வெள்ளி, 9 நவம்பர், 2012

எப்படி வந்தது சாதி? ஏன் வேண்டும் சாதி?


எனதருமை நண்பர்களே! 
வன்னியன் என்று சொல்லி 
என்னிடம் இருந்து உன்னையும் 
உன்னிடம் இருந்து என்னையும் 
அன்னியனாக்க விரும்பவில்லை 

வீசும் காற்றிலும்,
பெய்யும் மழையிலும்,
சாதியில்லை!
நாம் சார்ந்து இருக்கும்
இயற்கை யாவும்
பேதம் பார்ப்பதில்லை;
உனக்கென்று தனியாகவும்
எனக்கென்று வேறாகவும்
மழையோ, காற்றோ
அடிப்பதில்லையே!
பிறகென்ன சாதி?
பிறகென்ன மதம்?

ஆண்டுபலவாய் ஆதிக்கம்
செய்பவனுக்கு நாம் அடிமை
சாசனமா எழுதிக் கொடுத்தோம்?
ஏன் இந்த கொலைவெறி?
சாதி இல்லாத இடம்
சொல்கிறேன் பாரய்யா;
உன் நெஞ்சிலும் சமத்துவம்
இருக்கு கேளய்யா!

உன் தாயின் மடியில்;
உன் பசியாற தம்
ரத்தத்தை பாலாக்கிய
அவளது மார்பில்;
தவழ்ந்து வந்த உன்
குழந்தை சிரிப்பில்;
கள்ளமில்லாமல் நாம்
கபடி ஆடிய அந்த
மைதானத்தில்;
உயிரை காக்க உணவாய்
கொள்ளும் நெல்மணியில்
உயிரை விட பெரிதாம்
மானத்தை காக்க உடுத்தும்
துணிமணியில்; உனக்கே
உனக்கான உன் உரிமையில்!
உயிர்ப்பிரியும் வேளையில்
உனக்கு வேண்டிய
செங்குருதியில் உன்னை
சுற்றி எங்கும் சாதியில்லை
எதிலும் சாதியில்லை !

எப்படி வந்தது சாதி?
ஏன் வேண்டும் சாதி?
திரும்ப திரும்ப கேள்
பதில் உனக்கே உன்னிடம்
பிறக்கும்; சமத்துவமாய்
இருந்த நம்மை பிரிக்க
சாதியை கட்டினான்;
அவன் சந்தோஷமாய் வாழ
நமக்குள் சண்டை மூட்டினான்;
சிந்தித்து பாராமல் உன்னை விட
நானே பெரியவன் என்னைவிட
நீ தாழ்ந்தவன் என்று மோதிக்
கொள்வது நியாயமா? சிந்தித்து
பாரடா- உன் சிந்தையில் பதியடா
உனக்கு நானும், எனக்கு நீயும்
தாழ்ந்தவன் அல்ல ; உழைக்கும்
நம்மை விட உயர்ந்தவன்
வேறு யாரும் அல்ல சிந்தையில்
செலுத்து; சீக்கிரம் செலுத்து!

உன் முன்னொன்று பேசுவார்
புறம் உன்னை வீழ்த்துவார்
உனக்குள் இருந்தே உன்
உத்திரங்களை உறுஞ்சுவார்!
போலி வேஷங்களை கட்டுவார்
சாதி கோஷங்களை எழுப்புவார்
பேதம் என்பதை புகுத்துவார்
நம்மை பைத்தியம் என்றே
சொல்லுவார் - தருமபுரி
திரும்புமா? - அங்கெ புது
வசந்தம் பிறக்குமா?
எரிந்தது குடிசையா?
எரிந்தது உன் எதிரியா?
எரிந்தது உன் மானமும்
உரிமையும் அல்லவா ;
எரிந்தது உன் தோழனும்;
உனக்கு தொள்கொடுப்பவனும்
அல்லவா?

எதிரிகளை கவனி - அவன்
எண்ணங்களை கவனி
கள்ளசிரிப்பில் உன்னை
மயக்குவான் காகித உரையில்
உன்னை உசுப்புவான் !
சாதியாய் பிரிந்தது போதும்
நம் பிழைப்பு சாந்தி சிரித்ததும்
போதும் - உழைக்கும் நம் படையை
பெருக்கு - நமக்குள் இருக்கும்
தடையை அடித்து நொறுக்கு !!
------------------------------------------------
தோழமையுடன்.....
அங்கனூர் தமிழன்வேலு

1 கருத்து: