சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு
வழங்கப்பட்ட தண்டனையும், அதற்கு பின் தமிழகத்தில் நிலவிவரும் சூழல்களும்
பல்வேறு சிந்தனைகளை உருவாக்குகிறது. தீர்ப்பை, ஒருதரப்பு ஆதரிக்க,
மறுதரப்பு மிக தீவிரமாக எதிர்க்கிறது. இரண்டுக்கும் மத்தியில் இன்னொரு
தரப்பு, எந்த அரசியல்வாதி ஊழல் செய்யாம இருக்காங்க? யாரு யோக்கியம்? என்ற
வாதத்தை முன்வைக்கிறது. “உங்களில் யார் யோக்கியமானவரோ, அவர்களே முதலில்
கல்லெறியுங்கள்” என்ற பைபிள் வசனம் நினைவுக்கு அடிக்கடி வந்து போகிறது.
எல்லோரும் செய்கின்ற தவறை தானே, நானும்
செய்தேன் என்று தைரியமாக மனிதர்கள் பேசும் காலமும் வந்துவிட்டது. ‘ஊரு
உலகத்தில நடக்காத தப்பையா செஞ்சுபுட்டேன்’ என எதிர்கேள்வி கேட்டு இயல்பாக
தன்னை நியாயப்படுத்துகிறார்கள். எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக எப்படி
ஒரு குற்றம் நியாயமாகிவிடும் என்பதை பற்றி யோசிப்பதற்கு நாம் தயாரில்லை.
நேர்மையாக வாழவேண்டிய சமூகம், நேர்மையின்மையை, சமூக எதார்த்தக்கூறாக
ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கிறது. என்பதையே இது காட்டுகிறது. ஒரு தவறை
இன்னொரு தவறை கொண்டு நியாயப்படுத்த இந்த சமூகம் பழகி கொண்டது. அரசு
மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தள்ளும் ஊழியரோ, வருவாய்துறை உள்ளிட்ட அரசு
அலுவலகங்களில் பணிபுரியும் உதவியாளர்களோ லஞ்சம் கேட்பதற்கு தயங்குவதே
கிடையாது. உரிமையோடு கேட்கிறார்கள். உயர்மட்ட அதிகாரிகள், அவர்கள்
தகுதிக்கேற்ப பெரிய அளவில் செய்யும் முறைகேடுகளால், கடைநிலை ஊழியர்களின்
அம்பதுகளும், நூறுகளும் நியாயப்படுத்தப்படுகின்றன. ஒரு அரசியல்வாதி தான்
செய்யும் ஊழலால், தனக்கு கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் ஊழலை
அனுமதிக்கிறார். கீழ்மட்ட தொண்டர்களோ, தனக்கு மேலிருப்பவர்களுக்கு
கொடுப்பதற்காக, கடைகளில், நிறுவனங்களில் வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.
இப்படியாக மேலிருப்பவரின் தவறை காட்டி, கீழிருப்பவர்களும், தன்
சுயத்திற்காக மேலிருப்பவர்கள், கீழிருப்பவர்களின் தவறுகளை, அனுமதிப்பதும்
எதார்த்த நிகழ்வாகிவிட்டது. சின்ன, சின்ன தவறுகளை அனுமதிக்க, அல்லது
மன்னிக்க முயலும் போது, இந்த சமூகம் தன்னியல்பாக தன் நேர்மையை இழந்துகொண்டே
வருகிறது என்பதை நாம் விரைவில் புரிந்துகொள்ளாவிட்டால், நேர்மையை
புத்தகங்களிலும், வரலாறுகளிலும் மட்டுமே தேடவேண்டிய நிலைமை வரலாம்.
எல்லோரும் சரியாக இருந்தால், நானும் சரியாக இருப்பேன் என்று நினைக்காமல்,
என் மனசாட்சிப்படி நான் சரியாக இருக்கிறேன் என்று எல்லோரும்
நினைத்துவிட்டாலே, போதும் கடுமையான சட்டங்களும் வேண்டாம், கடுங்காவல்
தண்டனையும் வேண்டாம்...
-தமிழன்வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக