அமெரிக்கர்களை அழைத்து நீங்கள் யார் என்று கேட்டால் எல்லோரும் நான் அமெரிக்கன் என்று பெருமையோடு சொல்வார்கள் ; ஆங்கிலேயர்களை அழைத்து நீங்கள் யார் என்று கேட்டால் எல்லோரும் நான் ஆங்கிலேயர் என்று பெருமையோடு சொல்வார்கள்; ஆனால் இந்தியாவில் உள்ள 100 % சதவிகித மக்களும் நான் இந்தியன் என்று பெருமையோடு சொல்வார்களா? உலகில் அடிமைத்தலையில் இருந்து விடுதலையான எந்த நாட்டிலாவது, அந்த நாட்டின் மக்கள், அந்த நாட்டின் சுதந்திர நாளை துக்க நாளாக அனுசரித்தது உண்டா? என் இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் அப்படி ஒரு துர்பாக்கிய சம்பவம் நிகழ்ந்து இருக்காது என்றே நினைக்கிறேன்! அந்த அளவுக்கு இங்கே ஏற்றத்தாழ்வுகள் கற்ப்பிக்கப்பட்டு உள்ளது. என் வீடு எப்படி சிறந்த வீடாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேனோ, அப்படியே என் நாடும் சிறந்த நாடாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்; அதே வேளையில் என் தந்தை சிறந்த தந்தையாக இல்லாத பட்சத்தில் நான் எப்படி என் தந்தை சிறந்த தந்தை என்று சொல்ல முடியாதோ அப்படித்தான் என் நாடு சிறந்த நாடாக இல்லாத பட்சத்தில் நான் எப்படி என் நாட்டை சிறந்த நாடு என்று பெருமை கொள்ள முடியாது; ஒரு நாடு சிறந்த நாடாக அல்லது முன்னேறிய நாடாக அல்லது மற்ற நாடுகளுக்கு முன்மாதிரி நாடாக இருக்க வேண்டுமானால் அந்த நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு நெருங்கிய தொடர்பு இல்லாவிட்டாலும் நிரம்ப வேறுபாடுகள் இருக்க கூடாது; ஒட்டி உறவாட நெருங்கிய நெருக்கம் இல்லை என்றாலும், நெருங்கவே முடியாத அளவில் முரண்பாடு இருக்க கூடாது !
வேறுபாடுகள் எல்லாநாட்டிலும் இருந்தாலும், சாதி எல்லா மதங்களிலும் இருந்தாலும் இந்துமதத்தை தவிர வேறு எந்த மதங்கள் சாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; இந்தியா மதசார்பற்ற நாடு என்று ஆட்சியாளர்கள் சொன்னாலும், இந்தியாவை ஆள்வது இந்துமதமே; இந்தியாவின் பிரிவினைக்கு காரணமும் இந்துமதமே; ஆகவே இந்துமதத்தைப் பற்றியே இங்கே பார்ப்போம்...இந்தியாவில் மட்டுமே வேறுபாடுகள் அல்லது ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக நான் சொல்லவில்லை, எல்லா நாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன, இந்தியாவிலும் இருக்கிறது; ஆனால் இந்தியா போன்ற நாடுகளை தவிர்த்து வளர்ந்த நாடுகளிலும், இன்னபிற வளரும் நாடுகளிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் தொழிலை சார்ந்தது, வர்க்கத்தை சார்ந்தது; ஆனால் இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிப்பது ஒரு மனிதனின் பிறப்பு; அதாவது இந்தியாவில் சாதிதான் ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிக்கிறது ! பிறப்பை அடிப்படையாக கொண்டுதான் சாதி வரையறுக்கப்படுகிறது ! தொழில் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் நிச்சயமாக இருக்கத்தான் வேண்டும்; வர்க்க முரண்பாட்டை அதாவது தொழில் ஏற்றத்தாழ்வுகளை கலையும் பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கெ உரியது அவன் விரும்பிய தொழிலை செய்யும் உரிமை அவனுக்கு இருந்தால்; அவன் விரும்பியத் தொழிலை செய்யும் உரிமை அவனுக்கு இருந்தால் வர்க்க முரண்பாட்டால் எந்தவித பிரச்சனையும் இங்கே எழாது; ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பிறப்பின் அடிப்படையில் சாதி தீர்மானிக்கப்படுவதால், சாதியின் அடிப்படையில் தொழில் வரையறுக்கப்படுவதால் தான் இங்கே ஏற்றதாழ்வுகள் களைய முடியாத காரணியாக வேர்விட்டு விருச்சமாக வளர்ந்து நிற்கிறது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்? அதற்கு கம்பர் சொல்வது....
"வன்மை இல்லை ஓர் வறுமை இல்லையாம்;
திண்மை இல்லையோர் செறுநர் இல்லையாம்;
உண்மை இல்லை பொய் உரை இல்லையாம் ;
ஒண்மை இல்லையல் கேள்வி ஒங்கலால் !"
ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கம்பர் பாடிய வரிகள் இது; ஆனால் இந்தியாவில் வன்மை, வறுமை, திண்மை, உண்மை, பொய் உரை, கேள்வி இவை அனைத்தையும் சாதியே தீர்மானிக்கிறது; அதைப் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம் ...
இந்தியா மத சார்பற்ற நாடு என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்; என்னால் நம்ப முடியாது; இந்தியாவை வடிவமைத்ததும், இந்தியாவில் முரண்பாடுகளுக்கு வழிகாட்டுவதும் இந்து மதமே ! இந்தியா மத சார்பற்ற நாடுதான் என்றால் இங்கே இசுலாமியர்கள் ஏன் சிறுபான்மையினர் பட்டியலுக்கு சென்றார்கள்? தலித்துகள் ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலுக்கு சென்றார்கள்? வன்மையை இந்துமதம் எப்படி வளர்க்கிறது என்றால் இங்கே இந்து - முஸ்லிம் கலவரம் நிகழாதவரை இந்துக்களுக்குள் எந்த ஓட்டும் இல்லை; உறவும் இல்லை ! ஒவ்வொரு இந்துவும் தத்தம் சாதியை உயர்ந்தது என்றும், மற்ற சாதிகளை தாழ்ந்தது என்றும் மலிவான செயல்பாடுகளில் செயல்பட்டு வருகிறார்கள் ! சாதிகளுக்குள் உயர்வு தாழ்வு பேசும் போது வன்முறை நிகழ்கிறது; அந்த வன்முறையை இந்துமதம் ஊக்குவிக்கிறது ! உதாரணமாக தருமபுரியில் 300 தலித் குடிசைகள் தீக்கு இறையான சம்பவம். வறுமையை இந்துமதம் எப்படி உருவாக்குகிறது என்றால் இந்தியா போன்ற நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் எவரும் எந்த தொழிலையும் செய்யலாம்; அங்கெ வர்க்க முரண்பாடுகள் இருந்தாலும், அவை அந்தந்த காலகட்டங்களில் முறியடுக்கப்படுகின்றன; ஆனால் இந்துமதத்தில் சாதியின் அடிப்படையில் தொழில் தீர்மானிக்கப்படுவதால் சாணி அள்ளியவன் பிள்ளையும் சாணியே அள்ள வேண்டும் என்ற அவலமான சூழல் இங்கே இருக்கிறது; இது போன்ற சில தொழில்களை இழிவான தொழில்கள் என்று ஒதுக்கி தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது திணிப்பதால் அவர்களும் அந்த தொழில்களை செய்ய மறுக்கிறார்கள்; வேலை இல்லாததால் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் வறுமை குடி கொள்கிறது; அந்த வறுமையை இந்துமதம் வேடிக்கைப் பார்த்து சிரிக்கிறது ! இந்து மதத்திலே உண்மை பொய் உரை, கேள்வி ஆகியவைகள் என்பதே கேலிக் கூத்தானது ! வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பது போல உயர்சாதிக்காரன் சொல்வதே உண்மையாக இங்கே நிலை நிறுத்தப்படுகிறது! எப்படி என்பீர்கலேயனால் இந்தியாவின் உயர் பதவிகளில் பெரும்பாலும் பிராமினர்களே இருக்கிறார்கள்; அது நீதித்துறையானாலும் சரி, ஆட்சி அதிகாரம் ஆனாலும் சரி ! ஆட்சி அதிகாரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் பங்கு கொள்ளத்தானே தனித் தொகுதி முறை இருக்கிறதே என்று நீங்கள் வாதிடுவீர்களேயானால், தனித்தொகுதியில் யார் நிற்க முடியும் என்றால் "தேவிக்கு பிரியமானவன் பூசாரி" ஆவதைப் போல சோனியாவுக்கும், அத்வானிக்கும், கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் வேண்டியவர்கள், ஆடுகளைப் போல தலையாட்டுபவர்கள் அங்கெ நின்று வெற்றி பெறலாம்! அவர்களால் தலித்துகளுக்கு எந்தவித பிரயோஜனமும் கிடையாது, அதனால் தான் புரட்சியாளர் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை முறையை வலியுறுத்தினார். பத்திரிக்கைத் துறைகளில் செய்திகளை இறுதி செய்யும் இடங்களில் பிராமினர்களே இருக்கிறார்கள், எந்த செய்தியை உண்மையாக்க வேண்டும், எந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள், பொய்யான தகவல்களை அளித்தும், உண்மை செய்திகளை திரித்தும் வெளியிட்டு பொய் உரை எழுதுகிறார்கள். அதனால் நாட்டிலே எந்தவித முன்னேற்றமோ, மக்களிடம் எந்தவித விழிப்புணர்வோ உருவாகவில்லை !
சாதியின் மூலம் இந்துமதம் வறுமை, வன்மையை மட்டும் தீர்மானிக்கவில்லை; தலித்துகளின் விருப்பங்களை, அடிப்படி உரிமைகளைக் கூட தடுக்கிறது, நல்ல உடை அணிய முடியவில்லை , விரும்பிய வாழ்க்கையை வாழ முடிவதில்லை, விரும்பிய தொழிலை செய்ய முடிவதில்லை; விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய முடிவதில்லை ! தற்போது கூட ராமதாஸ் தலித் வாலிபர்கள் ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ், போட்டு வன்னியப் பெண்களை ஏமாற்றுவதாக சொல்கிறார்; அவருக்கு வன்னியப் பெண்கள் மீதோ, வன்னிய சமூகத்தின் மீதோ அக்கறை இல்லை; தலித்துகள் நல்ல உடை உடுத்துவது அவரது கண்ணுக்கு உறுத்துகிறது, மேலும் தமிழருவி மணியன் இன்னமும் ஒருபடி மேலே சென்று தலித் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஸூவிலிருந்து, பீட்டர் இங்கிலாந்து சட்டை வரை தோராயமாக கணகிட்டுப் பார்த்தால் எப்படியும் பத்தாயிரம் ரூபாய் பொருமானாதாக இருக்கும்; கோவணம் கட்டிக் கொண்டு வயலில் இறங்கி வேலைபார்க்கும் தலித் மக்களின் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள் என்று வேதனைப் பட்டு இருக்கிறார் ( நக்கீரன் - 29.12.2012 ) தமிழருவி மணியனுக்கு தலித் தலைவர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு ஆடை அணிவதுப் பிரச்சனை இல்லை; அவர்களைப் பின்பற்றி தலித் மக்களும் நல்ல உடை அணிந்து விட்டால் என்ன செய்வது என்று தான் அவரது ஆதங்கம். மேலும் தருமபுரியில் நடந்த தீவைப்பு சம்பவத்திற்கு சாதி மறுப்பு திருமணம் தான் காரணம் என்று சொல்கிறார்கள்; ஆனால் அங்கெ இருந்த தலித்கள் எல்லோரும் நல்ல நிலைக்கு வளர்ந்தவர்கள்; அவர்களின் வாழும் வாழ்க்கையை பொறுத்துக் கொள்ள முடியாத உயர் சாதிக்காரர்கள் செய்த நயவஞ்சகமே இதற்க்கு காரணம் என்பதற்கு சாட்சி அங்கெ கொளுத்தப்பட்ட வீடுகளில் கொள்ளைப்போன கோடிக்கணக்கான பணம், மற்றும் நகைகளே.
அப்படியே கூட அங்கே நடந்த கலவரத்திற்கு சாதி மறுப்பு திருமணம் தான் காரணம் என்றால் இந்த கொடுமைக்கு காரணம் சாதியே; அதன் ஊடாக இந்து மதமே! இந்துமதத்தில் மட்டும் தான் சாதி இருக்கிறதா? என்றால் இசுலாமிய மதத்திலும் உள்ளது; சீக்கிய மதத்திலும் இருக்கிறது இன்னபிற மதங்களிலும் உள்ளது! ஆனால் இந்துக்கள் சாதிக்கு கொடுக்கும் முக்கியத்தை, மற்றவர்கள் கொடுப்பதில்லை! ஒரு இசுலாமியரிடம் நீங்கள் யார் என்று கேட்டால், அவர் நான் இசுலாமியர் என்று சொல்வார்; அதோடு நமக்கு மனநிறைவு கிடைத்துவிடும். மேலும் அவரிடம் நீ சன்னியா? ஷேக்கா? சையதா? காபுக்கா? பிஞ்சாரியா? என்று கேட்கமாட்டோம். ஒரு சீக்கியரிடம் நீ யார் என்று கேட்டால் வர் நான் சீக்கியர் என்று சொல்வார்; அதற்க்கு மேலும் அவரிடம் நாம் நீ ஜாதா? ரோடாதா? ஜ்பியா? ராம்தாசியா? என்று கேட்கமாட்டோம் ஆனால் ஒரு இந்துவிடம் மட்டும் நான் இந்து என்று சொன்னாலும் அவன் என்ன சாதி என்று அறிய ஆசைப்படுகிறீர்கள்; அவன் சாதியை அறியாமல் அவன் எப்பேர்ப்பட்டவன் என்று நீங்கள் உணர்ந்து கொள்ள மாடீர்கள். மேலும் சாதிக்கட்டுப்பாட்டை மீறுபவர்களை இசுலாமிய மதமோ, சீக்கிய மதமோ சாதியை விட்டு ஒதுக்கி வைப்பதில்லை; ஆனால் இந்து மதத்தில் சாதிக் கட்டுப்பாட்டை மீறினால் சாதியை விட்டு விளக்கி வைத்து விடுவார்கள். இதிலிருந் புரிந்த கொள்ளலாம் இந்துக்கள் சாதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை. இதைவிட இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது இந்துக்கள் அல்லாதோரின் சாதிக்கு மத ஆதரவு கிடையாது; இந்துக்களின் சாதிக்கு அடிப்படையே மதம் தான் ( புரட்சியாளரின் "சாதி ஒழிக்க வழி" நூல்)
இந்து மதத்தில் சாதி மறுப்பு திருமணத்திற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், குறிப்பாக ஓர் தலித் மற்றொரு உயர்சாதிப் பெண்ணை திருமணம் செய்வதை ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் இந்து மதத்திலே ரத்த சொந்தங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்து மதத்தில் சம்பந்தி உறவு என்பது ரொம்ப முக்கியமானது; சம்பந்தியை தவிர்த்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள்; அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவன் தனக்கு சரி நிகராக அமர்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள்; அதற்க்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் நாகரிகமாக இருக்கமாட்டார்கள் என்று. இதற்க்கு புரட்சியாளர் அவர்கள் மறு கேள்வியை எழுப்பி இருக்கிறார்; அவர் எழுப்பிய கேள்வி தாழ்த்தப்பட்டவர்கள் நாகரிகமற்றவர்கள் என்றால் அவர்களை நாகரிகப்படுத்த ஒரு பாதிரிமார் எடுக்கும் முயற்சியை ஏன் ஒரு இந்து எடுப்பதில்லை? அந்த முயற்சியை ஒரு இந்து எடுத்தால் அவர்கள் நாகரிகம் அடைவார்களா? மாட்டார்களா? என்று கேட்டு இருக்கிறார். புரட்சியாளரின் கேள்விக்கு இன்றுவரை பதிலே இல்லை. எந்த ஒரு இந்துவும் இதற்க்கு பதில் சொல்லமாட்டான்; தாழ்த்தப்பட்டவர்கள் நாகிரிகமாக இருக்க வேண்டும் அவர்கள் விரும்பவில்லை; அப்படி அவர்களும் நாகரிகம் அடைந்து விட்டால் அது இந்துக்களுக்கு பெரிய ஆபாத்தாக முடியும் அல்லவா! அதனால் அவர்கள் இதற்க்கு பதில் சொல்ல மாட்டார்கள். பள்ளத்தில் விழுந்த ஒருவனை மேலே தூக்க வேண்டுமானால் அவனுக்கு நிகராக நாமும் வளைந்து கொடுத்து நம்முடையை கையை அவனுக்கு கொடுக்க வேண்டும். அப்படித்தான் நாகரிகம் இல்லாத தாழ்த்தப்பட்டவர்களை தூய்மைப் படுத்த வேண்டுமானால் இந்துக்களும் அவர்கள் இருக்கும் சேரிக்கு செல்ல வேண்டும். அதை இந்துக்கள் விரும்பவில்லை.
மேலும் இந்து மதத்திலே தான் அதிக சாதிக்கலவரங்கள் நிகழ்கின்றன; மேலும் இந்து மதத்திலே உயர்சாதி என்பது பிராமிணர்கள் என்று சொல்கிறாகள். ஆனால் இதுவரை பிராமிணருக்கும், வன்னியருக்கும் கலவரம் நடந்தது என்றோ, பிராமிணருக்கும், பறையர்க்கும் கலவரம் நடந்தது என்றோ, கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? நான் கண்டதுமில்லை; கேள்விப்பட்டதும் இல்லை; காரணம் இடைநிலை சாதிகள் மோதிக்கொண்டு இருக்கும்வரை பிராமிணருக்கு எந்தவிதத் தொந்தரவோ, இந்துமதத்திற்கு எந்த ஆபத்தோ கிடையாது; அதனால் தான் ஊருக்கு ஊரு சாதி; சாதிக்கு பல உபசாதி என்று உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். சாதியை உருவாக்கியது இந்துமதம் என்றாலும், சாதியை மனிதர்களிடம் புகித்தியது பிராமிணர்கள் என்றாலும், பிராமிணர்கள் நேரடியாக கலவரத்திலே ஈடுபடுவது கிடையாது; தம் மதத்திலே நடக்கும் கலவரத்தை எண்ணி வெட்கப்படுவதும் கிடையாது; மாறாக வேடிக்கைப் பார்த்து ரசிக்கிறார்கள்; பிராமிணர்கள் நலமுடன் இருக்க இடைநிலை சாதிகளை தூண்டிவிட்டு தாழ்ந்த சாதி மக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை திட்டமிட்டு நிகழ்த்துகிறார்கள்; அதனால் தான் சொல்கிறேன் சாதி ஒழியவேண்டும் என்று; பிராமிணர் ஒருவர் நலமுடன் இருக்க வன்னியரும், பறையரும் மோதிக்கொள்ளலாமா? அதனால் தான் சொல்கிறேன் சாதி ஒழியவேண்டும் என்று; தம் மதம் தூய்மையாக இருக்கவேண்டும் என்ற நோக்கமோ, தம் நாடு சிறந்த நாடாக இருக்கவேண்டும் என்ற நோக்கமோ அவர்களுக்கு கிடையாது; தாம் நலமுடன் இருக்கவேண்டும், தம்முடைய ரத்த சொந்தங்கள் நலமுடன் இருக்கவேண்டும் என்ற சுயநலம் மட்டுமே அவர்களுக்கு உரியது ! ஒரு சிலருக்காக நாம் பலியாக்க முடியுமா? அதனால் தான் சொல்கிறேன் சாதி ஒழியவேண்டும் என்று !
சாதி, சாதி கலவரங்களை மட்டும் உருவாக்கவில்லை, பரம்பரை பகையையும் உருவாக்குகிறது; எப்படி என்றால் பண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற "ரோஸ்" "கிராமவெல்" போர்களில் தற்கால ஆங்கிலேயர்களின் மூதாதைகள் இருபிரிவாக நின்று மோதிக் கொண்டார்கள்; ஆனால் அவ்வாறு போராடியவர்களின் சந்ததிகள், தற்கால ஆங்கிலேயர்கள் பழமைகால போரையே மறந்துவிட்டார்கள்; பழம் பகையை பாராட்டிக் கொள்ளாமல் ஒற்றுமையோடு இருக்கிறார்கள்; ஆனால் இந்தியாவில் தற்கால பார்ப்பனார்களின் மூதாதைகள் இதர சாதியினருக்கு செய்த கொடுமைக்கு, தற்கால பார்ப்பனர்கள் பார்ப்பனர் அல்லாதோரால் பகைமையோடு பார்க்கபடுகிரார்கள் ( புரட்சியாளரின் "சாதி ஒழிக்க வழி" நூல்) இன்னபிற உறர்சாதிக்காரர்களும் தாழ்த்தப்பட்ட மக்களால் பகமையோடு பார்க்கப்படுகிறார்கள் ! நேற்றைக்கு என் தந்தை பகைமை பாராட்டினார்; இன்று நானும் பகைமை பாராட்டுகிறேன்; நாளை என் மகனும் பகைமை பாராட்டுவான் ! இதை தான் சாதி விரும்புகிறது; இந்துமதம் விரும்புகிறது அதனால் தான் சொல்கிறேன் சாதி ஒழியவேண்டும் என்று ! பிராமினர்களும் தன்னை இந்து என்று சொல்கின்றனர்; தாழ்த்தப்பட்ட சாதியினரான பறையர்களும் தன்னை இந்து என்று சொல்கின்றனர்; இன்னபிற இடைநிலை சாதியினரும் தன்னை இந்து என்று சொல்கின்றனர்;ஆனால் இந்துமதம் எல்லோருக்குமான மதம் அல்ல; இந்துமதம் எல்லோருக்குமான மதமாக இருந்திருந்தால் ஒரு இந்து, இன்னொரு இந்து வீட்டிற்கு தீ வைப்பானா? ஒரு இந்துவின் வாயில் இன்னொரு இந்துவே மலத்தை திணிப்பானா? இப்படிபட்ட அவலங்கள் இசுலாமிய மதத்திலோ, சீக்கிய மதத்திலோ இன்னபிற மதங்களிலோ நடந்தது உண்டா? இந்துக்கள் அல்லாதோரின் மதங்களில் பிரிவினை இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமைக்கு, சகோதரத்துவக்கு வழி செய்ய அந்த மதங்கள் அடிப்படையாக இருக்கின்றன; ஆனால் இந்துமதத்தின் அடிப்படை வாதமே பிரிவினை தான் அதனால் தான் சொல்கிறேன் சாதி ஒழியவேண்டும் என்று !
சாதி இன்று பல்வேறு பரிணாமங்களை தொட்டு வளர்ந்து வரும் விஷச்செடி! சாதி ஒழிப்பு இயக்கங்கள், தீண்டாமை கொடுமைக்கு எதிரான இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், சனநாயக சக்திகள், மனிதநேய விரும்பிகள் இப்படி எத்தனையோ இயக்கங்கள், அமைப்புகள் இருந்தாலும் சாதியத்தின் மீது இன்னமும் சின்ன சிராய்ப்புக் கூட விழவில்லையே ஏன்? இது ஒரு இயல்பான, எதார்த்தமான ஆதங்கமான கேள்வி! அதற்க்கான பதிலும் இருக்கத்தான் செய்கிறது, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களின் மனங்களில் புரையோடிக் கிடக்கின்ற சாதியத்தை சாய்ப்பது அல்லது வேரறுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதே ! ஏற்றுக்கொள்கிறேன், சாயக்கமுடியாது, வேரறுக்க முடியாது ஆனால் வளராமல் தடுக்க முடியுமல்லவா? ஏன் வளர்கிறது? நவீன யுக்தியையும் பயன்படுத்தி வளர்கிறதே எப்படி?ஏன்? செல்போன், இணையம், ஐ பேட், இவை எல்லாவற்றிலும் சாதியம் இருக்கத்தானே செய்கிறது. எங்கிருந்து வளர்கிறது? தடுக்க என்ன வழிமுறை இருக்கிறது? என்பது தான் நம்முன் கிடக்கும் மிகப்பெரிய சவாலான கேள்வியும் கூட ! சாதியம் உயிர்ப்போடு இருக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மூன்று காரணங்களை முக்கியமாக சொல்லலாம் ஒன்று சுயசாதிப் பற்று, மற்றொன்று மற்றவர்களை அல்லது தம்மை விட பலவீனமானவர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆதிக்க எண்ணம், இன்னொன்று மனிதன் வாயில் மனிதனே மலம் திணித்தாலும் அண்டைவீட்டார், எதிர்வீட்டார் என எல்லோரும் எனக்கென்ன என்ற மனநிலையில் இருப்பது. இந்த எண்ணங்களை இந்துமதம் ஊக்குவிக்கிறது, பயிற்றுவிக்கிறது என்றுகூட சொல்லலாம். இந்துமதத்தின் வேதநூல்களில் சாதி மலிந்து கிடக்கிறது; அப்படிப்பட்ட வேதநூல்கள் இறைஅருள் பெற்ற முனிவர்களாலும், மகான்களாலும் எழுதப்பட்டது என்று மக்களை நம்ப வைத்திருக்கிறது! சாதியின் மீதான நம்பகத்தன்மையை உருவாக்க, அந்த நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்த்துப் போகாமல் இருக்க சாதி கடவுளின் கிருபை என்று இந்து மதம் புரளியை கிளப்புகிறது. அந்த நம்பிக்கையில், கடவுளின் மீதான பற்றினாலும், அச்சத்தினாலும் இன்று பெரும்பான்மை மக்கள் சாதியை ஆதரிக்கவே செய்கிறார்கள், ஆகவே அவர்கள் பெரும்பான்மையினர் என்று வைத்துக் கொள்வோம், அந்த வகையில் சாதியை எதிர்ப்பவர்கள் சிறுபான்மையினரே ! ஒருசாரார் நடுநிலை வகிக்கிறார்கள். சாதியை பற்றி பேசாமல் இருந்தாலே சாதி ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். சாதியை ஆதரிப்பவர்களை விட நடுநிலை என்ற போர்வையில் இருப்பவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள் அவர்களின் மவுனம் பெரும்பான்மை கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும்; ஏன் எனில் சாதியை விரும்பவில்லை என்றால் எதிர்க்கலாம்; ஆனால் சாதியை எதிர்ப்பவர்களிடமும் பலன் எதிர்பார்ப்பதால் தான் அவர்கள் நடுநிலை வகுக்கிறார்கள் என்பதே பொருள்.
சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன இந்தியாவில் இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக்கிணற்றில் நீர் எடுக்க முடியவில்லை; பொது சாலையில் நடக்க முடிவதில்லை; நல்ல உடை அணியமுடிவதில்லை; நல்ல வாழ்க்கை வாழ முடிவதில்லை; விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை; அச்சில் ஏற்ற முடியா எண்ணற்ற தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறுகின்றன; இவை அனைத்திற்கும் காரணம் சாதியே !அதோடு மட்டுமில்லாமல் நான் பாதிக்கப்படுகிறேன் என்பதாலோ, என் சாதியினர் பாதிக்கப்படுகின்றனர் என்பதாலோ நான் சாதி ஒழிப்பை பற்றி பேசவில்லை அப்படி பேசினால் அதற்குப் பெயர் சாதி ஒழிப்பும் அல்ல ! உலகில் பல்வேறு நாடுகளில் ஆட்சிக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது, ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு புரட்சி இதுவரை நடக்கவில்லை; அப்படியானால் இங்கே தூய்மையான ஆட்சி நடக்கிறதா? அப்படி ஒரு புரட்சி நடக்காத வரை இந்தியா எந்த விதத்திலும் முன்னேற வாய்ப்பே இல்லை, அதுபோலவே இங்கே புரட்சி நிகழவும் வாய்ப்பே இல்லை, ஏனெனில் இங்கே சாதி ரீதியாக ஒன்றுபாடுவார்கள், மத ரீதியாக ஒன்றுபாடுவார்கள் ஆனால் மனிதநேய ரீதியாக ஒன்றுபடமாட்டார்கள்; சாதியை வைத்தோ ஒருவனின் நம்பகத்தன்மையை அல்லது அவனது குணாதிசயங்களை தீர்மானிக்கிறார்கள். சாதி தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் பாதிக்கவில்லை, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது; ஒட்டுமொத்த நாட்டின் பிரிவினைக்கே வித்திடுகிறது; அதனால் தான் இந்தியா இன்னமும் ஒரு தேசம் என்ற அந்தஸ்த்தை அடைய கூட அருகதை அற்று கிடக்கிறது! சாதியின் முன் நீதியே மண்டியிடும் அவலம் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் அரங்கேறா கொடிய நிகழ்வாக இருக்கிறது. இந்தியாவில் ஊழல், கொள்ளை, கொலை, வன்புணர்வு, தீண்டாமைக் கொடுமைகள் இவை அனைத்தும் அன்றாட நிகழ்வாகிவிட்டாலும் ஒட்டுமொத்த தேசமக்கள் ஏன் இதுவரை ஓரணியில் திரளவில்லை? அதற்க்கு காரணம் என்ன? அவர்களுக்கு இடையில் இருக்கும் தடுப்பு சுவர் எது? இவை எல்லாவற்றிற்கும் காரணம் சாதியும் அந்த சாதியை ஆதரிக்கும் இந்துமதமுமே...ஆகவே ஒருநாட்டின் வளர்ச்சியை தடுக்கும், ஒரு நாட்டின் மக்களை பிரிவினைப்படுத்தும் சாதி வேண்டுமா?
இப்போது சொல்லுங்கள் ....சாதி ஒழிந்தால் நல்லதா?
ஒழியவில்லை என்றால் நல்லதா?
(உதவிய நூல் : புரட்சியாளர் அம்பேத்கரின் "சாதி ஒழிக்க வழி")
- அங்கனூர் தமிழன் வேலு