வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

கடைசி மனிதனின் பார்வை

கடந்த சில தினங்களுக்கு முன் லில்லி தாமஸ் என்பவர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, குற்ற வழக்குகளில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்களின் பதவி, உடனே பறிக்கப்பட வேண்டும்; மேலும், குற்ற வழக்குகளில், தண்டனை பெற்றவர்கள், அந்தத் தண்டனையை எதிர்த்து, மேல் முறையீடு செய்திருந்தாலும், அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தான் அது. இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தீர்ப்பை அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பார்கள் என்று பேசப்பட்டது. சொன்னது போலவே நேற்று (01.08.2013) டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்கக்கூடாது என்றும், இந்த விஷயத்தில், பார்லிமென்டிற்கு உள்ள மாண்பை, உறுதி செய்ய வேண்டும்" என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக நாளேடுகளில் செய்தி வெளிவந்திருக்கிறது.

"ஒருநாட்டில் சிறந்த ஆட்சி நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டுமானால் கடைசி மனிதர்களின் கண்களால் தான் ஆய்வு செய்யவேண்டும்". இந்நாட்டில் அரசினால் செயல்படுத்தப்படும் எந்தவொரு ஒரு திட்டத்திலும் லாபத்தினை பெரும் முதாளிகளும், கடும் பாதிப்பினை கடைசி மனிதர்களுமே அனுபவிக்கிறார்கள். ஆகவே நாம் கடைசி மனிதர்களின் பார்வையாகவே இதை அணுக வேண்டி இருக்கிறது. நீதி துறையிலும், நாடாளுமன்ற, சட்டமன்றதிலும் இருக்கும் ஒரு விஷயம் கடைசி மனிதர்களை கடுமையாக பாதிக்க கூடியதாக இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடாது; மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்பதும், நாடாளுமன்ற, சட்டமன்ற உள் விவகாரங்களை விமர்சிக்க கூடாது, மீறினால் நாடாளுமன்ற, சட்டமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்பதுமே அது. நீதிமன்றமோ, அல்லது சட்டமன்றமோ என்றைக்கும் கடைசி மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருந்ததில்லை. நீதிமன்றத்தை பொருத்தமட்டில் வக்கீல் பீசும், வக்கீலின் வாதத் திறைமையும் தான் நீதியை தீர்மானிக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத்தை பொருத்தமட்டில் பெரும்பான்மை பலமே அரசின் திட்டமாக வெளிப்படுகிறது. இரண்டுமே கடைசி மனிதர்களை பாதுகாக்கும் செயல் அல்ல.

இரண்டு யோக்கியர்களும் (?) மோதிக் கொள்கிறார்கள்... இதற்கு என்ன தான் தீர்வு?

குற்றப்பின்னணியில் உள்ளவர்களை அரசில் இருந்து புறக்கணிக்க மக்களே தயாராக வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையம் தான் முழு உதவியாக இருக்கவேண்டும். ஒரு வேட்பாளரின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டாலே அவர் யோக்கியர் என்று தேர்தல் ஆணையம் சான்று கொடுப்பதாக பொருளாகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய முழுத்தகவலையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. பெரும்பாலும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் என்னென்ன தகவலை கொடுக்கிறார்கள் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிவதில்லை. வேட்பாளர் இறுதி பட்டியலை வெளியிடும் தேர்தல் ஆணையம் அதோடு சேர்த்து பாரபட்சமின்றி அனைத்து வேட்பாளர்களும் அவர்களது வேட்புமனுவில் அவர் கூறியிருக்கும் தகவலையும், அவரது பின்னணியையும் வெளியிட வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவொரு வார்டிலும் அவர்களைப் பற்றிய விவரங்களை நோட்டிசாக ஓட்டலாம். அப்படி வெளியிடும் பட்சத்தில் குற்றப்பின்னணி உள்ளவர்களையும், குண்டர்களையும் மக்களே புறக்கணிக்க துவங்கி விடுவார்கள்.

- தமிழன் வேலு 
02 / 08 / 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக