வியாழன், 7 நவம்பர், 2013

கடைசி மனிதனின் கோபங்கள் - 3 ( மங்கள்யான் பெருமையா? )

ஏய்... வள்ளி, 'வாயேண்டி போயிட்டு வந்திடுவோம்' அவசரப்படுத்தினாள் சரோசா. செத்த இருக்கா சுமதியும் வாரேன் ன்னு சொன்னா, சேர்ந்தே போயிட்டு வந்திடுவோம் என பதில் சொல்லிக்கொண்டே வீட்டை பெருக்கி கொண்டிருந்தாள் வள்ளி. சுமதி புதுசா கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்தவ, அசலூர்க்காரி. பாத்தாவது வரை படித்திருக்கிறாள். சரோசா இந்த ஊருக்கு கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்து 25 வருஷம் ஆவுது. ரெண்டு பொம்பள புள்ளைங்க மட்டும்தான். ரெண்டாவது மவள போன வருஷம் கட்டிகொடுத்தாங்க. வள்ளிக்கு  ஒண்ணாவது படிக்கிற பொம்பள புள்ளையும், ரெண்டு வயசு  பையன் ஒருத்தனும். சரோசாவும், வள்ளியும் கூட்டாளிக. அவங்களோட புதுக்கூட்டாளி தான் சுமதி. சந்தைக்குப் போறது, மோட்டாருக்கு துணி துவைக்க போறது, வீடு மொழுக, விடியகாலையில வாசல்ல தெளிக்க சாணி எடுகக போறது, குளிக்க போறது, கக்கூஸ் போறது வரைக்கும் மூவரும் கூட்டுதான். இப்பகூட கக்கூஸ் போகத்தான் சரோசா வள்ளியை அவசரப்படுத்திக் கொண்டு இருக்கிறாள். "கக்கூஸ் போறதுக்கு கூட கூட்டாதான் போவிகளோ?" ன்னு நகர்ப்புறங்களில், எப்பவும் ஒன்னாவே திரியுற பசங்ககிட்ட பெருசுகள் கேட்பதுண்டு. நகர்ப்புறங்களில் கூட்டு சேர்ந்து கக்கூஸ் போக வேண்டிய  அவசியமில்ல, ஏன்னா அங்க வீட்டுக்கு வீடு கழிவறை இருக்கு. கழிவறையில ஒரு நேரத்துக்கு ஒருத்தர் தான் போகமுடியும். ஆனா கிராமப்புறங்களில் கழிவறை இல்ல, விடியகாலை நேரத்திலும், பகல் நேரத்திலும் காட்டுப்பக்கம் மறைவான இடமும், இரவு நேரங்களில் ரோட்டோரமும் தான் அங்க இருக்க மக்களுக்கு கழிவறை. ஒரே நேரத்துல அம்பது, அறுவது பேர்கூட போகமுடியும். மானத்தை அடகுவச்சி தான் கக்கூஸ் கூட போகமுடியும், எங்கிருந்து எவன்  வந்து அம்மண குண்டியா உக்கார்ந்திருக்கிற பொம்பளைகளை பார்த்திருவானோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம். குளிப்பது கூட அப்படி ஒரு போராட்டம் தான்.

"பொழுதே போ..போ.., இரவே வா.. வா.." என்று அன்றைய நாளை வழிநடத்திக் கொண்டிருக்கிறது நிலவு. கிராமத்தை முற்றாக கவ்வி கொண்டது இருள். தெரு முக்கில் சோலார் லைட்டு எரிந்து கொண்டிருக்கிறது. சில வீடுகளில் சொந்த சர்வீஸ் கரண்ட் வாங்கி இருக்கிறார்கள். பெரும்பாலான வீடுகள் அரசாங்க இலவச மின்வசதி தான். சொந்த சர்வீஸ் எடுத்தவங்க வீட்டில் பளீரென்ற வெளிச்சமும், இலவச மின்சாரம் உள்ள வீட்டில் மங்கலான குண்டு பல்பும் எரிந்து கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு வீடுகள்   காரை வீடுகளாகவும், பெரும்பாலான வீடுகள் கருப்பஞ்சருகு வேய்ந்து, களிமண் சுவரால் ஆன கூரை வீடுகளாகவும் தான். காரை வீடு உள்ளவங்க வீட்டில கூட கழிவறை கிடையாது. 

புருஷனுக்கு சோறு குடுத்திட்டு பளீரென்ற சிரிப்போடு சுமதி வெளியே வருகிறாள். வள்ளியும் வீட்டு வேலைகளை முடிச்சிட்டா, ரெண்டுபேரும் சரோசா வீட்டுக்கு போய் "வாக்கா, போயிட்டு வந்திடுவோம்" என்க மூவருமாக கிளம்பிட்டாங்க. வறண்ட பட்டிக்காடு என்பதால் ரோட்டில் போக்குவரத்து பகல் நேரத்தில் கூட கம்மிதான். ஒரு நாளைக்கு நாலுமுற தான் பஸ் கூட வரும். இரவு என்பதால் ரோட்டில் ஆள் அரவமே இல்ல. இவங்கள மாதிரி கக்கூஸ் போக வரவங்க வந்தாதான். இல்லாட்டி ஆத்திர அவசரத்துக்கு யாராச்சும் வந்தா தான் உண்டு. ரோட்டோரத்தில், காடுகளில் திறந்த வெளியில் கக்கூஸ் போவது என்பது,  அது ஒரு நரக வேதனை.  அவசரமா பேண்டுகிட்டு இருக்கும் போது  யாராவது எதிரில் வருவது போல நினைத்துப் பாருங்களேன், அந்த நரக வேதனையை உங்களாலும் உணர முடியும். ஊருக்குள்ள இருக்க நாலஞ்சி காலிப்பயலுவ வேணுமுன்னே அந்தபக்கமா போவதும் உண்டு. மூவருமாக சீரியல் கதை, மாமியார் கதை, ஊருக்குள்ள ஓடிகிட்டு இருக்க காதல் கதை, அதுபோக வேண்டாதவங்க பத்தி அப்படி, எப்படி கிசு கிசு பேசிகிட்டே போவதுண்டு. அன்னைக்கு மாட்டுனது மூனாவது தெரு முனியன் பய கதை. அவன் தான் ஊருக்குள்ள இருக்க ஒன்னாம் நம்பரு காலிப்பய. எங்கயோ போயி சாராயத்தை ஊத்திகிட்டு வந்து 'எனக்கு கண்ணாலம் பண்ணி வைய்யுன்னு' அந்த கிழவன் - கிழவியை அடிச்சி ரோட்டுல இழுத்து போட்டுட்டானாம். இவிங்க பேசிகிட்டே போகும் போதே இவங்களுக்கு முன்ன போனவங்க திரும்பி வந்துகிட்டு இருக்காங்க. இவிங்க அவங்கவங்களுக்கு இடம் பார்த்து, யாரும் அந்த இடத்தில கக்கூஸ் போயிருக்காங்களா ன்னு செக் பண்ணிட்டு, பூச்சி பூரான் எதுவும் இருந்தா ஓடிபோகட்டும் ன்னு ச்சூ...ச்சூ... ன்னு சத்தம் போட்டு, எதுவும் பிரச்சனை இல்ல உக்காரலாம் ன்னு தீர்மானம் பண்ணிக்கிட்டு உக்கார்ந்தாங்க. 

உக்காந்து கிட்டே

ஏய்...சுமதி ன்னு மூணு பேருக்கு மட்டும் கேக்குறாப்ல மெல்ல குரல் குடுத்தாள் சரோசா

சொல்லுக்கா ன்னு சுமதி பதில் சொல்ல

இப்படித்தான் ஒருமுறை நம்ம பக்கத்துக்கு வீட்டு முருகாயி கிழவி இருக்குல்ல, அதுக்கு அவசரமா வந்திருக்கும் போல வேகமா ஓடிவந்து ஒரு எடத்துல உக்காந்து போகும்போது பின்னாடி கட்டுவிரியன் பாம்பு ஒண்ணு இருந்திருக்கு, அவசரத்துல அத கிழவி பாக்குல போலிருக்கு. பாம்பு பின்னாடியே கொத்திபிச்சு...

அப்புறம் என்னக்கா ஆச்சு?

வைத்தியர் வந்திருக்காரு , கிழவி கூச்ச்சபட்டுகிட்டு காட்டமாட்டேன் ன்னு உறுதியா சொல்ல கொஞ்சநேரத்துல கண்ணு சொருகிடுச்சு. தர்ம ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடுனா முடியாது பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போ ன்னு சொல்லிட்டான். அப்புறம் மல்லிகா ஆஸ்பத்திரியில தான் பணம் கட்டி தான் கிழவியை காப்பாத்துச்சு...

'பாம்பு கூட இங்க இருக்காக்கா' ன்னு பயந்துகிட்டே சுமதி கேட்க

"இருக்காதுடி, எப்ப வந்தாலும் பூச்சி, பூரான் இருக்கான்னு பாத்திட்டு மெதுவா சத்தம் போட்டு உக்காரு. ஒன்னும் ஆகாது" அறிவுரை சொன்னாள் சரோசா

எக்கோ யாரோ வர்ர்றாங்க எந்திருக்கா ன்னு வள்ளி சொல்ல

டபக்குன்னு சேலையை கீழ வுட்டு மூணுபேரும் எந்திருச்சி, எங்கன்னு பாக்க...

ஒரு முன்னூறு அடி தூரத்துல டார்ச்சு வெளிச்சம் கிட்ட வருவது போல இருந்தது..

இப்ப இன்னும் கொஞ்சம் கிட்ட வந்துடுச்சு...

வருது...வருது...

இப்ப கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் மங்கலாக தெரிய.. 

என்னன்னு பார்த்தா மின்மினி பூச்சி...

அடி போடி பொச கெட்டவள... 'வந்ததும் உள்ள போய்டுச்சு இனி எப்ப வருமோ? 'ன்னு அங்கலாய்த்தாள் சரோசா

ஏக்கா... இப்பவே இப்படின்னா மழைக்காலத்துல என்ன பண்றது? ன்னு சுமதி கேட்க...

ஹ்ம்ம்... சட்டியில பேண்டு வெளியே வந்து கொட்ட வேண்டிதான்னு சரோசா கிண்டலடித்தாள்...

'கோவிக்காதக்கா தெரியாமத்தானே கேக்குறேன் சொல்லுக்கா' மீண்டும் சுமதி...

ஒங்க அப்பன் வீட்டுல மொசகல்லு வச்ச பாத்ரூம்லய போன, உனக்கு தெரியாதா? சரோசா மறுகேள்வி எழுப்பினாள்...

இல்லக்கா எங்கூர்ல பக்கத்துலையே ஆறு இருக்கு... அங்க போவோம் சுமதி பதில் சொல்ல...

முழங்காலு சேத்துல தான் அந்த காட்டுக்குள்ள போகணும், இல்லாட்டி அங்க தூரத்துல பாழடைந்த ரைஸ் மில் ஒன்னு இருக்கு. அங்க போகணும்... வேற வழி? அலுத்துக்  கொண்டாள் சரோசா...

எல்லாவற்றையும் சிரித்துக் கொண்டும், வேதனை பட்டுக்கொண்டும் கேட்டுகிட்டு இருந்த வள்ளி 'ஏக்கா என் பையன் அழுவான்' வாங்க போகலாம் என்று எழுந்து கொண்டாள். மூவரும் கிளம்பி கொஞ்சதூரம் நடக்க, காணாமல் மறைந்து போன அந்த மின்மினி பூச்சி இவர்களை பார்த்து கண்ணை சிமிட்டி சிமிட்டி சிரித்துக்கொண்டே முகத்துக்கு நேராக வந்தது... 'கிண்டலாப் பண்ற ஒன்ன எண்ணப் பண்றேன் பாரு'ன்னு அதை பிடிக்க சரோசா தாவ அது மேல பறந்து ஓடிப்போகவும் சரோசா தடுமாறி விழுந்தாள். சுமதியும், வள்ளியும் கொல்லென்று சிரித்தார்கள்.. மீண்டும் தெருவு கிட்ட வரவும், அடுத்த க்ரூப் இப்ப போறாங்க...

அவரவர் வீட்டுக்கு அவரவர் போயிட்டாங்க...

பிளாஸ்டிக் ஜெக்குல தண்ணி எடுத்திட்டு வீட்டுக்கு பின்னாடி போனாள் சுமதி...

'இவ்ளோ நேரம் எங்கடி போனான்'னு சுமதி வீட்டுக்காரன் கேட்டுகிட்டே கலைஞரய்யா ஆட்சில கொடுத்த டிவி ல நியூஸ் கேட்டுகிட்டு இருந்தாப்ல ...

செய்தியில் ...

மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்றும், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். செய்தி வாசிப்பாளர் பூரிப்படைந்து சொல்லி கொண்டிருந்தார். அடுத்ததாக  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தனர்.

அந்த நேரம் வீட்டுக்குள்ள நுழைந்த சுமதி "இந்த நாட்டுல பொம்பளைங்க கற்புக்கும் பாதுகாப்பில்ல, கக்கூஸ் போகவும் பாதுகாப்பில்ல" இதுதான் இந்த நாட்டுக்கு பெருமையா போல ? என்று வாய் விட்டு சொல்லி கோபபட்டாள்... 

... தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக