போனடிக்கும் சத்தம் கேட்டு, பதறி அடித்து கொண்டு எழுந்து போனை எடுக்கிறார் பார்வதி அம்மா. இந்த நேரத்தில் புள்ள ஏன் போன் பண்றான்? அவனுக்கு என்ன ஆச்சோ தெரியலையே... அப்பா வீரனாராப்பா..! எம் புள்ளைக்கு எந்த கேடும் வராம நீதான் பாத்துக்கணும் ன்னு மனசுக்குள்ளே குல தெய்வத்தை வேண்டிக்கிட்டு, ஒருவித பதற்றத்தோடு போனை காதில் வைத்து 'என்னப்பா' என்றதும் 'அம்மா வீடு ஒழுகுதாம்மா? காத்து கூரையை தூக்கிடுச்சா?' ன்னு அழும் குரலில் கேட்கிறான் முரளி. டேய் என்னடா அர்த்த ராத்திரியில போன் பண்ணி உளறுற? கனவு ஏதும் கண்டியாடா? இல்லம்மா இங்க சரியான மழை, கூடவே காத்தும் வேகமா அடிக்குது அதான் பயத்துல உங்களுக்கு போன் போட்டேன் என்கிறான். இங்க மழைலாம் இல்லப்பா, அப்படியே வந்தாலும் அப்பா இருக்காருல்ல அவரு பாத்துக்குவாரு, நீ கவலைப்படாம பத்திரமா இருப்பா, காலையில கோயிலுக்கு போயிட்டு வா. சரியா... 'சரிம்மா'. உடம்பு எப்படி பா இருக்கு? நல்ல இருக்கும்மா? 'சரி நீ போயி தூங்கும்மா' 'சரிப்பா பாத்து பத்திரமா இருப்பா' ... இந்த தூக்க கலக்கத்திலும் பிள்ளையின் நலம் கேட்கும் அம்மாவின் பாசத்திற்கு தான் எத்தனை வாசமிருக்கு..!
வாசத்தை நுகர்ந்தவனாய் மனதை தேற்றிக் கொண்டே தூங்க முயன்றான்... தூக்கம் அவனை நெருங்கவே இல்லை. மணி 1.30 ன்னு கடிகார முள் காட்டுது. மறுபடி எவ்வளவோ முயற்சித்தும் தூக்கம் வரல. யாரோ வானத்தை ரெண்டாக பிளக்கிறார்கள் போல். அப்படி ஒரு இடி சத்தம். மீண்டும் எழுந்து அமர்ந்து கொண்டு மழையை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான் முரளி. இந்த மழை எத்தனை கவிஞர்களுக்கு கவிதையாகி இருக்குமோ, எம் மக்களின் கண்ணீரும் சேர்ந்து தானே மழை நீராய் ஓடுகிறது என்ற தவிப்பை அவனால் அடக்கி கொள்ள முடியவில்லை. அந்த கவிஞர்களுக்கெல்லாம் மனசாட்சி என்றுமே இருந்ததில்லை. அதனால் தான் அவர்களின் கவிதைகள் சேரிக்குள் நுழைய மறுக்கின்றன; அவர்களின் எழுத்துக்கள் சேரி மக்களின் கண்ணீரை தீண்ட மறுக்கின்றன... மழையை வர்ணித்து எத்தனை, எத்தனை கவிதைகள், எத்தனை, எத்தனை பாடல்கள், எத்தனை எத்தனை கதைகள் எல்லாமும் மழையை வர்ணனை செய்தவையே. 'மழை மீதேன் இத்தனை வெறுப்பு?' என்று அவனையே அவன் கேள்வி கேட்டுக் கொள்ளவும் அவன் தயங்கவில்லை. பதிலொன்றும் இல்லாமல் இல்லை. வெறுப்பு மழை மீதல்ல, மழையில்லை என்றால் பஞ்சத்தில் தவிக்கும் முதல் மனிதர்களும் சேரி மக்கள் தான் என்பதையும் அவன் அறியாமலில்லை. பஞ்சம் பிழைக்க, மழை வேண்டும் தான். ஆனால் அந்த மழை நீரிலும் சேரி மக்களின் கண்ணீர் நனைகிறதே என்ற ஆற்றாமை தான். தண்ணீருக்குள் அழும் மீனின் கண்ணீரை போல, மழைநீரில் நனையும் சேரி மக்களின் கண்ணீரும் காணாமலே போய்விடுகின்றன, அவர்களின் நெஞ்சத்தை தொடாமலே கரைந்துவிடுகின்றன. விளை பூமியை பதன்படுத்துவது, விதை நெல்லை பத்திரபடுத்தி வைத்திருப்பது, நாற்று நடுவது, கலை பறிப்பது, பூச்சி மருந்து அடிப்பது, காவல் காப்பது, கதிர் அறுப்பது, கதிர் அடித்து மூட்டை கட்டி, அதை முதலாளி வீட்டில் கொண்டு பத்திரப்படுத்தும் வரை இவர்களுக்கு உறக்கமில்லை. உறக்கமின்றி உழைக்கும் இவர்கள் எத்தனை நாட்கள் உணவில்லாமல் துடித்திருக்கிறார்கள், களைப்பாற உறைவிடமின்றி தவித்திருக்கிறார்கள். உறக்கமின்றி உழைத்த உழைப்பாளிகளுக்கு களத்தில் சிதறிய பதருகளையே கூலியாக கொடுத்த அந்த முதலாளிகள் மீதுதான் வெறுப்பு. கூலியை உயர்த்தி கேட்டதற்கு கூலியாய் கிடைத்தது வெண்மணி கொடூரங்களே. கொடூரங்களை அரங்கேற்றும் கொடியவர்களை அடைகாக்கும் இந்த குடியரசு மீதுதான் வெறுப்பு. உண்மையில் இந்த அரசுகளுக்கு வெட்கமில்லை. சொந்த தேசத்து மக்களை அகதிகளைப் போல், அடிமைகளை போல் நடத்தி, அவர்களின் உணர்வுகளை குப்பைகளென ஒதுக்கும் இந்த அரசுகளுக்கு எவ்வித மானமும் இல்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும், சொந்த நாட்டு மக்களை கூவத்தின் அருகில், குடிசையில் வாழ வைதத்தது தான் இந்நாட்டின் பெருமை. இப்படி சொந்த நாட்டின் இரண்டகத்தை நொந்து கொண்டவனாய் அந்த மழைநாளின் துயர நினைவுகளில் மூழ்கிப் போனான் முரளி...
அப்போது முரளி ரொம்பவே சின்னப்பையன். எதோ ஒரு பண்டிகை நாள் வர இருக்கிறது. முரளியின் வீடு பத்துக்கு பத்தடி கருப்பஞ்சருகு வேய்ந்த கூரையாலும், களிமண் சுவராலும் ஆன வசந்த மாளிகை. உண்மையில் அந்த சுவர்களை பளிங்கு கற்கள் போலவே மொழு மொழு வென வைத்திருப்பார் பார்வதி அம்மா. தரையையும் அப்படித்தான். ஒருமுறை அந்த தரையில் பம்பரம் விட்டு கையளவு பெயர்த்துவிட்டான் முரளி. அதற்கு பரிசாக அக்காவின் ஐந்து விரல்களையும் முரளியின் முதுகில் பதித்தார்கள். அப்படி பொத்தி, பொத்தி பார்த்து அழகாக பராமரித்த வீடுதான் அது. அந்த வீட்டிலே மின்சார வசதி இருக்காது. 5 மணிக்கெல்லாம் இரவு உணவு தயாராகிவிடும். அப்போதே ஒரு முறை சாப்பிட்டுவிட்டு பம்பரம் ஆட ஓடிவிடுவான் முரளி. அப்படித்தான் அன்றும் சாப்பிட்டுவிட்டு பம்பரம் ஆட சென்றான். அன்று திடீரென்று கடுமையான மழை பிடித்து கொண்டது. சக நண்பர்களோடு ஊர் மாரியம்மன் கோவிலில் நின்றுகொண்டான். ஒருமணிநேரம், ரெண்டுமணிநேரம், மூணு மணிநேரம் நின்றுகொண்டே இருந்தனர். மழை விடவில்லை. ஒருத்தர் ஒருத்தர் வீட்டிலிருந்தும் யாரவாது தேடிகிட்டு வருவதும் அவர்களோடு அவர்களின் யாரோ ஒருவன் செல்வதுமாக ஆட்கள் குறைய தொடங்கியது. மணி இரவு 9.00 ஆகிவிட்டது. இவனுக்குள் பயம் தொற்றிகொண்டது. இப்ப கூட ரெண்டு பெரியவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் அங்கே படுப்பவர்கள். அழுதுவிடுபவன் போலாகிவிட்டான். எதிரில் நிற்பவர்கள் உருவம் கூட தெரியாத இருள். ஆளை அடித்து கொள்ளும்படியான மழை. கூடவே காத்தும்... மின்னலும், பலமான இடியும் சேர்ந்து கொள்ளவே அழுதுவிட்டான்...
வீரமுத்து தாத்தா அவனை தன் அருகில் அழைத்து நிறுத்திக் கொண்டார். 'டேய் பயப்படாத டா, நாங்க இருக்கோம்ல' என்று தேற்றிகொண்டிருந்தார். பிளாஸ்டிக் கவரை தலையில் போட்டுகொண்டு யாரோ வருவதை பிளாஸ்டிக் கவரில் படும் மழைசத்தம் உணர்த்தியது. கோவிலுக்குள் தான் வந்தார்கள். 'முரளி... முரளி...' என்று அழைத்தார்கள். அப்போதுதான் தெரிந்தது அது அவன் அக்கா சுந்தரி. அவனை அழைத்து கொண்டு சென்றுவிட்டார்கள். வீட்டில் சீமண்ணெய் விளக்கொளியை சுற்றி அம்மா, அப்பா, அக்காக்கள் அமர்ந்திருக்க உள்ளே சென்றான். அப்பா மட்டும் திட்டினார். அம்மா அவனுக்கு சோறு போட்டு கொடுத்தார்கள். சாப்பிட்டு கொண்டிருந்தான். இன்னமும் மழை விடவில்லை. இப்ப காத்தும் கொஞ்சம் வேகமா அடிச்சிகிட்டு இருந்துச்சு. வரும்போது காத்துல நடக்கவே கஸ்டபட்டான். காத்து, மழை சத்தத்தை தாண்டி ஒரு குரல் வேகமாக கேட்டது. அது பக்கத்துவீட்டு பழனி அண்ணனின் குரல்.
'தொரசாமி எப்போவ்... கூரையை காத்து தூக்கிடுச்சிப்பா' ன்னு வேகமா கத்தினார்.
'எந்த பக்கம் டா' அப்பா கேட்டார்.
'மேற்கால பக்கம் பாருப்பா' ன்னு அண்ணன் சொன்னாரு.
தலையில ஒரு துண்டை போட்டுக்கிட்டு அப்பா வேகமா ஓடினாரு. முறத்தை தலையில கவுத்துகிட்டு அம்மாவும் பின்னாடியே போய்ட்டாங்க. காத்து வேகமா அடிக்குது, சீமெண்ணெய் விளக்கு காத்துக்கு நிக்கமாட்டன்குது. அதை சின்ன அக்கா, காத்துக்கு மறைவா பிடிச்சிகிட்டு நிக்குது. இன்னொரு ஒழுகுற இடத்தில வச்ச பாத்திரத்தில இருக்கும் தண்ணியை வெளிய ஊத்தவும், திருப்பி வைக்க்கவுமாக இருந்தாங்க. முரளி ரொம்பவே பயந்துட்டான். பெரிய அக்கா மடியில உட்காந்து கிட்டான். அப்படியே தூங்கியும் போனான்...
கண்ணை கசக்கிகிட்டு காலையில எழுந்து பார்த்தான். விடிய, விடிய கொட்டிய மழைக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது போலும் மழை விட்டிருந்தது. பளிங்கு கற்கள் போன்ற சுவர்கள் கரைந்து போயிருந்தன, மொசைக் போன்ற மொழு, மொழு களிமண் தரைகள் வீங்கி கிடந்தன. கருப்பச்சருகு கூரைகள் வாயைப் பிளந்து கிடந்தன. எல்லாமே அலங்கோலமா இருந்துச்சு. எல்லார் குடிசைகளும் ஒட்டுவேலைகள் நடந்து கொண்டிருந்தன. அம்மா, எப்பவோ கட்டி வச்சிருந்த கருப்பஞ்சருகை தயார் பண்ணி கொண்டிருந்தார், அப்பா வேப்ப மரத்தை வெட்டிகிட்டு இருந்தாரு. அக்காக்கள் ரோட்டுல இருந்து முழங்கால் சேத்துல தண்ணியை எடுத்துட்டு வந்துகிட்டு இருந்தாங்க. கிழக்கால பக்கமா வீடு சாஞ்சிருந்ததை அப்போதான் முரளி பார்த்தான்...
மரத்தை வெட்டி தூணுக்கு ரெடி பண்ணிட்டாரு அப்பா. வேக, வேகமா நடக்குது. மழை நீரில் கரைந்து போயிருந்த கிழக்கு பக்க சுவற்றை அப்பா இடித்தார். முழுசா இடிச்சிட்டு ஒரு அஞ்சாறு இளவட்ட பசங்களை கூட்டிகிட்டு வந்து கிழக்கு பக்கமா சாஞ்ச தூணை எடுத்துட்டு, அப்படியே புதுச நட்டு நிறுத்திட்டாரு. வாயை பிளந்த கூரைகளை சரிசெய்ய அப்பா மேல ஏறிகிட்டாரு. அம்மா அண்டகவையை வச்சி சருகை எடுத்து கொடுக்க, ஒழுகுற இடம், காத்துல தூக்குன இடம் எல்லாத்தையும் சரி பண்ணிட்டாரு. கிழக்கு பக்க சுவரு மட்டும் வைக்கல. பழையை கீத்து, அம்மாவோட சேலையை வச்சி அடைச்சிட்டாரு. எல்லா வேலையும் முடிக்க மணி சாயந்திரம் 2.00 ஆச்சு. அப்போதான் எல்லாரும் காலை சாப்பாடு சாப்பிட்டோம். மறுபடியும் மழை வரும்,எங்களை அகதிகளாக்கும் ன்னு யாரும் கனவு கூட காணல...
ஊருக்கு வடக்கு பக்கம் வெள்ளாறு ஒன்னு இருக்கு. அதுல பாலத்துக்கு மேல தண்ணி போனா படையாட்சி தெருவும், சேரி தெருவும் காலியாயிடும். ஆத்துக்கு ஓரமா படையாட்சி குடியிருப்புகள், அடுத்து நடுவுல 214 பறையர் குடும்பம், 2 குறவர் குடும்பம் . (இப்ப ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி குறவர்கள் ஊரைவிட்டு எங்கயோ சென்றுவிட்டார்கள், எப்பாவது வருவார்கள் ) வாழும் சேரி. பெரும்பாலும் 'பறைத்தெரு'ன்னு தான் சொல்வாங்க. அடுத்து கடைசியா பிள்ளைமார் குடியிருப்புகள். படையாட்சி குடியிருப்பும், பிள்ளைமார் குடியிருப்பும் ஊர்தெரு. பெரும்பாலும் படையாட்சி குடியிருப்புகள் மாடி கட்டிடடங்களாக இருக்கும். அவர்கள் வீட்டில் ஒருவராவது வெளிநாட்டில் இருப்பார்கள். அதனால் அடைமழை நாட்களின் முதல் மாடிக்கு சென்றுவிடுவார்கள். ஆத்து தண்ணியால் அவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. இடம் பெயரவேண்டிய அவசியமும் இருக்காது. பிள்ளைமார் குடியிருப்பு பக்கம் ஆத்து தண்ணி வராது. சேரியை மட்டும் அடித்து துவம்சம் பண்ணிடும். பிள்ளைமார் தெருவுல தான் பள்ளிக்கூடம் இருக்கு... முரளி, பார்வதி அம்மா வயித்துல இருக்கும் போது ஒருமுறை ஆத்து வெள்ளம் வந்து எல்லாரும் மூணு நாள் பள்ளிகூடத்துல தான் இருந்தாங்களாம். முரளியோட அக்கா, முரளிக்கு ஒருமுறை இதை சொல்லி இருக்காங்க...
மறுபடி பிடிச்சது மழை. இதை பேய் மழைன்னு தான் சொல்லணும் அவ்வளவு ஆக்ரோஷம். காத்து ரொம்ப உக்கிரமா இருந்துச்சு. ஒருநாள், ரெண்டுநாள் தொடர்ந்தது. முதல்நாள் மழைக்கே நிறைய குடிசைகள் தாங்கல.. முரளி குடும்பமும், பக்கத்துல இருந்த சிவா குடும்பமும் பழனி அண்ணன் வீட்டுக்கு வந்தாச்சு. பழனி அண்ணன் வீடு கொஞ்சம் பெரிய வீடு. அதோட இல்லாம மரத்தூணுக்கு பதிலா சிமெண்ட் தூணு வச்சி கட்டி இருப்பாரு. முரளியின் அம்மாவும், அப்பாவும் வீட்டில் இருந்த தட்டுமுட்டு சாமான்களை மூட்டை கட்டி வச்சிட்டாங்க, ஆத்து வெள்ளத்தை எதிர்கொள்ள தயாராயிட்டாங்க. இரவெல்லாம் பெருசுகளுக்கு தூக்கமில்லை... விடிய, விடிய வெத்தலையை போட்டுக்கிட்டு பேசிகிட்டே இருப்பாங்க.. வீரமுத்து தாத்தாவும், ராஜேந்திரன் அண்ணனும் தலையில பிளாஸ்டிக் கவரை போட்டுக்கிட்டு அடிக்கடி ஆத்து பக்கம் போயிட்டு வருவாங்க. ஆத்துல தண்ணி வருதான்னு பார்க்கத்தான்.
பழனி அண்ணன் வீட்டுல அப்பாவும், பழனி அண்ணனும் பேசிகிட்டு இருந்தாங்க, அம்மா ஒரு மூலையில குத்தவச்சி உக்காந்து இருந்துச்சு. முரளிக்கு தூக்கமே வரல அவங்க பேசறத கேட்டுகிட்டு இருந்தான் ...
'டேய் பழனி வெத்தலை கொஞ்சம் குடுடா' 'வெத்தலை இருக்குப்பா, புகையிலை இல்ல..'
'என்கிட்டே இருக்கு குடுடா ... ' அப்பா வெத்தலை போட்டுகிட்டே சொன்னாரு
'என்னடா பழனி, இந்த மழை நம்மள பாடா படுத்துது?'
'என்னப்பா பண்றது, அதுக்காக மழையே வேனாம்னும் சொல்ல முடியாது. மழை இல்லன்னா காடுகளோட சேர்ந்து நம்ம வயிறும் தான் காயும்'
'எப்படியாச்சும் இந்த காத்து மழைக்கு தாங்குற மாதிரி ஒரு கல்லு வீடு கட்டிபுடுலாம் ன்னு பாக்குறேன் முடியலடா பழனி '
'என்னப்பா பண்றது... இந்த கவர்மெண்டு காசு இருக்குறவனுக்கு தான் வீடு கட்டி கொடுக்குது, முன்பணம் போட்டு வீடு கட்ட காசு இருந்தா நாமலே கட்டிக்க மாட்டோமா?" ன்னு அண்ணன் கேட்டாரு ...
'இவனுங்க தான் கூலி கொஞ்சம் உசத்தி கேட்டா வெளியூர்ல இருந்து ஆளு கூட்டிகிட்டு வந்து வேலை செய்றானுங்க' ன்னு அப்பா சொன்னாரு ...
'யோவ்... எல்லாம் நீங்க செஞ்சதுய்யா, சோத்துக்கு இல்லன்னு கால் காணியையும், அரை காணியையும் ஆயிரம், ஐந்நூறுக்கு அவனுங்க கிட்ட எழுதி கொடுத்தீங்க, இப்ப அவனுங்க ஆடுறானுங்க' ன்னு அண்ணன் கோபபட்டாரு...
'நாம என்னடா பண்ண முடியும், நாம பொறந்த சாதி அப்படி? நம்ம தலையில ஆண்டவன் இப்படி எழுதிபுட்டான். எல்லா கொடுமையும் நம்ம காலத்தோட போகட்டும். நம்ம புள்ளைகலாவது நிம்மதியா வாழும் ன்னு பாத்தா, இந்த கொம்பனுங்க பொழுது விடிஞ்சா, பொழுது போனா பம்பரம் அடிக்க போய்டுரானுங்க' இவனெல்லாம் (முரளி) புக்கை தொறந்து படிச்சே என் கண்ணால பாக்கள டா... அப்பா விதியை நொந்து கொண்டார்...
இந்த சோக கதைகளை கேட்ட முரளி தூங்கி போனான்...
விடிகாலம் 3.00 மணிக்கு போகும்போது பாலத்துக்கு கீழ தண்ணி ஓடிகிட்டு இருந்திருக்கு.. அவரு வந்துட்டு மறுபடி 5.30 மணிக்கு திரும்பி போகும்போது அவரு படையாட்சி குடியிருப்பு கிட்ட போகும்போதே தண்ணி அவரை மடக்கிடிச்சு.. வயசான மனுஷன் தண்ணி இழுப்புக்கு தாக்கு பிடிக்க முடியாம கீழ விழ, ராஜேந்திரன் அண்ணன் அவரை பிடிச்சி தூக்கிட்டு வந்திருக்காரு. பறையர்கள் மொத்தம் நாலு தெருவுல இருந்தாங்க, ஒரு ஒரு தெருவா ஓடுனாறு 'டேய்... எல்லாரும் பள்ளிகூடத்துக்கு கிளம்புங்கடா , தண்ணி படையாட்சி தெருவை தாண்டிடுச்சி டா...' ன்னு கத்தி, கத்தி சொல்லி முடிக்கவும் பத்து நிமிஷத்துல மாரியம்மன் கோவில் முன்னாடி மொத்த ஊரும் கூடிடுச்சு... அகதிகளை போல தட்டுமுட்டு சாமான் மூட்டைகளை தலையில வச்சுகிட்டு பள்ளிக்கூடம் நோக்கி நடந்தாங்க. பள்ளிகுடத்து சாவி நாட்டார் வீட்டுலதான் இருக்கும். ராஜேந்திரன் அண்ணன் போயி சாவி வாங்கிட்டு வந்து எல்லாரும் ஒன்னாமன்னா கிடந்தாங்க.. ஒரு அடுப்புதான் எரியும் பெரிய அண்டாவுல சோறு ஆக்கி எல்லாருக்கும் அதிலே சாப்பாடு. இப்படியே ரெண்டு நாள் ஓடிச்சு... உயர்சாதி மக்கள் வாழும் வீதியில் இருக்கும் பள்ளிகூடத்தில் தாழ்த்தப்பட்ட பறையர்கள் இப்போது. அவர்கள் எரிச்சலோடும் ஏலனத்தோடும் பார்ப்பார்கள்...
ரெண்டு நாள் கழிச்சி மழை விட்டுச்சு . ஆம்பளைங்க மட்டும் தெருப்பக்கம் வந்து பார்த்தாங்க.. அப்பாகூட முரளியும் வந்தான். வீடு இருந்ததற்கான அடையாளமாக நாலு தூணு மட்டும் நிக்குது... தெருவே சுடுகாடு மாதிரி காட்சி தந்தது. அத்தனைப் கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து ஓடுகிறது. மழைநீர் ஓடிய வீதிகளில் மனிதர்களின் கண்ணீர் ஓடியது...
பிரம்மை பிடித்தவனை போல் அமர்ந்திருந்த முரளி தோளில் முத்து உலுக்கி எழுப்ப இந்த நினைவுகளில் இருந்து மீண்டெழுந்த முரளியின் கன்னகளும் கண்ணீரால் நனைந்திருந்தது. இருவரும் டீக்கடைக்கு சென்றுவரவும் பார்வதி அம்மா அவனுக்கு போன் செஞ்சாங்க...
'ஏம்பா அந்த ராத்திரியில போன் பண்ணின?' ன்னு அம்மா கேட்க
'இல்லம்மா இங்க செம்ம மழை, அதான் உங்க நெனப்பு வந்துச்சு, நீங்க என்ன பண்றீங்கன்னு பயந்து தான் போன் பண்ணினேன்...'
'இதுக்குலாமா பயப்படறது? என்ன புள்ளைடா நீ?'
'அம்மா நீ கவலைப்படாத, உனக்கு ஒரு மாடி வீடு கட்டி தந்துடுறேன், அப்புறம் நாம பயப்பட வேண்டிய அவசியமே இருக்காது.'
'சிரித்து கொண்டே அம்மா, உங்க தாத்தா என்ன பொண்ணு பாக்க வரும்போது சொன்னது ' இன்னும் கொஞ்ச நாளில் கல்லு வீடு கட்டிடுவோம் ன்னு' அப்புறம் உங்க அப்பாவும் சொன்னாரு, இப்ப நீயும் சொல்ற... ன்னு நொந்து கொண்டார்...
'..........................' முரளிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. "தீண்டாத வசந்தம்" தான் நினைவுக்கு வருகிறது
'தாழ்த்தப்பட்ட மக்களின் விருப்பங்கள், விருப்பங்களாகவே இருந்தன, விருப்பங்களாகவே வாழ்ந்தன, விருப்பங்களாகவே முற்று பெற்றன...'
- அங்கனூர் தமிழன் வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக