தோழர் வே.மதிமாறன் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும் “காந்தி நண்பரா? துரோகியா?” நூலை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பை பெற்றேன். வாசித்து முடித்தவுடன் வேறு யாருக்காவது கொடுக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். அப்படியே எனக்கு நன்கு அறிமுகமான 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு கொடுத்தேன். அவர் காந்தியின் தீவிர விசுவாசியாக இல்லாவிட்டாலும் காந்தியின் மீது வெறுப்பு கொண்டவர் இல்லை; பெருமதிப்பு உடையவர். புத்தக தலைப்பை பார்த்தவுடனே ஒரு முறை என்னை ஆழமாக பார்த்தார். படித்துவிட்டு சொல்லுங்கள் என்று கிளம்பிவிட்டேன்.
இரண்டு நாள் கழித்து அவரிடம் சென்றேன்; புத்தகம் படித்தீர்களா? என்றேன். படித்தேன், என் நண்பருக்கு அந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன் என்றார். அவரையும் அறிமுகம் செய்துவைத்தார். அவர் படித்துவிட்டு அவருடைய நண்பருக்கு அதை படிக்க கொடுத்திருக்கிறார்; அவர் அவருடைய நண்பருக்கு கொடுத்திருக்கிறார். இப்படியே பலரையும் தாண்டி பயணித்து இறுதியாக ஒரு பள்ளி சிறுவனுக்கு அதை கொடுத்திருக்கிறார்கள். பலரையும் கடந்து வந்த புத்தகத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்த முதியவரிடம் கேட்டேன்.
அவர் “புத்தகத்தின் மீது என்னால் மறுப்புரை சொல்ல முடியவில்லை; காந்தியின் சத்திய (பொய்) சோதனையில் இருந்தே விமர்சனம் செய்திருப்பதால் யாராலும் மறுப்பு சொல்ல இயலாது. நல்ல பயனுள்ள நூல் கொடுத்தமைக்கு நன்றி” என்று மிகவும் நேர்மையான மதிப்பீட்டை வழங்கினார். அவருடன் பேசியதில் “காந்தியின் மீது அவர் வைத்திருந்த பெருமதிப்பில் தோழர் வே.மதிமாறன் அவர்கள் கல்லெறிந்து விட்டார் என்பது மட்டும் நிச்சயம்” என்று புரிந்துகொண்டேன்.
அந்த மகிழ்ச்சியோடு, “காந்தி நண்பரா? துரோகியா?” நூலை வாசித்ததன் மூலம் நான் பெற்ற அனுபவத்தையும், அதன் மீதான மதிப்பீட்டையும் வழங்க விரும்புகிறேன்.
வருடத்தில் மூன்று மாதங்கள் காந்தி பக்தர்களுக்கு கொண்டாட்டம் தான். ஜனவரி 15 முதல் 26 வரை, ஆகஸ்ட் முதல் தேதி முதல் 15 வரை, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களில் கலைக் கூத்தாடிகளின் அரை நிர்வாணப் படத்திற்கு தடா. அதற்குப் பதில் காந்தி வருவார் அரை நிர்வாணத்தில். அதை கண்டுகளித்து மகிழும் காந்தி பக்தர்களின் கனவில் கல்லெறிந்து விட்ட வே.மதிமாறன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் (?) …!
ஒருவன் என்ன தான் பொதுநலன் குறித்து சிந்திக்க கூடியவனாக இருந்தாலும் சாதிப்பித்து கொண்டவனாக இருப்பானேயானால் அவனின் பொது நலன் சார்ந்த சிந்தனைகள் அனைத்துமே சாதியின் கோரமுகத்தின் வடிவாகவே இருக்கும். அப்படித்தான் இந்நூலின் மூலம் காந்தியின் அஹிம்சை “கோடானு கோடி மக்களை எப்படி இம்சித்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம்”
ஸ்ரீ ராமனுக்கு பெரியார் என்றால் பயம். அப்படித்தான் “காந்திக்கு பீமாராவ் என்றால் பயம், என்பதை இந்நூலின் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் காந்தியின் அண்டப்புளுகு ஆகாசப் புளுகையும், துரோகத்தையும் காந்தியின் சத்திய (பொய்) சோதனையில் இருந்தும், புரட்சியாளர் அம்பேத்கரின் மூலமும் தோலுரித்திருப்பது சிறப்பு…!
அவற்றில்…
“இந்திய கிராமங்கள் தீண்டப்படாதவர்களை சுரண்டி வாழ்வதற்காக இந்துக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வகை காலனி ஆதிக்கமே” என்று காந்தியின் கிராமராஜ்ஜியத்தையும்
“காந்தியைப் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்” என்று புரட்சியாளரின் வாய்மூலமாக தாழ்த்தப்பட்டவர்களை எச்சரிப்பதை மனமார வரவேற்கிறேன். காந்தியைப் பற்றி மட்டுமல்ல; காந்தியின் பக்தர்களிடம் கூட ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.
“காந்தி கறுப்பர் என்பதால் ரயிலில் இருந்து வெள்ளையர்கள் இறக்கி விட்டதாகவும், அதனால் ஏற்றத்தாழ்வுகளை கண்டு மனம் நொந்து மக்களுக்காகப் பாடுபட வந்தார் காந்தி மகான் என்று காந்தியின் காவடி தூக்கிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில் “ரயிலில் படுக்கை வசதிக்கு டிக்கெட் எடுக்காத காரணத்தினால் தான் ரயிலில் இருந்து நான் இறக்கிவிடப்பட்டேன்” என்று காந்தியின் வாயாலேயே சொல்ல வைத்து விட்டீர்களே தோழர் சபாஷ்…!
“வெள்ளைக்காரன் காந்தியை அவனுக்கு அருகில் உட்கார வைக்காமல் வண்டியின் உள்ளே உட்கார வைத்ததையே அவமானமாக கருதிய காந்திக்கு ” இந்தியாவில் ஒரு சாதி இந்து தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரேக் காரணத்திற்காக புரட்சியாளர் அம்பேத்கரை கீழே தள்ளினானே அது அவமானமாக தெரியவில்லையா? அதற்கு காரணமான சாதி மக்களை பிரித்தது அவமானமாக தெரியவில்லையா?
“வெளிநாடுகளுக்கு செல்லும் காந்தி அங்கே இருக்கும் இந்தியர்களின் வீடுகளில் தங்காமல், வாடகைக்கு வெள்ளையர்களின் வீடுகளிலே தங்கியிருக்கிறார்; அதற்கு காரணம் இந்தியர்கள் கூலி விவசாயிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலே; இது அவரின் சாதிப் புத்தியே… அதை ” சுற்றிலும் இருந்த ஆங்கிலேயருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் மக்கள் பழக்கங்கள் சுகாதரக் குறைவாக இருந்ததை கவனித்திருக்கிறேன்” என்று காந்தி வாயாலே நான் சாதிப் புத்தி கொண்டவன் என்று ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார் தோழர்!
“காந்தியின் துரோகம் தெரியவேண்டுமென்றால் அம்பேத்கர், பகத்சிங் கண்களால் பார்க்கவேண்டும்; பார்ப்பன பயங்கரவாதம் தெரியவேண்டுமென்றால் காந்தி கொலையின் ஊடாக பார்க்க வேண்டும்” என்ற காந்தியின் துரோக – பார்ப்பன பயங்கரவாத ஒப்பிட்டு தெளிவான விளக்கம்…!
” ஹரிஜன் என்ற சொல்லுக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கிறது என்பது யாருக்கு அவர்ப் பெயர் சூட்டினாரோ அவர்களுக்கே தெரியாது என்பது தான் வினோதம்; இதுதான் காந்தியத்தின் கயமைத்தனம்; மேலும் காந்தியின் ஹரிஜனைப் பற்றி படிக்கும் போது கமலஹாசனின் அன்பே சிவத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை; இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையே! ஏன் அன்பே சிவமாகத்தான் இருக்க வேண்டுமா? அன்பே அல்லாஹ் வாக இருக்க கூடாதா? அன்பே இயேசுவாக இருக்க கூடாதா? இதுதானே பார்ப்பனப் புத்தி!
காந்தி பக்தர்கள் காந்திக்கு காவடி தூக்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை “காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் உடையை கண்டு மனம் நொந்து தாழ்த்தப்பட்டவர்கள் நல்ல உடை அணியும் வரை நானும் நல்ல உடை அணியமாட்டேன் என்று சபதம் எடுத்து அவரும் கோவணம் கட்டிக் கொண்டார்” என்பார்கள். அதுபோலவே சமீபத்தில் காந்தியின் காவடி தூக்கி ஒருவர் “ தலித் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஸூவிலிருந்து, பீட்டர் இங்கிலாந்து சட்டை வரை தோராயமாக கணகிட்டுப் பார்த்தால் எப்படியும் பத்தாயிரம் ரூபாய் பொருமானாதாக இருக்கும்; கோவணம் கட்டிக் கொண்டு வயலில் இறங்கி வேலைபார்க்கும் தலித் மக்களின் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்” என்று தலித் தலைவர்களின் ஆடைகளைப் பார்த்து பொறாமைப்பட்டு, வேதனைப் பட்டு இருக்கிறார்.
அப்படி காந்தியின் காவடித் தூக்கிகள் காந்தியின் அரைநிர்வாணப் படத்தை வைத்து அரசியல் செய்து பிழைத்துக் கொண்டிருந்தார்கள். அட்டைப் படத்திலே காந்தியையும், காந்திப் பக்தர்களின் கயமைத்தனத்தையும் நிர்வாணப் படுத்திவிட்டீர்களே… இது உங்களுக்கே நியாயமா தோழர்?
வ.உ.சி. யின் தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது; காங்கிரசின் துரோகம் அடிநெஞ்சில் அனலை கிளப்புகிறது; காந்தி மிகப்பெரிய பணக்காரர் என்றும், அவர் எளிமையாக வாழ்ந்தார் என்றும் பொய் சொல்கிறவர்களுக்கு “வெளிநாட்டு தமிழர்கள் வ.உ.சி. க்கு கொடுக்க சொல்லி காந்தியிடம் கொடுத்த 5000 ரூபாய் பணத்தை ஏமாற்றியது தெரியுமா?
வாஞ்சிநாதன் எனும் தேசத் தியாகியின் சாதிப்பற்றை நான் இன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன் நன்றி தோழரே..! “காந்தியின் தொங்குசதை அன்னாஹசாரே”; “பாபா ராம்தேவின் ஊழல் எதிர்ப்பில் பானுமதியின் வறுமை ஒழிப்பு நடிப்பு” ஒப்பீடு அருமை.
நான் காந்தியை விமர்சனம் செய்ததற்கு, காந்தியின் காவடித் தூக்கி ஒருவர் எனக்கு விளக்கம் எழுதியப் போது “காந்தியைப் பற்றி தெரியாமலே, வெறும் பூனா ஒப்பந்தத்தை மட்டும் வைத்து விமர்சனம் செய்கிறார்கள்; அது அவர்களது அறியாமையைத் தான் காட்டுகிறது;என்று எழுதினார். அவருக்கு இந்நூல் அதற்கும் மேலே… அதற்கும் மேலே…
வேரறுக்க வேண்டியது காங்கிரஸ் மட்டும் அல்ல; இந்தியாவின் மீது போர்த்தப்பட்டுள்ள காந்தியின் பிம்பமும் தான்….
“காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்; பார்ப்பன பயங்கரவாதத்தை மன்னிக்கவும் மாட்டோம்…!
இறுதியாக எனக்கு ஒரே வருத்தம் தான் ”காந்தி நண்பரா? துரோகியா?” என்று சந்தேகப் படவேண்டாம், சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் …!
- அங்கனூர் தமிழன் வேலு
மார்ச் 1, 2013 அன்று தோழர் வே.மதிமாறன் அவர்களின் வலைப்பூவில் வெளிவந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக