வியாழன், 4 அக்டோபர், 2012

புதிய தலைமுறை Vs தமிழன் வேலு ஒரு கருத்து மோதல்


செப்டம்பர் 25, 2012

ராஜபக்சேவின் இந்திய வருகையை எதிர்த்து 
திருமாவளவன் தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கலாமே?
"புதிய தலைமுறை"யின் புதிய கண்டுபிடிப்பு !
-------------------------------------------------------------------------

பெருமதிப்புர்க்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் !
தங்களின் சமூக விழிப்புணர்வு பணியை பெரிதும் மதிக்கிறேன். அது மேலும் மேலும் செழுமையடைய வேண்டும் என்று விரும்புபவர்களில் நானும் ஒருவன். அதே வேளையில் சமூக விழிப்புணர்வு பணி என்பது முற்ப்போக்கான, உடன்பாடான சிந்தனைகளை அல்லது செயல்பாடுகளை தேடி, தேடி வரவேற்பதும், ஊக்கப்படுத்துவதுமே ஒழிய. சில மோசமான, விரும்பத்தகாத நிகழ்வுகளை தேடி, தேடி விமர்சிப்பது அல்ல என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

அன்று வெளியான இதழில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட முடியாதா? என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி எழுதி இருந்தீர்கள். அதில் ராஜபக்சே மத்தியப்பிரதேச வருகையை எதிர்த்து சென்னையில் உள்ள சாலைகளை மறித்து போக்குவரத்தை முடக்குவதற்குப் பதிலாக விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கலாமே? அல்லது ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியில் இருந்து விலகி இருக்கலாமே? குறைந்தபட்சம் சோனியா காந்தியையோ, பிரதமரையோ நேரில் சந்தித்து தன் கண்டனத்தை தெரிவித்து இருக்கலாமே என்று கேள்வி எழுப்பி இருந்தீர்கள்.

இந்த கருத்து, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன் நாடாளுமன்ற அவையில் அங்கே தன் கருத்துக்களை, கண்டங்களை பதியாமல் வேண்டுமென்றே பொதுமக்களுக்கு இடையூறு செய்யவேண்டும் என்பதற்காகவே சாலைமறியல் போன்ற போராட்டங்களை நடத்துகிறார் என்று குற்றம் சுமத்தும் தொனியில் உள்ளது.

நீங்கள் சொன்னது போல திருமாவளவன் பதவி விலகியிருந்தால் ராஜபக்சேவின் இந்திய வருகையை இந்திய அரசு தடுத்து நிறுத்தி இருக்குமா? அல்லது ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியில் இருந்து அவர் விலகி இருந்தால் மத்திய அரசு கவிழ்ந்து இருக்குமா?

திருமாவளவன் எடுத்த எடுப்பிலேயே சாலை மறியலில் இறங்கவில்லை. செப்டம்பர் 5, 6, 7 தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ்நாட்டில் இருந்து 39 உறுப்பினர்கள் இருந்தும் தனி ஒருவராய் தர்ணாவில் ஈடுபட்டு அதற்க்கு மத்திய அரசு செவிசாய்க்காத பட்சத்தில் தான் சாலைமறியல், இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தார். அங்கே யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டது வருந்தத்தக்க ஒன்றுதான். அதற்க்கு திருமாவளவனே தாக்க சொன்னது போலவும், அவரே சென்று தாக்கியது போலவும் அவரை பதவி விலக இருக்கலாமே என்று கேட்பது நியாயமான கேள்வியா? இந்த கேள்வியை மற்ற 38 உறுப்பினர்களிடம் நீங்கள் கேட்டு இருக்கவேண்டும். நீங்கள் கேட்கலாம் இப்போது போராட்டம் நடத்தியதால் ராஜபக்சே வருகையை இந்தியா தடுத்து நிறுத்தியதா? என்று. இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே உலகில் எங்கு சென்றாலும் எதிர்ப்பு உள்ளது. ஆனால் இந்திய அரசு மட்டும் தமிழர்களின் உணர்வை காலில் மிதித்து, அவனுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது. ஆகவே தான் தமிழர்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம், தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு உள்ளது என்பதை பதிவு செய்து இருக்கிறோம்.

இன்று திருமாவளவன் செய்த போராட்டத்தை விமர்சிக்கும் நீங்கள், இந்தியா முழுமைக்கும் 85 சதவிகிதம் தனியார் மயமாகிவிட்டது. மீதமுள்ள 15 சதவிகிதமும் விரைவில் தனியார் மயமாகிவிடும். எனவே தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் அதற்க்கு மத்திய அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலே முழங்கினார் திருமாவளவன் அதை ஏன் எழுதவில்லை?

அண்டை நாட்டில் தொப்புள்க்கொடி உறவுகள் கொத்துக் கொத்தாய் சாகடிக்கும் போது , ஈழத்தை எதிர்க்கும் இந்திய அரசின் குகைக்கே சென்று தனி ஈழமே தீர்வு என்று எழுந்து முழங்கினார் திருமாவளவன், இந்தியாவில் புலிகளுக்கு தடை விதித்த பின்பு நாடாளுமன்றத்தில் ஈழமே தீர்வு என்று முழங்கிய ஒரே தமிழன் திருமாவளவன் அதை ஏன் எழுதவில்லை? சாலை மறியலால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்ணீர் சிந்தும் நீங்கள் 2009 ஜனவரி 15 ஆம் நாள் ஒட்டுமொத்த தமிழகமே பொங்கல் கொண்டாடிக் கொண்டு இருந்தபோது ஈழத்தமிழர்களுக்காக விடுதலை சிறுத்தைகள் மட்டும் நான்கு நாட்கள் பட்டினி கிடந்தார்களே அதை ஏன் எழுதவில்லை?

ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் ரயில் கட்டணத்தை குறைத்ததும் அனைத்து உறுப்பினர்களும் அமைதி காத்தாலும், மனித மலத்தை மனிதனே அல்லும் கேவலம் இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று கூறி இந்திய அரசின் முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டு வெளிநடப்பு செய்த திருமாவளவனை பற்றி ஏன் ஒரு பெட்டி செய்திக்கூட போடவில்லை?

தமிழ்நாட்டில் இருந்து 39 உறுப்பினர்கள் இருந்தும் தனி ஒருவராய் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தர்ணாவில் ஈடுபட்ட திருமாவளவன் தான் ராஜினாமா செய்யவேண்டுமா?

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு விவாதத்தில் பங்கெடுத்து பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதே சரியான அணுகுமுறை என்று வாதிட்டாரே அதை ஏன் எழுதவில்லை?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் லட்சுமிபேட்டையில் சாதி வெறியர்களால் ஐந்து தலித்துகள் கொடூர கொலை பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதைப்பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை. தலித்துகள் மீது நடக்கும் கொடுமையை கண்டித்து எழுதவும் பத்திரிக்கை இல்லை, அதை கண்டித்து போராடும் திருமாவளவனின் போராட்டங்களை பொதுமக்களிடம் கொண்டுசெல்லவும் பத்திரிக்கை இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் திருமாவளவன் என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்?

இதையெல்லாம் எழுதாமல், விமர்சிக்காமல் எதோ தவறாக விரும்பத்தகாத ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டி திருமாவளவன் ராஜினாமா செய்திருக்கலாமே என்று கேட்பது, உங்கள் சிந்தனையின் ஊற்றுக்கண் எங்கே இருக்கிறது என்பதை எம்மால் யூகித்துக் கொள்ள முடிகிறது. ஒரு இயக்கத்தையோ, அல்லது ஒரு தனிநபரையோ விமர்சிக்கும் போது நன்மை, தீமை இரண்டையும் விமர்சிக்கும்போதுதான் அது ஆக்கப்பூர்வமான, சிந்தனாப்பூர்வமான விமர்சனமாக இருக்கும். விரும்பத்தகாத நிகழ்வை மட்டும் தேடி தேடி விமர்சிப்பது சரியான அணுகுமுறையா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

எந்த ஒருப் போராட்டமும் மக்களை சென்றடையும் போதுதான் அது அரசின் கவனத்திற்கு செல்கிறது. அமைதியாக யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழர் செந்தூரனை இந்த அரசு என்ன செய்தது? உண்ணாவிரதம் இருந்தும், வீதியில் இறங்கி போராடும் போதே இந்த அரசு செவிசாய்க்க மறுக்கும்போது வேறு எப்படி போராடவேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள்.

இப்படிக்கு 
அங்கனூர் தமிழன் வேலு

-------------------------------------------------------------------
அக்டோபர் 01, 2012

அன்புள்ள திரு.தமிழன் வேலு,
வணக்கம். உங்கள் கடிதத்திற்கு நன்றி.
இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேயின் வருகைக்கு எதிரான போராட்டங்களை புதிய தலைமுறை விமர்சிக்கவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடத்தக் கூடாதா என்பதுதான் அது எழுப்பும் கேள்வி.

இலங்கைத் தூதரகத்தின் முன் போராட்டம் நடத்தி, வேலை நாளில் பகல் பொழுதில் மூன்று மணி நேரம் போக்குவரத்தை முடக்கியதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் யார்? ராஜபக்‌ஷேயா? இலங்கை தூதரா? அவரை இந்தியாவிற்கு அழைத்தவர்களா? அதற்கு அனுமதியளித்த மத்திய அரசின் அமைச்சர்களா? அதன் அதிகாரிகளா? இவர்கள் எவரும் இல்லை. ராஜபக்‌ஷேவின் வருகையை விரும்பாத தமிழர்கள்தான்.

எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் அதை வைகோவைப் போல சாஞ்சிக்குச் சென்று, தெரிவித்திருக்கலாமே? தனியாகச் செல்ல முடியாதென்றால் அவருடன் இணைந்து போராடியிருக்கலாமே? இருவருக்கும் ஏற்புடைய கொள்கைகாக ஏன் இருவரும் இணைந்து போராடக் கூடாது?

இப்படி ராஜபக்‌ஷேயின் வருகையை விரும்பாத தமிழர்களைத் துன்புறுத்துவதை விட்டுவிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கிற மாதிரி ஏன் போராடக் கூடாது?. இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சிறுபான்மை நிலையை அடைந்து, ஒவ்வொரு ஓட்டும் அவசியம் என்ற நெருக்கடியில் சிக்கியிருந்தது. அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமே?வலிக்கிற இடத்தில் அடிப்பதுதானே புத்திசாலித்தனம்?

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை ஏற்காத மம்தா பானர்ஜி என்ன செய்தார்? அரசிலிருந்து விலகினார். அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டார். அதன் மூலம் தனது கட்சிக்கும் அந்த முடிவிற்கும் தொடர்பில்லை என்பதைச் செயல் மூலமாக நிரூபித்தார்.
அதைப் போலச் செய்யாமல், மத்தியில் ஆளும் கூட்டணியின் அங்கமாக இருந்து கொண்டு, அதன் மூலம் அது எடுக்கும் முடிவுகளை மறைமுகமாக ஆதரித்துக் கொண்டு, மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் சென்னை வாழ் தமிழர்களுக்கு இடையூறு ஏற்படுத்து ஏன்?

தனது தனிச் செயலாளர், கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் பொதுமக்களைத் தாக்குகிறார். அந்தச் சம்பவம் நடந்த இடத்தில் திரு. திருமாவளவன் இருக்கிறார். அவர் அந்தக் கட்சி உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? அதைக் கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறாரபாதிக்கப்பட்டவரிடம் குறைந்த பட்சம் வருத்தம் தெரிவித்தாரா?

கட்டுரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக திரு.திருமாவளவன் எப்படிச் செயல்பட்டார் என்பதைப் பற்றியதல்ல. அப்படி ஒரு கட்டுரை எழுத நேர்ந்தால் அந்த நேரத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்திகளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறோம்.

கட்டுரை திரு. திருமாவளவனைப் பற்றியது மட்டுமல்ல. மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்புடைய சம்பவங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உங்கள் கடிதத்திற்கு நன்றி

அன்புடன்
மாலன்

---------------------------------------------------------------------
அக்டோபர் 01, 2012
ஆசிரியர் மாலன் அவர்களே வணக்கம் !
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி !!

உங்கள் பதிலால் எனக்கு சில கேள்விகள் எழுந்துள்ளன..

1. சுதந்திர தின கொண்டாட்டம், குடியரசு தின கொண்டாட்டம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், திருமணம், இப்படி கொண்டாட்டங்கள் நடைபெறும் போதே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அப்படி இருக்கையில் போராட்டங்களை இடையூறு இல்லாமல் எப்படி செய்வது?

2. ஒன்னரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலனை இந்தியாவிற்கு அழைத்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது உணர்வுள்ள, பொறுப்புள்ள ஊடகம் பொதுமக்களிடம் எப்படி கேள்வி கேட்டிருக்கவேண்டும்?

3. இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்ஷே இந்திய வருகையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்துகிறார்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ராஜபக்ஷே இந்தியா வரலாமா?என்று கேட்காமல் போராட்டங்களால் நீங்கள் எப்படி பாதிக்கப்படுகிறீர்கள்? என்று கேள்வி கேட்டது சரியா? இது போராட்டத்தை சிருமைபடுத்தும், அல்லது திசைதிருப்போம் நோக்கம் அல்லாமல் வேறு என்ன?

4. நீங்கள் சொல்வதுப் போல ராஜபக்ஷே வருகையை விரும்பாத தமிழர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். உண்மைதான். ஆனால் அந்த ஊடகம் அந்த நபரின் கண்டனத்தை பதிவு செய்ய வாய்ப்பு கொடுத்ததா?

5. அடுத்து வைகோவுடன் சாஞ்சிக்கு சென்று போராடி இருக்கலாமே என்று கேள்வி கேட்டு இருக்கிறீர்கள். சாஞ்சிக்கு சென்று போராட்டம் நடத்தவேண்டும் என்று வைகோ விரும்பினார். விடுதலை சிறுத்தைகள் இலங்கை தூதரகத்தை முற்றுகை இடவேண்டும் என்று விரும்பினார்கள். இது தலைமை எடுக்கும் முடிவே? மேலும் சாஞ்சியில் போராட்டம் நடத்தும் போது சாஞ்சி பொதுமக்கள் பாதிக்கமாட்டார்களா? அவர்கள் பாதிக்கப்பட்டால் கவலை இல்லையா?

6. நீங்கள் சொன்னதுப் போல சிறுபான்மை நிலையில் மத்திய அரசு இல்லை. மத்திய அரசை காக்க மாயாவதி தயாராக இருந்தார். முலாயம் சிங் தயாராக இருந்தார். தி.மு.க தயாராக இருந்தது, மற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராக இருந்தன.

அவசியம் இதற்கும் பதில் தாருங்கள்
தேவைப்படும் பட்சத்தில் நேரில் விவாதிக்கவும் தயாராக உள்ளேன் ...
உங்கள் பதிலுக்கு நன்றி...

அன்புடன்... 
அங்கனூர் தமிழன்வேலு 
தொடர்புக்கு : 9962326297

-----------------------------------------------------------------
புதிய தலைமுறையின் அடுத்த இதழ் நாளை வெளிவர
உள்ள நிலையில்
நம் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக