திங்கள், 24 செப்டம்பர், 2012

அம்மணமாய் போர்த்தொழுவோம் வாடா!


அம்மணமாய் போர்த்தொழுவோம் வாடா!
----------------------------------------------
ஏதோ மிதப்புல 
சாதிக் கொழுப்புல
ஆண்டுபலவாய் நம்மை
அவன் ஆண்டது போதாதா?
பசியும் பிணியுமாய்
வக்கற்ற இனமாய்
ஊருக்கு ஓரமாய் நாம்
செத்து மாண்டது போதாதா?

மண்ணை இழந்தோம்;
நம் மானம் இழந்தோம்;
இனி இழக்க ஒன்றுமில்லை
மிச்சமிருக்கும் உசுரோடு
சொச்சசமிருக்கும் உணர்வோடு
நாம் வாழ்வது கூடாதா?
உரிமை பேசவந்த உத்தமர்
பலரும் அவனுக்காய் வாழ்ந்திட்டார்;
சாதி ஒழிக்கவந்த பெரியவரும்
சாதியோடு செத்திட்டார்
நமக்காக வாழ்ந்தார்கள் என்று
ஏட்டினில் வரைந்தார்கள் - நம்பி
நமக்காய் வாழ்ந்தார்கள் என்று
பெருமை பேசி, உழுது களைத்து
சேரியில் உழன்றும் அவன் பெயரையே
சொன்னோம் நன்றி மறவாமல் அவன்
நமக்கு அளித்த பரிசு இலவச
புழுத்த அரிசி!

எங்கோ இருந்து வந்தவர்
எல்லாம் நம்மை ஆளத் துடிக்க
இந்த மண்ணிலே பிறந்த
நாம் மட்டும் அவன் வீட்டு
பண்ணையிலே கிடந்தோம்
ஏர் தொழுதவனும்,
போர் தொழுதவனும்
சாக்கடையில்
உழலும்போது
நம் வியர்வையில் பிழைக்கும்
அவன் மட்டும் சாணக்கியன்
ஆனது எப்படி?
நம்மை சாதியாய்
பிரித்தான் - நம்
பிழைப்பை சந்தி
சிரிக்க வைத்தான்;
பந்தி போட வைத்தான்
நம் பசியில் அவன் மட்டும்
சிரித்தான்; ஆயிரம்
ஆண்டுகள் அடிமையாய்
கிடந்தோம்; அதனால் அவன்
ஆணவத்தில் சிரித்தான்;
காலம் இப்படியே
மறையுமா? எங்கள்
வாழ்வின் இருள் மறையுமா?
என்ற ஏக்கத்தோடு நம்
பாட்டனும் செத்துவிட்டார் ;
அவர் பிள்ளை நம் அப்பனும்
சாணி சுமந்தார்கள்!

நம்மை அடிமை செய்ததில்
அவனுக்கு எவ்வளவு
பங்கிருக்கோ சமபங்கு நாம்
அடிமை பட்டதற்கு
நமக்கும் உண்டு !
எப்படி என்று கேட்கிறீரா?
பார்ப்பானுக்கு அடிமை
தேவனும்; வன்னியனும்!
அடிமை தேவனுக்கும்
வன்னியனுக்கும் அடிமை
பறையனும்; பள்ளனும் !
அடிமை பறையனுக்கும்
பள்ளனுக்கும் அடிமை
சக்கிலியும்; நாவிதனும் !

அடிமையாய் இருப்பவனுக்கு
இன்னொரு அடிமை இருப்பதில்
மட்டற்ற மகிழ்ச்சி என்று
மகிழ்ந்து போனோமே ஒழிய
தானும் அடிமை
என்பதை ஒருகாளும்
அறிய மனமில்லை !
இப்படி நம்மை பிரித்து
வைத்ததாலே அவன் ஆளத்
துடிக்கிறான் - நாம்
அழக்கூட தெம்பில்லாமல்
அவிந்து போகிறோம் !

ஓ! தாழ்ந்த தமிழகமே
என்று அண்ணா சொன்னார்;
வேறு வழியில்லை என்னை
நானே சொல்லும் நிலைமை
ஓ! தாழ்த்தப்பட்ட சமூகமே
நீ இன்னமும் அடிமையாய்
தான் இருக்கிறாய்;
உனக்கெதற்கு
இன்னொரு அடிமை?
சாதியாய் பிரிந்தது போதும்;
நாம் சாணி சுமந்தது போதும் ;
நமக்குள் சண்டை இட்டது போதும்;
நம் பிழைப்பு
சந்தி சிரித்ததும் போதும் ;
பண்ணையில் கிடந்தது போதும்
நம் பிள்ளை பசியால்
துடித்ததும் போதும்; உழுது
உழுது கொடுத்த உனக்கு
கோவணம் தான் மிச்சம்
இன்னும் சிலகாலம்
இப்படியே இருப்போமானால்
கோவணம் போயி அம்மணமாய்
புலம்புவதை தவிர வேறு
கதியில்லை !

உழுது உழுது நம் உடுப்புகள்
பறிபோனதுதான் மிச்சம் ;
அழுது அழுது நம் கண்ணீரும்
கேலியானதுதான் சொச்சம் ;
கால் வயிற்றுக் கஞ்சிக்கு
கோவணத்தோடு காட்டில் உழுதது
போதும் தமிழா ! - நம் உரிமைக்காக
அம்மணமாய் நடுரோட்டில்
போர்த்தொழுவோம் வாடா தோழா!

- அங்கனூர் தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக