வெள்ளி, 18 ஏப்ரல், 2014

சனநாயக போர்வையில் சாதியத்தின் வேர்கள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தற்போது தேர்தல் திருவிழா துவங்கியுள்ளது. இத்திருவிழாவில் சுமார் எண்பது கோடி வாக்காளர்கள் பங்கேற்க உள்ளனர். நாடு முழுவதும் 543 தொகுதிகளின் மூலம் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 123 தொகுதிகள் தனி தொகுதிகள். இந்த தனி தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும். அதனையொட்டி தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம், தென்காசி ஆகிய ஏழு தனித்தொகுதிகள் அடக்கம்.

பன்னெடும் ஆண்டுகளாக சாதி இந்துக்களின் காவலாளிகளாகவும், அவர்கள் நீட்டிய இடத்தில் பாயும் ஏவலாளிகளாகவும் இருந்த ஒரு சமூகம்  எந்த ஒரு சூழ்நிலையிலும், சுய உரிமைகள் பெற்று சுய கவுரவத்தோடு வாழ முற்படுவதை, சாதி இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதே கடந்த சமூக நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தந்திருக்கும் வரலாற்றுப் பாடம். அதேவேளையில் சாதிக் கொடுமைகளின் இறுக்கம் அதிகம் காணப்பட்ட இதே தேசத்தில் தான்  கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்து மறைந்த புரட்சியாளர்களின் கடின உழைப்பால், சிறிதளவேனும் ஜனநாயக உரிமையை அடக்கப்பட்ட சமூகம் அனுபவிக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு அரசியல் உரிமைகள் பெயரளவிற்கேனும் இருக்கிறதென்றால் அது அவர்களின் உழைப்பால் கிடைத்த பயன். ஆனால் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா முழுமைக்குமுள்ள தனி தொகுதிகளில், தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கான பிரிதிநிதியை தங்களின் சுய விருப்பத்திற்கேற்ப தாங்களே தேர்வு செய்துக்கொள்ளக்கூடிய  வாய்ப்பு துரதிஷ்டவசமாக அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இது ஒருபுறமிருக்க இந்தியாவில் உள்ள ஜனநாயக தன்மையால் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமதர்ம வாய்ப்புகள் பூத்துக் குலுங்குவதாக பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன. . ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்ட சாதியவாதிகள் கூட, தனி தொகுதிகளில் தங்களுக்கான பிரிதிநிதியை, அதாவது தனக்கான நவீன ஏவலாளியை நிறுத்த முடிகிறது. அதை தடுப்பதற்கான எந்த வாய்ப்பும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்துள்ள கரும்புள்ளி என்றே சொல்லலாம். அவர்களால் சேரி குடிசைகளையும் கொளுத்த முடிகிறது சேரி மக்களின் அதிகார வாய்ப்பை தட்டிப் பறிக்கவும்  முடிகிறது. தமிழக சட்டமன்றத்தில் 46 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தருமபுரி, மரக்காணம் சாதிய வன்கொடுமை தாக்குதல் குறித்து வாய்கூட திறக்க முடியவில்லை. அப்படியெனில் அந்த உறுப்பினர்கள் அனைவரும்  தாழ்த்தப்பட்டோருக்கான அரசியல் அதிகார உரிமையை பயன்படுத்தி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று சொல்வதை விட, ஆண்டைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதே சரியாக இருக்குமென நினைக்கிறேன். இதைதான் ‘தேவிக்கு பிரியமானவர் பூசாரி’ என்பார்கள். சாதி இந்து வேட்பாளர்களால்   சேரி பகுதிகளுக்குள் வந்து எவ்வித தடையுமின்றி ஒட்டு கேட்க முடிகிறது, சேரி மக்களின் ஓட்டுக்களை  விலைபேச முடிகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களால் அவ்வளவு சுலபமாக சாதி இந்துக்களின் தெருவுக்குள் சென்று பிரச்சாரம் கூட செய்ய முடிவதில்லை. அப்படியே சென்றாலும் அவர் சார்ந்திருக்கும் தலைமையின் ஆணைப்படி உயர்சாதி இந்து ஒருவரின் முதுகுக்கு பின்னால் தான் செல்ல முடிகிறது. முந்தைய காலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கான அன்றாடப் பிழைப்புக்காக ஆண்டைகளிடம் கைகட்டி நின்றதை போல, ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் இந்தியாவில் இன்றைய நிலையில் ஆண்டைகளின் தயவால் தான் தாழ்த்தப்பட்ட ஒருவர் சாதி இந்துக்களின் தெருவுக்குள் சென்று பிரச்சாரமே செய்ய முடிகிறது. தனக்கான தொகுதியில்  போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளரின் பெயர்கூட ஊர் தெரு சுவற்றில் எழுத முடியவில்லை, ‘வேண்டுமென்றால் சின்னத்தை மட்டும் வரைந்துகொள், பெயரை எழுதாதே’ என்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவனின் பெயரில் தீட்டு இருப்பதாக அவர்கள் நினைப்பார்கள் எனில், அவர்களுக்கு  வழங்க வேண்டிய அரசியல் அதிகாரத்திலும் அதே தீட்டு இருக்கிறது என்று தானே பொருள். அதை மாத்திரம் அனுபவிக்க சாதி இந்துக்கள் துடிப்பதேன்? தாழ்த்தப்பட்டவர்களின் தனி தொகுதியில் யார் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதையும், யார் வெற்றிபெற வேண்டும் என்பதையும்  உயர்சாதி இந்து தான் தீர்மானிக்கிறான். இதை ஜனநாயக கேலிக்கூத்து என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

அதேபோல தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படுகின்ற வன்கொடுமை தாக்குதல்களை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இயக்கம் நடத்துகிறவர்கள் மட்டுமே பேசியாகவேண்டிய நிலை இருக்கிறது. திரும்பி பார்க்கும் தூரத்தில் நடைபெற்ற பரமக்குடி அரச பயங்கரவாதம், தருமபுரி, மரக்காணம் சாதிய வன்கொடுமை தாக்குதல்கள், சிறுவன் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை போன்ற ஜனநாயகத்தின் மாண்புக்கு சவால் விடப்பட்ட இழிசெயல்கள் தமிழகத்தில் நடந்தேறின. ஆனால் ஜனநாயகமே தனது அரசியல் கொள்கை என பீற்றிக்கொள்ளும் எந்த அரசியல் கட்சியும்  மேற்சொன்ன கொடுமைகளை, ஜனநாயக விரோத செயல்களை கண்டிக்கவில்லை, வாய்திறக்ககூட வில்லை, மாறாக தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல் உரிமைகளை உறிஞ்சி சுவைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், கனத்த மவனத்தையே பரிசாக தந்தார்கள். தருமபுரி சாதிய வன்கொடுமை தாக்குதலை பொருத்தமட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மட்டும் வாய்மூடிக் கிடந்திருந்தால், தருமபுரியில் நடந்த கொடூரங்கள் தமிழகமெங்கும் நடந்திருக்கலாம். அங்கு நடைபெற்ற ஜனநாயக விரோத செயல்களுக்கு பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள் என்றுகூட எண்ண தோன்றுகிறது. தலித் மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்தவர்களோடு, அவர்கள் குடிசைகளை கொளுத்தி, கொள்ளையடித்தவர்களோடு திராவிட இயக்க கொள்கையை ஏற்றுக் கொண்டவரால் கைகோர்க்க முடிகிறதென்றால், அவரின் ஜனநாயக கொள்கை என்ன? கோட்பாடு என்ன? என்று கேட்கவே விரும்புகிறேன்.

ஆண்டைகளாலோ அல்லது அவர்கள் சொல்வதைப் போல ஜனநாயக முறைப்படியோ தேர்வு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த 46 சட்டமன்ற உறுப்பினர்களாலும், திருமாவளவனை தவிர மற்ற 6 தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் மேற்சொன்ன கொடுமைகளுக்கு எதிராக ஏன் பேச முடியவில்லை? அவையெல்லாம் ஜனநாயக விரோதங்கள்  என்று நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ அவர்களால் அறிவிக்க முடியவில்லையே ஏன் ? அதனால் தான் சொல்கிறேன் அவர்களில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர்களின் பிரிதிநிதிகள் அல்லர் என்று.

உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒத்க்கீடு செய்யப்பட்ட மேலவளவு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், மருதங்குடி, கொட்டக்காட்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துக்களில், பல ஆண்டுகளாக ஜனநாயக முறைப்படி தேர்தலே நடத்தப்பட முடியவில்லை, வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்... இது இந்திய ஜனநாயகத்திற்கே அவமானமில்லையா? ஜனநாயகத்தின் மீது கடப்பாறையை சொருகிய அவமானகரமான காட்டுமிராண்டி செயல்கள் இல்லையா? யார் தட்டிக் கேட்டது? எந்த ஜனநாயக அமைப்பு முன்வந்து போராடியது? அதையும் தாண்டி ஜனநாயகத்தை தம் உயிர்மூச்சு கொள்கையாக வரித்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள் கூட பத்தாண்டுகள் கழித்து தான்  ‘இது ஜனநாயக படுகொலை’ என்று பேச முடிந்தது. அன்றைக்கும் அந்த மக்களின் அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியது விடுதலை சிறுத்தைகளும், திருமாவளவனும் தான் என்பதை எவராலும் மறுக்க முடியுமா?

இங்கே இன்னொரு செய்தியை குறிப்பிட்டாக வேண்டிய அவசியமிருப்பதாக கருதுகிறேன். அன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களின் விவசாய நிலங்களும், வீட்டில் இருந்த அண்டா குண்டா  தட்டுமுட்டு சாமான்கள்  அனைத்தும் வயிற்றுப் பசியின் காரணமாக உயர்சாதிக் காரர்களின் வசம் அடமானமாக சென்று, பின்னாளில் அவர்களுக்கே சொந்தமானதை போல, தாழ்த்தப்பட்ட வகுப்பில் உள்ள ஒருசில சுயநலவாதவாதிகளின் பதவி பசியால், இன்றைக்கு கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் குறைந்தபட்ச அரசியல் அதிகாரமும், கொஞ்சநஞ்ச உரிமைகளும் சாதி இந்துக்களின்  வசமே அடமானமாக சென்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில காலங்களில் இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளும் முற்றாக அவர்கள் வசமே சென்றுவிடுமோ என்ற அச்சம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. கோரப் பசியில் இருப்பவனுக்கு, மிச்சம் மீந்த பழைய சோற்றை கொடுத்து அவனது மொத்த உழைப்பையும் சுரண்டிப் பிழைத்த ஆண்ட வர்க்கத்தைப் போல, சுயநலவாதிகளின் பதவி பசியை பயன்படுத்திக் கொண்டு, தாழ்த்தப்பட்டவர்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் பறித்துக் கொள்ள சாதியவாதிகள் எல்லா காலத்திலும் தயாராகவே இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை அமைப்பாக்கி கொள்ளாததன் அல்லது தங்களுக்கான அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொள்ளாததே காரணமாக இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களை  அடக்கி ஒடுக்குவதற்கு தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதோர் ஓரணியில் திரள்வதைப் போல, சாதியவாதிகளின் அடக்குமுறைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கேனும் கூட, தாழ்த்தப்பட்டவர்கள் ஓரணியில் அமைப்பாக திரள மறுக்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது. ஆகவே தோழர்களே... தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல் அதிகாரங்களும், உரிமைகளும் பாதுக்காக்கப்பட வேண்டுமெனில், தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கான பிரிதிகளை தாங்களே தேர்வுசெய்யும் உரிமையை பெற்றாக வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த உரிமையை பெற வேண்டுமெனில் தாழ்த்தப்பட்டவர்கள் முதலில் தங்களை அமைப்பாக்கி கொள்ள வேண்டியது மிக மிக இன்றியமையாதது. அப்படி ஒரு நிலை உருவாகாமல் போகுமெனில் நவீன கால ஆண்டைகளிடம் கைகட்டி அண்டிப் பிழைக்க, நவீன அடிமைகளாக   தங்களை தயார்ப் படுத்திக் கொள்ளலாம்...

-  தமிழன் வேலு