சனி, 24 நவம்பர், 2012

என்ன செய்ய போறீங்க?



Add caption
காக்கை குருவி 
எங்கள் சாதி !
மரங்களும் மலர்களும் 
மனிதர்களுள் பாதி !
நீரும், காற்றும் இன்னபிற 
இயற்கையும் மனிதரின் 
உயிர்நாடி ! - இது தமிழ் 
கூறும் நல்லுலகின் 
ஓயாத முழக்கங்கள் !

தருமபுரியில் 
பாதிக்கப்பட்டது 
காக்கையோ குருவியோ 
அல்ல; மரமோ மலரோ 
அல்ல; நீரோ காற்றோ 
இன்னபிற இயற்கையோ 
அல்ல!

மனித இனத்திலே 
பிறக்ககூடாத 
தீண்டத்தகாத இனம் !
இழிதொழிலை செய்தவன் 
இனி முடியாதென்பதா?
ஓலைக்குடிசையிலே 
உருண்டவன் ஓட்டு 
வீட்டிலே வாழ்வதா?
உழைத்து கொடுக்க 
மட்டுமே பிறந்தவன் 
உரிமை என்று 
முழங்குவதா?
ஊருக்கு வெளியே 
ஓரமாய் கிடந்தவன் 
ஊருக்குள் நடப்பதா?
அடிவாங்கவே பிறந்தவன் 
அடங்கமறுத்து, அத்துமீறி 
திமிறி எழுந்து திருப்பி 
அடிப்பதா?

அச்சச்சோ... 
அநியாயமாச்சே
இதுவும் தமிழ்பேசும் 
நல்மாந்தர் எனும் 
ஆதிக்கவர்க்கத்தின் 
எழுதப்படாத, ஏட்டில் 
வரையாத, சத்தமில்லாத 
சாக்கடைத்தனமான 
சர்வாதிகார 
முழக்கங்கள் தான் !

ஈழ வேடமிட்டு; போலி 
கோஷமிட்டு தமிழ்தேசம் 
எனும் சாதியதேசம் கட்டத்
துடிக்கும்  சாதிதமிழ்
தேசியவாதிகளின் ஆசிபெற்ற 
முழக்கங்கள் தான் போலும் ! 
அதனால் தானே இன்னமும் 
கள்ள மவுனம் காக்கின்றனர்?

தமிழன் இல்லாத நாடில்லை ! 
ஆனால் தமிழனுக்கென்று ஒரு 
நாடில்லை! தருமபுரி சாதி 
வெறியாட்டம் ஒட்டுமொத்த 
தமிழ்தேசியத்திற்கு எதிராக 
விடப்பட்ட சவால் அல்லவா?

தம் இறுதி மூச்சுவரை 
மூத்திரப்பையுடன் 
கிஞ்சிற்றும் சமரசம் இன்றி 
சாதி ஒழிப்புக் களத்திலே 
சுழன்றுக் கொண்டிருந்த 
பெரியாருக்கு விடப்பட்ட 
சவால் அல்லவா?

பசியும் பட்டினியுமாய் 
உழைக்க மட்டுமே தெரிந்த 
பாமரனின் ஒரு நூற்றாண்டின் 
உழைப்பையே சுரண்டியுள்ளனரே;
இது மார்க்சியத்திற்கு விடப்பட்ட 
சவால் அல்லவா?

தமிழ்தேசியவாதிகள்;
பெரியாரியவாதிகள்;
மார்க்சியவாதிகள்;
இன்னபிற சனநாயக 
சக்திகள் தமிழகத்தில் 
நித்தம் அரங்கேறும் சாதி 
வெறியாட்டத்தை எப்படி 
எதிர்கொள்ளப் போகிறார்கள்?
என்ன செய்யப் போகிறார்கள்?
எப்படி தமிழ்தேசத்தை கட்டி 
எழுப்பப் போகிறார்கள்?

முடிவை அவர்களின் 
சிந்தனைக்கே விட்டு 
விடுகிறேன்.....

- அங்கனூர் தமிழன்வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக