சனி, 27 ஜூலை, 2013

"கக்கூஸ்" கழுவ வந்த அம்மா "கம்புயூட்டர் திருடி"யா?

என்றாவது ஒருநாள் என் நண்பன் இதை படிக்க நேர்ந்தால் அவமானத்தால் கூனிக் குறுகி போய்விடுவான்; அதனால் எங்கள் நட்பும் சிதைந்து போய்விடும் என்ற தயக்கத்தில் இதை எழுத வேண்டாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஒவ்வொரு முறையும் எழுத தோன்றும் எண்ணங்களை அடக்கி கொண்டே இருந்தேன். நீண்ட மனப்போராட்டத்திற்கு பின்பு என் நண்பனை விட, எங்களின் நட்பை விட அந்த அம்மாவின் பக்கம் உள்ள நியாயமே வென்றிருக்கிறது. இன்றைக்கு எழுதியே தீருவது என்று முடிவுக்கு வந்துவிட்டேன்...

அந்த அம்மாவை நான் நிறைய முறை யாருமற்ற வீதிகளில் தனியாக பேசிக்கொண்டும், தன்னந்தனியாக விளையாடிக் கொண்டும் செல்வதை பார்த்திருக்கிறேன். நான் பார்த்த அநேக நாட்களில் எப்போதும் ஒரே உடுப்பு தான். தலைக்கு எண்ணெய் தேய்த்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கும், கேசங்கள் கலைந்திருக்கும். அழுக்கு படிந்த சேலை தான். குள்ளமான உயரம். தலை வறண்டு போயிருந்தாலும் முகம் மட்டும் வாடி இருந்ததை நான் கண்டதில்லை. மனதில் எத்தனை சோகங்கள் இருக்குமோ தெரியாது, ஆனால் சிரித்த முகத்துடனே இருப்பார். யாராவது சொல்லும் சிறு, சிறு வேலைகளை செய்து சாப்பிட்டுக் கொண்டும், யாராவது ஒருவருக்கு இவர் முன்பொரு நாளில் வாசல் பெருக்கி இருப்பார், இல்லை என்றால் கக்கூஸ் சுத்தம் செய்து கொடுத்திருப்பார். அதற்காக இப்போது ஒரு டீ வாங்கி கொடுப்பார்கள். அதை டீக்கடையில் அமர்ந்து குடித்து கொண்டிருப்பார். யாருமே சொல்லாமல் வீதியில் கிடக்கும் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவாங்க. தெரிந்தவர்களிடம் ஒரு டீ வாங்கி குடுங்களேன் என்று இயலாமையோடு கேட்பாங்க. அப்படித்தான் அந்த அம்மா எனக்கு பழக்கம். எனக்கு தெரிந்து அவங்களுக்கு சொந்தம், பந்தம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இரண்டொரு முறை என்னிடமும் டீ வாங்கி தர சொல்லி கேட்டு இருக்காங்க. அவங்க  கேட்ட நேரங்களில் நான் கொடுத்ததில்லை. மாத ஊழியக்காரன் என்பதால் கிட்டத்தட்ட நானும் அந்த நிலையில் தான் இருந்திருக்கிறேன். நமக்கெல்லாம் சம்பளம் வாங்கும் அன்று ஒருநாள் மட்டும் தான் மாதத்தின் முதல்நாள், மீதி நாட்கள் எல்லாம் மாதக் கடைசி தான். சம்பளம் கைக்கு வரும் முன்னரே அதற்கான பட்ஜெட் ரெடியாகி விடும். அதனால் நம்ம நிலையம் அப்படித்தான். 

சரி விஷயத்துக்கு வருவோம்...

ஒருநாள் என் நண்பனின் குடவுனுக்கு சென்றிருந்தேன். அவனோட குடவுனில் தண்ணீர் குழாய் வசதி கிடையாது. அதனால் பாத்ரூமை பயன்படுத்தி நீண்ட ஆகியிருந்தது. பயங்கர துர்நாற்றத்துடனும், குப்பையாகவும், கழிவறை எங்கும் ஆங்காங்கே கருப்பு நிறத்தில் இருந்தது. அதுபோலவே அங்கிருந்த இரண்டு கழிவறையும் இருந்தது. அதை சுத்தம் செய்ய அவனது முதலாளி சொல்லி இருந்திருப்பார் போலும். அதற்கு அந்த அம்மாவை பயன்படுத்தி கொள்ள நினைத்து என்னிடமும் சொன்னான். நானும் சரி என்றேன். அவனே சென்று அந்த அம்மாவை அழைத்து வந்தான். கழுவுவதற்கு தேவையான துடைப்பம், பிளீச்சிங் பவுடர் எதுவும் இல்லை. கழிவறை முதல்மாடியில் ஒன்று, இரண்டாவது மாடியில் ஒன்றுமாக இருந்தது. அந்த அம்மாவிடம் சுத்தம் செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டான். அதற்கு அந்த அம்மா வெள்ளந்தியாக "எதோ நீங்களே பார்த்து கொடுங்கள்" என்று சொல்லி விட்டு  மேல் மாடிக்கு செல்ல அந்த அம்மா எத்தனிக்க கொஞ்சம் பொறுங்கள் என்றான். இன்னொரு பையனிடம் சொல்லி துடைப்பம், பிளீச்சிங் பவுடர் எல்லாம் வாங்கி வர சொல்லிவிட்டு உள்ளே வந்து என்னிடம் சொன்னான் "மேலே கம்ப்யூட்டர், இன்னும் நிறைய பொருளெல்லாம் இருக்கு, அதான் மேல அனுப்பல, அவன் வந்ததும் அவனை மேலே அனுப்பி பார்த்துக்க சொல்லலாம்" என்றான். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தனக்கு வேண்டிய கூலியை கூட சரியாக கேட்டு வாங்க தெரியாத அந்த அம்மா, கம்ப்யூட்டர் திருடும் என்று என்னால் கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த அம்மா படிப்பறிவு இல்லாதவர், கம்ப்யூட்டரில் எந்த பொருளை கழற்றி விற்றால் அதிக விலை போகும் என்றும் தெரியாது; எந்த பொருளை எப்படி கழட்ட வேண்டும் என்றும் தெரியாது. ஆனால் படித்த அறிவாளிகள் அவர் கம்ப்யூட்டர் திருடுவார் என்று தீர்க்கமாக நம்புகிறார்கள். என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற அச்சம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. இப்படி பட்ட ஆழ்மனதின் வக்கிரங்கள் இன்றைக்கு நேற்றைக்கு புதிதாக நடந்ததல்ல. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே "எளியவர்கள் தான் திருடுவார்கள்" என்ற பொதுப்புத்தி கட்டமைக்கப் பட்டிருக்கிறது. புழுங்கி கொண்டே இருந்தேன். அவனோ எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி சர்வ சாதாரணமாய் மற்ற வேலையை பார்த்துக் கொண்டிருந்தான். " என்றாவது ஒருநாள் இவனுக்கு இப்படி ஒரு அவமதிப்பு நிகழ்ந்தால் என்ன செய்வான்? தன் தேவைக்காக அந்த அம்மாவை வலிய சென்று அழைத்து வந்தவன் இப்படி அந்த அம்மாவுக்கு "திருடி" பட்டம் கொடுக்கிறானேஎன்று பலவித குழப்பத்தில் இருந்து கொண்டிருந்தேன். இருந்தாலும் பொறுமையாக இருந்தேன் "அந்த அம்மாவுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறான்"என்று பார்ப்போம் என்பதற்காக. ஒருநாள் மற்றொரு நண்பன் ஒருவனிடம் டூ வீலர் கடன் வாங்கி கொண்டு வெளியில் சென்றிருந்தேன்.  அப்போ ஜெயின் உராயும் சத்தம் கேட்டதால் மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று காண்பித்தேன். ஒரு போல்டு கழண்டு கிடந்தது. ஐந்து நிமிடத்தில் சரி செய்து விட்டார். 100 ரூபாய் பில் போட்டார். அந்த கணக்கை எண்ணி இந்த அம்மாவுக்கு எப்படியும் 400 ரூபாய்க்கு மேல் தான் கொடுப்பான் என்று கணக்கு போட்டு வைத்திருந்தேன்.

துடைப்பமும், பிளீச்சிங் பவுடரும் வாங்க சென்றவன், வாங்கி கொண்டு வந்து விட்டான். அந்த அம்மாவை அழைத்துக் கொண்டு மேலே செல்லும் போது காலை மணி 11 மணியாகி இருந்தது. எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையும் கணக்கில் வைத்திருந்தேன். பலத்த காவலுடன் கழிவறை சுத்தம் செய்ய மதியம் 2.00 மணி ஆகிவிட்டது. அவன் மூக்கை பொத்திக் கொண்டே அருகில் நின்றானாம். அந்த அம்மா எவ்வித தயக்கமுமின்றி கையில் ஒரு பிளாஸ்டிக் கவரை போட்டுக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்ததாம். அருகில் காவலுக்கு நின்றவன் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டான். வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த அம்மாவுக்கு ஒரு ரஸ்னா வாங்கி கொடுத்தானுங்க, அவ்ளோதான். வேலை முடிந்து கொண்டு அந்த அம்மா கீழே இறங்கி வந்தது. அந்த அம்மாவை சேலையை மட்டும் தான் அவுத்து காட்ட சொல்லவில்லை, அப்படி ஒரு சந்தேகப் பார்வையை பாய்ச்சினான். கூலி எவ்வளவு கொடுத்தான் என்று என்பதை அறிந்து கொள்ள துடித்தேன். இவனிடம் கேட்க எனக்கு விருப்பமில்லை. எந்த அம்மா டீக்கடையை நோக்கி செல்வதை கவனித்தேன். ஒரு ஐந்து நிமிடம் கழித்து நானும் டீக்கடைக்கு சென்றேன். டீ குடித்து கொண்டிருந்தது. நான் அருகில் சென்று எவ்வளவு கூலி கொடுத்தாங்க என்று கேட்டேன். 150 ரூபாய் தம்பி என்று சொல்லிவிட்டு அவங்க  டீ குடிப்பதிலே நோக்கமாய் இருந்தாங்க. "கூடுதலா கேட்க வேண்டித்தானே" என்றேன். "அதிகமா வாங்கி நான் என்ன செய்யப் போறேன்" என்று அப்பாவியாய் சொல்லி  "தனக்கான கூலியை கூட முறையாக கேட்டு வாங்க தெரியாத தனக்கு "கம்ப்யூட்டர் திருடி" பட்டம் கொடுத்தவன் கன்னத்தில் பொளேர் என்று அறை விட்டது...

- தமிழன் வேலு                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக