வெள்ளி, 5 அக்டோபர், 2012

திருமாவின் பொன்விழா மேடையில் நாராயணசாமி ! அச்சச்சோ தப்பு! தப்பு!! - கொக்கரிக்கும் உணர்வாளர்கள்


"ஆகாத மருமகள் கைபட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்" என்பது போல திருமாவளவன் செய்வதெல்லாம் குற்றம் என்று ஒரு தரப்பினர் வாய் சவடால் அடித்து வருகிறார்கள். அதுபோலத்தான் 04.10.2012 அன்று புதுவையில் திருமாவின் பொன்விழா கொண்டாடப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியின் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கலந்துக் கொண்டு திருமாவுக்கு வாழ்த்து சொன்னார். இது தான் பெரிய குற்றமாகிவிட்டது. ஒரு இணையதள ஆசிரியர் என்னை தொடர்புக் கொண்டு திருமாவளவன் பொன்விழாவில் நாராயணசாமி எப்படி பங்கு பெறலாம். காங்கிரஸ் ஈழத்துக்கு எதிரானது; ஈழத்தை அழித்ததே காங்கிரஸ் கட்சி தானே அந்த கட்சியின் நாராயணசாமி தமிழகத்தின் கூடங்குளம் உட்பட பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறாரே. அவரை எப்படி திருமாவளவன் அழைக்கலாம் என்று கேட்டார். நான் பொறுமையாக கேட்டுக் கொண்டு நான் பிறகு காரணம் சொல்கிறேன் என்றேன். அவருக்காகவும், கொக்கரிக்கும் உணர்வாளர்கலுக்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

அங்கே நடந்தது திருமாவளவன் அவர்களின் 50 ஆவது பிறந்தநாள் விழா. திருமாவுக்கு திருமணம் ஆகவில்லை, ஆகவே இந்த 50ஆவது பிறந்தநாளை அவரது திருமனவிழாவாக எண்ணித்தான் தமிழகமெங்கும் சிறுத்தைகள் கொண்டாடிவருகிறார்கள். திருமாவளவன் என்ற தனி நபருக்கு, நாராயணசாமி என்ற தனி நபர் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் என்ன தவறு என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பொது இடத்தில் தனக்கு வேண்டாதவர் வந்தால் கூட மரியாதை நிமித்தமாக வணக்கம் சொல்வதில்லையா? அப்படித்தானே இதுவும். கிட்டத்தட்ட அது ஒரு குடும்ப நிகழ்ச்சி அதிலே தனக்கு எதிர்க் கருத்து உடையவர் வாழ்த்தும் போது, எதிர்க் கருத்து உடையவர் என்பதாகே உதறி தள்ளி விடமுடியுமா? நல்லவேளை, திருமாவின் பொன்விழாவிற்கு நாராயணசாமி ஏன் வந்தார் னு கேட்டாங்க; திருமாவளவன் அவர்களின் தந்தை இறப்புக்கு ஜி.கே.வாசன் ஏன் வந்தார்னு கேட்கல அதுவரைக்கும் மகிழ்ச்சி.

இங்கே சில நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், தம் மக்களுக்கான எதிரிகளாக மூன்று பேரை பட்டியலிட்டார். முதல் எதிரி இந்துமதம், இரண்டவது எதிரி காந்தியடிகள், மூன்றாவது எதிரி தான் காங்கிரஸ் கட்சி. ஆனால் காந்தியடிகள் அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கிய காங்கிரஸ் அரசாங்கத்திலே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அமைச்சராக பங்கு பெற்று இருந்தார்.  இதை பொதுக் கண்ணோட்டத்தோடு பார்த்தால் முரண்பாடாகத்தான் தெரியும். ஆனால் அவர்தம் மக்களுக்காக தான் அந்த அமைச்சர் பதவியில் இருந்தார். அதன் பயன் முடிந்ததும் அந்த பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார். இரண்டு தந்தை பெரியார் அவர்களின் கொள்கை நிரந்தர எதிரியாக கருதப் பட்டவர் ராஜாஜி. ஆனால் தம் இரண்டாவது திருமணத்திற்கு ஆலோசனையே ராஜாஜியிடம் தான் தந்தை பெரியார் அவர்கள் கேட்டுக் கொண்டார். ஆக தந்தை பெரியார் அவர்கள் கொள்கை வேறு; குடும்பம் வேறு என்று மிக தெளிவாக பிரித்துப் பார்த்தே வந்திருக்கிறார். அடுத்தப் படியாக அமெரிக்காவிலே எதிர் எதிர் துருவங்களாக செயல்படும் பராக் ஒபாமாவும், ரோம்னியும் ஒரே மேடையில் விவாதம் செய்கின்றனர். ஒபாவுக்கு திருமணநாள் வாழ்த்தை ரோம்னி சொல்கிறார். இது ஒரு அவை நாகரிகம். மனித இயல்பே ஒழிய பெரிய குற்றமாக என்னால் கருத முடியவில்லை. அடுத்து இந்திய அரசியலுக்கு வருவோம். பாராளுமன்றத்திலே சோனியாவும், அத்வானியும் கருத்து மோதலை நடத்துவார்கள்; ஆனால் வெளியே இருவரும் கை குலுக்கி கொள்வார்கள்; ஒன்றாக விருந்துகளில் பங்கு பெறுகிறார்கள். தமிழ்நாட்டு அரசியலில் மட்டும் தான் எதிர்க் கருத்து கொண்டு இருந்தால் பார்க்கவே கூடாது, நேரில் கண்டால் கூட மரியாதை செய்யக்கூடாது என்ற நாகரிகள் எல்லாம் இருக்கிறது. கிட்டத்தட்ட இது ஜெயலலிதா பாலிசி. அவர்தான் தி.மு.க காரர்களை பார்த்து அ.தி.மு.க வினர் வணக்கம் சொல்லிவிட்டால் அடுத்தநாள் பதவி இருக்காது. என் சொந்தக் காரர்கள். மாமன் - மச்சான் இருக்கிறார்கள் மாமன் தி.மு.க, மச்சான் அ.தி.மு.க தங்கையை கட்டிக் கொடுத்திருந்தாலும் இருவரும் ஒன்றாக எந்த குடும்ப நிகழ்வில் கூட கலந்து கொள்வதில்லை. இது என்ன நாகரிகம் என்றே தெரியவில்லை.

சில நேரங்களில் திருமா இதற்க்கு விதி விலக்காக இருந்து இருக்கிறார். சிதம்பரம் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நேரடி மோதல் திருமாவும், பா.ம .க. பொன்னுசாமியும். பொன்னுசாமிக்கு ஓட்டுக் கேட்க வந்த ராமதாஸ் அவர்களை எதிரில் கண்டவுடன் நின்று நலம் விசாரித்துவிட்டு சென்றார். அடுத்து அ.தி.மு.க. அணியில் இருக்கிற கம்யுனிஸ்ட் கட்சியோடு, அ.தி.மு.க. அணியில் இருக்கிற ம.தி.மு.க வோடு, அ.தி.மு.க. அணியில் சேர இருந்த பா.ம.க. வோடு, அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு அளித்து வந்த பழ.நெடுமாறனோடு, அ.தி.மு.க. வுக்கு எல்லா வேலைகளையும் செய்து வந்த எம். நடராசனோடு தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், கூட்டணியைப் பற்றி கவலைப் படாமல், அரசியல் ஆதாயத்தை பற்றி கவலைப் படாமல், தேர்தலைப் பற்றி கவலைப் படாமல் ஆறு மாதம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் கைகோர்த்து களப்பணியாற்றி இருக்கிறார் திருமாவளவன். ஆனால் தமிழ் உணர்வாளர் என்ற முறையில் கூட சிலர் அவர் இருந்த உண்ணாவிரத மேடைக்கு கூட வரவில்லை. அந்த மேடைக்கு வந்தால் ஜெயலலிதா அவர்களை அரசியலை விட்டே விரட்டிவிடுவாரா? இல்லை அவர்கள் சொத்தை எல்லாம் பிடுங்கி கொள்வாரா? என்று தெரியவில்லை. இப்பொதுக் கூட பா.ஜா.க வை ஆதரிக்க முடியாது என்று திருமாவளவன் வெளிப்படையாக அறிவிப்பு செய்திருந்தாலும் கூட இல.கணேசன் அவர்கள் வாழ்த்து சொல்லி இருக்கிறார். ஆனால் இவர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் காரணத்திற்க்காக உணர்வாளர்கள் தமிழ் உணர்வாளர் என்ற முறையில் கூட பிறந்தநாள் வாழ்த்துக் கூட சொல்லவில்லை. அவ்வளவு நாகரிகம் தெரிந்தவர்கள் தமிழக அரசியல்வாதிகள்.

இவர்களின் நோக்கம் திருமாவளவனை விமர்சிக்க வேண்டும் அவ்வளவுதான். முதலில் திருமாவளவன் ராஜபக்சேவுக்கு கைகொடுத்தது குற்றம் என்றார்கள். அப்போது திருமா அரசுப் பிரதிநியாக சென்றார். அங்கே திருமாவளவனை தனிமை படுத்தி திருமாவளவன் எப்படி ராஜபக்சேவுக்கு கைகொடுக்கலாம். என்று விமர்சனம் செய்தார்கள். இப்போது திருமாவின் பிறந்தாநாள் விழாவுக்கு நாராயணசாமி கலந்துக் கொண்டதற்கு குற்றம் என்கிறார்கள். இங்கே திருமாவை தனி மனிதனாக பாராமல் கொள்கை அரசியலை கொண்டு குழப்பி விமர்சனம் செய்கிறார்கள். பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பதுப் போல பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னதுக் கூட தீட்டாகிவிட்டது போலும்... பேரறிஞர் அண்ணா சொன்னதுப் போல
வசவாளர்கள் வாழ்க என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

உணர்வாளர்களே உங்களுக்கு இறுதியாக ஒற்றை
வேண்டுகோளை வைக்கிறேன். இவர்
காட்டாற்றில் கரைந்து போகும் களிமண் அல்ல!
அந்த காட்டாற்றோடு பயணித்து, காட்டாற்றின் போக்கையே
மாற்றக்கூடிய கருங்கல் பாறை!!
கவலைப்பட தேவையில்லை; சந்தேகப்பட தேவையில்லை!!

இவண்...
அங்கனூர் தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக