வெள்ளி, 4 ஜனவரி, 2013

காந்தியை விமர்சிக்கலாமா?


கேள்வி - பதில் !

குமார், சென்னை : காந்தியடிகள் இறந்துவிட்டப் பின்பும் அவரை விமர்சிப்பது நேரத்தை வீணடிக்கும்  செயல்தானே? ஏன் அவரை விமர்சிக்க வேண்டும்?

பதில் : இது நல்ல கேள்வி! பெரும்பாலான தலித் இயக்கங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை வெறும் அடையாகங்களாக மட்டுமே பயன்படுத்துகிறார்களே ஒழிய, ஆயுதமாக பயன்படுத்தவில்லை; ஆனால் இந்துத்துவ சக்திகள் காந்தி போன்றவர்களை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்! காந்தி இறந்துவிட்டாலும் அவரது சொற்கள், அவரது எண்ணங்கள் இன்னமும் உயிர்ப்போடு  இருக்கின்றன; உதாரணமாக அவர் ஆடை விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்; காந்தி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபோது விவசாயி ஒருவர் அணிந்திருந்த ஆடையைப் பார்த்து இந்த மக்கள் நல்ல ஆடை அணியும் வரை நானும் நல்ல ஆடை அணியமாட்டேன் என்று சொன்னாராம்; ஆனால் இரண்டு நாளுக்கு முன்னர் ஒரு தினசரி நாளிதழதில் படித்தேன், கேரளா, திருச்சூர் மாவட்டம், திப்பிலசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ்,என்ற மரம் வெட்டும் தொழிலாளி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தம் பெயரை இணைக்க ஆடை அணியாமல் சென்றுள்ளார், அவர் ஆடை அணியாமல் வந்ததால்  திகாரிகள் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்; பிறகு அவர் நான் வழக்கு தொடுப்பேன் என்று கூறியப் பிறகு அதிகாரிகள் அவரதுப் பெயரை இணைத்துள்ளனர்; அதன் பிறகு செய்தியாளர்களிடம் அந்த விவசாயி கூறியது தான் காந்தி எதிர்பார்த்தது, அதாவது அவர்  நான் பல ஆண்டுகளாக, காந்தியின் கொள்கைகளை பின்பற்றி, எளிமையாக வாழ்ந்து வருகிறேன். அவரைப் போலவே, பல ஆண்டுகளாக, மேல் சட்டை அணியாமல் உள்ளேன். வேஷ்டியும், மார்பை மறைக்க, காவி துண்டையும் பயன்படுத்தி வருகிறேன். என்று கூறியிருக்கிறார்.இதைதான் காந்தி எதிர்பார்த்தார்?

ஏழைமக்கள் ஆடையின்றி இருப்பது காந்திக்கு வேதனையை உண்டாக்கி இருந்திருந்தால், ஒரு சமூகத்தின் மீது அக்கறை உள்ள தலைவராக அவர் என்ன செய்திருக்க வேண்டும்? ஏழைககளை  ஆடை அணிய வலியுறுத்தி இருக்கவேண்டும்; எல்லோருக்கும் ஆடை கிடைக்க வழிவகை செய்திருக்க வேண்டும்;  மக்கள் அனைவரும் சமமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ தடையாக இருக்கும் சாதியை எதிர்த்து களமாடி இருந்திருக்கவேண்டும்; மாறாக அவர் மக்களை சாதி ரீதியாக பிரிக்கும் வர்ணாசிரமத்தை ஆதரித்தார் ! ஒரு தலைவன் நாட்டு மக்களுக்கு முன்னேக்கி வழிகாட்ட வேண்டுமே ஒழிய பின்னோக்கி வழிகாட்டக் கூடாது. காந்தியின் அரை நிர்வாணக் கோலம்  மக்களை பின்னோக்கி இழுக்கும்  செயல்.  மேலும் காந்தியம் இங்கே உயிர்ப்போடு இருப்பதால் காந்தியின் பெயரை சொல்லி இங்கே மக்களை ஏமாற்றும் கூட்டமும் நிறைய இருக்கிறது ஆகவே  காந்தி என்ற மாயையை உடைத்தெறியவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது; அதற்காக காந்தியை விமர்சிப்பதில் தவறில்லை.

அங்கனூர் தமிழன் வேலு           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக