ஞாயிறு, 2 டிசம்பர், 2012

என்ன செஞ்சி கிழிச்சீங்க? இந்திய, தமிழக அரசுகளின் முகத்திரையை கிழிக்கும் நீர்ப்பறவை !



என்ன செஞ்சி கிழிச்சீங்க?
இந்திய, தமிழக அரசுகளின் முகத்திரையை கிழிக்கும் நீர்ப்பறவை !
 ----------------------------------------------------

         மீன்வாங்க மார்கெட்டுக்கு போனவுடன் அது அழுகிய மீனா? அழுகாத மீனா? என்று ஆராய்ந்து பார்க்கும் நமக்கு அந்த மீனை பிடித்து கொடுக்கும் மீனவன் அழுகிறானா?சிரிக்கிறானா? என்று புரிந்து கொள்ள முடியவில்லை; புரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் நமக்கில்லை நாம்தான் வாங்கிய மீனுக்கு காசு கொடுக்கிறோமே அப்டித்தானே ! அப்டிதான் இன்றைக்கு தமிழக  மக்கள், "எனக்கு என்ன?" என்று அலட்சிய மனப்பான்மையோடு வாழப் பழகி கொண்டுள்ளார்கள்; மீனவர் பிரச்சனையில் மட்டுமல்ல ஏறக்குறைய தமிழகத்தின் அன்றாட அத்தியாவசியப் பிரச்சனைகளில் எல்லாவற்றிலும் இதே மனப்பான்மையோடு நாம் வாழப் பழகிகொண்டோம்; "இடி நம் வீட்டில் விழாதவரை நமக்கு எந்த கவலையும் இல்லை" ! சரி கதைக்கு வருவோம்....

        நடிகர் விஷ்ணு, நடிகை சுனைனா, சமுத்திரக்கனி, நந்திதாதாஸ், சரண்யா, தம்பி ராமையா, மற்றும் பலர் நடித்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கி உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்  திரைப்படம் நீர்ப்பறவை.

கதை:  

      இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த சிறுவன் ஒருவனை ராமேஸ்வர மீனவர் குடும்பம் தத்தெடுத்து வளர்க்கிறது. அவன் வளர்ந்த பிறகு முழுநேர குடிகாரனாக ஊரில் உள்ள அத்துனைப் பேரிடமும் கடன் வாங்கி குடிக்கிறான். ஒட்துமொத்த ஊரே வெறுத்து ஒதுக்கினாலும் தாய் அவனை பாசத்துடன் வளர்க்கிறாள். பிறகு கதாநாயகியின் அன்பில் உருகி அவள்மேல் காதல்வயப்பட்டு, போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று திரும்பி வந்தவன் சுனைனாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். சுனைனாவின் வளர்ப்பு தாய் வேலை எதுவும் இல்லாத இவனை நம்பி என் மகளை திருமணம் செய்து கொடுக்க இயலாது என்று மறுக்கிறாள். கதாநாயகியை திருமணம் செய்து கொள்ள விரும்பி வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான். கதாநாயகி சுனைனா கதாநாயகனை ஒரு மீனவனாக பார்க்க ஆசைப்படவே மீன்பிடிக்க விரும்பும் போது  கடலில் மீன்பிடிக்க ஊரில் உள்ளவர்கள் அவனை  அனுமதிப்பதில்லை. அவன் பிறப்பில் மீனவனா இல்லையா? என்று தெரியாமல் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்று  சொல்கின்றனர். பிறகு ஊர் கூட்டத்தில் மீன்பிடிக்க அனுமதித்தாலும் யாரும் படகு தரமாட்டோம் என்று சொல்லி விடுகின்றனர். சொந்த படகு வாங்கி மீன் பிடிக்கிறேன் என்று சபதம் இட்டு கடுமையாக உழைத்து சமுத்திரக்கனியிடம் தவணைமுறையில் சொந்த படகு வாங்கி மீன் பிடிக்கிறான். கதாநாயகியின் வளர்ப்பு தாயும் திருமணத்திற்கு சம்மதிக்க திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒருநாள் மீன்பிடிக்க சென்றவன் திரும்பவில்லை. இலங்கை கடற்படையால் சுட்டுக்கொள்ளப்படுகிறான். அவனை யாருக்கும் தெரியாமல் கதாநாயகனின் தந்தை கண்டுபிடித்து எடுத்துவந்து வீட்டிலேயே புதைத்து விடுகின்றனர். ஊரில் எல்லோரும் அவன் காணவில்லை என்றே நினைத்துகொண்டிருக்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு  கதாநாயகனின் மகன் தன தந்தை இறந்துவிட்டதையும், அவரை வீட்டிலே புதைத்து வைத்து இருப்பதையும் கண்டுபிடித்து தாயை போலீசில் காட்டிக் கொடுக்கிறான். போலிஸ் விசாரணையில் நடந்த உண்மைகளை சொல்லும் கதாநாயகியை நீதிமன்றம் அவளது அறியாமையை மன்னித்து விடுதலை செய்கிறது.

விமர்சனம்:   

      தண்ணீரிலே மிதக்கும் மீனவனின் வாழ்க்கை நிலையை மிக தத்ரூபமாக காட்சி படுத்தி உள்ளது படத்தின் உயிராக இருக்கிறது. முழுநேர குடிகாரன் எப்படிப்பட்ட நிலையில் இருப்பான் என்பதையும், அவனை மற்றவர்கள் எப்படி கையாளுவார்கள் என்பதையும் நன்றாக காட்சி படுத்தி உள்ளனர். படத்தில் கொஞ்சமும் பிசுகாமல் மீனவனின் வாழ்வியலை அப்படியே படம்பிடுத்தி உள்ளனர். இலங்கை அகதியை தமிழகத்து தமிழர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு சாட்சியாக கதாநாயகனை மீன்பிடிக்க அனுமதிக்காத அந்த காட்சியே போதுமானது. ராமேஸ்வர மீனவர்களின் வாழ்வில் இந்த அரசு எப்படி அக்கறை கொள்கிறது என்பதற்கும், அவர்களின் கூக்குரல் கடலின் அலையோடு கரைந்துதான் போகிறது என்பதற்கும் இந்த படம் ஒன்றே சாட்சி. ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி ராமேஸ்வர மீனவர்களும் வாழவேண்டுமா? வேண்டாமா? என்பதை சிங்களப் பேரினவாத அரசுதான்  தீர்மானிக்கிறது என்பதையும் இப்படம் மிகத்தெளிவாக கூறுகிறது. இசுலாமியராக வரும் சமுத்திரக்கனி திரையில் தோன்றும் இடமெல்லாம் அரசை கடுமையாக சாடுகிறார். மொத்தத்தில் ராமேஸ்வர மீனவர்களின் அன்றாட வாழ்வியலை கொஞ்சம் கூட பிசகாமல் படம் பிடித்து சிறகடிக்கிறது நீர்ப்பறவை. நீரில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகமெங்கும் சிறகடிக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். 

படத்தின் சிறப்பு: 

       ஒரு  இடத்தில் சமுத்திரக்கனியை சக மீனவர் ஒருவர் நீங்கள் தான் ( இசுலாமியர்கள்) எங்கள் துயரில் கலந்து கொள்ளமாட்டேன் என்கிறீரே என்று சொல்ல அதற்க்கு சமுத்திரக்கனி நாங்கள் மவுனமாக இருந்தால் ஒதுங்குகிறோம் என்று சொல்கிறீர்கள்; கூட்டமாக வந்தால் தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறீர்கள் என்று சொல்லும் காட்சி இசுலாமியர்களை இந்த நாடு எப்படி பாவிக்கிறது என்பதற்கு சாட்சி. 

      அதே காட்சியில் மீனவர்களின் துயரை ஏன் அரசு கண்டுகொள்ளவில்லை என்பதற்கு சொல்லும் விளக்கம், நம்மிடம் ஒரு 30 தொகுதிகள் இருந்தா; நம் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்கும். நமக்கு தான் ஒரு தொகுதிகூட இல்லையே அதனால் தான் இந்த கடல் அலையோடு கலந்துவிடுகிறது என்று சொல்லும் காட்சி பொய்யின் கலப்பே இல்லாத உண்மை.

     மற்றொரு காட்சியில் மீனவர் ஒருவர் சொல்லுவார், மீனவனை கடலோர காவல்படை சுட்டுக் கொன்றால் எல்லையை தாண்டியதால் சுட்டார்கள் என்று சொல்கிறார்கள்; எல்லையை எப்படி தெரிந்துகொள்வது? அங்கெ என்ன தடுப்பு சுவரா கட்டி வச்சுருக்காங்க? ஒரு கயிறில் பஞ்சை  போட்டு வச்சுருக்காங்க அது அலை அடித்ததால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நகர்ந்து விடுகிறது என்று சொல்வார்.  இதை அரசு கவனிக்க வேண்டும். எல்லையை மீனவர்கள்  தெரிந்துகொள்ளும்படி  மாற்று ஏற்ப்பாட்டை செய்யவேண்டும்.

      சமுத்திரக்கனி தோன்றும் காட்சி ஒன்றில் மீனவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இருப்பார் இயக்குனர். இதை மீனவர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

           நீதிமன்றத்தில் நீதிபதி உங்கள் கணவர் இறந்ததை ஏன் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று நந்திதாதாசை கேட்கும் போது நந்திதாதாஸ் என் கணவர் உட்பட 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளனர். நீங்க என்ன செஞ்சீங்க? என்று ஒற்றைவரியில் மீனவர்களின் ஒட்டுமொத்த துயரையும் சொல்லி, இந்திய, தமிழக அரசுகளின் முகத்திரையை கிழித்திருக்கிறார் இயக்குனர்.

      ஈழத்தமிழர்களுக்கும், ராமேஸ்வர மீனவத்தமிழர்களுக்கும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் இயக்குனர். இதை அரசு கவனிக்குமா? இல்லை வழக்கம் போலவே கள்ள மவுனம் காக்குமா?

     இறுதியாக நந்திதாதாசை நீதிமன்றம் அவரது அறியாமையை மன்னித்து விடுவிப்பதாக சொல்வார்கள். அங்கேதான் நமக்கு சந்தேகம் எழுகிறது. இயக்குனர் சார்பில் நாம் இந்த அரசை கேள்வி கேட்போம். அறியாமையில் இருப்பது மீனவர்களா? மீனவர்களின் துயரைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் இந்த அரசா? 

      ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்களது மனைவிகள் எப்படி வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக வந்திருக்கும் இத்திரைப்படம் வெற்றிப் பெற வாழ்த்துவோம். மேலும்   ராமேஸ்வர மீனவர்களின் குரலை கடலை தாண்டி தமிழகம் எங்கும் வெளிக் கொண்டு வந்தமைக்காக இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். .............

மனமார பாராட்டுகிறோம் சீனு ராமசாமி சார்.... 

           --------------------------------------------------------- X --------------------------------------------------------- X 
     ராமேஸ்வர மீனவர்கள் இப்படி நித்தம் வாழ்வா?சாவா? என்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது இந்த அரசுக்கு வைரவிழா ஒரு கேடா? என்றைக்காவது அந்த மீனவர்களின் துயரைத் துடைக்க இந்த சட்டமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதா? ஆளாளுக்கு பவளவிழா என்றும், வைரவிழா என்றும் கொண்டாட்டங்களில் மிதக்கவே விரும்புகின்றனரே, எம்மக்களின் துயரை துடைக்க, சாமான்ய மக்களின் கண்ணீரை துடைக்க அரசுகள் முன்வரவேண்டும்..... 

வாழ்த்துக்களுடன்....
அங்கனூர்  தமிழன் வேலு 

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக