வியாழன், 13 டிசம்பர், 2012

சமூகத்தின் குரலாய் வீரமங்கை !

குரலற்றவள் தான் 
மங்கம்மாள்; ஒட்டுமொத்த 
எம் சமூகத்தின் குரலாய் 
ஓங்கி ஒலித்திருக்கிறாள் !

தான் விரும்பியதை 
விரும்பியபடியே
வினவ முடியாதவள் 
தான் மங்கம்மாள்;
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் 
கொஞ்சம் கூட கூச்சமின்றி 
கொளுத்தப்படும் சேரிகளுக்காக 
கொதித்து எழுந்திருக்கிறாள் !

வாய்ப் பேச முடியா 
மாற்றுத் திறனாளி தான் 
மங்கம்மாள்; ஆனால் 
மாற்றமே நிலையான 
இப்பூவுலகில், மாறாத 
கொடுமையாய் எரியும் 
ஏழைக் குடிசைககளை   
கண்டு கோபம் கொண்டிருக்கிறாள் !

ஊமையின் குரலாய் 
ஓங்கி ஒலிக்கிறாள்
மங்கம்மாள்; செவுட்டுத் 
தமிழகம் நட்சத்திர 
கொண்டாட்டத்தில் 
மிதக்குது ; நாயக 
பிறந்தநாளை போட்டிப் 
போட்டு கொண்டாடுது;
அரிதாரம் பூசியவருக்கு 
இன்று தலைப்பு செய்தி;
அநியாயம் கண்டு துடித்த 
போராளி மங்கம்மாவுக்கு  
கடைசிப்பக்கத்தில் பெட்டி செய்தி !  
இதை விட வெட்கம் 
உண்டா? இதை விட 
கேடு உண்டா?


வீரமங்கை மங்கம்மாவே...
மன்னித்துக் கொள்வாயாக !
அநியாயம் கண்டும் வாய் 
பேசா மடந்தைகளும்,
அலறித் துடித்தாலும் காதில் 
வாங்கா செவிடர்களும்
நிறைந்த ஊனமுற்றவர்கள் 
இங்கே பலர்;  அவர்களை  
விடுத்து ஊமையின் 
குரலாய் ஓங்கி ஒலித்த 
உம்மை ஊனமுற்றவள் 
என்று  அழைத்தமைக்கு !

வீரவணக்கம் சொல்லுகிறேன் 
உந்தன் விழித்திரையில் 
விழித்துக் கொள்ளட்டும்
எம் சமூகம்; மௌன 
குரலாய் ஓங்கி ஒலித்த 
உம் பறை முழக்கம் 
இந்த மௌன தமிழகத்தை 
தட்டி எழுப்பட்டும்! 
------------------------  
வீரவணக்கத்துடன் 
அங்கனூர் தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக