திங்கள், 26 நவம்பர், 2012

பெரியார் திடலில் சாதி மதங்களுக்கு எதிரான பெருநெருப்பு !



சாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மண விலக்குப் பெற்றவர். மாற்றுத் திறனாளிகளுக்கான இணையர் தேடும் மன்றல் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் இன்று காலை முதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. பிராமணாள் கபே, ஸ்பெலென்டர் அய்யர், போன்ற சாதி துவேஷங்கள் மீண்டும் வலுப்பெருகிறதே பெரியாரியவாதிகள், சனநாயக சக்திகள் என்ன செய்கிறார்கள் என்ற மனக்குமுறல் இருந்தது. அடுத்து காடுவெட்டி குரு, பொங்கலூர் மணிகண்டன், பழ கருப்பையா போன்ற சனநாயக தீய சக்திகள் சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக வாள் சுழற்றுகிரார்களே என்ன செய்யப் போகிறோம் என்ற அச்சமும் எனக்கிருந்தது. ஆனால் "கருப்பு சட்டைக்காரர்கள் என்றைக்கும் சளைத்தவர்கள் அல்ல; சாதி மறுப்பு திருமணத்தை நீங்கள் எதிர்த்தால் நாங்கள் நடத்துவோம்" என்று முன்வந்து சவாலுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள். 


நிகழ்ச்சிக்கு பிராமிணர் சமூக தோழர்களும் வந்திருந்தது பெரியாரின் சாதி ஒழிப்பு  பயணத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி !  நிகழ்ச்சியில் என்னை மிகவும் கவர்ந்தது 82 வயதுள்ள சீனிவாசன் என்பவர் தனக்கு 50 மதிக்கத்தக்க துணைதேவை என்று வந்திருந்தார். அந்த பெரியவரின் வருகையில் தான் தந்தை பெரியார் வெற்றி கண்டுள்ளார். கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதல் திருமணத்தில் நம்பிக்கை இழந்து மறுமணம் புரிய வந்திருந்தவர்கள் என அத்தனைப் பேரின் வார்த்தைகளிலும் சாதி மதங்களுக்கு எதிரான நெருப்பு தெறித்தது. வந்திருந்தவர்கள் 99 சதவிகிதம் பேர் மணமகன் / மணமகள் பகுத்தறிவாளராக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தை பதிவு செய்தார்கள். அதிக அளவில் மறுமணம் புரிய பெண்கள் வந்திருந்தனர். பெரியாரின் சுயமரியாதை திருமணம் அதன் அவசியம் இன்றைக்கு தேதியில் மக்களிடம் நல்ல எழுச்சியை பெற்று உள்ளது. இது ஒரு சம்பிரதாய நிகழ்வாக இன்றோடு நின்றுவிடாமல் தொடர்ந்து நடக்கவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் விரும்பினார்கள். நாமும் விரும்புவோம். சாதி மதங்களை கடந்து மணமகன், மணமகள் தேடி வந்திருந்த அத்தனைப் பேருக்கும் நாமும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக