செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

நாஞ்சில் சம்பத் அவர்களே! யாருக்கு யார் பல்லக்கு தூக்குவது?


நேற்றைக்கு ஒன்று; இன்றைக்கு ஒன்று; நாளைக்கு மற்றொன்று; என்று தான்தோன்றி தனமாக வாய் புளித்ததா? மாங்காய் புளித்ததா? என்று கூட தெரியாமல் பேசிவரும் நாஞ்சில் சம்பத் அவர்கள் திருமாவளவனை விமர்சித்திருப்பது வேடிக்கையானது! இயக்குனர் சீமான் அவர்களிடம் மூக்கறுபட்ட சம்பத் அவர்கள் இன்று சிறுத்தைகளிடம் மோதுவது விஷமத்தனமானது ! கிட்டத்தட்ட இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களும், நாஞ்சில் சம்பத் அவர்களும் ஒன்றுதானோ என்று எண்ணத்தோன்றுகிறது. இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் சொந்த கட்சிக்காரர்களையே விமர்சிப்பார். சம்பத் அவர்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் எல்லோரையும் விமர்சிக்கிறார். இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

கிட்டத்தட்ட   15 ஆண்டுகாலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்த பழ.நெடுமாறன் அவர்கள் 2004 ஆம் ஆண்டு தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதைக் கண்டிக்க துணிவில்லாத சம்பத் அவர்கள் தான் இன்று திருமாவளவனை விமர்சித்திருக்கிறார். அப்போதும் ஈழத்திலே போர் நடந்து கொண்டிருந்தது, அப்போது மட்டுமல்ல எப்போதும் காங்கிரஸ் இலங்கைக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறது. அப்போதும் அங்கே ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் தி.மு.க வை ஆதரித்த பழ. நெடுமாறன் முடிவு சரியானது என்று சொல்கிறாரா சம்பத்? 2004 முதல் 2009 வரை மத்திய காங்கிரஸ் அரசில் பங்கு பெற்று அத்துனை அதிகாரத்தையும் சுவைத்துக் கொண்டிருந்த பா.ம.க. வை விமர்சிக்க மனமில்லாத சம்பத் அவர்கள் தான் திருமாவையும், சிறுத்தைகளையும் விமர்சிக்கிறார். அப்போதும் ஈழத்திலே போர் நடந்து கொண்டிருந்தது, அப்போதும் அங்கே ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது பா.ம.க எடுத்த நிலைப்பாடு சரி என்று வக்காலத்து வாங்குகிறாரா சம்பத்? ஈழம் எரிந்து கொண்டிருந்தது, மக்கள் அலறிக் கொண்டு இருந்தார்கள், ரத்தம் ஓடிக்கொண்டு இருந்தது, கொத்துக் குண்டுகள் எம் மக்களை தாக்கி கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அப்போது இங்கே ஜெயலலிதாவிடம் தேர்தல் பேரம் செய்து கொண்டிருந்த வைகோ தான் 2011யில் தன் கட்சிக்கு ஜெயலலிதா போதுமான இடங்களை ஒதுக்கவில்லை என்று தேர்தல் புறக்கணிப்பு செய்தார். இதை சந்தர்ப்பவாத அரசியல் என்று சொல்லாமல் வேறு என்னவென்று  சொல்ல முடியும்? ஏன் இன்று தன் கட்சிக்காக தேர்தல் புறக்கணிப்பு செய்த வைகோ ஏன் ஈழத்திற்காக தேர்தலை புறக்கணித்து விட்டு போராட முன்வரவில்லை என்று சம்பத் கண்டித்து இருந்தால் அவரது நடுநிலையை, நேர்மையை பாராட்டி இருக்கலாம். அப்போது வாய்மூடி மௌனித்துக் கிடந்த சம்பத் இன்று வாயடிப்பது எந்த விதத்தில் நேர்மையாக இருக்க முடியும்? தமிழ், தமிழினம் வாயடிக்கும் தமிழ் தேசியவாதிகள் தமிழகத்தில் நடக்கும் சாதிய அடக்குமுறைகளை கண்டிப்பத்தில்லை, அதைக்கண்டு சம்பத் கண்டனம் தெரிவித்து இருந்தால் அவரது உணர்வு உண்மையாக இருக்கிறது, உணமையான போராளி என்று பாராட்டி இருக்கலாம். அப்போது வாய்மூடி மௌனித்துக் கிடந்த சம்பத் இன்று வாய் சவடால் விடுவது  எந்த விதத்தில் உண்மையான உணர்வாக  இருக்க முடியும்? தமிழ் உணர்வாளர்களை எல்லோரையும் ஒன்று திரட்டி ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் ஈழம் என்ற சொல்லைக்கூட விரும்பாத இடதுசாரிகளை உள்ளே அரவணைத்துக் கொள்ள இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் மாற்றி சமரசம் செய்துக் கொண்ட பழ.நெடுமாறன் அவர்களை ஏன் கண்டிக்க முன்வரவில்லை? தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடி தனி அணி கட்டவேண்டும் என்று திருமாவளவன் எடுத்த முயற்ச்சியை ஏன் பாராட்ட முன்வரவில்லை? அந்த நேரத்திலும் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் உறுதியாய் இருக்கிறோம் என்று தானே அண்ணன் வைகோ அவர்கள் சொன்னார். பிறகு  ஒன்று படுவோம், ஒன்று படுவோம் ஒன்று கூறி முயற்சி எடுத்து பார்த்து அது தோல்வியில் முடிந்த பின் தானே ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே, ஆளும் கட்சிக்கு நெருக்கடியை கொடுப்போம், ஆளும் கட்சியை எதிர்த்து களமாடுவோம் வாருங்கள் இணைந்து போராடுவோம், சேர்ந்து போராடுவோம் என்று கத்தி கதறி பார்த்து விட்டு தானே மறைமலை நகரில் சாகத் துணிந்தார், அங்கு அங்கு ஏன் வைகோ வரவில்லை? அந்த போராட்டத்தில் 360 சிறுத்தைகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். இன்னமும் 36 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே இருக்கிறார்கள்... ஏன் அங்கு வந்து ஆதரவை பதிவு செய்தால் என்ன? அதை பயன்படுத்தி இந்தியாவையே உலுக்கி இருக்கலாமே? முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை கேள்வி கேட்க முடிந்த வைகோவால் ஜெயலலிதாவை எதிர்க்க முடியவில்லையே.... அந்த மேடைக்கு வந்தால் ஜெயலலிதா உங்களை அரசியலை விட்டே விரட்டிவிடுவாரா? இல்லை உங்கள் சொத்தை எல்லாம் பிடுங்கி கொள்வாரா? இதை என்றைக்காவது அண்ணன் வைகோவிடம் நீங்கள் கேட்டதுண்டா? செப்டம்பர்15, 2007  அன்று  ஈழத்தமிழர்களுக்காக அய்யா நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது சென்று ஆதரவிளித்த அண்ணன் வைகோ, டிசம்பர் 19, 2010 அன்று ஆந்திர மக்களின் பிரச்சனைக்காக சந்திரபாபு அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது ஓடோடி சென்று ஆதரவளித்த அண்ணன் வைகோ, சனவரி 19, 2009 மறைமலைநகரில் சாகும் உண்ணாவிரதம் என்று அறிவித்து நான்கு நாட்கள் வரை போராடிய திருமாவளவனுக்கு ஏன் ஆதரவு அளிக்கவில்லை என்று வைகோவிடம் கேட்டதுண்டா? காஞ்சிபுரத்தில் சகோதரி செங்கொடி நினைவு நிகழ்ச்சியில் தலைவர் திருமா பேசும்போது உங்களுக்கு நூறு அடி பின்னால் நின்று களப்பணி ஆற்றத்தயார் என்று அறிவித்தாரே அப்போதும் வைகோ மௌனம் மட்டுமே காத்தாரே அதைப்பற்றி வைகோவிடம் கேட்டதுண்டா? கண்டித்ததுடா? தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் அதி,மு.க வுக்கு ஆதரவாக இருந்த பழ. நெடுமாறன் அவர்களோடு அதி,மு.க வுக்கு அணியில்  இருந்த அண்ணன் வைகோ அவர்களோடு, அதி,மு.க வுக்கு போக  இருந்த ராமதாஸ் அவர்களோடு, அதி,மு.க வுக்கு ஆதரவாக இருந்த அய்யா தா. பாண்டியன்  அவர்களோடு, அதி,மு.க வுக்கு எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்த எம். நடராசன் அவர்களோடு கூட்டணியைப் பற்றி கவலைப்படாமல் அரசியல் ஆதாயம் தேடாமல் கைகோர்த்து ஆறுமாதம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் களப்பணியாற்றிய திருமாவளவனை பற்றி என்றைக்காவது பேசியதுண்டா? 

திருமாவளவன் கருணாநிதிக்கு பல்லக்கு தூக்குகிறார்; அவரை புகழ்ந்து பேசினால் இவருக்கு பிழைப்பு நடக்கும் என்று பேசியுள்ள அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களே அண்ணன் வைகோ அவர்கள், கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி பல்லக்கு தூக்கி, வெண்சாமரம் வீசிய கதை சொல்கிறேன். அடுத்த பேட்டியில் அதையும் சொல்லுங்கள்.

கருணாநிதிக்கு  அவர்களுக்கு பல்லக்கு தூக்கிய வைகோ :

கருணாநிதி   அவர்களோடும், தி.மு.க வோடும் முரண்பட்டு பிரியும் நிலையில் இருந்த வைகோ அவர்கள் ஈழத்திற்கு கள்ளத் தோணி  ஏறி செல்லும் போது எழுதிய கடிதம் இதோ :
------------------------------------------------------------------------------------------------------------------------------
05-02-1989
என் உயிரினும் மேலான சக்தியாய் இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காமல் இருந்து
என்னை இயக்கி வரும் தலைவர் அண்ணன் முதல்வர் அவர்களின் பாதங்களில் இந்த 
மடலை சமர்ப்பிக்கிறேன்..!

கடுகளவுகூட வருத்தமும், கோபமும் என் மீது எந்தக் கட்டத்திலும் ஏற்படாத வண்ணம் பயம் 
கலந்த பக்தியுடன் தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பணியாற்றி வரும் நான், பல 
இரவிலும், பகலிலும் ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவின் விளைவாக நான் 
எழுதிய இக்கடிதம் தங்கள் திருக்கரங்களில் கிடைக்கும் வேளையில் எனது 
உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்குமானால் ஈழத் திருநாட்டில் வவுனியா 
காட்டுப் பகுதிக்குள் தம்பி பிரபாகரனைக் காணச் சென்று கொண்டிருப்பேன்..

தமிழகத்தில் வரலாறு இதுகாறும் கண்டறியாத மகத்தான அத்தியாயத்தைப் படைத்துவிட்டீர்கள்.. 
தரணியெங்கும் வாழும் தமிழர்கள் களிப்புடனும், பெருமிதத்துடனும் நிம்மதிப் 
பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாபெரும் வெற்றிக்குப் 
பின்னர் ஈழத் தமிழர்களுக்குத் தங்களால் விடிவும், விமோசனமும் பிறக்கும் 
என்ற நிறைந்த நம்பிக்கையுடன் உலகமெங்கும் வாழும் தன்மான உணர்வுள்ள 
தமிழர்கள் ஏகத்தோடும், தவிப்போடும் ஆவலோடும் எதிர்பார்த்துக் 
கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் உலகம் உள்ளவரை சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி உயிரோவியங்களாக சங்கத் தமிழையும்,
குறளோவியத்தையும் எண்ணற்ற பல காவியங்களையும் தமிழன்னைக்கு ஜொலித்துடும் 
ஆபரணங்களாகச் சூட்டிவிட்டீர்கள். சராசரி முதலமைச்சராக உங்களை என் மனம் 
கணிப்பதில்லை. செந்நீரில் கண்ணீரில் மிதக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை 
மாற்றித் தரணியில் தமிழனுக்கும் தலைநிமிர்ந்து வாழும் நிலை அமைந்திட என் 
தலைவன் காரணமானார் என்பதையும் அகிலம் காண வேண்டும் என்பது எனது தணியாத 
தாகம்.

ஈழப்போர்க் களத்தில் பிரபாகரன் உறுதியான நிலையொன்றை எடுத்துக் கொண்டு அதிலேயே 
வலுவாக ஊன்றி நிற்கிறார். அந்தக்காரத்துக்கு இடையே மின்னிடும் ஒரு ஒளி 
ரேகையாக உங்களை நம்பியிருப்பதாக மரண பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து 
எழுதினார்.

காலமறிந்து, இடமறிந்து, மாற்றால் வலியறிந்து, தன் வலியையும் கணித்து வியூகம் அமைப்பதே 
சாலவும் சிறந்தது என்ற தங்களின் உணர்வுகளை அவருக்குத் தெளிவுபடுத்த வேண்டிய
சூழல் எனது ஈழப் பயண எண்ணத்துக்குக் காரணமாயிற்று..!

13 ஆண்டுகளுக்குப் பிறகு வராது வந்த மாமணிபோல் தமிழகத்தில் அமைந்திட்ட நமது 
கழக ஆட்சிக்குக் குன்றிமணி அளவுகூட குந்தகம் ஏதும் ஏற்பட விடாமல், மத்திய 
அரசுடன் மோதுகிற நிலையையும் தவிர்த்துக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கும், 
விடுதலைப்புலிகளுக்கும் பாதுகாப்பை நிரந்தரமாக உத்தரவாகக்கக் கூடிய 
வழிமுறைகளைக் காண பிரபாகரனுடன் பல கோணங்களிலும் இப்பிரச்சினையை விவாதித்து 
கருத்துக்களைப் பரிமாறி அதன் மூலம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகின்ற 
மனப்பான்மையை உருவாக்கிடவும், உண்மை நிலையை நேரில் கண்டறியவும் இப்பயணத்தை 
மேற்கொண்டுள்ளேன்.

சிங்கள ராணுவத்தினிடமோ, இந்திய ராணுவத்தினிடமோ நான் பிடிபட நேர்ந்தால் நமது கழக 
அரசுக்கோ இயக்கத்துக்கோ கடுகளவு பிரச்சினை எதுவும் ஏற்படாவண்ணம் நான் 
செயல்படுவேன். என்னைப் பலியிட்டுக் கொள்ளவும் சித்தமாக இருப்பேன் 
என்பதையும் தாங்கள் அறிவீர்கள்..!

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தமிழர் அமைப்புகளின் அழைப்பை ஏற்று ஈரோப்பிய 
நாடுகளுக்குப் பயணம் செல்கிறேன் என்று எனது வீட்டாரிடமும், நண்பர்களிடமும் 
கூறியுள்ளேன். எனது பயணத் திட்டத்தை எவரும் அறிய மாட்டார்கள். ஆனால் 
எதையும் அறிந்து கொள்ளும் தங்களின் உள்ளுணர்வுதான் பாயும் புலி பண்டாரக 
வன்னியனின் இந்த வார அத்தியாதத்திற்கு நண்பர்கள் சந்திப்பு என்னும் தலைப்பு
தந்தது போலும்..

'இரத்தம் கசியும் இதயத்தின் குரல்' என்ற எனது நூலுக்கு அணிந்துரை வழங்குகையில் 
'நான் தாயானேன்' எனக் குறிப்பிட்டீர்கள்.. 'மானம் எனது மகன் கேட்ட 
தாலாட்டு..' 'மரணம் அவன் ஆடிய விளையாட்டு' என்ற தங்களி்ன் வரிகளை 
ஆயிரக்கணக்கான மேடைகளில் முழங்கியுள்ளேன். தொண்டைக் குழியில் ஜீவன் 
இருக்கும்வரை தங்கள் புகழையே என் உதடுகள் உச்சரிக்கும். 

வாழ்நாளில் தங்களின் அன்பையும், பாசத்தையும் பிறவிப் பெரும் பயனாகப் பெற்றிருக்கின்ற தங்களின் தம்பி வை.கோபால்சாமி...
------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படி நெஞ்சை நக்கும் கடிதத்தை எழுதிவிட்டு பின்பு தி.மு.க. வை விட்டு வெளியேறி 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாள் ம.தி.மு.க. என்ற புதிய கட்சியை துவங்கி பின்பு ஏன் வைகோ கருணாநிதியுடன் கூட்டணி வைத்தார் என்று என்றைகாவது கேட்டுள்ளீர்களா? 

ம.தி.மு.க வின் அதிகாரப்பூர்வ இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருணாநிதி மீதான குற்றச்சாட்டுகள்  :
சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் ஆட்சியையும், கட்சித் தலைமையையும் கைப்பற்றிக்கொண்ட கருணாநிதி, கழகத்தில் தமக்குப் பிடிக்காதவர்களை ஓரங்கட்டி ஒழிக்கத் தொடங்கினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இயக்கத்திலும், மக்களிடமும் செல்வாக்குப் பெருகியதைக் கண்டு பொறுக்காமல், வீண்பழிகளைச் சுமத்தி, அவரை இயக்கத்தை விட்டே வெளியேற்றினார். அண்ணா காலத்தில் தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களாகத் திகழ்ந்தவர்கள் அனைவரையும் அவமதித்து, படிப்படியாக வெளியேற்றினார்; அரசியலை விட்டே விலகச்செய்தார்.

கட்சியையும், ஆட்சியையும் பயன்படுத்தி, தமது குடும்பத்துக்காகச் சொத்துகளைக் குவிக்கத் தொடங்கினார். கலைஞர் கருணாநிதியின் ஊழல்களை, மக்கள் மன்றத்தில் எம்.ஜி.ஆர். தோல் உரித்துக் காட்டினார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், தி.மு.கழகம் படுதோல்வி அடைந்தது. அவரால் கழகம் அவமானத்துக்கு உள்ளாகி, கூனிக்குறுகியது. அடுத்த 13 ஆண்டுகள், தொடர்ந்து மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில், கருணாநிதி தலைமையில், தோல்விமேல் தோல்விகளைச் சந்தித்தது தி.மு.கழகம். 
------------------------------------------------------------------------------------------------------------------------------
கருணாநிதியை இவ்வளவு தெரிந்து வைத்துள்ள கொள்கைவீரர் வைகோ அவர்களே  பிறகு  ஏன் தி.மு.க வில் தொடர்ந்தீர்கள், பிறகு  ஏன் கருணாநிதியோடு கூட்டணி வைத்தீர்கள் என்று என்றைக்காவது  கேள்வி கேட்டுள்ளீர்களா அண்ணன் சம்பத் அவர்களே? 

ஆறு ஆண்டுகள் அ.தி.மு.க. வோடு நகமும் சதையுமாக இருந்த போதும் 55 வயதுவரை இனத்தைப்பற்றி கவலைப்படாமல், மொழியைப் பற்றி தெரியாமல் நடிகைகளோடு கும்மாளம் அடித்த ஒரு அரிதாரம் பூசிய நடிகரை காரணம் காட்டி அண்ணன் வைகோவை ஜெயலலிதா வெளியேற்றிய உடன்  நீங்களே கருணாநிதிக்கு  வெண்சாமரம் வீசவில்லையா? இலை கருகட்டும் ! சூரியன் உதிக்கட்டும் என்று !!    

ஜெயலலிதாவுக்கு அவர்களுக்கு பல்லக்கு தூக்கிய வைகோ : 

கருணாநிதியை மட்டுமே குறை கூறி அரசியல் நடத்திவரும் அண்ணன் வைகோ அவர்கள் என்றைக்கும் (தி.மு.க. வை விட்டு வெளியேறிய பின்பு ) ஜெயலலிதாவை எதிர்த்ததில்லை. ஜெயலலிதா நடத்திய ஒரே ஒருநாள் உண்ணாவிரத நாடகத்தில் பங்கு பெற்று புரட்சித்தலைவியே   என்று அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளர் அளவுக்கு பேசிய வைகோவை என்றைக்காவது கேள்வி கேட்டுள்ளீர்களா? மதுரை திருமங்கலத்தில் இடைத்தேர்தலில் ஒரு வட்ட செயலாளர் அளவுக்கு தம் தகுதியை குறைத்து தேர்தல் பனி செய்த்த  வைகோவை என்றைக்காவது கேள்வி கேட்டுள்ளீர்களா? ஆறு ஆண்டுகள் ஜெயலலிதாவோடு கூட்டணியில் இருந்த போது ஈழத்தை ஆதரித்து எத்தனை இடங்களில் பேசி இருக்கிறார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்? அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களே நீங்களே ஒருமுறை சொல்லி இருக்கிறீர்கள் ஒ.பன்னீர்செல்வம் ஒண்ணுக்கு போனால்க்கூட ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை கூடவே போக சொல்லி வைகோ கண்டித்தார் என்று. இதை விட பல்லக்கு தூக்க வேறு என்ன வேண்டும்?  கம்யுனிஸ்ட் கட்சியை கூட்டணியில் வைத்துக் கொண்டே, வைகோவை கூட்டணியில் வைத்துக் கொண்டே, பழ நெடுமாறனோடு நட்பு பாராட்டிக் கொண்டே, காங்கிரசை விட்டு தி.மு.க விலகினால் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்தார் அம்மையார். காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். அதை ஏன் அண்ணன் வைகோ  கண்டிக்கவில்லை? என்று கேட்டு உள்ளீர்களா? புலிகளால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்ன சொன்னவரோடு , பிரபாகரனை கைது பண்ணிவந்து இந்தியாவில் தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவரோடு, போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவரோடு, அய்யா நெடுமாறனை 18 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவரோடு, அண்ணன் வைகோவை 10 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவரோடு கூட்டணி அமைத்து ஈழத்தை வென்றெடுக்க முடியுமா? என்று என்றைக்காவது அண்ணன் வைகோவிடம் விவாதித்தது உண்டா?   ஆறு ஆண்டுகள் அ.தி.மு.க. வோடு நகமும் சதையுமாக இருந்த போதும் 55 வயதுவரை இனத்தைப்பற்றி கவலைப்படாமல், மொழியைப் பற்றி தெரியாமல் நடிகைகளோடு கும்மாளம் அடித்த ஒரு அரிதாரம் பூசிய நடிகரை காரணம் காட்டி அண்ணன் வைகோவை ஜெயலலிதா வெளியேற்றிய  பின்பும் இன்றுவரை விமர்சிக்காமல், வெண்சாமரம் வீசும்  மர்மம் என்ன?  

இப்படி   இத்தனை அழுக்குகளையும் உங்கள் முதுகிலே வைத்துக்கொண்டு மற்றவரை குறைகூறும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களே? மற்றவரை விமர்சிக்கவேண்டும் என்று எண்ணுகிற நீங்கள் உங்களை முதலில் சுய விமர்சனம் பண்ணிக் கொள்ளுங்கள் இல்லை என்றால் சந்தி சிரித்துவிடும் உங்கள் சந்தர்ப்பவாத பிழைப்பு....
------------------------------------------------------------------------------------------------------------------------------
விடுதலை சிறுத்தைகளின் கடைநிலை  தொண்டன் :
அங்கனூர் தமிழன் வேலு

தீயை முத்தமிட்டு மானுடத்தை மணந்து கொண்டவள் ! அக்கா செங்கொடி முதலாமாண்டு நினைவாக அங்கனூர் தமிழன் வேலு