செவ்வாய், 2 அக்டோபர், 2012

இனம் காக்க எழுந்து வா எம் தலைவா!!!

எம்மக்களுக்கு திறக்க மறுத்தக் 
கோவில் கதவுகளை உடைத்து, 
பூரண கும்பம் கொடுக்க வைத்த 
எம் தலைவா உம் பிள்ளை நான் 
அழைக்கிறேன் எழுந்து வா எம் தலைவா !

நீ கட்டிக் கொடுத்த பள்ளி அறைகள்
இன்று பிண அறையாய் காட்சி 
மாறுதே; அந்த நிலை மாற்றிட, பிஞ்சுக் 
குழைந்தைகளை காத்திட 
எழுந்துவா எம் தலைவா!!!

நீ கட்டி ஆண்ட தமிழகம் இன்று 
மது போதையில், சினிமா மோகத்தில்
தள்ளாடுதே; கண் திறந்து பாரய்யா
மீட்டுக் கொடுத்திட எழுந்துவா 
எம் தலைவா!!!

கூடங்குளம் பற்றி எரிகிறது; 
உன் பிள்ளைகளின் நிலை 
கேள்வியாய் கிடக்குது; 
உன் பேரப்பிள்ளைகளின் 
கதறல் காதைப் பிளக்குது; 
கண் திறந்து பாரய்யா
இனம் காத்திட எழுந்து வா
எம்தலைவா!!!

தந்தை பெரியாரின் 
சொல்லுக்கு உயிர் கொடுத்த 
எம் முதல்வா, பெரியாரியம் 
இன்று பெரிய ஆரியமாய் 
காட்சி மாறுதே; பெரியாரியம்
காத்த பெருந்தலைவா 
பெரியாரையும் கூடவே அழைத்து வா!

பீ அள்ளியவன் பிள்ளை பீ தான் அல்ல
வேண்டும் என்ற குலக்கல்வியின் 
குரல்வளையை நெரித்த எம் முதல்வா!
இன்றும் உம் பிள்ளைகளின் வாயில் 
பீயை திணிக்கிறார்கள்; உம் பிள்ளைகளை,
எம்மக்களை காத்திட எழுந்துவா 
எம் தலைவா!!!

காமராசர் ஆட்சி அமைப்போம் என்று 
வேஷம் போடுகிறார்கள்; புரிந்துக் கொள் 
எம் தலைவா ! காவி உடுத்தாத 
காங்கிரஸ்காரன் நீ ஒருவனே ; உனக்கும் 
காவிசாயம் பூசத் துடிக்கும் கயவர்களின் 
கன்னத்தில் அறைய எழுந்துவா 
எம் தலைவா!!!

காமராசர் மறைவு காங்கிரசுக்கு 
பெரும் இழப்பு என்று சாயம் பூசாமல்
நடிக்கிறார்கள்; நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்;
உம் மறைவு எமக்குத்தான் பெரும் 
இழப்பு; அவர்களுக்கோ பெரும் மகிழ்வு 
எப்படி என்று கேட்கிறீரா? நீ இருந்து 
இருந்தால் ஒன்னரை லட்சம் உம் 
பிள்ளைகளை கொன்றவர்களை 
சும்மாவா விட்டிருப்பாய்? இல்லை 
இல்லை அவர்களின் முதுகெலும்பை 
உடைத்து இருப்பாய்; கொடுங்கோலனுக்கு 
எம் மக்களின் ரத்தத்தில் சிவப்புக் கம்பளம்
விரிக்கும் சோனியாவின் கொழுப்பை 
அடக்க எழுந்துவா எம் தலைவா!!!

குப்பை மேடுகளாய் காட்சித் தந்த 
தமிழகத்தை தொழிற்க்கூடமாய்
மாற்றிய பொருளாதார தந்தையே; 
அந்நிய முதலீடு எனும் அந்நியனை
உள்ளே விட ஆடுகிறார் மன்மோகன்;
அவருக்கு புத்தி சொல்ல எழுந்து வா!!!

கட்சிக்கும், ஆட்சிக்கும் டெல்லிக்கு 
நடையாய் நடக்கிறார்கள்; ஆனால் 
எங்கள் பசியையும் பஞ்சத்தையும் 
போக்க நடக்க மறுக்கிறார்கள்; 
தண்ணீருக்கும் கூட தமிழன் 
தவியாய் தவிக்கிறான்; 
தமிழனின் வாழ்வாதாரம் காக்க 
டெல்லிக்கு போகவேண்டும்
எழுந்துவா எம் தலைவா!!!

அக்டோபர் 02 யை நான் கருப்பு தினம் என்று 
சொல்லிவந்தேன் அதற்க்கு இரண்டு காரணம்
ஒன்று காந்தி பிறந்ததற்கு; மற்றொன்று 
எம் தலைவன் நீ மறைந்ததற்கு !! 

வருணாசிரமம் காத்த காவி
காந்தியின் பிறந்தநாளாம் இன்று ; 
அதனால் ஆனந்த கூத்தாடுகிறார்கள்;
எம் தலைவா நான் மட்டும் கண்ணீர் 
வடிக்கிறேன்; வீரவணக்கம் சொல்லுகிறேன்
எம்மைப் போல் உம் பிள்ளைகளின் கதறல் 
கேட்டீரோ, எழுந்து வா; 
எம் நிலை மாற்றிட வா;
கருப்பு நிறத்தில் பூத்திருந்தாலும்
நீ தான் எங்களுக்கு நிரந்தர வெளிச்சம் 
எழுந்து வா எம் தலைவா!!!
-----------------------------------------------------------------
வீரவணக்கத்துடன் 
அங்கனூர் தமிழன்வேலு

1 கருத்து: