ஒரு விதை செடியாவதற்கும், ஒரு செடி மரமாவதற்கும் அந்த மரம் இந்த மண்ணில்
நிலைகொண்டு வாழ்வதற்கும், அந்த மரம் பூத்து குலுங்குவதற்கும், காய் கனிகளை
கொடுத்து புத்துயிரோடு வாழ்வதற்கும் வேர்கள் மிக முக்கியமாகிறது. நீரின்றி
அமையாது உலகு என்பதை போல, வேரின்றி அமையாது உயிர்கள் என்றுகூட சொல்லலாம்.
மரத்திற்கும், மண்ணுக்குமான உறவை தீர்மானிப்பதும் வேர்களே. மனிதன் உயிர்வாழ
இதயம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஒரு
மரம் உயிர்வாழ வேர்கள் முக்கியம். ஆகவே மரம், செடி, கொடிகளின் இதயம்
வேர்கள் என்றே சொல்லலாம். மனிதனுக்கு இதயத்தை போல, மரம், செடி, கொடிகளுக்கு
வேர்களை போல இரண்டு மனிதர்களின் அல்லது இரண்டு சமூகத்தின் நட்புறவுக்கு
இதயமாய், வேர்களாய் இருப்பது நம்பிக்கை. நம்பிக்கை என்ற வேர்களால் மட்டுமே
உலகில் மானுடம் தழைத்திருக்கிறது. நம்பிக்கை என்ற வேர்களே மனிதர்களை
வழிநடத்துகிறது என்றுகூட சொல்லலாம். நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் ஏதோவொரு
நம்பிக்கையோடு தான் கண்விழிக்கிறோம். மனித வாழ்வில் நம்பிக்கை வேர்கள்
இல்லாத இடமே கிடையாது. ஆண் – பெண் காதலில், திருமண உறவில், இரண்டு
மனிதர்களுக்கான நட்பில், கடவுள் பக்தியில், அரசு இயக்கத்தில், அரசியல்
கட்சி வளர்ச்சியில் இப்படியாக மனித அன்றாட வாழ்வியலோடு எங்கும்,
எல்லாமுமாய் நீக்கமற நிறைந்திருக்கிறது நம்பிக்கை வேர்கள். தான்
எல்லோராலும் நேசிக்கப்படுகிறேன் என்று நம்புகிற மனிதன் மிக ஆரோக்கியமாக
இருப்பதாகவும், தான் யாராலும் நேசிக்கப்படவில்லை, தன்னை யாருக்கும்
பிடிக்கவில்லை என்று நம்புகிற மனிதன் ஆரோக்கியமற்றவனாக இருப்பதாகவும்
உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
மனித வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் நம்பிக்கை வேர்களை இந்த சமூகமும், சமூக காரணிகளும் எப்படி சிதைத்து வருகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சாதி, மதம், இனம், வர்க்கம் போன்றவைகள் மனித உறவுகளின் நம்பிக்கை வேர்களில் வெந்நீர் பாய்ச்சும் ஆபத்தான காரணிகளாகும். தன் சாதி தான் உயர்ந்த சாதி என்று நம்புகிறவன், தன்னை விட தாழ்ந்த சாதியில் பிறந்தவனை துன்புறுத்த முனைகிறான். பெரும்பான்மை மதத்தை சார்ந்தவன் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை உமிழ்கிறான். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சக மனிதர்களோடு தொடர்பில்லாமல் எவன் ஒருவனாலும் வாழ முடியாது என்கிற எதார்த்த உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். பல நேரங்களில் நாம் யாரை வெறுத்தோமோ, அவர்களின் உதவியையும் கூட கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் பெற்றே வாழ்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பை உமிழும் உயர்சாதிக்காரர்கள் கூட தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டு தான் வாழ்கிறார்கள் என்பது இங்கே கவனிக்க வேண்டியது. இவற்றிற்கிடையில் இரண்டு மனிதர்களுக்கிடையில் உறவை தீர்மானிக்கும் நம்பிக்கை வேர்களை பணம் என்ற சொல் வெகு வேகமாக கொன்று கொண்டு வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய தருணமிது. பணத்தின் மீது தீவிர காதலை கொண்ட ஒருவன், தன்னிடம் இருக்கும் அன்பை, கருணையை, கொள்கையை, மானுட உணர்வை, சமத்துவத்தை, சக மனிதர்களோடு கொண்டிருக்கும் நல்லுறவை இப்படி எல்லாவற்றையும் கொன்று புதைத்துவிடுகிறான் என்பது எதார்த்த உண்மையாக இருக்கிறது. இந்த சமூகத்தில் பணப்பிரச்சனையால் உடைந்த உறவுகள் ஏராளம். அவற்றை காட்ட சான்றுகள் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒருமாதத்தில் தருகிறேன் என்றுகூறி நண்பனிடம் கடன் வாங்கியவன், ஏதோ சூழலில் தரமுடியாமல் போகும்போது, இருவருக்குமான நட்பும், புரிதலும், இணக்கமும், உறவும் உடைந்து நொறுங்கி போகிறது. அதுவரை அவர்களிடம் இருந்த நம்பிக்கை வேரில், கடனாக பெற்ற பணம் வெந்நீரை ஊற்றி பொசுக்கிவிடுகிறது. ‘நான் நண்பர்களுக்கு கடன் கொடுப்பதுமில்லை, கடன் வாங்குவதுமில்லை’ ஏனெனில் ‘பணம் நட்பை உடைத்துவிடும்’ எனக்கூறும் மனிதர்களை வாழ்வில் ஒருமுறையேனும் நாம் சந்தித்து இருப்போம். நம் வாழ்வில் ஒருமுறையாவது யாருக்காவது நாம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத குற்றவுணர்ச்சியை அனுபவித்து இருப்போம். அப்படி குற்றவுணர்ச்சி ஏற்படவில்லையெனில் நம்மிடம் மானுடம் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
தன் தலைவரை பற்றி யார் என்ன சொன்னாலும் கூட, தன் தலைவர் மிகுந்த யோக்கியமானவர் என்று நம்புகிற தொண்டர்களால் தான் அரசியல் கட்சிகள் இயங்கி கொண்டிருக்கின்றன. தலைவர் மீது தீராத நம்பிக்கையை வைத்திருக்கும் தொண்டர்களை, அவர்களின் நம்பிக்கையை அந்த தலைவர் எந்தளவுக்கு காப்பாற்றுகிறாரோ, அதைபொருத்தே அந்த கட்சியின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நிஜத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள், தொண்டர்களின் நம்பிக்கையை கொன்று புதைத்தே வயிறு வளர்க்கிறார்கள் என்பது தான் பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. ஜனநாயக நாட்டில் மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அரசியல் கட்சிகள் மாநாடு, பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி நடத்துவதெல்லாம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கே. மக்களின் நம்பிக்கையை பெற்ற அவர்கள், நாளடைவில் அந்த நம்பிக்கையை காப்பாற்ற தவறும் போது தான் பின்னடைவுகளை சந்திக்கிறார்கள். அரசியல் தலைவர்களுக்கு மட்டுமில்லை, சாமான்ய மனிதர்கள் கூட, தன்னை சுற்றி இருப்பவர்களின் நம்பிக்கையை இழந்து, அவநம்பிக்கையை சம்பாதிக்கும் போது தான் சறுக்கல்களை சந்திக்கிறார்கள். ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்தே, சக மனிதர்கள் தம்மீது கொண்டுள்ள நம்பிக்கையே ஒன்றே. ஆனால் நிஜவாழ்வில் மனிதர்கள், உறவுகளை மேம்படுத்துவதை விட, பணம் சேர்த்துக் கொள்வதிலே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வணிகமயமாகி போன சூழலில் பணம் மனிதர்களுக்கு தேவையானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பணம் மட்டுமே போதுமானதில்லை என்பதையும் மனிதர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அடித்தட்டு மக்களிடம் புகழ்பெற்ற கதையொன்று வழக்கத்தில் உண்டு. நாட்டு மன்னன், மக்கள் மீது அன்பு செலுத்தாமல், பதவி செருக்கோடு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்தானாம். ஒருநாள் அவன் வீட்டில் வளர்ந்த நாய் ஒன்று இறந்துபோனதாம். நாயின் இறப்பு செய்தி கேட்ட அந்நாட்டு மக்கள் அனைவரும் அழுதுபுரண்டு கண்ணீர் வடித்தார்களாம். இதனை கண்ட ராஜா, மக்கள் நம்மீது அளவுகடந்த மதிப்பு வைத்திருப்பதாக எண்ணி மகிழ்ச்சி கொண்டானாம். ஒருநாள் ராஜாவே இறந்து போனபோது, அந்நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்களாம். மன்னரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் நாயின் இறப்புக்கு கண்ணீர் வடித்த மக்கள், கொடுங்கோல மன்னர் இறந்ததை திருவிழாவாக கொண்டாடினார்கள். மன்னரிடம் இருந்த பணமும், பதவியும் அவர்மீது மதிப்பை மக்களிடம் உருவாக்கவில்லை என்பது தான் அந்த கதை நமக்கு சொல்லும் நீதி. கோடி ரூபாய் கொடுத்து காதலை வாங்கமுடியும் என்றால், அது மனிதன் மீதான காதல் அல்ல, பணத்தின் மீதான காதல். பணத்தின் மீதான காதல், பணம் தீர்ந்துபோனதும் வடிந்துபோகும் தன்னியல்பை கொண்டது. ஆனால் மனிதன் மீது கொண்ட காதல் எந்த சூழலிலும் தீர்ந்துபோகாத வல்லமை கொண்டது. சக மனிதர்களின் நம்பிக்கையை பெறுவதைக் காட்டிலும், அந்த நம்பிக்கையை காலத்திற்கும் அழிந்து போகாமல் பாதுகாப்பதே ஆகப்பெரிய சவால். எல்லா மனிதர்களும் சக மனிதர்களின் நம்பிக்கையை பெறுகிறார்கள், ஆனால் கடைசிவரை நம்பிக்கையை காப்பாற்றுகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனித உறவுகளை, நம்பிக்கை வேர்களை சிதைக்கும் பணத்திடமிருந்து மனிதர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது. தங்கள் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவர்களின், தங்கள் உறவுகளுக்கு வேறாய் இருந்தவர்களின் நம்பிக்கையை பேணி பாதுகாப்பதும் மிக மிக அவசியமாகிறது. பணத்தை மையாமாக கொண்ட நட்பும், சுயலாப ஆதாயத்தை அடிநாதமாக கொண்ட பிணைப்பும் மனித சமூகத்திற்கும், அதன் உறவுகளுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியதாக இருப்பதால், பணம் என்ற புள்ளியில் இருந்து விலகி நின்று, நம்பிக்கை வேர்களை பாதுகாப்பது நமது அடிப்படை கடமைகளில் ஒன்றாகும்....
- தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக