திங்கள், 17 டிசம்பர், 2012

புதிய தலைமுறையில் தவறிய கடிதம் !


             புதிய தலைமுறை ஆசிரியர் அவர்களே  வணக்கம் ! நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், விரும்புகிறேன். என் கடந்த கடித சந்திப்பில் கூறியது போல தங்களின் சமூக விழிப்புணர்வு பணியை பெரிதும் மதிக்கிறேன். அது மேலும் மேலும் செழுமையடைய வேண்டும் என்று விரும்புகிறேன். பல ஆண்டுகளாக தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் வார இதழோ, அல்லது புலனாய்வு இதழோ வாங்கி பிரித்தவுடன் நடுப்பக்கத்தில் அரை நிர்வாண காட்சிகளும், சினிமா கிசுகிசுக்களும் நிறைந்து இருக்கும்; அதை எங்களின் அனுமதியே இல்லாமல் எங்கள் மூலையில் செலுத்தி ஆதிக்கம் செய்து கொண்டு இருந்தார்கள். அந்த ஆதிக்கத்தை உடைத்து, நடுப்பக்கம் என்பது நிர்வாணத்திற்கு அல்ல, நம்பிக்கையின் அஸ்திவாரம் என்று எங்களுக்கு நம்பிக்கை செலுத்தியவர் நீங்கள்; அந்த நடுப்பக்கத்தை ஆதரித்து  தான் உங்களின் நடுநிலைக்கு நற்சான்றிதழ் கொடுத்தோம். அந்த நடுநிலை இவ்வளவு சீக்கிரம் சரிந்துவிடும் என்பதை நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

           டெங்கு காய்ச்சலைப் பற்றி பல்வேறு தரப்பு நாளிதழ், வார இதழ்கள் அச்சுறுத்திக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் மட்டும்தான் அச்சம் தவிர் என்றீர்; ஆனால் எங்கள்  அச்சம் எல்லாம் உங்கள் குரல் யாருக்கானது என்பது தான் ! என்ன அச்சம் என்று குழம்புகிறீர்களா? " எங்களது பார்க்கவ குல (உடையார்) பெண்களுக்கு திருமாவளவன் தலைமையிலான பறையர் இன இளைஞர்களால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. அரியலூர், பெரம்பலூர்,கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் உடையார் இனப் பெண்களை பறையர் ஆண்கள் திட்டமிட்டு நாடகத் திருமணம் செய்து ஏமாற்றுகின்றனர். இவர்கள் அருந்ததியர் இனப் பெண்களை திருமணம் முடிப்பதில்லை !" இப்படிப்பட்ட சாதிய வன்மம் நிறைந்த, பிற்போக்குத்தனமான கருத்தை வெளியிட்டு இருப்பது யார் என்பது உங்களுக்கே தெரியும் இருந்தாலும் சொல்கிறேன், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன முதலாளியும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், புதிய தலைமுறை, தொலைகாட்சி,   புதிய தலைமுறை வார இதழ்,  புதிய தலைமுறை கல்வி வார இதழ் முதலாளியுமான  பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்கள் தான்.

           தருமபுரி கலவரத்தை விமர்சித்து காதல் திருமணம் மட்டும் தான் பிரச்சனையா? என்று தலைப்பிட்டு பல்வேறு தரப்பினரின் கருத்தை பதிவு செய்த, புதிய தலைமுறை நடுநிலை நாளேட்டுக்கு நன்றி !. ஆனால்  அதேவேளையில்  டிசம்பர் 2 ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தலைமையில் 48 லெட்டர் பேட் சாதி சங்கங்களின் கூட்டத்தை கண்டிக்க மனமில்லையோ என்றுதான் தோன்றுகிறது. தருமபுரி கலவரம் கண்டிக்க கூடியது தான், ஆனால் அதேவேளையில் இந்த தலித்துகளுக்கு எதிரான அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களின் ஒருங்கிணைப்பு இன்னும் ஆயிரம் தருபுரிகளை உருவாக்க காத்திருக்கிறது என்பதை உணரவில்லையா? உணர்ந்து நமக்கென்ன என்று இருந்து விட்டீர்களா? இது சாதிப் பாசமா? இல்லை முதலாளி விசுவாசமா? என்பதை புதிய  தலைமுறை விளக்கும் என்று நம்புகிறேன். இதற்க்கு ஆசிரியர் அவர்கள் பதில் வைத்திருப்பார், புதிய தலைமுறை அரசியல் விமர்சன இதழ் அல்ல; சமூக விழிப்புணர்வு இதழ் என்று! 

    சாதிய வன்முறைகளை கண்டிக்காமல், சாதியத்தை எதிர்க்காமல், சாதியத்தை வேரறுக்காமல் வேறு எந்த சமூக மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பதை தாங்களே அறிவீர்கள். வெறும் 19 சதவிகிதம் மட்டுமே உள்ள தலித்துகளுக்கு எதிராக பெரும்பான்மையாக உள்ள 81 சதவிகிதம் சாதி இந்துக்களை ஏவி விடுவது என்பது எவ்வளவுப் பெரிய கொடூரம்! எவ்வளவுப் பெரிய ஆபத்து!! எவ்வளவுப் பெரிய அநியாயம் !! என்பதும் தாங்கள் அறிந்ததே ! ஒருவேளை அந்த கூட்டத்திலே திரு.பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் புதிய தலைமுறை தம் வாளை சுழற்றி இருக்குமோ என்னவோ?

          ஒரு தனி நபரின் அல்லது ஒரு இயக்கத்தின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை தாங்கி பிடிக்க இரண்டு  யுக்திகளை கையாளலாம்; ஒன்று அவர்களின் செயல்பாடுகளை ஆதரித்துப் பேசுவது, அதைதான் சன் நியூஸ், கலைஞர் நியூஸ், ஜெயா டிவி, கேப்டன் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்கள் செய்கின்றன. மற்றொன்று அவர்களின் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் அமைதி காத்துகொண்டே,  அவர்களை தவிர மற்ற அனைவரையும் விமர்சித்து பிரச்சாரம் செய்வது இரண்டாமாவதை தான் புதிய தலைமுறை செய்கிறது. முதலாமாவது எல்லோரையும் முகம் சுளிக்க வைக்கும்; இரண்டாமாவது செயல் தந்திரம் என்று சொல்லலாம்.முதலாமாவது முகம் சுளிக்க வைத்தாலும் மக்களை அது எந்த விதத்திலும் பாதிக்க போவதில்லை; நம்புகிறவர்கள் நம்பலாம்; இல்லை என்றால் தவிர்த்து விடலாம்! ஆனால் இரண்டாமாவது நம்பிக்கை துரோகம்!  

          பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் என்கிற அவர்கள் இதற்க்கு முன்பு கூட, அதாவது புதுக்கோட்டை இடைத்தேர்தல் நேரத்தில் விருத்தாசலத்தில் பார்க்கவ குலத்தவர்கள் அனைவரும் புதுக்கோட்டையில் நம் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பாரிவேந்தர் என்று பெயர் வைத்ததற்காக கொதித்தெழுந்த புதிய தலைமுறைக்கு இதை கண்டிக்க மனமில்லை ஏனோ? அம்பேத்கர் கார்டூன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பியதற்கு அய்யய்யோ கருத்துரிமையின் குரல்வளையை திருகுகிரார்களே என்று கோபம் கொந்தளிக்க தலையங்கம் தீட்டிய புதியதலைமுறைக்கு  தலித்துகளுக்கு எதிராக அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களை ஒருங்கிணைத்ததை ஏன் கண்டித்து தலையங்கம் தீட்ட மனமில்லை? அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதித்தவுடன் ஆஹா மகிழ்ச்சி! என்று வரவேற்று தலையங்கம் தீட்டிய புதிய தலைமுறைக்கு, தலித்துகளுக்கு எதிராக அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களை ஒருங்கிணைத்ததை ஏன் கண்டித்து தலையங்கம் தீட்ட மனமில்லை? 1.5 லட்சம் தமிழர்களை கன்று குவித்த இனக்குற்றவாளி ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து லயோலா அருகே அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவை ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று கேட்க முடிந்த புதிய தலைமுறைக்கு, தலித்துகளுக்கு எதிராக அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களை ஒருங்கிணைத்ததை ஏன் கண்டிக்க மனம் வரவில்லை? 

        என் நண்பன் என்னிடம் அடிக்கடி சொல்வார் " நீ வெளி உலகத்தை பார்க்க ஆசைபட்டால் முதலில் உன் வீட்டு அறையை முழுதும் சுற்றி பார்த்துவிட்டு பிறகு ஜன்னல், கதவுகளை திற" என்று. அதையே இன்று நான் புதிய தலைமுறைக்கும் சொல்கிறேன். கடைசியாக தோழர் இளந்தமிழன் அவர்கள், கொள்கைவீரர் கலைஞர் அவர்களுக்கு என்று தலைப்பிட்டு தபாலில் தவறிய கடிதம் எழுதி "காகித பூ நாடகமா? இல்லை இதுதான் உண்மையா?" என்று கேள்வியை எழுப்பி இருந்தார். அதையே இன்று உங்களிடம் நானும் கேட்கிறேன், உங்களின் நடுப்பக்கம் தான் உண்மையா? இல்ல இந்த மௌனம் தான் உண்மையா? உங்களின் நடுப்பக்கம் யாருக்கானது? இளைய தலைமுறையான நாளைய தமிழகத்திற்கா?  இல்லை புதிய தலைமுறையின் உரிமையாளர் திரு. பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்களுக்கா? பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்களை ஏன் விமர்சிக்கவில்லை என்று மற்ற பத்திரிக்கைகளை நான் கேட்கவில்லை; உங்களை மட்டும் தான் கேட்கிறேன் ! ஏன்னா நீங்கதான் நடுநிலை சமூக விழிப்புணர்வு வார இதழாச்சே !!!

அன்புடன்... 
அங்கனூர் தமிழன்வேலு

2 கருத்துகள்: