூக்கிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில் “ரயிலில் படுக்கை வசதிக்கு டிக்கெட் எடுக்காத காரணத்தினால் தான் ரயிலில் இருந்து நான் இறக்கிவிடப்பட்டேன்” என்று காந்தியின் வாயாலேயே சொல்ல வைத்து விட்டீர்களே தோழர் சபாஷ்…!
“வெள்ளைக்காரன் காந்தியை அவனுக்கு அருகில் உட்கார வைக்காமல் வண்டியின் உள்ளே உட்கார வைத்ததையே அவமானமாக கருதிய காந்திக்கு ” இந்தியாவில்  ஒரு சாதி இந்து தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரேக் காரணத்திற்காக புரட்சியாளர் அம்பேத்கரை கீழே தள்ளினானே அது அவமானமாக தெரியவில்லையா? அதற்கு காரணமான சாதி மக்களை பிரித்தது அவமானமாக தெரியவில்லையா?
“வெளிநாடுகளுக்கு செல்லும் காந்தி அங்கே இருக்கும் இந்தியர்களின் வீடுகளில் தங்காமல், வாடகைக்கு வெள்ளையர்களின் வீடுகளிலே தங்கியிருக்கிறார்; அதற்கு காரணம் இந்தியர்கள் கூலி விவசாயிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலே; இது அவரின் சாதிப் புத்தியே… அதை ” சுற்றிலும் இருந்த ஆங்கிலேயருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் மக்கள் பழக்கங்கள் சுகாதரக் குறைவாக இருந்ததை கவனித்திருக்கிறேன்” என்று காந்தி வாயாலே நான் சாதிப் புத்தி கொண்டவன் என்று ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார் தோழர்!
“காந்தியின் துரோகம் தெரியவேண்டுமென்றால் அம்பேத்கர், பகத்சிங் கண்களால் பார்க்கவேண்டும்; பார்ப்பன பயங்கரவாதம் தெரியவேண்டுமென்றால் காந்தி கொலையின் ஊடாக  பார்க்க வேண்டும்” என்ற காந்தியின் துரோக – பார்ப்பன பயங்கரவாத  ஒப்பிட்டு தெளிவான விளக்கம்…!
” ஹரிஜன் என்ற சொல்லுக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கிறது என்பது  யாருக்கு அவர்ப் பெயர் சூட்டினாரோ அவர்களுக்கே தெரியாது என்பது தான் வினோதம்; இதுதான் காந்தியத்தின் கயமைத்தனம்; மேலும் காந்தியின் ஹரிஜனைப் பற்றி படிக்கும் போது கமலஹாசனின் அன்பே சிவத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை; இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையே! ஏன் அன்பே சிவமாகத்தான் இருக்க வேண்டுமா? அன்பே அல்லாஹ் வாக இருக்க கூடாதா? அன்பே இயேசுவாக இருக்க கூடாதா? இதுதானே பார்ப்பனப் புத்தி!
காந்தி பக்தர்கள் காந்திக்கு காவடி தூக்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை “காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின்  உடையை கண்டு மனம் நொந்து தாழ்த்தப்பட்டவர்கள் நல்ல உடை அணியும் வரை நானும் நல்ல உடை அணியமாட்டேன் என்று சபதம் எடுத்து அவரும் கோவணம் கட்டிக் கொண்டார்” என்பார்கள். அதுபோலவே  சமீபத்தில் காந்தியின் காவடி தூக்கி ஒருவர் “ தலித் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஸூவிலிருந்து, பீட்டர் இங்கிலாந்து சட்டை வரை தோராயமாக கணகிட்டுப் பார்த்தால் எப்படியும் பத்தாயிரம் ரூபாய் பொருமானாதாக இருக்கும்; கோவணம் கட்டிக் கொண்டு வயலில் இறங்கி வேலைபார்க்கும் தலித் மக்களின் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்” என்று தலித் தலைவர்களின் ஆடைகளைப் பார்த்து பொறாமைப்பட்டு, வேதனைப் பட்டு இருக்கிறார்.
அப்படி காந்தியின் காவடித் தூக்கிகள் காந்தியின் அரைநிர்வாணப் படத்தை வைத்து அரசியல் செய்து பிழைத்துக் கொண்டிருந்தார்கள். அட்டைப் படத்திலே காந்தியையும், காந்திப் பக்தர்களின் கயமைத்தனத்தையும் நிர்வாணப் படுத்திவிட்டீர்களே… இது உங்களுக்கே நியாயமா தோழர்?
வ.உ.சி. யின் தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது; காங்கிரசின் துரோகம் அடிநெஞ்சில் அனலை கிளப்புகிறது; காந்தி மிகப்பெரிய பணக்காரர் என்றும், அவர் எளிமையாக வாழ்ந்தார்  என்றும் பொய் சொல்கிறவர்களுக்கு “வெளிநாட்டு தமிழர்கள் வ.உ.சி. க்கு கொடுக்க சொல்லி காந்தியிடம் கொடுத்த 5000 ரூபாய் பணத்தை ஏமாற்றியது தெரியுமா?
வாஞ்சிநாதன் எனும் தேசத் தியாகியின் சாதிப்பற்றை நான் இன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன் நன்றி தோழரே..! “காந்தியின் தொங்குசதை அன்னாஹசாரே”; “பாபா ராம்தேவின் ஊழல் எதிர்ப்பில் பானுமதியின் வறுமை ஒழிப்பு நடிப்பு” ஒப்பீடு அருமை.
நான் காந்தியை விமர்சனம் செய்ததற்கு, காந்தியின் காவடித் தூக்கி ஒருவர் எனக்கு விளக்கம் எழுதியப் போது “காந்தியைப் பற்றி தெரியாமலே, வெறும் பூனா ஒப்பந்தத்தை மட்டும் வைத்து விமர்சனம் செய்கிறார்கள்; அது அவர்களது அறியாமையைத் தான் காட்டுகிறது;என்று எழுதினார்.  அவருக்கு இந்நூல் அதற்கும் மேலே… அதற்கும் மேலே…
வேரறுக்க வேண்டியது காங்கிரஸ் மட்டும் அல்ல; இந்தியாவின் மீது போர்த்தப்பட்டுள்ள காந்தியின் பிம்பமும் தான்….
“காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்; பார்ப்பன பயங்கரவாதத்தை மன்னிக்கவும் மாட்டோம்…!
இறுதியாக எனக்கு ஒரே வருத்தம் தான் ”காந்தி நண்பரா? துரோகியா?” என்று சந்தேகப் படவேண்டாம், சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் …!
அங்கனூர் தமிழன் வேலு 
மார்ச் 1, 2013 அன்று தோழர் வே.மதிமாறன் அவர்களின் வலைப்பூவில் வெளிவந்தது. 

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

என்னவானது தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை ?

முன்பெல்லாம் சினிமாவில் தான் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுப் படுத்துவார்கள். தற்போது படம் வெளியிடும் முன்னரே வசூலைக் குவிக்க, மலிவு விளம்பரம் செய்ய ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் போலும். 

நடிகர் விஜய் நடித்து கடந்த 9ஆம் தேதி திரைக்கு வரவிருந்த 'தலைவா ' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்ப்பட்டது. அதற்கு காரணமாக திரைப்படம் வெளியாகும் தியேட்டருக்கு வெடிகுண்டு வைப்போம் என்று 'தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை' என்ற அமைப்பிடம் இருந்து கடிதம் வந்ததாகவும், அதனால்  திரையரங்க உரிமையாளர்கள் 'அரசின் ஆதரவும், உரிய பாதுகாப்பும் இருந்தால் மட்டுமே தலைவா திரைப்படத்தை வெளியிடுவோம். இல்லையென்றால் வெளியிட மாட்டோம்' என்று சொன்னதாகவும் சொன்னார்கள். அதன் பிறகு அரங்கேறிய காட்சிகள் சினிமாவையே விஞ்சும். இந்நிலையில் தலைவா திரைப்படம் நாளை (20.08.2013) வெளியாகிறது என்று அறிவிப்பு வந்துள்ளது. 

'தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை' யின் மிரட்டலால் தானே திரையரங்க உரிமையாளர்கள் அஞ்சினார்கள் (?), திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்ப்பட்டது. இப்போது யாரிடம் சமாதானம் பேசினார்கள்? என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு முன்னர் விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படத்திற்கும், கமலஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்கும் இசுலாமிய அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு இருந்தது. தங்கள் மார்க்கத்தை இழிவு செய்வதாக சொன்னார்கள் அவர்கள். ஆகவே இவ்விரு திரைப்படக் குழுவினரும் சம்பந்தப்பட்ட இசுலாமிய அமைப்புகளோடு பேசி, அவர்கள் வைத்த சில கோரிக்கைகளுக்கு திரைப்படக் குழுவினர் உடன்பட்டதால் சமாதானம் ஏற்ப்பட்டு திரைப்படம் வெளியானது. அதுபோல தலைவா திரைப்பட விவகாரத்தில் யாரோடு உடன்படிக்கை ஏற்ப்படுத்திக் கொண்டார்கள் என்பதே நம் கேள்வி.

ஆங்கில மொழிக் கலப்பு அதிகம் இருப்பதாலும், வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாலும் வரிவிலக்கு பெறுவதில் சிக்கல் எனவும், அரசை சாடுவது போல வசனங்கள் இருப்பதால் தான் சிக்கல் வந்தது எனவும் இன்னொரு தகவலும் உள்ளது. அதோடு 'முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இந்தப் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். முதல்வரைச் சந்திக்க அனுமதியும் கோரி வந்தனர். அனால் முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்திப்பதை  தவிர்த்தார். முதலில் படத்தின் தடைக்கும், அரசுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று கூறியதாகவும், தற்போது இந்தப் படத்தின் ரிலீசுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, போலீசார் கூறியதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. 

இத்திரைப்பட தடைக்காக   ராமதாசு கொதிக்கிறார்... கலைஞர் பதைக்கிறார்... ஜெ. அன்பழகன் படத்தை நான் வெளியிட தயார் என்று  துடிக்கிறார்...

என்ன நடந்தது? ஏன் இவ்வளவு கட்டுக்கதை?

அரசின் ஆதரவும், உரிய பாதுகாப்புமின்றி படத்தை வெளியிட மாட்டோம் என்று சொன்ன திரையரங்க உரிமையாளர்களின் கூற்றையும், இந்தப் படத்தின் ரிலீசுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற காவல்துறையின் கூற்றையும் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 

இதன் மூலம் 

1. எந்த பாதுக்காப்பின் அடிப்படையில் திரைப்படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் சம்மதித்தார்கள்?

2. தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படையின் மீது திரைப்பட குழுவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்களா? அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த வழக்கின் விவரம் என்ன? விசாரணை எந்த நிலையில் உள்ளது?

3. நாளை திரைப்படம் வெளியாகிற சூழலில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படையை கைது செய்யவில்லை என்றால் தியேட்டருக்கு மீண்டும் அச்சுறுத்தல் இருக்காதா?

4. என்னவானது தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை? 

என்பன போன்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன...

காசுக்காக சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களை ரவுடிகளாகவும், நாகரிகமற்றவர்களாகவும் சித்தரித்து காசுபார்த்த கும்பல், இப்போது சினிமா விளம்பரத்திற்காக ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சி படை என்ற புதியதோர் கற்பனை வில்லனை உருவாக்கி இருக்கிறார்கள்...

இப்படிப்பட்ட கேவலமான பிழைப்பை நாயும் பிழைக்குமா? .. தூ...        

-  தமிழன் வேலு

புதன், 14 ஆகஸ்ட், 2013

சுதந்திரம் !

அந்நிய ஆதிக்கம் வேண்டாம் என்று
எதிர்த்ததால் தான் சுதந்திரம் பெற்றோம்
என்று சொல்கிறார்கள் ..!

அதனாலே தான் நானும் சொல்கிறேன்

வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல சுதந்திரம்
வேண்டாம் என்பதற்கும் தான் சுதந்திரம் !

தொழில்வளம் பெருக வேண்டும் என்பதற்கு
மட்டுமல்ல சுதந்திரம் - அந்நிய முதலீடு
வேண்டாம் என்பதற்கும் தான் சுதந்திரம் !

மின்சாரம் வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல
சுதந்திரம் - அணு உலை வேண்டாம் என்பதற்கும்
தான் சுதந்திரம் !

மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரம் சார்ந்து
இறையாண்மை கொண்ட ஒரு தேசம் வேண்டும்
என்பதற்கு மட்டுமல்ல  சுதந்திரம்

எந்த மொழியையும் எவர்மீதும் திணிக்கவேண்டாம்
எந்த இனமும், இன்னொரு இனத்தை அடக்க வேண்டாம்
எந்த பண்பாடு- கலாச்சாரத்தை கொண்டும்  மற்றையவர்
பண்பாடு - கலாச்சாரத்தை அழிக்க வேண்டாம்
என்பதற்கும் தான் சுதந்திரம் !

சரி அதுக்கு என்னா  இப்ப?

செங்கோட்டையை வண்ண விளக்குகளால்
அலங்கரிச்சாச்சு - வந்தே மாதரம் ஒலிநாடாவை
தூசுதட்டி எடுத்து வைத்தாச்சு

விழா கொண்டாட்டத்திற்கு நடன ஒத்திகைகள்
பார்த்தாச்சு - மக்கள்  கூடுமிடமெல்லாம்
காவல்துறையினர் கூடி நிற்கிறார்கள்

மூவர்ண கொடியும்  தயார் நிலையில்,
பிள்ளைகளுக்கு கொடுக்க இனிப்புகளும்
தயார் நிலையில் ...

பிரதம மந்திரியும், முதல் மந்திரிகளும்
வாழ்த்துரை வாசிக்க ஒத்திகை பார்த்து
விட்டார்கள் - விழா நடக்குமிடம்
ராணுவ கட்டுப்பாட்டுக்கு வந்தாச்சு

என்ன விசேஷம் என்று கேட்டால்,
நாளை இந்திய சுதந்திர தினமென்று
சொன்னார்கள் ...

எல்லாம் சரிதான் ...

ரங்கநாதர் கோவில் வாசலில் கால்வயிறு
கஞ்சிக்காக தோல் சுருங்கிய கைகளை நீட்டி நிற்கும்
முனியம்மா கிழவிக்கு சொல்லிவிட்டீர்களா
நாளை நம் சுதந்திர தினமென்று?

- தமிழன் வேலு            

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? மகளின் காதலை எதிர்க்கும் இயக்குனர் சேரன் !

எத்தனையோ காதல் படங்களை இயக்கிய இயக்குனர் சேரன், தன் மகளின் காதலுக்கு எதிராக நிற்கிறார். ஆனால் அவரோ "மகளின் காதலை எதிர்க்கவில்லை, மகளை காதலிக்கும் நபர் நல்லவர் அல்ல, என் மகளுக்கு கணவராக வரக்கூடியவர், எனக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? என்று பேட்டி அளித்திருக்கிறார். அவருக்கு துணையாக சரத்குமார், ராதாரவி, அமீர், சமுத்திரக்கனி, சசிக்குமார் போன்றவர்கள் ஆதரவளித்துள்ளனர். இது குறித்து என் முகநூல் பக்கத்தில் நான் எழுதி இருந்த இரு விஷயங்கள்...

சேரன் மகளை காதலிக்கும் சந்துரு "நல்ல பழக்கம் உள்ள நபர் அல்ல" என்று சொல்கிறார்கள்.

ஆனால்

குடிகாரர், கஞ்சா விரும்பி, அடிதடி பேர்வழி, பொம்பள பொறிக்கி இவனுங்கள ஹீரோயின் காதலிப்பாங்க, பிறகு தன்னோட அன்பால அவங்கள திருத்துவாங்க. பிறகு வாழ்க்கையில சந்தோஷமா வாழ்வாங்க" இப்படி எத்தனையோ சினிமாவை நமக்கு படமாக காட்டி நம்மை நம்பவைத்து கல்லா கட்டி இருக்கிறார்கள் நம் அருமை சினிமாக்காரர்கள் என்பதை இங்கே நினைவுப் படுத்துகிறேன்..

அதே டைலாக்கை திருப்பி சொல்றேன் " வலியும், வேதனையும் அவனவனுக்கு வந்தாதான் தெரியும்" என்று எழுதி இருந்தேன்.

சேரனுக்கு ஆதரவாக நிற்கும் "அமீர்" இயக்கிய "பருத்திவீரன்" திரைப்படத்தில் கதாநாயகன் "கார்த்திக்" சமூக சேவகர் வேடத்திலா நடித்தார்? பச்சையான பொம்பள பொரிக்கியாகவும், ரவுடியாகவும் காட்டி, கதாநாயகியாக தோன்றிய பிரியாமணி அவரை உருகி, உருகி காதலிப்பது போல காட்சி அமைத்திருந்தார். அவர் இன்று சேரனுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு வருகிறார்..

அடுத்து "நாடக காதல் புகழ்" மருத்துவர் ராமதாசும் சேரனுக்கு வக்காலத்துக்கு வந்திறங்கி இருக்கிறார். இரண்டொரு நாளுக்கு முன் நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசும் போது நண்பர் சொன்னார். " ராமதாசுக்கு இது நிச்சயம் தெம்பூட்டும்" என்றார். சொன்னது போலவே அறிக்கை கொடுத்திருக்கிறார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது "சேரன் தெரிவித்துள்ள வேறு சில கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் வைத்து பார்க்கும் போது இதுவும் ஒரு நாடகக் காதலாகவே தோன்றுகிறது. சேரன் கூறியுள்ள கருத்துக்களைத் தான் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.என்றும் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டங்களில் கூட இதே கருத்தை வலியுறுத்தி தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘‘பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல், காதல் நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப் பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றுக்கு முன்னுரிமைத் தந்து 21 வயதுக்கு மேல் நடக்கும் காதல் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை’’ என்று தீர்மானத்தில் தெளிவாகக் கூறியிருந்தோம்.
எங்களின் நிலைப்பாட்டில் உள்ள நியாயத்தை இயக்குனர் சேரனும், அவரைப் போன்ற சூழலில் உள்ள பெற்றோரும் இப்போது உணர்ந்திருப்பார்கள்." என்றும் தெரிவித்து இருக்கிறார்.

முன்னாடி ராமதாஸ் என்னவெல்லாம் சொல்லி வெறுப்பு பிரச்சாரம் செய்தாரோ, அதையே தான் இன்று சேரன் சொல்லுகிறார். இந்த நிலைமையில் ராமதாஸ் சேரனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும்..  

இன்னொரு பதிவில் ...

"மீண்டும், மீண்டும் அதே விஷயத்தைப் பேசுவதற்கு விருப்பமில்லை என்றாலும் இறுதியாக இரண்டு விஷயங்களை தெளிவுப் படுத்திவிட விரும்புகிறேன்...

20 வயதுக்குள் காதலிப்பவர்களிடம் முதிர்ச்சி இருக்காது. ஒரு தந்தையாக தன் மகளுக்கு அறிவுரை சொல்ல சேரனுக்கு உரிமை உண்டு என்று சொல்கிறார்கள். சேரனுக்கு ஆதரவாக அமீர், சசிகுமார், சமுத்திரக்கனி, சரத்குமார் போன்றவர்கள் துணை நிற்கிறார்கள்.

ஆனால் 15, 16 வயது பெண்களோடு டூயட் பாடும் போது இவர்களின் முதிர்ச்சி எங்கே சென்றது என்று கேட்க விரும்புகிறேன். 16 வயது பெண் லக்ஷ்மி மேனனோடு டூயட் பாடிய சசிகுமார் தான் இன்று சேரனுக்கு ஆதரவாக நிற்கிறார். 14 வயது பெண்ணாக இருக்கும் போதே பானுவை தாமிரபரணி படத்தில் நடிக்க வைத்தனர்.10வது படிக்கும் பெண்ணாக ஓவியா நடித்த களவாணி படம் "சூப்பர் ஹிட்" ஆனது. அப்போதெல்லாம் முதிர்ச்சி இல்லாத பெண்களுக்கு பாலியல் உணர்வை தூண்டுவதாக இவர்களுக்கு தோன்றவில்லையா? என்று கேட்க விருபுகிறேன்...

அடுத்ததாக "சினிமாக்காரன் குடும்பக்கதையை அவன் எடுக்கிற சினிமா படத்தை விமர்சிக்கிற மாதிரியே விமர்சிக்கிறார்கள். மற்றவர்களை விமர்சிக்கும் முன் நம்மை அவர்களின் இடத்தில் நிறுத்தி பார்த்தால் புரியும் வலியும் வேதனையும்" என்று சொல்கிறார்கள்

சினிமா பொழுது போக்கு அம்சமாக மட்டும் இருந்திருந்தாலோ, அல்லது சினிமாக்காரன், சினிமாக்காரனாக மட்டும் இருந்திருந்தால் யாரும் அவர்களைப் பற்றி பேசப் போவதில்லை. ஆனால் சினிமா மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவே சமூகத்தில் தவிர்க்க இயலாத இடத்தை பிடித்து விட்டது. அது எதோ ஒருவிதத்தில் சமூகத்தின் தேவை, தேடல் ஆகியவற்றோடும் தொடர்பில் இருக்கிறது. அதுபோக இன்று விடிந்தாலே சினிமாக்காரர்கள் முகத்தில் தான் விழிக்கக் கூடிய சூழலை உருவாக்கி வைத்திருக்கிறது ஊடகம். பொங்கல், தீபாவளி, சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் கூட சினிமாக்காரர்களே ஊடகங்களில் கருத்து சொல்கிறார்கள். அவர்கள் தம்மை பொது சேவை செய்வதாக விளம்பரம் செய்கிறார்கள். அதுவே நம்பவைக்கவும் பட்டிருக்கிறது. தனிமனித ஒழுக்கத்தில் இருந்தே சமூக ஒழுக்கமும் பிறக்கிறது என்ற அடிப்படையில் மக்களுக்கு அறிவுரை சொல்லும் அவர்கள் அதன்படி நடக்காத பட்சத்தில் அவர்களை விமர்சிப்பதில் என்ன தவறு இருந்துவிடப் போகிறது?

இதற்கு மேல் இவ்விஷயத்தைப் பற்றி பேசப் போவதில்லை முற்றும்." என்றும் எழுதி இருந்தேன். இது ஒருபக்கம் இருந்தாலும் அவர் பெரிய இயக்குனர், சினிமாக்காரர் என்பதாலே ஒரு படைப்பாளிக்கு உரிய மரியாதையை நாம் அவருக்கு கொடுப்போம், அவரின் மனதை காயப்படுத்த வேண்டாம்." தன் சுய வாழ்க்கை சிக்கலுக்கும் நிச்சயமாக நல்ல முடிவைதான் எடுப்பார், எடுக்கவேண்டும். அதுவரை நண்பர் சேரன் அவர்களை காயப்படுத்த வேண்டாம்" அவரின் செயல்பாட்டை சிலர் வெளிப்படையாகவே ஆதரிக்கிறார்கள். இதுதான் மிகவும் வேதனை அளிக்கிறது.

அவர்களே "தன் மகளுக்கு அறிவுரை சொல்ல சேரனுக்கு உரிமை இல்லையா?" என்று கேட்கிறார்கள்? அவர்களுக்கு 'திருமணம் என்பது வயதுவந்த, அறிவு வந்த ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட காரியமே ஒழிய மற்ற யாருக்கும் எந்த கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தப்பட்டதல்ல’’ - என்ற தந்தை பெரியார் அவர்களின் கூற்றை நினைவுபடுத்துகிறேன்..

#அது சரி... சினிமாவில் காதலை சேர்த்து வைத்தால் துட்டு கிடைக்கும்... நிஜவாழ்வில் காதலர்களை சேர்த்து வைத்தால் மசுரா கிடைக்கும்?
காசு,  பணம், துட்டு, Money...Money...

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

கடைசி மனிதனின் பார்வை

கடந்த சில தினங்களுக்கு முன் லில்லி தாமஸ் என்பவர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, குற்ற வழக்குகளில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்களின் பதவி, உடனே பறிக்கப்பட வேண்டும்; மேலும், குற்ற வழக்குகளில், தண்டனை பெற்றவர்கள், அந்தத் தண்டனையை எதிர்த்து, மேல் முறையீடு செய்திருந்தாலும், அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தான் அது. இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தீர்ப்பை அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பார்கள் என்று பேசப்பட்டது. சொன்னது போலவே நேற்று (01.08.2013) டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்கக்கூடாது என்றும், இந்த விஷயத்தில், பார்லிமென்டிற்கு உள்ள மாண்பை, உறுதி செய்ய வேண்டும்" என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக நாளேடுகளில் செய்தி வெளிவந்திருக்கிறது.

"ஒருநாட்டில் சிறந்த ஆட்சி நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டுமானால் கடைசி மனிதர்களின் கண்களால் தான் ஆய்வு செய்யவேண்டும்". இந்நாட்டில் அரசினால் செயல்படுத்தப்படும் எந்தவொரு ஒரு திட்டத்திலும் லாபத்தினை பெரும் முதாளிகளும், கடும் பாதிப்பினை கடைசி மனிதர்களுமே அனுபவிக்கிறார்கள். ஆகவே நாம் கடைசி மனிதர்களின் பார்வையாகவே இதை அணுக வேண்டி இருக்கிறது. நீதி துறையிலும், நாடாளுமன்ற, சட்டமன்றதிலும் இருக்கும் ஒரு விஷயம் கடைசி மனிதர்களை கடுமையாக பாதிக்க கூடியதாக இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடாது; மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்பதும், நாடாளுமன்ற, சட்டமன்ற உள் விவகாரங்களை விமர்சிக்க கூடாது, மீறினால் நாடாளுமன்ற, சட்டமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்பதுமே அது. நீதிமன்றமோ, அல்லது சட்டமன்றமோ என்றைக்கும் கடைசி மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருந்ததில்லை. நீதிமன்றத்தை பொருத்தமட்டில் வக்கீல் பீசும், வக்கீலின் வாதத் திறைமையும் தான் நீதியை தீர்மானிக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத்தை பொருத்தமட்டில் பெரும்பான்மை பலமே அரசின் திட்டமாக வெளிப்படுகிறது. இரண்டுமே கடைசி மனிதர்களை பாதுகாக்கும் செயல் அல்ல.

இரண்டு யோக்கியர்களும் (?) மோதிக் கொள்கிறார்கள்... இதற்கு என்ன தான் தீர்வு?

குற்றப்பின்னணியில் உள்ளவர்களை அரசில் இருந்து புறக்கணிக்க மக்களே தயாராக வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையம் தான் முழு உதவியாக இருக்கவேண்டும். ஒரு வேட்பாளரின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டாலே அவர் யோக்கியர் என்று தேர்தல் ஆணையம் சான்று கொடுப்பதாக பொருளாகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய முழுத்தகவலையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. பெரும்பாலும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் என்னென்ன தகவலை கொடுக்கிறார்கள் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிவதில்லை. வேட்பாளர் இறுதி பட்டியலை வெளியிடும் தேர்தல் ஆணையம் அதோடு சேர்த்து பாரபட்சமின்றி அனைத்து வேட்பாளர்களும் அவர்களது வேட்புமனுவில் அவர் கூறியிருக்கும் தகவலையும், அவரது பின்னணியையும் வெளியிட வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவொரு வார்டிலும் அவர்களைப் பற்றிய விவரங்களை நோட்டிசாக ஓட்டலாம். அப்படி வெளியிடும் பட்சத்தில் குற்றப்பின்னணி உள்ளவர்களையும், குண்டர்களையும் மக்களே புறக்கணிக்க துவங்கி விடுவார்கள்.

- தமிழன் வேலு 
02 / 08 / 2013