புதன், 26 செப்டம்பர், 2012

நானா சாடுகிறேன் சமுதாயத்தை?

சமுதாய சாடல்கள், 
எண்ணற்ற ஏக்கங்கள்,
வகைதொகை இல்லாமல் 
வருத்தங்கள் என்று உங்கள் 
பக்கம் சலிப்பை உண்டு 
செய்கிறது! - இது என் 
இன்ப துன்பங்களை
பகிர்ந்து கொள்ளும் என்
அன்பு நண்பரின் வருத்தம் !

அன்பு நண்பரே !
வீழ்த்தவே முடியாது
என்றிருந்த ஆங்கிலேயப்
பேரரசை வீழ்த்தி இருக்கிறார்கள்;
சத்தியமாக முடியாது என்று
சொன்ன சந்திரனில் இன்று
சரித்திரங்களை எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்;
கடிதங்கள் படிந்த
கைகளில் இன்று
கணிப்பொறி விளையாடுகிறது;
மனிதனின் கண்ணுக்கே
புலப்படாத கருவறையில்
இருப்பது ஆணா? பெண்ணா?
என்று அடுத்த நொடியிலே
தெரிந்து கொள்கிறார்கள்;

எத்தனையோ மாற்றங்கள்
எண்ணிலடங்கா ஏற்றங்கள்
அத்தனை மாற்றங்களையும்
சுவைத்துக் கொண்டு இருக்கும்
இந்த சமுதாயம் எம்மக்கள்
வாழும் சேரிக்குள் மட்டும்
எந்த மாற்றத்தையும்
தந்ததில்லையே?
இது எம்மக்களின் விதியா?
இல்லை அவர்கள் மீது
நடத்தப்படும் சதியா?

நானா சாடுகிறேன் சமுதாயத்தை?
பொய்யானவர்களை சாடுகிறேன் !
புரட்டுகளை எதிர்க்கிறேன் !!
இருட்டில் கிடப்பவர்களை
உசுப்புகிறேன்!!

ரோடு போட தேவை எம்மக்கள்;
ஆனால் அவர்கள் அந்த ரோட்டில்
நடக்ககூடாது ! வீடு கட்ட வேண்டும்
சேரிசனம் - ஆனால் அவர்களுக்கு
என்று சொந்த வீடு இருக்கக்கூடாது !!
கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும்
எம் மக்கள் - ஆனால் அவர்கள் அருகில்
சென்றால் தீட்டு !!! ஓட்டு போட வேண்டும்
இந்த ஒடுக்கப்பட்ட சனம் - ஆனால் வென்ற
பின் அந்த தெருவிலே நடந்தால் தீட்டு!!!

எல்லாம் நவீனம் என்று பெருமை
பேசுபவர்கள் எத்தனைப் பேருக்கு
தெரியும் நவீன தீண்டாமை ?
ஆசை ஆசையாய் செல்போன்
வாங்குகிறோம் - அதில் பொது
இடத்திலே பேசக்கூடாது !
ஆண்டுபலவாய் வியர்வை சிந்தி
ஒரு மோட்டார் சைக்கிள் வாங்குகிறோம்
அந்த வண்டியை ஊர்த்தெருவிலே
ஓட்டக்கூடாது - பள்ளிக்கூடம்
போகும் போது எம் பிஞ்சு குழந்தைகளின்
பாதம் நோகுமென்று செருப்பு
வாங்கி தருகிறோம் அந்த செருப்பை
கையில் தான் அந்த பிஞ்சுகள் சுமக்கின்றன!!
ஊரிலே இருந்தால் பிழைக்கவும் முடியல
சாதிக் கொடுமையும் தாங்கல என்று
எத்தனை பேர் சொந்த மண்ணை விட்டு
நகரங்களில் பொய்யான சிரிப்பில்
நெளிந்து கொண்டு இருக்கிறார்கள்

நவீன உலகில் நடனமாடும் இந்த
சமுதாயம் எம்மக்கள்
நவீனப்படுவதை தடுப்பதேன்?
மீண்டும் சொல்கிறேன்
பொய்யானவர்களை சாடுகிறேன் !
புரட்டுகளை எதிர்க்கிறேன் !!
இருட்டில் கிடப்பவர்களை
உசுப்புகிறேன்!!

- அங்கனூர் தமிழன் வேலு

திங்கள், 24 செப்டம்பர், 2012

அம்மணமாய் போர்த்தொழுவோம் வாடா!


அம்மணமாய் போர்த்தொழுவோம் வாடா!
----------------------------------------------
ஏதோ மிதப்புல 
சாதிக் கொழுப்புல
ஆண்டுபலவாய் நம்மை
அவன் ஆண்டது போதாதா?
பசியும் பிணியுமாய்
வக்கற்ற இனமாய்
ஊருக்கு ஓரமாய் நாம்
செத்து மாண்டது போதாதா?

மண்ணை இழந்தோம்;
நம் மானம் இழந்தோம்;
இனி இழக்க ஒன்றுமில்லை
மிச்சமிருக்கும் உசுரோடு
சொச்சசமிருக்கும் உணர்வோடு
நாம் வாழ்வது கூடாதா?
உரிமை பேசவந்த உத்தமர்
பலரும் அவனுக்காய் வாழ்ந்திட்டார்;
சாதி ஒழிக்கவந்த பெரியவரும்
சாதியோடு செத்திட்டார்
நமக்காக வாழ்ந்தார்கள் என்று
ஏட்டினில் வரைந்தார்கள் - நம்பி
நமக்காய் வாழ்ந்தார்கள் என்று
பெருமை பேசி, உழுது களைத்து
சேரியில் உழன்றும் அவன் பெயரையே
சொன்னோம் நன்றி மறவாமல் அவன்
நமக்கு அளித்த பரிசு இலவச
புழுத்த அரிசி!

எங்கோ இருந்து வந்தவர்
எல்லாம் நம்மை ஆளத் துடிக்க
இந்த மண்ணிலே பிறந்த
நாம் மட்டும் அவன் வீட்டு
பண்ணையிலே கிடந்தோம்
ஏர் தொழுதவனும்,
போர் தொழுதவனும்
சாக்கடையில்
உழலும்போது
நம் வியர்வையில் பிழைக்கும்
அவன் மட்டும் சாணக்கியன்
ஆனது எப்படி?
நம்மை சாதியாய்
பிரித்தான் - நம்
பிழைப்பை சந்தி
சிரிக்க வைத்தான்;
பந்தி போட வைத்தான்
நம் பசியில் அவன் மட்டும்
சிரித்தான்; ஆயிரம்
ஆண்டுகள் அடிமையாய்
கிடந்தோம்; அதனால் அவன்
ஆணவத்தில் சிரித்தான்;
காலம் இப்படியே
மறையுமா? எங்கள்
வாழ்வின் இருள் மறையுமா?
என்ற ஏக்கத்தோடு நம்
பாட்டனும் செத்துவிட்டார் ;
அவர் பிள்ளை நம் அப்பனும்
சாணி சுமந்தார்கள்!

நம்மை அடிமை செய்ததில்
அவனுக்கு எவ்வளவு
பங்கிருக்கோ சமபங்கு நாம்
அடிமை பட்டதற்கு
நமக்கும் உண்டு !
எப்படி என்று கேட்கிறீரா?
பார்ப்பானுக்கு அடிமை
தேவனும்; வன்னியனும்!
அடிமை தேவனுக்கும்
வன்னியனுக்கும் அடிமை
பறையனும்; பள்ளனும் !
அடிமை பறையனுக்கும்
பள்ளனுக்கும் அடிமை
சக்கிலியும்; நாவிதனும் !

அடிமையாய் இருப்பவனுக்கு
இன்னொரு அடிமை இருப்பதில்
மட்டற்ற மகிழ்ச்சி என்று
மகிழ்ந்து போனோமே ஒழிய
தானும் அடிமை
என்பதை ஒருகாளும்
அறிய மனமில்லை !
இப்படி நம்மை பிரித்து
வைத்ததாலே அவன் ஆளத்
துடிக்கிறான் - நாம்
அழக்கூட தெம்பில்லாமல்
அவிந்து போகிறோம் !

ஓ! தாழ்ந்த தமிழகமே
என்று அண்ணா சொன்னார்;
வேறு வழியில்லை என்னை
நானே சொல்லும் நிலைமை
ஓ! தாழ்த்தப்பட்ட சமூகமே
நீ இன்னமும் அடிமையாய்
தான் இருக்கிறாய்;
உனக்கெதற்கு
இன்னொரு அடிமை?
சாதியாய் பிரிந்தது போதும்;
நாம் சாணி சுமந்தது போதும் ;
நமக்குள் சண்டை இட்டது போதும்;
நம் பிழைப்பு
சந்தி சிரித்ததும் போதும் ;
பண்ணையில் கிடந்தது போதும்
நம் பிள்ளை பசியால்
துடித்ததும் போதும்; உழுது
உழுது கொடுத்த உனக்கு
கோவணம் தான் மிச்சம்
இன்னும் சிலகாலம்
இப்படியே இருப்போமானால்
கோவணம் போயி அம்மணமாய்
புலம்புவதை தவிர வேறு
கதியில்லை !

உழுது உழுது நம் உடுப்புகள்
பறிபோனதுதான் மிச்சம் ;
அழுது அழுது நம் கண்ணீரும்
கேலியானதுதான் சொச்சம் ;
கால் வயிற்றுக் கஞ்சிக்கு
கோவணத்தோடு காட்டில் உழுதது
போதும் தமிழா ! - நம் உரிமைக்காக
அம்மணமாய் நடுரோட்டில்
போர்த்தொழுவோம் வாடா தோழா!

- அங்கனூர் தமிழன் வேலு

புதன், 19 செப்டம்பர், 2012

நெருப்பாய் எழுடா தமிழா!!!


நெருப்பாய் எழுடா தமிழா!!!
-----------------------------------------------------------------------
திரையரங்க மோகத்தில் கிடந்தோம் 
திரும்ப திரும்ப அடிவாங்கி அழுதோம் 
வன்னி தலைவனின் கரங்கள் சோர்ந்தன
அதனால் வன்னி நிலமெல்லாம்  தமிழர் பிணம் 
உலக நெஞ்சங்கள் துடிக்காத  நாதியற்ற பிணம் 
ஐயோ என்று அழுதோம் அதற்க்கு மேல் செய்ய 
ஒன்றுமில்லை துடித்தோம் !!

ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்று 
நம்பினோம்  மாறவில்லை காட்சி !
மானம்  முறுக்குகிறது மனம்  துடிக்கிறது 
என்ன செய்வது? உலகப் படைகள் எல்லாம் 
ஒன்றுபட்டது என் சொந்தத்தை அழிக்க !!! 
அன்றும் ஒன்று சேராதது என் தமிழ்நாட்டு 
சொந்தங்கள்!! சேரவிடாமல் தடுத்தது எது? 
அது ஒரு பெரிய துரோக கதை!! 
அதை பேசினால் நெருப்பாய்  
எழுந்தவனின் வரலாறு மறைந்துவிடும்  

வீதிக்கு  ஒரு தலைவன் ! சாதிக்கு ஒரு 
தலைவன் !! என் இனத்தை காக்கும் 
இனமான  தலைவன் பின்னால் சேராமல்
போனவர்கள் பொங்கல் சாப்பிட்டு 
பொங்கல் சமிக்க பொதுக்கூட்டம் போட்டு 
நீதான் காரணம் என்றார்கள்!
மறைமலை நகரில் தன்னுயிரை சித்தம் 
செய்ய துடித்தான் தொல்காப்பியன் பிள்ளை  
அன்றைக்கு காஞ்சிக்கு வராதவர்கள் இன்று 
சாஞ்சிக்கு சென்று இருக்கிறார்கள்
நாம் தூற்றவில்லை உணர்வு வந்ததே 
என்று போற்றுகிறோம் !  

உண்மை உனக்கு தெரியும் முத்துக்குமாரா!!
அதனால் தான் நீ சொன்னாய் அண்ணன் 
ஏன் சாக வேண்டும் நான் சாகிறேன் என்று

துரோகத்தால்  விழுந்து நெருப்பில் விழும்  
சரீரம் உன்னோடு முடியும் என்றுதான் 
நினைத்தேன் திரும்பி பார்க்கிறேன் 
கடலூர், சிதம்பரம், சீர்காழி, ஜெயம்கொண்டம் 
குருவிக்குளம், புதுக்கோட்டை  ஆங்காங்கே 
நெருப்பை தின்றார்கள்! வெளிச்சமாய் எறிந்தார்கள்!
அத்தோடும் நிற்கவில்லை நெருப்பை முத்தமிட்டு 
மானுடத்தையே மணந்து கொண்டாள் 
என் தங்கை செங்கொடி - அங்கேயும்   
நூறடி தள்ளி நிற்கிறேன் ஆனாலும் 
என் ஆதரவை தருகிறேன்  என்றுதானே  
சொன்னான் தொல்காப்பியன் பிள்ளை   
யாருக்கும் காதில் விழவில்லை என்ன செய்வது?  
அதனால் இன்று விஜயராஜ் 
தீயை முத்தமிட்டுக் 
கொண்டு இருக்கிறார் 
நெருப்பில் வீழ்ந்தவர்கள் வீரர்கள் 
அந்த வெளிச்சத்திலும் 
விழிக்காதவர்கள் கோழைகள் 
நெருப்பாய் எழுடா தமிழா!!
நெருப்பில் வீழ்ந்துவிடாதே தமிழா !!

நெருப்பை முத்தமிட்ட தீரர்களே 
நீங்கள் கொடுத்த வெளிச்சம் போதும்
நெருப்பாய் எழுவோம் !! 
தமிழ் ஈழம் வெல்வோம் !!

தியாகத்தை போற்றி வீரவணக்கத்துடன்...
அங்கனூர் தமிழன்வேலு... 

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

திருமாவை சாதியத் தலைமை என்று சொல்ல சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது?


13.09.2012 அன்றைய ஆனந்த விகடன் இதழில் இயக்குனர் சீமான் அவர்களின் பேட்டியில் சில முரண்பாடான பதில்களையும் சேற்றை வாரி இறைக்கும் பதில்களையும் கூறி இருக்கிறார். கருத்தியல் புரிதல் இல்லாத அவருக்கு கருத்தியலோடு சில பதில்களை கூற விழைகிறேன்...
விகடன் : ஈழத்தமிழர் நலனுக்காக வைகோ, திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?
சீமான் : முடியாது. இந்திய தேசிய, திராவிட, சாதிய கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் நிற்கிறோம். இனியும் தமிழ்ப்பிள்ளைகளான நாங்கள் இவர்கள் பின்னால் செல்ல முடியாது.
தமிழன் வேலு : வைகோ, திருமாவளவன் அவர்களோடு இணைந்து செயல்படக்கூடாது என்பது உங்கள் இயக்கத்தின் முடிவாக இருக்கலாம். அல்லது உங்கள் விருப்பமாகக் கூட இருக்கலாம். அதை விமர்சிக்க எமக்கு உரிமை இல்லை. ஆனால் திருமாவை சாதியத் தலைமை என்று சொல்ல சங்கபரிவாரத்தின் இளைய மடாதிபதியாக ஆக துடிக்கும் சீமானுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது? தமிழ்நாட்டில் யாரப்பா சாதி அரசியல் செய்யவில்லை? "இந்த தொகுதியிலே தேவர்கள் அதிகமாக இருக்கிறார்கள், ஆக இங்கே தேவர் சமுதாய வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறலாம்" என்று ஜெயலலிதா யோசிப்பது சாதி அரசியல் இல்லையா? இந்த தொகுதியிலே நாடார்கள் அதிகமாக இருக்கிறார்கள், ஆக இங்கே நாடார்  சமுதாய வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று கருணாநிதி யோசிப்பது சாதி அரசியல் இல்லையா?
நாடார் சமுதாயத்தில் இருந்து அந்த சமுதாய வாக்குகளை குறிவைத்து நாடார் சமுதாய உணர்வைத் தூண்டும் ஒரு நடிகர்  பொதுப்பெயரில்  கட்சி வைத்து நடத்துகிறார். அதற்காக அது சாதியக் கட்சி இல்லை என்று ஆகிவிடுமா?
கருணாநிதியைப் பார்த்து உங்களால் சாதிய  தலைமை என்று சொல்ல முடியுமா? ஜெயலலிதாவைப் பார்த்து சாதிய  தலைமை என்று சொல்ல முடியுமா? மற்ற ஆதிக்க சாதித் தலைவர்களை சாதிய  தலைமை என்று சொல்ல முடியுமா? அவர்களை எல்லாம் சொல்லாமல் திருமாவை மட்டும் நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் உங்கள் புத்தி சாதிப் புத்தி தானே? உங்கள் சிந்தனை சாதிய சிந்தனை தானே? இதே ஆனந்த விகடன் பத்திரிக்கையில் விகடன் மேடையில் வாசகர் கேள்விக்கு திருமா அளித்த பதிலை சீமானுக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்...
வாசகர் கேள்வி : தமிழ்நாட்டில் சாதிக்கட்சி என்றாலே நீங்களும் ராமதாசும் தானே நினைவுக்கு வருகிறீர்கள்?
திருமா : விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதிக்கட்சி அல்ல; சாதி ஒழிப்புக் கட்சி! விடுதலை சிறுத்தைகள் "சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை" எனும் முழக்கத்தை அடிப்படை கொள்கையாகக் கொண்ட பேரியக்கம். தமிழகத்தில் சாதி ஒழிப்பை ஓர் அடிப்படை கொள்கையாகவும் ஏற்று இயங்குகிற ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே.
எங்கள் சாதி உயர்ந்த சாதி; எங்கள் சாதி ஆண்ட சாதி என்று அரசியல்வாதிகள் மார்தட்டிக் கொள்வதைப்போல விடுதலை சிறுத்தைகள் சாதிப் பெருமைகளைப் பேசி சாதி மோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்ததாக ஏதேனும் ஒரு சான்று காட்டமுடியுமா?
இயக்குனர் சீமான் அவர்களே, திருமாவளவன் இந்த இடத்திலே சாதி அரசியல் செய்தார் என்று ஏதாவது சான்று காட்ட முடியுமா? இல்லை திருமா சாதிய தலைமை தான் என்று என்னோடு ஒரே மேடையில் விவாதித்து நிரூபிக்க முடியுமா? ஓர் உயர் சாதிக்காரன் கட்சிக்கு பொதுப்பெயரை வைத்துக் கொண்டு, சாதி அரசியல் செய்தாலும் அவன் சமூகப் போராளி!! அதுவே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து மக்களின் பொதுப் பிரச்சனைக்காகப் போராடினாலும் அவன் சாதித் தலைவனா? என்ன கேவலமான சிந்தனை?  தன்னை தமிழினப் போராளியாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் சீமானுக்கு இப்படிப் பேச வெட்கமாக இல்லையா?  நாம் தமிழர் கட்சி என்று பெயர் வைத்துக் கொண்டு மும்பையில் இருந்த தமிழர்களை அடித்து விரட்டிய சிவசேனாவை இந்துத்துவ வெறியரான சிவசேனாவை ஆதரித்த நீங்கள் தமிழினப் போராளி!! ஆனால்  அரசியல் சூழல் மாறினாலும் எந்த சூழலிலும் இந்துத்துவ பி.ஜே.பி.யை ஆதரிக்க முடியாது என்று களத்தில் நிற்கும் திருமா சாதித்தலைவனா?
தன்னுடைய கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கை ஆவணத்தில் சீமான் என்ன சொல்லி இருக்கிறார்? 40 ஆம் பக்கத்தில் மேல்சாதி - கீழ்சாதி, தீண்டாமைக்களானோர்- தீண்டாமை புரிவோர் இடையே உள்ள முரண்பாடு மேற்கட்டுமான முரண்பாடாம்!
ஒரு தலித், புது பக்கெட் வாங்கி பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது; புது செருப்பை போட்டுக் கொண்டு பொது சாலையில் நடக்க முடியாது;  சைக்கிளில் செல்ல முடியாது; நல்ல பெயர் வைக்க முடியாது; நல்ல சோறு சாப்பிட முடியாது; கை நிறைய காசு இருந்தும், கொட்டாங்குச்சியில்தான் தேநீர்; இதுதான் மேற்க்கட்டுமானமாம். இதை எது கட்டிக் காக்கிறது? சாதி. அந்த சாதியை கட்டி காப்பது எது? இந்துத்துவம். அந்த இந்துவத்தைத்தான் இன்று சீமான் பிடித்துக் கொண்டு தொங்குகிறார். இந்தியாவில் ஒவ்வொரு இந்து வீட்டிலும் ஆழமாக வேர் ஊன்றி நிற்கும் இந்துத்துவத்தின் கோர முகமான சாதியம் மேற்கட்டுமானம் என்று சொல்லும் சீமான் தமிழினப் போராளியா? கிருத்துவர்களையும், இசுலாமியர்களையும் தீவிரவாதி என்றும், தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள் என்றும் சித்தரித்து தன்னை முழுமையான இந்துத்துவவாதியாக அடையாளம் காட்டிக் கொண்டு திரியும் சீமானுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது விடுதலை சிறுத்தைகளை சாதிக்கட்சி என்று சொல்ல? வன்னியர் சங்கம், நாடார் சங்கம், முதலியார் பேரவை என்பது போல திருமா எங்காவது பறையர் சங்கம் நடத்தி இருக்கிறாரா?
அவர் அணு உலை வேண்டாம் என்கிறாரே! இதில் எங்கு சாதி இருக்கிறது தமிழனின் வாழ்வாதாரம் தானே இருக்கிறது; முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுகிறாரே இதில் எங்கு சாதி இருக்கிறது? அல்லது எந்த தாழ்த்தப்பட்டவனுக்கு அல்லது ஒடுக்கப்பட்டவனுக்கு முல்லை பெரியாறு பாய்ந்து வரும் பகுதிகளில் தோப்புக்களும் துறவுகளும் இருக்கிறது. பாலாற்றின் பிரச்சினைக்காக போராடுகிறாரே இதில் எங்கு சாதி இருக்கிறது? நீண்ட நாள் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடுகிறாரே, இதில் எங்கு சாதி இருக்கிறது? மானுட ஒன்றுகூடலுக்கு தேசிய தலைவரால் அழைக்கப்பட்டாரே எப்படி சாதிய தலைவராகவா? இந்திய தேசிய சட்டத்தின் தந்தையை நேருவின் அடிபொடிகள் கொச்சைப்படுத்துவதை தனியொரு ஆளாக எதிர்த்தாரே இதில் எங்கு சாதி இருக்கிறது?
ஈழ விடுதலைக்காக தன்னுயிரை துறக்க சித்தம்கொண்டாரே இதில் எங்கு சாதி இருக்கிறது? இப்படி தமிழின விடுதலை, தமிழ் மண்ணின் விடுதலை, ஈழ விடுதலை என எண்ணற்ற போராட்டங்களை ஒரு பொதுத் தலைவராகவும் பச்சைத் தமிழனாகவும் இருந்துதான் திருமா போராடியிருக்கிறார். அதனால்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பல்வேறு சாதியினரும் அவரின் தலைமையை ஏற்றுள்ளனர். திருமாவை கொச்சைப்படுத்த நினைக்கும் சீமான் போன்றவர்கள் விடுதலைச் சிறுத்தைகளின் மேடையில் தங்களை வளர்த்துக் கொள்ளும்போது திருமா சாதிக் கட்சித் தலைவராக தெரியவில்லையா? 2008 ஆம் ஆண்டு புல்லா அவென்யூவில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் திருமா தலைமையில் நடந்த கருத்துரிமை மாநாட்டில் சீமான் பேசிய பேச்சு சீமானுக்கு நினைவு இருக்கிறதா? இவன் சாதித் தமிழன் அல்ல, ஆதித்தமிழன்; இவன் சோரத்தமிழன், வீரத்தமிழன் என்று திருமாவுக்கு புகழ்மாலை சூட்டும் போது இவர் சாதித்தலைவர் என்று தெரியவில்லையா?
விகடன் பேட்டியில் ஈழத்தமிழர்களுக்காக தனி நாடு காணும் உங்கள் கனவு இந்தியத் தமிழர்களுக்காகவும் நீளுமா? என்ற கேள்விக்கு இல்லை என்று சொல்லி இருக்கிறார். தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத இந்த தேசத்தின் மீது எனக்கு எப்படி வரும் நேசம் என்று சொல்லி இருக்கிறார். இயக்குனர் சீமான் அவர்களே! ஈழத்தமிழர்களுக்காக போராட ஒரு இயக்கம் வைத்து நடத்துகிறீர்களே அதில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்தியத் தமிழர்கள் என்பதை மறந்து விட்டீரோ? மேலும் ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்தது இந்தியத் தமிழர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள். முத்துக்குமார், செங்கொடி, கடலூர் அன்னவள்ளியை சேர்ந்த ஆனந்த், ஜெயங்கொண்டம் ராஜசேகர், புதுக்கோட்டை பாலசுந்தரம், நெல்லை குருவிக்குளம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் சிவானந்தம், சீர்காழி ரவிச்சந்திரன், கடலூர் சுப்பிரமணி, சிதம்பரம் ராஜேந்திரன் இவர்கள் ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்தவர்கள். இந்தியத் தமிழர்கள். ஈழத்தமிழர்களுக்காக உயிரை துச்சமென மதித்து வீதியில் இறங்கிப் போராடுபவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டாலும், அவர்களை அரசே சுட்டுக்கொன்றாலும், அந்தப் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதிகார வர்க்கம் அவர்கள் வாயில் மலத்தை திணித்தாலும், சாதி வெறியர்கள் அவர்கள் வாயில் சிறுநீர் கழித்தாலும் நான் காதில் போட்டுக் கொள்ளமாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்களே.... ஆக எப்படி ஈழ விவகாரத்தில் மட்டும் உங்கள் உணர்வு உண்மையாக இருக்க முடியும்?
பரமக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டிக்காத சீமானுக்கு, விழுப்புரம் வானூரில் தொழிலாளியின் வாயில் ஆதிக்க சாதிக்காரர் மலத்தை திணித்த போது குமுறாத சீமானுக்கு, மூன்று தமிழர்களுக்காக உயிர் விட்ட தோழர் செங்கொடி பிறந்த பழங்குடியின சமுதாயப் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தபோது இந்த அரசைக் கண்டிக்காத சீமானுக்கு விடுதலைச் சிறுத்தைகளை சாதியக் கட்சி என்று சொல்லும் யோக்கிதை இருக்கிறதா? என்பதை இயக்குனர் சீமான் அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்...
இப்படிக்கு
விடுதலை சிறுத்தைகளின் கடைநிலைத் தொண்டன்
அங்கனூர் தமிழன் வேலு

சனி, 8 செப்டம்பர், 2012

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் !! எதிர்க்கும் பா.ஜ.க., சமாஜ்வாடி, தி.மு.க!!

எஸ். சி / எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தது. இதில் பிர்ப்படுத்தப் பட்டோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எ
ன்கிற வீண் வாதத்தை முன்வைத்து ஆளும் கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி, தி.மு.க வும், மதவாத பி.ஜே.பி யும் எதிர்த்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் பிற்டுத்தப்பட்டோரையும் சேர்த்துக் கொள்வது எந்த விதத்தில் சரியான அணுகுமுறை என்பதை பார்ப்பதற்கு முன்பு இட ஒதுக்கீடு பற்றிய புரிதலை நாம் தெரிந்து கொள்வோம்...

இட ஒதுக்கீடு ( சமூக நீதி)

தமிழ் அகராதியில் உள்ள தீண்டத்தகாத வார்த்தை எது என்று கேட்டால் கண்ணைக் கூடத் திறக்காமல் இட ஒதுக்கீடு இங்கே சிலர் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு ஆதிக்க சாதிகள், இந்துத்துவ கும்பல் கற்பித்து வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்டு, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில் தோன்றியது தான் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு என்பது கேட்டுப் பெறும் பிச்சை அல்ல. மறுக்கப்பட்ட உரிமைகளை பெறுவதாகும். இட ஒதுக்கீடு என்ற பேரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகை முறையில் ஏன் பதவிகளும் கல்வியும் அளிக்கப்படுகிறது என்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி வாடையே இல்லாத சமூகத்தில் இருந்து வந்தவனுக்கும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து ஆகிய அத்தனை அதிகாரங்களையும் சுவைத்துவிட்டு வந்தவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? அந்த அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் இட ஒதுக்கீடு என்பதே சாதியை ஒழிக்கும் மகத்தான கருவி தான். எப்படி என்போமானால் சாதி எதை அடிப்படையாக கொண்டுள்ளது? கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து இவைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் சாதியை, இட ஒதுக்கீட்டின் மூலம் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு கல்வியை வழங்கினால், பொருளாதார ரீதியாக அவன் முன்னேறுவான். பொருளாதார ரீதியாக அவன் முன்னேறினால், சமூக அந்தஸ்து தானாகவே தேடி வரும். சமூக அந்தஸ்தில் எல்லோரும் சமம் என்ற நிலை உருவாகிவிட்டால் இங்கே சாதிக்கு என்ன வேலை? அதே நேரத்தில் சாதியை ஒழிக்கும் கருவியான இட ஒதுக்கீட்டைக் கூட சாதியை வளர்க்கும் கருவியாக மாற்றிவிட்டார்கள் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதைத்தான் சமாஜ்வாடி, பி.ஜே.பி, தி.மு.க போன்ற கட்சிகள் செய்துக் கொண்டு இருக்கின்றன.

ஒரு குடும்பத்திலே உள்ள உறுப்பினர்களில் இரண்டு வயதுக் குழைந்தைக்கு அதன் தேவைக்கு ஏற்பவும், முதியவருக்கு அவர் தேவைக்கு ஏற்பவும் உணவை எப்படி குடும்பத்தலைவி பரிமாறுகிறாளோ அப்படித்தான் இந்த அரசும் செய்ய வேண்டும். யாருக்கு என்ன தேவையோ, எவ்வளவு தேவை இருக்கிறதோ அந்த அடிப்படையில் தான் உரிமைகளை பகிர்ந்து அளிக்க வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் உடன்பாடான ஓரவஞ்சனை தான் இட ஒதுக்கீடு. ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஒருவனது கால்களை கட்டியும், மற்றொருவனின் கால்களை அவிழ்த்துவிட்டும் ஓடவிடுவது என்பது எப்படி முரண்பாடானதோ, அப்படித்தான் கல்வி, பொருளாதரத்தில் உயர்ந்தவனோடு, கல்வி, பொருளாதரத்தில் பின்தங்கிய தாழ்த்தப் பட்டவனை மோதவிடுவதும் முரண்பாடானதே. இந்த முரண்பாடுகளை களைய நிச்சயம் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. அதே வேளையில் இட ஒதுக்கீடு சாதியை ஒழிக்கத்தான் வேண்டுமே ஒழிய ! சாதியை தற்காத்துக் கொள்ள கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு:

இந்திய முழுமைக்கும் 60 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால் அவை சரியான முறையில் உரியவர்களுக்கு பயன்படுகிறதா? என்பது கேள்வுக் குறியே. இப்போது இருக்கும் இட ஒதுக்கீடு எந்த விதத்திலும் தாழ்த்தப்பட்டவர்களை தரம் உயர்த்தாது என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. எதில் இட ஒதுக்கீடு கூட்டுகிற வேலைக்கும், கழுவுகிற வேலைக்கும் தானே இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதிகாரத்தை தீர்மானிக்கும் அளவுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று நாம் போராடுகிறோம். ஆனால் நமக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது, தாழ்த்தப்பட்டவர்கள், எப்போதும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில், ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் விழிப்பாக இருக்கிறார்கள். அதன் சாராம்சம் தான் தனியார்மயமாதல் கொள்கை. இங்கே அரசுத்துறையில் மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு சட்டம் இல்லை. எனவே எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிவிட்டால் எப்படி இவனுங்க இட ஒதுக்கீடு கேட்ப்பானுங்க. என்ற ரீதியில் தான் தனியார் மயமாக்கி வருகிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

நாட்டில் 90 சதவிகிதம் தனியார்மயமாகிவிட்டது. மீதமுள்ள 10 சதவிகிதத்தில் 50 சதவிகிதம் தான் இட ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. அதிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 19 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. என்னைக் கேட்டால் குறைந்தபட்சம் அந்த 10 சதவிகிதம் முழுவதுமே இட ஒதுக்கீட்டு அடிப்படையில் வழங்குவதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும் என நான் கருதுகிறேன். ஆக தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற நிலையில்தான் நாம் இன்னும் இருக்கிறோம்.

2004 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி:

மத்திய பல்கலை கழகங்களின் எண்ணிக்கை 24
விரிவுரையாளர், ரீடர், பேராசிரியர் பதவிகளில் இட ஒதுக்கீடு எஸ்.சி. 15 % எஸ்.டி: 7.5%
விரிவுரையாளர் பணியிடங்கள் :
எஸ்.சி. இட ஒதுக்கீடு : 740
நிரப்பப்பட்டவை : 341 நிரப்பபடாதவை :399
ரீடர் பதவிகளில் எஸ்.சி / எஸ்.டி க்கான 84% சதவிகித
இடங்களும் நிரப்பப்படவில்லை.
பேராசிரியர் பதவிகளில் எஸ்.சி / எஸ்.டி க்கான 92%
சதவிகித இடங்களும் நிரப்பப்படவில்லை
------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசுப் பணியிடங்களில் கூட எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு சரியான முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. மத்திய அரசில் இருக்கும் 88 செகரட்டரி பதவிகளில் ஒருவர்க்கூட தலித் இல்லை. 66 அடிஷனல் செகரட்டரி பதவிகளில் ஒரே ஒரு தலித் மட்டுமே இருக்கிறார். 249 ஜாயின்ட் செகரட்டரி பதவிகளில் 13 பேர் மட்டுமே எஸ்.சி பிரிவை சார்ந்தவர்கள்.471 டைரக்டர் பதவிகளில் 31 பேர் மட்டுமே எஸ்.சி பிரிவை சார்ந்தவர்கள். இவைதான் மத்திய அரசு இட இதுகீட்டு முறையை நடைமுறைப் படுத்தும் லட்சணம்.

தமிழகத்தில் 2004 ஆம் ஆண்டு புல்லிவிவரத்தின்ப் படி குரூப் ஏ பதவிகளில் 10 விழுக்காடும், குரூப் பி பதவிகளில் 12 விழுக்காடும், குரூப் சி பதவிகளில் 15 விழுக்காடும் தான் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 19 விழுக்காடு கொடுக்க வேண்டிய இவர்களுக்கு அரசு நடைமுறைப் படுத்தியது இவ்வளவுதான். சமூக நீதிக்குப் பேர்போன தமிழகத்திலே தலித்துகளுக்கு இந்த நிலை என்றால் மற்ற மாநிலங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

நாகராஜ் எதிர் இந்தியா என அறியப்படும் வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு மூன்று விஷயங்களை சுட்டிக் காட்டியது. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் போது எஸ்.சி / எஸ்.டி பிரவினர் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும், அவர்களது பிரிதி நிதித்துவம் போதுமான அளவில் இல்லை என்பதையும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதால் நிர்வாகத்திறன் பாதிக்கப்படவில்லை என்பதையும் மாநில அரசு உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

( ரவிக்குமார் நன்றி : புதிய தலைமுறை வார இதழ் )
------------------------------------------------------------------------------------------------
ஒரு ஊராட்சி மன்ற தலைவர் அவருக்கு உரிய நாற்காலியில் கூட அமர முடியவில்லை. ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் கூட தலித் தலைவர் இந்திய தேசியக் கொடியை ஏற்ற முடியவில்லை. இன்னமும் கிராமப் புறங்களில் தலித்துகள் சேரிகளில் தான் வாழ்கிறார்கள். கிராமப் புறங்களில் ஒரு தலித், புது பக்கெட் வாங்கி பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது, புது செருப்பை போட்டுக் கொண்டு பொது சாலையில் நடக்க முடியாது, சைக்கிளில் செல்ல முடியாது, நல்ல பெயர் வைக்க முடியாது நல்ல சோறு சாப்பிட முடியாது, கை நிறைய காசு இருந்தும், கொட்டாங்குச்சியில்தான் தேநீர். பிறகு எங்கே தலித்துகள் பொருளாதார ரீதியில் முன்னேறிவிட்டார்கள் என்று சொல்வது? ஒரு ஊராட்சி மன்ற தலைவருக்கே இந்த நிலை என்றால் அங்கே குப்பை அல்லும் ஊழியரின் நிலை எப்படி இருக்கும் என்பதை நம்மால் யூகித்துக் கொள்ள முடியும். இந்த நிலையில் கொடுக்கப்படும் இட ஒதுக்கீடாவது சரியான முறையில் உரியார்களுக்கு பயன்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பயன்பட்டவர்கள் அந்த பதவியை நேர்மையாக நடத்தவும் முடியவில்லை. இன்னமும் நாட்டில் 50 விழுக்காட்டினர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், அதிலே 75 விழுக்காட்டினர்கள் வறுமைக் கோட்டிற்கு உள்ளே உள்ளவர்கள். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கும் கல்வி முறைக்கும் இடையே பதினோரு விழுக்காடு இடைவெளி இருப்பதாக மத்திய அரசின் சர்வே கூறியுள்ளது.

பிற்பபடுத்தப்பட்டோரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை சரியானதுதானா?

எஸ். சி / எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருந்தது. அதை ஆளும் கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி, தி.மு.க, நேரடியாகவும், மதவாத பி.ஜே.பி மறைமுகமாகவும் எதிர்த்து வருகிறார்கள். சமாஜ்வாடி, தி.மு.க. வினரின் கோரிக்கை என்ன வென்றால் இதில் பிற்பபடுத்தப்பட்டோரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயமானது. இவர்களின் இந்த நிலைப்பாடு இரண்டு சந்தேகங்களை நமக்கு எழுப்புகிறது. ஒன்று சாதியை ஒழிக்கும் இட ஒதுக்கீட்டை, சாதியை தற்காத்துக் கொள்ள பயன்படுத்துகிறார்களா? என்றும், இந்த கோரிக்கையின் மூலம் சாதி பிரிவினையை தூண்டுகிறார்களா? என்றும் நமக்கு ஐயம் எழுகிறது. பிற்பபடுத்தப்பட்டோரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறவர்கள் முதலில் தாழ்த்தப்பட்டவர்களை ஊர்த்தெருவில் குடியேற அனுமதிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை மனிதனாக மதிக்க வேண்டும். பிறப் படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களை மனிதனாக கூட மதிக்காத பிறப் படுத்தப்பட்டோருக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீட்டில் எனக்கும் பங்கு கொடு என்று கேட்பது அயோக்கியத்தனம் தானே. இன்னும் சொல்லப் போனால் பள்ளர், பறையர்களும் அருந்ததியப் பிரிவு மக்கள் மீது திணிக்கும் வன்கொடுமைகளை நிறுத்துக் கொண்டு பிறகு இட ஒதுக்கீட்டைக் கேட்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது பிற்ப்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கும் இட ஒதுக்கீட்டில் பங்கு வேண்டும் என்று கேட்பது சேரியில் வாழும் மக்களை மேலும் மேலும் தாழ்த்துவதேயாகும். இப்படித்தான் இரட்டை வாக்காளர் முறையை எதிர்த்தார்கள். அது தனித் தொகுதி முறையாக மாறியது. அதில் ஏதாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எள்ளளவு பிரயோஜனம் உண்டா? ஆதிக்க கட்சிகள், முதலாளித்துவ கட்சிகள் தனக்கு வேண்டிய, தன் சொல்பேச்சைக் கேட்கக்கூடிய தலித் ஒருவரை தனித் தொகுதியில் நிறுத்தி தன் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். உதாரணமாக : இன்று முலாயம் சிங் இதை எதிர்க்கும் போது அவர் கட்சியில் உள்ள தலித் ஒருவரால் முலாயம் சிங்கை எதிர்க்க முடிகிறதா? இதுதான் தனித்தொகுதியால் ஆதிக்க சாதிகள் அடைந்த லாபம்.

அறுபது ஆண்டுகால இட ஒதுக்கீட்டு நடைமுறையால் தாழ்த்தப்பட்ட மக்கள் சாதித்தது என்ன? அவர்கள் எந்த அளவுக்கு முன்னேறி உள்ளார்கள்? ஏன் சாதியை ஒழிக்க வேண்டும் என்று தொடங்கப்பட்ட அல்லது நடைமுறைப்படுத்த இட ஒதுக்கீட்டால் அதன் லட்சியத்தை அடைய முடியவில்லை என்று இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் நமக்கே ஐயம் வருகிறதே. முலாயம் சிங் போன்றவர்களால் தான் இந்த நிலை வருகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீட்டில் எனக்கும் பங்கு கொடு என்று கேட்பதைத் தான் எதிர்க்கிறோம். எந்தக் காலத்திலும் முலாயம் சிங், கருணாநிதி போன்றவர்கள் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சாதியை ஒழிக்க முனையமாட்டார்கள் என்றும், மேலும் அவர்கள் சாதியைத் தற்காத்துக் கொள்வார்கள் என்ற இரண்டு செய்திகளை நம்மால் இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது....

இட ஒதுக்கீடு சாதியை ஒழிக்கவே அன்றி - சாதியை வளர்க்க அல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே நமது கோரிக்கை...

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

இலை மலர்ந்தாச்சு! ஈழம் என்னவாச்சு?


இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று
சொல்லித்தானே வாக்கு கேட்டோம்
இலை மலர்ந்தாச்சு!  ஈழம் என்னவாச்சு?

சினங்கொண்ட புலிப்படை
தலைவனின் தம்பியடா நான்
என்று சொல்லிக்கொண்டே
மாதவளின் வழக்கிற்கு அஞ்சி
சீலையிலே ஒளிந்து கொண்ட சீமான்களே!

உன் வீட்டில் நுழைய உனக்கேது உரிமை
புதுக்கோட்டை இனி என்க்கோட்டை
என்று சொன்னாளே தலைவி அதைக்கேட்டு
வக்கத்து, வாய்பொத்தி நிற்கும் பாண்டியர்களே!

சங்கரன்கோவில் கிடையாது என்றதும்
போயசு தோட்டத்தில் குடியேறி தனிப்பெரும்
தலைவியாம் தங்கத் தாரகையின் நல்லாசியோடு
மதுரை திருமங்கல வட்ட செயலாளராக
பதவியேற்று பம்பரமாய் சுழன்றீரே !

ஆனாலும் நானோ கதாநாயகி
தேவை கதாநாயகன்
நீ எதற்கு வெறும் நாயகன்
வெளியேறு என்று சொன்னதால்
தடுமாறி நின்றீர்;   தடம் மாறி நின்றீர்  !

தாயக விடுதலைக்கு தன்னுயிரை
நீத்தானே பாலகன் பாலச்சந்திரன் அவன்
வீரம் போற்றும் மாவீரர்கள் நாள் !
வணக்கம் சொல்வதும், இரங்கல் சொல்வதும்
தேசத்துரோகம் என்றாளே தலைவி
அதை கேட்டு வாய்மூடித்தான் கிடந்தோம்
நீங்கள் வக்கத்து நின்றீர்கள்....
நாங்கள் வாக்களித்து நின்றோம் !

பழையது போயாச்சு இனி தலைவி
ஈழத்தாயாக உருமாறியாச்சு  - ஈழம்
மலருமே ! எங்கள் வாழ்வு மலருமே !
என்று சொன்னாரே புரட்சிப்புயல்
காந்திய மண்ணில் காந்தியப் போராட்டம்
செய்தானே செந்தூரன் அவனை
புழலிலே அடைத்தாளே தலைவி
ஒருவேளை ஈழம் புழலில் இருக்கோ?

புலி புலி என்று வாய்ச்சவடால் அடிக்கும்
நெடுமரங்களே, இங்கே தமிழனுக்கும்
விடுதலை இல்லை;  தலித்துக்கும் விடுதலை
இல்லை ! ஆனால் போயசு தோட்டம் மட்டும்
விடியலாய் வரவேற்க, விழுந்தோமே
புதைக் குழியில் சதி வலையில்
விழுந்தது தமிழன் !
வாழ்வது தமிழனா?
தங்க தாரகையா?