அக்கா வீட்டுக்கு போயிருந்தான் குமார் . அம்மா சொல்லிவிட்ட சேதியை சொல்லிட்டு இரவே திரும்பிடத் தான் திட்டம். அக்கா வீட்டில் தங்குவது குறித்து எந்த யோசனையும் இல்லை. அது கோழி கூடுபோல சின்ன குடிசை. மாமா, அக்கா, அக்கா பொண்ணுங்க ரெண்டு பேரு, மாமா பையன், மாமாவோட அப்பா, அம்மா மொத்தம் ஏழு பேரு அந்த குடிசையில தான் தங்கி இருக்காங்க. எட்டாவதா தானும் அங்க தங்கி அவங்களுக்கு சங்கடத்த கொடுக்க விரும்பல அவன். ஆனா அக்கா அவன விட்டப்பாடில்ல. இருடா தம்பி.. நாளைக்கு மாடறுப்பானுவ.. எடுத்து ஆக்கி தர்றேன். திண்ணுட்டு அம்மாக்கு எடுத்துட்டு போவ. சொல்லி நச்சரிக்க தொடங்கிச்சு. அக்காவோட மாமனாரும் விட்டபாடில்ல. என்னப்பா நீயி... கால்ல சுடுதண்ணி ஊத்துனவன் போல துடிக்கிறியே .... இரு தம்பி நாளைக்கு போவலாம். நல்லா இளங்கறியா போடுவானுவ. ராத்திரிக்கே சொல்லிவச்சா தான் காத்தால கறி கிடைக்கும். பக்கத்து ஊரு காரனுவளுக்கு எப்படித்தான் தெரியுமோ, சல்லுன்னு ஓடியாந்து எல்லா கறியவும் வாங்கிட்டு ஓடிருவானுவ. எங்கூருல அறுக்குற மாடுதான் நல்லாருக்கும் ன்னு சுத்துப்பட்ட ஊருசனமும் பேசும். மொலமொலன்னு கிழவர் கறி பெருமையை பேசிக்கிட்டே இருந்தாரு.
"சித்ரா....... நா போய் ரெண்டு பங்கு சொல்லிட்டு வந்துடுறேன்." ன்னு வேகமா சொல்லிட்டு எழுந்து நடந்தார். வயசு எழுவது கிட்ட வரும் ன்னு நினைக்கிறேன். நடையில கோணல் மானால் எதுவுமில்ல. அச்சுபிசகாம நேரா நடக்குறாரு. ஆச்சரியமா பாத்துகிட்டே இருந்தான். அவன்கிட்ட வந்து அக்கா உக்காந்திச்சி. சட்டப் பையில மூணு நோட்டு பணத்தை திணிச்சிட்டு காதுல குசுகுசு ன்னு சொல்லிச்சி... "மாமனுக்கு தெரியாம வச்சிக்கோ..." காலையில மாமன் கொடுத்தா வாணாம் ன்னு சொல்லாத.. வாங்கிக்க..." கிழவி உள்ளருந்து சித்ரான்னு அக்காவ கூப்பிட்டுச்சி. உத்தா உறவுக்குகிட்ட நாலுவார்த்த வடிக்க விடுறாள பாருன்னு முனகிகிட்டே அக்கா எழுந்து போயிடுச்சி....
மணி ராத்திரி எட்டுக்கு மேல ஆயிடுச்சி. அது வெய்ய காலம். நிலாவெளிச்சம் பட்டபகல் மாறி இருக்கு. வின்மீனுங்க வேற கோலப்புள்ளி மாதிரி பக்கத்துக்கு பக்கத்துல மின்னுதுவோ... அவங்கவங்க வீட்டு வாசல்ல பொழுது சாயவே தண்ணி ஊத்தி வச்ச இடத்தில ஆளாளுக்கு பாய போட்டு படுக்க ஆரம்பிச்சிடுங்க சனங்க. எதிர்த்த வீட்டு வாசல்ல, நிலா வெளிச்சத்துல ஒரு குடும்பம் சோறு தின்னுகிட்டு இருக்காங்க. பக்கத்து வீட்டு வாசல்ல கிழவர் ஒருவர் கட்டில் போட்டு உக்காந்து பீடி குடிக்கிராப்ள... தெருவிளக்கு முன்னாடி பொட்ட புள்ளங்க கோ-கோ வெளையாடுதுங்க. அதுக்கு அந்தாண்ட பசங்க கபடி. கொஞ்சம் தள்ளி பெரியாளுங்க சீட்டு விளையாடுறாங்க. பொசாய 6 மணிக்கு சோறு தின்னுட்டு போன புள்ளிவ இன்னும் காணலன்னு கிழவி பேச ஆரம்பிச்சிச்சி. பள்ளிக்கூடம் விட்டு வந்தா புக்க எடுத்து கண்ணால பாக்க மாட்டேங்கிதுவோன்னு ஒரே புலம்பல் ... பெரியவ, எட்டாவது, சின்னவ 6வது படிக்கிறாளுங்க. பையன் இப்பதான் ரெண்டாவது போறான். கிழவி அதுக்குத் தான் திட்டி கிட்டு இருக்கு. ஆம்பளபய எங்கினாச்சும் கிடப்பான். பொட்ட சிரிக்கிவ எங்க போனாளுவ தெரியலையே. ஆட்டக்காரிச்சி மாறி மை வச்சிகிட்டு திரியாருளவளே. இப்பத்தான் மசுரு மொளைக்காதவன் கூட, பொண்டாட்டி தேடி அலையுறான். வரட்டும் இன்னிக்கு அவளுவ. மேனாமினிக்கியாட்டம் ஆட்டிகிட்டு திரியுற அந்த மசுர அறுத்தா தான் அடங்குவாளுவ. சித்திரா அந்தாண்ட பாரேன்... அவளுவ நிக்கிறாளுவலான்னு. 'வருவாளுவ இர்றேன்' ன்னு அக்கா முறைக்க... நீ கொடுக்குற துணிச்ச தாண்டி ஆடுராளுவ. புள்ள வளக்குறாபாரு புள்ள .. வளப்பங்கெட்டதனமா ன்னு மருமவளையும் சேர்த்து திட்ட ஆரம்பிருச்சி கிழவி.
கூட்டாளிங்க கூட எங்கயோ போயிட்டு குமாரோட மாமா வந்தாரு. எப்ப மாப்ள வந்த ன்னு விசாரிச்சார். அப்பா, அம்மா, ஊரு, படிப்பு பத்தி பொதுவா விசாரிச்சிட்டு, அவங்க அம்மாகிட்ட போனாரு.
"ஏம்மா கத்திகிட்டு இருக்க?..."
"ச்சீ... எட்டப் போடா மசுறான் மொவன... மூணு புள்ள பெத்த பொறவு இன்னும் என்னாடா கூட்டாளிங்க வேண்டிகிடக்கு?... உன் வழப்பம் தான உன் புள்ளிவளுக்கும் வரும். உங்க வம்சமே வழப்பம்கெட்ட வம்சம் தான "
"இப்ப ஏன்னா ஆயிப்போச்சு... ஏன் கத்திகிட்டு இருக்க"
"ஹ்ம்ம்..... பொசாய போன புள்ளிவள காணோம்ன்னு தேடுறன்... கேக்குறான் பாரு கேளுவி. புள்ள பெத்துப் போட்டா மட்டும் ஆச்சா... எங்க போவுதுவ, எங்க வருதுவன்னு பாக்க வாணாம்... ங்கொப்பன் புத்திதான உனக்கு..."
"அட போம்மா... வெளாட்டு புள்ளிவ... எங்கியாவது வெளாண்டுட்டு வரும் விடும்மா..." ன்னு சொல்லி எழுந்து உள்ள போய்ட்டார்.
இன்னும் ஆறு மாசத்துல பெரிய மனுசியா ஆவப்போறவள வெளாட்டு புள்ளன்னு சொல்லிட்டு போறான் பாரு தம்பி... குமார் பக்கம் திரும்பிச்சி கிழவி. இவன்கூட சுத்துற பயலுவளுக்கு காடு, காணின்னு இருக்கு... இவனுக்கு என்ன மசுரு இருக்குன்னு அவனுவ கூட இவன் சுத்துறான். கோமணத் துணியாட்டம் கால் காணி கிடக்கு. அதுல என்ன விளையும். மானமும் முன்னமாரி பெய்ய மாட்டேங்குது. விளைச்சலும் ஒன்னும் சொல்றமாரி இல்ல. ஊருக்கு வந்தா நாலு நாளு சூத்த தரிச்சி உக்கார மாட்டேங்கிறான். மூணு புள்ள பெத்தும் திருந்த மாட்டேங்கிறான் பாரு ன்னு ஒரே புலம்பல். "கறி சொல்லப் போன கிழவனையும் இன்னும் காணலையே.. எங்க பொய் தொலைஞ்சாப்ல மனுஷன். போனா போன இடம், நின்னா நின்ன இடம்.. குடும்பக்காரன் செய்ற வேலையா இது... ச்சீ இவனுங்க கூட்டத்துல வந்து மாட்டிகிட்டு மாரடிக்கிரனே ..." கிழவியின் புலம்பல் உச்சஸ்தாயில் போய்க்கொண்டிருந்தது. உள்ளருந்து அக்கா கூப்டுச்சு. எழுந்து வீட்டுக்குள்ள போனான் குமார். குமார் உள்ள போனதும் மாமா வெளிய வந்துட்டாப்ல.
"என்னாக்கா கூப்ட..."
மொல்ல அக்கா பேசிச்சி... அந்த கிழவி எதாச்சி பொலம்பிகிட்டு இருக்கும் அங்க ஏன் உக்காந்து இருக்கவன்... அதான் உள்ள கூப்புடன்... போன வாரம் இந்தூரு புள்ள, மண்ணாங்கட்டி காரியத்துக்கு வந்தப்ப, அம்மாக்கு நூறு ரூவாய் பணம் குடுத்துட்டன் வாங்கிக்கிச்சா... வீட்டரிசி நாலு மாகாணி கொடுத்துட்டனே... அம்மா வச்சிருக்கா... நடக்கா வந்து எடுத்துட்டு போயிடுச்சா...
".................தெரியல க்கா..."
"ஏண்டா கால்ல செருப்பு இல்லாம வந்த.. செருப்பு இல்ல?"
"இருக்கு... மறந்தாப்ல வந்துட்டன்"
"செருப்பு போடக்கூட மறப்பானா மனுசன்? போவும்போது திட்டக்குடில நல்ல செருப்பா வாங்கிட்டு போ ... அம்மாகிட்ட காசு கொடுக்காத..."
"நானென்ன சின்ன பையனா... என்கிட்டே போயி இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க....? எனக்கு தெரியும்.... விடுக்கா"
"ஆமா இவன்தான் இப்ப பெரிய மனுசனாயிட்டான்..." என்ன ஆயி என்னாவ போவுது... என் கையாள பத்து ரூவா கொடுக்கறாப்ல இருக்குமா?" சரி அத வுடு. நீ உள்ளாரயே படுத்துக்க... மாமா உன்கூட படுதுக்குவாரு... புள்ளிவளும், நானும் கிழவி கூட படுத்துக்கிறோம்.... அந்த கிழவர் வாசல்ல படுதுக்குவாப்ள...
கிழவர் வந்தார்... விளையாடிகிட்டு இருந்த புள்ளிவள இழுத்துகிட்டு வந்தார். அக்கா மவன் கிழவர திட்டிகிட்டே வந்தான். வந்ததும் வராததுமா கிழவி பெரியவள திட்ட ஆரம்பிச்சிச்சி.
"யேய்... போய் சாப்ட்டு படுங்கடி ..." கிழவி சொன்னது. வாணாம்... பசிக்கல ன்னு மூணும் சொல்லிட்டு கிழவி விரிச்சி போட்டிருந்த போர்வையில போய் படுத்துகிச்சிங்க...
கிழவரும், கிழவியும் மொல மொலன்னு பேசிக்கிட்டே இருந்தாங்க.
"ரவ வெத்தல செருவு இருந்தா கொடேன்." கிழவி கேட்டுச்சி
"ங்கொப்பன் லாரியில மூட்ட, மூட்டயா கொண்டாந்து கொட்டுன காசு பணம் பேங்குல அடுக்கி கிடக்கு... போய் ஒரு கட்டு எடுத்து வாங்கிக்கயேன்"
"மான மருவாத கெட்டுப் போய்டும் பவுசி கெட்டப்பயல ... இவிங்க மணியக்கார் வேல பாக்குறதுக்கு, எங்கப்பன் மாளிவீடு கட்டிக் கொடுப்பான் இரு..." கோமணத் துணிக்கு ஐவேசி இல்லாதவ மொவனுக்கு பேச்சப்பாரு..."
"ஆமாமாம் ... ங்கொப்பன் வீட்டுலருந்து நீ கொண்டாந்து கொட்டுனதுல தான் என் பொழப்பு ஓடுதா... வாயல் பொடவய கட்டிக்கிட்டு வந்த வலப்பங்கெட்டவள... வாய மூடுடி..."
வாய கிண்டாத டா வண்ணாத்தி மவன... நீ பெரிய மவராசன்னு நினச்சி தான் எங்கப்பன் உன்கிட்ட என்ன கொண்டாந்து விட்டுட்டான்... இங்க வந்து என்னத்த வாரிகிட்டன். வந்த நாளா வக்கத்து தான கிடக்கேன். என் அப்பன் வீட்டுல கஞ்சிய குடிச்சாலும் கண்ணுக்கு மவுசா தான் இருந்தன். இங்க வந்துல்ல என் பவுசு போச்சு... அண்ணன் தம்பின்னு அண்ட வுட்டியா? இல்ல பாடி பரிதாசின்னு பாக்கத்தான் வுட்டியா? என் வாய கிளராத போய்டு பலபட்டற மவன ... சொல்லிப்புட்டேன்...
"போடீ போக்கத்தவன் மவள... அய்வி அய்வி தான் என் வீட்டையே அஞ்சிகாசுக்கு ஐவேசி இல்லாம ஆக்கிபுட்ட.. பேரன் பேத்தி எடுத்த பொறவு அய்வ என்னாடி வேண்டி கிடக்கு..." அயப்பு வந்தா போயி சேரவேண்டிய காலத்துல அய்து புலம்புறா..."
" ஆமாண்டா ப்பா... நா அழுவி என்னாவ போவுது... பொட்டக் கோழி கூவி பொழுது விடியுமா... இத்தன வருஷத்துல, நல்ல நாளு, பெருநாளுக்கு ஒரு சீலத்துணிக்கு வழியுண்டா... நா வாங்கி வந்த வரம் அப்படி. யார சொல்லி நோவ"
இன்னும் உங்க கண்ணு அடங்கலையா ... கிழவி ஏன்னா அவர்கிட்ட வம்படிச்சிகிட்டு இருக்க. வாய மூடிகிட்டு சும்மா இருக்க மாட்ட ..
ஆருடி இவ... ஆம்பளைனா என்னாமுனா பேசிபுடலாமா... வாலக்கருவாட்டுக்கு வக்கில்லாம கிடந்தவன் வாய்க்கு வந்தத பேசுறான்.. நா வம்படிக்கிறனா?
"அவரு சம்பாரிக்காம தான் இத்தன வருசமா நீ குடும்பம் நடத்தினியா?"
"ஆமாமாம் அவரு சம்பாரிச்சி தான் மாளிவீடு கட்டி வச்சிருக்காரு பாக்கல..."
"மாளிவீடு கட்டுனாத்தான் ஆச்சா? மூனுவேல முழுசா சோறு திங்கல? அது எங்கிருந்து வந்துச்சாம்?"
"வாசல்ல படுக்க போட்டதுக்கே இந்த பேச்சு பேசுறாளே ... கட்டுலு மெத்த மட்டும் வாங்கி போட்டிருந்தான் தலைல தூக்கிகிட்டு ஆடுவா போல ..."
" ஏம்மா நீ அவகிட்ட வாயக் குடுக்கிற... அவ வம்ச பொறப்பே எம்மாம் குடுத்தாலும் இல்லன்னு கைய விரிக்கிறது தான. நீ போய் படும்மா..." கிழவர் சொன்னதும் அக்கா உள்ள வந்துச்சி...
"என் வம்சத்த எதுக்கு இயிக்கிறவன். என்னத்த அவங்களுக்கு எடுத்துட்டு போய் கொட்டுன? என்ன கட்டிக்கிட்டு வந்தநாளா எங்க அப்பனாத்தாளுக்கு ஒத்தரூவாக்கு வெத்தல செருவு வாங்கி குடுத்திருப்பியா? வாய மூடிகிட்டு குந்திரு. இல்லனா மான மருவாத போய்டும்.
இப்பிடியே கிழவரும், கிழவியும் எம்மாம் நேரம் சண்ட போட்டாங்களோ. விரிச்சி போட்டிருந்த பாய்ல மல்லாந்து படுத்தது தான் தெரியும். எப்படி தூங்கினானோ தெரியல... மாமாவோட குறட்டை சத்தம் தான் எழுப்பி விட்டுச்சி. மணியார் வீட்டு மோட்டார் ஓடுராப்ள சத்தம். இதுக்கு வீட்டுக்கே போயிருக்கலாம் ன்னு நினைச்சி தவிச்சான். இனி தூக்கம் அவ்ளோதான். புரண்டு புரண்டு படுக்கிறான் தூக்கமில்ல. கண்ணு எரிச்சல் வேற. தூங்க விடாம அவர் பாட்டுக்க மோட்டர போட்டாப்ல சத்தம் போட்டு தூங்குறாரு. மேக்கூர மோட்டுவானத்துல பல்லி ஓடுற சத்தம் வேற பயமா இருக்கு. ஒருபக்கம் செவுரு இல்ல. அந்த பக்கம் வழியா பூச்சி பூரான் வந்தா என்னாவும். தேவையில்லாத யோசனை வேற. இந்த மனுசன் நல்லா தூங்குராப்ல ன்னு அவர் மேல கோவம். கோவத்துல மாமா கையை புடிச்சி கிள்ளிவுட்டா ன். முயிச்சிகிட்டார். தூங்குராப்ள நடிச்சிகிட்டே அவர பாக்குறான். சுத்தியும், முத்தியும் பார்த்திட்டு மறுபடி அவர் தூங்க ஆரம்பிச்சிட்டார். மறுபடி குறட்டை... அப்படியும் இப்படியுமா புரண்டு, புரண்டு தூக்கமில்லாம தவிக்கிறான். பொழுது விடிஞ்சா போதும், கறியும் வாணாம் காசும் வாணாம்... வீட்டுக்கு போயி நல்லா தூங்கணும். மணி மூணுக்கு மேல இருக்கும். தூரத்துல நாய் குரைக்கிற சத்தம். ஒன்னிரண்டு இல்ல. கும்பலா சேர்ந்து குறைக்கிதுங்க. என்னவா இருக்கும்? ஏன் இந்த நேரத்துல இவ்ளோ நாய்ங்க கத்துதுங்க.. பல யோசனை. கூடவே பயம்.
நாலஞ்சி வீடு தளி குடுகுடுப்ப சத்தம். நேரம் ஆவ ஆவ சத்தம் கிட்டக்கயே கேட்க ஆரம்பிச்சிச்சி. குடுகுடுப்பை காரன்தான் வீட்டுக்கு வீடு குறி சொல்றான். அக்கா வீடு தான் அடுத்தது. இங்க வந்து என்ன சொல்வானோ தெரியல. விடியற்காலை வந்து குறி சொல்லிட்டு காலையில வந்து காசோ, அரிசியோ வாங்கிட்டு போவாங்க. வெய்யில் காலத்துல தான் வருவாங்க. நடுச்சாமத்துல சுடுகாட்டுக்கு போய் குறிகேட்டுவந்து சொல்வாங்கன்னு பெரியவங்க சொல்வாங்க. அது உண்மையோ பொய்யோ தெரியாது. அவங்க குறிசொல்லும் போது, எழுந்து வெளிய வரக்கூடாதுன்னு சொல்வாங்க. வந்தால், சாபம் கொடுத்திருவாங்க ன்னு சொல்வாங்க.
குடு... குடு...குடு...
நல்லகாலம் வருகுது....நல்லகாலம் வருகுது....
குடு... குடு...குடு... குடு...
ராப்பகலா உழைக்கிற நிம்மதி தான் ரவயும் இல்ல
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
கண்ணுறங்கி நாளாச்சி கண்ணுதண்ணி கடலாச்சி
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
நிம்மதியா நீ தூங்கி வருசம் கணக்கு ஆயிப்போச்சி...
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு...
கவலய விட்டுத்தள்ளு காளி உனக்கு துணையிருக்கா...
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு...
வீட்டுல நல்லகாரியம் நடக்கப் போவுது...
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
ஜக்கம்மா மனசு வச்சிட்டா.... ஜென்ம பகை தீர்ந்து போகும்...
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
ஆத்தாவோட பார்வ பட்டு நாளு எட்டாச்சி...
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
நீ பட்ட பாடு வீணாவது...
குடு... குடு...குடு... குடு...
மக்கமாரு நல்லா இருக்கும். மனச மட்டும் தளர விடாத
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
நல்லகாலம் வருகுது....நல்லகாலம் வருகுது....
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
கடுகுடுப்பையின் சத்தம் நகர்ந்து போவது போல் இருந்தது. சத்தம் இப்போது அடுத்த வீட்டின் முன்பாக கேட்கிறது. கிழவர் மொல்ல குரலெடுத்து கிழவியிடம் பேசுவது கேட்கிறது. பெரியவ தான் செலவு வெச்சிடுவா போலிருக்குன்னு கிழவி சொல்ல, ஆமாங்குரன் குடுகுடுப்பகாரனும் அதான் சொல்றான்னு நினைக்கிறேன். குடுகுப்பையின் சத்தம் இப்போதும் சுத்தமாக கேட்கவில்லை. மணி நாளாச்சா பாரு... மாடறுப்பானுவ. நா போயி ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுறேன்ன்னு கிழவர் கிளம்பிட்டார்...
கிழவி சொன்னது போல, அக்கா மவ பெரிய மனுசியாயிட்டா, எப்படியும் பத்தாயிரத்துக்கு மேல வேணுமேன்னு நினைக்கும் போதே தூக்கம் எங்கே போனதோ தெரியல தாய்மாமனுக்கு ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக