திங்கள், 19 ஆகஸ்ட், 2013

என்னவானது தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை ?

முன்பெல்லாம் சினிமாவில் தான் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுப் படுத்துவார்கள். தற்போது படம் வெளியிடும் முன்னரே வசூலைக் குவிக்க, மலிவு விளம்பரம் செய்ய ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் போலும். 

நடிகர் விஜய் நடித்து கடந்த 9ஆம் தேதி திரைக்கு வரவிருந்த 'தலைவா ' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்ப்பட்டது. அதற்கு காரணமாக திரைப்படம் வெளியாகும் தியேட்டருக்கு வெடிகுண்டு வைப்போம் என்று 'தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை' என்ற அமைப்பிடம் இருந்து கடிதம் வந்ததாகவும், அதனால்  திரையரங்க உரிமையாளர்கள் 'அரசின் ஆதரவும், உரிய பாதுகாப்பும் இருந்தால் மட்டுமே தலைவா திரைப்படத்தை வெளியிடுவோம். இல்லையென்றால் வெளியிட மாட்டோம்' என்று சொன்னதாகவும் சொன்னார்கள். அதன் பிறகு அரங்கேறிய காட்சிகள் சினிமாவையே விஞ்சும். இந்நிலையில் தலைவா திரைப்படம் நாளை (20.08.2013) வெளியாகிறது என்று அறிவிப்பு வந்துள்ளது. 

'தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை' யின் மிரட்டலால் தானே திரையரங்க உரிமையாளர்கள் அஞ்சினார்கள் (?), திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்ப்பட்டது. இப்போது யாரிடம் சமாதானம் பேசினார்கள்? என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு முன்னர் விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படத்திற்கும், கமலஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்கும் இசுலாமிய அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு இருந்தது. தங்கள் மார்க்கத்தை இழிவு செய்வதாக சொன்னார்கள் அவர்கள். ஆகவே இவ்விரு திரைப்படக் குழுவினரும் சம்பந்தப்பட்ட இசுலாமிய அமைப்புகளோடு பேசி, அவர்கள் வைத்த சில கோரிக்கைகளுக்கு திரைப்படக் குழுவினர் உடன்பட்டதால் சமாதானம் ஏற்ப்பட்டு திரைப்படம் வெளியானது. அதுபோல தலைவா திரைப்பட விவகாரத்தில் யாரோடு உடன்படிக்கை ஏற்ப்படுத்திக் கொண்டார்கள் என்பதே நம் கேள்வி.

ஆங்கில மொழிக் கலப்பு அதிகம் இருப்பதாலும், வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாலும் வரிவிலக்கு பெறுவதில் சிக்கல் எனவும், அரசை சாடுவது போல வசனங்கள் இருப்பதால் தான் சிக்கல் வந்தது எனவும் இன்னொரு தகவலும் உள்ளது. அதோடு 'முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இந்தப் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். முதல்வரைச் சந்திக்க அனுமதியும் கோரி வந்தனர். அனால் முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்திப்பதை  தவிர்த்தார். முதலில் படத்தின் தடைக்கும், அரசுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று கூறியதாகவும், தற்போது இந்தப் படத்தின் ரிலீசுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, போலீசார் கூறியதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. 

இத்திரைப்பட தடைக்காக   ராமதாசு கொதிக்கிறார்... கலைஞர் பதைக்கிறார்... ஜெ. அன்பழகன் படத்தை நான் வெளியிட தயார் என்று  துடிக்கிறார்...

என்ன நடந்தது? ஏன் இவ்வளவு கட்டுக்கதை?

அரசின் ஆதரவும், உரிய பாதுகாப்புமின்றி படத்தை வெளியிட மாட்டோம் என்று சொன்ன திரையரங்க உரிமையாளர்களின் கூற்றையும், இந்தப் படத்தின் ரிலீசுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற காவல்துறையின் கூற்றையும் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 

இதன் மூலம் 

1. எந்த பாதுக்காப்பின் அடிப்படையில் திரைப்படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் சம்மதித்தார்கள்?

2. தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படையின் மீது திரைப்பட குழுவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்களா? அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த வழக்கின் விவரம் என்ன? விசாரணை எந்த நிலையில் உள்ளது?

3. நாளை திரைப்படம் வெளியாகிற சூழலில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படையை கைது செய்யவில்லை என்றால் தியேட்டருக்கு மீண்டும் அச்சுறுத்தல் இருக்காதா?

4. என்னவானது தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை? 

என்பன போன்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன...

காசுக்காக சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களை ரவுடிகளாகவும், நாகரிகமற்றவர்களாகவும் சித்தரித்து காசுபார்த்த கும்பல், இப்போது சினிமா விளம்பரத்திற்காக ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சி படை என்ற புதியதோர் கற்பனை வில்லனை உருவாக்கி இருக்கிறார்கள்...

இப்படிப்பட்ட கேவலமான பிழைப்பை நாயும் பிழைக்குமா? .. தூ...        

-  தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக