ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு... ஆஹா என்னவொரு திட்டம்... புரட்சிதலைவி "அம்மா" அவர்கள் புதிய புரட்சியை செய்துவிட்டார்கள்; ஏழை மாணவர்களின் கனவை நனவாக்க புதிய விடியலை ஏற்ப்படுத்திக் கொடுத்துவிட்டார் என்று ஊடகங்கள் தங்கள் அரிப்புக்கு சொரிந்து கொள்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் கல்வி கொள்ளையை யார் தட்டிக் கேட்பது? ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் தான் படிக்கவேண்டும் யாரும் விரும்பவில்லை. முறையான நேர்மையான, தரமான கல்வியை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியில் கொடுக்கவேண்டிய 20% இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றாத அரசுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற புதிய திட்டம் ஏன் வந்தது? இத்திட்டத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவெனில் " ஒவ்வொரு ஆண்டும் மே 2ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிப்பை பள்ளிகள் வெளியிட வேண்டும். மே 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 9ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்பட வேண்டும்.பள்ளிகள் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட பின்னர் அதற்கான ரசீதை பரிந்துரைக்கப்பட்ட வடிவில் பெற்றோருக்கு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மே 11ஆம் தேதி மாலை 5 மணியளவில் தகுதிவாய்ந்த விண்ணப்பங்களுக்கு உரிய நபர்களின் பெயர்களை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும். இதுபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விவரங்களையும், அவை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தையும் பள்ளிகள் வெளியிட வேண்டும்." இதிலே தகுதிவாய்ந்த என்ற சொல்லை கவனமுடன் படியுங்கள்...
Pichute : Google |
விண்ணப்பதாரரின் தகுதியை தீர்மானிப்பது எது? தகுதியை உறுதி செய்வது யார்? தகுதிநீக்கம் செய்யவும் பள்ளிக்கு அதிகாரம் உண்டாம்... "சலுகை பெற தகுதி இல்லை" என்ற ஒற்றை வார்த்தையை நாக்கூசாமல் பொய்சொல்லி, சொல்லியே கடந்த 50 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. கேட்டால் சலுகையை பெற தகுதி இல்லை என்று ஒரே காரணத்தை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள். இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இதுநாள்வரை முழுமையான அளவில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதிகபடச்சமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கவேண்டிய 20% யில் 10% கூட ஒதுக்கப்படவில்லை. கேட்டால் தகுதியான மாணவர்கள் இல்லை. இந்த ஒரே பதில் தான். இதுபோலவே தான் இன்றைக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு திட்டமும்.
திடீர் என்று அரசுக்கு ஏன் ஏழை மாணவர்கள் மீது கரிசனம்? கரிசனமும் இல்லை; கத்தரிக்காயும் இல்லை. தனியார் பள்ளிகளில் நடக்கும் கல்வி கொள்ளையை தடுக்க, தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த கடந்த 2009ம் ஆண்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 2010ம் ஆண்டில் தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, அந்தந்த பள்ளிகளின் வரவு செலவுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்தது. குழு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும், கட்டணம் குறித்த விவரங்களை தகவல் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழகத்தில் உள்ள 11,500 தனியார் பள்ளிககளுக்கு கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன. (source : Dhinakaran. Com) ஆனால் அந்த கட்டணங்களை ஏற்க இயலாது என 6,400 தனியார் பள்ளிகள் பகிரங்கமாக அறிவித்தன. சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீ டும் செய்தன. சில பள்ளிகள் அரசின் கல்வி கட்டணத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தாலும் வெவ்வேறு வகையான வசதிகளை காட்டி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். 2011, மே 16 தேதி அமைந்த புதிய அரசு இந்த பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் என்று பெரும்பாலான நடுநிலையாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்ய முனைந்து உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கியதும் மீண்டும் பின்வாங்கியது. அப்போதும் தனியார் பள்ளிகளின் கல்வி கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்காத அரசு இப்போது ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு திட்டத்தை அறிவித்து இருப்பதன் மூலம் தனியார் பள்ளிகளின் கல்வி கொள்ளைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. எழைமானவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் இட ஒதுக்கீடு பறி போகவும் வாய்ப்புள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்களை குறிப்பிட்ட அளவில் அதாவது ஒரு சிலரை ஏழை மாணவர்கள் பட்டியலில் சேர்த்து தாழ்த்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை ஏப்பம் விடவும் வாய்ப்பு ஏராளம்... அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டிய 20% முழுமையாக செயல்படுத்தாத அரசு, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீட்டை முறையாக, நேர்மையாக சாதிய பின்புலம் இன்றி நடைமுறைப்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை... தனியார் பள்ளிகளின் பெரு முதலாளிகள் ஏழை பெற்றோர்களை மிரட்டி பணம் வசூலிக்கமாட்டார்கல் என்பதற்கும் எவ்வித எவ்வித உத்திரவாதமும் இல்லை... அப்படி செய்தால் ஏழை பெற்றோர்களை பாதுகாக்க என்ன வழி வைத்திருக்கிறது இந்த அரசு??? இதன் மூலம் ஏழை மக்களை தனியார் கல்வி கொள்ளையர்களின் வலையில் தள்ள முயற்சிக்கிறதா அரசு? என்ற கேள்வியும் எழாமல் இல்லை...
இது தனியார் கல்வி நிறுவனங்கள், கல்வி என்ற பெயரில் செய்து வரும் மாபெரும் வியாபரத்துக்கு அனைத்து மக்களின் ஆதரவை பெற்றுக் கொடுக்கும் முயற்சியே அன்றி வேறில்லை...
- அங்கனூர் தமிழன் வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக