ஞாயிறு, 6 ஜனவரி, 2013

முடி அரசும் ! குடி அரசும் !!



அன்றைக்கு மன்னர்களும் , குறுநில
மன்னர்களும் மக்களை ஆண்டனர்;
இன்றைக்கு பிரதமர்களும், முதல்வர்களும் 
மக்களை ஆள்கின்றனர் !

அன்றைக்கும்  ஒரு நாட்டை கைப்பற்ற 
படைவீரர்களை பயன்படுத்தினர்;
இன்றைக்கும்  ஒரு தொகுதியை 
கைப்பற்ற அடியாட்களை 
பயன்படுத்துகின்றனர் !

அன்றைக்கு படைவீரர்களை தெம்பூட்ட 
"கள்" கொடுத்தார்கள்; இன்றைக்கு 
வாக்காளர்களை கவர "சாராயம்" 
கொடுக்கிறார்கள்

அன்றைக்கு அரசசபையில் நாட்டியக்காரர்கள்
இருந்தார்கள்; இன்றைக்கு நாட்டியக்காரராக
இருப்பதுதான் நாட்டை ஆள்வதற்கான 
முதல் தகுதியே !      

அன்றைக்கும் மந்திரிகளை அரசர்களே 
தேர்வு செய்தனர்; இன்றைக்கும் மந்திரிகளை 
முதல்வர்களே தேர்வு செய்கின்றனர் !

அன்றைக்கு மந்திரிகளுக்கு மதியூகம் 
தகுதியாக கருதப்பட்டது; இன்றைக்கு 
மந்திரிகளுக்கு துதியூகம் தகுதியாக 
கருதப்படுகிறது !  

அன்றைக்கு மந்திரிகள் வரும்பொருள் 
உரைப்பவர்களாக  இருந்தார்கள்; இன்றைக்கு 
மந்திரிகள் வரும்பொருள் பறிப்பவர்களாக 
உள்ளனர் !

அன்றைக்கு மந்திரிகள் வேதங்களுக்கு 
உரை எழுதினர்;  இன்றைக்கு மந்திரிகள்
கட் அவுட்டுக்கு உரை எழுதுகின்றனர்!

அன்றைக்கு அரச சபையில் புலவர்கள் 
இருந்தார்கள்; இன்றைக்கு சட்டசபை 
உறுப்பினர் ஒவ்வொருவரும் புலவர்களாக 
இருக்கின்றனர் !

அன்றைக்கு அரசர்களைப் புகழ்ந்துப் 
பாடினால் பரிசு கிடைக்கும், இன்றைக்கு 
முதல்வர்களைப் புகழ்ந்துப் பாடினால் 
பதவி கிடைக்கும் !

அன்றைக்கும் அரசர்களை பெயர்சொல்லி 
அழைக்காமல்  ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, 
ராஜ மார்த்தாண்ட, ராஜ விக்கிரம சக்கரவர்த்தி 
என்று அழைத்தனர்; இன்றைக்கும் 
முதல்வர்களை  பெயர்சொல்லி அழைக்காமல் 
இதயதெய்வம், முத்தமிழ் அறிஞர், 
புரட்சி தலைவர், புரட்சி தலைவி 
என்றே அழைக்கின்றனர் !

அன்றைக்கும்  அரசசபையை எதிர்த்துப் 
பேசினால் கத்திப் பாயும்; இன்றைக்கும்  
சட்டசபையை எதிர்த்துப் பேசினால் 
குண்டாஸ் பாயும் ! 

அன்றைக்கும்  மன்னர்கள் ஓய்வெடுக்க 
அந்தபுரம் இருந்தது; இன்றைக்கும் 
முதல்வர்கள் ஓய்வெடுக்க கொடநாடுகள் 
இருக்கின்றன!

அன்றைக்கும் மன்னர்களின் புதல்வர்கள்
இளவரசர்களாக இருந்தார்கள்; இன்றைக்கும் 
முதல்வர்களின் புதல்வர்கள் துணை 
முதல்வர்களாக இருக்கிறார்கள் !

முடி அரசுக்கும், குடி அரசுக்கும் 
எனக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை;
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.....

(அடிப்படை : பாவலர் இன்குலாப் அவர்களின் 
"ஜனநாயகம் தூசு தட்டிய  போது... " 
கட்டுரைத் தொகுப்பு)

- அங்கனூர் தமிழன் வேலு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக