புதன், 29 அக்டோபர், 2014

அரசியலும்... அரசியல் பண்பாடும் ...

கடந்த மாதம் தன் பேரன் – பேத்திகளின் திருமண அழைப்பிதழை திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, மருத்துவர் ராமதாஸ் நேரில் சந்தித்து கொடுத்தார். தேர்தல் அரசியலில் வெவ்வேறு அணிகளில் அவர்கள் இருப்பதால், அந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பாமக திமுக அணிக்கு வரலாம் என்றும் செய்திகள் வெளியாயின. இருப்பினும், அரசியல் நாகரிகம் கருதியே, இந்த சந்திப்பு நடந்தது என்று கூறிய ராமதாஸ், கலைஞர் “அரசியல் நாகரிகம் தெரிந்தவர்” என்று புகழுரை வழங்கினார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய திமுக பொருளாளர் ஸ்டாலின், ராமதாஸ் குறித்த கேள்விக்கு, “மருத்துவர் ராமதாஸ் அரசியல் பண்பாடு மிக்கவர்” என்று பதில் கூறியுள்ளார். இவர்கள் பேசும் அரசியல் பண்பாடு எந்த அளவிற்கு நேர்மையானது என்பதை பார்ப்பதற்கு முன்பாக தமிழகத்தில் அரசியல் ஒழுக்கமோ, பண்பாடோ இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.  


மேற்குலக நாடுகளில் எதிர் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் கொள்கை ரீதியாக மிக காரசாரமாக விவாதித்து கொண்டாலும், அவர்களிடையே நட்புறவு இருக்கிறது. எதிர்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வெற்றி பெற்றுவிட்டால் வாழ்த்துக்களையும், அன்பையும் பரிமாறி கொள்கிறார்கள். இந்தியாவை பொருத்தமட்டில் வடநாட்டில் அந்த பண்பாடு குறைந்தபட்சமேனும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தை பொருத்தமட்டில் அரசியல் நாகரிகம் சிறிதளவு கூட கிடையாது. உறவினர்களாக இருக்கின்றவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள் என்றால் அத்தோடு அவர்கள் உறவை மறந்துவிட வேண்டியது தான். எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் நிரந்தர எதிரிகளாகி போகிறார்கள். தலைவர்களை பொருத்தமட்டில் தேர்தலுக்காகவும், பதவிக்காகவும் “அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர பகைவனும் கிடையாது” என்று வாய் ஜம்பம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் தலைவர்களின் பேச்சை கேட்கின்ற தொண்டர்கள் தான் பெரிதளவில் பாதிக்கப்படுகிறார்கள். மாற்றுக் கட்சியினரோடு அரசியல் கடந்த உறவை தொடர்வது என்பது முடியாததாகவும், கட்சிக்கு இழைக்கும் துரோகமாகவும் பார்க்கப்படுகிறது. அதுமாத்திரமல்லாமல், கொள்கை சார்ந்த விவாதங்கள் அறவே அற்றுப்போய்விட்டு, தனிநபர் தாக்குதலும், வெறுப்பு பிரச்சாரமும் மிக தீவிரமாக  முன்னெடுக்கப்படுகின்றன.


அதன் நீட்சியாக கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினரால் நடத்தப்பட்ட வெறுப்பு பிரச்சாரங்கள், அதனால் தர்மபுரியில் நிகழ்ந்த சாதிய வன்கொடுமை தாக்குதல்கள் வரலாற்றில் மறையாத அவல சாட்சியங்கள். இன்றைக்கு அரசியல் நாகரிகம் என்றெல்லாம் வாய்ஜாலம் அடிக்கும் ராமதாஸ், தாழ்த்தப்பட்ட மக்களை பற்றியும், விடுதலை சிறுத்தைகளை பற்றியும் எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களை பற்றியும் பரப்பிய அவதூறுகள் ஏட்டில் எழுதமுடியாதவைகள். அதோடு, இன்று ராமதாஸ் யாரை அரசியல் நாகரிகம் தெரிந்தவர் என்று சொல்கிறாரோ, அதே கலைஞரையும், ஆசிரியர் வீரமணி அவர்களையும் மிக கேவலமாக திட்டி பேச வைத்தவர். சாதி ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் வெறுப்பின் உச்சத்திற்கே சென்று காடுவெட்டி குருவை பேசவைத்து புளங்காகிதம் அடைந்தவர். தனிநபர் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு சிறிதும் பொருத்தமில்லாத மனிதராக, சினிமா ரவுடியை போல பேசிக்கொண்டு திரிந்தார். செல்லும் இடமெல்லாம் வெறுப்பு பிரச்சாரங்களை விதைத்து அதன்மூலம் தனது சாதிய அரிப்புக்கு சொரிந்து கொண்டார். அவர்களின் வன்முறை பேச்சுக்களால் அன்றைக்கு தமிழகம் அசாதாரண சூழலை சந்தித்தது.

கொள்கையை கடந்து, தனிப்பட்ட முறையில் கலைஞர் மீதும், திருமாவளவன் மீதும் வன்மம் கொண்டு விமர்சனங்களை வீசிய, ராமதாஸ் இன்று திமுகவோடு குசலம் கொஞ்சுவது சந்தர்ப்பவாதமா? அரசியல் நாகரிகமா? என்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். திமுகவோடு, பாமக கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்கிற பொறாமையில் நான் இப்படி எழுதுவதாக சிலர் நினைக்கலாம். ஆனால் நடுநிலை பண்போடு, அரசியல் ஒழுக்கத்தை விரும்புகிற எவருக்கும் என் எழுத்திலும், எண்ணத்திலும் இருக்கின்ற நேர்மை புலப்படும் என்று நம்புகிறேன். செல்லும் இடமெல்லாம் தரம் தாழ்ந்த ரவுடியை போல, எழுச்சி தமிழரை விமர்சனம் செய்தபோது கூட, ஏட்டிக்குப் போட்டி, லாவணி பாடாமல் ஜனநாயக சக்திகளின் துணைகொண்டு சாதியவாதிகளின் சதிகளை முறித்தவர் திருமாவளவன். தன்னை மிக கேவலமாக விமர்சித்த போதும் கூட “இனநலன், மொழிநலனுக்காக ராமதாஸ் அவர்களோடு இணைந்து பணியாற்ற தயார்” என்று அறிவித்து அரசியல் நாகரிகத்தின் உச்சத்துக்கே சென்றவர்.

பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் காலத்தில் இருந்த அரசியல் நாகரிகம் கொஞ்சமும் தற்போதைய தமிழக அரசியலில் கிடையாது. கொள்கைசார்ந்து ராஜாஜியை மிக கடுமையாக விமர்சனம் செய்த தந்தை பெரியார், தனிப்பட்ட முறையில் ராஜாஜியோடு நட்புறவை கொண்டிருந்தார். “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு” என்றார் பேரறிஞர் அண்ணா. தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசை விமர்சனம் செய்த பேரறிஞர் அண்ணா, தேர்தல் வெற்றிக்கு பின்னர், தன் அமைச்சரவை சகாக்களை அழைத்துக்கொண்டு காமராஜரை சந்தித்து, தம் அரசுக்கு ஆலோசனை வழங்க கேட்டுக் கொண்டார். முந்தைய காலத்தின் அரசியல் நாகரித்தை எடுத்துக்காட்டும் இதுபோன்ற ஏராளமான சான்றுகளை காட்டலாம். ஆனால் தற்போதைய அரசியலில் ராமதாஸ் போன்ற பதவி மோகம் பிடித்தவர்களால் அரசியல் நாகரிகமும், பண்பாடும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வெகுகாலம் ஆகிறது. பெரியாரிடமும், அண்ணாவிடமும், காமராஜரிடமும் இருந்த அரசியல் பண்புகளை இன்று அண்ணன் எழுச்சி தமிழரிடம் காண்கிறேன்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைத்திருகிறார். திமுகவோடு இருக்கின்ற காரணத்தினால், அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மீதோ, அதிமுக வோடு இருக்கின்ற காரணத்திற்காக கலைஞர் மீதோ, தனிநபர் விமர்சனங்களில் என்றைக்கும் ஈடுபட்டத்தில்லை. அதேநேரத்தில் கொள்கை ரீதியாக அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறோம். "ஜெயலலிதா ஒரு அதிதீவிர இந்துத்துவ அடிப்படைவாதி" என்று வெளிப்படையாக எழுச்சிதமிழர் விமர்சித்தார். பின்னாளில் அவரது பேச்சுக்கள் நூலாக தொகுக்கப்பட்ட போது, அந்தநூலை அவரிடம் வழங்கி, அவரை பற்றி குறிப்பிட்டிருக்கும் அந்த பக்கத்தையும் பிரித்து காண்பித்த மாண்பாளர் அண்ணன் திருமாவளவன். அதேபோல கலைஞர் அவர்களோடும் கொள்கை ரீதியாக முரண்பட்டிருக்கிறோம். தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்றதும், திமுக அணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டுயிட்டு வென்ற தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறினார். ஆனாலும் கலைஞர் மீது தனிப்பட்ட முறையில் எவ்வித வெறுப்பு விமர்சனங்களையும்  முன்வைக்கவில்லை. தமிழக அரசியலில் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல்வாதியையும் தரம் தாழ்ந்து விமர்சிக்காத நிகழ்கால தலைவராக அண்ணன் எழுச்சி தமிழர் இருக்கிறார். அதனாலே ஜனநாயக சக்திகளின் அன்புக்கு உரியவராக திகழ்கிறார். தேர்தல் அரசியலுக்காக முன்னொன்றும், பின்னொன்றும் பேசித் திரியும் சராசரி அரசியல்வாதிகளை போல அல்லாமல், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்களின் வழிநின்று கொள்கை சார்ந்து வழி நடத்தி வருகிறார். தேர்தல் அரசியலுக்காக எப்படிப்பட்ட இழிவான அரசியலையும் செய்யத்துடிக்கும் அரசியல்வாதிகள் இருக்கின்ற இன்றைய சூழலில், உள்ளதை உள்ளபடி, பட்டவர்த்தனமாக பேசும் பக்குவத்தை அவரும் பெற்றிருக்கிறார். அவரது தம்பிகளுக்கும் அந்த பண்பை கற்றுக் கொடுத்திருக்கிறார். 2009 ஆம் ஆண்டு ஈழப்படுகொலை, உச்சகட்டத்தில் இருந்த சூழலில், திமுக அணியில் இருந்துகொண்டே,  அதிமுக அணியில் இருந்த மதிமுக, பாமக, கம்யூனிஸ்டு கட்சிகளோடு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். கூட்டணியை பற்றி கவலைப்படாமல், தேர்தலை பற்றி கவலைப்படாமல் ஈழ மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும் என்ற அதீத உந்துதலில் எடுக்கப்பட்ட  துணிச்சலான முடிவு அது. தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைத்து தனி அணி கட்டவும் துணிந்தவர். அணித்தலைவராக யாராவது இருந்து கொள்ளுங்கள், நான் உங்களுக்கு பின்னால் நிற்கிறேன் என்று பகிரங்க அறைகூவல் விடுத்தார். தலைமை பதவியின் மீது மோகம் இல்லாத தலைவராக எழுச்சி தமிழர் இருக்கிறார். அரசியல் நேர்மையும், கொள்கை பிடிப்பும் உள்ள தலைவராக திருமாவளவன்  இருந்தாலும், அதை அங்கீகரிக்கவோ, பாராட்டவோ யாரும் முன்வராத மோசமான அரசியல் சூழலே நிலவிவருகிறது. 

அரசியல் நாகரிகம் என்பது தன்மானத்தையும், சுயமரியாதையையும் உள்ளடக்கியது தான். ஆனால் இன்றைய சூழலில் அது தன்மானத்தையும், சுய மரியாதையையும் இழந்துவிட்டு, ஓட்டரசியலையும், சந்தர்ப்பவாதத்தையும் பிரதானமாக கொண்டிருக்கிறது என்பது தான் பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. ராமாதாஸ், கலைஞரை பாராட்டியதும், ஸ்டாலின், ராமதாசை பாராட்டியதும் ஓட்டரசியல் மற்றும் சந்தர்ப்பவாத நோக்கம் கொண்டது தான். இதில் அரசியல் நாகரிகமோ, பண்பாடோ இருப்பதாக நான் கருதவில்லை.

சனி, 25 அக்டோபர், 2014

சினிமா – நடிகர்கள் – ரசிகர்கள் – அரசியல்

உலக மக்களில் பெரும்பாலான மக்கள் சினிமாவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மற்ற நாட்டு, இந்தியாவின் மற்ற மாநிலத்து மக்கள் சினிமாவை பார்ப்பதற்கும், தமிழர்கள் பார்ப்பதற்கும் நிரம்ப வேறுபாடுண்டு. தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமாவும் அரசியலும் இரண்டற கலந்திருக்கிறது. அது ஆரோக்கியமானது கிடையாது என்பது ஒருபுறமிருந்தாலும், சினிமா வாய்ப்பு இல்லாமல் போனால், அரசியலுக்கு சென்றுவிடலாம் என்ற நினைப்பு, கிட்டத்தட்ட எல்லா தமிழ் நடிகர்களுக்கும் இருக்கிறது. சினிமா நடிகைக்கு கோவில் கட்டுவது, பிடித்த நடிகரின் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வது போன்ற அற்பமான கலாச்சாரம் இங்கு மட்டும்தான் இருக்கிறது. ஒரு சினிமா நடிகருக்கும், ரசிகருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு வெறும் 3 மணிநேர சினிமா மட்டும் தான். எல்லா நடிகர்களுக்குமே சினிமா என்பது தொழில்தான். கலை சேவை என்று அவர்கள் சொல்லிக்கொண்டாலும் அதை அவர்கள் தொழிலாக தான் பார்க்கிறார்கள். ஒரு கார்ப்பெண்டரை போல, எலக்ட்ரீசியனை போல அவர்கள் தொழில்முறை நடிகர்கள்.
எந்த நடிகரும் காசுவாங்காமல் நடிப்பதில்லை, அதேபோல எந்த ரசிகருக்கும், காசில்லாமல் படம் காட்டப்படுவதில்லை. ஒரு நடிகனுக்கும், ரசிகருக்கும் இடையில் இப்படிப்பட்ட தொடர்பு மட்டுமே இருக்கும்பட்சத்தில், எதன் அடிப்படையில் நடிகருக்காக தன் உயிரை மாய்த்துக்கொள்வது, பிறரின் உயிரை எடுப்பது போன்ற மோசமான செயல்களில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது விந்தையாகவே இருக்கிறது. ரசிகர்களிடம் இருக்கும் இதுபோன்ற குருட்டு நம்பிக்கை தான் பின்னாளில் அவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வசதியை கொடுக்கிறது. தனக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு விசுவாசமாக இருக்கும் ரசிகர்களுக்கு, அந்த நடிகர்கள் நேர்மையாக இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சினிமாவையும் தாண்டி தனக்காக அலகு குத்திய, மண்சோறு திண்ற, உண்ணாவிரதம் இருந்த, தேர் இழுத்த, மடிப்பிச்சை எடுத்த ரசிகர்களுக்காக ரஜினிகாந்த் செய்தது என்ன? “தன் ஒருதுளி வியர்வைக்கு ஒருபவுன் தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா” என்று பாட்டு படித்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்காக கேவலம் மூன்று மணிநேர சினிமாவை கூட இலவசமாக காட்டவில்லை என்பதுதான் எதார்த்தம். அவர்கள் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எந்த வசனத்தை பேசி, காசு சம்பாதித்தார்களோ, அந்த வசனங்களுக்கு கூட நேர்மையாக இல்லை என்பது தான் உண்மை...

1. அந்நியன் படத்தில் ஊழலுக்கு எதிராக புது, புது அவதாரம் எடுத்த விக்ரம், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்.
2. சிங்கம் படத்தில் மக்கள் சொத்தை கொள்ளை அடித்த ரவுடிகளை பாய்ந்து, பாய்ந்து வேட்டையாடிய சூர்யாவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
3. தற்போது வெளியாகி இருக்கும் கத்தி படத்தில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் ஆதரவாக போர்க்குரல் எழுப்பும், விஜய் தான், கொக்கோ கோலா கம்பெனியின் விளம்பர தூதுவராக செயல்பட்டார்.
4. அரசு ஊழியர்களின் ஊழலுக்கு எதிராக ரமணா படம் எடுத்த முருகதாசும், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

இதுபோல சினிமா நடிகர்களின் முரண்பட்ட போக்கை பக்கம் பக்கமாக பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். தற்போது கத்தி படம் வெளியாகி இருக்கும் சூழலில், கொக்கோ கோலா கம்பெனியின் விளம்பர தூதுவராக நடித்த விஜய்க்கு எதிராக சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் எழுதி வருகிற நிலையில், மற்றொரு தரப்பினர், நடிப்பும், சினிமாவும் அவரது தொழில். சினிமாவில் நடிப்பது போலவே நிஜவாழ்விலும் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. என்று எழுதி வருகின்றனர். “சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம், அல்லது கலை அல்லது படைப்பு ” என்று உலகில் எந்த நாட்டு மக்களும் சொல்லலாம். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை ஆளும் அதிகாரத்தை சினிமா நடிகர்களுக்கும், சினிமாத்துறையை சார்ந்தவர்களுக்கும் மட்டுமே வழங்கி இருக்கிறார்கள். தங்கள் தலைவர்களை திரையரங்கில் மட்டுமே இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ, விஜயகாந்தோ, சரத்குமாரோ இன்னபிற நாடிகள் அரசியல்வாதிகளோ அரசியலுக்கு வரும்போது, நடிகர் என்பதை தாண்டி வேறென்ன அடையாளம் அவர்களுக்கு இருந்தது? மக்கள் பிரச்சனைகளுக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மக்களுக்காக அவர்கள் செய்த நன்மைகள் என்ன? மக்கள் உரிமைகளுக்காக எத்தனை போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள்? போராட்டங்களில் பங்கெடுத்து எப்போதாவது சிறை சென்றிருக்கிறார்களா? என்பதை எல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். சினிமா மூலம் தங்களுக்கு கிடைத்த பிரபலத்தை அரசியலில் செலுத்தி காசுபார்க்க எத்தனிக்கும் அவர்களின் நிஜவாழ்வு நேர்மையை உரசிபார்ப்பதில் என்ன தவறு இருந்துவிடபோகிறது?

சினிமாவில் காசுவாங்கி கொண்டு வீரவசனம் பேசியதே இந்த சமூகத்திற்கு செய்த பெரும் சேவை என்று பெரும்பாலான நடிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பிழைப்புக்காக சினிமாவிலும், நிழவாழ்விலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள், அரசியலுக்கு வந்து என்ன நேர்மையாக இருந்துவிட போகிறார்கள்? சினிமாவும், நடிப்பும் தொழில்தானே, சினிமாவில் நடிப்பது போல நிஜவாழ்விலும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சப்பக்கட்டு கட்டுபவர்களில் ஒருவர் கூட, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சினிமா நடிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது, ஒற்றை கேள்வியை கூட எழுப்பவில்லையே ஏன்? இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களையும் விட தமிழ்நாட்டு அரசியலில் சினிமா நடிகர்களின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. குறிப்பிட்ட திரைப்படம் எங்களுக்கு எதிராக இருக்கிறது என்று சில அமைப்புகளோ, அரசியல் இயக்கங்களோ போராடும் போது, சினிமாவில் அரசியலை கலக்காதீர்கள், கருத்துரிமையை, படைப்புரிமையை பறிக்காதீர்கள் என்று நடுநிலை பேசும் நியாயவாதிகள், சினிமா நடிகர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போதோ, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் போதோ எந்தவித எதிர்ப்பையும் தெரிவிப்பதில்லை.

தமிழ்நாட்டு மக்களிடம் சினிமா மோகம் இருக்கிறது என்றுமட்டும் சுருக்கிவிட முடியாது. தமிழர்களிடம் சினிமா போதை இருக்கிறது. அவர்கள் சினிமாவையும், நிஜவாழ்வையும் பிரித்துப்பார்க்கும் பக்குவத்திற்கு இன்னமும் வரவில்லை என்று சொல்லவேண்டும். மக்களை மழுங்கடித்ததில் கார்ப்பொரேட் ஊடகங்களின் பங்களிப்பு மிகப்பெரியது. மக்கள் உரிமைகளுக்காக போராடும் கம்யூனிஸ்டுகளை விட, காசுவாங்கி கொண்டு நடிக்கும் நடிகர்களுக்கு, இந்த நாட்டின் ஊடகங்கள் கொடுக்கும், மதிப்பும், புகழும் முன்னுரிமையும் ஆயிரம் மடங்கு அதிகம். அதனால் தான் ஊடக வெளிச்சம், நடிகர்களின் அரசியல் கனவுகளுக்கு மூலதனமாக இருக்கிறது. எளிதில் அவர்கள் மக்களை சென்றடைகிறார்கள். மக்களிடம் சென்று தங்களை அறிமுகபடுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை. சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் கூட, நடிகர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு தான் இந்த நாட்டின் ஊடகங்களின் லட்சணம் இருக்கிறது. இப்படியாக சினிமா நடிகர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் புனிதம் கற்பித்து, அவர்களை ரட்சகராக வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பெரும் பிரயத்தனம் செய்கின்றன ஊடகங்கள். நடிகர்களுக்கு ஊடகங்கள் கொடுத்த வெளிச்சமும், அதன்மூலம் பாமர மக்களிடம் நடிகர்கள் மீது ஏற்ப்பட்டிருக்கும் கவர்ச்சியும் தான் , நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மக்களை வீதிக்கு வர வைத்தது என்பதை எவராலும் மறுக்க முடியுமா?

தமிழ்நாட்டு அரசியலை சீர்குலைத்ததில் சினிமாவிற்கும், ஊடகங்களுக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது. கருத்தியல் ரீதியாக மக்கள் அணிதிரள்வதை தடுத்து, வெறும் உணர்ச்சிகளாலும், கவர்ச்சிகளாலும் மக்களை மழுங்கடித்து வைத்திருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. தாராளமாக வரட்டும். ஆனால் சினிமா நடிகர் என்ற ஒற்றை அடையாளத்தோடு வருவதை தான் எதிர்க்கிறோம். சினிமாவை தாண்டி மக்களிடம் செல்லட்டும், அவர்களின் உணர்வுகள், பிரச்சனைகள், தேவைகள் என்ன என்று தெரிந்து கொள்ளட்டும். அவர்களுக்காக குரல் கொடுக்கட்டும், மக்களுக்காக போராடட்டும் என்பதை தான் வலியுறுத்துகிறோம். அவர்களை நம்பி, விசுவாசமாக இருக்கும் ரசிகர்களுக்கு நேர்மையாக, உண்மையாக இருக்கட்டும். அதன் பிறகு அரசியலை பற்றியும், அதிகாரத்தை பற்றியும் சிந்திக்கட்டும். வாழ்த்துக்களோடு வரவேற்க காத்திருக்கிறேன்...

- தமிழன் வேலு

வெள்ளி, 10 அக்டோபர், 2014

வேர்கள்

ஒரு விதை செடியாவதற்கும், ஒரு செடி மரமாவதற்கும் அந்த மரம் இந்த மண்ணில் நிலைகொண்டு வாழ்வதற்கும், அந்த மரம் பூத்து குலுங்குவதற்கும், காய் கனிகளை கொடுத்து புத்துயிரோடு வாழ்வதற்கும் வேர்கள் மிக முக்கியமாகிறது. நீரின்றி அமையாது உலகு என்பதை போல, வேரின்றி அமையாது உயிர்கள் என்றுகூட சொல்லலாம். மரத்திற்கும், மண்ணுக்குமான உறவை தீர்மானிப்பதும் வேர்களே. மனிதன் உயிர்வாழ இதயம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஒரு மரம் உயிர்வாழ வேர்கள் முக்கியம். ஆகவே மரம், செடி, கொடிகளின் இதயம் வேர்கள் என்றே சொல்லலாம். மனிதனுக்கு இதயத்தை போல, மரம், செடி, கொடிகளுக்கு வேர்களை போல இரண்டு மனிதர்களின் அல்லது இரண்டு சமூகத்தின் நட்புறவுக்கு இதயமாய், வேர்களாய் இருப்பது நம்பிக்கை. நம்பிக்கை என்ற வேர்களால் மட்டுமே உலகில் மானுடம் தழைத்திருக்கிறது. நம்பிக்கை என்ற வேர்களே மனிதர்களை வழிநடத்துகிறது என்றுகூட சொல்லலாம். நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் ஏதோவொரு நம்பிக்கையோடு தான் கண்விழிக்கிறோம். மனித வாழ்வில் நம்பிக்கை வேர்கள் இல்லாத இடமே கிடையாது. ஆண் – பெண் காதலில், திருமண உறவில், இரண்டு மனிதர்களுக்கான நட்பில், கடவுள் பக்தியில், அரசு இயக்கத்தில், அரசியல் கட்சி வளர்ச்சியில் இப்படியாக மனித அன்றாட வாழ்வியலோடு எங்கும், எல்லாமுமாய் நீக்கமற நிறைந்திருக்கிறது நம்பிக்கை வேர்கள். தான் எல்லோராலும் நேசிக்கப்படுகிறேன் என்று நம்புகிற மனிதன் மிக ஆரோக்கியமாக இருப்பதாகவும், தான் யாராலும் நேசிக்கப்படவில்லை, தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்று நம்புகிற மனிதன் ஆரோக்கியமற்றவனாக இருப்பதாகவும் உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

மனித வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் நம்பிக்கை வேர்களை இந்த சமூகமும், சமூக காரணிகளும் எப்படி சிதைத்து வருகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சாதி, மதம், இனம், வர்க்கம் போன்றவைகள் மனித உறவுகளின் நம்பிக்கை வேர்களில் வெந்நீர் பாய்ச்சும் ஆபத்தான காரணிகளாகும். தன் சாதி தான் உயர்ந்த சாதி என்று நம்புகிறவன், தன்னை விட தாழ்ந்த சாதியில் பிறந்தவனை துன்புறுத்த முனைகிறான். பெரும்பான்மை மதத்தை சார்ந்தவன் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை உமிழ்கிறான். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சக மனிதர்களோடு தொடர்பில்லாமல் எவன் ஒருவனாலும் வாழ முடியாது என்கிற எதார்த்த உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். பல நேரங்களில் நாம் யாரை வெறுத்தோமோ, அவர்களின் உதவியையும் கூட கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் பெற்றே வாழ்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பை உமிழும் உயர்சாதிக்காரர்கள் கூட தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டு தான் வாழ்கிறார்கள் என்பது இங்கே கவனிக்க வேண்டியது. இவற்றிற்கிடையில் இரண்டு மனிதர்களுக்கிடையில் உறவை தீர்மானிக்கும் நம்பிக்கை வேர்களை பணம் என்ற சொல் வெகு வேகமாக கொன்று கொண்டு வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய தருணமிது. பணத்தின் மீது தீவிர காதலை கொண்ட ஒருவன், தன்னிடம் இருக்கும் அன்பை, கருணையை, கொள்கையை, மானுட உணர்வை, சமத்துவத்தை, சக மனிதர்களோடு கொண்டிருக்கும் நல்லுறவை இப்படி எல்லாவற்றையும் கொன்று புதைத்துவிடுகிறான் என்பது எதார்த்த உண்மையாக இருக்கிறது. இந்த சமூகத்தில் பணப்பிரச்சனையால் உடைந்த உறவுகள் ஏராளம். அவற்றை காட்ட சான்றுகள் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒருமாதத்தில் தருகிறேன் என்றுகூறி நண்பனிடம் கடன் வாங்கியவன், ஏதோ சூழலில் தரமுடியாமல் போகும்போது, இருவருக்குமான நட்பும், புரிதலும், இணக்கமும், உறவும் உடைந்து நொறுங்கி போகிறது. அதுவரை அவர்களிடம் இருந்த நம்பிக்கை வேரில், கடனாக பெற்ற பணம் வெந்நீரை ஊற்றி பொசுக்கிவிடுகிறது. ‘நான் நண்பர்களுக்கு கடன் கொடுப்பதுமில்லை, கடன் வாங்குவதுமில்லை’ ஏனெனில் ‘பணம் நட்பை உடைத்துவிடும்’ எனக்கூறும் மனிதர்களை வாழ்வில் ஒருமுறையேனும் நாம் சந்தித்து இருப்போம். நம் வாழ்வில் ஒருமுறையாவது யாருக்காவது நாம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத குற்றவுணர்ச்சியை அனுபவித்து இருப்போம். அப்படி குற்றவுணர்ச்சி ஏற்படவில்லையெனில் நம்மிடம் மானுடம் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

தன் தலைவரை பற்றி யார் என்ன சொன்னாலும் கூட, தன் தலைவர் மிகுந்த யோக்கியமானவர் என்று நம்புகிற தொண்டர்களால் தான் அரசியல் கட்சிகள் இயங்கி கொண்டிருக்கின்றன. தலைவர் மீது தீராத நம்பிக்கையை வைத்திருக்கும் தொண்டர்களை, அவர்களின் நம்பிக்கையை அந்த தலைவர் எந்தளவுக்கு காப்பாற்றுகிறாரோ, அதைபொருத்தே அந்த கட்சியின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நிஜத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள், தொண்டர்களின் நம்பிக்கையை கொன்று புதைத்தே வயிறு வளர்க்கிறார்கள் என்பது தான் பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. ஜனநாயக நாட்டில் மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அரசியல் கட்சிகள் மாநாடு, பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி நடத்துவதெல்லாம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கே. மக்களின் நம்பிக்கையை பெற்ற அவர்கள், நாளடைவில் அந்த நம்பிக்கையை காப்பாற்ற தவறும் போது தான் பின்னடைவுகளை சந்திக்கிறார்கள். அரசியல் தலைவர்களுக்கு மட்டுமில்லை, சாமான்ய மனிதர்கள் கூட, தன்னை சுற்றி இருப்பவர்களின் நம்பிக்கையை இழந்து, அவநம்பிக்கையை சம்பாதிக்கும் போது தான் சறுக்கல்களை சந்திக்கிறார்கள். ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்தே, சக மனிதர்கள் தம்மீது கொண்டுள்ள நம்பிக்கையே ஒன்றே. ஆனால் நிஜவாழ்வில் மனிதர்கள், உறவுகளை மேம்படுத்துவதை விட, பணம் சேர்த்துக் கொள்வதிலே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வணிகமயமாகி போன சூழலில் பணம் மனிதர்களுக்கு தேவையானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பணம் மட்டுமே போதுமானதில்லை என்பதையும் மனிதர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அடித்தட்டு மக்களிடம் புகழ்பெற்ற கதையொன்று வழக்கத்தில் உண்டு. நாட்டு மன்னன், மக்கள் மீது அன்பு செலுத்தாமல், பதவி செருக்கோடு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்தானாம். ஒருநாள் அவன் வீட்டில் வளர்ந்த நாய் ஒன்று இறந்துபோனதாம். நாயின் இறப்பு செய்தி கேட்ட அந்நாட்டு மக்கள் அனைவரும் அழுதுபுரண்டு கண்ணீர் வடித்தார்களாம். இதனை கண்ட ராஜா, மக்கள் நம்மீது அளவுகடந்த மதிப்பு வைத்திருப்பதாக எண்ணி மகிழ்ச்சி கொண்டானாம். ஒருநாள் ராஜாவே இறந்து போனபோது, அந்நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்களாம். மன்னரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் நாயின் இறப்புக்கு கண்ணீர் வடித்த மக்கள், கொடுங்கோல மன்னர் இறந்ததை திருவிழாவாக கொண்டாடினார்கள். மன்னரிடம் இருந்த பணமும், பதவியும் அவர்மீது மதிப்பை மக்களிடம் உருவாக்கவில்லை என்பது தான் அந்த கதை நமக்கு சொல்லும் நீதி. கோடி ரூபாய் கொடுத்து காதலை வாங்கமுடியும் என்றால், அது மனிதன் மீதான காதல் அல்ல, பணத்தின் மீதான காதல். பணத்தின் மீதான காதல், பணம் தீர்ந்துபோனதும் வடிந்துபோகும் தன்னியல்பை கொண்டது. ஆனால் மனிதன் மீது கொண்ட காதல் எந்த சூழலிலும் தீர்ந்துபோகாத வல்லமை கொண்டது. சக மனிதர்களின் நம்பிக்கையை பெறுவதைக் காட்டிலும், அந்த நம்பிக்கையை காலத்திற்கும் அழிந்து போகாமல் பாதுகாப்பதே ஆகப்பெரிய சவால். எல்லா மனிதர்களும் சக மனிதர்களின் நம்பிக்கையை பெறுகிறார்கள், ஆனால் கடைசிவரை நம்பிக்கையை காப்பாற்றுகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனித உறவுகளை, நம்பிக்கை வேர்களை சிதைக்கும் பணத்திடமிருந்து மனிதர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது. தங்கள் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவர்களின், தங்கள் உறவுகளுக்கு வேறாய் இருந்தவர்களின் நம்பிக்கையை பேணி பாதுகாப்பதும் மிக மிக அவசியமாகிறது. பணத்தை மையாமாக கொண்ட நட்பும், சுயலாப ஆதாயத்தை அடிநாதமாக கொண்ட பிணைப்பும் மனித சமூகத்திற்கும், அதன் உறவுகளுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியதாக இருப்பதால், பணம் என்ற புள்ளியில் இருந்து விலகி நின்று, நம்பிக்கை வேர்களை பாதுகாப்பது நமது அடிப்படை கடமைகளில் ஒன்றாகும்....

- தமிழன் வேலு

கருத்தியல் ஆலோசனை

நம் ஒவ்வொரு சொல்லும், கருத்தும் வலிமை வாய்ந்தது. வலிமை வாய்ந்த நம் கருத்தை எந்த நேரத்தில், எங்கே பதிவு செய்கிறோம் என்பதை பொறுத்தே அந்த கருத்தின் வலிமை கூடுகிறது. அதேபோல எல்லா மனிதர்களுக்கும் சுயமான சிந்தனையும், அதனையொட்டிய கருத்தும் இருக்கவே செய்கிறது. அடிமுட்டாள் என்று நம்மால் சொல்லப்படுகிறவர்கள் கூட சுயசிந்தனை உடையவர்களே. ஆனால் அவர்களின் சிந்தனை எதனை அடிப்படையாக கொண்டது என்பதிலே அது நல்லவை என்றும், தீயவை என்றும் உருவை பெறுகிறது. எல்லா மனிதர்களும், தனக்கு ஒரு சிக்கல் அல்லது நெருக்கடி ஏற்படும் போது மற்றவர்களிடத்தில் கருத்தியல் ஆலோசனை கேட்க எத்தனிக்கிறார்கள். முந்தைய காலத்தில் நம் தாத்தா, பாட்டி உருவங்களில் வீட்டுக்கொரு ஆலோசகர்கள் இருந்தார்கள். அவர்கள் நம் நலன்களில் அக்கறை கொண்டவர்கள். ஆனால் நகரமயமாதல் விரிந்துவிட்ட இன்றைய சூழலில் நல்லது, கெட்டதுகளை பரிந்துரைப்பது கூட வணிகமாகிவிட்டது என்பது தனிக்கதை. ஆலோசனை கேட்பவர்கள் தம்மைவிட அறிவில், அனுபவத்தில், வயதில் மூத்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள். அப்படி மற்றவர்களின் ஆலோசனையை பெறுகிற எல்லோரும், அந்த ஆலோசனையை செயல்படுத்துகிறார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நமக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும், நம் ஆன்மா தீவிரமான யோசனையில் ஆழ்ந்துவிடும். தீவிர யோசனைக்குப் பின்னர் நம் மனம் ஒரு முடிவையும் கண்டறிந்துவிடும். நமக்கு ஏற்பட்ட பிரச்சனையால் குழப்பத்தில் இருக்கும் நாம், நாம் தேர்ந்தெடுத்திருக்கும் முடிவு சரியா? தவறா? என்பதில் குழப்பமடைந்துவிடும் போதுதான் மற்றவர்களின் குறிப்பாக நம் நண்பர்களின் கருத்தை நாடி செல்கிறோம். நமக்கு கருத்து சொல்லும் ஒருவர் தம், சொந்த வாழ்வின் அனுபவத்தின் மூலமாகவே அல்லது தான் நேரிடையாக கண்ட அனுபவத்தின் மூலமாகவோ ஒரு கருத்தை நமக்கு சொல்வார். நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கும் முடிவையும், நம் நண்பர் நமக்கு சொன்ன கருத்தையும் பொருத்தி பார்த்து அதிலிருந்து நமக்கு உடனடியாக சாதகமான ஒன்றை செயல்படுத்த நாம் எத்தனிக்க தயாராகிவிடுகிறோம். இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று எதுவென்றால், நாம் யாரிடம் ஆலோசனை பெறலாம் என்பதும், நாம் யாருக்கு ஆலோசனை சொல்லலாம் என்பதும் தான்...

நாம் ஆலோசனை கேட்கும் நபர் நேர்மையான, நமக்கு நம்பிக்கையான ஒருவராக இருத்தல் அவசியம். மற்றவர்கள் மீது விருப்பு, வெறுப்பற்ற அன்பை செலுத்தக்கூடியவராகவும், சமூகத்தின் மீது நல்ல பார்வை கொண்டவராகவும், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு அவரின் நேர்மை பாராட்ட தக்கதாகவும் இருக்க வேண்டும். இறுதியாக நம் நலனில் பெறாமை கொள்ளாதவராக இல்லாமல், அக்கறை செலுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். அடுத்ததாக நாம் யாருக்கு ஆலோசனைகளை சொல்லலாம் என்பதில் மிகுந்த கவனம் தேவை. நாம் எல்லோரும் தினந்தோறும் பேசிக்கொண்டே இருக்கிறோம். யாரோ ஒருவருக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அது சரியென்றோ, தவறென்றே நாம் பார்ப்பதில்லை நம் மனதிற்கு சரியென்று பட்டதை சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிரச்சனை என்று நம்மிடம் வருபவர்களுக்கு, நம் வாழ்வின் ஊடாக நமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், நாம் சந்தித்த மனிதர்கள் சொன்ன நிகழ்வுகளையும் தொகுத்து சரியான ஒன்றை பரிசீலிப்போம். நம்மிடம் அறிவுரை கேட்பவர் நம்மீது மதிப்பு கொண்டவரா? என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

மனம் நிறைய அழுக்கு சிந்தனை உடையவர்களும் கூட, மற்றவர்களின் ஆலோசனையை கேட்கத்தான் செய்கிறார்கள். சமூக ஒற்றுமையை சிதைக்கும் அழுக்கு சிந்தனை உடையவர்கள், மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் கூட, தம் மனம் முழுக்க நிறைந்திருக்கும் அழுக்கு சிந்தனைகளையே செயல்படுத்த முனைவார்கள். ஏனெனில் அவர்களின் சிந்தனை முழுவதும் அழுக்காகவே இருக்கும், மற்றவர்களின் அழிவை பற்றியே எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பார்கள். அப்படி நம் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத நபர்களிடம் விவாதம் செய்வதை கூட தவிர்ப்பது நலம். முட்டாள்களோடு விவாதிக்கும் போது நாம் எப்போதும் தோற்றே போவோம். ஏனெனில் அவர்கள் ‘அறிவுப்பூர்வமாக, முட்டாள்தனமான கருத்து ஒன்றை சரியென்று மிக ஆழமாக நம்பிக் கொண்டிருப்பார்கள்’. என்ன விளக்கம் கொடுத்தும் அவர்களின் முடிவை நம்மால் மாற்றவே முடியாது. எல்லாம் எனக்கு தெரியும் என்று மமதையோடு அவர்கள் இருப்பார்கள். மற்றவர்கள் மீது எப்போதும் அலட்சியமான பார்வையை செலுத்துவார்கள். மற்ற எல்லோரை விடவும் நான் தான் உயர்வானவன் என்ற நினைப்போடு எல்லோரையும் அணுகுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் கருத்து சொல்வதையோ, அறிவுரை சொல்வதையே தவிர்த்துவிடுவது நல்லது. அவர்களின் முடிவு எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் கூட, மற்றவர்களின் ஆலோசனையை கேட்பார்களே ஒழிய, அதை செயல்படுத்த துளியும் நினைக்கமாட்டார்கள். அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களோடு நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கிணற்றில் வீசப்பட்ட கல்லுக்கு நிகரானது. அப்படிப்பட்ட மனிதர்களை தவிர்த்து, நம்மை முழுமையாக நம்பி, நம் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பவர்களுக்கு விருப்பு வெறுப்பற்ற அன்போடு, சரியான வாழ்வியல் பாதையை காட்டிடுவோம்....

- தமிழன் வேலு

யோக்கியம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையும், அதற்கு பின் தமிழகத்தில் நிலவிவரும் சூழல்களும் பல்வேறு சிந்தனைகளை உருவாக்குகிறது. தீர்ப்பை, ஒருதரப்பு ஆதரிக்க, மறுதரப்பு மிக தீவிரமாக எதிர்க்கிறது. இரண்டுக்கும் மத்தியில் இன்னொரு தரப்பு, எந்த அரசியல்வாதி ஊழல் செய்யாம இருக்காங்க? யாரு யோக்கியம்? என்ற வாதத்தை முன்வைக்கிறது. “உங்களில் யார் யோக்கியமானவரோ, அவர்களே முதலில் கல்லெறியுங்கள்” என்ற பைபிள் வசனம் நினைவுக்கு அடிக்கடி வந்து போகிறது. எல்லோரும் செய்கின்ற தவறை தானே, நானும் செய்தேன் என்று தைரியமாக மனிதர்கள் பேசும் காலமும் வந்துவிட்டது. ‘ஊரு உலகத்தில நடக்காத தப்பையா செஞ்சுபுட்டேன்’ என எதிர்கேள்வி கேட்டு இயல்பாக தன்னை நியாயப்படுத்துகிறார்கள். எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக எப்படி ஒரு குற்றம் நியாயமாகிவிடும் என்பதை பற்றி யோசிப்பதற்கு நாம் தயாரில்லை. நேர்மையாக வாழவேண்டிய சமூகம், நேர்மையின்மையை, சமூக எதார்த்தக்கூறாக ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கிறது. என்பதையே இது காட்டுகிறது. ஒரு தவறை இன்னொரு தவறை கொண்டு நியாயப்படுத்த இந்த சமூகம் பழகி கொண்டது. அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தள்ளும் ஊழியரோ, வருவாய்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உதவியாளர்களோ லஞ்சம் கேட்பதற்கு தயங்குவதே கிடையாது. உரிமையோடு கேட்கிறார்கள். உயர்மட்ட அதிகாரிகள், அவர்கள் தகுதிக்கேற்ப பெரிய அளவில் செய்யும் முறைகேடுகளால், கடைநிலை ஊழியர்களின் அம்பதுகளும், நூறுகளும் நியாயப்படுத்தப்படுகின்றன. ஒரு அரசியல்வாதி தான் செய்யும் ஊழலால், தனக்கு கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் ஊழலை அனுமதிக்கிறார். கீழ்மட்ட தொண்டர்களோ, தனக்கு மேலிருப்பவர்களுக்கு கொடுப்பதற்காக, கடைகளில், நிறுவனங்களில் வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். இப்படியாக மேலிருப்பவரின் தவறை காட்டி, கீழிருப்பவர்களும், தன் சுயத்திற்காக மேலிருப்பவர்கள், கீழிருப்பவர்களின் தவறுகளை, அனுமதிப்பதும் எதார்த்த நிகழ்வாகிவிட்டது. சின்ன, சின்ன தவறுகளை அனுமதிக்க, அல்லது மன்னிக்க முயலும் போது, இந்த சமூகம் தன்னியல்பாக தன் நேர்மையை இழந்துகொண்டே வருகிறது என்பதை நாம் விரைவில் புரிந்துகொள்ளாவிட்டால், நேர்மையை புத்தகங்களிலும், வரலாறுகளிலும் மட்டுமே தேடவேண்டிய நிலைமை வரலாம். எல்லோரும் சரியாக இருந்தால், நானும் சரியாக இருப்பேன் என்று நினைக்காமல், என் மனசாட்சிப்படி நான் சரியாக இருக்கிறேன் என்று எல்லோரும் நினைத்துவிட்டாலே, போதும் கடுமையான சட்டங்களும் வேண்டாம், கடுங்காவல் தண்டனையும் வேண்டாம்...

-தமிழன்வேலு

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : சிறையில் ஜெ.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு அரசியலாக்கப்பட்டு வருகிறது. அதோடு ஊழல் செய்தவருக்கு ஆதரவாக அனுதாப அலையை உருவாக்கும் முயற்சியும் சந்தடி சாக்கில் சத்தமில்லாமல் நடந்துகொண்டு வருகிறது. இந்த தீர்ப்பு ராஜபக்சேவின் சதி என்கிறார்கள், கன்னடர்களின் பழிவாங்கும் நோக்கம் என்கிறார்கள். மக்கள் சொத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு உலகில் எல்லா நாடுகளிலும் தண்டனை தான் வழங்குவார்கள். அதே நடைமுறைதான் இப்போதும் நடந்திருக்கிறது. இதில் சதி செய்வதற்கோ, பழிவாங்குவதற்கோ என்ன இருக்கிறது? தவறு செய்தவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது, தான் நிரபராதி என்று நிரூபிப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரியும் ஓலமும்? படிப்பறிவற்ற, ஆர்வக்கோளாறு தொண்டர்கள் அன்புமிகுதியில் ஆர்ப்பாட்டம் செய்வதை கூட பொறுத்துக் கொள்ளலாம். படித்த அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாக்காரர்கள் செய்யும் அலப்பரைகள் தமிழர்களை உலகளவில் கோமாளிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது.

நல்லாட்சி வழங்கினார், தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார் என்பன போன்ற சப்பை வாதங்களை முன்வைக்கிறார்கள். நல்லாட்சி செய்வதற்கும், தமிழர்களின் உரிமைகளை பெற்று தருவதற்கும் தானே அவருக்கு முதல் அமைச்சர் என்ற உயரிய பொறுப்பை ஏழு கோடி தமிழர்களும் கொடுத்தார்கள். "நல்லாட்சி செய்வதும், உரிமைகளுக்காக போராடுவதும் ஒரு மாநில முதல்வரின் தலையாய கடமை தானே ஒழிய, வழக்கில் இருந்து விடுதலை செய்வதற்கான சிறப்பு தகுதிகள் அல்ல" என்பதை அந்த அபத்தவாதிகள் எப்போது புரிந்து கொள்வார்கள்? மிக்சி கொடுத்தார், பேன் கொடுத்தார், கிரைண்டர் கொடுத்தார், லேப்டாப் கொடுத்தார் என்கிறார்கள். எல்லாம் கொடுத்தார். யார் பணத்தில் இருந்து கொடுத்தார். மக்கள் வரிப்பணத்தில் இருந்துதானே. இப்படி அபத்தங்களை எல்லாம் கேட்கும் போது சதுரங்கவேட்டை படத்தில் வரும் காட்சி தான் நினைவுக்கு வருகிறது. “ஏழையாக இருந்து நல்லவனாக இருப்பதற்கும், பணக்காரனாக இருந்து நல்லவனாக இருப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு சார். மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில் கருப்பு கண்ணாடியும், தையல் மிஷினும் நானும் கொடுத்திருக்கிறேன்” என்று சொல்லி தன் தரப்பு குற்றங்களை நியாயப்படுத்துவார் கதாநாயகன்.

நூறு கோடியை கொள்ளையடித்த ஒருவன் பத்து கோடியில் மக்களுக்கு வேட்டி சேலை வாங்கி கொடுத்துவிட்டால், கொள்ளையடித்தவனை மன்னித்து விடுவோமா?

 ******
ஒரு ஊழல்வாதிக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் தீக்குளிக்கிறார்கள், கல்லூரி மாணவர்கள் போராடுகிறார்கள் என்றால் இந்த நாட்டின் கல்வித்தரம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

******

தீர்ப்பை படிச்சி பார்த்த சட்ட வல்லுனர்கள் எல்லாம் மிரண்டு போய் கிடக்காங்க. "நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி, மூளை இதுல எல்லாத்துலயும் 'நீதி தாகம்' கொண்ட ஒருவரால் மட்டும் தான் இப்படி ஒரு தீர்ப்பை சொல்ல முடியும்"...

******

உண்மையில், ஜெயலலிதாவுக்கு இந்த தண்டனை ஏன் வழங்கப்பட்து என்ற விவரம் கிராமப்புற மக்களில் பெரும்பாலனவர்களுக்கு தெரியவில்லை. எதோ அநியாயம் நடந்துவிட்டதை போல முழிக்கிறார்கள். அந்த அளவுக்கு கடந்த ஒருவாரமாக ஊடகங்கள் அவர்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன. "பத்திரிக்கைகாரன் எல்லோரும் கவர் வாங்கமாட்டேன்" என்று உறுதியை எடுத்துக்கொண்டாலே போதும், நேர்மையான செய்திகள் மக்களை சென்றடைவதற்கு எந்த தடையும் இருக்காது....

ஏன் இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டிய எதிர்கட்சிகள் எல்லோரும் தொடை நடுங்கி கிடக்கிறார்கள்...

- தீர்ப்புக்குப் பின் முகநூளில் எழுதியது...