இனவெறிக்கு எதிராக இடிமுழக்கம்
செய்வோரே ... இன விடுதலைக்கு
குழிபறிக்கும் சாதிவெறிக்கு எதிராக
பிணமென மௌனம் காப்பதென்?
சாதிவெறியில் அவன் பிடிக்கும் அருவாளால்
தமிழர்நிலம் செந்நீரால் நனைகிறது- அதனால்
உழைத்து வேர்த்த எங்கள் உடலெங்கும் இன்று
கண்ணீரால் நனைகிறது !
காதல் நாடகமென்று வேதாந்தம்
பேசுகிறான் - அவனே எங்கள் குடிசைகளை
கொளுத்த காவிக் கொடூரனாய் கையில்
தீப்பந்தம் ஏந்துகிறான் !
சாதிக்கலப்பு கூடாதென்று சாதிப் பெருமை
பேசுகிறான் - அவனே பின்னிரவில் எங்கள்
பெண்களின் கற்பை சூறையாட காமுகனாய்
ஆடுகிறான் !
நல்லிணக்கம் வேண்டுமென்று பொறுப்பாய்
பேசுகிறான் - அவனே நாங்கள் நல்லுடை
உடுத்தினால் வெறுப்பை கக்குகிறான் !
உலகத் தமிழனே ஒன்றுகூடி தமிழீழம்
வேண்டி நிற்க - ஆதிக்க சாதிகளை ஒன்று
கூட்டி தலித் நிலம் அழிக்க முனைவது
நியாயமா? - அதை தமிழ்தேசியம் பேசும்
தமிழினம் வேடிக்கை பார்ப்பது நியாயமா?
சாவுக்கு பறையடித்த பறையர்குலம்
இன்று படிப்பறிவை பெறுவது குற்றமா?
ஊருக்கு உரமாய் ஒண்டிகிடந்த ஒடுக்கப்பட்ட
மக்கள் உரிமை கோருவது குற்றமா?
சீமெண்ணெய் விளக்கு எறிந்த குடிசைகள்
இன்று சாதிவெறியில் குடிசையே
எறிவது நியாயமா?
தமிழ்தேசியம் கோரி முண்டாசு முறுக்கும்
போராளிகளே - சாதிப்பாசம் எமக்கில்லை என்று
நடுநிலைப் பேசும் மேதாவிகளே இதற்குங்கள்
பதிலென்ன?
எரிகின்ற சேரியும் - தமிழனால் தமிழன்
வடிக்கும் குருதியும் தமிழ்தேசிய கோவணம்
அவிழ்ந்து, நடுரோட்டில் அம்மணமாய் ஓடும்
என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கின்றன !
கண் விழித்து பாருங்கள் ...
கள்ள மௌனத்தை களையுங்கள் ...
சாதி வெறிக்கு எதிராக
களமாடுவோம் வாருங்கள் ..!
- தமிழன் வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக