செவ்வாய், 25 டிசம்பர், 2012

சுயமரியாதைப் பாதை - 2 - அங்கனூர் தமிழன் வேலு

வீட்டிற்கு கேஸ் புக் பண்ண மறந்து விட்டேன், கடையில் கஸ்டமர் இருக்கும் போதே திட்டினாங்க, அதனால நான் வேலையை நிற்கிறேன் என்று சொன்னேன்.இதோடு தான் கடந்த சந்திப்பில் முடித்தோம். அதற்க்கு முன்பே நான் முடிவு செய்து விட்டேன் வெளியேற வேண்டுமென்று.ஏன் அங்கிருந்து வெளியேற நினைத்தேன்? அதற்க்கு முன்பு நடந்த சம்பவங்கள் தான் அதற்க்கு காரணம் , அது ஐயப்பன் சீசன், விடிஞ்சா போதும் எங்க பார்த்தாலும் சாமியே சரணம் ஐயப்பா ! ஒரே சத்தமா இருக்கும்; எங்க ஓனர் தீவிர அய்யப்ப பக்தர், அவங்க அப்பா 18 வருஷம் மலையேறி குருசாமி ஆயிட்டார். அன்னைக்கு வேலையெல்லாம் முடிச்சிட்டு ரூமிற்கு போனேன்; நம்ம வசந்த மாளிகையில் லைட் எறிஞ்சிட்டு இருந்துச்சு, எப்பவும் நாமதானே லைட் போடுவோம், இன்னைக்கு அதிசயமா இருக்கே னு ஒரு பாட்ட பாடிகிய்யே உள்ளே போனேன். உள்ள பார்த்தா எங்க ஓனர் மனைவி என் பெஞ்ச்ல படுத்து இருந்தாங்க; இத்தனை நாளா என் ரூமுக்கு வராத மின் விசிறி அன்னைக்கு வந்து இருந்துச்சு; என்னன்னு ஓனரொட அம்மாகிட்ட கேட்டேன் அவங்க "வீட்டுக்கு தூரமாம்" சரி எப்பவும் நம்ம படுக்கை மொட்டை மாடிதானே னு நெனச்சிகிட்டே லுங்கிய தேடினேன், எல்லாமும் வெளியே கிடந்துச்சு. இந்த ரூம் கூட நமக்கு நிலை இல்லையே, நெனச்சிட்டே மொட்டை மாடிக்குப் போயிட்டேன். அன்னைக்கு மாடியில உட்கார்ந்து யோசிச்சிட்டு இருந்தேன். புரட்சியாளர் முன்மொழிந்த அந்த உணர்வுப்பூர்வமான வரிகள் நினைவுக்கு வந்தது. "சுயமரியாதை மனிதனின் சுவாசத்தைப் போன்றது; சுயமரியாதையை இழந்து வாழ்வதை விட சாவதே மேல்" இந்த வரிகளை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தேன். சில கணம் சிறுவயது நினைவுகள் ஊசலாடியது; அப்போ என் தந்தை,அவரோட ஆண்டை வீட்டுல வேலை செய்வார்; நோட்டு, பேனா வாங்க நான் காசு கேட்டு வச்சுருப்பேன், அவரு அய்யா வீட்டுக்கு வாடா, நான் அய்யாகிட்ட வாங்கி தரேன் என்று சொல்வார், நான் அங்கெ போனா, எங்க அப்பா வீட்டுக்கு பின்புறமா வேலை செஞ்சிகிட்டு இருப்பார். எதுக்குங்க மூடி மறைக்கணும் ஓபனாவே சொல்லிடுறேன், வீட்டுக்கு பின்னாடி சாணி அள்ளிகிட்டு இருப்பாரு. நான் போனதும், அப்பா கொஞ்ச நேரம் இருடா என்று சொல்வார், அந்த அய்யா வந்ததும் என்ன ஏற, இறங்க பார்ப்பாரு, ஏன்னா அங்க மூட்டை ஏதாவது இருந்தால் அதுமேல உட்கார்ந்திருப்பேன் அதோடு மட்டுமில்லாமல் கால் மேல கால் போட்டுதான் உட்காருவேன்; இதனால் பல தடவை எங்க அப்பாகிட்ட திட்டு வாங்கி இருக்கேன், அதனாலேயே எங்க அப்பா என்ன அங்கே வரவேண்டாம் என்று சொல்வார்; வேறு வழியே இல்லனா வர சொல்வார். 

அன்னைக்கு எல்லாம் ஆண்டை முன்னாடியே நாம கால்மேல கால் போட்டுதான் உட்காருவோம்; ஆனா இன்னைக்கு இங்க வந்து இந்த ரூம்ல அடைபட்டு கிடக்கோமே ! அப்டினா எங்க அப்பா அந்த ஆண்டை கிட்ட முட்டி அடிச்ச்சதுக்கும், இப்போ நான் மூளை மழுங்கி கிடப்பதற்கும் வேறுபாடு உண்டா? அன்னைக்கு தாங்க உருப்படியா யோசிச்சேன். அதற்க்கு முன்பு அவங்க வீட்டுக்கு காய்கறி வாங்கி கொடுக்கும் போதும் சரி , வெள்ளிக்கிழமை தோறும் வீடு துடைக்கும் போதும் சரி எந்த ஒரு சூடு சொரணையும் இல்லாமல், ஓனருக்கு உண்மையா இருக்கணும் என்கிற விசுவாசம் மட்டும் தான் இருந்தது. வீட்டை விட்டு, வேலையை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டேன்; அனால் எக்காரணம் கொண்டும் அவர்களை காயப்படுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். என்ன சொல்லலாம் என்றும் யோசிச்சே வச்சிருந்தேன். "திட்டக்குடி ஜோசியர் சொன்னாராம், மின்சாரத்தால் என் உயிருக்கு ஆபத்து" என்று. அதனால் நான் வேலையை விட்டு நின்று கொள்கிறேன் என்றுதான் சொன்னேன்; என்னை அவர்கள் காயப்படுத்திய போதும் நான் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை. அப்போது என் கையில் இருந்தது வெறும் 5 ரூபாய். எங்க மாமா வெளிநாடு செல்லவேண்டும் என்பதற்காக, அவர்களிடம் முன்பே கொஞ்சம் பணம் முன்பணமாக பெற்று இருந்தேன். அதில் பாக்கி 2500 ரூபாய் திருப்பி தரவேண்டி இருந்தது. நான் சொன்னேன் நான் உங்களுக்கு ஏற்கனவே 2500 தரனும், இப்போ என்கிட்டே வெறும் 5 ரூபாய் தான் இருக்கு, இந்த ,மாதம் சாப்பாட்டு செலவுக்கு பணம் இல்லை அதனால் எனக்கு கூடுதலா 1000 ரூபாய் கொடுங்கள், மொத்தமா அடுத்த மாதம் கொடுத்து விடுகிறேன் என்றேன். அவர் சொன்ன பதில் என்னை வெகுவாக பாதித்தது. நீ முழுக்கடனையும் அடைக்காமல் செல்கிறாய்; அதற்காகவே உன்னை விடக்கூடாது, ஆனால் பழகியாச்சு என்பதால் விடுகிறேன், மேலும் பணம் தர முடியாது என்றார். மீண்டும் கெஞ்ச எனக்கு மனமில்லை. பழைய மணிவேலாக இருந்து இருந்தால் கெஞ்சி கூத்தாடி இருப்பான்; இவன் புரட்சியாளரால் மீட்கப்பட்டவன் ஆகவே கெஞ்சவில்லை; காலையில் என் துணிமணிகளை எடுத்து வைத்து விட்டு, எங்க ஓனரின் அம்மாவிடம் நான் கிளம்புகிறேன் என்று சொன்னேன். "சாப்பிட்டு விட்டு போ பா வேலு" என்றார்கள்; இல்லை வேண்டாம் அம்மா என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன் . நான் அங்கிருந்து வெளியேறுவதில் அவருக்கு ( என் ஓனரின் அம்மாவிற்கு) துளியும் விருப்பமில்லை. எனக்கும் அவர்களை விட்டு பிரிந்து செல்வதில் மன சங்கடம் தான்; ஏன் என்றால் நான் அங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் கழித்து திடீர் என்று எனக்கு டை- பாய்டு ஜுரம் வந்துவிட்டது. என் ஓனர் என்னை காந்திநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்ததோடு சரி பிறகு வந்து பார்க்கவே இல்லை; அனால் என் ஓனரின் அம்மா தினமும் எனக்கு கஞ்சியை மிக்சியில் அரைத்து சாப்பிட ஏதுவாக எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். என் தாய் அருகில் இல்லாத குறையை தீர்த்து வைத்தார். அந்த நன்றி உணர்ச்சி என்னை சங்கடத்தில் ஆழ்த்தியது. அவர்களுக்காக தான், என் உயிருக்கு மின்சாரத்தால் ஆபத்து என்று ஜோசியர் சொன்னார் என்று பொய்யும் சொன்னேன். அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை.

அங்கிருந்து வெளியேறி விட்டேன். அடுத்து என்ன செய்வது? எங்கே வேலை செய்வது? எந்த திட்டமும் முன்கூட்டியே இல்லை. ஒருவித பலமான யோசனையோடு, கையில் ஒரு பேக் வச்சுகிட்டு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன்; அப்போது நான் அந்த கடையில் வேலை செய்த போது அடிக்கடி அங்கெ எலக்ட்ரிகல் சாமான் வாங்க வரும் ஒரு நண்பர் வந்தார், எனக்கு நல்ல பழக்கமானவர் தான், என்ன தம்பி ஊருக்கு கிளம்பிட்டியா? என்றார். இல்லை அண்ணா என்று விஷயத்தை சொன்னேன்; சரி விடு இதுக்கு ஏன் கவலைப் படுற, "ஒரு கதவு மூடப்பட்டால் நிச்சயம் மற்றொரு கதவு திறக்கப்படும்" என்று ஆறுதல் கூறி என்னை அவர் பைக் ல ஏத்திக்கிட்டு அவங்க கம்பெனிக்கு அழைத்து சென்று முதலாளியிடம் பேசி எனக்கு வேலைக்கு ஏற்ப்பாடு செய்து கொடுத்தார்; கம்பெனி கீழ்தளத்தில் இயங்கியது. மேல் தளத்தில் வெளியூர் ஆட்கள் தங்கி வேலை செய்ய எதுவாக ரூம்கள் இருந்தன. அங்கே தங்கிக்க சொன்னார்கள்; ரொம்ப நன்றி அண்ணா என்று சொல்லிவிட்டு, மேலே சென்றேன். வேலை கிடைத்தாயிற்று, சம்பளம் வாங்கும் வரை சாப்பாட்டுக்கு வழி? அப்டியே கொஞ்சம் யோசிச்சவன் அந்த ஹோட்டல் இருக்கு அங்கே போகலாம்; அவர்கள் நமக்கு அறிமுகம் ஆனவர்கள் தானே, விவரத்தை சொன்னால் உதவுவார்கள் என்று நினைத்துக் கொண்டு போனேன், அந்த ஹோட்டல் நான் வேலை செய்த கடைக்கு நேர் எதிரில் தான். போய் தயங்கி தயங்கி சொன்னேன், அவருக்கு புரியல, என்ன வேலு எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுப்பா என்றார். விஷயத்தை சொன்னேன். இவ்வளவு தானா? போயி 2 ருபாய் பாக்கெட் நோட் ஒன்னு வாங்கிட்டு வந்து உன் பெயரை எழுதி வச்சுட்டு சாப்பிட்டுக் கொள். நோட்டுக்கு காசு தராத நான் கேட்டதா சொல்லு பிறகு நானே கொடுத்துக் கொள்கிறேன் என்றார். ஒரு மாதம் இல்லை, இரண்டு மாதம் அவகாசம் தருகிறேன்; உன் கடனை எல்லாம் அடைத்து விட்டு பிறகு எனக்கு சாப்பாட்டுக் காசு கொடுத்தாப் போதும் என்றார். நிறைவான மகிழ்ச்சி. அது மதியம் சாப்பாட்டு நேரம் என்பதால் நீ காலையில் சாப்பிட்டாயா? என்றார் இல்லை என்றேன். சரி இப்போ சாப்பிடு என்று வாஞ்சையோடு சொல்லி பரிமாறினார். சாப்பிட்டு முடித்து விட்டு ரூமுக்கு கூட செல்லவில்லை; நேராக பூக்கடையில் இருந்த என் அப்பாவை பார்க்க சென்றேன். கையில இருந்த 5 ரூபாய வச்சுகிட்டு வொயிட் போர்ட் பஸ்சுக்கு காத்திருந்து ஏறிக்கொண்டேன். பேரிஸ் பஸ் ஸ்டாண்டில் இறங்கும் போதுதான் சமத்துவம் என்றால் என்ன? என்பதை உணர்ந்தேன்; அரும்பு மீசையும் அழகான தாடியும் முளைத்தப் பருவம் அது; பஸ்ஸில் இருந்து இறங்கி என் அப்பாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஒரு 55 வயது மதிக்கத்தக்க இசுலாமியர் எதிரில் வந்தார்; என்னைப் பார்த்து "அஸ்ஸலாம் அலைக்கும் பாய்" என்றார். புரியாத கண்களோடு பதிலுக்கு "அஸ்ஸலாம் அலைக்கும் பாய்" என்றேன். மீண்டும் அவர் நீங்கள் எந்த பள்ளிவாசல் என்றார். நான் முஸ்லீம் இல்லையே என்றேன். அப்படியா உங்களைப் பார்ப்பதற்கு முஸ்லீம் போலவே உள்ளீர்கள் என்று சொல்லி, இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

ஒரு இசுலாமியர் எவ்வளவுப் பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு வசதிப் படைத்தவராக இருந்தாலும் அவருக்கு எதிரில் இருப்பவர் அவரை விட எவ்வளவு தாழ்ந்தவராக இருந்தாலும், வயதில் சிறியவராக இருந்தாலும் மரியாதை செய்கிறாரே; இதுவல்லவா சமத்துவம்; இன்றைக்கு சிலர் என்னைப் பார்த்து திருமாவளவன் இசுலாமியர்களோடு நேசத்தோடு இருப்பதால் நீயும் இசுலாமியர்களை ஆதரிக்கிறாய் என்று கேலிப் பேசுகிறார்கள் ! இசுலாமியர்கள் மீது எனக்கு பாசம் திடீர் என்று வரவில்லை... அன்றைக்கே அந்த இடத்திலே நேசித்தேன் இசுலாமியத்தை.......
-------------------------------------------------
அடுத்த சந்திப்பில்.....
ஏதாவது படிக்க வேண்டும் என்று புறப்பட்டேன், 
காதலிக்க வேண்டும், 
திருமாவை ஏன் தலைவராக ஏற்றுக்கொண்டேன்?
-----------------------------------------------
மீண்டும் சந்திப்போம்......... 
அன்புடன் உங்கள் 
அங்கனூர் தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக