எளிய மனிதர்களின் குரல் இன்றுவரை ஏடுகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நாங்கள் எங்கள் கஷ்டங்களை சொல்லக்கூடாதா? நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? இந்நாட்டின் பூர்வக்குடி மக்களான நாங்கள் இன்றுவரை இந்நாட்டிலே அகதி வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறோமே அது உங்களுக்கு அவமானமாக இல்லையா? சேரிகளிலும், குப்பங்களிலும் எங்கள் வாழ்க்கை கிழிந்த கந்தல்களை போல சிதறுகிறது. எளியவர்களான எங்களுக்கு எங்குமே இலமில்லை, முற்போக்கு சிந்தனையாளர்களையும் சேர்த்தே சொல்கிறேன். முற்போக்குவாதிகளின் முழக்கம் மேடையோடு முடிந்து போகிறது. எங்களின் லட்சியம் எங்களின் நிம்மதியான இரவுகளை நோக்கியே காத்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் அலட்சியப்படுத்தப் படுகிறோம். பணம் படைத்தவர்கள் தங்களுடைய சொத்துக்களை காத்துக்கொள்ள துடிக்கிறார்கள்; ஆனால் இரவு நேரங்களில் எங்கள் தாய்மார்களையும், தங்கைகளையும் காத்துக்கொள்வதே எங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. உயர்சாதிக்காரன் என்று சொல்லிக் கொண்டு குடித்து விட்டு எங்கள் வீட்டிற்குள் நுழைகிறான், அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை எங்கள் மீதே வழக்குப் பதிவு செய்கிறது. காவல்துறையின் தலித் விரோதப் போக்குக்கு அளவே இல்லை. தலித் வாலிபர்களை நள்ளிரவில் புகுந்து கைது செய்து சித்திரவதை செய்வது, தலித் பெண்களை நான்கு பேர் ஐந்து பேர் சேர்ந்து கற்பழிப்பது என்ற கொடுமைகள் அரங்கேறின. வந்தவாசி அருகே பொன்னூர், பெரம்பலூர் அருகே ஒகலூர், மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம், கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் குடியன்குடி இவை அனைத்துமே சேரிகள். ஒரு பாப்பனர் வீட்டிலோ, கவுண்டர் வீட்டிலோ, தேவர் வீட்டிலோ, காவல் துறை அத்துமீறி நுழைந்துவிடுமா? வாச்சாத்திக் கொடுமை யாரால் நிகழ்த்தப்பட்டது? விழுப்புரம் திருக்கோவிலூரில் 4 பழங்குடியினப் பெண்களை சீரழித்தது யார்? முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை சந்தைப்படுத்துவதில் தான் முற்போக்காளராக இருக்கிறார்கள். அவர்களுக்கு சேரிகளை சுத்தப்படுத்தவும் விருப்பம் இல்லை; சுத்தப்படுவதிலும் விருப்பமில்லை. எழுதுகிறார்கள், கண்டிக்கிறார்கள் ஆனால் எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை. காரணம் ஒவ்வொரு எழுத்தாளரும் அரசவை எழுத்தாளர்களாக, கவிஞர்களாகவே இருக்க விரும்புகிறார்கள்.
எளியவர்களை எளியவர்களே கூட ஆதிக்கம் செய்கிறார்கள். ஒரு டீக்கடைக்கு சென்றிருந்தேன். கட்டிட வேலை செய்யும் பெண்மணி அங்கெ டீ வாங்க வந்திருந்தார். கசங்கிய சேலை, தலையிலே முண்டாசு, முகத்தில் வாட்டம் இவைதான் அந்த அம்மையாரை அவர் கட்டிட வேலை செய்பவர் என்றும், எளியவர் என்றும் காட்டிக் கொடுத்தது. டீக்கடைகாரருக்கும், அந்த அம்மையாருக்கும் எதோ வாக்குவாதம், டீ டம்ளர் ஒன்று கூடுதலாக கேட்டிருப்பார் போல, அதற்கு அந்த டீக்கடைக்காரர் எடுத்த எடுப்பிலேயே "அடிங்க கொய்யால" என்ற வாசகத்தை உச்சரிக்கிறார். இதுவே ஒரு வசதி படைத்த பெண்ணிடம் அவர் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்பாரா? படித்த பெண்களிடம் பயன்படுத்தி இருப்பாரா? டீக்கடைக்காரர் பெரிய கோடீஸ்வரர் அல்ல, ஆனாலும் அவரால் அப்படி பேச முடிகிறது என்றால், காரணம் அந்த இடத்திலே குறைந்தபட்ச வர்க்க முரண்பாடே அவரை அப்படி பேச வைத்தது. சாதிகளில் இப்படிப்பட்ட போக்குகள் மிக அதிகமாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர், பணம் படைத்து செல்வந்தராக மாறிவிட்டால் அவரே கூட அதே தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த எளியவர்களை தம்முடைய கட்டுபாட்டில் வைத்திருக்க விரும்புகிறார். இது போன்ற வர்க்க மோதல்களை சாதி அமைப்புகள் ஊக்குவிப்பதாலே சாதியின் தேகத்தில் இன்னமும் சின்னதாக ஒரு சிராய்ப்பைக் கூட நம்மால் ஏற்ப்படுத்த முடியவில்லை. வலியவர்களுக்கும் , எளியவர்ககளுக்கும் மோதலை உருவாக்குவதுதான் சாதி அமைப்பின் முதல் வேலையே.
தாழ்த்தப்பட்டவர்களின் இன்னல்களை உலகுக்கு சொல்வதில் ஊடகங்களும், முற்போக்காளர்களும் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதற்கு மற்றுமொரு சாட்சி. சமீபத்தில் மதுரையை சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பு நடத்திய கள ஆய்வில், கடந்த 17 ஆண்டுகளை விட, கடந்த ஓராண்டில் தலித் படுகொலை மிக அதிக அளவில் நடப்பதாக கண்டறிந்து உள்ளது. அந்த அறிக்கையில் சொல்லி இருப்பது " அவர்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்ட 370 வழக்கில் 13 பெண்கள் உட்பட 56 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லி இருக்கிறது. இதை ஊடகங்கள் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டாமா? முற்போக்குவாதிகள் அரசை கண்டித்து கட்டுரைகளை, கவிதைகளை வ்ரைய வேன்டாமா? யாரும் இதைப் பற்றி பேச தயாராக இல்லை. "தமிழ்தேசியத்தை வலியுறுத்தி வெளிவரும் ஒரு மாத இதழுக்கு நான் கட்டுரை எழுதி கொண்டிருக்கிறேன். இந்த மாத கட்டுரையாக இந்த சம்பவத்தை பற்றியும், அரசின் தலித் விரோத போக்கையும் கண்டித்து எழுதலாம் என்றிருந்தேன். அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் என்னை தொடர்பு கொண்ட போது இதை நான் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. அதாவது " அடுத்த மாதம் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை திறந்து வைக்க முதல்வர் வருகிறாராம். அங்கெ தமிழ்தேசியவாதிகளும் அதிக அளவில் கூடுவார்களாம், இதழ் விற்பனை அதிகமாக இருக்குமாம். அதனால் அரசை கண்டித்து கட்டுரை வரைவது சரியாக இருக்காது என்றார். அப்போது தான் நினைத்தேன் எளியவர்களின் இன்னல்கள் இன்றைக்கும் ஏடுகளுக்கு எட்டாக்கனி போல என்று.
தண்ணீர் எடுக்கவும், பொது சாலைகளில் நடமாடவும், பொது இடங்களில் கூடவும் அனுமதி மறுக்கப்பட்ட சமூகம் இன்று தலைநிமிர்ந்து, தன்னேழுச்சிப் பெற்று, முந்தைய காலங்களில் அவர்கள் தம் முப்பாட்டன்களின் மீது நடத்திய காட்டுமிராண்டி செயலுக்கு சாட்சியம் சொல்ல முனைவது, சமகாலத்தில் தம்மீது நிகழ்த்தும் காட்டுமிராண்டி செயலுக்கு பதிலடி கொடுப்பது அவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டி இருக்கிறது. அதனால் எங்கள் குரல்களை முடக்குகிறார்கள், எங்கள் குடிசைகளை கொளுத்துகிறார்கள். எங்களிடம் தட்டு முட்டு சாமான்கள் தான் இருக்கின்றன; அவற்றில் நான்கு கூடுதலாக ஆனாலும், நாங்கள் நாகரிக உடைகள் உடுத்தினாலும் அவர்கள் வயிறு எரிகிறது, அந்த வயிற்றெரிச்சலில் தான் எங்கள் சேரி எரிகிறது. இது போன்ற சமூக அவலங்களை காண சகிக்காமல், பொறுத்து கொள்ள முடியாமல் இந்த கேவலமான, கேடு கேட்ட அமைப்பை எம் போன்றவர்கள் மாற்றத் துடிக்கிறார்கள். முழுப் புரிதல் இல்லாவிட்டாலும், ஒரு வேகத்திலோ அல்லது ஆற்றாமையிலோ நாங்கள் போராடத் தயாராகிறோம். அதை தான் சாரு நிவேதா போன்ற முற்போக்கு முகமூடிகாரர்கள் கழிவறை கிறுக்கல் என்று தம் வயிற்ரெறிரிசச்சலை கொட்டி இருக்கிறார்கள் . இன்னும் சிலர் " நாட்டில் எல்லோரும் அவரவர் நலன் சார்ந்து யோசிக்கிறார்கள். உன்னால் எப்படி திருத்த முடியும்? உன்னால் முடியாது...யாரும் உனக்கு துணைக்கு வரமாட்டார்கள், உன் குடும்பம் நடுத்தெருவில் நின்றால் யாரும் கவலைப்படமாட்டார்கள், உன்னை அழித்து விடுவார்கள். முதலில் உன் குடும்பத்தை பார்" என்றெல்லாம் கரிசனத்தோடு கூடிய வயிற்றிச்ச்சலை கொட்டுகிறார்கள். இதே கரிசனக்காரர்கள் தான் நேற்றைக்கு எம் போன்றவர்கள் கிளம்பிய போது இதே கரிசனம் காட்டி முடக்கினார்கள். நாளை யாராவது கிளம்பினால் அவர்களுக்கும் இதே கரிசனத்தை தான் காட்டுவார்கள்; ஆனால் ஒருபோதும் அவர்கள் போராடவோ அல்லது போராடுபவர்களுக்கு உறுதுணையாகவோ நிற்கமாட்டார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் " இந்த பாறையை நாங்கள் தூக்கி விடுவோம் என்று நம்புகிறோம், முடிந்தால் தூக்குகிறோம், முடியாவிட்டால் அந்த பாறை எங்கள் தலையில் விழுந்து நாங்கள் சாகிறோம்." எங்கள் மீது நீங்கள் ஏன் கரிசன படுகிறீர்கள். நீங்கள் பரிதாபப்படும் அளவுக்கு எங்கள் நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை... எங்கள் மீது கரிசனப்படும் நீங்கள் எங்களோடு சேர்ந்து இந்த சமூகத்தின் மீது கரிசனப்பட்டால் குரல் வலிமை கூடுமல்லவா? மாறாக ஏன் என் குரலையும் நெரிக்க நினைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் அடக்குமுறைகளை சகித்துக் கொண்டிருக்கவோ, அல்லது அழுது புலம்பவோ எங்களிடம் இனியும் கண்ணீர் இல்லை. மண்ணுக்குள் புதையுண்ட கசடுகள் தங்கமாக மின்னுவதைப் போல, உங்களால் எங்கள் முப்பாட்டன்கள் சிந்திய கண்ணீர் இன்று கடைசி மனிதனின் கோபமாக வெடிக்கிறது. வெடிக்கும்....
- தொடர்ந்து கோபப்படுவோம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக