புதன், 26 செப்டம்பர், 2012

நானா சாடுகிறேன் சமுதாயத்தை?

சமுதாய சாடல்கள், 
எண்ணற்ற ஏக்கங்கள்,
வகைதொகை இல்லாமல் 
வருத்தங்கள் என்று உங்கள் 
பக்கம் சலிப்பை உண்டு 
செய்கிறது! - இது என் 
இன்ப துன்பங்களை
பகிர்ந்து கொள்ளும் என்
அன்பு நண்பரின் வருத்தம் !

அன்பு நண்பரே !
வீழ்த்தவே முடியாது
என்றிருந்த ஆங்கிலேயப்
பேரரசை வீழ்த்தி இருக்கிறார்கள்;
சத்தியமாக முடியாது என்று
சொன்ன சந்திரனில் இன்று
சரித்திரங்களை எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்;
கடிதங்கள் படிந்த
கைகளில் இன்று
கணிப்பொறி விளையாடுகிறது;
மனிதனின் கண்ணுக்கே
புலப்படாத கருவறையில்
இருப்பது ஆணா? பெண்ணா?
என்று அடுத்த நொடியிலே
தெரிந்து கொள்கிறார்கள்;

எத்தனையோ மாற்றங்கள்
எண்ணிலடங்கா ஏற்றங்கள்
அத்தனை மாற்றங்களையும்
சுவைத்துக் கொண்டு இருக்கும்
இந்த சமுதாயம் எம்மக்கள்
வாழும் சேரிக்குள் மட்டும்
எந்த மாற்றத்தையும்
தந்ததில்லையே?
இது எம்மக்களின் விதியா?
இல்லை அவர்கள் மீது
நடத்தப்படும் சதியா?

நானா சாடுகிறேன் சமுதாயத்தை?
பொய்யானவர்களை சாடுகிறேன் !
புரட்டுகளை எதிர்க்கிறேன் !!
இருட்டில் கிடப்பவர்களை
உசுப்புகிறேன்!!

ரோடு போட தேவை எம்மக்கள்;
ஆனால் அவர்கள் அந்த ரோட்டில்
நடக்ககூடாது ! வீடு கட்ட வேண்டும்
சேரிசனம் - ஆனால் அவர்களுக்கு
என்று சொந்த வீடு இருக்கக்கூடாது !!
கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும்
எம் மக்கள் - ஆனால் அவர்கள் அருகில்
சென்றால் தீட்டு !!! ஓட்டு போட வேண்டும்
இந்த ஒடுக்கப்பட்ட சனம் - ஆனால் வென்ற
பின் அந்த தெருவிலே நடந்தால் தீட்டு!!!

எல்லாம் நவீனம் என்று பெருமை
பேசுபவர்கள் எத்தனைப் பேருக்கு
தெரியும் நவீன தீண்டாமை ?
ஆசை ஆசையாய் செல்போன்
வாங்குகிறோம் - அதில் பொது
இடத்திலே பேசக்கூடாது !
ஆண்டுபலவாய் வியர்வை சிந்தி
ஒரு மோட்டார் சைக்கிள் வாங்குகிறோம்
அந்த வண்டியை ஊர்த்தெருவிலே
ஓட்டக்கூடாது - பள்ளிக்கூடம்
போகும் போது எம் பிஞ்சு குழந்தைகளின்
பாதம் நோகுமென்று செருப்பு
வாங்கி தருகிறோம் அந்த செருப்பை
கையில் தான் அந்த பிஞ்சுகள் சுமக்கின்றன!!
ஊரிலே இருந்தால் பிழைக்கவும் முடியல
சாதிக் கொடுமையும் தாங்கல என்று
எத்தனை பேர் சொந்த மண்ணை விட்டு
நகரங்களில் பொய்யான சிரிப்பில்
நெளிந்து கொண்டு இருக்கிறார்கள்

நவீன உலகில் நடனமாடும் இந்த
சமுதாயம் எம்மக்கள்
நவீனப்படுவதை தடுப்பதேன்?
மீண்டும் சொல்கிறேன்
பொய்யானவர்களை சாடுகிறேன் !
புரட்டுகளை எதிர்க்கிறேன் !!
இருட்டில் கிடப்பவர்களை
உசுப்புகிறேன்!!

- அங்கனூர் தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக