நவம்பர் 07 தமிழக வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத கருப்பு தினமாக மாறிவிட்டது; எம் தாய்மார்கள் வீட்டைச் சூழும் இருளுக்கு இல்லாத மின்சாரத்தினால், சிமிளி விளக்கைத்தான் ஏற்ற நினைத்திருப்பார்; ஆனால் வீடே பற்றி எரியும் என்று கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள்!
தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகே உள்ளது நத்தம் காலனி இளவரசனுக்கும், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த நாகராஜ் மகள் திவ்யாவுக்கு நடந்த காதல் திருமணத்தை அடுத்து, தலித் மக்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்பட்டது.
சனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், இந்த சமூகம், நாளைய தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் எல்லோரும் இந்தக் கலவரமே கடைசியாக இருக்கட்டும் என்றுதான் விரும்பினார்கள். ஆனால் ராமதாசின் அடாவடி சாதியப் பேச்சுக்கள் தமிழகத்தில் தணியாத சூட்டையும், சாதியக் கலவரம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ராமதாசின் சாதிய ஒருங்கிணைப்பு:-
தருமபுரி சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு தம் சாதிய வன்மத்தை வெளிப்படுத்தி தமிழகத்தில் சாதிக் கலவரத்தை தூண்டிவிட ராமதாஸ் தூபமிட்டுருக்கிறார். இது குறித்து அவர் சொல்லியுள்ள கருத்துக்கள் மிகவும் அபாயகரமானவை. வன்முறையைத் தூண்டும் அவருடைய கருத்துக்கள்:-
* இது இருஜாதி மோதல் இல்லை. அதேபோல் அரசியல் அடிப்படையில் பார்த்தாலும் திருமாவளவன் கூறுவதைப்போல, இது பாமகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குமான மோதல் இல்லை. இந்த காதல் திருமணத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட நாகராஜ் தேமுதிகவைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் அதிமுகவைச் சேர்ந்த தர்மபுரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சாந்தியினுடைய கணவர் முருகேசன், திமுகவைச் சேர்ந்த தர்மபுரி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் பச்சையப்பன் ஆகியோரும் அடக்கம். நத்தம் காலனி நாயக்கன் கொட்டாய் ஆகிய இடங்களில் நடந்த மோதல்களில் ஒரு சில வீடுகளுக்கு மட்டுமே தீ வைக்கப்பட்டதாகவும், மாவட்ட திட்ட அலுவலராக உள்ள வீரண்ணன்தான் அங்குள்ள சிலரைத் தொடர்பு கொண்டு எல்லா வீடுகளையும் எரித்து விடுங்கள்; புதிய வீடுகளை கட்டித் தர ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாகவும், அதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் உள்ள வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
* 95 சதவிகிதம் காதல் திருமணங்கள் மோசடித் திருமணங்கள்; பணத்திற்காக காதல் நாடகத்தை தலித் வாலிபர்கள் செய்கிறார்கள். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஊக்குவிக்கிறது.
* தலித்துகள் அதிகமாக வாழும் பகுதியில் மற்ற சாதிக்காரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மற்ற சாதிப் பெண்கள் தலித்துகள் வசிக்கும் பகுதி வழியாக செல்லும்போது கிண்டல் செய்கிறார்கள். தவறாக நடந்து கொள்ள முயலுகிறார்கள்.
* வன்கொடுமைச் சட்டம் - 1989 முழுக்க முழுக்க தவறாகப் பயன்படுத்தப்படுகிறது இதனை தலித்துகள் மற்ற சாதியினரை பழிவாங்குவதற்கே பயன்படுத்துகின்றனர். இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வரமுடியாத நிலை இருக்கிறது. அதை மாற்றி பிணையில் வரக்கூடியதாக ஆக்க வேண்டும். இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதாக இருந்தால் அதை மாவட்ட நீதிபதி தலைமையின் கீழ் ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும்.
* தருமபுரியில் நடந்த கலவரத்திற்கும் வன்னியர் சங்கம மற்றும் பா.ம.க.விற்கும் சம்பந்தம் இல்லை, அங்கே இருந்த சாதிய முரண்பாடுகளே காரணம்.
* தமிழகத்தில் அரங்கேறும் சாதிக்கலவரங்களுக்குப் பின்னால் திராவிடத் தலைவர் ஒருவர் தான் துணையாக இருக்கிறார்.
* தலித் வாலிபர்கள் ஜீன்ஸ் பேன்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு மற்ற சாதிப் பெண்களை மயக்குகிறார்கள்.
* காதல் திருமணங்கள் என்ற பேரில் காதல் நாடகங்கள் அரங்கேறுகின்றன; பணத்திற்காகவே காதல் நாடகம் நடத்துகின்றனர். காதலித்து பின்பு பேரம் பேசி பணம் பறித்துக் கொண்டு பெண்களைத் துரத்தி விடுகின்றனர்.
* காதல் திருமணங்களே வேண்டாம்; இனி யாரும் காதலிக்கக் கூடாது
* 'காதல் நாடகத் திருமணங்கள்' என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளையும், வன்கொடுமை சட்டத்தைப் பயன்படுத்தி பழி வாங்குகின்றனர்.
* நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற 955 காதல் திருமணங்களில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. திருமணத்திற்குப் பிறகு எதிர்கொள்ளும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் 32 இளம் பெண்களும், அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 37 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
* தர்மபுரி மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி முடித்துத் திரும்பும் மாணவிகளை, தலித் சமுதாயத்தை சேர்ந்த சிலர் அருவருக்கத்தக்க வகையில் ஈவ்டீசிங் செய்கின்றனர்.
* தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது.
* கடலூர் மாவட்டத்தில் மட்டும் காதலித்து பின்பு பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதால் விதவையாக 2000 பெண்கள் உள்ளனர்.
* தலித் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள சில சட்ட உரிமைகளை அச்சமுதாயத்தில் உள்ள சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்.
* ஒரு தலைவன் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்று தரவேண்டும். அதைவிடுத்து அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் ஒழுக்கமா? வன்முறையைத் தூண்டும் வசனம் கட்சிக் கொள்கையா? இங்க பாருங்க எப்படி எல்லாம் வசனம் எழுதப்பட்டுள்ளது, பாருங்கள். இனி திருமாவளவனுடன் கூட்டனி கிடையாது
* தலித்துகளிடம் இருந்து தலித் அல்லாதோரைப் பாதுகாக்க அனைத்து சமுதாய சங்கங்களை ஒருங்கிணைப்போம். (அதன்படி டிசம்பர் 2 ஆம் தேதி 48 சாதி அமைப்புகளை கூட்டி அனைத்து சாதி கூட்டத்தை கூடியுள்ளார்.)
* கலப்புத் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது; அதனால் தமிழ்த் தேசியத்தை அமைக்க முடியாது.
* 17, 18 வயதுகளில், டீன் ஏஜ் எனப்படும் அந்த வயது பெண்களுக்கு எதுவும் தெரியாது. 25-வயதுக்கு மேற்பட்டு காதலித்து திருமணம் செய்யும் திருமணங்களே 95 சதவீதம் விவாகரத்தில் முடிகிறது. பெண்ணின் திருமணம் வயது 21 என நிர்ணயிக்க வேண்டும். படிக்கும்போதே இளம்பெண்களை காதல் என்ற நோயை ஏற்படுத்தி சீரழிக்கும் சமுதாயக் குற்றத்தை தடுத்திட வேண்டும்.
* திருமணத்திற்கு இருவீட்டு பெற்றோரின் சம்மதம் கட்டாயம் வாங்க வேண்டும்.
* (06.12.2012) நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கிய பின்பு வரை நான் ஜாதி வெறியன் தான்.
* நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணைக் கொடுக்கிறாயா என்று கேட்கிறார்கள். நமது பெண்களுக்கு காதல் வலை வீசி கடத்திச் செல்கிறார்கள். பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக்கும் போது யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வரவேண்டும். வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் ஆளலாம். தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு அக்னி சட்டி, மஞ்சள் கொடி பறக்க வேண்டும்.
* தலித் இளைஞர்கள் டி.ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு வன்னியப் பெண்களைக் கவர்ந்து தம் வலையில் விழவைத்து ஏமாற்றுகின்றனர். நமது பெண்களைக் காக்க வன்னியர்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.
இன்னும் ஏராளமான வன்மம் நிறைந்த கருத்துக்களை மருத்துவர் அள்ளி வீசியுள்ளார். காதல் திருமணங்கள் என்ற பேரில் சமூக சீர்கேடுகள் அரங்கேறுவது உண்மையாக இருக்குமானால், பெண்களை பணத்திற்காக வாலிபர்கள் காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்றால், ஒரு பொறுப்புள்ள சமூகவாதியாக ராமதாஸ் என்ன செய்திருக்க வேண்டும்? சனநாயக சக்திகள் உட்பட அனைத்து சமூக விரும்பிகளையும் அழைத்துப் போராடி இருக்கவேண்டும். அனைத்து சாதிப் பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை என்றால், அனைத்துத் தமிழர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் என்றல்லவா அழைத்திருக்க வேண்டும்? ஏன் 'வன்னியர்களே வாருங்கள் ஒன்றிணைவோம்' என்று அழைத்தார்? அதுமட்டுமில்லாமல் 19 சதவீதம் மட்டுமே உள்ள தலித்துகளுக்கு எதிராக 81 சதவீத ஒட்டுமொத்த சாதி இந்துக்களை திருப்பிவிடுவது எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதை மருத்துவர் உணர்ந்துதான் சொன்னாரா?
இதுநாள் வரை தமிழ், தமிழினம் என்று பேசிவந்த மருத்துவரின் திருவாயில் இப்போது சாதி, வன்னியர் என்ற சொற்களே மிஞ்சி உள்ளன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு உள்ள தலித் மக்கள் தான், பிற சாதி மக்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்கள் தான் மற்ற சாதிக்காரர்களை அடிமைப்படுத்துவதாகவும் கூறுவது எவ்வளவு பெரிய அப்பட்டமான பொய். இதனால் என்ன மாதிரியான விளைவுகள் நிகழும்? ராமதாசின் வன்மம் நிறைந்த பேச்சுக்கள் மூலம் அவர் எதிர்பார்த்த வன்முறைகள் துவங்கிவிட்டன.
ஆம்! கடலூர் மாவட்டம் பாச்சாரப்பாக்கம் கிராமத்தில் தருமபுரி கலவரத்தைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக 8 வீடுகள் உட்பட டாட்டா வாகனம், மோட்டார் பைக் உட்படவற்றை தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். இது தமிழகம் முழுவதும் தொடர்ந்தால் இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம்தான் மிச்சம் உள்ளது. மருத்துவரின் பேச்சுக்கள் எப்படிப்பட்ட அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் (19.11.2012) இரவு 12 மணிக்கு என் நண்பன் துபாயில் இருந்து போன் பண்ணி "மச்சான் நம்ம வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வராதுல்ல? ஆம்பிள்ளை இல்லாத வீடுடா.. எங்க அம்மாவ அடிக்கடி போய் பார்த்துக்கடா" என்று பதற்றத்தோடு பேசுகிறான். அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இத்தனைக்கும் தருமபுரிக்கும், அரியலூருக்கும் ரொம்ப தூரம்; இருந்தாலும் சேரிகள் என்பதால் ஏற்பட்ட பயம்; ராமதாசின் பேச்சினால் உண்டான பயம். இதுதான் இன்றைய தேதியில் தமிழகம் முழுவதும் உள்ள சேரிகளின் நிலையாக இருக்கிறது.
சனநாயக சக்திகளின் ஒருங்கிணைவு
ஆதிக்க சாதிகளின் ஒன்றிணைவுக்கு எதிர்வினையாக, தலித் மக்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியவாதிகள், பெரியாரியவாதிகள், மார்க்சியவாதிகள் கைகோர்த்திருக்கிறார்கள். சென்னையில் சனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து திருமாவளவன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தா.பாண்டியன், நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், தமிமுன் அன்சாரி, கொளத்தூர் மணி, தெஹ்லான் பார்கவி ஆகியோர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டார். தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் சொன்னதைப் போல, தருமபுரியில் தலித் மக்கள் மீது வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.வினர் முன்னின்று நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து வெறுமனே அறிக்கையோடும் ஆறுதலோடும் நின்றுவிடாமல் உடனடியாக களத்திற்குச் சென்று தமது ஜனநாயகக் கடமையை ஆற்றிய முதல் தலித் அல்லாத சமூகத்தினர் இஸ்லாமியர்கள்தான் என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். சாதி வெறியாட்டம் தலித் மக்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல; அது தமிழர் பிரச்சனைதான்; அதுவும்தாம் தமிழ்தேசியத்திற்கு முட்டுக்கட்டை; சாதியம் தான் சனநாயகத்தின் நேரடி எதிரி.
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆசிரியர் அவர்கள், "தி.க.வும் தி.மு.க.வும் சேர்த்து இரட்டைக்குழல் துப்பாக்கிகள்; இனி விடுதலைச் சிறுத்தைகளும் இத்துடன் சேர்ந்து மூன்று குழல் துப்பாக்கியாகச் செயல்படும்" என்றார். அதே விழாவில் பேசிய சுப.வீ. அவர்கள் "திருமாவளவன் தனிமைபடுத்தப்பட்டதாக பயப்படவேண்டாம்; உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்" என்றார். இறுதியாக பேசிய கலைஞர் அவர்கள், இனி சாதியை வைத்து வன்முறையைத் தூண்டுபவர்களை தண்டிக்கவேண்டும் என்றும்; கலப்பு மணங்களுக்கு எதிராக யார் முயற்சி எடுத்தாலும் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்திருக்கிறார்.
இந்த இடத்திலே தோழர் அ.மார்க்ஸ் அவர்களின் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். (09-12-2012) தருமபுரியில் திராவிடர் கழகம் நடத்திய சாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பேசிய அ.மார்க்ஸ் அவர்கள் கருஞ்சட்டையினர், தலித் தோழர்கள், எல்லா இயக்கங்களிலும் இருந்து வந்துள்ள 'சாதிக் கூட்டணி'யை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் எனத் திரண்டுள்ள இதுதான் இயற்கைக் கூட்டணி. இடையில் சிலகாலம் ஏதோ பெரியாரும், திராவிட இயக்கமும் தலித்களுக்கு எதிர் என்பதுபோலச் சிலர் சுய லாபங்களுக்காகப் பரப்பி வந்த கருத்தை தருமபுரிக் கலவரம் உடைத்துள்ளது. இக்கூட்டணி தொடர வேண்டும்" என்று பேசி இருக்கிறார். படைப்பாளிகளும் வன்முறைக்கு எதிராக படை எடுத்து இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வன்கொடுமைக்கு எதிராக சனநாயக சக்திகள் ஓர் அணியில் திரள்வது இதுவே முதல் முறையாகும்.
சனநாயக சக்திகளை ஒன்றுபடுத்தி அல்லது அவர்களோடு ஒன்றிணைந்து திருமாவளவன் போராடி வருவது நல்ல பலனைத் தரும். கருத்தியல் போராளிகளும், களப் போராளிகளும் இணைந்த இந்தக் கூட்டணி தான் தமிழர் விடுதலைக்கான கூட்டணி; ராமதாஸ் கூட்டி இருக்கும் சாதிக் கூட்டணி சனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் கூட்டணி!!
- அங்கனூர் தமிழன் வேலு
(2012, டிசம்பர் 11, அன்று கீற்று இணையதளத்தில் வெளியானது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக