ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

தமிழ்தேசிய கோவணம் !


இனவெறிக்கு எதிராக இடிமுழக்கம்
செய்வோரே ... இன விடுதலைக்கு
குழிபறிக்கும் சாதிவெறிக்கு எதிராக
பிணமென மௌனம் காப்பதென்?

சாதிவெறியில் அவன் பிடிக்கும் அருவாளால்
தமிழர்நிலம் செந்நீரால் நனைகிறது- அதனால்
உழைத்து வேர்த்த எங்கள் உடலெங்கும் இன்று
கண்ணீரால் நனைகிறது !

காதல் நாடகமென்று வேதாந்தம்
பேசுகிறான் - அவனே எங்கள் குடிசைகளை
கொளுத்த காவிக் கொடூரனாய் கையில்
தீப்பந்தம் ஏந்துகிறான் !

சாதிக்கலப்பு கூடாதென்று சாதிப் பெருமை
பேசுகிறான் - அவனே பின்னிரவில் எங்கள்
பெண்களின் கற்பை சூறையாட காமுகனாய்
ஆடுகிறான் !

நல்லிணக்கம் வேண்டுமென்று பொறுப்பாய்
பேசுகிறான் - அவனே நாங்கள் நல்லுடை
உடுத்தினால் வெறுப்பை கக்குகிறான் !

உலகத் தமிழனே ஒன்றுகூடி தமிழீழம்
வேண்டி நிற்க - ஆதிக்க சாதிகளை ஒன்று
கூட்டி தலித் நிலம் அழிக்க முனைவது
நியாயமா? - அதை தமிழ்தேசியம் பேசும்
தமிழினம் வேடிக்கை பார்ப்பது நியாயமா?

சாவுக்கு பறையடித்த பறையர்குலம்
இன்று படிப்பறிவை பெறுவது குற்றமா?
ஊருக்கு உரமாய் ஒண்டிகிடந்த ஒடுக்கப்பட்ட
மக்கள் உரிமை கோருவது குற்றமா?


சீமெண்ணெய் விளக்கு எறிந்த குடிசைகள்
இன்று சாதிவெறியில் குடிசையே
எறிவது நியாயமா?


தமிழ்தேசியம் கோரி முண்டாசு முறுக்கும்
போராளிகளே - சாதிப்பாசம் எமக்கில்லை என்று
நடுநிலைப் பேசும் மேதாவிகளே இதற்குங்கள்
பதிலென்ன?

எரிகின்ற சேரியும் - தமிழனால் தமிழன்
வடிக்கும் குருதியும் தமிழ்தேசிய கோவணம்
அவிழ்ந்து, நடுரோட்டில் அம்மணமாய் ஓடும்
என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கின்றன !

கண் விழித்து பாருங்கள் ...
கள்ள மௌனத்தை களையுங்கள் ...
சாதி வெறிக்கு எதிராக
களமாடுவோம் வாருங்கள் ..!

- தமிழன் வேலு

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

கடைசி மனிதனின் கோபங்கள் - 1


எளிய மனிதர்களின் குரல் இன்றுவரை ஏடுகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நாங்கள் எங்கள் கஷ்டங்களை சொல்லக்கூடாதா? நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள்  இல்லையா? இந்நாட்டின் பூர்வக்குடி மக்களான நாங்கள் இன்றுவரை இந்நாட்டிலே அகதி வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறோமே அது உங்களுக்கு அவமானமாக இல்லையா?  சேரிகளிலும், குப்பங்களிலும் எங்கள் வாழ்க்கை கிழிந்த கந்தல்களை போல சிதறுகிறது. எளியவர்களான எங்களுக்கு எங்குமே இலமில்லை, முற்போக்கு சிந்தனையாளர்களையும் சேர்த்தே சொல்கிறேன். முற்போக்குவாதிகளின் முழக்கம் மேடையோடு முடிந்து போகிறது. எங்களின் லட்சியம் எங்களின் நிம்மதியான இரவுகளை நோக்கியே காத்திருக்கிறது.  ஆனாலும் நாங்கள் அலட்சியப்படுத்தப் படுகிறோம். பணம் படைத்தவர்கள் தங்களுடைய சொத்துக்களை காத்துக்கொள்ள துடிக்கிறார்கள்; ஆனால் இரவு நேரங்களில் எங்கள் தாய்மார்களையும், தங்கைகளையும் காத்துக்கொள்வதே எங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. உயர்சாதிக்காரன் என்று சொல்லிக் கொண்டு குடித்து விட்டு எங்கள் வீட்டிற்குள் நுழைகிறான், அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை எங்கள் மீதே வழக்குப் பதிவு செய்கிறது. காவல்துறையின் தலித் விரோதப் போக்குக்கு அளவே இல்லை. தலித் வாலிபர்களை நள்ளிரவில் புகுந்து கைது செய்து சித்திரவதை செய்வது, தலித் பெண்களை நான்கு பேர் ஐந்து பேர் சேர்ந்து கற்பழிப்பது என்ற கொடுமைகள் அரங்கேறின. வந்தவாசி அருகே பொன்னூர், பெரம்பலூர் அருகே ஒகலூர், மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம், கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் குடியன்குடி இவை அனைத்துமே சேரிகள். ஒரு பாப்பனர் வீட்டிலோ, கவுண்டர் வீட்டிலோ, தேவர் வீட்டிலோ, காவல் துறை அத்துமீறி நுழைந்துவிடுமா? வாச்சாத்திக் கொடுமை யாரால் நிகழ்த்தப்பட்டது? விழுப்புரம் திருக்கோவிலூரில் 4 பழங்குடியினப் பெண்களை சீரழித்தது யார்? முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை சந்தைப்படுத்துவதில் தான் முற்போக்காளராக இருக்கிறார்கள். அவர்களுக்கு சேரிகளை சுத்தப்படுத்தவும் விருப்பம் இல்லை; சுத்தப்படுவதிலும் விருப்பமில்லை. எழுதுகிறார்கள், கண்டிக்கிறார்கள் ஆனால் எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை. காரணம் ஒவ்வொரு எழுத்தாளரும் அரசவை எழுத்தாளர்களாக, கவிஞர்களாகவே இருக்க விரும்புகிறார்கள்.  

எளியவர்களை எளியவர்களே கூட ஆதிக்கம் செய்கிறார்கள். ஒரு டீக்கடைக்கு சென்றிருந்தேன். கட்டிட வேலை செய்யும் பெண்மணி அங்கெ டீ வாங்க வந்திருந்தார். கசங்கிய சேலை, தலையிலே முண்டாசு, முகத்தில் வாட்டம் இவைதான் அந்த அம்மையாரை அவர் கட்டிட வேலை செய்பவர் என்றும், எளியவர் என்றும் காட்டிக் கொடுத்தது.  டீக்கடைகாரருக்கும், அந்த அம்மையாருக்கும் எதோ வாக்குவாதம், டீ டம்ளர் ஒன்று கூடுதலாக கேட்டிருப்பார் போல, அதற்கு அந்த டீக்கடைக்காரர் எடுத்த எடுப்பிலேயே "அடிங்க கொய்யால" என்ற வாசகத்தை உச்சரிக்கிறார். இதுவே ஒரு வசதி படைத்த பெண்ணிடம் அவர் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்பாரா? படித்த பெண்களிடம் பயன்படுத்தி இருப்பாரா? டீக்கடைக்காரர் பெரிய கோடீஸ்வரர் அல்ல, ஆனாலும் அவரால் அப்படி பேச முடிகிறது என்றால், காரணம் அந்த இடத்திலே குறைந்தபட்ச வர்க்க முரண்பாடே அவரை அப்படி பேச வைத்தது. சாதிகளில் இப்படிப்பட்ட போக்குகள் மிக அதிகமாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர், பணம் படைத்து செல்வந்தராக மாறிவிட்டால் அவரே கூட அதே தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த எளியவர்களை தம்முடைய கட்டுபாட்டில் வைத்திருக்க விரும்புகிறார். இது போன்ற வர்க்க மோதல்களை சாதி அமைப்புகள் ஊக்குவிப்பதாலே சாதியின் தேகத்தில் இன்னமும் சின்னதாக ஒரு சிராய்ப்பைக் கூட நம்மால் ஏற்ப்படுத்த முடியவில்லை. வலியவர்களுக்கும் , எளியவர்ககளுக்கும் மோதலை உருவாக்குவதுதான் சாதி அமைப்பின் முதல் வேலையே.

தாழ்த்தப்பட்டவர்களின் இன்னல்களை உலகுக்கு சொல்வதில் ஊடகங்களும், முற்போக்காளர்களும் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதற்கு மற்றுமொரு சாட்சி. சமீபத்தில் மதுரையை சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பு நடத்திய கள ஆய்வில், கடந்த 17 ஆண்டுகளை விட, கடந்த ஓராண்டில் தலித் படுகொலை மிக அதிக அளவில் நடப்பதாக கண்டறிந்து உள்ளது. அந்த அறிக்கையில் சொல்லி இருப்பது " அவர்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்ட 370 வழக்கில் 13 பெண்கள் உட்பட 56 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லி இருக்கிறது. இதை ஊடகங்கள் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டாமா? முற்போக்குவாதிகள் அரசை கண்டித்து கட்டுரைகளை, கவிதைகளை வ்ரைய வேன்டாமா? யாரும் இதைப் பற்றி பேச தயாராக இல்லை. "தமிழ்தேசியத்தை வலியுறுத்தி வெளிவரும் ஒரு மாத இதழுக்கு நான் கட்டுரை எழுதி கொண்டிருக்கிறேன். இந்த மாத கட்டுரையாக இந்த சம்பவத்தை பற்றியும், அரசின் தலித் விரோத போக்கையும் கண்டித்து   எழுதலாம் என்றிருந்தேன். அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் என்னை தொடர்பு கொண்ட போது இதை நான் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. அதாவது " அடுத்த மாதம் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை திறந்து வைக்க முதல்வர் வருகிறாராம். அங்கெ தமிழ்தேசியவாதிகளும் அதிக அளவில் கூடுவார்களாம், இதழ் விற்பனை அதிகமாக இருக்குமாம். அதனால் அரசை கண்டித்து கட்டுரை வரைவது சரியாக இருக்காது என்றார். அப்போது தான் நினைத்தேன் எளியவர்களின் இன்னல்கள் இன்றைக்கும் ஏடுகளுக்கு எட்டாக்கனி போல என்று.

தண்ணீர் எடுக்கவும், பொது சாலைகளில் நடமாடவும், பொது இடங்களில் கூடவும் அனுமதி மறுக்கப்பட்ட சமூகம் இன்று தலைநிமிர்ந்து, தன்னேழுச்சிப் பெற்று, முந்தைய காலங்களில் அவர்கள் தம் முப்பாட்டன்களின் மீது  நடத்திய காட்டுமிராண்டி செயலுக்கு சாட்சியம் சொல்ல முனைவது, சமகாலத்தில்  தம்மீது நிகழ்த்தும் காட்டுமிராண்டி செயலுக்கு பதிலடி கொடுப்பது அவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டி இருக்கிறது. அதனால் எங்கள் குரல்களை முடக்குகிறார்கள், எங்கள் குடிசைகளை கொளுத்துகிறார்கள். எங்களிடம் தட்டு முட்டு சாமான்கள் தான் இருக்கின்றன; அவற்றில் நான்கு கூடுதலாக ஆனாலும், நாங்கள் நாகரிக உடைகள் உடுத்தினாலும் அவர்கள் வயிறு எரிகிறது, அந்த வயிற்றெரிச்சலில்  தான் எங்கள் சேரி எரிகிறது. இது போன்ற சமூக அவலங்களை காண சகிக்காமல், பொறுத்து கொள்ள முடியாமல் இந்த கேவலமான, கேடு கேட்ட அமைப்பை எம் போன்றவர்கள் மாற்றத் துடிக்கிறார்கள். முழுப் புரிதல் இல்லாவிட்டாலும், ஒரு வேகத்திலோ அல்லது ஆற்றாமையிலோ நாங்கள் போராடத் தயாராகிறோம். அதை தான் சாரு நிவேதா போன்ற முற்போக்கு முகமூடிகாரர்கள் கழிவறை கிறுக்கல் என்று தம் வயிற்ரெறிரிசச்சலை கொட்டி இருக்கிறார்கள் .  இன்னும் சிலர் " நாட்டில் எல்லோரும் அவரவர் நலன் சார்ந்து யோசிக்கிறார்கள். உன்னால் எப்படி திருத்த முடியும்? உன்னால் முடியாது...யாரும் உனக்கு துணைக்கு வரமாட்டார்கள், உன் குடும்பம் நடுத்தெருவில் நின்றால் யாரும் கவலைப்படமாட்டார்கள், உன்னை அழித்து விடுவார்கள். முதலில் உன் குடும்பத்தை பார்" என்றெல்லாம் கரிசனத்தோடு கூடிய வயிற்றிச்ச்சலை கொட்டுகிறார்கள். இதே கரிசனக்காரர்கள் தான் நேற்றைக்கு எம் போன்றவர்கள் கிளம்பிய போது இதே கரிசனம் காட்டி முடக்கினார்கள். நாளை யாராவது கிளம்பினால் அவர்களுக்கும் இதே கரிசனத்தை தான் காட்டுவார்கள்; ஆனால் ஒருபோதும் அவர்கள் போராடவோ அல்லது போராடுபவர்களுக்கு உறுதுணையாகவோ நிற்கமாட்டார்கள்.

அவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் " இந்த பாறையை நாங்கள்  தூக்கி விடுவோம்  என்று நம்புகிறோம், முடிந்தால் தூக்குகிறோம், முடியாவிட்டால் அந்த பாறை எங்கள்  தலையில் விழுந்து நாங்கள்  சாகிறோம்." எங்கள்  மீது நீங்கள் ஏன் கரிசன படுகிறீர்கள். நீங்கள் பரிதாபப்படும் அளவுக்கு எங்கள்  நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை... எங்கள்  மீது கரிசனப்படும் நீங்கள் எங்களோடு  சேர்ந்து இந்த சமூகத்தின் மீது கரிசனப்பட்டால் குரல் வலிமை கூடுமல்லவா? மாறாக ஏன் என் குரலையும் நெரிக்க நினைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் அடக்குமுறைகளை சகித்துக் கொண்டிருக்கவோ, அல்லது அழுது புலம்பவோ எங்களிடம் இனியும் கண்ணீர் இல்லை. மண்ணுக்குள் புதையுண்ட கசடுகள் தங்கமாக மின்னுவதைப் போல, உங்களால் எங்கள் முப்பாட்டன்கள் சிந்திய கண்ணீர் இன்று கடைசி மனிதனின்  கோபமாக வெடிக்கிறது. வெடிக்கும்....

- தொடர்ந்து கோபப்படுவோம்....    

வியாழன், 11 ஏப்ரல், 2013

தெரியாமல் தான் தூக்கி கொண்டு திரிகிறேன் ...

நீங்கள் செல்லும் இடமெல்லாம் 
சாதியை தலையில் சுமந்து 
திரிகிறீர்கள் ...

ஆமாங்கய்யா ... என் தலையில் 
தூக்கி வைத்த சாதியை 
யாருக்கும் பாதகமில்லாமல் 
எங்கே தூக்கி எறிவது என்று 
தெரியாமல் தான் தூக்கி கொண்டு
திரிகிறேன் ...

அப்படி ஒரு இடமிருந்தால் 
சொல்லுங்கள் தூக்கி எரிந்து 
விடுகிறேன் ...   

தீண்டப்படாதவன் பேசுகிறேன் ...

சுதந்திர தினத்துக்கு தேசப் பற்றாளன் ...
ரமலான் நோன்புக்கு இசுலாமிய தோழன் ...
கிறிஸ்து பிறப்பு அன்று கிருஸ்துவ சகோ ...
புரட்சியாளர் பிறந்தநாளுக்கு 
தாழ்த்தப்பட்டவர்களின் ரட்சகன் ...

எத்தனை, எத்தனை வேடமடா உங்களுக்கு...
உங்களின் முகத்திரையை கிழிக்கிறான் 
நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 
என் அன்பு நண்பன் ... 

****** ****** ******
தீண்டப்படாதவன் பேசுகிறேன் கேளுங்கள் ...

நாங்கள் நாகரிகமற்றவர்கள் - அதனால்
நாங்கள் கேவலமானவர்களா?

அப்படியானால் நீங்கள் ???

பார்ப்பானின் காலைக் கழுவிக் குடிக்கும்
உங்கள் கரங்கள் எங்கள் கரங்களை கூட
பற்ற மறுக்கிறதே ...

எங்கள் வசிப்பிடத்தை கடக்கும் போது
உங்கள் கால்கள் நுனிக்காலில் நடக்கிறதே ...

உங்களை நாங்கள் வேகமாக கடக்கும்
போதே உங்கள் உடம்பில் கம்பளிப் பூச்சி
ஊர்வதாய் உணருகிறீர்களே ...

எங்களோடு பேசுவதற்கு கூட
உங்களின் நா கூசுகிறதே ...

எங்களை கண்டதும் உங்கள் முகம்
அருவருப்பாய் மாறுவதை
காண்கிறோமே ...

எங்கள் பெண்கள் கழிவறை செல்லக்
கூட பாதுகாப்பு இல்லையே ...

எங்கள் கண்ணீரை துடைக்க இவ்வுலகில்
நாதியே இல்லையே ...

****** ****** ******
இப்பெல்லாம் எங்கங்க தீண்டாமை
இருக்கு என்று கேட்கும் மேதாவிகளிடம்
கேட்கிறேன் ... அப்ப நீங்க எல்லோரும்
இவர்களை தொட்டுக்கொண்டும், ஒட்டிக்
கொண்டுமா வாழ்கிறீர்கள்?

நாகரிக சமூகத்தில் தீண்டப்படாத
சமூகத்தின் சாட்சியமாக விளங்கும்
இவர்களின் குரலும் வெளியே
கேட்கவில்லை; இவர்களுக்காக
குரல் கொடுக்கவும் யாரும் தயாராக
இல்லை ..!

- அங்கனூர் தமிழன் வேலு

புதன், 10 ஏப்ரல், 2013

பார்ப்பானிடம் பொறிக்குத் திங்கும் கைகூலிகள் வர்றாங்க ... சொம்பை எடுத்து உள்ளே வைங்க ...

தமிழீழத்திற்காக போராடிய மாணவப் போராளிகளை உச்சிமுகந்து கொண்டாடும் ஊடக மற்றும் தமிழீழ விரும்பிகளே ..! மாணவப் போராட்டத்தின் பின் அரசியலை அறியாத மாணவப் போராளிகளே ..!  

கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடங்கிய நாள்முதல் இன்றுவரை என்னால் முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறேன். உங்களோடு மட்டுமில்லை எல்லோரோடும் என்னால் வரிக்கு, வரி என்னால் முரண்பட முடியும்,  ஆனால் முரண்படுவது என் நோக்கமல்ல. உங்களோடும் இணைந்தே பயணிக்க விரும்புகிறேன். அதனால் தான் எங்கள் குடிசைகளை கொளுத்தி, அதிலே கொண்டாட்டம் அரங்கேற்றும் சாதியவாதிகளுடனும் தமிழ்தேசிய களத்தில் கை கோர்த்து நிற்கிறோம். தமிழீழ விடுதலைக்காக நீங்கள் (மாணவர்கள்) மூட்டிய பெரு நெருப்பு யாருக்கு அச்சத்தை உண்டாக்கியதோ இல்லையோ பார்ப்பன கைகூலிகளான சாதி தமிழ்தேசியவாதிகளுக்கும்    பார்ப்பன ஊடகங்களுக்கும்  கொதிப்பை உண்டாக்கியது. அதனால் தான் மாணவர்களின் போராட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு கொண்டாடினார்கள். அவர்கள் உங்களை கொண்டாடி கொண்டே உங்களின் இலக்கை மாற்றி அமைத்தார்கள் என்பது தான் பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. இந்திய அரசையும், ஐ. நா மன்றத்தையும் நோக்கிய மாணவர்களின்  போராட்டத்தை மடைமாற்றி தி.மு.க.வுக்கும், டெசொவுக்கும் எதிரான இயக்கமாக உங்களை கட்டமைக்க துடித்தார்கள். அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். அதன் நீட்சி தான் 14.04.2013 தேதியிட்ட "குமுதம் ரிப்போர்டர்" என்ற பார்ப்பன இதழின் "சிதைந்ததா மாணவர் ஒற்றுமை?" என்ற தலைப்பிலான கட்டுரை.

மாணவர்கள் ஆரம்பம் தொட்டே எங்கள் போராட்டத்தில் அரசியல் கலப்பில்லை, எந்த அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவற்ற போராட்டம் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அந்த பார்ப்பன இதழ் ஜோ.பிரிட்டோவை பாதிரியார் ஒருவர் இயக்குவதாக சொல்லி  அதனால் தான் அவர் சரத்குமாருக்கு ஆதரவாக நடிகர் சங்க உண்ணாவிரதத்துக்கு சென்றார் என்று அதன் மூலம் மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். திவ்யா தமிழ்நாடு மக்கள் கட்சியை சேர்ந்தவர் என்றும், முருகானந்தம் சாதி அமைப்புகளின் கைப்பாவை என்றும், பூங்கா பாக்கியராஜ் அவர்கள் தி.மு.க வை சேர்ந்தவர் சொல்லி இருக்கிறார்கள். பூங்கா பாக்கியராஜ் அவர்களை தி.மு.க. காரர் என்று சொல்லி அடுத்த பத்தியிலே அவர் கூடு இயக்கம் நடத்துவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.இது முரண்பட்ட தகவல். பூங்கா பாக்கியராஜ் கூடு இயக்கம் என்ற அமைப்பை நடத்துவது உண்மை. ஆனால் அவரை தி.மு.க. காரர் என்று அப்பட்டமான பொய்யை சொல்லி தி.மு.க.மீதான தம் அரிப்பை சொரிந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த கட்டுரைக்கு  துணை தலைப்பாக  " கொண்டாட்டத்தில் தி.மு.க." என்றும்   இட்டு இருக்கிறார்கள். இதன் மூலம்  பூங்கா பாகியராஜ் அவர்களை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதையும் மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் "குமுதம் ரிப்போர்டர்" இதழ், 4 ஆம் தேதி தாயகத்தில் நடந்த ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க செல்லவே இல்லை என்பதுதான். ஒருவேளை அவர்கள் சென்றிருந்தால் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஒருப் புகைப்படம் கூட எடுக்கவே இல்லையா என்ன? சம்பந்தமே இல்லாமல் மூன்று புகைப்படங்களை போடவேண்டியதன் அவசியம் என்ன? அந்த கட்டுரை மூலம் அவர்கள் சொல்ல வருவது என்ன? இதை தான் மாணவர்களின்  கவனத்திற்கும்  மற்ற தமிழ்தேசிய விரும்பிகளின்  கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன்...

அவர்களின் கயமைத்தனமான நோக்கங்கள் ஏராளாம் அதில் முக்கியமானதை மட்டுமே கூற விரும்புகிறேன். அதாவது...

(1) கூடு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் என்ற முறையில் பூங்கா.பாக்கியராஜ் அவர்களை பழி தீர்த்து கொள்ள வேண்டும்.

(2) தமிழகம் முழுக்க உள்ள கல்லூரி மாணவர்கள், சட்ட கல்லூரி மாணவர்களை புறக்கணிக்க வேண்டும்.

(3) தமிழகம் முழுக்க உள்ள கல்லூரி மாணவர்கள் ஓரணியில் திரளுவதை அவர்கள் விரும்பவில்லை.

(4) தமிழகம் முழுக்க உள்ள கல்லூரி மாணவர்களுக்கு பொது எதிரியாக தி.மு.க.வை உருவாக்க வேண்டும்.

இதுதான் அவர்களின் நோக்கம்... காரணம்....

(1) பிப்ரவரி 16 ஆம் தேதி "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களோடு நடிகை குஷ்புவை அன்னை மணியம்மை போல் சித்தரித்து "இன்னொரு மணியம்மை" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தார்கள். அதை கண்டித்து, கூடு இயக்கம் சார்பில் கண்டன அறிக்கை ஒன்றை பூங்கா பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டார். அது "முரசொலி"யில் வெளிவந்தது  . சென்னை மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழை கண்டித்து நோட்டிஸ் ஒட்டப்பட்டது. அதற்காக இன்றைக்கு பழிவாங்கும் நோக்கிலே அக்கட்டுரை வெளியிடப்பட்டிருக்கலாம். அதனால் தான் பூங்கா பாக்யராஜ் அவர்களை தி.மு.க.வை சேர்ந்தவர் என்றும் கதை கட்டிவிட்டு இருக்கிறார்கள்.

(2) லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் தொடங்கிய போது சில தமிழ்தேசிய அமைப்புகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். என்ன ஆதாரம் என்றால் " லயோலா கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு அருகில் உண்ணாவிரதத்தை தொடங்கிய முதல் நாளே காலை 10.00 மணிக்கு  தொடங்கியதும் அதை கேள்விப்பட்டு சரியாக 10.20 மணிக்கு பூங்கா பாக்கியராஜ் அவர்கள் அங்கெ சென்று இருக்கிறார். அப்போது மாணவர்களிடத்தில் "உங்கள் போராட்டத்தோடு நாங்களும் கலந்து கொள்கிறோம். எங்கள் மாணவர்களையும் அழைத்து வருகிறேன். நாம் இதை பெரிய அளவில் செய்வோம்"  என்று சொன்னமைக்கு மாணவர்கள், அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருந்த மே - 17 நிர்வாகி ஒருவரிடத்தில் ஆலோசனை கேட்டு அதை மறுத்து இருக்கிறார்கள். உண்மையிலே மாணவர்களின் போராட்டத்தை விரிவுபடுத்த அவர்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.  ஆனால் அவர்களே எதிர்பார்க்காத அரசின் நடவடிக்கையில் லயோலா கல்லூரி மாணவர்களை கைது செய்து பின்பு அது தமிழகம் முழுக்க பரவத் தொடங்கிய வேளையில் அது அவர்களின் கட்டுபாட்டை மீறி சென்றது. குறிப்பாக சட்ட கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பங்கெடுக்கவே அவர்களை தம் வயப்படுத்த சில தமிழ்தேசிய அமைப்புகளால் முடியாமல் போகவே போராட்டத்தை முடக்கும் வேளையிலும் இறங்கினார்கள். எங்கே போராட்டம் முழுக்க, முழுக்க சட்டக்கல்லூரி மாணவர்கள் கையில் சென்றுவிடுமோ என்று அஞ்சிய "பார்ப்பனர்களிடம் பொறிக்கித் தின்னும் போலி உணர்வாளர்கள்" போராட்டம் பிசுபிசுக்கிறது என்றும், அவர்களின் ஆதரவு மாணவர்களை வைத்து "நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வேறுவடிவில் தொடர்வோம் என்றும்   செய்தி வெளியிட செய்தார்கள். இதன் ஒருபகுதி தான் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா "நாங்கள் போராட்டத்தை வேறு வடிவில் தொடர்வோம் என்று அறிக்கை வெளியிட்ட பின்பும் இரண்டு நாட்கள் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். பூங்கா பாக்யராஜ் தலைமையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை ஊடகங்கள் புறக்கணிக்கவும் செய்திருக்கிறார்கள். அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் என்னிடம் கண்ணீரோடு  பதிவு செய்த வரிகள் இது... "நாங்கள் உயிரை வெறுத்து, உணர்வோடு போராடிக் கொண்டிருக்கிறோம், ஆனால் யாரோ போராட்டம் முடிந்துவிட்டது என்று அறிவிக்கிறார்கள். உண்ணாவிரததத்தை முடித்து பின்பும் இரண்டு நாட்களுக்கு மலம் கழிக்கவும், சிறுநீர் கழிக்கவும் சிரமப்பட்டேன்" என்று. அந்த வரிகளில் இருந்து இன்னமும் என்னால் மீள முடியவில்லை. அதன் நீட்சி தான் தாயகத்தில் நடந்த அனைத்து சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பை, அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு என்று புனைத்து, மற்ற அனைத்து கூட்டமைப்புகளையும் கலைத்து விட்டு அதற்கு "டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு" என்று பெயர் வைக்க டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் முருகானந்தம் வலியுறுத்தியதாக கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் எழுதி இருக்கிறார்கள். அனைத்து கல்லூரி மாணவர்களை (பொறியியல், கலை, அறிவியல், தொழில்நுட்பம், இன்னபிற) ஒன்றிணைத்து "டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு" என்று பெயர் வைக்க எந்த முட்டாளாவது  சொல்லுவானா? என்பதை நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள்.

(3) ஒருவேளை மேற்சொன்ன எல்லா கருத்து வேறுபாடுகளையும் களைந்து விட்டு அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து விட்டால் பிறகு அ.தி.மு.க. வுக்கு சொம்பு தூக்க முடியாதல்லவா? அதனால் தான் மாணவர்களை ஒன்று சேரவிடாமல் தடுக்க இப்படிப்பட்ட கேடு கேட்ட புனைவு கதைகளை எல்லாம் அவிழ்த்து விடுகிறார்கள்.

(4) தமிழக மாணவர்களின் போராட்டத்தில் தி.மு.க.வுக்கு எதிரான வாசகங்களோ, டெசொவுக்கு எதிரான முழக்கங்களோ முதலில் இடம்பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் காங்கிரசுக்கு எதிரான முழக்கங்கள் கூட இல்லை. காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவர் தங்கபாலு மாணவர்களின் எதிர்ப்புக்கு உள்ளானார். அன்று நானும் அங்குதான் இருந்தேன். நானும் தங்கபாலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். பிறகு தங்கபாலு கேப்டன் டிவி க்கு பேட்டிக் கொடுக்கும் போது "நானும் தமிழன் தான், மாணவர்கள் என்னை வரவேற்கிறார்கள், ஆனால் சில சமூக விரோதிகள் தான் என்னை தடுக்கிறார்கள்" என்று கூறினார். உடனே கேப்டன் டிவி செய்தியாளர் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களிடம் செல்கிறார். நானும் பின்தொடர்ந்து சென்றேன்.  நீங்கள் அவரை (தங்கபாலுவை) வரவேற்பதாக அவர் சொல்கிறார்" நீங்கள் வரவேற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? கேட்கிறார். அதற்கு ஜோ. பிரிட்டோ பதில் சொல்கிறார் " இனி தான் நங்கள் பேசி முடிவு எடுக்க வேண்டும்" என்று. நான் அதிர்ந்து போனேன். மாணவர்கள் எதிர்ப்பதாக சொல்லித்தானே வெளியில் எதிர்ப்பு நடக்கிறது. நாமும் எதிர்த்தோமோ என்று. அந்த இடத்திலே மாணவர்களும் முட்டாளாக்கப் பட்டார்கள், அவர்களுக்காக சென்ற நாங்களும் முட்டாளாக்கப் பட்டோம். இப்படி சென்ற போராட்டத்தை தி.மு.க.வுக்கு எதிராகவும் டெசொவுக்கு எதிராகவும் மாற்றியவர்கள் யார்? என்பதற்கு பதில் தான் பார்ப்பனர்களிடம் பொறிக்கித் தின்னும் போலி உணர்வாளர்கள்.

குமுதம் ரிப்போர்டர் இதழின் கட்டுரை குறித்து, அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவரும், கூடு இயக்க பொது செயலாளரும் ஆன "அசோக்" அவர்களிடம் கருத்து கேட்டேன். அவர் இதை வேறு வடிவில் பார்ப்பதாக சொன்னார்." அதாவது நிலவுமொழி யின் கருத்தான " நாங்கள் வெளிநடப்பு செய்யாமல் இருந்திருந்தால் பெரிய அளவில் அவமானப்பட்டிருப்போம்" என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து (ஹைலைட்) காண்பிப்பதன் மூலம் "தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமில்லை, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த படித்த கல்லூரி மாணவர்களும் ஒழுக்க கேடானவர்கள், பெண்களை அடிமைப் படுத்தக் கூடியவர்கள்" என்று நிறுவ முயல்கிறார்கள். இது ஒரு மோசமான பிற்போக்குத்தனம். என்று சீறினார்.

குமுதம் ரிப்போர்டர் இதழின் கட்டுரை குறித்து நிலவுமொழி யிடம் நான் பேசினேன். கட்டுரையில் உங்களின் கருத்தாக வந்திருக்கும் செய்தி உண்மையா என்றேன். ஆமாம்.. என்னை தொலைபேசியில் கேட்டார்கள். நான் தான் சொன்னேன். என்றார். அது தவறாக பயன்படுத்தப் பட்டிருக்கிறதே என்றதற்கு அதைப் பற்றி கவலையில்லை, எங்களை அடிக்க வந்தார்கள், அவமதிப்பு செய்தார்கள் அதனால் எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக சொன்னேன் என்றார். மேலும் விரிவான தகவல் வேண்டும் மின்னஞ்சல் செய்யமுடியுமா என்றதற்கு மின்னஞ்சல் செய்கிறேன் என்றவர் அதன் பிறகு தகவல் கொடுக்கவில்லை.

எங்களை அடிக்க வந்தார்கள் என்ற நிலவுமொழி யின் கருத்து குறித்து கருத்தறிய பூங்கா பாக்கியராஜ் அவர்களை தொடர்பு கொண்டேன். அந்த கட்டுரையே முழுக்க, முழுக்க காழ்ப்புணர்ச்சி கொண்டது. நிலவுமொழி யை யாரும் அடிக்க செல்லவில்லை. அப்படி செய்ய நாங்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. திவ்யாவுக்கு எதிர்ப்பு வந்தது உண்மை. அதற்கு காரணம் அவர்களின் முந்தைய தன்னிச்சையான அறிவிப்புகளுக்காகவே மாணவர்கள் எதிர்ப்பு செய்தார்கள். மேலும் நான் சொன்னதாக குமுதம் ரிப்போர்ட்டரில் வந்திருக்கும் "தமிழ்நாடு மக்கள் கட்சி புறக்கணிப்பதாக சொல்லிவிட்டு செல்லுங்கள்" என்ற கருத்தை நான் சொல்லவே இல்லை. தமிழகம் முழுக்க உள்ள  சட்டக்கல்லூரிமாணவர்களை ஒரே அமைப்பாக ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தான் அந்த ஒருங்கிணைப்பின் நோக்கமே. அதற்கு தற்போது செயல்பட்டு வரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் அமைப்புகளை கலைக்கலாம் என்று விவாதித்ததும் உண்மையே. அப்போது திவ்யா " அமைப்புகளை கலைக்க முடியாது, நான் என் கட்சி சொல்வதை தான் கேட்க முடியும்" என்றார். அதற்கு தான் இன்னொரு மாணவர் உங்கள் கட்சி என்றால் தமிழ்நாடு மக்கள் கட்சியா? என்று கேட்டார். அதற்கு தான் நிலவு மொழி கோபப்பட்டு அப்படியானால் நீங்கள் பூங்கா பாக்கியராஜ் தலைமையிலான கூடு இயக்கத்தை சேர்ந்தவர்களா? என்று கேட்டார். இதுதான் அங்கெ நடந்தது. என்று முடித்தார்.

குமுதம் ரிப்போர்டர் இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரை திட்டமிட்டு பார்ப்பனர்களிடம் பொறிக்கித் தின்னும் போலி உணர்வாளர்களால் பரப்பப்பட்டது என்பது தான் உண்மை. நிலவுமொழி அவர்களிடம் கூட, அவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்திலோ, அல்லது நேரிலோ பேட்டி கேட்கவில்லை. தொலைபேசியில் தான் கேட்டிருக்கிறார்கள். அப்போது கூட அதே இதழில் முருகானந்தம் சொல்லி இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். "சின்ன கருத்து வேறுபாட்டால் அவர்கள் புறக்கணித்து விட்டு சென்றார்கள். இதை பெரிதாக்கி போராட்டத்தை சிதைத்து விடாதீர்கள். நாங்கள் மீண்டும் ஒன்றாக கலந்து பேசி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்." என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். சட்ட கல்லூரி மாணவர்கள் ஒன்றாகவே இருக்க விரும்புகிறார்கள். மீண்டும் போராட தயாராக இருக்கிறார்கள். ஆனால் சில பார்ப்பனர்களிடம் பொறிக்கித் தின்னும் போலி உணர்வாளர்கள் தான் மாணவர்களிடம் வெறுப்பை விதைத்து வருகிறார்கள். இது போராட்ட களத்தில் இருந்து "டாக்டர் அம்பேத்கர் சட்டகல்லூரி மாணவர்களை புறக்கணிக்கும் "சாதி புத்தி" அல்லாமல் வேறு என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...!

- அங்கனூர் தமிழன் வேலு

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

நாங்கள் யாருக்கும் அடிமையில்லை

நாங்கள் தலை நிமிர்வதை 
அவர்கள் விரும்பவில்லை !

நாங்கள் தன்னெழுச்சிப் பெறுவது 
அவர்களுக்கு பிடிக்கவில்லை !

நாங்கள் தன்மானம் பெறுவது 
அவர்களுக்கு எரிச்சலை ஊட்டியது !

நாங்கள் கல்வியறிவு பெறுவது
அவர்களுக்கு கடுப்பை உண்டாக்கியது !

எங்களை நாகரிகம் அற்றவர்கள் என்றார்கள் - பிறகு 
நாங்கள் நாகரிகம் அடைவதில் அவர்கள் 
தொல்லை கொடுத்தார்கள்

எங்களிடம் தட்டுமுட்டு சாமான்
நாலு கூடுதலா இருந்தாலே
அவர்கள் கொதித்து விடுகிறார்கள்

நாங்கள் அரசு வேலைக்கு செல்வது
அவர்களின் அரிப்பை அதிகமாக்கியது 

எங்களை இந்துக்களோடு சரி சமமாக
நடத்தமாட்டார்கள் - ஆனால் 

நாங்கள் இந்துக்கள் இல்லை என்றால்
எங்கள் மீது கோபம் கொள்வார்கள் 

அவர்கள், எங்களோடு இணைந்து 
வாழ்வதை விரும்பவில்லை - ஆனாலும் 

நாங்கள் அவர்களை விட்டு பிரிந்து 
செல்வதையும் விரும்பவில்லை

எங்களை தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை
செருப்பு போட தடை போட்டார்கள்
ஊருக்கு ஓரமாய் ஒதுக்கி வைத்தார்கள்
கோவிலுக்குள் விட மறுத்தார்கள் 

உரிமைகள் அனைத்தையும் பறித்தார்கள் 
எங்களை கொத்தடிமையாய் நடத்தினார்கள்
எதிர்த்துப் பேசக்கூடாது என்றார்கள், மீறி 
பேசினால் சவுக்கடி கொடுத்தார்கள்

இனியும் பொறுக்க இயலாது,
இளிச்சவாயர்களாகவும் இருக்க முடியாது
என்ற நிலை வந்தது - அந்த அளவுக்கு
அவர்களின் கொடுமை எல்லை மீறியது 

புரட்சியாளர் வந்தார், புதிய 
வழியை தந்தார் - தந்தை பெரியார்
வந்தார் தன்னெழுச்சியை தந்தார் 

அடங்க மறுத்தோம் ... அத்து மீறினோம் ...
அவர்கள் இட்ட அத்துனை தடைகளையும்
உடைக்க துணிந்துவிட்டோம்... 

அதனால் தான்...

எங்கள் குடிசையை கொளுத்துகிறார்கள்
அது கொழுந்துவிட்டு எரியும் போது 
கொள்ளை அடிக்கிறார்கள் 

நாங்கள் கௌரவமாக வாழ விரும்பினால் 
எங்கள் மீது கௌரவ கொலைகளை 
கட்டவிழ்த்து விடுகிறார்கள்

இன்றைக்கும் அவர்களின் வாழ்வை
சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை
ஆனால் என்றைக்கும் அவர்கள் எங்களை
வாழவிட மாட்டார்கள்

காரணம் ...

"நாங்கள் யாருக்கும் அடிமையில்லை"
என்பதை உணர்ந்து கொண்டோம் ..!

- தமிழன் வேலு

புதன், 3 ஏப்ரல், 2013

தனியார் பள்ளிகளின் கல்வி கொள்ளைக்கு புதிய அங்கீகாரம் (?)


ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு... ஆஹா என்னவொரு திட்டம்... புரட்சிதலைவி "அம்மா" அவர்கள் புதிய புரட்சியை செய்துவிட்டார்கள்; ஏழை மாணவர்களின் கனவை நனவாக்க புதிய விடியலை ஏற்ப்படுத்திக் கொடுத்துவிட்டார் என்று ஊடகங்கள் தங்கள் அரிப்புக்கு சொரிந்து கொள்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் கல்வி கொள்ளையை யார் தட்டிக் கேட்பது? ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் தான் படிக்கவேண்டும் யாரும் விரும்பவில்லை. முறையான நேர்மையான, தரமான கல்வியை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியில் கொடுக்கவேண்டிய 20% இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றாத அரசுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற புதிய திட்டம் ஏன் வந்தது? இத்திட்டத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவெனில் " ஒவ்வொரு ஆண்டும் மே 2ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிப்பை பள்ளிகள் வெளியிட வேண்டும். மே 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 9ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்பட வேண்டும்.பள்ளிகள் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட பின்னர் அதற்கான ரசீதை பரிந்துரைக்கப்பட்ட வடிவில் பெற்றோருக்கு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மே 11ஆம் தேதி மாலை 5 மணியளவில் தகுதிவாய்ந்த விண்ணப்பங்களுக்கு உரிய நபர்களின் பெயர்களை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும். இதுபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விவரங்களையும், அவை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தையும் பள்ளிகள் வெளியிட வேண்டும்." இதிலே தகுதிவாய்ந்த என்ற சொல்லை கவனமுடன் படியுங்கள்...
Pichute : Google

விண்ணப்பதாரரின் தகுதியை தீர்மானிப்பது எது? தகுதியை உறுதி செய்வது யார்? தகுதிநீக்கம் செய்யவும் பள்ளிக்கு அதிகாரம் உண்டாம்... "சலுகை பெற தகுதி இல்லை" என்ற ஒற்றை வார்த்தையை நாக்கூசாமல் பொய்சொல்லி, சொல்லியே  கடந்த 50 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. கேட்டால் சலுகையை பெற தகுதி இல்லை என்று ஒரே காரணத்தை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள். இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இதுநாள்வரை முழுமையான அளவில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதிகபடச்சமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கவேண்டிய 20% யில் 10% கூட  ஒதுக்கப்படவில்லை. கேட்டால் தகுதியான மாணவர்கள் இல்லை. இந்த ஒரே பதில் தான். இதுபோலவே தான் இன்றைக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு திட்டமும்.

திடீர் என்று அரசுக்கு ஏன் ஏழை மாணவர்கள் மீது கரிசனம்? கரிசனமும் இல்லை; கத்தரிக்காயும் இல்லை. தனியார் பள்ளிகளில் நடக்கும் கல்வி கொள்ளையை தடுக்க, தனியார் பள்ளிகளின் கட்டணங்களை  முறைப்படுத்த கடந்த 2009ம் ஆண்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 2010ம் ஆண்டில் தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, அந்தந்த பள்ளிகளின் வரவு செலவுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்தது. குழு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும், கட்டணம் குறித்த விவரங்களை தகவல் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழகத்தில் உள்ள 11,500 தனியார் பள்ளிககளுக்கு  கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன. (source : Dhinakaran. Com) ஆனால் அந்த கட்டணங்களை ஏற்க இயலாது என 6,400 தனியார் பள்ளிகள் பகிரங்கமாக அறிவித்தன. சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடும் செய்தன. சில பள்ளிகள் அரசின் கல்வி கட்டணத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தாலும் வெவ்வேறு வகையான வசதிகளை காட்டி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். 2011, மே 16 தேதி அமைந்த புதிய அரசு இந்த பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் என்று பெரும்பாலான நடுநிலையாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்ய முனைந்து உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கியதும் மீண்டும் பின்வாங்கியது. அப்போதும் தனியார் பள்ளிகளின் கல்வி கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்காத அரசு இப்போது ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு திட்டத்தை அறிவித்து இருப்பதன் மூலம் தனியார் பள்ளிகளின் கல்வி கொள்ளைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. எழைமானவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் இட ஒதுக்கீடு பறி போகவும் வாய்ப்புள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்களை குறிப்பிட்ட அளவில் அதாவது ஒரு சிலரை ஏழை மாணவர்கள் பட்டியலில் சேர்த்து தாழ்த்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை ஏப்பம் விடவும் வாய்ப்பு ஏராளம்... அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டிய 20% முழுமையாக செயல்படுத்தாத அரசு, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீட்டை முறையாக, நேர்மையாக சாதிய பின்புலம் இன்றி நடைமுறைப்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை... தனியார் பள்ளிகளின் பெரு முதலாளிகள் ஏழை பெற்றோர்களை மிரட்டி பணம் வசூலிக்கமாட்டார்கல் என்பதற்கும் எவ்வித எவ்வித உத்திரவாதமும் இல்லை... அப்படி செய்தால் ஏழை பெற்றோர்களை பாதுகாக்க என்ன வழி வைத்திருக்கிறது இந்த அரசு??? இதன் மூலம் ஏழை மக்களை தனியார் கல்வி கொள்ளையர்களின் வலையில் தள்ள முயற்சிக்கிறதா அரசு? என்ற கேள்வியும் எழாமல் இல்லை...   

இது தனியார் கல்வி நிறுவனங்கள், கல்வி என்ற பெயரில் செய்து வரும் மாபெரும் வியாபரத்துக்கு அனைத்து மக்களின் ஆதரவை பெற்றுக் கொடுக்கும் முயற்சியே அன்றி வேறில்லை...

- அங்கனூர் தமிழன் வேலு