அரசு இயந்திரங்களை கண்டு அஞ்சாமல், நெஞ்சுரத்தோடு அணுஉலை எதிர்ப்பு களத்தில் நிற்கும் தோழர் சுப.உதயகுமார் அவர்களே... வணக்கம். நீங்கள் நலமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். அப்படியே இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனே போராட்டாகாரர்கள் மீதும், அப்பாவி மக்கள் மீதும், சிறுவர்கள், முதியவர்கள் என்றுகூட பாராமல் கடும் தாக்குதலை மத்திய, மாநில கூட்டு சேர்ந்து தொடுத்தன. அன்றைக்கு அந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்து நெஞ்சம் வெடித்து "மற்றுமோர் முள்ளிவாய்க்கால்" கூடன்குளமும், கொலவெறியும் என்று எழுதினேன். மத்திய மாநில அரசுகள் கண்கொத்திப் பாம்பாக தங்களை கண்காணித்துக் கொண்டிருக்கையில், எங்கோ ஒரு குக்கிராமத்தில், ஓலைக்குடிசையில், எழுதப்படிக்க தெரியாத தமிழனுக்கும், தமிழச்சிக்கும் பிறந்த என்னை தாங்கள் அறிய வாய்ப்பில்லை. நீங்கள் அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு நான் பெரிதாக எதையும் சாதித்து விடவும் இல்லை. அவ்வப்போது எம் மக்களின் குரல்வளைகள் நெரிக்கப்படும் போது என்னால் முடிந்தமட்டில், எனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி எதிர்த்து பேசி இருக்கிறேன் அவ்வளவே. அணு உலை எதிர்ப்பு விவகாரத்தில் என்னால் முடிந்தமட்டில் சிறிதளவேனும் கருத்து பரப்பலை செய்திருக்கிறேன், அந்த மக்களின் நியாயத்தை, உரிமைகளை, உங்கள் ஒருங்கிணைப்பின் அவசியத்தை என் சுற்றத்தில், என் நட்பு வட்டங்களில் எடுத்து கூறி இருக்கிறேன் என்ற நம்பிக்கையிலே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
நவம்பர் 8 ஆம் தேதி முகநூல் பக்கத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் குறித்து பதிவை வெளியிட்டு இருந்தீர்கள். அது கொஞ்சம் நீண்ட பதிவுதான், அதில் போஸ்னியா-ஹெர்செகோவினா, ருவாண்டா போன்ற இடங்களில் நடைபெற்ற இனப்படுகொலைகளை நினைவு கூறி, வியட்நாம் வெடெரன்ஸ் மெமோரியல், அமெரிக்கத் தலைநகராம் வாஷிங்டனில் உள்ள யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஹோலோகாஸ்ட் மெமோரியல் மியூசியம் போன்ற நினைவு சின்னங்களை மேற்கோள் காட்டி அப்படியே சிங்களப் பேரினவாத அரசோடு உலகநாடுகள் பலவும் கூட்டு சேர்ந்து தமிழீழத்தில் நடத்திய இனப்படுகொலையை பற்றி எழுதி இருந்தீர்கள். தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை பாரெங்கும் எடுத்துரைக்க தஞ்சையில் கட்டப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை பற்றி பேசி, "முற்றம் அற்றம் காண வேண்டும் – தமிழ்ச் சுற்றம் ஏற்றம் பெற வேண்டும்!" என்று அழைப்பு விடுத்திருந்தீர்கள். அருமையான பதிவு அது.
ஆனால் நீங்கள் சுட்டிகாட்டிய உலக வரலாறுகளும், நினைவு சின்னங்களும் எதையோ மறைக்கின்றன, முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கும் பணியில் நடந்தேறிய அருவருப்பான அரசியல் கோமாளித்தனங்களை மூடி மறைக்கின்றன என்ற ஐயத்தில் தான் அதே பதிவில் பின்னூட்டம் வழியாக "அண்ணா, உங்கள் மீது வைத்திருக்கும் மிகுந்த மரியாதையினால் உண்டான உரிமையில் கேட்கிறேன்.. 'நீங்கள் அடையாளம் காட்டிய ஆபத்தான ஆறுகட்சிகளில் பி.ஜே.பியும் ஒன்று. ஆபத்தானவர்களோடு மேடை ஏறுவது உங்களுக்கு எற்புடையது தானா?" என்று தங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்டேன். அதற்கு தாங்கள் "மனிதன் என்பதால் அவரும் தவறுகள் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை, இந்துத்வா சகதிகளை, குஜராத் இனப்படுகொலையாளர்களை அந்த நிகழ்வுக்கு அழைத்தது தவறுதான். அழைக்கப்பட வேண்டிய சில தலைவர்களை, இயக்கங்களை அழைக்கத் தவறியதும் தவறுதான். சில தன்னலவாதமிக்க ஆற்றலில்லா ஆளுமைகளை அணைத்துக் கொள்வதும் தவறுதான். தவறுகளை உரிமையுடன் சுட்டிக்காட்டுவோம், அன்புடன் தட்டிக்கேட்போம். நிகழ்வுக்குப் போய் நமது கருத்துக்களை, நிலைப்பாட்டை நாகரீகமாகப் பதிவு செய்வோம். நிகழ்வு வெற்றிபெறட்டும்." என்று எனக்கு பதில் அளித்தீர்கள். அந்த பதில் என்னை சமாதானப் படுத்தவில்லை, திருப்தி அளிக்கவில்லை. உங்கள் மீது நான் கொண்டிருந்த மதிப்பை ஓர் அங்குலம் குறைத்துவிட்டது. ஓர் அங்குலம் தானே குறைந்துவிட்டது, மீதம் எத்தைனையோ அங்குலம் மரியாதை இருக்கிறதே, அண்ணனிடம் கேள்வி கேட்க உரிமையும் இருக்கிறதே என்ற நம்பிக்கையில் தான் மீண்டும் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
உலக வல்லரசுகளோடு கரம் கோர்த்து கொண்டு, இந்திய வல்லாதிக்கத்தின் துணையோடு சிங்களப் பேரினவாத அரசால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட நம் ஈழ சொந்தங்களின் வலியை, தமிழீழத்தின் அவசியத்தை, நம் சொந்தங்களின் கோரிக்கையின் அவசியத்தை பாரெங்கும் எடுத்துரைக்க ஒரு நினைவு சின்னம் அமைப்பதில், அதுவும் நம் தமிழகத்தில் உருவாவதில் எனக்கொன்றும் மாற்றுக் கருத்தில்லை. உள்ளம் இனிக்க, இனிக்க சொல்வேன் நிச்சயமாக வரவேற்க கூடியதே. ஆனால் அந்த நினைவு சின்னம் யாரால் கட்டப்பட வேண்டியது? யாரோடு கூட்டு சேர்ந்து கட்டப்பட வேண்டியது என்பதில் தான் முரண்பட்டு நிற்கிறேன். உலகில் பல்வேறு நாடுகளில் இனப்படுகொலைகள் நடப்பதற்கு எது காரணம்? அந்த நாட்டின் ஏகாதியபத்திய சிந்தனையே. முதலாளித்தவ மனப்பான்மையே. அடிமை நிலையில் இருக்கும் மக்கள் வெகுண்டெழுந்து தங்களுடைய அடிப்படை உரிமைகளை கோரும் போது தான் அங்கே அடக்குமுறையும், வல்லாதிக்கமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தமிழீழத்தில் நடந்ததும் அதுவே தான். கூடங்குளத்தில் நடந்த அரச பயங்கரவாதத்திற்கு காரணமும் அதே தான். கூடங்குளம் அணு உலை திறக்கட்டுமே என்று தாங்களும், இடிந்தகரை மக்களும் அமைதி காத்திருந்தால் இந்த அரசுகளுக்கு நீங்கள் தங்கமான பிள்ளைகளாக இருந்திருப்பீர்கள். கூடங்குளம் அணு உலையை நிறுவ இந்த அரசுகள் தீவிர முனைப்பு காட்டுவதற்கு அவர்கள் சொல்வதைப் போல நம் மக்களின் நலன் காரணமல்ல, நம் நாட்டில் இருக்கும் மின் பற்றாக்குறையை தீர்க்கவேண்டும் என்பதும் அவர்களின் நோக்கமல்ல,ரஷ்ய முதலாளிகளின் நலன்களை கருத்தில் கொண்டுதான் என்பதை தாங்கள் அறிவீர்கள்.சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூட அமெரிக்க முதலாளிகளின் நலனையே கருத்தில் கொண்டது. ஆனால் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கடுமையாக எதிர்க்கும் இந்திய / மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் இடிந்தகரை மக்களுக்கு எதிராக நிற்கிறார்கள். சில பார்ப்பனிய ஊடகங்களும், இந்திய அரசும் இதை இடிந்தகரை மக்களின் பிரச்சனை என்றளவிலே பரப்புரை செய்கிறார்கள். ஆனால் நாமோ இது ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்சனை என்கிறோம். கம்யூனிஸ்டுகளின் காதுகளுக்கு மட்டும் நம் பரப்புரை போய் சேரவில்லை போலிருக்கு. அதே போல தமிழீழ விவகாரத்தில் கூட மக்களுக்கு எதிராகவே நிற்கிறார்கள். ஈழம் என்ற சொல்லைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி இருக்கும் சூழலில் தமிழீழத்தின் வலிகளை பாரெங்கும் எடுத்து சொல்ல அமைக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு தமிழ்தேசிய கருத்துடையவர்களோடும், தமிழீழ விரும்பிகளோடும் எவ்வித ஆலோசனைகளையும் கேட்காமல், தமிழர்களிடம் நிதி வாங்காமல், ஒட்டுமொத்த தமிழினத்தின் விழாவிற்கு ஒரு குறிப்பிட்ட பண முதலைகளிடம் மட்டும் காசை வாங்கிகொண்டு முற்றம் அமைத்திருக்கிறார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பதை நீங்களே தெளிவுபடுத்துங்கள். நன்கு வளர்ந்து நிற்கும் மரம் கூட சொல்லும் அது வளர்ந்த மண் வளத்தையும், அதை பராமரித்தவரின் பெருமையையும். தமிழீழத்தின் வலிகளை பாரெங்கும் எடுத்து சொல்ல அமைக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு தமிழ்தேசிய கருத்துடையவர்களோடும், தமிழீழ விரும்பிகளோடும் எவ்வித ஆலோசனைகளையும் கேட்காமல், தமிழர்களிடம் நிதி வாங்காமல், ஒட்டுமொத்த தமிழினத்தின் விழாவிற்கு ஒரு குறிப்பிட்ட பண முதலைகளிடம் மட்டும் காசை வாங்கிகொண்டு முற்றம் அமைத்திருக்கிறார்கள். அதன் விளைவாக வரும் காலங்களில் அந்த முற்றத்தை பார்வையிடுபவர்களின் கண்களில் ஈழத்துயரமோ, தமிழினத்தின் சிறப்போ தெரியபோவத்தில்லை. மன்னார்குடி மன்னர் நடராசனின் கொடைவள்ளல் தன்மையும், பெருமையுமே எஞ்சி நிற்கும் என்பது மட்டும் நிச்சயம்.
ஜெயலலிதா முதல் முறை தடா ஆட்சி நடத்தினார், இரண்டாம் முறை பொடா ஆட்சி நடத்தினார், மூன்றாம் முறை தடாலடி ஆட்சி நடத்துகிறார் என்று மக்கள் பாவலர் இன்குலாப் எழுதினார். அதுபோலவே அவர் இரண்டாம் முறை ஆட்சி செய்த பொழுது"இம்மென்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்"என்ற கொடுங்கோன்மை ஆட்சி நடத்தினார். தமிழீழ உணர்வாளர்களை பொடா எனும் கொடிய சட்டத்தின் மூலம் அச்சுறுத்திக் கொண்டிருந்த காலம் அது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டு பொடாவை ஆதரிக்கிறேன் என்று வைகோ சொன்னாலும் பொடாவின் வெளிப் பாய்ச்சலுக்கு வைகோவும் பலியானார். புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார். மேலும் கோவை ராமகிருட்டிணன், ஆறுச்சாமி போன்றவர்களை இரண்டாண்டுகளுக்கு ம் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது. பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ( தகவல்கள் : பல்வேறு இணையதளங்கள்)
இப்படி தமிழினத்திற்கும், தமிழீழத்திகும் எதிர் நிலைப்பாட்டில் இருந்த ஜெயலலிதாவோடு நட்போடு இருந்த நெடுமாறன் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, பொடா சட்டத்தை ஆதரித்து, அதிலே ஜெயலலிதா ஆட்சியிலே கைதாகி மீண்டும் அவரோடு அரசியல் உறவை ஏற்ப்படுத்திக் கொண்ட வைகோ மீது நம்பிக்கை இருக்கிறது, அவர்தான் நல்ல தலைவர் என்று நீங்கள் சான்று அளிக்கிறீர்கள். ஆனால் பொடாகாலத்தில் கூட தமிழீழ கருத்துக்களை துணிந்து பரப்புரை செய்த சுப.வீ., திருமாவளவன் போன்றவர்களை நெடுமாறன் துரோகி என்கிறார். அவரிடம் எதிர்த்து ஒருவார்த்தை உங்களால் பேச முடியவில்லை. இங்கே நெடுமாறனின் கவனத்திற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூற விழைகிறேன். 10.03.2003 அன்று பாண்டிச்சேரியிலே ஒரு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மார்ச் 10 என்பது நெடுமாறனின் பிறந்ததினம். அப்போது அவர் பொடா கைதியாக சிறையில் இருக்கிறார். பாண்டிச்சேரியில் நடந்த நிகழ்வு நெடுமாறனின் பிறந்தநாளை பொடா எதிர்ப்பு நாளாக கொண்டாடினார்கள். அந்நிகழ்விற்கு தோழர் அழகிரி தலைமை தாங்கினார். பேராசியர் கல்யாணி, புலவர் பச்சையப்பன், திருச்சி சவுந்திரராசன், திருமாவளவன், பாவலர் இன்குலாப் போன்றவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு அது. (தகவல் : பாவலர் இன்குலாப் அவர்களின் எதிர்ச்சொல் நூல்) நெடுமாறன்,வைகோ போன்றவர்களின் கைதை கண்டித்து பேசியமைக்காகவே சுப.வீ கைது செய்யப்பட்டார். பொடா எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் திருமாவளவன். இன்று அவர்களெல்லாம் துரோகியாகிப் போனார்களோ? என்று நெடுமாறன் அவர்களிடம் வாய்ப்பிருந்தால் நீங்களே கேளுங்கள்...
திருமாவளவன், சுப.வீ. போன்றவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள், அதற்கு ஒரு காரணத்தையும் அவர்கள் சொல்கிறார்கள். அது போகட்டும் பரவாயில்லை. தமிழகத்திலே தமிழினத்தின் மீட்சிக்காகவே தொடர்ந்து களமாடி, இந்தி எதிர்ப்பு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் புகைப்படம் தவிர்க்கப்பட்டது ஏன்? யார், யார் புகைப்படங்கோ வைத்திருக்கிறார்கள், தந்தை பெரியார் தமிழினத்திற்குஅப்படி என்ன துரோகத்தை செய்து விட்டார்? பகுத்தறிவு கருத்துக்களை தமிழ்மண்ணில் விதைத்தது தவறா? சுயமரியாதை சுடரை தமிழகமெங்கும் ஒளிர விட்டது தவறா? மூடநம்பிக்கை களுக்கு எதிராக போராடியது தவறா? உச்சிக்குடுமிகளின் ஆதிக்கம் அடங்கவேண்டும், சாதியும், சாதியை காப்பாற்றும் இந்துமதமும் வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிய வேண்டும் என்று போராடியது துரோகமா? பெரியாரின் புகைப்படம் தவிர்க்கப்பட்டதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் (1) இந்துத்துவத்திற்கு எதிராக அவர் ஆடிய கோர தாண்டவமாக இருக்கலாம். (2) தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தம் வாழ்நாள் முழுவதும் மூத்திரப் பையுடன் சூத்திர வேதங்களை கண்டித்ததிற்காக இருக்கலாம். (3) மோடி மஸ்தான் களை மகிழ்விப்பதற்காக இருக்கலாம்.
அண்ணன் வைகோவிடம் என் சார்பாக நீங்கள் இந்த கேள்வியை கேளுங்கள் "பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் புகைப்படம் முற்றத்தில் தவிர்க்கப்பட்டது சரியா? என்று. அண்ணே, நான் உங்களிடம் கேட்கிறேன் தந்தை பெரியாரை தவிர்த்து விட்டு தமிழகத்தில் எந்த களத்தில் நீங்கள் நிற்பீர்கள்? பெரியாரை புறக்கணித்துவிட்டு தமிழினத்தின் வரலாற்றை எழுதிவிட முடியுமா?
அண்ணே... இறுதியாக
மனிதன் என்பதால் அவரும் தவறுகள் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை, இந்துத்வா சகதிகளை, குஜராத் இனப்படுகொலையாளர்களை அந்த நிகழ்வுக்கு அழைத்தது தவறுதான் என்று தாங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். அவர் மட்டும் தான் மனிதரா? மனிதர் என்ற பட்டியலில் கலைஞரும், ஜெயலலிதாவும், சோனியாவும் கூடத்தான் அடங்குவார்கள். அவர்கள் செய்யும் தவறுகளையும் நாம் மன்னித்துக் கொள்ளலாமா? என்ற ஐயம் உண்டாகிறது. ஒருவேளை நெடுமாறனுக்கு காங்கிரசின் மீதான பழைய காதல் நினைவுக்கு வந்து காங்கிரசில் இருந்து யாரையாவது அழைத்திருந்தால் கூட அப்போதும் நீங்கள் இதே பதிலை தான் சொல்வீர்களா? அப்படியெல்லாம் நடக்காது என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. ஏனெனில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஈழத்தமிழர்களுக்கு பி.ஜே.பி. உதவி செய்தது என்று இன்றைக்கு வைகோவும், நெடுமாறனும் சொல்கிறார்கள். ஆனால் இதே வைகோவும், நெடுமாறனும் தான் 2004 ஆம் ஆண்டு பி.ஜே.பியை தோற்கடிக்க, காங்கிரசுக்கு ஒட்டுக் கேட்டார்கள் என்பதும் வரலாறு. மேலும் 'இந்துத்வா சகதிகளை, குஜராத் இனப்படுகொலையாளர்களை அந்த நிகழ்வுக்கு அழைத்தது தவறுதான்' என்கிறீர்கள். இதை உங்களின் மனசிறையிலே பூட்டி வைத்திருப்பதால் என்ன பயன்? உண்மையில் காங்கிரஸ் தலைவர்களைப் போல அல்லாமல் காங்கிரஸ் நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் கூட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டியவர் என்ற கருத்து நிலவுகிறது. அவர்களோடு பழகியதில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் தலைமைக்கு அஞ்சி தங்கள் மனசாட்சியைப் பூட்டிவைத்து விட்டு வெளி வேஷம் போடுகிறார்கள். அப்படித்தான் நீங்கள் சொல்வதும். ஒரு கருத்தை வெளிப்படையாக எடுத்து வைக்கும் போது தான் அது வலுப்பெறுகிறது, இல்லையென்றால் அது எவ்வித மாற்றத்தையும் உண்டாக்காது. பொதுவாகவே மனிதர்கள் தமக்கு வேண்டாதவர்கள் செய்யும் சிறு தவறை கூட பெரிது படுத்தி பேசுவார்கள், தமக்கு வேண்டியவர்கள் செய்யும் பெரிய தவறை அலட்சியப்படுத்தி சிறுமை படுத்துவார்கள். அப்படி நீங்களும் சாதாரண மனிதர்களைப் போல பேசுவது வேதனை அளிக்கிறது. காரணம் நாங்கள் உங்களை சாதாரண மனிதராக பார்க்கவில்லை. அசுர பலம் கொண்ட அரசுகளை எதிர்த்து நிற்கும் போராளியாகத்தான் பார்க்கிறோம். உங்களின் நேர்மைத்திறன் மிகவும் வேதனை அளிக்கிறது. குஜராத் இனப்படுகொலையாளர்களை நாம் எதிர்ப்பது வெறுமனே மத அளவுகோல் மட்டும் காரணமல்ல, உழைக்கும் மக்களை சுரண்டி முதலாளிகளை மகிழ்விக்கிறார் மோடி என்பதும் முக்கிய காரணம்.
ஜெயலிதாவோடு இருந்தாலும் நெடுமாறன் தமிழினத்திற்காக பேசுவார், வைகோ வாதாடுவார் என்று நினைக்கிற உங்களால் கலைஞரோடு இருந்தாலும் திருமாவளவன் தமிழினத்திற்காக போராடுவார் என்று ஏன் நினைக்கத் தோன்றவில்லை? இந்த இடத்திலே ஒரே ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் கூடங்குளம் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடும் வெயில் என்றும் பாராமல் கோயம்பேட்டில் நடுரோட்டில் அமர்ந்து கைதான ஒரே தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் திருமாவளவன் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். வைகோ நல்ல தலைவர் என்று எழுதுகிற உங்களால் திருமாவளவனை புறக்கணித்தது தவறு, இந்துத்துவா சக்திகளை வரவேற்றது தவறு என்று ஏன் எழுத முடியவில்லை? மேலும் இந்துத்துவா சக்திகளை அழைத்ததை தோழர் கொளத்தூர் மணி, தோழர் ஜிவாஹிருல்லா போன்றவர்கள் கண்டித்திருக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு நினைவு கூறுகிறேன்.
முற்றத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைத்தமையால் தான் இக்கடிதத்தை உங்களுக்கு எழுத நேர்ந்தது. தங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கமெல்லாம் எமக்கில்லை, ஒருவேளை நான் குழப்பத்தில் இருந்தால் தெளிவு பெற்றுக் கொள்ளலாமே என்ற நேர்மறை சிந்தனை தான் எமக்கு இக்கடிதத்தை எழுத தூண்டியது. முற்றத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைக்கிறீர்கள் அனால் முற்றத்து புகைப்படங்களை காணும் போதெல்லாம் நெடுமாறனின் சந்தர்ப்பவாதமும், நடராசனின் முதலாளித்தவமும் தான் என் கண்களுக்கு தெரிகிறது. வந்தால் முற்றத்தை யாருடைய கண்களால் பார்ப்பது?
உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் தம்பி...
தமிழன்வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக