சனி, 25 அக்டோபர், 2014

சினிமா – நடிகர்கள் – ரசிகர்கள் – அரசியல்

உலக மக்களில் பெரும்பாலான மக்கள் சினிமாவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மற்ற நாட்டு, இந்தியாவின் மற்ற மாநிலத்து மக்கள் சினிமாவை பார்ப்பதற்கும், தமிழர்கள் பார்ப்பதற்கும் நிரம்ப வேறுபாடுண்டு. தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமாவும் அரசியலும் இரண்டற கலந்திருக்கிறது. அது ஆரோக்கியமானது கிடையாது என்பது ஒருபுறமிருந்தாலும், சினிமா வாய்ப்பு இல்லாமல் போனால், அரசியலுக்கு சென்றுவிடலாம் என்ற நினைப்பு, கிட்டத்தட்ட எல்லா தமிழ் நடிகர்களுக்கும் இருக்கிறது. சினிமா நடிகைக்கு கோவில் கட்டுவது, பிடித்த நடிகரின் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வது போன்ற அற்பமான கலாச்சாரம் இங்கு மட்டும்தான் இருக்கிறது. ஒரு சினிமா நடிகருக்கும், ரசிகருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு வெறும் 3 மணிநேர சினிமா மட்டும் தான். எல்லா நடிகர்களுக்குமே சினிமா என்பது தொழில்தான். கலை சேவை என்று அவர்கள் சொல்லிக்கொண்டாலும் அதை அவர்கள் தொழிலாக தான் பார்க்கிறார்கள். ஒரு கார்ப்பெண்டரை போல, எலக்ட்ரீசியனை போல அவர்கள் தொழில்முறை நடிகர்கள்.
எந்த நடிகரும் காசுவாங்காமல் நடிப்பதில்லை, அதேபோல எந்த ரசிகருக்கும், காசில்லாமல் படம் காட்டப்படுவதில்லை. ஒரு நடிகனுக்கும், ரசிகருக்கும் இடையில் இப்படிப்பட்ட தொடர்பு மட்டுமே இருக்கும்பட்சத்தில், எதன் அடிப்படையில் நடிகருக்காக தன் உயிரை மாய்த்துக்கொள்வது, பிறரின் உயிரை எடுப்பது போன்ற மோசமான செயல்களில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது விந்தையாகவே இருக்கிறது. ரசிகர்களிடம் இருக்கும் இதுபோன்ற குருட்டு நம்பிக்கை தான் பின்னாளில் அவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வசதியை கொடுக்கிறது. தனக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு விசுவாசமாக இருக்கும் ரசிகர்களுக்கு, அந்த நடிகர்கள் நேர்மையாக இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சினிமாவையும் தாண்டி தனக்காக அலகு குத்திய, மண்சோறு திண்ற, உண்ணாவிரதம் இருந்த, தேர் இழுத்த, மடிப்பிச்சை எடுத்த ரசிகர்களுக்காக ரஜினிகாந்த் செய்தது என்ன? “தன் ஒருதுளி வியர்வைக்கு ஒருபவுன் தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா” என்று பாட்டு படித்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்காக கேவலம் மூன்று மணிநேர சினிமாவை கூட இலவசமாக காட்டவில்லை என்பதுதான் எதார்த்தம். அவர்கள் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எந்த வசனத்தை பேசி, காசு சம்பாதித்தார்களோ, அந்த வசனங்களுக்கு கூட நேர்மையாக இல்லை என்பது தான் உண்மை...

1. அந்நியன் படத்தில் ஊழலுக்கு எதிராக புது, புது அவதாரம் எடுத்த விக்ரம், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்.
2. சிங்கம் படத்தில் மக்கள் சொத்தை கொள்ளை அடித்த ரவுடிகளை பாய்ந்து, பாய்ந்து வேட்டையாடிய சூர்யாவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
3. தற்போது வெளியாகி இருக்கும் கத்தி படத்தில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் ஆதரவாக போர்க்குரல் எழுப்பும், விஜய் தான், கொக்கோ கோலா கம்பெனியின் விளம்பர தூதுவராக செயல்பட்டார்.
4. அரசு ஊழியர்களின் ஊழலுக்கு எதிராக ரமணா படம் எடுத்த முருகதாசும், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

இதுபோல சினிமா நடிகர்களின் முரண்பட்ட போக்கை பக்கம் பக்கமாக பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். தற்போது கத்தி படம் வெளியாகி இருக்கும் சூழலில், கொக்கோ கோலா கம்பெனியின் விளம்பர தூதுவராக நடித்த விஜய்க்கு எதிராக சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் எழுதி வருகிற நிலையில், மற்றொரு தரப்பினர், நடிப்பும், சினிமாவும் அவரது தொழில். சினிமாவில் நடிப்பது போலவே நிஜவாழ்விலும் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. என்று எழுதி வருகின்றனர். “சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம், அல்லது கலை அல்லது படைப்பு ” என்று உலகில் எந்த நாட்டு மக்களும் சொல்லலாம். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை ஆளும் அதிகாரத்தை சினிமா நடிகர்களுக்கும், சினிமாத்துறையை சார்ந்தவர்களுக்கும் மட்டுமே வழங்கி இருக்கிறார்கள். தங்கள் தலைவர்களை திரையரங்கில் மட்டுமே இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ, விஜயகாந்தோ, சரத்குமாரோ இன்னபிற நாடிகள் அரசியல்வாதிகளோ அரசியலுக்கு வரும்போது, நடிகர் என்பதை தாண்டி வேறென்ன அடையாளம் அவர்களுக்கு இருந்தது? மக்கள் பிரச்சனைகளுக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மக்களுக்காக அவர்கள் செய்த நன்மைகள் என்ன? மக்கள் உரிமைகளுக்காக எத்தனை போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள்? போராட்டங்களில் பங்கெடுத்து எப்போதாவது சிறை சென்றிருக்கிறார்களா? என்பதை எல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். சினிமா மூலம் தங்களுக்கு கிடைத்த பிரபலத்தை அரசியலில் செலுத்தி காசுபார்க்க எத்தனிக்கும் அவர்களின் நிஜவாழ்வு நேர்மையை உரசிபார்ப்பதில் என்ன தவறு இருந்துவிடபோகிறது?

சினிமாவில் காசுவாங்கி கொண்டு வீரவசனம் பேசியதே இந்த சமூகத்திற்கு செய்த பெரும் சேவை என்று பெரும்பாலான நடிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பிழைப்புக்காக சினிமாவிலும், நிழவாழ்விலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள், அரசியலுக்கு வந்து என்ன நேர்மையாக இருந்துவிட போகிறார்கள்? சினிமாவும், நடிப்பும் தொழில்தானே, சினிமாவில் நடிப்பது போல நிஜவாழ்விலும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சப்பக்கட்டு கட்டுபவர்களில் ஒருவர் கூட, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சினிமா நடிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது, ஒற்றை கேள்வியை கூட எழுப்பவில்லையே ஏன்? இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களையும் விட தமிழ்நாட்டு அரசியலில் சினிமா நடிகர்களின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. குறிப்பிட்ட திரைப்படம் எங்களுக்கு எதிராக இருக்கிறது என்று சில அமைப்புகளோ, அரசியல் இயக்கங்களோ போராடும் போது, சினிமாவில் அரசியலை கலக்காதீர்கள், கருத்துரிமையை, படைப்புரிமையை பறிக்காதீர்கள் என்று நடுநிலை பேசும் நியாயவாதிகள், சினிமா நடிகர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போதோ, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் போதோ எந்தவித எதிர்ப்பையும் தெரிவிப்பதில்லை.

தமிழ்நாட்டு மக்களிடம் சினிமா மோகம் இருக்கிறது என்றுமட்டும் சுருக்கிவிட முடியாது. தமிழர்களிடம் சினிமா போதை இருக்கிறது. அவர்கள் சினிமாவையும், நிஜவாழ்வையும் பிரித்துப்பார்க்கும் பக்குவத்திற்கு இன்னமும் வரவில்லை என்று சொல்லவேண்டும். மக்களை மழுங்கடித்ததில் கார்ப்பொரேட் ஊடகங்களின் பங்களிப்பு மிகப்பெரியது. மக்கள் உரிமைகளுக்காக போராடும் கம்யூனிஸ்டுகளை விட, காசுவாங்கி கொண்டு நடிக்கும் நடிகர்களுக்கு, இந்த நாட்டின் ஊடகங்கள் கொடுக்கும், மதிப்பும், புகழும் முன்னுரிமையும் ஆயிரம் மடங்கு அதிகம். அதனால் தான் ஊடக வெளிச்சம், நடிகர்களின் அரசியல் கனவுகளுக்கு மூலதனமாக இருக்கிறது. எளிதில் அவர்கள் மக்களை சென்றடைகிறார்கள். மக்களிடம் சென்று தங்களை அறிமுகபடுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை. சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் கூட, நடிகர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு தான் இந்த நாட்டின் ஊடகங்களின் லட்சணம் இருக்கிறது. இப்படியாக சினிமா நடிகர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் புனிதம் கற்பித்து, அவர்களை ரட்சகராக வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பெரும் பிரயத்தனம் செய்கின்றன ஊடகங்கள். நடிகர்களுக்கு ஊடகங்கள் கொடுத்த வெளிச்சமும், அதன்மூலம் பாமர மக்களிடம் நடிகர்கள் மீது ஏற்ப்பட்டிருக்கும் கவர்ச்சியும் தான் , நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மக்களை வீதிக்கு வர வைத்தது என்பதை எவராலும் மறுக்க முடியுமா?

தமிழ்நாட்டு அரசியலை சீர்குலைத்ததில் சினிமாவிற்கும், ஊடகங்களுக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது. கருத்தியல் ரீதியாக மக்கள் அணிதிரள்வதை தடுத்து, வெறும் உணர்ச்சிகளாலும், கவர்ச்சிகளாலும் மக்களை மழுங்கடித்து வைத்திருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. தாராளமாக வரட்டும். ஆனால் சினிமா நடிகர் என்ற ஒற்றை அடையாளத்தோடு வருவதை தான் எதிர்க்கிறோம். சினிமாவை தாண்டி மக்களிடம் செல்லட்டும், அவர்களின் உணர்வுகள், பிரச்சனைகள், தேவைகள் என்ன என்று தெரிந்து கொள்ளட்டும். அவர்களுக்காக குரல் கொடுக்கட்டும், மக்களுக்காக போராடட்டும் என்பதை தான் வலியுறுத்துகிறோம். அவர்களை நம்பி, விசுவாசமாக இருக்கும் ரசிகர்களுக்கு நேர்மையாக, உண்மையாக இருக்கட்டும். அதன் பிறகு அரசியலை பற்றியும், அதிகாரத்தை பற்றியும் சிந்திக்கட்டும். வாழ்த்துக்களோடு வரவேற்க காத்திருக்கிறேன்...

- தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக