வெள்ளி, 19 அக்டோபர், 2012

சாதி சொல்லும் நீதி !


கல்லில் சிலைவடித்து
கண்டதெல்லாம் கடவுளாக்கி
கடும் விஷமாம் சாதியமைத்து
கணக்கில்லாக் கொடுமைகளுக்கு
காரணமாம் வர்ணம் தீட்டி
கயநெறி சொன்னவர் எல்லாம்
நாட்டை ஆள திண்ணமாய்
வந்தானே!

காடு கரம்பெல்லாம் உழைத்து
கண்ணீரையும், செநீரையும் சிந்தி
கண்டத்தையே காக்கும் உழவன்
எல்லாம் தாழ்ந்தவனாம் ;
உழைத்து வாழ வக்கில்லாமல்
கடவுளிடம் பேசுவதாக கூறி
கண்டதையே பேசி காசு பார்க்கும்
சோம்பேறிகள் உயர்ந்தவனாம் !

கல்லுக்கு கற்பூரம் காட்ட ஒருசாதி !
கழிவறை சுத்தம் செய்ய ஒருசாதி !
செருப்பு தைக்க வேண்டுமாம் ஒருசாதி;
அந்த செருப்பை போட அவனுக்கு
உரிமையில்லையாம் அதுவும் சாதி !

கிணறு வெட்ட வேண்டுமாம் ஒருசாதி
அதிலே அவன் தண்ணீர் எடுத்தால்
தீட்டாம் அதுவும் சாதி !
ரோடு போட வேண்டுமாம் ஒருசாதி;
அந்த ரோட்டிலே அவன் நடந்தால்
காலை வெட்டுவேன் என்பானாம்
அதுவும் சாதி !

முகசவரம் செய்ய வேண்டுமாம் ஒருசாதி;
அவன் முகத்திலே விழித்தால்
தீட்டாம் அதுவும் சாதி !
வீதியெல்லாம் அபகரிப்பான் அது சமூகநீதி ?
அந்த வீதியை சுத்தம் செய்பவனிடம் மட்டும்
பார்ப்பானாம் சாதி ! இது என்னடா நீதி?

அரசனானாலும், ஆண்டியானாலும்
செத்தப்பின் நாறத்தான் செய்யும் பிணம்
அந்த பிணத்தை எரிப்பவனும், அந்த
பிணத்தை சுத்தம் செய்பவனும்
செத்தப்பின் சுடுகாடு செல்ல இல்லையே
ஒரு பொதுவீதி !

கழிவறை சுத்தம் செய்ய வேண்டுமாம் ஒருசாதி;
அவன் அருகிலே சென்றால் நாற்றம் எடுக்கும்
என்பானாம் இதுவும் சாதி !
நாற்று நடவேண்டுமாம் ஒருசாதி ;
அந்த நாற்று நடுபவன் எல்லாம்
நாதி அற்றவற்றவனாம் இதுவும் சாதி !

கறுத்த நெஞ்சம் கொண்டு ;
கல்லிலே கடவுள் கொண்டு;
கயநெறி ஊருக்கு சொல்லி;
கன்னக்கோல் உருவம் தைத்து;
உயர்ந்தவன் என்றும்; தாழ்ந்தவன்
என்றும் உபதேசம் சொல்லும்
இந்துத்துவத்திற்கு இதுதானே
நீதி.....

------------------------------
அங்கனூர் தமிழன்வேலு

வியாழன், 11 அக்டோபர், 2012

சமூக நல்லிணக்கத்திற்கான வழிகாட்டி இசுலாமியம் !



தந்தை பெரியார் அவர்களை போற்றக்கூடிய நான், அவர் வழியில் நின்றுக் கொண்டிருக்கும் நான்,  சாதி, மதத்தின் பெயரால் மானுடம் நசுக்கப்படுகிறது என்று மூர்க்கமாக முழங்குகின்ற நான், சாதியும், ஆதிக்கமும், அடக்குமுறையும், உருவாக மூலக்காரணி, மதம்; அந்த மதத்தின் வித்துக் கடவுள், அவன் ஒரு அயோக்கியன், சமூகநீதி தவறியவன், பாரபட்சம் மிகுந்தவன் என்று அழுத்தமாக பேசுகின்ற நான் இசுலாமியத்தை மதிப்பதும், நபிகள் நாயகம் அவர்களை பின்பற்றவேண்டும் என்று விரும்புவது கடவுள் மீது உள்ள பற்றினால் அல்ல; திருக்குர் ஆனில் சொல்லப்பட்டுள்ள சமூக  நல்லிணக்கத்திற்காக. இசுலாமியத்தைப் பற்றி பேசுகிற இதே வேளையில் கூட கடவுள் மறுப்பிலே உறுதியாக இருக்கிறேன். நாம் ஏன் கடவுளை மறுக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம்? கடவுள் இல்லை என்பதாலா? இல்லை இல்லை கடவுள் இருக்கிறார் என்பதற்கு எப்படி ஆதாரம் இல்லையோ அப்படியே கடவுள் இல்லை என்பதற்கும் ஆதாரம் இல்லை. இருந்தும் ஏன் கடவுளை எதிர்க்கிறோம். கடவுள் இருக்கட்டும் பத்திரமாக இருக்கட்டும், நலமாக இருக்கட்டும் நாட்டிலே கொலைக் கொள்ளை, கற்பழிப்பு, ஊழல், வறுமை இவை  எல்லாம் அன்றாட நிகழ்வாகி விட்டாலும் எந்தவித சலனமும் இல்லாமல் அவர் சந்தோஷமாக இருக்கட்டுமே. இசுலாமியம் கடவுளை உறுதியாக நம்புகிற மார்க்கம்; நான் கடவுளை சுத்தமாக நம்பாத நாத்திகன் ; இப்படி முரண்பாட்டோடு இசுலாமியத்தை ஏன் ஆதரிக்கவேண்டும்?

ஒரு பிராமிணனை பார்த்தால் ஒரு தாழ்த்தப்பட்டவன் கும்பிடுறேன் சாமி என்று சொல்லவேண்டும்; அவன் பதிலுக்கு என்ன சொல்வான் தேவிடியாள் மகனே என்று சமஸ்கிருதத்திலே சொல்வான் இதுதான் இந்துமதம். ஆனால்  இசுலாமியம்  என்ன சொல்கிறது. அன்பும், அமைதியும் தழைத்தோங்க வேண்டும்; உலகில் சாந்தியும் சமாதானமும் உருவாக வேண்டும், அதற்க்கு தனிமனித வழிபாட்டை தவிர்க்க வேண்டும். ஆதிக்கம் நிலவ, அடிமைத்தனம் உருவாக, வன்முறை உருவாக வர்க்கப்பேதம் நிலவ, ஆணாதிக்கம் மேலோங்க சாதி சண்டை உருவாக மூலக்காரணம் என்னவென்று , இதற்க்கெல்லாம் வித்து எங்கே இருக்கிறது என்று ஆராய்வோமானால் தனிமனித துதிபாடல் எனும் தனி மனித வழிபாடே ஆகும். அதைத்தான் தவிர்க்கிறது இசுலாமியம், தனிமனித வழிபாட்டை பெரும் பாவசெயளாக கருதுகிறது. இன்றியமையாத கொள்கையாக பிரகடனப்படுத்துகிறது.1400 ஆண்டுகள் முன்பாக வாழ்ந்த நபிகள் நாயகம் அவர்கள் கடுமையாக இதை வலியிருத்தினார். அதனால் இசுலாமியத்திர்க்குள்   எத்தனைப் பிரிவுகள் இருந்தாலும் யாருக்கும் நபிகள் அவர்களுக்கு ஒரு சிலை வைக்கவேண்டும் என்ற என்னம் கூட வரவில்லை. கருணாநிதி வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்று கோஷம் போடும் இந்த சமகாலத்தில்  கூட யாரும் நபிகள் நாயகம் வாழ்க, காயிதே மில்லத் வாழ்க என்று கோஷம் போடுவதில்லை, ஏன் இந்துமதத்திலும், கிருத்துவ மதத்திலும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தவில்லையா? என்று கேட்டால் எல்லா மதங்களும் சமூக  நல்லிணக்கத்தை  வலியுரித்துக்கின்றன. ஆனால் சமூக நல்லிணக்கம் சீர்குலைய என்ன காரணம்? போட்டிப் பொறாமை, ஆதிக்க எண்ணம் இவைதான். இவை எங்கே தொடங்குகின்றன. ஒருவன் தன்னை முன்னிலைப் படுத்தத் துடிக்கும் போது  தன்னை வாழ்த்தி அல்லது வணங்கிகொள்ள ஒருக் கூட்டத்தை  சேர்க்கிறான், அந்தக்கூட்டம் அவனக் கொடுக்கும் அர்ப்பக் காசுக்காக கூழைக் கும்பிடைப் போட்டுக் கொண்டு அடிமையாக அவனிடம் சரணடைகிறான். இதை தவிர்க்க அல்லது முறியடிக்க தான் இசுலாமியம் தனிமனித வழிபாட்டை தடை செய்கிறது.

கவுதம புத்தர் என்ன சொன்னார்? அவர் கடவுளைப் பற்றியே சொல்லவில்லையே. இயேசுநாதர் என்ன சொன்னார் தன்னை அவர் இறைத்தூதர் என்றுதானே சொல்லியிருக்கிறார். கவுதமப்புத்தர் ஒரேக் கடவுள் என்றும் சொல்லவில்லை; ஓராயிரம் கடவுள் என்றும் சொல்லவில்லை; ஆனால் உலகிலேயே அதிக சிலை நிறுவப்பட்டது. கவுதமப்புத்தருக்குத்தான். கவுதமப்புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று இந்துமயமாக்கியதால் இன்று ஒன்னரை லட்சம் அப்பாவிமக்களை கொன்று குவித்த படுபாதக கொலைவெறி மதம் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது பவுத்தம். கவுதமப்புத்தர் காட்டிய தனிமனித ஒழுக்கத்தை பின்பற்றியிருந்தால் இவ்வளவுப் பெரிய அழிவு நிகழ்ந்து இருக்குமா?

உலகில் சமத்துவத்தை விரும்புபவர்கள் ஆதிக்கத்தை எதிர்ப்பார்கள்; ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் அடக்குமுறையை கண்டிப்பார்கள்; அடக்குமுறையை கண்டிப்பவர்கள் தனிமனித துதிபாடலை நிச்சயமாக எதிர்ப்பார்கள்.இசுலாமியம் மிகப்பெரிய பாவசெயளாக எதை பட்டியல் எடுக்கிறது எண்டு பாருங்கள் : இணைக் கற்ப்பித்தல், தனிமனித வழிபாடு, விபச்சாரம், கொலை, குழந்தைகளை கொலைசெய்தல், வாக்குறுதி மீறல், சாட்சியத்தை மறைத்தல், லஞ்சம், நல்வழியை தடுப்பது, மது, சூதாட்டம், பெண்களின் உரிமையைப் பறிப்பது, வட்டிக்கு பணம்   கொடுத்தல், பிறர் பொருட்களை அபகரித்தல், சோதிடம், திருட்டு, விளைப்பொருட்களை அழித்தல், குழப்பம் செய்தல், பெற்றோரை துன்புறுத்தல், அவதூறுப் பரப்பல், போன்றவற்றை பெரும் பாவசெயளாக பிரகடப்படுத்துகிறது. இதற்காக இசுலாமியத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதில்லை, அது சொல்லும் கொட்ப்பாடுகளை பின்பற்றினாலே உலகில் அன்பும் அறனும், சகோதரத்துவமும் தழைத்தோங்கும். மேலும் சமூக நல்லிணக்கத்தை விரும்பும் ஒவ்வொருவரும் மானுடத்தை விரும்புவார்கள். இதை திருக்குர் - ஆன் . இப்படி சொல்கிறது. : 

மனிதர்களே ! உங்களை ஒரு ஆண், பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்வதற்காகவே உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் படைத்தோம் -( திருக்குர் - ஆன் : 49 : 13)

அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து அல்லது தத்துவம் தான் இது. அது கடவுள் படைத்ததோ, அல்லது இயற்க்கை பரிணாம வளர்ச்சியோ  அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. கருத்து எற்றுக்கொள்ளகூடியது தானே. உதாரணமாக தமிழகத்தில் 7 கோடி மக்கள் இருக்கிறார்கள், ஒருக் குடும்பத்திற்கு  சராசரியாக 4 பேர் வீதம் என்றால், தமிழகத்தில் முதன் முதலில் 1 கோடியே 75 லட்சம் பேரா பிறந்தார்கள்? எல்லோரும் ஒரு ஆண், ஒரு ஆனில் இருந்தே பிறந்து இருக்க முடியும். மார்க்சிய விதி என்ன சொல்கிறது ஒன்றில் இருந்து தான் மற்றொன்று பிறக்கும் எதவும் தானாக பிறந்துவிடாது. ஆக ஒரு ஆண், ஒரு பெண்ணில் இருந்து பிறந்த நமக்குள் எப்படி வந்தது சாதி, மதம்.? சிந்தித்துப் பாருங்கள்...

கவுதமப் புத்தரின் கோட்ப்பாடும் , மார்க்சிய விதியும் என்ன சொல்கிறது " தனிமனித விடுதலையின் மூலமே சமூக விடுதலை அடைய முடியும். என்று வலிமையாக பிரகடனப்படுத்துகின்றன. அந்த வகையில் பார்ப்போமானால் எப்படி தனிமனித விடுதலையின் மூலம் சமூக விடுதலைப் பெற முடியுமோ அப்படித்தானே தனிமனித சீர்கேட்டின் மூலம் சமூக சீர்கேடு உருவாகிறது. சமூக சீர்கேட்டை தடுக்க தனிமனித சீர்கேட்டை தடுக்கவேண்டும்; தனிமனித சீர்கேட்டை தடுக்க தனிமனித வழிபாட்டை தடுக்கவேண்டும். அதைத்தானே இசுலாமியம் வலியிருத்துகிறது. மேலும் இந்துமதம் என்ன சொல்கிறது. ராமன் பிறக்கும் பொது பூமியில் வசந்தம் உண்டானது. மரங்கள் எல்லாம் ஆடின. வைகுண்டத்தில் மாற்றம் நிகழ்ந்தது; கிறிஸ்துவம் என்ன சொல்கிறது இயேசுநாதர் பிறக்கும்போது வானில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் ஜெருசிலம் நோக்கி சென்றன. அவர் பிறந்த மாட்டுத்தொழுவத்தில் சூரிய ஒளி வந்தது. அவர் இறந்த மூன்றால் நாள் உயிர்த்தெழுந்தார். என்று சொல்கிறது. இதை எல்லாவற்றையும் இசுலாமியம் புறக்கணிக்கிறது. பிறப்பையும் இறப்பையும் சாதாரண நிகழ்வாகவே கருதுகிறது.எப்போது ஒருவன் தன பிறப்பை பிரமாண்டப் படுத்தவேண்டும் என்று நினைக்கிறானோ அப்பொழுதே அவனுக்குள் ஆதிக்க எண்ணம் உருவாகிவிடுகிறது.

தன்னோடு வாழும் சகமனிதனை சாதியாக பிரித்துவைத்து உயர்வு தாழ்வு கர்ப்பிக்கவே இந்துமதம் உருவாக்கப்பட்டது.மனுதர்மம் எனும் தீரக்கருமத்தை படைத்தார்கள். கிருஸ்துவ மதம் என்ன சொல்கிறது நீ எப்படிப்பட்டவனாகவும் இருந்துக்கொள், என்ன சாதியாகவும் இருந்துக்கொள் ஆனால் கிருச்த்துவனாக இரு என்கிறது. ஆனால் அங்கே தலித் கிருத்துவர், கிருத்துவ நாடார், என்ற பாகுபாடெல்லாம் இருக்கிறது. தனித்தனி சுடுகாடு முறையும் அந்த மதத்தில் தான் இருக்கிறது.ஆனால் இசுலாமியத்தில் மட்டும் தான் நீ எவ்வளவுப் பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அன்றாட பிழைப்புக்கே அள்ளப்படும் பாமரனாக இருந்தாலும் அவன் இசுலாமியன் என்ற ஒற்றை அடையாளம் தான். ஊரிலே தேரோட்டம் நடைபெறும் அப்பொழுது கடைசியாக அந்த ஏரியா  கவுன்சிலர் வருவார் அவர் வந்தவுடன் மக்கள் எல்லாம் வழிவிடுவார்கள் அவர் மட்டும் முன்னே சென்று அம்மனை தரிசிப்பார் இது இந்துமதத்தில். ஆனால் இசுலாமியத்தில் தொழுகையில் தோழர்கள் இருக்கும் பட்சத்தில் அந்த நாட்டின் மன்னரே வந்தாலும் அவர் கடைசியாக நிற்கவேண்டும். அகே யாரும் உயர்ந்தவர் அல்ல. யாரும் தாழ்ந்தவர் அல்ல. இதை வலியுறுத்தி வாழ்ந்துக் காட்டியவர் தான் நபிகள்.  மானுட சமூகத்திற்கே அன்பையும் அமைதியையும் போதித்தவர். அவர் வாழ்ந்த காலத்திலேயே தன அத்துனை சொத்துக்களையும் விட்டுவிட்டு மதீனா நோக்கி சென்றவர். இன்று நாம் யாரவது நாம் செய்வோமா? கடவுளை வழிபடுகிறேன் என்று சொல்லிவிட்டு மனைவிமக்களை வீதியில் விட்டுவிட்டு சென்றாலும் பாவசெயலாகவே கூறுகிறார்கள். உலகில் நடக்கும் அனைத்துக் குற்றங்களுக்கும் மூலக்காரனியே தனிமனித வழிபாடே அதை ஒழித்தால் ஒழிய நாட்டில் அன்பை நிலைநாட்டமுடியாது.

மனிதநேய வாதிகள் பின்பற்றவேண்டிய மார்க்கம் இசுலாமியமே என்றுக்கூறி முடிக்கிறேன் 
இசுலாமியத்தின் மீதான ஆய்வுகள் தொடரும்....

ஆய்வுக்கு உதவிய நூல் : (பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மனிதனுக்கேற்ற மார்க்கம்)

மனிதநேயத்துடன்....
அங்கனூர் தமிழன்வேலு... 

செவ்வாய், 9 அக்டோபர், 2012

ஏ ! அடிமை சமூகமே உனக்கு வெட்கமில்லையா?

ஏ ! அடிமை சமூகமே
உனக்கு வெட்கமில்லையா?
மானமில்லையா?
ஆண்டான் அடிமை
என்று அடங்கிக்கிடந்தாய்
ஆண்டாண்டாய் உன்னை
ஆளவைக்க வந்தவரின்
கைகளை ஆதரிக்க
மறந்தாய் ! இன்னும்
எத்தனை காலம்
இப்படி அடிமைப்பட்டே
கிடப்பாய்?

வரலாறு உன்னைப் பார்த்து
சிரிக்கிறது ! வாழ்க்கையோ
உன்னோடு வாழ மறுக்கிறது !
உன் பாட்டன் சானிப்பால்
குடித்தான்; அதனால் உனக்கு
மதிய உணவாய் மலத்தைக்
கொடுத்தான்; உனக்கு
மண்டியிட்டு, மானம் இழந்து
வாழக்கற்றுக் கொடுத்தது யாரடா?


அய்யா அழைத்தார் கொடிப்
பிடிக்க; ஓடினாய்,
கொடிப்பிடித்தாய்;
அம்மா அழைத்தார்
கோஷம் போட ஓடினாய்
கோஷம் போட்டாய்;
நம் அண்ணல் அழைத்தார்
ஆள வாடா; அதிகாரத்தைப்
பிடிடா என்றார் ! அப்போதும்
ஓடினாய்; காததூரம் ஓடினாய்
இன்று அவர்வழி வந்த
நம் அண்ணனும் அழைக்கிறார்
நாற்காலிக்கு ஆசைப்படு
என்கிறார்; மாட்டோம்; ஊருக்கு
ஓரமாயே வாழ்கிறோம் என்று
ஓடுகிறாய்; ஓடு ஓடு
ஓடிக் கொண்டே இரு
ஒருநாள் ஒட்டுத்துணிகூட
இல்லாமல் உன் உடல்
கூவத்தில் வீசப்படும் !!!

- அங்கனூர் தமிழன்வேலு

திருமாவுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா ரவிக்குமார்?

அண்ணன் ரவிக்குமார் அவர்களின் பேச்சு :
---------------------------------------------------------------
2, 3 நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னுடன் பேசினார். அவர் பேசும்போது, மத்திய மந்திரிசபையில் மாற்றம் நடைபெற உள்ளதே. அதில் உங்கள் தலைவருக்கு மந்திரி பதவி வாய்ப்பு வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அதற்கு நான், தி.மு.க. மந்திரிசபையில் இடம் பெறுவதில்லை என்று கூறியுள்ளது. ஆனால் நாங்கள் ஒரே உறுப்பினர் தான் உள்ளோம். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா என்று தெரியவில்லை என்று கூறினேன். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரே தலித் கட்சி நீங்கள் தானே அந்த வகையில் அந்த வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படலாம் அல்லவா என்று அவர் சொன்னார். காங்கிரசிற்கு நாங்கள் ஆதரவு அளிப்பதால் தான் ஆட்சி நடக்கிறது. நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற மன பிரம்மை எங்களுக்கு இல்லை என்று நான் கூறினேன். ஒரு நபர் என்று பார்க்காதீர்கள், ஒரே ஒரு உறுப்பினரை கொண்ட வாழப்பாடி ராமமூர்த்தி தான் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்தார்
 என்றார் அவர்.

எங்களை பொறுத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மட்டுமல்ல, பாராளுமன்றத்திலேயே இடம் பெற்றுள்ள ஒரே தலித் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். இதனை காங்கிரஸ் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

மந்திரி பதவி வேண்டும் என்றும் நாங்கள் கேட்கவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக உள்ள எங்களது சமூகத்திற்காக உரிமையைத்தான் கேட்கிறோம். தனியார் துறையிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அந்த மசோதா இன்னமும் சட்டவடிவம் பெறவில்லை. இவற்றை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு முன்வர வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் முலாயம்சிங் கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றாலும் மயாவதியின் ஆதரவு உள்ளது. இதனால் ஒரு வேளை ஆட்சியை இழந்தால் கூட இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்கள் உங்களை பெரும்பான்மையாக ஆட்சியில் அமர வைப்பார்கள்.
-------------------------------------------------------------------------------
திருமாவுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா?

தனியார் துறையிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது எங்களது சமூகத்திற்கான உரிமை. அதைத்தான் நாங்கள் கேட்கிறோம், அதை நிறைவேற்றும் பட்சத்தில் அரசுக்கு சிக்கல் ஏதும் வந்தால், முலாயம்சிங் கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றாலும் மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு உள்ளது. அந்த சட்டத்தை நிறைவேற்றினால் மாயாவதி அவர்கள் ஆதரவு தருவார்கள். அதையும் தாண்டி ஆட்சி கவிழ்ந்தால் அந்த சட்டத்தை நிறைவேற்றினால், அதற்காகவே இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்கள் உங்களை பெரும்பான்மையாக ஆட்சியில் அமர வைப்பார்கள் என்ற பொருள்படத்தான் அவர் பேசியிருக்கிறார். ஆனால் சில ஊடகங்கள் முட்டாள்தனமாக திருமாவுக்கு அமைச்சர் பதவி கேட்டதாகவும், அமைச்சர் பதவி கேட்பது எங்கள் உரிமை என்று அவர் பேசியதாகவும் செய்தி வெளியிட்டு உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலித் கட்சி என்ற அடிப்படையிலும் தலித் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் தனியார் துறையிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் கேட்டிருக்கிறார்.

இதில் என்ன தவறு இருக்கிறது?

தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு "சாட்டை " சாட்டை தான்


எம்.அன்பழகன் அவர்களின் இயக்கத்தில் இயக்குனர் பிரபு சாலமன் தயாரிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்து வெளிவந்திருக்கும் சாட்டை திரைப்படத்தை காணும் வாய்ப்பைப் பெற்றேன். ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே இதற்க்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று தூண்டுதல் இருக்கவேண்டும். அப்படித்தான் திரைப்படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலே விமர்சனம் எழுதவேண்டும் என்ற தூண்டுதல் எழுந்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு கனவு இருக்கும் தனக்கு வர இருக்கும் ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று. அந்த விதத்தில் ஆசிரியர்களுக்கே ஆசிரியராக பாடம் நடத்தி இருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். நாயகனாக தோன்றியிருக்கும் சமுத்திரக்கனி கதையின் பொறுப்பை உணர்ந்து பொறுப்புடன் வாழ்ந்து இருக்கிறார்.

படத்தின் முதல்க் காட்சியில் பள்ளிக்கு செல்ல அழும் மாணவன் பள்ளி முடிந்தவுடன் வானத்தை கையில் பிடித்த சந்தோசத்தில் ஓடி வருவது என்னை பழைய பள்ளி பருவத்திற்கே அழைத்து சென்றுவிட்டது. பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகள் தனியார் பள்ளிக்கு சென்றுவிடுகிறார்கள், அன்றாட வாழ்க்கைக்கே அள்ளப்படும் கூலித்தொழிலாளியின் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளியை விட்டால் வேறு கதியில்லை என்று சொல்லும் இடம் கிராமப்புற மாணவர்களின் உண்மை நிலையை சொல்கிறது. இந்த மாணவர்கள் எல்லாம் பன்றி மெயக்கத்தால் லாயக்கி, இவர்களை கழித்துக் கட்டிவிட்டு நல்லா படிக்கக்கூடிய மாணவர்களை சேர்த்துக் கொண்டால் நல்ல தேர்ச்சி விகிதத்தை காட்டலாம் என்று தம்பி ராமசுப்பைய சொல்ல மற்ற ஆசிரியர்களும் அதை ஆமோதிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையை அம்பலப் படுத்துகிறது. அதே இடத்தில் சமுத்திரக்கனி நல்லாப் படிக்கின்ற மாணவர்களை விட நல்லாப் படிக்காத மாணவர்களுக்குத்தானே நல்ல ஆசிரியர்களும், நல்ல பள்ளிகளும் தேவை என்று சொல்வது கிராமப்புற மாணவர்களின் எதிர்பார்ப்பை பிரித்திப்பலித்திருக்கிறார். மற்றொரு காட்சியில் தம்பி ராமையாவிடம் மாற்றமே நிலையானது. மாற்ற முடியாதது எதுவுமே இல்லை என்று சமுத்திரக்கனி சொல்வது மனித வாழ்வின் இயல்பை இயல்பாய் சொல்லி இருக்கிறார். மாணவர்கள் பல்லி தொடங்குவதற்கு முன் பிரேயருக்கு (தேசியகீத கூட்டத்திற்கு) கண்டிப்பாக வரவேண்டும் என்று கட்டளைப் போடும் ஆசிரியர்கள் தாமதமாகவே வருவார்கள் என்பதை சொல்லியிருப்பது சாட்டையடி. மாணவர்கள் தாமதமாக வந்தால் தண்டிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களே தாமதமாக வந்தால் என்ன செய்யலாம் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார். தவறு செய்யும் மாணவர்களை கடுமையாக தண்டிப்பதால் எந்த பயனும் இல்லை. அவர்கள் மீது அன்பு செலுத்தினால் வெற்றி பெறுவார்கள் என்பதைத்தான் படம் முழுக்க சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் மாணவரிடத்தில் எப்படி எல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்பதை பல இடங்களில் ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தி இருக்கிறார் இயக்குனர். கிழிந்த டவுசரில் மாணவன், அதிலே தபால் போடும் சக மாணவர்கள் என கிராமத்து வாசனையை வாசம் மாறாமல் காட்டி இருக்கிறார்.

நூலகப் பொறுப்பாளர் புத்தகங்களே வாங்காமல் வாங்கியதாக கணக்கு காட்டுவது, பள்ளிப் பொருட்களை ( டேபிள், நாற்காலிகள்) வீட்ட விசேசங்களுக்கு கொடுப்பது, சத்துணவுப் பொறுப்பாளரின் திருட்டுத்தனம், ஆசிரியர்களின் அடக்குமுறை, கண்மூடித்தனமான போக்கு உடைந்து கிடக்கும் தரைகள், தலைமை ஆசிரியரை உள்ளூர் ஆசிரியர்கள் தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது , என வரிசைப்படுத்தி இருப்பது அரசுப் பள்ளிகளின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பெண்கள் கழிவறையை சென்று பார்த்த மாணவனை தண்டிக்கும் ஆசிரியையை கண்டித்து, மாணவனை உற்சாகப் படுத்துவது, அதை ஆசிரியரின் அனுமதியோடு காணவேண்டும் என்று அறிவுருத்துவதும் சிறப்பு. நான்கு மதிப்பெண் பெற்ற மாணவனை பாராட்டுவதும், பத்து மதிப்பெண் எடுத்த மாணவனை உற்சாகப்படுத்துவதும் சல்யூட்ப் போட வைக்கிறது. மனிதனுக்கு சவாலான பருவம் என்றால் அது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பருவம் தான். தேர்வில் வெற்றிப் பெறவேண்டும், அந்த காலத்தில் தான் காதலும் வரும் அதை எப்படி கையாளவேண்டும் என்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி இருக்கிறார். மாணவர்கள் மீது நம்பிக்கை வைத்தால் எதையும் வென்று காட்டுவார்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார் சமுத்திரக்கனி. மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக வழக்கு வந்து மாணவியின் உறவினர்கள் தாக்கும் போது உண்மையை சொல்லாமல் அடிவாங்கி கொண்டு சிறைக்கு செல்வது சினிமாத்தனமாக இருக்கிறது. கொஞ்சம் நெருடல் தான். பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் கிராமத்து மாணவிகள் அதை வீட்டில் சொல்லாமல் இருப்பதற்கு, தம் படிப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தான் என்பதை அழுத்தமாக சொல்லி இருப்பது சிறப்பு. அதே மாணவியின் படிப்பை பெற்றோர்கள் நிறுத்தியவுடன் ஒரு பொறுப்பான ஆசிரியராக பெற்றோர்களிடம் பேசி படிப்பை தொடர செய்வது பாராட்ட வேண்டியது. ஸ்போர்ட்ஸ் டீம் தலைவராக பழனியை தேர்வு செய்வதற்கு ஒட்டுமொத்தப் பள்ளியே எதிர்த்தும், தன் தந்தையே வேண்டாம் என்று சொன்னாலும் அவனை தலைவராக தேர்வு செய்தது சிறப்பு. அதை உணர்ந்து அவன் பொறுப்பாக செயல்பட்டு வெற்றியை ஈட்டித்தருவது மாணவர்களின் இயல்பான குணத்தை காட்டுகிறது. மாணவர்கள் மீது நம்பிக்கை வைத்தால் எதையும் சாதிப்பார்கள் என்பதற்கு சிறந்த சாட்சியாக இருந்தது. அறிவழகி காதலை சொல்ல வரும் போது சமுத்திரக்கனிக்காக காதலியை பிடிக்கவில்லை என்று ஒதுக்குவதும், மறைமுகமாக பள்ளிப் பருவத்தில் படிப்பே முக்கியம் என்று சொல்லி சபாஸ் போட வைத்திருக்கிறார். மாணவப் பருவத்தில் காதலிக்கக் கூடாது என்று சொன்னதற்காகவே ஆயிரம் நன்றிகளை இயக்குனருக்கு சொல்லலாம். காமெடிக் காட்சிகளில் கிராமத்து வாசனை நம்மை வெகுவாக கவர்கிறது. விரசம் இல்லாத பாடல்களில் நம்மை கவர்கிறார். இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற பாடல் தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. தன்னை அழிக்கத் துடிக்கும் தம்பி ராமையாவுக்கு அடுத்த தலைமை ஆசிரியர் பதவிக்கு சிபாரிசு செய்வது மனிதனுக்கு இருக்கவேண்டிய உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது. இறுதியாக மாணவர்களை எப்படிப் புரிந்துக் கொள்வது என்பதை தம்பி ராமையாவுக்கு சொல்லும்போது நான்கு வைகையாக பிரிக்கிறார். பின்தங்கிய மாணவன், மந்தமான மாணவன், சுமாரான மாணவன், சூப்பர் பாஸ்ட் மாணவன் இதை புரிந்து கொண்டால் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது சுலபம் என்று சொல்லோ\யிருக்கிறார். இறுதியாக ஏணியை கூரையை நோக்கிப் போடாதீர்கள்; வானத்தை நோக்கிப் போடுங்கள் என்ற வசனம் இந்த வருடத்தின் சிறந்த தன்னம்பிக்கை வரிகள். உழைத்த உழைப்புக்கு பலனை எதிர்பாராமல், என் தேடல் பெரியது என்று சொல்லி கிளம்புவது சல்யூட் அடிக்க வைக்கும் காட்சி. கடுமையான தண்டனைகளால் எந்த மாற்றமும் நிகழாது என்று நீதித்துறைக்கே அறிவுறித்தி இருக்கிறார். சக மாணவனோடு யூனிபார்ம் போடாத மாணவனாக நின்று சிறப்பித்திருக்கிறார். இழப்புகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழக்கூடிய ஒன்றுதான். இழப்பை நினைத்து அழுதால் வெற்றியை நோக்கி நகரமுடியாது இழப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லி இருப்பது சபாஸ்....மொத்தத்தில் திரைப்படம் தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு "சாட்டை" சாட்டை தான்...
இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லவேண்டும் என்பதே எம் விருப்பம்...
----------------------------------------------------------------------------
கிராமத்து மாணவர்களின் நிலையை எடுத்து
சொன்னதற்கு 25 மதிப்பெண்ணும்,
பள்ளிப் பருவத்தில் காதல் கூடாது என்று சொன்னதற்கு
25 மதிப்பெண்ணும்,
கதையின் பொறுப்பை உணர்ந்து பொறுப்பாக நடித்த
சமுத்திரக்கனி உட்பட நடிகர்களுக்கு 15 மதிப்பெண்ணும்,
மாணவர்கள் மீது ஆசிர்யர்களும், பிள்ளைகள் மீது பெற்றோர்களும் நம்பிக்கை
வைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை அழுத்தமாக
சொன்னதற்கு 20 மதிப்பெண்ணும்,
கடுமையான தண்டனைகள் மாற்றத்தை நிகழ்த்தாது என்று
சொன்னதற்கு 5 மதிப்பெண்ணும்,
ஆக மொத்தம் 90 தொண்ணூறு மதிப்பெண்கள் வழங்கியுள்ளேன்....

வாழ்த்துக்களுடன்
அங்கனூர் தமிழன்வேலு

வெள்ளி, 5 அக்டோபர், 2012

திருமாவின் பொன்விழா மேடையில் நாராயணசாமி ! அச்சச்சோ தப்பு! தப்பு!! - கொக்கரிக்கும் உணர்வாளர்கள்


"ஆகாத மருமகள் கைபட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்" என்பது போல திருமாவளவன் செய்வதெல்லாம் குற்றம் என்று ஒரு தரப்பினர் வாய் சவடால் அடித்து வருகிறார்கள். அதுபோலத்தான் 04.10.2012 அன்று புதுவையில் திருமாவின் பொன்விழா கொண்டாடப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியின் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கலந்துக் கொண்டு திருமாவுக்கு வாழ்த்து சொன்னார். இது தான் பெரிய குற்றமாகிவிட்டது. ஒரு இணையதள ஆசிரியர் என்னை தொடர்புக் கொண்டு திருமாவளவன் பொன்விழாவில் நாராயணசாமி எப்படி பங்கு பெறலாம். காங்கிரஸ் ஈழத்துக்கு எதிரானது; ஈழத்தை அழித்ததே காங்கிரஸ் கட்சி தானே அந்த கட்சியின் நாராயணசாமி தமிழகத்தின் கூடங்குளம் உட்பட பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறாரே. அவரை எப்படி திருமாவளவன் அழைக்கலாம் என்று கேட்டார். நான் பொறுமையாக கேட்டுக் கொண்டு நான் பிறகு காரணம் சொல்கிறேன் என்றேன். அவருக்காகவும், கொக்கரிக்கும் உணர்வாளர்கலுக்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

அங்கே நடந்தது திருமாவளவன் அவர்களின் 50 ஆவது பிறந்தநாள் விழா. திருமாவுக்கு திருமணம் ஆகவில்லை, ஆகவே இந்த 50ஆவது பிறந்தநாளை அவரது திருமனவிழாவாக எண்ணித்தான் தமிழகமெங்கும் சிறுத்தைகள் கொண்டாடிவருகிறார்கள். திருமாவளவன் என்ற தனி நபருக்கு, நாராயணசாமி என்ற தனி நபர் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் என்ன தவறு என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பொது இடத்தில் தனக்கு வேண்டாதவர் வந்தால் கூட மரியாதை நிமித்தமாக வணக்கம் சொல்வதில்லையா? அப்படித்தானே இதுவும். கிட்டத்தட்ட அது ஒரு குடும்ப நிகழ்ச்சி அதிலே தனக்கு எதிர்க் கருத்து உடையவர் வாழ்த்தும் போது, எதிர்க் கருத்து உடையவர் என்பதாகே உதறி தள்ளி விடமுடியுமா? நல்லவேளை, திருமாவின் பொன்விழாவிற்கு நாராயணசாமி ஏன் வந்தார் னு கேட்டாங்க; திருமாவளவன் அவர்களின் தந்தை இறப்புக்கு ஜி.கே.வாசன் ஏன் வந்தார்னு கேட்கல அதுவரைக்கும் மகிழ்ச்சி.

இங்கே சில நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், தம் மக்களுக்கான எதிரிகளாக மூன்று பேரை பட்டியலிட்டார். முதல் எதிரி இந்துமதம், இரண்டவது எதிரி காந்தியடிகள், மூன்றாவது எதிரி தான் காங்கிரஸ் கட்சி. ஆனால் காந்தியடிகள் அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கிய காங்கிரஸ் அரசாங்கத்திலே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அமைச்சராக பங்கு பெற்று இருந்தார்.  இதை பொதுக் கண்ணோட்டத்தோடு பார்த்தால் முரண்பாடாகத்தான் தெரியும். ஆனால் அவர்தம் மக்களுக்காக தான் அந்த அமைச்சர் பதவியில் இருந்தார். அதன் பயன் முடிந்ததும் அந்த பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார். இரண்டு தந்தை பெரியார் அவர்களின் கொள்கை நிரந்தர எதிரியாக கருதப் பட்டவர் ராஜாஜி. ஆனால் தம் இரண்டாவது திருமணத்திற்கு ஆலோசனையே ராஜாஜியிடம் தான் தந்தை பெரியார் அவர்கள் கேட்டுக் கொண்டார். ஆக தந்தை பெரியார் அவர்கள் கொள்கை வேறு; குடும்பம் வேறு என்று மிக தெளிவாக பிரித்துப் பார்த்தே வந்திருக்கிறார். அடுத்தப் படியாக அமெரிக்காவிலே எதிர் எதிர் துருவங்களாக செயல்படும் பராக் ஒபாமாவும், ரோம்னியும் ஒரே மேடையில் விவாதம் செய்கின்றனர். ஒபாவுக்கு திருமணநாள் வாழ்த்தை ரோம்னி சொல்கிறார். இது ஒரு அவை நாகரிகம். மனித இயல்பே ஒழிய பெரிய குற்றமாக என்னால் கருத முடியவில்லை. அடுத்து இந்திய அரசியலுக்கு வருவோம். பாராளுமன்றத்திலே சோனியாவும், அத்வானியும் கருத்து மோதலை நடத்துவார்கள்; ஆனால் வெளியே இருவரும் கை குலுக்கி கொள்வார்கள்; ஒன்றாக விருந்துகளில் பங்கு பெறுகிறார்கள். தமிழ்நாட்டு அரசியலில் மட்டும் தான் எதிர்க் கருத்து கொண்டு இருந்தால் பார்க்கவே கூடாது, நேரில் கண்டால் கூட மரியாதை செய்யக்கூடாது என்ற நாகரிகள் எல்லாம் இருக்கிறது. கிட்டத்தட்ட இது ஜெயலலிதா பாலிசி. அவர்தான் தி.மு.க காரர்களை பார்த்து அ.தி.மு.க வினர் வணக்கம் சொல்லிவிட்டால் அடுத்தநாள் பதவி இருக்காது. என் சொந்தக் காரர்கள். மாமன் - மச்சான் இருக்கிறார்கள் மாமன் தி.மு.க, மச்சான் அ.தி.மு.க தங்கையை கட்டிக் கொடுத்திருந்தாலும் இருவரும் ஒன்றாக எந்த குடும்ப நிகழ்வில் கூட கலந்து கொள்வதில்லை. இது என்ன நாகரிகம் என்றே தெரியவில்லை.

சில நேரங்களில் திருமா இதற்க்கு விதி விலக்காக இருந்து இருக்கிறார். சிதம்பரம் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நேரடி மோதல் திருமாவும், பா.ம .க. பொன்னுசாமியும். பொன்னுசாமிக்கு ஓட்டுக் கேட்க வந்த ராமதாஸ் அவர்களை எதிரில் கண்டவுடன் நின்று நலம் விசாரித்துவிட்டு சென்றார். அடுத்து அ.தி.மு.க. அணியில் இருக்கிற கம்யுனிஸ்ட் கட்சியோடு, அ.தி.மு.க. அணியில் இருக்கிற ம.தி.மு.க வோடு, அ.தி.மு.க. அணியில் சேர இருந்த பா.ம.க. வோடு, அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு அளித்து வந்த பழ.நெடுமாறனோடு, அ.தி.மு.க. வுக்கு எல்லா வேலைகளையும் செய்து வந்த எம். நடராசனோடு தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், கூட்டணியைப் பற்றி கவலைப் படாமல், அரசியல் ஆதாயத்தை பற்றி கவலைப் படாமல், தேர்தலைப் பற்றி கவலைப் படாமல் ஆறு மாதம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் கைகோர்த்து களப்பணியாற்றி இருக்கிறார் திருமாவளவன். ஆனால் தமிழ் உணர்வாளர் என்ற முறையில் கூட சிலர் அவர் இருந்த உண்ணாவிரத மேடைக்கு கூட வரவில்லை. அந்த மேடைக்கு வந்தால் ஜெயலலிதா அவர்களை அரசியலை விட்டே விரட்டிவிடுவாரா? இல்லை அவர்கள் சொத்தை எல்லாம் பிடுங்கி கொள்வாரா? என்று தெரியவில்லை. இப்பொதுக் கூட பா.ஜா.க வை ஆதரிக்க முடியாது என்று திருமாவளவன் வெளிப்படையாக அறிவிப்பு செய்திருந்தாலும் கூட இல.கணேசன் அவர்கள் வாழ்த்து சொல்லி இருக்கிறார். ஆனால் இவர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் காரணத்திற்க்காக உணர்வாளர்கள் தமிழ் உணர்வாளர் என்ற முறையில் கூட பிறந்தநாள் வாழ்த்துக் கூட சொல்லவில்லை. அவ்வளவு நாகரிகம் தெரிந்தவர்கள் தமிழக அரசியல்வாதிகள்.

இவர்களின் நோக்கம் திருமாவளவனை விமர்சிக்க வேண்டும் அவ்வளவுதான். முதலில் திருமாவளவன் ராஜபக்சேவுக்கு கைகொடுத்தது குற்றம் என்றார்கள். அப்போது திருமா அரசுப் பிரதிநியாக சென்றார். அங்கே திருமாவளவனை தனிமை படுத்தி திருமாவளவன் எப்படி ராஜபக்சேவுக்கு கைகொடுக்கலாம். என்று விமர்சனம் செய்தார்கள். இப்போது திருமாவின் பிறந்தாநாள் விழாவுக்கு நாராயணசாமி கலந்துக் கொண்டதற்கு குற்றம் என்கிறார்கள். இங்கே திருமாவை தனி மனிதனாக பாராமல் கொள்கை அரசியலை கொண்டு குழப்பி விமர்சனம் செய்கிறார்கள். பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பதுப் போல பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னதுக் கூட தீட்டாகிவிட்டது போலும்... பேரறிஞர் அண்ணா சொன்னதுப் போல
வசவாளர்கள் வாழ்க என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

உணர்வாளர்களே உங்களுக்கு இறுதியாக ஒற்றை
வேண்டுகோளை வைக்கிறேன். இவர்
காட்டாற்றில் கரைந்து போகும் களிமண் அல்ல!
அந்த காட்டாற்றோடு பயணித்து, காட்டாற்றின் போக்கையே
மாற்றக்கூடிய கருங்கல் பாறை!!
கவலைப்பட தேவையில்லை; சந்தேகப்பட தேவையில்லை!!

இவண்...
அங்கனூர் தமிழன் வேலு

வியாழன், 4 அக்டோபர், 2012

புதிய தலைமுறை Vs தமிழன் வேலு ஒரு கருத்து மோதல்


செப்டம்பர் 25, 2012

ராஜபக்சேவின் இந்திய வருகையை எதிர்த்து 
திருமாவளவன் தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கலாமே?
"புதிய தலைமுறை"யின் புதிய கண்டுபிடிப்பு !
-------------------------------------------------------------------------

பெருமதிப்புர்க்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் !
தங்களின் சமூக விழிப்புணர்வு பணியை பெரிதும் மதிக்கிறேன். அது மேலும் மேலும் செழுமையடைய வேண்டும் என்று விரும்புபவர்களில் நானும் ஒருவன். அதே வேளையில் சமூக விழிப்புணர்வு பணி என்பது முற்ப்போக்கான, உடன்பாடான சிந்தனைகளை அல்லது செயல்பாடுகளை தேடி, தேடி வரவேற்பதும், ஊக்கப்படுத்துவதுமே ஒழிய. சில மோசமான, விரும்பத்தகாத நிகழ்வுகளை தேடி, தேடி விமர்சிப்பது அல்ல என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

அன்று வெளியான இதழில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட முடியாதா? என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி எழுதி இருந்தீர்கள். அதில் ராஜபக்சே மத்தியப்பிரதேச வருகையை எதிர்த்து சென்னையில் உள்ள சாலைகளை மறித்து போக்குவரத்தை முடக்குவதற்குப் பதிலாக விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கலாமே? அல்லது ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியில் இருந்து விலகி இருக்கலாமே? குறைந்தபட்சம் சோனியா காந்தியையோ, பிரதமரையோ நேரில் சந்தித்து தன் கண்டனத்தை தெரிவித்து இருக்கலாமே என்று கேள்வி எழுப்பி இருந்தீர்கள்.

இந்த கருத்து, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன் நாடாளுமன்ற அவையில் அங்கே தன் கருத்துக்களை, கண்டங்களை பதியாமல் வேண்டுமென்றே பொதுமக்களுக்கு இடையூறு செய்யவேண்டும் என்பதற்காகவே சாலைமறியல் போன்ற போராட்டங்களை நடத்துகிறார் என்று குற்றம் சுமத்தும் தொனியில் உள்ளது.

நீங்கள் சொன்னது போல திருமாவளவன் பதவி விலகியிருந்தால் ராஜபக்சேவின் இந்திய வருகையை இந்திய அரசு தடுத்து நிறுத்தி இருக்குமா? அல்லது ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியில் இருந்து அவர் விலகி இருந்தால் மத்திய அரசு கவிழ்ந்து இருக்குமா?

திருமாவளவன் எடுத்த எடுப்பிலேயே சாலை மறியலில் இறங்கவில்லை. செப்டம்பர் 5, 6, 7 தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ்நாட்டில் இருந்து 39 உறுப்பினர்கள் இருந்தும் தனி ஒருவராய் தர்ணாவில் ஈடுபட்டு அதற்க்கு மத்திய அரசு செவிசாய்க்காத பட்சத்தில் தான் சாலைமறியல், இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தார். அங்கே யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டது வருந்தத்தக்க ஒன்றுதான். அதற்க்கு திருமாவளவனே தாக்க சொன்னது போலவும், அவரே சென்று தாக்கியது போலவும் அவரை பதவி விலக இருக்கலாமே என்று கேட்பது நியாயமான கேள்வியா? இந்த கேள்வியை மற்ற 38 உறுப்பினர்களிடம் நீங்கள் கேட்டு இருக்கவேண்டும். நீங்கள் கேட்கலாம் இப்போது போராட்டம் நடத்தியதால் ராஜபக்சே வருகையை இந்தியா தடுத்து நிறுத்தியதா? என்று. இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே உலகில் எங்கு சென்றாலும் எதிர்ப்பு உள்ளது. ஆனால் இந்திய அரசு மட்டும் தமிழர்களின் உணர்வை காலில் மிதித்து, அவனுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது. ஆகவே தான் தமிழர்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம், தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு உள்ளது என்பதை பதிவு செய்து இருக்கிறோம்.

இன்று திருமாவளவன் செய்த போராட்டத்தை விமர்சிக்கும் நீங்கள், இந்தியா முழுமைக்கும் 85 சதவிகிதம் தனியார் மயமாகிவிட்டது. மீதமுள்ள 15 சதவிகிதமும் விரைவில் தனியார் மயமாகிவிடும். எனவே தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் அதற்க்கு மத்திய அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலே முழங்கினார் திருமாவளவன் அதை ஏன் எழுதவில்லை?

அண்டை நாட்டில் தொப்புள்க்கொடி உறவுகள் கொத்துக் கொத்தாய் சாகடிக்கும் போது , ஈழத்தை எதிர்க்கும் இந்திய அரசின் குகைக்கே சென்று தனி ஈழமே தீர்வு என்று எழுந்து முழங்கினார் திருமாவளவன், இந்தியாவில் புலிகளுக்கு தடை விதித்த பின்பு நாடாளுமன்றத்தில் ஈழமே தீர்வு என்று முழங்கிய ஒரே தமிழன் திருமாவளவன் அதை ஏன் எழுதவில்லை? சாலை மறியலால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்ணீர் சிந்தும் நீங்கள் 2009 ஜனவரி 15 ஆம் நாள் ஒட்டுமொத்த தமிழகமே பொங்கல் கொண்டாடிக் கொண்டு இருந்தபோது ஈழத்தமிழர்களுக்காக விடுதலை சிறுத்தைகள் மட்டும் நான்கு நாட்கள் பட்டினி கிடந்தார்களே அதை ஏன் எழுதவில்லை?

ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் ரயில் கட்டணத்தை குறைத்ததும் அனைத்து உறுப்பினர்களும் அமைதி காத்தாலும், மனித மலத்தை மனிதனே அல்லும் கேவலம் இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று கூறி இந்திய அரசின் முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டு வெளிநடப்பு செய்த திருமாவளவனை பற்றி ஏன் ஒரு பெட்டி செய்திக்கூட போடவில்லை?

தமிழ்நாட்டில் இருந்து 39 உறுப்பினர்கள் இருந்தும் தனி ஒருவராய் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தர்ணாவில் ஈடுபட்ட திருமாவளவன் தான் ராஜினாமா செய்யவேண்டுமா?

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு விவாதத்தில் பங்கெடுத்து பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதே சரியான அணுகுமுறை என்று வாதிட்டாரே அதை ஏன் எழுதவில்லை?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் லட்சுமிபேட்டையில் சாதி வெறியர்களால் ஐந்து தலித்துகள் கொடூர கொலை பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதைப்பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை. தலித்துகள் மீது நடக்கும் கொடுமையை கண்டித்து எழுதவும் பத்திரிக்கை இல்லை, அதை கண்டித்து போராடும் திருமாவளவனின் போராட்டங்களை பொதுமக்களிடம் கொண்டுசெல்லவும் பத்திரிக்கை இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் திருமாவளவன் என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்?

இதையெல்லாம் எழுதாமல், விமர்சிக்காமல் எதோ தவறாக விரும்பத்தகாத ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டி திருமாவளவன் ராஜினாமா செய்திருக்கலாமே என்று கேட்பது, உங்கள் சிந்தனையின் ஊற்றுக்கண் எங்கே இருக்கிறது என்பதை எம்மால் யூகித்துக் கொள்ள முடிகிறது. ஒரு இயக்கத்தையோ, அல்லது ஒரு தனிநபரையோ விமர்சிக்கும் போது நன்மை, தீமை இரண்டையும் விமர்சிக்கும்போதுதான் அது ஆக்கப்பூர்வமான, சிந்தனாப்பூர்வமான விமர்சனமாக இருக்கும். விரும்பத்தகாத நிகழ்வை மட்டும் தேடி தேடி விமர்சிப்பது சரியான அணுகுமுறையா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

எந்த ஒருப் போராட்டமும் மக்களை சென்றடையும் போதுதான் அது அரசின் கவனத்திற்கு செல்கிறது. அமைதியாக யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழர் செந்தூரனை இந்த அரசு என்ன செய்தது? உண்ணாவிரதம் இருந்தும், வீதியில் இறங்கி போராடும் போதே இந்த அரசு செவிசாய்க்க மறுக்கும்போது வேறு எப்படி போராடவேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள்.

இப்படிக்கு 
அங்கனூர் தமிழன் வேலு

-------------------------------------------------------------------
அக்டோபர் 01, 2012

அன்புள்ள திரு.தமிழன் வேலு,
வணக்கம். உங்கள் கடிதத்திற்கு நன்றி.
இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேயின் வருகைக்கு எதிரான போராட்டங்களை புதிய தலைமுறை விமர்சிக்கவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடத்தக் கூடாதா என்பதுதான் அது எழுப்பும் கேள்வி.

இலங்கைத் தூதரகத்தின் முன் போராட்டம் நடத்தி, வேலை நாளில் பகல் பொழுதில் மூன்று மணி நேரம் போக்குவரத்தை முடக்கியதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் யார்? ராஜபக்‌ஷேயா? இலங்கை தூதரா? அவரை இந்தியாவிற்கு அழைத்தவர்களா? அதற்கு அனுமதியளித்த மத்திய அரசின் அமைச்சர்களா? அதன் அதிகாரிகளா? இவர்கள் எவரும் இல்லை. ராஜபக்‌ஷேவின் வருகையை விரும்பாத தமிழர்கள்தான்.

எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் அதை வைகோவைப் போல சாஞ்சிக்குச் சென்று, தெரிவித்திருக்கலாமே? தனியாகச் செல்ல முடியாதென்றால் அவருடன் இணைந்து போராடியிருக்கலாமே? இருவருக்கும் ஏற்புடைய கொள்கைகாக ஏன் இருவரும் இணைந்து போராடக் கூடாது?

இப்படி ராஜபக்‌ஷேயின் வருகையை விரும்பாத தமிழர்களைத் துன்புறுத்துவதை விட்டுவிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கிற மாதிரி ஏன் போராடக் கூடாது?. இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சிறுபான்மை நிலையை அடைந்து, ஒவ்வொரு ஓட்டும் அவசியம் என்ற நெருக்கடியில் சிக்கியிருந்தது. அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமே?வலிக்கிற இடத்தில் அடிப்பதுதானே புத்திசாலித்தனம்?

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை ஏற்காத மம்தா பானர்ஜி என்ன செய்தார்? அரசிலிருந்து விலகினார். அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டார். அதன் மூலம் தனது கட்சிக்கும் அந்த முடிவிற்கும் தொடர்பில்லை என்பதைச் செயல் மூலமாக நிரூபித்தார்.
அதைப் போலச் செய்யாமல், மத்தியில் ஆளும் கூட்டணியின் அங்கமாக இருந்து கொண்டு, அதன் மூலம் அது எடுக்கும் முடிவுகளை மறைமுகமாக ஆதரித்துக் கொண்டு, மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் சென்னை வாழ் தமிழர்களுக்கு இடையூறு ஏற்படுத்து ஏன்?

தனது தனிச் செயலாளர், கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் பொதுமக்களைத் தாக்குகிறார். அந்தச் சம்பவம் நடந்த இடத்தில் திரு. திருமாவளவன் இருக்கிறார். அவர் அந்தக் கட்சி உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? அதைக் கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறாரபாதிக்கப்பட்டவரிடம் குறைந்த பட்சம் வருத்தம் தெரிவித்தாரா?

கட்டுரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக திரு.திருமாவளவன் எப்படிச் செயல்பட்டார் என்பதைப் பற்றியதல்ல. அப்படி ஒரு கட்டுரை எழுத நேர்ந்தால் அந்த நேரத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்திகளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறோம்.

கட்டுரை திரு. திருமாவளவனைப் பற்றியது மட்டுமல்ல. மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்புடைய சம்பவங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உங்கள் கடிதத்திற்கு நன்றி

அன்புடன்
மாலன்

---------------------------------------------------------------------
அக்டோபர் 01, 2012
ஆசிரியர் மாலன் அவர்களே வணக்கம் !
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி !!

உங்கள் பதிலால் எனக்கு சில கேள்விகள் எழுந்துள்ளன..

1. சுதந்திர தின கொண்டாட்டம், குடியரசு தின கொண்டாட்டம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், திருமணம், இப்படி கொண்டாட்டங்கள் நடைபெறும் போதே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அப்படி இருக்கையில் போராட்டங்களை இடையூறு இல்லாமல் எப்படி செய்வது?

2. ஒன்னரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலனை இந்தியாவிற்கு அழைத்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது உணர்வுள்ள, பொறுப்புள்ள ஊடகம் பொதுமக்களிடம் எப்படி கேள்வி கேட்டிருக்கவேண்டும்?

3. இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்ஷே இந்திய வருகையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்துகிறார்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ராஜபக்ஷே இந்தியா வரலாமா?என்று கேட்காமல் போராட்டங்களால் நீங்கள் எப்படி பாதிக்கப்படுகிறீர்கள்? என்று கேள்வி கேட்டது சரியா? இது போராட்டத்தை சிருமைபடுத்தும், அல்லது திசைதிருப்போம் நோக்கம் அல்லாமல் வேறு என்ன?

4. நீங்கள் சொல்வதுப் போல ராஜபக்ஷே வருகையை விரும்பாத தமிழர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். உண்மைதான். ஆனால் அந்த ஊடகம் அந்த நபரின் கண்டனத்தை பதிவு செய்ய வாய்ப்பு கொடுத்ததா?

5. அடுத்து வைகோவுடன் சாஞ்சிக்கு சென்று போராடி இருக்கலாமே என்று கேள்வி கேட்டு இருக்கிறீர்கள். சாஞ்சிக்கு சென்று போராட்டம் நடத்தவேண்டும் என்று வைகோ விரும்பினார். விடுதலை சிறுத்தைகள் இலங்கை தூதரகத்தை முற்றுகை இடவேண்டும் என்று விரும்பினார்கள். இது தலைமை எடுக்கும் முடிவே? மேலும் சாஞ்சியில் போராட்டம் நடத்தும் போது சாஞ்சி பொதுமக்கள் பாதிக்கமாட்டார்களா? அவர்கள் பாதிக்கப்பட்டால் கவலை இல்லையா?

6. நீங்கள் சொன்னதுப் போல சிறுபான்மை நிலையில் மத்திய அரசு இல்லை. மத்திய அரசை காக்க மாயாவதி தயாராக இருந்தார். முலாயம் சிங் தயாராக இருந்தார். தி.மு.க தயாராக இருந்தது, மற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராக இருந்தன.

அவசியம் இதற்கும் பதில் தாருங்கள்
தேவைப்படும் பட்சத்தில் நேரில் விவாதிக்கவும் தயாராக உள்ளேன் ...
உங்கள் பதிலுக்கு நன்றி...

அன்புடன்... 
அங்கனூர் தமிழன்வேலு 
தொடர்புக்கு : 9962326297

-----------------------------------------------------------------
புதிய தலைமுறையின் அடுத்த இதழ் நாளை வெளிவர
உள்ள நிலையில்
நம் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

புதன், 3 அக்டோபர், 2012

எத்தனை இரவுகள் விழித்திருந்திருப்பாய்?

எம்மை எல்லாம் 
மனிதராய் தலைநிமிர
செய்த மகத்தான தலைவரே! 

எத்தனை இரவுகள்
விழித்திருந்திருப்பாய்?  
விழிக்காமல் விழுந்துக்
கிடக்கும் எம்மக்களை எழுப்ப !

எத்தனை இழிவுகளை 
சுமந்திருப்பாய்?
இழிநிலையே கதி என்று 
கிடந்த எம்மக்களின் 
இழிவுகளைத்  துடைக்க!!

எத்தனை நாட்கள் 
பட்டினி கிடந்திருப்பாய்?
பசியிலே செத்து மடிந்த 
எம்மக்களின் பசியைப் போக்க !!!

எத்தனை புத்தகங்களை 
வாசித்து இருப்பாய்?
எந்த பக்கத்திலாவது
எம்மக்களுக்கு விடிவுப் பிறக்க 
வழி இருக்காதா என்ற ஏக்கப் 
பெருமூச்சுடன்!!! 

கோமான்கள் எல்லாம் கோவணம்
கட்டி கும்மியடித்தப் போது நீ மட்டும்  
கோட்டு சூட்டில் வந்து அதிகார 
வர்க்கத்தின் ஆணவத்தை கிழித்தாய்!!!

வரலாற்றில் கருப்பு பக்கங்களை 
மறைத்தார்கள் - அந்த கயமத்தனத்தை
சுட்டிக்காட்ட எம்மக்களிடம் 
புத்தகங்களை கொடுத்தாய்!!!

வரலாற்றுக் கறுப்புப் பங்கங்களை 
வழிநெடுக நீ சுட்டிக் காட்டிக் கொண்டே 
வந்தாய், ஏனோ எம் முன்னோர்கள் 
அதை வழிமொழிய மறந்தார்கள்; 
நீ கொடுத்தப் புத்தகம் எம் கரங்களை 
வந்து சேர்ந்தது; நாங்கள் விழித்துக் 
கொண்டோம் இனி காவிப் புதல்வர்களின் 
கோரமுகம் கிழிந்து நாறு நாராய் 
தொங்கும் !!! 

நீ இழுத்து வந்த தேருக்கு  
இனி ஊர்த்தெருவில் 
இருந்து வடம் பிடிப்போம் !! 
வரலாற்றில் இடம் பிடிப்போம்!! 
---------------------------------------------
அன்புடன் 
அங்கனூர் தமிழன்வேலு

செவ்வாய், 2 அக்டோபர், 2012

இனம் காக்க எழுந்து வா எம் தலைவா!!!

எம்மக்களுக்கு திறக்க மறுத்தக் 
கோவில் கதவுகளை உடைத்து, 
பூரண கும்பம் கொடுக்க வைத்த 
எம் தலைவா உம் பிள்ளை நான் 
அழைக்கிறேன் எழுந்து வா எம் தலைவா !

நீ கட்டிக் கொடுத்த பள்ளி அறைகள்
இன்று பிண அறையாய் காட்சி 
மாறுதே; அந்த நிலை மாற்றிட, பிஞ்சுக் 
குழைந்தைகளை காத்திட 
எழுந்துவா எம் தலைவா!!!

நீ கட்டி ஆண்ட தமிழகம் இன்று 
மது போதையில், சினிமா மோகத்தில்
தள்ளாடுதே; கண் திறந்து பாரய்யா
மீட்டுக் கொடுத்திட எழுந்துவா 
எம் தலைவா!!!

கூடங்குளம் பற்றி எரிகிறது; 
உன் பிள்ளைகளின் நிலை 
கேள்வியாய் கிடக்குது; 
உன் பேரப்பிள்ளைகளின் 
கதறல் காதைப் பிளக்குது; 
கண் திறந்து பாரய்யா
இனம் காத்திட எழுந்து வா
எம்தலைவா!!!

தந்தை பெரியாரின் 
சொல்லுக்கு உயிர் கொடுத்த 
எம் முதல்வா, பெரியாரியம் 
இன்று பெரிய ஆரியமாய் 
காட்சி மாறுதே; பெரியாரியம்
காத்த பெருந்தலைவா 
பெரியாரையும் கூடவே அழைத்து வா!

பீ அள்ளியவன் பிள்ளை பீ தான் அல்ல
வேண்டும் என்ற குலக்கல்வியின் 
குரல்வளையை நெரித்த எம் முதல்வா!
இன்றும் உம் பிள்ளைகளின் வாயில் 
பீயை திணிக்கிறார்கள்; உம் பிள்ளைகளை,
எம்மக்களை காத்திட எழுந்துவா 
எம் தலைவா!!!

காமராசர் ஆட்சி அமைப்போம் என்று 
வேஷம் போடுகிறார்கள்; புரிந்துக் கொள் 
எம் தலைவா ! காவி உடுத்தாத 
காங்கிரஸ்காரன் நீ ஒருவனே ; உனக்கும் 
காவிசாயம் பூசத் துடிக்கும் கயவர்களின் 
கன்னத்தில் அறைய எழுந்துவா 
எம் தலைவா!!!

காமராசர் மறைவு காங்கிரசுக்கு 
பெரும் இழப்பு என்று சாயம் பூசாமல்
நடிக்கிறார்கள்; நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்;
உம் மறைவு எமக்குத்தான் பெரும் 
இழப்பு; அவர்களுக்கோ பெரும் மகிழ்வு 
எப்படி என்று கேட்கிறீரா? நீ இருந்து 
இருந்தால் ஒன்னரை லட்சம் உம் 
பிள்ளைகளை கொன்றவர்களை 
சும்மாவா விட்டிருப்பாய்? இல்லை 
இல்லை அவர்களின் முதுகெலும்பை 
உடைத்து இருப்பாய்; கொடுங்கோலனுக்கு 
எம் மக்களின் ரத்தத்தில் சிவப்புக் கம்பளம்
விரிக்கும் சோனியாவின் கொழுப்பை 
அடக்க எழுந்துவா எம் தலைவா!!!

குப்பை மேடுகளாய் காட்சித் தந்த 
தமிழகத்தை தொழிற்க்கூடமாய்
மாற்றிய பொருளாதார தந்தையே; 
அந்நிய முதலீடு எனும் அந்நியனை
உள்ளே விட ஆடுகிறார் மன்மோகன்;
அவருக்கு புத்தி சொல்ல எழுந்து வா!!!

கட்சிக்கும், ஆட்சிக்கும் டெல்லிக்கு 
நடையாய் நடக்கிறார்கள்; ஆனால் 
எங்கள் பசியையும் பஞ்சத்தையும் 
போக்க நடக்க மறுக்கிறார்கள்; 
தண்ணீருக்கும் கூட தமிழன் 
தவியாய் தவிக்கிறான்; 
தமிழனின் வாழ்வாதாரம் காக்க 
டெல்லிக்கு போகவேண்டும்
எழுந்துவா எம் தலைவா!!!

அக்டோபர் 02 யை நான் கருப்பு தினம் என்று 
சொல்லிவந்தேன் அதற்க்கு இரண்டு காரணம்
ஒன்று காந்தி பிறந்ததற்கு; மற்றொன்று 
எம் தலைவன் நீ மறைந்ததற்கு !! 

வருணாசிரமம் காத்த காவி
காந்தியின் பிறந்தநாளாம் இன்று ; 
அதனால் ஆனந்த கூத்தாடுகிறார்கள்;
எம் தலைவா நான் மட்டும் கண்ணீர் 
வடிக்கிறேன்; வீரவணக்கம் சொல்லுகிறேன்
எம்மைப் போல் உம் பிள்ளைகளின் கதறல் 
கேட்டீரோ, எழுந்து வா; 
எம் நிலை மாற்றிட வா;
கருப்பு நிறத்தில் பூத்திருந்தாலும்
நீ தான் எங்களுக்கு நிரந்தர வெளிச்சம் 
எழுந்து வா எம் தலைவா!!!
-----------------------------------------------------------------
வீரவணக்கத்துடன் 
அங்கனூர் தமிழன்வேலு