செவ்வாய், 9 அக்டோபர், 2012

தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு "சாட்டை " சாட்டை தான்


எம்.அன்பழகன் அவர்களின் இயக்கத்தில் இயக்குனர் பிரபு சாலமன் தயாரிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்து வெளிவந்திருக்கும் சாட்டை திரைப்படத்தை காணும் வாய்ப்பைப் பெற்றேன். ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே இதற்க்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று தூண்டுதல் இருக்கவேண்டும். அப்படித்தான் திரைப்படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலே விமர்சனம் எழுதவேண்டும் என்ற தூண்டுதல் எழுந்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு கனவு இருக்கும் தனக்கு வர இருக்கும் ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று. அந்த விதத்தில் ஆசிரியர்களுக்கே ஆசிரியராக பாடம் நடத்தி இருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். நாயகனாக தோன்றியிருக்கும் சமுத்திரக்கனி கதையின் பொறுப்பை உணர்ந்து பொறுப்புடன் வாழ்ந்து இருக்கிறார்.

படத்தின் முதல்க் காட்சியில் பள்ளிக்கு செல்ல அழும் மாணவன் பள்ளி முடிந்தவுடன் வானத்தை கையில் பிடித்த சந்தோசத்தில் ஓடி வருவது என்னை பழைய பள்ளி பருவத்திற்கே அழைத்து சென்றுவிட்டது. பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகள் தனியார் பள்ளிக்கு சென்றுவிடுகிறார்கள், அன்றாட வாழ்க்கைக்கே அள்ளப்படும் கூலித்தொழிலாளியின் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளியை விட்டால் வேறு கதியில்லை என்று சொல்லும் இடம் கிராமப்புற மாணவர்களின் உண்மை நிலையை சொல்கிறது. இந்த மாணவர்கள் எல்லாம் பன்றி மெயக்கத்தால் லாயக்கி, இவர்களை கழித்துக் கட்டிவிட்டு நல்லா படிக்கக்கூடிய மாணவர்களை சேர்த்துக் கொண்டால் நல்ல தேர்ச்சி விகிதத்தை காட்டலாம் என்று தம்பி ராமசுப்பைய சொல்ல மற்ற ஆசிரியர்களும் அதை ஆமோதிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையை அம்பலப் படுத்துகிறது. அதே இடத்தில் சமுத்திரக்கனி நல்லாப் படிக்கின்ற மாணவர்களை விட நல்லாப் படிக்காத மாணவர்களுக்குத்தானே நல்ல ஆசிரியர்களும், நல்ல பள்ளிகளும் தேவை என்று சொல்வது கிராமப்புற மாணவர்களின் எதிர்பார்ப்பை பிரித்திப்பலித்திருக்கிறார். மற்றொரு காட்சியில் தம்பி ராமையாவிடம் மாற்றமே நிலையானது. மாற்ற முடியாதது எதுவுமே இல்லை என்று சமுத்திரக்கனி சொல்வது மனித வாழ்வின் இயல்பை இயல்பாய் சொல்லி இருக்கிறார். மாணவர்கள் பல்லி தொடங்குவதற்கு முன் பிரேயருக்கு (தேசியகீத கூட்டத்திற்கு) கண்டிப்பாக வரவேண்டும் என்று கட்டளைப் போடும் ஆசிரியர்கள் தாமதமாகவே வருவார்கள் என்பதை சொல்லியிருப்பது சாட்டையடி. மாணவர்கள் தாமதமாக வந்தால் தண்டிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களே தாமதமாக வந்தால் என்ன செய்யலாம் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார். தவறு செய்யும் மாணவர்களை கடுமையாக தண்டிப்பதால் எந்த பயனும் இல்லை. அவர்கள் மீது அன்பு செலுத்தினால் வெற்றி பெறுவார்கள் என்பதைத்தான் படம் முழுக்க சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் மாணவரிடத்தில் எப்படி எல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்பதை பல இடங்களில் ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தி இருக்கிறார் இயக்குனர். கிழிந்த டவுசரில் மாணவன், அதிலே தபால் போடும் சக மாணவர்கள் என கிராமத்து வாசனையை வாசம் மாறாமல் காட்டி இருக்கிறார்.

நூலகப் பொறுப்பாளர் புத்தகங்களே வாங்காமல் வாங்கியதாக கணக்கு காட்டுவது, பள்ளிப் பொருட்களை ( டேபிள், நாற்காலிகள்) வீட்ட விசேசங்களுக்கு கொடுப்பது, சத்துணவுப் பொறுப்பாளரின் திருட்டுத்தனம், ஆசிரியர்களின் அடக்குமுறை, கண்மூடித்தனமான போக்கு உடைந்து கிடக்கும் தரைகள், தலைமை ஆசிரியரை உள்ளூர் ஆசிரியர்கள் தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது , என வரிசைப்படுத்தி இருப்பது அரசுப் பள்ளிகளின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பெண்கள் கழிவறையை சென்று பார்த்த மாணவனை தண்டிக்கும் ஆசிரியையை கண்டித்து, மாணவனை உற்சாகப் படுத்துவது, அதை ஆசிரியரின் அனுமதியோடு காணவேண்டும் என்று அறிவுருத்துவதும் சிறப்பு. நான்கு மதிப்பெண் பெற்ற மாணவனை பாராட்டுவதும், பத்து மதிப்பெண் எடுத்த மாணவனை உற்சாகப்படுத்துவதும் சல்யூட்ப் போட வைக்கிறது. மனிதனுக்கு சவாலான பருவம் என்றால் அது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பருவம் தான். தேர்வில் வெற்றிப் பெறவேண்டும், அந்த காலத்தில் தான் காதலும் வரும் அதை எப்படி கையாளவேண்டும் என்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி இருக்கிறார். மாணவர்கள் மீது நம்பிக்கை வைத்தால் எதையும் வென்று காட்டுவார்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார் சமுத்திரக்கனி. மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக வழக்கு வந்து மாணவியின் உறவினர்கள் தாக்கும் போது உண்மையை சொல்லாமல் அடிவாங்கி கொண்டு சிறைக்கு செல்வது சினிமாத்தனமாக இருக்கிறது. கொஞ்சம் நெருடல் தான். பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் கிராமத்து மாணவிகள் அதை வீட்டில் சொல்லாமல் இருப்பதற்கு, தம் படிப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தான் என்பதை அழுத்தமாக சொல்லி இருப்பது சிறப்பு. அதே மாணவியின் படிப்பை பெற்றோர்கள் நிறுத்தியவுடன் ஒரு பொறுப்பான ஆசிரியராக பெற்றோர்களிடம் பேசி படிப்பை தொடர செய்வது பாராட்ட வேண்டியது. ஸ்போர்ட்ஸ் டீம் தலைவராக பழனியை தேர்வு செய்வதற்கு ஒட்டுமொத்தப் பள்ளியே எதிர்த்தும், தன் தந்தையே வேண்டாம் என்று சொன்னாலும் அவனை தலைவராக தேர்வு செய்தது சிறப்பு. அதை உணர்ந்து அவன் பொறுப்பாக செயல்பட்டு வெற்றியை ஈட்டித்தருவது மாணவர்களின் இயல்பான குணத்தை காட்டுகிறது. மாணவர்கள் மீது நம்பிக்கை வைத்தால் எதையும் சாதிப்பார்கள் என்பதற்கு சிறந்த சாட்சியாக இருந்தது. அறிவழகி காதலை சொல்ல வரும் போது சமுத்திரக்கனிக்காக காதலியை பிடிக்கவில்லை என்று ஒதுக்குவதும், மறைமுகமாக பள்ளிப் பருவத்தில் படிப்பே முக்கியம் என்று சொல்லி சபாஸ் போட வைத்திருக்கிறார். மாணவப் பருவத்தில் காதலிக்கக் கூடாது என்று சொன்னதற்காகவே ஆயிரம் நன்றிகளை இயக்குனருக்கு சொல்லலாம். காமெடிக் காட்சிகளில் கிராமத்து வாசனை நம்மை வெகுவாக கவர்கிறது. விரசம் இல்லாத பாடல்களில் நம்மை கவர்கிறார். இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற பாடல் தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. தன்னை அழிக்கத் துடிக்கும் தம்பி ராமையாவுக்கு அடுத்த தலைமை ஆசிரியர் பதவிக்கு சிபாரிசு செய்வது மனிதனுக்கு இருக்கவேண்டிய உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது. இறுதியாக மாணவர்களை எப்படிப் புரிந்துக் கொள்வது என்பதை தம்பி ராமையாவுக்கு சொல்லும்போது நான்கு வைகையாக பிரிக்கிறார். பின்தங்கிய மாணவன், மந்தமான மாணவன், சுமாரான மாணவன், சூப்பர் பாஸ்ட் மாணவன் இதை புரிந்து கொண்டால் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது சுலபம் என்று சொல்லோ\யிருக்கிறார். இறுதியாக ஏணியை கூரையை நோக்கிப் போடாதீர்கள்; வானத்தை நோக்கிப் போடுங்கள் என்ற வசனம் இந்த வருடத்தின் சிறந்த தன்னம்பிக்கை வரிகள். உழைத்த உழைப்புக்கு பலனை எதிர்பாராமல், என் தேடல் பெரியது என்று சொல்லி கிளம்புவது சல்யூட் அடிக்க வைக்கும் காட்சி. கடுமையான தண்டனைகளால் எந்த மாற்றமும் நிகழாது என்று நீதித்துறைக்கே அறிவுறித்தி இருக்கிறார். சக மாணவனோடு யூனிபார்ம் போடாத மாணவனாக நின்று சிறப்பித்திருக்கிறார். இழப்புகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழக்கூடிய ஒன்றுதான். இழப்பை நினைத்து அழுதால் வெற்றியை நோக்கி நகரமுடியாது இழப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லி இருப்பது சபாஸ்....மொத்தத்தில் திரைப்படம் தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு "சாட்டை" சாட்டை தான்...
இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லவேண்டும் என்பதே எம் விருப்பம்...
----------------------------------------------------------------------------
கிராமத்து மாணவர்களின் நிலையை எடுத்து
சொன்னதற்கு 25 மதிப்பெண்ணும்,
பள்ளிப் பருவத்தில் காதல் கூடாது என்று சொன்னதற்கு
25 மதிப்பெண்ணும்,
கதையின் பொறுப்பை உணர்ந்து பொறுப்பாக நடித்த
சமுத்திரக்கனி உட்பட நடிகர்களுக்கு 15 மதிப்பெண்ணும்,
மாணவர்கள் மீது ஆசிர்யர்களும், பிள்ளைகள் மீது பெற்றோர்களும் நம்பிக்கை
வைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை அழுத்தமாக
சொன்னதற்கு 20 மதிப்பெண்ணும்,
கடுமையான தண்டனைகள் மாற்றத்தை நிகழ்த்தாது என்று
சொன்னதற்கு 5 மதிப்பெண்ணும்,
ஆக மொத்தம் 90 தொண்ணூறு மதிப்பெண்கள் வழங்கியுள்ளேன்....

வாழ்த்துக்களுடன்
அங்கனூர் தமிழன்வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக