புதன், 29 அக்டோபர், 2014

அரசியலும்... அரசியல் பண்பாடும் ...

கடந்த மாதம் தன் பேரன் – பேத்திகளின் திருமண அழைப்பிதழை திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, மருத்துவர் ராமதாஸ் நேரில் சந்தித்து கொடுத்தார். தேர்தல் அரசியலில் வெவ்வேறு அணிகளில் அவர்கள் இருப்பதால், அந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பாமக திமுக அணிக்கு வரலாம் என்றும் செய்திகள் வெளியாயின. இருப்பினும், அரசியல் நாகரிகம் கருதியே, இந்த சந்திப்பு நடந்தது என்று கூறிய ராமதாஸ், கலைஞர் “அரசியல் நாகரிகம் தெரிந்தவர்” என்று புகழுரை வழங்கினார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய திமுக பொருளாளர் ஸ்டாலின், ராமதாஸ் குறித்த கேள்விக்கு, “மருத்துவர் ராமதாஸ் அரசியல் பண்பாடு மிக்கவர்” என்று பதில் கூறியுள்ளார். இவர்கள் பேசும் அரசியல் பண்பாடு எந்த அளவிற்கு நேர்மையானது என்பதை பார்ப்பதற்கு முன்பாக தமிழகத்தில் அரசியல் ஒழுக்கமோ, பண்பாடோ இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.  


மேற்குலக நாடுகளில் எதிர் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் கொள்கை ரீதியாக மிக காரசாரமாக விவாதித்து கொண்டாலும், அவர்களிடையே நட்புறவு இருக்கிறது. எதிர்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வெற்றி பெற்றுவிட்டால் வாழ்த்துக்களையும், அன்பையும் பரிமாறி கொள்கிறார்கள். இந்தியாவை பொருத்தமட்டில் வடநாட்டில் அந்த பண்பாடு குறைந்தபட்சமேனும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தை பொருத்தமட்டில் அரசியல் நாகரிகம் சிறிதளவு கூட கிடையாது. உறவினர்களாக இருக்கின்றவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள் என்றால் அத்தோடு அவர்கள் உறவை மறந்துவிட வேண்டியது தான். எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் நிரந்தர எதிரிகளாகி போகிறார்கள். தலைவர்களை பொருத்தமட்டில் தேர்தலுக்காகவும், பதவிக்காகவும் “அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர பகைவனும் கிடையாது” என்று வாய் ஜம்பம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் தலைவர்களின் பேச்சை கேட்கின்ற தொண்டர்கள் தான் பெரிதளவில் பாதிக்கப்படுகிறார்கள். மாற்றுக் கட்சியினரோடு அரசியல் கடந்த உறவை தொடர்வது என்பது முடியாததாகவும், கட்சிக்கு இழைக்கும் துரோகமாகவும் பார்க்கப்படுகிறது. அதுமாத்திரமல்லாமல், கொள்கை சார்ந்த விவாதங்கள் அறவே அற்றுப்போய்விட்டு, தனிநபர் தாக்குதலும், வெறுப்பு பிரச்சாரமும் மிக தீவிரமாக  முன்னெடுக்கப்படுகின்றன.


அதன் நீட்சியாக கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினரால் நடத்தப்பட்ட வெறுப்பு பிரச்சாரங்கள், அதனால் தர்மபுரியில் நிகழ்ந்த சாதிய வன்கொடுமை தாக்குதல்கள் வரலாற்றில் மறையாத அவல சாட்சியங்கள். இன்றைக்கு அரசியல் நாகரிகம் என்றெல்லாம் வாய்ஜாலம் அடிக்கும் ராமதாஸ், தாழ்த்தப்பட்ட மக்களை பற்றியும், விடுதலை சிறுத்தைகளை பற்றியும் எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களை பற்றியும் பரப்பிய அவதூறுகள் ஏட்டில் எழுதமுடியாதவைகள். அதோடு, இன்று ராமதாஸ் யாரை அரசியல் நாகரிகம் தெரிந்தவர் என்று சொல்கிறாரோ, அதே கலைஞரையும், ஆசிரியர் வீரமணி அவர்களையும் மிக கேவலமாக திட்டி பேச வைத்தவர். சாதி ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் வெறுப்பின் உச்சத்திற்கே சென்று காடுவெட்டி குருவை பேசவைத்து புளங்காகிதம் அடைந்தவர். தனிநபர் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு சிறிதும் பொருத்தமில்லாத மனிதராக, சினிமா ரவுடியை போல பேசிக்கொண்டு திரிந்தார். செல்லும் இடமெல்லாம் வெறுப்பு பிரச்சாரங்களை விதைத்து அதன்மூலம் தனது சாதிய அரிப்புக்கு சொரிந்து கொண்டார். அவர்களின் வன்முறை பேச்சுக்களால் அன்றைக்கு தமிழகம் அசாதாரண சூழலை சந்தித்தது.

கொள்கையை கடந்து, தனிப்பட்ட முறையில் கலைஞர் மீதும், திருமாவளவன் மீதும் வன்மம் கொண்டு விமர்சனங்களை வீசிய, ராமதாஸ் இன்று திமுகவோடு குசலம் கொஞ்சுவது சந்தர்ப்பவாதமா? அரசியல் நாகரிகமா? என்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். திமுகவோடு, பாமக கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்கிற பொறாமையில் நான் இப்படி எழுதுவதாக சிலர் நினைக்கலாம். ஆனால் நடுநிலை பண்போடு, அரசியல் ஒழுக்கத்தை விரும்புகிற எவருக்கும் என் எழுத்திலும், எண்ணத்திலும் இருக்கின்ற நேர்மை புலப்படும் என்று நம்புகிறேன். செல்லும் இடமெல்லாம் தரம் தாழ்ந்த ரவுடியை போல, எழுச்சி தமிழரை விமர்சனம் செய்தபோது கூட, ஏட்டிக்குப் போட்டி, லாவணி பாடாமல் ஜனநாயக சக்திகளின் துணைகொண்டு சாதியவாதிகளின் சதிகளை முறித்தவர் திருமாவளவன். தன்னை மிக கேவலமாக விமர்சித்த போதும் கூட “இனநலன், மொழிநலனுக்காக ராமதாஸ் அவர்களோடு இணைந்து பணியாற்ற தயார்” என்று அறிவித்து அரசியல் நாகரிகத்தின் உச்சத்துக்கே சென்றவர்.

பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் காலத்தில் இருந்த அரசியல் நாகரிகம் கொஞ்சமும் தற்போதைய தமிழக அரசியலில் கிடையாது. கொள்கைசார்ந்து ராஜாஜியை மிக கடுமையாக விமர்சனம் செய்த தந்தை பெரியார், தனிப்பட்ட முறையில் ராஜாஜியோடு நட்புறவை கொண்டிருந்தார். “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு” என்றார் பேரறிஞர் அண்ணா. தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசை விமர்சனம் செய்த பேரறிஞர் அண்ணா, தேர்தல் வெற்றிக்கு பின்னர், தன் அமைச்சரவை சகாக்களை அழைத்துக்கொண்டு காமராஜரை சந்தித்து, தம் அரசுக்கு ஆலோசனை வழங்க கேட்டுக் கொண்டார். முந்தைய காலத்தின் அரசியல் நாகரித்தை எடுத்துக்காட்டும் இதுபோன்ற ஏராளமான சான்றுகளை காட்டலாம். ஆனால் தற்போதைய அரசியலில் ராமதாஸ் போன்ற பதவி மோகம் பிடித்தவர்களால் அரசியல் நாகரிகமும், பண்பாடும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வெகுகாலம் ஆகிறது. பெரியாரிடமும், அண்ணாவிடமும், காமராஜரிடமும் இருந்த அரசியல் பண்புகளை இன்று அண்ணன் எழுச்சி தமிழரிடம் காண்கிறேன்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைத்திருகிறார். திமுகவோடு இருக்கின்ற காரணத்தினால், அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மீதோ, அதிமுக வோடு இருக்கின்ற காரணத்திற்காக கலைஞர் மீதோ, தனிநபர் விமர்சனங்களில் என்றைக்கும் ஈடுபட்டத்தில்லை. அதேநேரத்தில் கொள்கை ரீதியாக அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறோம். "ஜெயலலிதா ஒரு அதிதீவிர இந்துத்துவ அடிப்படைவாதி" என்று வெளிப்படையாக எழுச்சிதமிழர் விமர்சித்தார். பின்னாளில் அவரது பேச்சுக்கள் நூலாக தொகுக்கப்பட்ட போது, அந்தநூலை அவரிடம் வழங்கி, அவரை பற்றி குறிப்பிட்டிருக்கும் அந்த பக்கத்தையும் பிரித்து காண்பித்த மாண்பாளர் அண்ணன் திருமாவளவன். அதேபோல கலைஞர் அவர்களோடும் கொள்கை ரீதியாக முரண்பட்டிருக்கிறோம். தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்றதும், திமுக அணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டுயிட்டு வென்ற தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறினார். ஆனாலும் கலைஞர் மீது தனிப்பட்ட முறையில் எவ்வித வெறுப்பு விமர்சனங்களையும்  முன்வைக்கவில்லை. தமிழக அரசியலில் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல்வாதியையும் தரம் தாழ்ந்து விமர்சிக்காத நிகழ்கால தலைவராக அண்ணன் எழுச்சி தமிழர் இருக்கிறார். அதனாலே ஜனநாயக சக்திகளின் அன்புக்கு உரியவராக திகழ்கிறார். தேர்தல் அரசியலுக்காக முன்னொன்றும், பின்னொன்றும் பேசித் திரியும் சராசரி அரசியல்வாதிகளை போல அல்லாமல், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்களின் வழிநின்று கொள்கை சார்ந்து வழி நடத்தி வருகிறார். தேர்தல் அரசியலுக்காக எப்படிப்பட்ட இழிவான அரசியலையும் செய்யத்துடிக்கும் அரசியல்வாதிகள் இருக்கின்ற இன்றைய சூழலில், உள்ளதை உள்ளபடி, பட்டவர்த்தனமாக பேசும் பக்குவத்தை அவரும் பெற்றிருக்கிறார். அவரது தம்பிகளுக்கும் அந்த பண்பை கற்றுக் கொடுத்திருக்கிறார். 2009 ஆம் ஆண்டு ஈழப்படுகொலை, உச்சகட்டத்தில் இருந்த சூழலில், திமுக அணியில் இருந்துகொண்டே,  அதிமுக அணியில் இருந்த மதிமுக, பாமக, கம்யூனிஸ்டு கட்சிகளோடு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். கூட்டணியை பற்றி கவலைப்படாமல், தேர்தலை பற்றி கவலைப்படாமல் ஈழ மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும் என்ற அதீத உந்துதலில் எடுக்கப்பட்ட  துணிச்சலான முடிவு அது. தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைத்து தனி அணி கட்டவும் துணிந்தவர். அணித்தலைவராக யாராவது இருந்து கொள்ளுங்கள், நான் உங்களுக்கு பின்னால் நிற்கிறேன் என்று பகிரங்க அறைகூவல் விடுத்தார். தலைமை பதவியின் மீது மோகம் இல்லாத தலைவராக எழுச்சி தமிழர் இருக்கிறார். அரசியல் நேர்மையும், கொள்கை பிடிப்பும் உள்ள தலைவராக திருமாவளவன்  இருந்தாலும், அதை அங்கீகரிக்கவோ, பாராட்டவோ யாரும் முன்வராத மோசமான அரசியல் சூழலே நிலவிவருகிறது. 

அரசியல் நாகரிகம் என்பது தன்மானத்தையும், சுயமரியாதையையும் உள்ளடக்கியது தான். ஆனால் இன்றைய சூழலில் அது தன்மானத்தையும், சுய மரியாதையையும் இழந்துவிட்டு, ஓட்டரசியலையும், சந்தர்ப்பவாதத்தையும் பிரதானமாக கொண்டிருக்கிறது என்பது தான் பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. ராமாதாஸ், கலைஞரை பாராட்டியதும், ஸ்டாலின், ராமதாசை பாராட்டியதும் ஓட்டரசியல் மற்றும் சந்தர்ப்பவாத நோக்கம் கொண்டது தான். இதில் அரசியல் நாகரிகமோ, பண்பாடோ இருப்பதாக நான் கருதவில்லை.

சனி, 25 அக்டோபர், 2014

சினிமா – நடிகர்கள் – ரசிகர்கள் – அரசியல்

உலக மக்களில் பெரும்பாலான மக்கள் சினிமாவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மற்ற நாட்டு, இந்தியாவின் மற்ற மாநிலத்து மக்கள் சினிமாவை பார்ப்பதற்கும், தமிழர்கள் பார்ப்பதற்கும் நிரம்ப வேறுபாடுண்டு. தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமாவும் அரசியலும் இரண்டற கலந்திருக்கிறது. அது ஆரோக்கியமானது கிடையாது என்பது ஒருபுறமிருந்தாலும், சினிமா வாய்ப்பு இல்லாமல் போனால், அரசியலுக்கு சென்றுவிடலாம் என்ற நினைப்பு, கிட்டத்தட்ட எல்லா தமிழ் நடிகர்களுக்கும் இருக்கிறது. சினிமா நடிகைக்கு கோவில் கட்டுவது, பிடித்த நடிகரின் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வது போன்ற அற்பமான கலாச்சாரம் இங்கு மட்டும்தான் இருக்கிறது. ஒரு சினிமா நடிகருக்கும், ரசிகருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு வெறும் 3 மணிநேர சினிமா மட்டும் தான். எல்லா நடிகர்களுக்குமே சினிமா என்பது தொழில்தான். கலை சேவை என்று அவர்கள் சொல்லிக்கொண்டாலும் அதை அவர்கள் தொழிலாக தான் பார்க்கிறார்கள். ஒரு கார்ப்பெண்டரை போல, எலக்ட்ரீசியனை போல அவர்கள் தொழில்முறை நடிகர்கள்.
எந்த நடிகரும் காசுவாங்காமல் நடிப்பதில்லை, அதேபோல எந்த ரசிகருக்கும், காசில்லாமல் படம் காட்டப்படுவதில்லை. ஒரு நடிகனுக்கும், ரசிகருக்கும் இடையில் இப்படிப்பட்ட தொடர்பு மட்டுமே இருக்கும்பட்சத்தில், எதன் அடிப்படையில் நடிகருக்காக தன் உயிரை மாய்த்துக்கொள்வது, பிறரின் உயிரை எடுப்பது போன்ற மோசமான செயல்களில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது விந்தையாகவே இருக்கிறது. ரசிகர்களிடம் இருக்கும் இதுபோன்ற குருட்டு நம்பிக்கை தான் பின்னாளில் அவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வசதியை கொடுக்கிறது. தனக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு விசுவாசமாக இருக்கும் ரசிகர்களுக்கு, அந்த நடிகர்கள் நேர்மையாக இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சினிமாவையும் தாண்டி தனக்காக அலகு குத்திய, மண்சோறு திண்ற, உண்ணாவிரதம் இருந்த, தேர் இழுத்த, மடிப்பிச்சை எடுத்த ரசிகர்களுக்காக ரஜினிகாந்த் செய்தது என்ன? “தன் ஒருதுளி வியர்வைக்கு ஒருபவுன் தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா” என்று பாட்டு படித்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்காக கேவலம் மூன்று மணிநேர சினிமாவை கூட இலவசமாக காட்டவில்லை என்பதுதான் எதார்த்தம். அவர்கள் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எந்த வசனத்தை பேசி, காசு சம்பாதித்தார்களோ, அந்த வசனங்களுக்கு கூட நேர்மையாக இல்லை என்பது தான் உண்மை...

1. அந்நியன் படத்தில் ஊழலுக்கு எதிராக புது, புது அவதாரம் எடுத்த விக்ரம், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்.
2. சிங்கம் படத்தில் மக்கள் சொத்தை கொள்ளை அடித்த ரவுடிகளை பாய்ந்து, பாய்ந்து வேட்டையாடிய சூர்யாவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
3. தற்போது வெளியாகி இருக்கும் கத்தி படத்தில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் ஆதரவாக போர்க்குரல் எழுப்பும், விஜய் தான், கொக்கோ கோலா கம்பெனியின் விளம்பர தூதுவராக செயல்பட்டார்.
4. அரசு ஊழியர்களின் ஊழலுக்கு எதிராக ரமணா படம் எடுத்த முருகதாசும், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

இதுபோல சினிமா நடிகர்களின் முரண்பட்ட போக்கை பக்கம் பக்கமாக பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். தற்போது கத்தி படம் வெளியாகி இருக்கும் சூழலில், கொக்கோ கோலா கம்பெனியின் விளம்பர தூதுவராக நடித்த விஜய்க்கு எதிராக சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் எழுதி வருகிற நிலையில், மற்றொரு தரப்பினர், நடிப்பும், சினிமாவும் அவரது தொழில். சினிமாவில் நடிப்பது போலவே நிஜவாழ்விலும் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. என்று எழுதி வருகின்றனர். “சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம், அல்லது கலை அல்லது படைப்பு ” என்று உலகில் எந்த நாட்டு மக்களும் சொல்லலாம். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை ஆளும் அதிகாரத்தை சினிமா நடிகர்களுக்கும், சினிமாத்துறையை சார்ந்தவர்களுக்கும் மட்டுமே வழங்கி இருக்கிறார்கள். தங்கள் தலைவர்களை திரையரங்கில் மட்டுமே இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ, விஜயகாந்தோ, சரத்குமாரோ இன்னபிற நாடிகள் அரசியல்வாதிகளோ அரசியலுக்கு வரும்போது, நடிகர் என்பதை தாண்டி வேறென்ன அடையாளம் அவர்களுக்கு இருந்தது? மக்கள் பிரச்சனைகளுக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மக்களுக்காக அவர்கள் செய்த நன்மைகள் என்ன? மக்கள் உரிமைகளுக்காக எத்தனை போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள்? போராட்டங்களில் பங்கெடுத்து எப்போதாவது சிறை சென்றிருக்கிறார்களா? என்பதை எல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். சினிமா மூலம் தங்களுக்கு கிடைத்த பிரபலத்தை அரசியலில் செலுத்தி காசுபார்க்க எத்தனிக்கும் அவர்களின் நிஜவாழ்வு நேர்மையை உரசிபார்ப்பதில் என்ன தவறு இருந்துவிடபோகிறது?

சினிமாவில் காசுவாங்கி கொண்டு வீரவசனம் பேசியதே இந்த சமூகத்திற்கு செய்த பெரும் சேவை என்று பெரும்பாலான நடிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பிழைப்புக்காக சினிமாவிலும், நிழவாழ்விலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள், அரசியலுக்கு வந்து என்ன நேர்மையாக இருந்துவிட போகிறார்கள்? சினிமாவும், நடிப்பும் தொழில்தானே, சினிமாவில் நடிப்பது போல நிஜவாழ்விலும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சப்பக்கட்டு கட்டுபவர்களில் ஒருவர் கூட, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சினிமா நடிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது, ஒற்றை கேள்வியை கூட எழுப்பவில்லையே ஏன்? இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களையும் விட தமிழ்நாட்டு அரசியலில் சினிமா நடிகர்களின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. குறிப்பிட்ட திரைப்படம் எங்களுக்கு எதிராக இருக்கிறது என்று சில அமைப்புகளோ, அரசியல் இயக்கங்களோ போராடும் போது, சினிமாவில் அரசியலை கலக்காதீர்கள், கருத்துரிமையை, படைப்புரிமையை பறிக்காதீர்கள் என்று நடுநிலை பேசும் நியாயவாதிகள், சினிமா நடிகர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போதோ, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் போதோ எந்தவித எதிர்ப்பையும் தெரிவிப்பதில்லை.

தமிழ்நாட்டு மக்களிடம் சினிமா மோகம் இருக்கிறது என்றுமட்டும் சுருக்கிவிட முடியாது. தமிழர்களிடம் சினிமா போதை இருக்கிறது. அவர்கள் சினிமாவையும், நிஜவாழ்வையும் பிரித்துப்பார்க்கும் பக்குவத்திற்கு இன்னமும் வரவில்லை என்று சொல்லவேண்டும். மக்களை மழுங்கடித்ததில் கார்ப்பொரேட் ஊடகங்களின் பங்களிப்பு மிகப்பெரியது. மக்கள் உரிமைகளுக்காக போராடும் கம்யூனிஸ்டுகளை விட, காசுவாங்கி கொண்டு நடிக்கும் நடிகர்களுக்கு, இந்த நாட்டின் ஊடகங்கள் கொடுக்கும், மதிப்பும், புகழும் முன்னுரிமையும் ஆயிரம் மடங்கு அதிகம். அதனால் தான் ஊடக வெளிச்சம், நடிகர்களின் அரசியல் கனவுகளுக்கு மூலதனமாக இருக்கிறது. எளிதில் அவர்கள் மக்களை சென்றடைகிறார்கள். மக்களிடம் சென்று தங்களை அறிமுகபடுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை. சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் கூட, நடிகர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு தான் இந்த நாட்டின் ஊடகங்களின் லட்சணம் இருக்கிறது. இப்படியாக சினிமா நடிகர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் புனிதம் கற்பித்து, அவர்களை ரட்சகராக வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பெரும் பிரயத்தனம் செய்கின்றன ஊடகங்கள். நடிகர்களுக்கு ஊடகங்கள் கொடுத்த வெளிச்சமும், அதன்மூலம் பாமர மக்களிடம் நடிகர்கள் மீது ஏற்ப்பட்டிருக்கும் கவர்ச்சியும் தான் , நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மக்களை வீதிக்கு வர வைத்தது என்பதை எவராலும் மறுக்க முடியுமா?

தமிழ்நாட்டு அரசியலை சீர்குலைத்ததில் சினிமாவிற்கும், ஊடகங்களுக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது. கருத்தியல் ரீதியாக மக்கள் அணிதிரள்வதை தடுத்து, வெறும் உணர்ச்சிகளாலும், கவர்ச்சிகளாலும் மக்களை மழுங்கடித்து வைத்திருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. தாராளமாக வரட்டும். ஆனால் சினிமா நடிகர் என்ற ஒற்றை அடையாளத்தோடு வருவதை தான் எதிர்க்கிறோம். சினிமாவை தாண்டி மக்களிடம் செல்லட்டும், அவர்களின் உணர்வுகள், பிரச்சனைகள், தேவைகள் என்ன என்று தெரிந்து கொள்ளட்டும். அவர்களுக்காக குரல் கொடுக்கட்டும், மக்களுக்காக போராடட்டும் என்பதை தான் வலியுறுத்துகிறோம். அவர்களை நம்பி, விசுவாசமாக இருக்கும் ரசிகர்களுக்கு நேர்மையாக, உண்மையாக இருக்கட்டும். அதன் பிறகு அரசியலை பற்றியும், அதிகாரத்தை பற்றியும் சிந்திக்கட்டும். வாழ்த்துக்களோடு வரவேற்க காத்திருக்கிறேன்...

- தமிழன் வேலு

வெள்ளி, 10 அக்டோபர், 2014

வேர்கள்

ஒரு விதை செடியாவதற்கும், ஒரு செடி மரமாவதற்கும் அந்த மரம் இந்த மண்ணில் நிலைகொண்டு வாழ்வதற்கும், அந்த மரம் பூத்து குலுங்குவதற்கும், காய் கனிகளை கொடுத்து புத்துயிரோடு வாழ்வதற்கும் வேர்கள் மிக முக்கியமாகிறது. நீரின்றி அமையாது உலகு என்பதை போல, வேரின்றி அமையாது உயிர்கள் என்றுகூட சொல்லலாம். மரத்திற்கும், மண்ணுக்குமான உறவை தீர்மானிப்பதும் வேர்களே. மனிதன் உயிர்வாழ இதயம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஒரு மரம் உயிர்வாழ வேர்கள் முக்கியம். ஆகவே மரம், செடி, கொடிகளின் இதயம் வேர்கள் என்றே சொல்லலாம். மனிதனுக்கு இதயத்தை போல, மரம், செடி, கொடிகளுக்கு வேர்களை போல இரண்டு மனிதர்களின் அல்லது இரண்டு சமூகத்தின் நட்புறவுக்கு இதயமாய், வேர்களாய் இருப்பது நம்பிக்கை. நம்பிக்கை என்ற வேர்களால் மட்டுமே உலகில் மானுடம் தழைத்திருக்கிறது. நம்பிக்கை என்ற வேர்களே மனிதர்களை வழிநடத்துகிறது என்றுகூட சொல்லலாம். நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் ஏதோவொரு நம்பிக்கையோடு தான் கண்விழிக்கிறோம். மனித வாழ்வில் நம்பிக்கை வேர்கள் இல்லாத இடமே கிடையாது. ஆண் – பெண் காதலில், திருமண உறவில், இரண்டு மனிதர்களுக்கான நட்பில், கடவுள் பக்தியில், அரசு இயக்கத்தில், அரசியல் கட்சி வளர்ச்சியில் இப்படியாக மனித அன்றாட வாழ்வியலோடு எங்கும், எல்லாமுமாய் நீக்கமற நிறைந்திருக்கிறது நம்பிக்கை வேர்கள். தான் எல்லோராலும் நேசிக்கப்படுகிறேன் என்று நம்புகிற மனிதன் மிக ஆரோக்கியமாக இருப்பதாகவும், தான் யாராலும் நேசிக்கப்படவில்லை, தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்று நம்புகிற மனிதன் ஆரோக்கியமற்றவனாக இருப்பதாகவும் உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

மனித வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் நம்பிக்கை வேர்களை இந்த சமூகமும், சமூக காரணிகளும் எப்படி சிதைத்து வருகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சாதி, மதம், இனம், வர்க்கம் போன்றவைகள் மனித உறவுகளின் நம்பிக்கை வேர்களில் வெந்நீர் பாய்ச்சும் ஆபத்தான காரணிகளாகும். தன் சாதி தான் உயர்ந்த சாதி என்று நம்புகிறவன், தன்னை விட தாழ்ந்த சாதியில் பிறந்தவனை துன்புறுத்த முனைகிறான். பெரும்பான்மை மதத்தை சார்ந்தவன் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை உமிழ்கிறான். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சக மனிதர்களோடு தொடர்பில்லாமல் எவன் ஒருவனாலும் வாழ முடியாது என்கிற எதார்த்த உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். பல நேரங்களில் நாம் யாரை வெறுத்தோமோ, அவர்களின் உதவியையும் கூட கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் பெற்றே வாழ்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பை உமிழும் உயர்சாதிக்காரர்கள் கூட தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டு தான் வாழ்கிறார்கள் என்பது இங்கே கவனிக்க வேண்டியது. இவற்றிற்கிடையில் இரண்டு மனிதர்களுக்கிடையில் உறவை தீர்மானிக்கும் நம்பிக்கை வேர்களை பணம் என்ற சொல் வெகு வேகமாக கொன்று கொண்டு வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய தருணமிது. பணத்தின் மீது தீவிர காதலை கொண்ட ஒருவன், தன்னிடம் இருக்கும் அன்பை, கருணையை, கொள்கையை, மானுட உணர்வை, சமத்துவத்தை, சக மனிதர்களோடு கொண்டிருக்கும் நல்லுறவை இப்படி எல்லாவற்றையும் கொன்று புதைத்துவிடுகிறான் என்பது எதார்த்த உண்மையாக இருக்கிறது. இந்த சமூகத்தில் பணப்பிரச்சனையால் உடைந்த உறவுகள் ஏராளம். அவற்றை காட்ட சான்றுகள் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒருமாதத்தில் தருகிறேன் என்றுகூறி நண்பனிடம் கடன் வாங்கியவன், ஏதோ சூழலில் தரமுடியாமல் போகும்போது, இருவருக்குமான நட்பும், புரிதலும், இணக்கமும், உறவும் உடைந்து நொறுங்கி போகிறது. அதுவரை அவர்களிடம் இருந்த நம்பிக்கை வேரில், கடனாக பெற்ற பணம் வெந்நீரை ஊற்றி பொசுக்கிவிடுகிறது. ‘நான் நண்பர்களுக்கு கடன் கொடுப்பதுமில்லை, கடன் வாங்குவதுமில்லை’ ஏனெனில் ‘பணம் நட்பை உடைத்துவிடும்’ எனக்கூறும் மனிதர்களை வாழ்வில் ஒருமுறையேனும் நாம் சந்தித்து இருப்போம். நம் வாழ்வில் ஒருமுறையாவது யாருக்காவது நாம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத குற்றவுணர்ச்சியை அனுபவித்து இருப்போம். அப்படி குற்றவுணர்ச்சி ஏற்படவில்லையெனில் நம்மிடம் மானுடம் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

தன் தலைவரை பற்றி யார் என்ன சொன்னாலும் கூட, தன் தலைவர் மிகுந்த யோக்கியமானவர் என்று நம்புகிற தொண்டர்களால் தான் அரசியல் கட்சிகள் இயங்கி கொண்டிருக்கின்றன. தலைவர் மீது தீராத நம்பிக்கையை வைத்திருக்கும் தொண்டர்களை, அவர்களின் நம்பிக்கையை அந்த தலைவர் எந்தளவுக்கு காப்பாற்றுகிறாரோ, அதைபொருத்தே அந்த கட்சியின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நிஜத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள், தொண்டர்களின் நம்பிக்கையை கொன்று புதைத்தே வயிறு வளர்க்கிறார்கள் என்பது தான் பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. ஜனநாயக நாட்டில் மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அரசியல் கட்சிகள் மாநாடு, பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி நடத்துவதெல்லாம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கே. மக்களின் நம்பிக்கையை பெற்ற அவர்கள், நாளடைவில் அந்த நம்பிக்கையை காப்பாற்ற தவறும் போது தான் பின்னடைவுகளை சந்திக்கிறார்கள். அரசியல் தலைவர்களுக்கு மட்டுமில்லை, சாமான்ய மனிதர்கள் கூட, தன்னை சுற்றி இருப்பவர்களின் நம்பிக்கையை இழந்து, அவநம்பிக்கையை சம்பாதிக்கும் போது தான் சறுக்கல்களை சந்திக்கிறார்கள். ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்தே, சக மனிதர்கள் தம்மீது கொண்டுள்ள நம்பிக்கையே ஒன்றே. ஆனால் நிஜவாழ்வில் மனிதர்கள், உறவுகளை மேம்படுத்துவதை விட, பணம் சேர்த்துக் கொள்வதிலே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வணிகமயமாகி போன சூழலில் பணம் மனிதர்களுக்கு தேவையானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பணம் மட்டுமே போதுமானதில்லை என்பதையும் மனிதர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அடித்தட்டு மக்களிடம் புகழ்பெற்ற கதையொன்று வழக்கத்தில் உண்டு. நாட்டு மன்னன், மக்கள் மீது அன்பு செலுத்தாமல், பதவி செருக்கோடு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்தானாம். ஒருநாள் அவன் வீட்டில் வளர்ந்த நாய் ஒன்று இறந்துபோனதாம். நாயின் இறப்பு செய்தி கேட்ட அந்நாட்டு மக்கள் அனைவரும் அழுதுபுரண்டு கண்ணீர் வடித்தார்களாம். இதனை கண்ட ராஜா, மக்கள் நம்மீது அளவுகடந்த மதிப்பு வைத்திருப்பதாக எண்ணி மகிழ்ச்சி கொண்டானாம். ஒருநாள் ராஜாவே இறந்து போனபோது, அந்நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்களாம். மன்னரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் நாயின் இறப்புக்கு கண்ணீர் வடித்த மக்கள், கொடுங்கோல மன்னர் இறந்ததை திருவிழாவாக கொண்டாடினார்கள். மன்னரிடம் இருந்த பணமும், பதவியும் அவர்மீது மதிப்பை மக்களிடம் உருவாக்கவில்லை என்பது தான் அந்த கதை நமக்கு சொல்லும் நீதி. கோடி ரூபாய் கொடுத்து காதலை வாங்கமுடியும் என்றால், அது மனிதன் மீதான காதல் அல்ல, பணத்தின் மீதான காதல். பணத்தின் மீதான காதல், பணம் தீர்ந்துபோனதும் வடிந்துபோகும் தன்னியல்பை கொண்டது. ஆனால் மனிதன் மீது கொண்ட காதல் எந்த சூழலிலும் தீர்ந்துபோகாத வல்லமை கொண்டது. சக மனிதர்களின் நம்பிக்கையை பெறுவதைக் காட்டிலும், அந்த நம்பிக்கையை காலத்திற்கும் அழிந்து போகாமல் பாதுகாப்பதே ஆகப்பெரிய சவால். எல்லா மனிதர்களும் சக மனிதர்களின் நம்பிக்கையை பெறுகிறார்கள், ஆனால் கடைசிவரை நம்பிக்கையை காப்பாற்றுகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனித உறவுகளை, நம்பிக்கை வேர்களை சிதைக்கும் பணத்திடமிருந்து மனிதர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது. தங்கள் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவர்களின், தங்கள் உறவுகளுக்கு வேறாய் இருந்தவர்களின் நம்பிக்கையை பேணி பாதுகாப்பதும் மிக மிக அவசியமாகிறது. பணத்தை மையாமாக கொண்ட நட்பும், சுயலாப ஆதாயத்தை அடிநாதமாக கொண்ட பிணைப்பும் மனித சமூகத்திற்கும், அதன் உறவுகளுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியதாக இருப்பதால், பணம் என்ற புள்ளியில் இருந்து விலகி நின்று, நம்பிக்கை வேர்களை பாதுகாப்பது நமது அடிப்படை கடமைகளில் ஒன்றாகும்....

- தமிழன் வேலு

கருத்தியல் ஆலோசனை

நம் ஒவ்வொரு சொல்லும், கருத்தும் வலிமை வாய்ந்தது. வலிமை வாய்ந்த நம் கருத்தை எந்த நேரத்தில், எங்கே பதிவு செய்கிறோம் என்பதை பொறுத்தே அந்த கருத்தின் வலிமை கூடுகிறது. அதேபோல எல்லா மனிதர்களுக்கும் சுயமான சிந்தனையும், அதனையொட்டிய கருத்தும் இருக்கவே செய்கிறது. அடிமுட்டாள் என்று நம்மால் சொல்லப்படுகிறவர்கள் கூட சுயசிந்தனை உடையவர்களே. ஆனால் அவர்களின் சிந்தனை எதனை அடிப்படையாக கொண்டது என்பதிலே அது நல்லவை என்றும், தீயவை என்றும் உருவை பெறுகிறது. எல்லா மனிதர்களும், தனக்கு ஒரு சிக்கல் அல்லது நெருக்கடி ஏற்படும் போது மற்றவர்களிடத்தில் கருத்தியல் ஆலோசனை கேட்க எத்தனிக்கிறார்கள். முந்தைய காலத்தில் நம் தாத்தா, பாட்டி உருவங்களில் வீட்டுக்கொரு ஆலோசகர்கள் இருந்தார்கள். அவர்கள் நம் நலன்களில் அக்கறை கொண்டவர்கள். ஆனால் நகரமயமாதல் விரிந்துவிட்ட இன்றைய சூழலில் நல்லது, கெட்டதுகளை பரிந்துரைப்பது கூட வணிகமாகிவிட்டது என்பது தனிக்கதை. ஆலோசனை கேட்பவர்கள் தம்மைவிட அறிவில், அனுபவத்தில், வயதில் மூத்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள். அப்படி மற்றவர்களின் ஆலோசனையை பெறுகிற எல்லோரும், அந்த ஆலோசனையை செயல்படுத்துகிறார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நமக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும், நம் ஆன்மா தீவிரமான யோசனையில் ஆழ்ந்துவிடும். தீவிர யோசனைக்குப் பின்னர் நம் மனம் ஒரு முடிவையும் கண்டறிந்துவிடும். நமக்கு ஏற்பட்ட பிரச்சனையால் குழப்பத்தில் இருக்கும் நாம், நாம் தேர்ந்தெடுத்திருக்கும் முடிவு சரியா? தவறா? என்பதில் குழப்பமடைந்துவிடும் போதுதான் மற்றவர்களின் குறிப்பாக நம் நண்பர்களின் கருத்தை நாடி செல்கிறோம். நமக்கு கருத்து சொல்லும் ஒருவர் தம், சொந்த வாழ்வின் அனுபவத்தின் மூலமாகவே அல்லது தான் நேரிடையாக கண்ட அனுபவத்தின் மூலமாகவோ ஒரு கருத்தை நமக்கு சொல்வார். நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கும் முடிவையும், நம் நண்பர் நமக்கு சொன்ன கருத்தையும் பொருத்தி பார்த்து அதிலிருந்து நமக்கு உடனடியாக சாதகமான ஒன்றை செயல்படுத்த நாம் எத்தனிக்க தயாராகிவிடுகிறோம். இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று எதுவென்றால், நாம் யாரிடம் ஆலோசனை பெறலாம் என்பதும், நாம் யாருக்கு ஆலோசனை சொல்லலாம் என்பதும் தான்...

நாம் ஆலோசனை கேட்கும் நபர் நேர்மையான, நமக்கு நம்பிக்கையான ஒருவராக இருத்தல் அவசியம். மற்றவர்கள் மீது விருப்பு, வெறுப்பற்ற அன்பை செலுத்தக்கூடியவராகவும், சமூகத்தின் மீது நல்ல பார்வை கொண்டவராகவும், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு அவரின் நேர்மை பாராட்ட தக்கதாகவும் இருக்க வேண்டும். இறுதியாக நம் நலனில் பெறாமை கொள்ளாதவராக இல்லாமல், அக்கறை செலுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். அடுத்ததாக நாம் யாருக்கு ஆலோசனைகளை சொல்லலாம் என்பதில் மிகுந்த கவனம் தேவை. நாம் எல்லோரும் தினந்தோறும் பேசிக்கொண்டே இருக்கிறோம். யாரோ ஒருவருக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அது சரியென்றோ, தவறென்றே நாம் பார்ப்பதில்லை நம் மனதிற்கு சரியென்று பட்டதை சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிரச்சனை என்று நம்மிடம் வருபவர்களுக்கு, நம் வாழ்வின் ஊடாக நமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், நாம் சந்தித்த மனிதர்கள் சொன்ன நிகழ்வுகளையும் தொகுத்து சரியான ஒன்றை பரிசீலிப்போம். நம்மிடம் அறிவுரை கேட்பவர் நம்மீது மதிப்பு கொண்டவரா? என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

மனம் நிறைய அழுக்கு சிந்தனை உடையவர்களும் கூட, மற்றவர்களின் ஆலோசனையை கேட்கத்தான் செய்கிறார்கள். சமூக ஒற்றுமையை சிதைக்கும் அழுக்கு சிந்தனை உடையவர்கள், மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் கூட, தம் மனம் முழுக்க நிறைந்திருக்கும் அழுக்கு சிந்தனைகளையே செயல்படுத்த முனைவார்கள். ஏனெனில் அவர்களின் சிந்தனை முழுவதும் அழுக்காகவே இருக்கும், மற்றவர்களின் அழிவை பற்றியே எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பார்கள். அப்படி நம் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத நபர்களிடம் விவாதம் செய்வதை கூட தவிர்ப்பது நலம். முட்டாள்களோடு விவாதிக்கும் போது நாம் எப்போதும் தோற்றே போவோம். ஏனெனில் அவர்கள் ‘அறிவுப்பூர்வமாக, முட்டாள்தனமான கருத்து ஒன்றை சரியென்று மிக ஆழமாக நம்பிக் கொண்டிருப்பார்கள்’. என்ன விளக்கம் கொடுத்தும் அவர்களின் முடிவை நம்மால் மாற்றவே முடியாது. எல்லாம் எனக்கு தெரியும் என்று மமதையோடு அவர்கள் இருப்பார்கள். மற்றவர்கள் மீது எப்போதும் அலட்சியமான பார்வையை செலுத்துவார்கள். மற்ற எல்லோரை விடவும் நான் தான் உயர்வானவன் என்ற நினைப்போடு எல்லோரையும் அணுகுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் கருத்து சொல்வதையோ, அறிவுரை சொல்வதையே தவிர்த்துவிடுவது நல்லது. அவர்களின் முடிவு எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் கூட, மற்றவர்களின் ஆலோசனையை கேட்பார்களே ஒழிய, அதை செயல்படுத்த துளியும் நினைக்கமாட்டார்கள். அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களோடு நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கிணற்றில் வீசப்பட்ட கல்லுக்கு நிகரானது. அப்படிப்பட்ட மனிதர்களை தவிர்த்து, நம்மை முழுமையாக நம்பி, நம் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பவர்களுக்கு விருப்பு வெறுப்பற்ற அன்போடு, சரியான வாழ்வியல் பாதையை காட்டிடுவோம்....

- தமிழன் வேலு

யோக்கியம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையும், அதற்கு பின் தமிழகத்தில் நிலவிவரும் சூழல்களும் பல்வேறு சிந்தனைகளை உருவாக்குகிறது. தீர்ப்பை, ஒருதரப்பு ஆதரிக்க, மறுதரப்பு மிக தீவிரமாக எதிர்க்கிறது. இரண்டுக்கும் மத்தியில் இன்னொரு தரப்பு, எந்த அரசியல்வாதி ஊழல் செய்யாம இருக்காங்க? யாரு யோக்கியம்? என்ற வாதத்தை முன்வைக்கிறது. “உங்களில் யார் யோக்கியமானவரோ, அவர்களே முதலில் கல்லெறியுங்கள்” என்ற பைபிள் வசனம் நினைவுக்கு அடிக்கடி வந்து போகிறது. எல்லோரும் செய்கின்ற தவறை தானே, நானும் செய்தேன் என்று தைரியமாக மனிதர்கள் பேசும் காலமும் வந்துவிட்டது. ‘ஊரு உலகத்தில நடக்காத தப்பையா செஞ்சுபுட்டேன்’ என எதிர்கேள்வி கேட்டு இயல்பாக தன்னை நியாயப்படுத்துகிறார்கள். எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக எப்படி ஒரு குற்றம் நியாயமாகிவிடும் என்பதை பற்றி யோசிப்பதற்கு நாம் தயாரில்லை. நேர்மையாக வாழவேண்டிய சமூகம், நேர்மையின்மையை, சமூக எதார்த்தக்கூறாக ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கிறது. என்பதையே இது காட்டுகிறது. ஒரு தவறை இன்னொரு தவறை கொண்டு நியாயப்படுத்த இந்த சமூகம் பழகி கொண்டது. அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தள்ளும் ஊழியரோ, வருவாய்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உதவியாளர்களோ லஞ்சம் கேட்பதற்கு தயங்குவதே கிடையாது. உரிமையோடு கேட்கிறார்கள். உயர்மட்ட அதிகாரிகள், அவர்கள் தகுதிக்கேற்ப பெரிய அளவில் செய்யும் முறைகேடுகளால், கடைநிலை ஊழியர்களின் அம்பதுகளும், நூறுகளும் நியாயப்படுத்தப்படுகின்றன. ஒரு அரசியல்வாதி தான் செய்யும் ஊழலால், தனக்கு கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் ஊழலை அனுமதிக்கிறார். கீழ்மட்ட தொண்டர்களோ, தனக்கு மேலிருப்பவர்களுக்கு கொடுப்பதற்காக, கடைகளில், நிறுவனங்களில் வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். இப்படியாக மேலிருப்பவரின் தவறை காட்டி, கீழிருப்பவர்களும், தன் சுயத்திற்காக மேலிருப்பவர்கள், கீழிருப்பவர்களின் தவறுகளை, அனுமதிப்பதும் எதார்த்த நிகழ்வாகிவிட்டது. சின்ன, சின்ன தவறுகளை அனுமதிக்க, அல்லது மன்னிக்க முயலும் போது, இந்த சமூகம் தன்னியல்பாக தன் நேர்மையை இழந்துகொண்டே வருகிறது என்பதை நாம் விரைவில் புரிந்துகொள்ளாவிட்டால், நேர்மையை புத்தகங்களிலும், வரலாறுகளிலும் மட்டுமே தேடவேண்டிய நிலைமை வரலாம். எல்லோரும் சரியாக இருந்தால், நானும் சரியாக இருப்பேன் என்று நினைக்காமல், என் மனசாட்சிப்படி நான் சரியாக இருக்கிறேன் என்று எல்லோரும் நினைத்துவிட்டாலே, போதும் கடுமையான சட்டங்களும் வேண்டாம், கடுங்காவல் தண்டனையும் வேண்டாம்...

-தமிழன்வேலு

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : சிறையில் ஜெ.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு அரசியலாக்கப்பட்டு வருகிறது. அதோடு ஊழல் செய்தவருக்கு ஆதரவாக அனுதாப அலையை உருவாக்கும் முயற்சியும் சந்தடி சாக்கில் சத்தமில்லாமல் நடந்துகொண்டு வருகிறது. இந்த தீர்ப்பு ராஜபக்சேவின் சதி என்கிறார்கள், கன்னடர்களின் பழிவாங்கும் நோக்கம் என்கிறார்கள். மக்கள் சொத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு உலகில் எல்லா நாடுகளிலும் தண்டனை தான் வழங்குவார்கள். அதே நடைமுறைதான் இப்போதும் நடந்திருக்கிறது. இதில் சதி செய்வதற்கோ, பழிவாங்குவதற்கோ என்ன இருக்கிறது? தவறு செய்தவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது, தான் நிரபராதி என்று நிரூபிப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரியும் ஓலமும்? படிப்பறிவற்ற, ஆர்வக்கோளாறு தொண்டர்கள் அன்புமிகுதியில் ஆர்ப்பாட்டம் செய்வதை கூட பொறுத்துக் கொள்ளலாம். படித்த அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாக்காரர்கள் செய்யும் அலப்பரைகள் தமிழர்களை உலகளவில் கோமாளிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது.

நல்லாட்சி வழங்கினார், தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார் என்பன போன்ற சப்பை வாதங்களை முன்வைக்கிறார்கள். நல்லாட்சி செய்வதற்கும், தமிழர்களின் உரிமைகளை பெற்று தருவதற்கும் தானே அவருக்கு முதல் அமைச்சர் என்ற உயரிய பொறுப்பை ஏழு கோடி தமிழர்களும் கொடுத்தார்கள். "நல்லாட்சி செய்வதும், உரிமைகளுக்காக போராடுவதும் ஒரு மாநில முதல்வரின் தலையாய கடமை தானே ஒழிய, வழக்கில் இருந்து விடுதலை செய்வதற்கான சிறப்பு தகுதிகள் அல்ல" என்பதை அந்த அபத்தவாதிகள் எப்போது புரிந்து கொள்வார்கள்? மிக்சி கொடுத்தார், பேன் கொடுத்தார், கிரைண்டர் கொடுத்தார், லேப்டாப் கொடுத்தார் என்கிறார்கள். எல்லாம் கொடுத்தார். யார் பணத்தில் இருந்து கொடுத்தார். மக்கள் வரிப்பணத்தில் இருந்துதானே. இப்படி அபத்தங்களை எல்லாம் கேட்கும் போது சதுரங்கவேட்டை படத்தில் வரும் காட்சி தான் நினைவுக்கு வருகிறது. “ஏழையாக இருந்து நல்லவனாக இருப்பதற்கும், பணக்காரனாக இருந்து நல்லவனாக இருப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு சார். மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில் கருப்பு கண்ணாடியும், தையல் மிஷினும் நானும் கொடுத்திருக்கிறேன்” என்று சொல்லி தன் தரப்பு குற்றங்களை நியாயப்படுத்துவார் கதாநாயகன்.

நூறு கோடியை கொள்ளையடித்த ஒருவன் பத்து கோடியில் மக்களுக்கு வேட்டி சேலை வாங்கி கொடுத்துவிட்டால், கொள்ளையடித்தவனை மன்னித்து விடுவோமா?

 ******
ஒரு ஊழல்வாதிக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் தீக்குளிக்கிறார்கள், கல்லூரி மாணவர்கள் போராடுகிறார்கள் என்றால் இந்த நாட்டின் கல்வித்தரம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

******

தீர்ப்பை படிச்சி பார்த்த சட்ட வல்லுனர்கள் எல்லாம் மிரண்டு போய் கிடக்காங்க. "நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி, மூளை இதுல எல்லாத்துலயும் 'நீதி தாகம்' கொண்ட ஒருவரால் மட்டும் தான் இப்படி ஒரு தீர்ப்பை சொல்ல முடியும்"...

******

உண்மையில், ஜெயலலிதாவுக்கு இந்த தண்டனை ஏன் வழங்கப்பட்து என்ற விவரம் கிராமப்புற மக்களில் பெரும்பாலனவர்களுக்கு தெரியவில்லை. எதோ அநியாயம் நடந்துவிட்டதை போல முழிக்கிறார்கள். அந்த அளவுக்கு கடந்த ஒருவாரமாக ஊடகங்கள் அவர்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன. "பத்திரிக்கைகாரன் எல்லோரும் கவர் வாங்கமாட்டேன்" என்று உறுதியை எடுத்துக்கொண்டாலே போதும், நேர்மையான செய்திகள் மக்களை சென்றடைவதற்கு எந்த தடையும் இருக்காது....

ஏன் இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டிய எதிர்கட்சிகள் எல்லோரும் தொடை நடுங்கி கிடக்கிறார்கள்...

- தீர்ப்புக்குப் பின் முகநூளில் எழுதியது...

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பேருந்து பயணமும்.. பக்கத்து சீட்டில் தேவதையும்... (தொடர்ச்சி)

இந்த இடத்திலே சுத்த சைவர்களை பற்றிய என் அனுபவம் ஒன்று நினைவுக்கு வந்தது. நீங்கள் என்னோடு வர சம்மதித்தால் உங்களை நான் மைலாப்பூருக்கு அழைத்து செல்வேன். பேருந்து திட்டக்குடி நோக்கி சென்று கொண்டிருக்க, நாம் மட்டும் மைலாப்பூருக்கு சென்று வரலாம். எனக்கிருக்கும் பறக்கும் சக்திமூலம் உங்களை என்னால் தூக்கி செல்ல முடியும். கபாலீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு தான் நாம் செல்லப்போகிறோம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த சம்பவம் இது. மாங்கொல்லையில் அம்பேத்கர் பிறந்ததினம் கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்த காலம் அது. “அங்கிருக்கும் மக்களின் (பார்ப்பனர்கள்) பழக்க வழக்கங்களும், நிகழ்ச்சிக்காக வரப்போகும் மக்களின் பழக்க வழக்கமும் வேறு வேறானவை. அவர்கள் மதுப்பழக்கம் உடையவர்கள், ஒழுக்கமாக இருக்கமாட்டார்கள்” என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்திலே சொல்லி இருந்தார். பிறகு நீதிமன்ற அனுமதியோடு விழா நடந்தது என்பது தனிக்கதை. அம்பேத்கர் பிறந்தநாளுக்கு இரண்டு நாள் கழித்து நண்பர் ஒருவரை சந்திக்க மைலாப்பூர் செல்ல வேண்டியிருந்தது. என்னிடம் டூவீலர் இல்லாததால் நண்பரின் தம்பியை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். எங்களை கபாலீஸ்வரர் கோயில் அருகே நண்பர் நிற்க சொல்லி இருந்தார். சாயங்கால நேரம் என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வந்துக் கொண்டும் போயிக்கொண்டும் இருந்தார்கள். சிறிது நேரத்தில் நண்பர் வந்துவிட்டார். ஒரு வேலை விஷயமாக அவரை சந்திக்க போயிருந்தேன். அரைமணி நேரத்திற்கு பிறகு அவரிடம் இருந்து நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். கிளம்பும் போது நண்பரின் தம்பி என்னிடம், மச்சி... ஒரே தலைவலியா இருக்கு, பீர் சாப்பிடலாமா? என்றார். வேனாம்யா முகப்பேர் போயிடலாம் என்றேன். இல்ல வா... இங்க எதிர்லயே டாஸ்மாக் இருக்கு. ஒரு பத்து நிமிஷத்துல போயிடலாம், சும்மா பீர்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். யோவ் டூவீலர் ல போகவேண்டி இருக்கு, போலீஸ் புடிச்சா வம்புயா என்று என் கவலையை சொன்னேன். சாதா பீர்தானே, சாப்பிட்டு ஒரு ஸ்வீட் பீடா போட்டா சுத்தமா வாசனையே இருக்காது என்றார். சரி வா... என்று சொல்லி டாஸ்மாக் கடைக்கு போனோம். அங்கு ஒரு குடிமகன், ‘தலைவா வண்டியை இங்க நிறுத்தாதீங்க, கொஞ்ச தூரம் தள்ளிப்போய் நிறுத்துங்க’ என்றார். ஏன் தலைவா என்றேன். இல்ல உங்க வண்டி நம்பரை மப்டில நிக்கிற போலீஸ் காரங்க நோட் பண்ணிக்குவாங்க, பக்கத்து சிக்னல்ல போலீஸ் நிப்பாங்க, அவங்க கரெக்டா உங்களை பிடிச்சு பில்லு போட்டுடுவாங்க என்றார். நம்மூரு போலீஸ்காரங்க திருடனை புடிக்க இப்டிலாம் யோசிச்சிருந்தா நாடு எப்பயோ முன்னேறி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, வண்டியை கோயில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு வந்தேன். உள்ளே சென்றால் பார் அவ்வளவு சுத்தமாக இல்லை. நின்றுகொண்டு தான் குடிக்க வேண்டும். சுவத்துல எல்லாம் பான்பராக் கரை, ஒரு மூலையில் யாரோ வாந்தி வேறு எடுத்திருந்தார்கள். ஆங்காங்கே குடித்த பாட்டில்களும், கிளாஸ்களும், பீடி, சிகரெட்களும் எக்கச்சக்கமா சிதறி கிடந்தன. அந்த இடமே எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இங்கு குடிக்க வேண்டாம் என்று நினைக்கையில் பீர் பாட்டிலை திறந்து கையில் நீட்டிவிட்டார் நண்பரின் தம்பி. நிறைய பிராமினர்களும் அங்கு குடிக்க வந்திருந்தார்கள். தொட்டதிற்கெல்லாம் ஆச்சாரம், ஆச்சாரம் என்று கூச்சல் போடும் அவர்கள், ஆச்சாரத்தை அற்ப போதைக்காக மார்வாடி கடையில் அடகு வைத்துவிட்டு வந்திருந்தார்கள் போலும். பாதிக்கு மேல் பிராமினர்களாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேச்சு மொழியை வைத்து நானாக அனுமானித்துக் கொண்டது அது. அதில் மூன்று நான்கு பேர் உச்சிக் குடுமியோடு இருந்தார்கள். மதுபானக்கடை படத்தில் ‘சமரசம் உலாவும் இடமே’ என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது. ஒரு முடக்கு பீரை குடித்துவிட்டு சைடிஷ் வாங்க சென்றேன். அங்கே குடுமி வைத்த சுத்த சைவர் ‘போட்டி(குடல்)’யை போட்டியே இல்லாமலும், ஆசாரமே இல்லாமலும் உள்ளே திணித்துக் கொண்டிருந்தார். அதையும் கடந்து மீன் வறுவல் வாங்க சென்றேன். அங்கே சுத்த சைவர் ஒருவர் ‘அம்பி நன்னா மீனை பொறிச்சி குடுடா’ நேத்தைக்கு கொடுத்தது சுத்தமா நன்னால்ல அடிச்ச சரக்க அதுவே கொடுத்துடுச்சு’ என்று ஆச்சாரம் பேசிக்கொண்டிருந்தார். பெரும்பாலும் சுத்த சைவர்களோ, பார்ப்பான்களோ தங்கள் தனி ஒழுக்கத்தின் மீது ஆச்சாரம் பேணுவதில்லை. ஒடுக்கப்பட்ட,விளிம்புநிலை மக்கள் மீது, வலிய திணிக்கிறார்கள் என்பது வெளிச்சம். அவர்களின் ஆச்சாரம் என்பது அடக்குமுறையின், தீண்டாமையின், சாதிக்கொடுமையின் உச்சமே ஒழிய, ஒழுக்கம் அல்ல என்பது அன்றைக்கு நான் தெரிந்து கொண்ட உண்மை. இப்போது நாம் மீண்டும் பேருந்துக்கே செல்லலாமா? டாஸ்மாக் கடை வரை அழைத்து வந்து, சரக்கு ஏதும் வாங்கி கொடுக்காமலே இழுத்துட்டு போறியேடா பாவி என்ற உங்களின் பொருமல் எனக்கு கேட்காமல் இல்லை. இருந்தாலும் பேருந்து பயணத்துக்கு சரக்கு அடிச்சா சரிவராது என்பதால் நாம் பேருந்துக்கு செல்வது தான் சரியாக இருக்கும். 

நெஞ்செல்லாம் நிறைந்த கருவாட்டு வாசனையில் தேவதையை மறந்தே விட்டேன். அவள் இருக்கையை பார்க்கையில் கண்ணயர்ந்து தூங்கி கொண்டிருக்கிறாள். எழுந்து பார்க்கையில் அவள் என்னை தான் முதலில் பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு நானும் தூங்க தயாரானேன். நான் அமர்ந்திருந்த சீட்டு அசவுகரியமாக இருக்க தூக்கமின்றி அவதிப்பட்டேன். அருகில் பெருசாவும் இல்லாமல், சிறுசாவும் ஒரு தினுசாக இருந்த ஆசாமி ஆலமரம் அடியோடு சாய்ந்து மேலே விழுவது போல தூங்கி தூங்கி மேலே விழுகிறார். அவர் மேலே விழும் வேகத்தில், நானும் தூக்க கலக்கத்தில் இருக்க, தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்துவிடுவேனோ என்ற பயம் வேற அடிக்கடி வந்து தொலைக்கிறது. போதாக்குறைக்கு படிக்கட்டுக்கு நேரெதிர் சீட்டு என்பதால் பேருந்து செல்லும் வேகத்தில் ஊதக்காற்று வேறு என்னை கட்டிக் கொண்டு விலக மறுக்கிறது. குளிருக்கும், தூக்கதிற்குமான போராட்டத்தில் குளிரே வென்றது. அதோடு விக்கிரவாண்டி அருகில் இருக்கும் மோட்டலும் வந்தது. மோட்டல் ஊழியர் பேருந்தை தட்டி, தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பினார். ‘மரிக்கொழுந்தே என் மல்லிகப்பூவே’ என்ற பாடல் உச்சஸ்தாயில் ஸ்பீக்கரில் அலறிக்கொண்டிருந்தது. ஆண்கள் எல்லோரும் வேகமாக கீழே இறங்குகிறார்கள் நானும்தான். நேராக சென்று குளிருக்கு இதமாக சூடாக ஒரு பால் குடித்துவிட்டு பாத்ரூம் செல்ல கிளம்புகையில், ஆண்கள் எல்லாம் சாரை, சாரையாக ரோட்டோரமாக சென்று கொண்டிருந்தார்கள். பாத்ரூம் வசதி இருந்தாலும் கண்ட இடத்தில் ஜிப்பை திறந்து கொண்டு ஒண்ணுக்கு போவதில் ஆண்களுக்கு அலாதி பிரியம் போல. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று பாத்ரூம் அவ்வளவு சுத்தமாக இருக்காது. சில நேரங்களில் தண்ணீர் வசதி கூட இருக்காது. கோயம்பேடு பாத்ரூமில் மலம் கழித்துவிட்டு தண்ணீர் கூட ஊற்றாமல் அப்படியே காய்ந்துபோய் கிடக்கும் காட்சியை காணலாம். அந்த கழிவறைக்குள் செல்வதற்கு திடமான மன தைரியம் வேண்டும். அப்படித்தான் நெடுஞ்சாலை மோட்டல்களிலும் இருக்கும். இரண்டாவது அதிகபட்சம் பதினைந்து நிமிடம் பேருந்து நிற்கும் அதற்குள் பாத்ரூம் செல்வது, டீக்குடிப்பது, தம் அடிப்பது எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு பேருந்துக்குள் ஏறிவிட வேண்டும். பேருந்து கிளம்பிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமாக கூட இருக்கலாம். அங்கிருக்கும் கழிவறையில் ஒரே நேரத்தில் அதிகமாக இருபது பேர் யூரின் போகலாம். மோட்டல்களில் ஒரே நேரத்தில் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் நிற்கும். ஒரு பேருந்துக்கு 50 பேர் என்று கணக்கு வைத்தால் கூட 500 பேர் அங்கு கூடுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் ரொம்ப அவசரம் இல்லையெனில் கீழே இறங்குவதில்லை. ஆனால் பெரும்பாலான ஆண்கள் கீழே இறங்கி டீ குடிப்பது, தம் அடிப்பது போன்ற காரியங்களால் பயணக் களைப்பில் இருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். 200 பேர் என்றே வைத்துக் கொள்வோம். கிடைக்கும் பதினைந்து நிமிடத்தில் எல்லோரும் குறித்த நேரத்தில் தங்கள் வேலைகளை முடித்து கொண்டு வர முடியாது. ஆகவே ஆண்கள் ரோட்டோரத்தில் ஜிப்பை திறந்து கொண்டு அவசர அவசரமாக நிற்கிறார்கள். பாத்ரூம் அசவுகரியமாக இருந்தால் கூட பெண்கள் பாத்ரூமுக்குள் தான் சென்றாக வேண்டும். காமுகர்களின் கழுகுப்பார்வைக்கு அப்போது கூட ஓய்வில்லை என்பதாலே. பெரும்பாலான பெண்கள் மோட்டல்களில் இருக்கும் கழிவறையை பயன்படுத்த விரும்புவதில்லை. வீடு சென்றுசேரும் வரை அடக்கி கொள்கிறார்கள் என்பது மிகுந்த கவலை தரக்கூடிய ஒன்று. அங்கு விற்பனைக்கு இருக்கும் பொருட்களின் விலையெல்லாம் இரண்டு மடங்கு அதிகம். யூரினுக்கு 3 ரூபாயும், டூ பாத்ரூம் செல்ல 5 ரூபாயும் வசூலிக்கிறார்கள். இருப்பினும் போதுமான அளவில் தரமான கழிப்பறை வசதியை அவர்கள் செய்து கொடுப்பதில்லை. எல்லாம் முடிந்து பேருந்தில் ஏறியவுடன், பஸ் கிளம்ப போகிறது, எல்லாரும் வந்தாச்சா, பக்கத்து சீட்டு ஆளுங்க எல்லாம் சரியா இருக்காங்களா? பாருங்க என்று கண்டக்டர் சொல்லவும் நான் தேவதையை பார்க்கிறேன் அழகே சாட்சியாக அமர்ந்திருக்கிறாள். கீழே இறங்காத அவள் தான் வைத்திருந்த தண்ணீரை குடித்தாள். இவ்வளவு நேர பயணத்தில் நாம் கிழிந்த கந்தல் துணிப்போல் ஆகிவிட்டேன். அவள் மட்டும் பேருந்து ஏறுவதற்கு முன்பு பார்த்த அதே அழகில் அப்படியே இருக்கிறாளே என்ற ஆச்சர்யம் இலைய்பாகவே வந்து போனது. அந்த நடுநிசியில் கூட அவள் இதழ்கள் சிரித்துக்கொண்டே தான் இருக்கின்றன. இதற்கு முன்னர் எந்த தேவதையும் இவ்வளவு நேர காட்சியை எனக்கு கொடுத்ததில்லை. மோட்டலில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து பேருந்து ரோட்டில் ஏறும் போது வெளியே எட்டிப்பார்க்கிறேன். குற்றால ஐந்தருவி என்னங்க, அம்பது அறுபது அருவிகளை ஒரே நேரத்தில் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நீரையெல்லாம் சுத்திகரிச்சி, தஞ்சாவூர் பக்கம் திருப்பிவிட்டால் முப்போகம் அமோகமா விளையும். ரோட்டில் ஏறிய பேருந்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்ட, விலகி சென்றிருந்த ஊதக்காற்றும் மீண்டும் என்னை தேடி வந்து கட்டிக்கொண்டுவிட்டது. தேவதையை பார்க்க ஆசைப்பட்டு குளிரில் நடுங்கும் கொடுமையை எங்கு சொல்ல...

கடுமையான போராட்டத்திற்கு பிறகு என்னையும் அறியாமல் முன்சீட்டு கம்பியில் தலைவைத்து தூங்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பின் நடந்தவை எல்லாம் அந்த தேவதைக்கே வெளிச்சம். கண்விழித்து பார்க்கையில் விருத்தாசலம் தாண்டி பெண்ணாடம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. செல்போனை எடுத்து மணிப் பார்த்தால் மணி 3.45. கடுமையான கழுத்துவலியில் கழுத்தை திருகி தூர எறிந்துவிடலாம் என்று கூட நினைக்கிறேன். கோமாவில் இருந்து மீண்டவன் எதையோ தேடுவது போல நான் என் தேவதையை தேடுகிறேன். அவள் அமர்ந்திருந்த முன் சீட்டில் பார்த்தால் தேமேவென பொக்கைவாய் கிழவி ஒன்று வெத்தலை போட்டுக் கொண்டிருக்கிறது. தேவதைகளுக்கு உருமாறும் சக்தி இருக்குமா? என்று நினைத்தேன். ச்சே.. ச்சே... இது கலியுகம் அப்படி எல்லாம் நிகழ வாய்ப்பே இல்லை. உளுந்தூர் பேட்டையிலோ அல்லது விருத்தாச்சலதிலோ இறங்கி இருக்கணும். அதுதான் உண்மையாக கூட இருக்கும். அதற்கப்புறம் விருத்தாச்சலத்தில் கிழவி ஏறி இருக்கும் என்று நினைக்கிறேன். நாலு மணிநேரம் என்கூட அவள் பயனித்திருக்கிறாள், அவளின் கவனத்தை என் பக்கம் திருப்ப இயலவில்லை. எப்போதும் சிரிப்பது போல சிரித்தாலே ஒழிய பிரித்யோகமாக எனக்காகவே சிரிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவளிடம் ஒரே ஒரு வார்த்தைக் கூட பேச துணிவில்லை. அவ்வளவு பயந்தாங்கொள்ளியா நான் என்று யோசிக்கிறேன். டீக்கடையில் திரும்பி திரும்பி பார்த்தவள், தனிமையில் இருக்கும் போது ஏன் என்னை கவனிக்கவில்லை? டீக்கடையில் நிற்கும் போது ஓஓஓ வென நண்பன் ஒருவன் சத்தம் எழுப்பினான். அதனால் அவள் திரும்பி பார்த்திருக்கலாம். அப்போதும் கூட அவள் எனக்காக திரும்பி பார்த்திருக்கமாட்டாளோ? என்று யோசித்துக் கொண்டே கிழவி அருகில் சென்று அமர்ந்தேன். பாட்டி எங்க போறீங்க? என்றேன். இந்த கேள்வியை நான் அவளிடம் கேட்டிருந்தால் ஒருவேளை அவள் பதில் சொல்லி இருக்கலாம். இளமங்கலம் போறேன் ராசா... ஏன் கேக்குற? ஒண்ணுமில்ல இதுக்குமுன்ன இந்த சீட்டுல உக்கார்ந்திருந்த பொண்ணு எங்க இறங்கிச்சி தெரியுமா பாட்டி என்றேன். போடா ராஸ்கோல் அத கேக்கத்தான் இங்க வந்தியா? அது இல்ல பாட்டி என்று இழுத்தேன். கொலைவெறியோடு கிழவி முறைப்பது தெரிந்ததும் மறுபடி என் சீட்டுக்கே வந்துட்டேன். கவலைப்படாதடா வேலு... என்னைக்காவது ஒருநாள் டீக்கடை பக்கம் வராமலா போய்டுவா என்று மனசை தேற்றிக் கொண்டிருக்கையில் கண்டக்டர் விசில் ஊதி திட்டக்குடி கடைசி எல்லாரும் இறங்குங்க... திட்டக்குடி கடைசி எல்லாரும் இறங்குங்க... என்று சத்தமாக கத்தினார். அவரருகே சென்று சார் ஒரு டவுட்டு என்றேன். சொல்லுப்பா என்றார். என் சீட்டுக்கு முன்னாடி சீட்டுல ஒரு பொண்ணு இருந்துச்சுல என்று இழுத்தேன். ஆமா அதுக்கு என்ன? என்று படாரென பதில் வந்துச்சு அவரிடம் இருந்து. எங்க இறங்குச்சி ன்னு கேட்டா கிழவி மாதிரி இவரும் முறைப்பாரோ? என்று டவுட்டு வந்தாலும் என்ன செஞ்சிடுவாரு இது நம்ம ஏரியா என்ற தைரியத்தில் கேட்டேன். யோவ் போய்யா போ ... வேற வேலை எனக்கில்லையா? என்று அடிக்காத குறையா முறைக்கிறார்...

பேருந்து பயணமும்.. பக்கத்து சீட்டில் தேவதையும் ...


சென்னைக்கு வந்தபிறகு எத்தனையோ முறை அங்கனூருக்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால் இந்தமுறை சென்ற பயணம் சற்றே வித்தியாசமான அனுபவம், கூடவே இனியமையான பயணமும் கூட. சனிக்கிழமை இரவு அங்கனூருக்கு செல்வதாக திட்டமிட்டிருந்தேன். அலுவலக வேலைகளை மாலை 6 மணிக்கெல்லாம் முடித்துக் கொண்டு ரூமிற்கு சென்றேன். சிறிதுநேரம் வழக்கம்போல நண்பர்களோடு நக்கல் நையாண்டி என அரட்டை அடித்துவிட்டு குளிக்க சென்றேன். குளித்து முடித்து 6.30 மணிக்கெல்லாம் ரெடியாகிவிட்டிருந்தேன். மீண்டும் நண்பர்களோடு டீக்கடைக்கு சென்று சூடாக இஞ்சி டீயை ஆர்டர் செய்துவிட்டு, வாழைக்காய் பஜ்ஜியை உள்ளே திணித்துக் கொண்டிருந்தோம். நடந்து வருகிறாளா? மிதந்து வருகிறாளா? என்று வியந்து போகும்படியாக தேவதை ஒருத்தி ஒய்யாரமாக வந்தாள். நாலு பசங்க ஒண்ணா சேர்ந்து சந்தோஷமா இருந்தா அழகான பொண்ணுங்களுக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன். நாலு பேரையும் பார்த்து பொத்தாம் பொதுவா சிரிச்சிட்டு போய்டுவாளுங்க. அதுவரைக்கும் நாலு பேரு ஒண்ணா சேர்ந்து டீக்குடிச்சி, ஒண்ணா சுத்திக்கிட்டிருந்த பசங்க, அதுக்கப்புறம் தனித்தனியா அவள தேட ஆரம்பிச்சிடுவானுங்க. ஆனா நாங்கெல்லாம் உயிருக்கு உயிரான, ரத்தத்துக்கு ரத்தமான, கண்ணுக்கு கண்ணான நண்பர்கள். சட்டை பேண்டு, சோப்பு, சீப்பு, பவுடர், செருப்பு, கூலிங் க்ளாஸ் எல்லாமும் ஜட்டி தவிர மாத்தி போட்டுக் கொள்ளும் நண்பர்கள் என்பதால் வெகு இயல்காக அந்தமாதிரி அழகிகளை கடக்கும் பக்குவத்தை பெற்றிருந்தோம். கிட்டத்தட்ட ஜென் நிலை என்றுகூட சொல்லலாம். நாலு பசங்க இருந்தாலே, பெண்ணுங்களையே பிடிக்காத கேரக்டர்ன்னு ஒருத்தன், எவ்ளோ அழகான பிகரா இருந்தாலும் அட்டண்ட் டைம்ல மடக்கலாம் மச்சி ன்னு மன்மத கேரக்டர் ஒருத்தன் இருப்பானுங்க. கடந்து சென்ற அழகியை பற்றிய விவாதம் ஸ்டார்ட். டீ மாஸ்டர் கொடுத்த சூடான இஞ்சி டீயை விட அது சூடாக மாறியது. 

மச்சான் அவ உன்னதாண்ட பார்த்து சிரிச்சா... இது நான்...

'சூப்பர் டா மச்சான்... காசு அவன்தானே கொடுக்கப்போறான்'... இது பொண்ணுகள பிடிக்காத கேரக்டர் ன்னு ஒருத்தனை சொன்னனே அவன் சொன்னது...

ஹே... அசால்ட் மச்சி அவ கண்ணை பார்த்தியா? இது அந்த மன்மதன் கேரக்டர் சொன்னது...

இல்ல மச்சான், அவளுக்கு ஒன்னரை கண்ணுடா... அதான் அவ எவனைப் பார்த்தாலும் உன்னைப் பாக்குற மாதிரியே தெரியுது... இது அந்த சன்யாசி கேரக்டர் சொன்னது...

இன்னிக்கு நம்ம மன்மதன் ட்ரீட். 5 நிமிஷத்துலயே பிகர் உஷார் பண்ணிட்டானே.. இது இன்னொருத்தன்.

அடப் பாவிகளா.. உங்க பஞ்சாயத்த நாளைக்கு வச்சிக்கோங்க, நான் ஊருக்குப் போகணும் வாங்கடா... இது நா சொன்னது... (நம்புங்க அவ்ளோ நல்லப்பையன்)

அப்படி இப்படி பேசி முடிச்சி ரூம்க்கு போனா மணி 7 ஆயிடுச்சி. எல்லார்கிட்டயும் சொல்லிட்டு 8 மணிக்கு ரூமை விட்டு கிளம்பிட்டேன். 7 மணிக்குமேல ஒன்பது வரைக்கும் ட்ராபிக் செம்மயா இருக்கும். எப்படியும் முகப்பேர்ல இருந்து, கோயம்பேட்டுக்கு ஷேர் ஆட்டோல போறதுக்கு அரை மணிநேரத்துக்கு மேல ஆகும். பஸ் ஸ்டாண்டு போறதுக்குள்ள 9 மணி ஆயிடும். அப்புறம் சாப்பிடனும். அங்கனூருக்கு போகணும்ன்னா திட்டக்குடி பஸ்ல தான் போவேன். ஏன்னா அதுதான் வசதி. திருச்சி பஸ்ல ஏறி தொழுதூர்ல எறங்கி மறுபடியும் திட்டகுடி வரணும்.அப்படி போனா தொழுதூர் ல விடியற்காலை 4 மணிக்கெல்லாம் இறக்கி விட்டுருவாங்க. அப்புறம் அந்த நேரத்துல அங்க மாத்து பஸ் இருக்காது என்பதால்... திட்டக்குடி பஸ்ல போனா 5 மணிக்கு திட்டக்குடில இறங்கி பொறுமையா ஒரு டீ குடிச்சிட்டு, அகரம் சீகூர் பார்டருக்கு நடந்து போனா கிட்டத்தட்ட 5.30 ஆயிடும். அங்க போயிட்டு அம்மாவுக்கு வெத்தலை, பாக்கு, தின்பண்டம் வாங்கிட்டு, மறுபடியும் ஒரு டீ குடிச்சிட்டு செத்த நேரம் உலாத்திக்கிட்டு இருந்தா போதும் 6 மணிக்கு சன்னாசினல்லூர் பஸ்ல ஏறி அங்கனூர் போய்டலாம். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல இருந்து திட்டகுடிக்கு 9.45 க்கு ஒரு பஸ்சும், 10.45 க்கு ஒரு பஸ்சும் இருக்கு. அதை ரெண்டையும் விட்டுட்டா கூட விருத்தாசலம் பஸ்ல ஏறி அங்க இருந்து மாறி போய்டலாம். 9.45 பஸ்ல ஏறுனா சரியா 4.30 மணிக்குள்ள திட்டக்குடில இறக்கி விட்டுடுவாங்க. யாராவது வேலைக்காகாத சோம்பேறி டிரைவரா இருந்தா கூட 5குள்ள போய்டலாம். கோயம்பேடுக்கு 9.00 மணிக்கு வந்து, பக்கத்துல இருக்க ஹோட்டல்ல 2 தோசை, ஒரு ஆபாயில் சாப்பிட்டுவிட்டு, மறுபடி ஒரு டீ குடிச்சிட்டு பஸ் ஸ்டாண்டு உள்ள 9.30 மணிக்கு போயிட்டேன். 1வது பிளாட்பார்ம்ல திட்டக்குடி பஸ் நிற்கும். திட்டகுடிக்கு போகிற 9.45 பஸ் நின்னுச்சி. பஸ்ல பாதி சீட்டுக்கு மேல காலியாதான் கிடந்துச்சி, சரி அடுத்த பஸ்ல போகலாம்ன்னு முடிவு பண்ணி எதிர்ல இருந்த சேர்ல உக்கார்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கி இருந்தேன். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு எப்பவுமே திருவிழா போல மக்கள் கூட்டம் வருவதும், போவதுமாக இருந்துகொண்டே இருக்கும். ஒருநாள் இந்த பேருந்து நிலையத்துக்கு லீவ் விட்டுட்டா என்னவாகும் ன்னு யோசிச்சி பார்க்கிறேன். கண்டக்டர்கள் எல்லாம் அவரவர் பேருந்துக்கு பயணிகளை பிடிக்கும் ஆர்வத்தில் பேருந்து செல்லும் ஊர் பெயரை மைக்கே இல்லாமல் முழங்கி கொண்டிருந்தார்கள். திட்டக்குடி பஸ் கண்டக்டர் விருத்தாசலம், திட்டக்குடி ன்னு திரும்ப திரும்ப கத்திகிட்டு இருந்தாரு. சீட்டு கிடைக்குமா? என்ற தவிப்பில் பெரியவர்கள் விறுவிறுன்னு வந்துகிட்டு இருக்க, ஊருக்கு போக அப்பா அம்மாவோட வந்த நண்டு சிண்டுகள் ஆங்காங்கே எந்த கவலையும் இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு அழகான தேவதை இப்ப என்னை கடந்து செல்லப் போகிறாள் என்பதை என் ஏழாம் அறிவு அல்ல, காற்றில் மிதந்து வந்த சென்ட் வாசனை சொன்னது. அந்த அழகியை இதற்கு முன்னர் நான் பார்த்திருக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி. தேவதைகள் வானத்தில் பறப்பார்கள் என்று சொல்லும் கவிஞர்களை அடுத்தமுறை பார்க்க நேரிட்டால், தேவதைகள் தெருவிலும் நடப்பார்கள், பேருந்திலும் பயணிப்பார்கள் என்று சொல்லவேண்டும் என்று தோன்றியது. இங்க அவளைப் பத்தி சொல்லணும். அவ தேவதை தான். ஆனால் கவிஞர்களால், இலக்கியங்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவள். மஞ்சள் நிற சுடிதார் அவள் நிறத்துக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. நகரத்துப் பெண்களைப் போல தலைவிரிக் கோலத்தில் இல்லாமல், தலைவாரி இருந்தாள். இரவு நேரப் பயணத்துக்கு பூ சரிவராது என்பதால் பூ வைப்பதை தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நெற்றியில் பச்சை நிற பொட்டுவைத்து அதன்மேல் மஞ்சள் நிற சின்ன பொட்டு வைத்திருந்தாள். காதில் அணிந்திருந்த பேன்சி குடை சிமிக்கியும், மூக்குத்தியும் இன்னும் அவளை கூடுதல் அழகியாக காட்டியது. கைகளில் போட்டிருந்த மஞ்சளும், ஆரஞ்சும் கலந்த மண் வளையல் சத்தம், அழகான குழந்தை சிரிப்பது போலவே இருந்தது. கைகளில் மஞ்சள் நிற பேன்சி வாட்ச் அணிந்திருந்தாள். கால்களில் வெள்ளி கொலுசு. அதிக சத்தத்தை எழுப்பாத முத்துக்கள் இல்லாத கொலுசு அது. வெள்ளை நிற செருப்பு. உதட்டுக்கு சாயம் பூசவில்லை, மாறாக சிரிப்பை பூசிக் கொண்டிருந்தாள். அவள் மாட்டியிருந்த பேக்கை வைத்து கல்லூரி படிப்பாள் என்று யூகித்து கொண்டேன். முழுக்க, முழுக்க கிராமத்து அழகிதான் அவள். அவள் சிரிப்பு, முக வடிவத்துக்கு ஏற்ற உடலமைப்பு, அவள் அணிந்திருந்த உடை இப்படி எல்லாமே அவளை தேவதையாக, ஏஞ்சலாக என்னிடம் கொண்டுவந்து நிறுத்தியது. என்ன ஆச்சரியம்... அவளும் திட்டகுடி பேருந்தில் ஏறிக்கொண்டாள்... 

பஸ் கிளம்ப தயாராகி கொண்டிருக்க, என்னையும் அறியாமல் ஓடி ஏறிக்கொண்டேன். வாசற்படிக்கு நேரெதிரில் மூன்று பேர் அமரும் சீட்டில் கொஞ்சம் இடம் தான் இருந்தது. அந்த சீட் நீண்ட தூர பயணத்துக்கு அவ்வளவு சவுகரியமாக இருக்காது. இருந்தாலும் அந்த சீட்டிலே அமர்ந்து கொள்வது என்று முடிவு செய்துவிட்டேன். காரணம் வாசற்படிக்கு முன் இருக்கையில் அவள் இருந்தாள். அதுவும் இரண்டு பேர் அமரும் இருக்கையில் அவள் ஒருத்தி மட்டும்தான் அமர்ந்திருந்தாள். என் சீட்டில் இருந்து மிக நன்றாக அவளை பார்த்து ரசிக்கலாம் என்பதற்காகவே உட்கார்ந்து கொண்டேன். பஸ் நகர தொடங்கியது. அவள் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டு பேக்கை திறந்தாள். போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டாள். செல்போனை கண்டுபிடித்தவன் மீது முதல்முறையாக கோபம் வந்தது. கையில் கிடைத்தால் கொன்றே விடலாம் என்று கூட தோண்டியது. பஸ் மார்க்கெட் வழியாக சென்று, மதுரவாயல் பைபாஸ் வழியாக செல்லும். போன் பேசும் போதுகூட அவள் அழகாக தானிருந்தாள். சேலை கட்டிய பெண்கள் அனிச்சையாக மாராப்பை சரிசெய்வது போல, அடிக்கடி சரிந்துவிழும் தலைமுடியை திரும்ப திரும்ப சரிசெய்து கொண்டே இருந்தாள். பேருந்து நகர தொடங்கியிருந்தது. என்மனம் மட்டும் அவள் சிரிப்பை விட்டு நகராமல் நின்ற இடத்திலே நின்று கொண்டிருந்தது. போனை பேசி முடித்தவள் என் பக்கம் திரும்பினாள். என்னை அவள் பார்க்கவேண்டும் என்ற என் ஆழமான விருப்பம் அவளை சென்றடைந்து விட்டது போலும். ஆசைகளுக்கு பாஷைகள் தேவையில்லை என்று எங்கோ படித்ததாக நினைவுக்கு வந்தது. இப்போது என்முறை போலும் என் மொபைல் ஒலித்தது. நண்பன் அழைத்திருந்தான். டேய் பஸ்ல ஏறிட்டியா? என்றான். ஹ்ம்ம் என்றேன். பஸ் கிளம்பிடுச்சா? என்று அடுத்த கேள்வியை கேட்டான். சுரத்தே இல்லாமல் மீண்டும் ஹ்ம்ம் என்றேன். என்னடா ஒருமாதிரியா பேசுற என்றான். தூங்கி விழித்தவன் போல் "மச்சான் டீக்கடையில் பார்த்தோமே அதே பொண்ணு, என் சீட்டுக்கு பக்கத்து சீட்டுல உட்கார்ந்து இருக்காடா... அப்ப பார்த்ததை விட இப்ப செம்ம அழகா இருக்கா என்றேன். நண்பனிடம் சொன்னது அவள் காதில் விழுந்துவிட்டது போலும். என்பக்கம் திரும்பி வெட்க புன்னகையுடன் சிரித்தாள். சரி... சரி போனை கட் பண்ணுடா என்ன பார்த்து சிரிக்கிறாடா என்று பதிலுக்கு கூட காத்திருக்காமல் நானே இணைப்பை துண்டித்துவிட்டேன். 

மீண்டும் ஒருமுறை என்னைப்பார்த்து சிரிக்கமாட்டாளா? என்று ஏங்கி தவித்து கொண்டிருக்கையில் பஞ்சமா பாதகனாக கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டார். என்ன கொடுமை இது, என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்? என்ற கவிஞரின் கவலைக்கு அப்போது தான் எனக்கு அர்த்தம் புரிந்தது. டிக்கெட்டுக்கு பணம் கொடுத்துவிட்டு அவளை பார்க்க முயன்றால், எதிரில் சீனப்பெருஞ்சுவர் எழுப்பியதை போல அவளை முழுவதுமாக மறைத்துக் கொண்டு நின்றார். ஒருவழியாக நகர்ந்து சென்று தேவதையிடம் டிக்கெட் கேட்டார். என்ன மனசாட்சியே இல்லாத மனிதனாக இருக்கிறான். தேவதைகள் பயணிக்க கூட கட்டணம் வசூலிப்பார்களா? என்று தோன்றியது. தேவதைகள் பேருந்தில் செல்வதே பெரும் பாக்கியம் என்பது தெரியாத ஞானசூனியனாக இருப்பான் போலிருக்கே. அதோட நிற்காமல் ஏம்மா சில்லரையா குடும்மா என்று டார்ச்சல் வேற. எப்படியாவது இந்த ஆளு நகர்ந்தால் போதும் என்று நினைக்கையில் பேருந்து மார்க்கெட்டை க்ராஸ் செய்தது. அழுகிய காய்கறிகளின் வாடை குடலை புரட்டி போட்டது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் சுத்த சைவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி, கருவாட்டுக் கடைகளை மார்க்கெட்டில் இருந்து அப்புறபடுத்த சொன்னார்கள். பெரும்பான்மை மக்கள் சாப்பிடும் உணவு அருவருப்பாக இருப்பதாக கூறும் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு, அசுத்த கோளாறால் வேண்டாத வியாதிகளை உருவாக்கும் அழுகிய காய்கறிகளின் நாற்றம் மணக்கிறது போலும். படிக்கருகில் வந்து வெளியே எட்டிப் பார்க்கிறேன். அழுகிய காய்கறிகளை மாடுகளும், பன்றிகளும் போட்டிபோட்டுக் கொண்டு மேய்ந்து கொண்டிருக்கின்றன. கழிவுகள் சாலையோரத்திலே குவிந்து கிடக்கின்றன. அதனருகிலே தள்ளுவண்டி உணவகங்கள். மனிதர்கள் அதிலும் சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கிருக்கும் கொசுக்கள் மனிதர்களை நேராக நரகத்திற்கே தூக்கி செல்லும் பலம் படத்தைவைகள். இவையெல்லாம் சுத்த சைவர்களுக்கு அசவுகரியத்தை உண்டாக்கவில்லை. பெரும்பான்மை மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு தான் அவர்களுக்கு அபச்சாரமாக தெரிகிறது. என்ன செய்ய இந்த நாட்டில் மட்டும்தான் பெரும்பான்மை மக்களின் பழக்கவழக்கங்களை கடவுளின் பெயரால் பகடி செய்யும் வினோத நிகழ்வெல்லாம் இருக்கிறதே. மீண்டும் என் இருக்கைக்கு வந்தேன். தேவதையிடம் இருந்து நகர்ந்து பின்பக்கமாக கண்டக்டர் சென்றுவிட்டிருந்தார். இப்போது நான் தாராளமாக தேவதையை ரசிக்கலாம். அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டே, தேவதை எந்த ஊருக்கு தரிசனம் கொடுக்கப் போகிறாள் என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன். வழியில் எங்கும் இறங்காமல் திட்டக்குடி வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்கையில் அவள் என்னை மீண்டும் பார்த்தாள். பேசலாமா என்று நினைக்கையில் என்ன சொல்லி பேசுவது என்ற தயக்கம் எனக்கு முன்பாக வந்து நிற்கிறது. இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலைடா, நீ எதுக்காக ஊருக்க போற என்பதை மறந்திட்டியாடா? என்ற அலாரம் வேற லப் டப் என்ற இதயத்தோடு சேர்ந்தே அடிக்கிறது. மெயின் ரோட்டை பிடித்ததும் பஸ் மின்னல் வேகத்தில் பயணிக்க பெருங்களத்தூர் பேருந்துநிலையம் வந்ததே தெரியவில்லை. அங்கிருந்து சில பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் நகர, பஸ்ஸை முந்தி செல்கிறது டாடா மேஜிக் வாகனம் ஒன்று. வண்டி முழுவதும் கருவாடு. கருவாடு அதிகமாக சாப்பிடும் பழக்கம் இல்லாதவன் நான். கருவாட்டு மணம் காற்றில் கலந்து, பேருந்துக்குள் நுழைந்து நாசி வாசியாக என் நெஞ்சுக்குள் சென்றடைகிறது. எத்தனையோ முறை காருவாட்டு வாசனையை நுகர்ந்திருந்தாலும், முதல்முறையாக ஆத்மார்த்தமாக, ஆழமாக சுவாசிக்கிறேன். அத்தனை புத்துணர்ச்சியான மணம் அது. அதுவரை நாசியை அடைத்துக் கொண்டிருந்த அழுகிய காய்கறி நாற்றத்தையும், சாலையோர கழிவுகளின் நாற்றத்தையும் நொடிப்பொழுதில் அகற்றிவிட்டது. டாட்டா மேஜிக் வண்டி கண்ணில் இருந்து மறைந்துவிட்டது கருவாட்டு வாசனை நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்க...

- தொடரும்...

வெள்ளி, 27 ஜூன், 2014

ஆம்பள காதல் (சிறுகதை)

மதிக்கு கல்யாணம் செய்ய முடிவு செஞ்சிட்டாங்க. அதுவும் அவன் லவ் பண்ண பொண்ணையே கட்டி வைக்க அவங்க அப்பா அம்மா ஒத்துக்கிட்டாங்க. எல்லாம் நல்லபடியாத்தான் நடந்துகிட்டு இருக்கு. ஆனா மதி மட்டும் சித்த பிரம்மை புடிச்சவன் போல அலையுறான். எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு கத்துகிறான். யார்கிட்டயும் சரியா பேசறதில்ல, பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் அடிக்க ஆரம்பிச்சிட்டான். சென்னைக்கு வந்த பிறகு கடந்த மூணு வருஷமா லவ் பண்ணிக்கிட்டு இருந்த பொண்ணை தான் வேணாம்ன்னு சொல்றான். அந்த பொண்ணு  கீதா இவனைத்தான் கல்யாணம் செஞ்சிக்குவேன்ன்னு தீர்மானமா இருக்கு. வீட்டுல பொண்ணு கேட்டு வந்தவங்கள எல்லாம் மட்டுமருவாதி இல்லாம பேசி தொரத்திடுச்சி. பொண்ணோட தீவிரத்த பார்த்து, பொண்ணு வீட்டலயும் ஒத்துக்கிட்டாங்க. இவனும் தான் அந்த பொண்ணை கல்யாணம் கட்டிக்க ஆர்வமா இருந்தான். மதியோட அப்பா பெரியசாமி அந்த பொண்ணு வேணாம்ன்னு முரண்டு பிடிச்ச்சப்பலாம் உனக்கா கல்யாணம்? எனக்குதானே... எனக்கு பிடிச்ச பொண்ண தான் கட்டிக்குவேன்ன்னு வாதம் பண்ணுனவன் தான் மதி.  இப்ப பெத்தவங்க ஒத்துகிட்டாங்க, கட்டிக்கப்போறவன் வேணாங்குறான். நாலுமாசமா வேலையையும் விட்டுட்டு கிராமத்திலே கிடக்கான். என்னன்னு கேட்டா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறான்.  ஒட்டுமொத்தமா கல்யாணமே வேணாங்குறான். 'ஊருல ஒருத்தன், கல்யாணம் வேணாங்குறான்னா, ஒண்ணு பொண்ணு புடிக்காம இருக்கணும், இல்ல அவனுக்கு நோவு கீவு எதுனா இருக்கணும்'. இவன் பார்த்த பொண்ணு தான், இப்ப வேணான்னுறான்னா கண்டிப்பா எதோ நோவுதான். மெட்ராசுலயே கிடந்தான்ல கண்டவ கூட போயிருப்பான்னு ஊருக்குள்ள ஆளாளுக்கு ஒரு பேச்சு பேச ஆரம்பிச்சிடாங்க. பெத்தவங்க, கூட பொறந்தவங்க கதி கலங்கி நிக்குறாங்க. அவன லவ் பண்ணுன பொண்ணு கீதா சாப்டாம, எந்நேரமும் அழுவிகிட்டே இருக்குறதா தகவல். பெத்தவங்க கேட்டாங்க காரணத்த சொல்லல, கூடப் பொறந்தவங்க கேட்டாங்க சொல்லல, கட்டிக்கப் போறவ கேட்டா அப்பவும் சொல்லல, கூடப் படிச்ச பசங்க கேட்டும் சொல்ல மாட்டேங்குறான். 

எதுத்த வீட்டு முருவாயி கிழவி வந்து, மதி அம்மாகிட்ட பேசிகிட்டு இருந்துச்சி. நம்ம பரமு மவன் கருப்பன் கல்யாணம் ஆவாமதான் செத்துப் போனான். அவன்தான் இவன புடிச்சிகிட்டு ஆட்டுறான். எதுக்கும் நம்ம பூசாரிகிட்ட கூப்பிட்டுகிட்டு போ. அப்படியே நம்ம வீரனார் கோயிலுக்கும் அழைச்சிகிட்டு போ. எல்லாத்தையும் நம்ம வீரனார் பாத்துக்குவான். மனச தெம்பா வச்சிருடின்னு சொல்லிட்டு, வெத்தலை வாங்கி போட்டுக்கிட்டு போய்டுச்சி கிழவி. ஏதோதோ பண்ணி பாத்தாச்சி. வாய தொறக்க மாட்டேங்குறான். கடைசியா மதியோட அக்கா செல்வி வந்தாங்க. நா பேசிப்பாக்குறேன், என்கிட்டே கண்டிப்பா சொல்வான்ன்னு நம்பி புருஷன் வீட்டுல இருந்து வந்தாங்க. மதிகூட பொறந்தவங்க ரெண்டு அக்காங்க. ரெண்டாவது அக்காதான் செல்வி. தட்டுல சோறு போட்டு எடுத்துகிட்டு அவன்கிட்ட போனாங்க. அவன்கிட போயி உக்காந்தாங்க. டேய் என்னடா முடிகூட வெட்டாம பித்துக்குளி மாதிரி கிடக்க... சாப்பிட்டு போய் முடிவெட்டிகிட்டு வாடான்னு சொன்னாங்க. அம்மா... நம்ம மாரிய வரசொல்லும்மா, இவன முடிவெட்ட அழைச்சிகிட்டு போவான்ன்னு அம்மாகிட்ட சொன்னா  செல்வி. அக்கா கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லல, சாப்பிட்டு எழுந்து போய்ட்டான். எங்கயோ போயிட்டு விளக்கு வைக்கிற நேரத்துக்கு வீட்டுக்கு வந்தான். மீண்டும் அவனிடம் செல்வி பேசப் போனாள்.

டேய்... என்னடா உனக்கு ஆச்சு? ஏண்டா இப்டி பண்ற? ஊருல ஆளாளுக்கு ஒருமாதிரி பேசுறான். அம்மா சாப்டாம கிடக்கு. அந்த புள்ளையும் சாப்டாம கிடக்காம். என்னன்னு சொல்லுடா?

"................." எதுவும் பேசாமல் அப்டியே உக்கார்ந்திருந்தான்.

இப்ப நீ சொல்லப் போறீயா? இல்ல நா ஊருக்கு போவட்டுமா? உன்ன கெஞ்சி கேக்குறேன் சொல்லுடா...

"................................." மீண்டும் அமைதியாகவே உக்கார்ந்திருக்கான். ஆனா  நிம்மதியாக இல்ல, இருப்பு கொள்ளாமல் தவிப்பது முகத்தில் ரேகைபோல் தெரிகிறது...

டேய் தம்பி... மனசுக்கு புடிச்சவங்க கட்டிக்கலன்னா மனசு என்ன பாடுபடும் ன்னு எனக்குத் தாண்டா தெரியும். அந்த பொண்ணு பாவம் டா... நல்ல புள்ளையா இருக்கா அவள தவிக்க விட்டுடாத... அந்த பாவம் நம்ம வம்சத்தையே அழிச்சிடும் டா ன்னு செல்வி சொல்லவும், மதி கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடுகிறது. எதுவும் சொல்லாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறான்.. 

ரொம்ப நேரத்துக்கு பிறகு 'மன்னிச்சிடுக்கா' என்று மட்டும் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

எதுக்கு மன்னிப்பு கேக்குறான். பெரியசாமிக்கு ஒன்னும் புரியல. நிலை தடுமாறி நிற்கிறார். அவர் மனைவி, செல்வி  என எல்லோரும் அழுகிறார்கள். ரொம்ப சிரமப்பட்டு அவரும் அழுகையை அடக்கி கொண்டு நிற்கிறார்...

மணி இரவு ஒன்பதை தாண்டி ஓடிக்கொண்டிருகிறது. நண்டு சிண்டுங்க எல்லாம் தூங்கிடுச்சிங்க, பெருசுங்க ஒன்னொன்னா பாயை போட்டு தூங்க ரெடியாயிடுச்சிங்க. எதுத்த வீட்டு முருகேச அண்ணன் வாசல்ல கட்டிலை போட்டு படுத்துட்டார். அவர் பொஞ்சாதி கீழ பாயை விரிச்சி உக்காந்திருக்கு. புள்ளைங்க தூங்கிடுச்சி. முருகாயி கிழவி இப்பதான் வெத்தலை பையை தேடிகிட்டு அலையுது. தெருவோட கடைசி லைட் கம்பத்துக்கு கீழ ஆம்பள ஆளுங்க சீட்டு அடிகிட்டு இருக்காங்க. மாரியாயி கோயிலு லைட் கம்பத்துக்கு கீழ வாலிப பசங்க கபடி ஆடிகிட்டு இருக்கானுங்க... கோ கோ ஆடிகிட்டு இருந்த பொட்ட புள்ளைங்கள, ஆம்பள பசங்க வீட்டுக்கு போக சொல்லி விரட்டுராணுக. இருட்டுல யாரோ தனியா வருவது போலிருக்கு... ஆம் மதி வருகிறான். மறுநாள் காலையில பூசாரிகிட்ட  போகணும் ன்னு அம்மா வந்து சொன்னதுக்கு எந்த பதிலும் சொல்லாமல் போய்கிட்டே இருக்கான்... 

மதி ஏன் கல்யாணம் வேணாம்ன்னு சொல்றான்?... செல்விகிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்டான்?...

மதி அப்ப பத்தாவது படிச்சிகிட்டு இருந்தான். செல்வி பதினொன்னாவது. ரெண்டுபேரும் ஓரே பள்ளிக்கூடத்தில தான் படிச்சாங்க. கூட படிக்கிற தினேஷ்ங்குற பையன செல்வி லவ் பண்றதா அரசபுரசலா மதிக்கு தெரியவந்துச்சி. செல்விகிட்ட நேரா போனான். வீட்டுல யாரும் இல்ல. செல்வி சோறாக்கி கிட்டு இருந்தாள். 

நீ தினேஷை லவ் பண்றியாமே...

ஏய் யாருடா சொன்னது? அதெல்லாம் ஒண்ணுமில்லன்னு தலைய தூக்காமலே பதில் சொன்னாள்.

'பசங்கல்லாம் கிண்டல் பண்றாங்க உண்மையை சொல்லுப்ள'.. மறுபடியும் கேட்டான். இல்லவே இல்லன்னு செல்வி மறுத்துட்டா.. அதோடு விஷயம் முடிஞ்சிது. அதுக்கப்புறம் அதபத்தி அவன் செல்விகிட்ட கேட்கல. அதுக்கப்புறம் ஒருமாசம் கழிச்சி நோட்டு எடுக்க செல்வி பையை மதி எடுத்தான். இங்க்லீஷ் புக்ல, கடைசி பக்கத்தில் தினேஷ் பேரு இருந்துச்சி. அப்பல்லாம் செல்போன் புழக்கம் அதிகம் இல்லாத காலம். கிராமங்களில் சுத்தமாகவே இல்லை. ஊருல ஒருத்த ரெண்டு பேரு வச்சிருப்பாங்க. அந்த ஊருல யாருக்கு போனு வந்தாலும், அவங்களுக்கு தான் வரும். அப்ப படிக்கிற பொண்ணுங்க மனசுக்கு புடிச்ச பையன் பேரையும், படிக்கிற பசங்க பொண்ணுங்க பேரையும்  நோட்டு புக்ல தான் எழுதி வப்பாங்க. ஊருல பாழடஞ்ச வீடு இருந்தா, அதுதான் அந்த ஊரோட காதல் கோட்டையா இருக்கும். அந்த வீட்டு சுவத்தை பார்த்தே அந்த ஊரில் யார், யாரை லவ் பண்றாங்கன்னு கண்டுபுடிச்சிடலாம். சுவத்துல ஹார்டின் போட்டு அம்பு வேற விட்டுருப்பானுங்க. புள்ளங்க மேல பெத்தவங்களுக்கு டவுட்டு வந்தா முதல்ல பள்ளிக்கூடத்து பையைதான் சோதிச்சி பாப்பாங்க. லவ் லட்டர்ஸ் அதிகமா புழக்கத்தில் இருந்த காலமது. அன்றைக்கு  லவ்வர்ஸ்களின் காதல் மொழியாக லவ் லட்டர்ஸ் தான்.

மறுபடியும் செல்விகிட்ட கேட்டான். இல்லவே இல்லன்னு புடிவாதமா சொல்லிட்டா. இவனுக்கு தெரிஞ்சா அப்பாகிட்ட சொல்லிடுவான்னு பயம். காரணம், மேகலா லவ் பண்ணின விஷயத்தை அவங்க அப்பாகிட்ட போட்டு கொடுத்தது இவன்தான். அப்புறம் பக்கத்துக்கு ஊரு மேஸ்திரி வீடு கட்டுற இடத்துல சித்தாளு பொம்பள கூட இருந்ததை பார்த்து, திருடன் திருடன்னு கத்தி ஊரு சனத்தையே அந்த இடத்துக்கு வர வச்சவன். இப்படி பலபேரு காதலை பிரிச்ச்சவன் இவன்தான். ஊருல ஒருத்தரும் லவ் பண்ணக்கூடாதுன்னு சொல்லி திரிஞ்சவன். அன்னைக்கு மறுநாள் பக்கத்துக்கு தெரு கதிருக்கு கல்யாணம் என்பதால், முதநாள் நைட்டு டிவி, டெக்கு வாடகைக்கு எடுத்து வந்து, படம் ஓட்டினாங்க. ஆம்பள, பொம்பள என சகட்டு மேனிக்கு எல்லாரும் படம் பாத்துகிட்டு இருந்தாங்க. செல்வி தல வலிக்குதுன்னு சொல்லிட்டு படம் பாக்க வரல, மதி, அப்பா, அம்மா எல்லாரும் படம் பாக்க போயிட்டாங்க. ராத்திரி 11 மணி இருக்கும் மதிக்கு தண்ணி தாகம் கூடவே தூக்க கலக்கம் வேற. வீட்டுக்கு போனான். தெருவுல யாருமே இல்ல. வாசல்ல படுக்கிற பெருசுங்க கூட படம் பாக்க போயிட்டாங்க. வேகமாக வீட்டுக்கு போனான். வீட்டு திண்ணையில் செல்வி உக்கார்ந்திருந்தா. தலைவலின்னு சொன்னவ, இந்த நேரத்துல ஏன் உக்கார்ந்திருக்கா ன்னு இவனுக்கு டவுட்டு வந்துடுச்சி. வீட்டுக்கு பின்னாடி போனான். அடுப்பெரிக்க அடுக்கி வச்சிருந்த குச்சி கட்டுக்கு பின்னால யாரோ உக்கார்ந்திருப்பது தெரிந்தது. நேரா வந்தான் தண்ணி கொடத்தை தூக்கி போட்டு உடைச்சான். செல்வியை எட்டி உதைச்சான். ஊருல ஒரு பொட்டச்சியும்  லவ் பண்ணக்கூடாதுன்னு சொல்றவன் நான், என் வீட்டிலேயே லவ்வா? ன்னு அவள மறுபடியும் அடிக்கப் போனான். அப்பா வரட்டும் ன்னு  மிரட்டிட்டு தூங்க போயிட்டான். ஊருல திருவிழா, கல்யாணம், காதுகுத்தி, கருமாதி அன்னைக்கெல்லாம் படம் ஓட்டுவாங்க. அப்ப ஊரு சனமே படம் பாக்க போய்டுவாங்க. அன்னைக்கு நைட்டு தான் லவ் பண்றவங்களுக்கு 'லவ்வர்ஸ் டே'. வெளியூர் பசங்கள லவ் பண்ற பொண்ணுங்க கூட அவங்க ஆள வரசொல்லி தகவல் அனுப்புவாங்க. இதை கண்டுபுடிக்கவே ஊருல ஒரு க்ரூப் இருக்கும். அந்த க்ரூப்ல மதியும் ஒரு ஆளு. க்ரூப்போட கண்ணுல மண்ணை அள்ளிப் போட்டுட்டு தான் லவ்வர்ஸ் பேச முடியும். எப்படா விடியும்  அப்பா கிட்ட சொல்லலாம் ன்னு தூக்கம் வராம புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தான். பொழுது விடிஞ்சதும் முத வேலையா அப்பாகிட்ட மதி செல்வியோட லவ் மேட்டரை சொல்லி, அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிட்டான். மதியின் அம்மா, ஏண்டி... நாயே... திமிரெடுத்து திரியுரியா? படிக்க போறா கொழுப்பாடின்னு சொல்லி, செல்வியை விளக்கமாறு பிய்யுற அளவுக்கு அடிச்சாங்க. பெரியசாமி செல்விக்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கினார். அதுக்கப்புறமும் செல்வி தன் காதலை மறக்க விரும்பவில்லை. ஆத்துக்கு குடி தண்ணி எடுக்கப் போனப்ப, தினேஷ் கூட பேசிகிட்டு இருந்ததா, மலர் அக்கா வந்து சொல்லிட்டாங்க. அப்பவும் முருவாயி கிழவி தான் இவளுக்கு புத்தி கேட்டுப் போச்சி, நம்ம சாமி முன்னாடி சத்தியம் வாங்குங்க, அப்பத்தான் இவ அடங்குவா என்று எடுத்து கொடுத்திச்சி. வீரனார் கோயில் முன்னாடி செல்வி கையில சூடத்தை ஏத்தி வச்சி, சத்தியம் பண்ண சொன்னாங்க. செல்வி சத்தியம் பண்ண மாட்டேன்னு அடம் பிடிச்சி இருந்தப்ப, செல்வியோட அக்கா தான் மயிரைப்புடிச்சி இழுத்து அடிச்சாங்க. 'திமிரு எடுத்து அலையுராளா ... அவள உதைங்கடா' ன்னு கிழவி கத்தினது வானமே அதிரும்படி இருந்துச்சி. ஆளாளுக்கு அடிச்சாங்க. அடி தாங்காம செல்வி சத்தியம் பண்ணி கொடுத்திட்டா. மறுநாள் குளிக்க போறேன்னு சொல்லிட்டு போன செல்வி, வீரனார் கோவில் முன்னாடி தினேஷ் கூட 'இந்த சாமியே நம்மள சேத்து வைக்கும்' ன்னு சொல்லி பேசிகிட்டு இருந்ததை மோட்டார் ஓட்டுற சேகர் மாமா வந்து சொல்லிட்டாரு. இனி இவள ஒரு நைட்டு வச்சிருந்தாலும் நம்ம மானத்தை வாங்கிடுவா... சீக்கிரம் இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் ன்னு பக்கத்துல இருக்க, அசூர்ல மாப்பிள்ளை பார்த்து அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. மாப்ள டீக்கடை மாஸ்டர். சென்னையில வேலை செய்வாப்ள.  

கல்யாணம் ஆகி 6 மாசம் நல்லாத்தான் போச்சு. குழந்த பிறக்கலன்னு லேசா ஒரு பேச்சு கிளம்பிச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் மாப்ள மெட்ராசுக்கு வேலைக்கு போகல. உள்ளூர்லேயே இருந்தாப்ல... 6 மாசத்துக்கு அப்புறம் தான் பூகம்பம் ஆரம்பிச்சுது. மாப்ளைக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரிய வந்துச்சி. மெட்ராசுக்கு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு போனவர் மாதக்கணக்கில் ஊர் திரும்பவே இல்லை. கொஞ்சநாள் போன் பண்ணி பேசிகிட்டு இருந்தவரு, அதுக்கப்புறம் போன் பண்றதையும் நிறுத்திட்டாரு. மாதக்கணக்கு நாட்கள் ஓடின. இன்றைக்கு வருவார், நாளைக்கு வருவார் என்று இளவுகாத்த கிளி போல செல்வி காத்துக் கொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பெத்தவங்க, செல்வியை வீட்டோட வந்திடும்மான்னு கூப்பிட்டாங்க. இனி அந்த ஊருக்கு வந்தா என் புருசனோட வரேன், இல்லேன்னா வரவே மாட்டேன்ன்னு பிடிவாதமா இருந்திட்டா. 'நீங்க அமைச்சி கொடுத்த வாழ்க்கை தானே, வாழ்ந்தாலும், செத்தாலும் இனி இங்கேதான்' என்பது போலிருந்தது அவளின் வீராப்பு. 'பொண்ணோட சந்தோஷத்தை விட கவுரவம் பெருசா பாத்திங்கல்ல, இப்ப என்ன உங்க கவுரவம் வாழ்த்தா' என்று காரி துப்பியதை போலிருந்தது அந்த வீராப்பு. மறு கல்யாணம் பண்ணி வைக்கவும் பெத்தவங்க தயாரானங்க, செல்வி முடியவே முடியாதுன்னு சொல்லிட்டா. அப்போது தான் முத தடவையா மதி கொஞ்சம் கலங்கினான். எதோ பெரிய தப்பு பண்ணிட்டோமோன்னு வருந்தினான். 'ஒருவேள அவ லவ் பண்ணுன பையன கட்டிக்கிட்டு இருந்திருந்தா சந்தோசமா இருப்பாளோ?' என்று யோசிக்க யோசிக்க அழுகை முட்டி கொண்டு வந்தது. தன் புருஷன் எப்படியும் வந்திடுவார் என்ற நப்பாசை செல்விக்கு இருந்துச்சி. அவருக்கு சாதகம் சரியில்ல, அதான் இப்டி எங்களை புடிச்சி ஆட்டுது, எங்கூர்ல குமார் மாமா கூடத்தான் நாலுவருஷம் எங்கோ இருந்திட்டு வந்தாப்ல சொல்வா ... அதுமாதிரி நிச்சயமா அவரு வருவார்ன்னு அவ நம்பிகிட்டு இருந்தா. வருஷம் ரெண்டாச்சி. ஆள் மட்டும் வரவே இல்ல. எங்கோ திருப்பூர் ல ஒரு பொண்ணு கூட குடுத்தனம் நடத்தறதா கூட தகவல் வந்துச்சி. அதெல்லாம் கேட்டா செல்வி செம கோவமா சொல்றவங்கள திட்ட ஆரம்பிச்சிடுவா... ரெண்டரை வருஷம் கழிச்சி மனுஷன் வந்தாப்ல. அதன் பிறகு நாட்கள் ஓடுகின்றன. செல்வியும் சிரிக்கத்தான் செய்கிறாள். உண்மையில் செல்வி மகிழ்ச்சியாக தான் இருக்கிறாளா? அது செல்விக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். என் வாழ்க்கையை எல்லாருமா சேர்ந்து சீரழிச்சிட்டாங்களே என்ற கோபம் அவ மனதில் எங்கோ மூலையில் இல்லாமலா போய்விடும்? என்பது தான் மதியின் கவலை. தன் காதலை பிரிக்க முன்னாடி நின்னவன் இப்ப காதலிக்கிறான் என்ற எந்த கோபமும் இல்லாமல், தம்பி ஆசைப்பட்ட பொண்ணையே கட்டிக்கட்டும் ன்னு அப்பாகிட்ட சண்டைக்கு போன செல்வி, மதியின் மனதில் பெரும் புயலை கிளப்பிவிட்டாள். மதி கூனிக் குறுகி போகிறான். செல்வி முகத்த பாக்கவே கூச்ச்சப்படுறான். அந்த குற்ற உணர்ச்சியில் தான் கல்யாணம் வேணாங்குறான். 

பெத்தவங்க ஆம்பள பசங்க காதலிச்சாலும் எதிர்க்கத்தான் செய்றாங்க. ஆனா ஒரு கட்டத்தில் 'எப்படியே ஒழிஞ்சி போ' 'என் சொத்துல சல்லிப் பைசா கொடுக்கமாட்டேன்' ன்னு சொல்லியாவது ஆம்பள பசங்களின் காதலை ஏற்றுக் கொள்ளும் பெத்தவங்க, பொம்பள பசங்களோட காதலை மட்டும் எந்த நிலையிலும் ஏத்துக்க தயாரா இல்ல. பொம்பள புள்ள காதலிச்சா வீட்டோட மொத்த கவுரவமும் போச்சேன்னு, பெண்ணை அடித்து உதைக்கிறார்கள். அவர்களின் மயிரை அறுக்கிறார்கள். அவசர, அவசரமா யார் என்னென்னு கூட தெரியாத ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். வீட்டுக்கு தெரியாமல் விரும்பியவனை கட்டிக் கொண்டால், காசுபணம் செலவு பண்ணி, தேடிக் கண்டுபிடிச்சி பிரிச்சாத்தான் அவங்க கவுரவம் காப்பதபட்டதா நம்புறாங்க. கீழ்சாதி பையனை கட்டிக்கிட்டா ரெண்டுபேரையும் கொல்லக் கூட அவங்க தயங்குவதில்லை. வயிற்றில் புள்ள இருந்தா அதையும் சேர்த்தே கொன்றுவிடுகிறார்கள். ஆனா நம்ம வீட்டு ஆம்பள புள்ளையும், யாரோ ஒருத்தரோட பொம்பள புள்ளையதான் காதலிக்கிறான் என்பதை அவர்கள் என்றைக்கும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

மறுநாள் பொழுது விடிந்ததும், எந்த வீரனார் முன்னால செல்வி அடிக்கப்பட்டாலோ, கையில் சூடம் ஏற்றி வைத்து சத்தியம் செய்ய சொன்னார்களோ, அந்த வீரனார் முன்னால தான் மதிக்கு காத்துக் கருப்பு புடிச்சிருக்கா ன்னு பூசாரி முன்னாடி மொத்த குடும்பமும் கைகட்டி நிக்குது. அன்னைக்கு அவள உதைடா ன்னு கத்தின முருவாயி கிழவி, இன்னைக்கு  'எப்பா வீரனாரப்பா உம புள்ளையா காப்பாத்துப்பா' ன்னு மண்ணோடு, மண்ணா விழுந்து கும்புடுது ...

- தமிழன் வேலு       

செவ்வாய், 24 ஜூன், 2014

சில நினைவுகள் ... சில பதிவுகள் ...

10 ரூபாய் நோட்டு

இரவு நேரங்களில் கொஞ்சதூரம் தனிமையில் காலார நடப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. கிராமபுறங்களில் எல்லாம் மனிதர்கள் இரவு நேரங்களில் எந்த பதற்றமும், அவசரமும் இன்றி இருப்பதை பார்த்து பழகிய எனக்கு, சென்னை வந்த புதிதில் நள்ளிரவு நேரங்களில் கூட மனிதர்கள் வேக வேகமாக எங்கோ பயணித்து கொண்டிருப்பது புதுமையாக இருந்தது. அதுபோக இரவு எட்டு மணிக்கு மேல் நண்பர்கள் எல்லாம் கூடி காட்டிற்கு சென்று பாத்ரூம் சென்று வருவது வழக்கம். எப்படியும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடப்போம். அதனால் சென்னை வந்த பிறகு கூட இரவில் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். பெரும்பாலும் வேலை முடித்து வீட்டிற்கு நடந்தே சென்று விடுவேன். நேற்றிரவு அலுவலக பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். வில்லிவாக்கத்தில் இருந்து சென்று கொண்டிருந்தேன். பாடியில் இருக்கும் மேம்பாலம் மீது சென்று கொண்டிருக்கும் போது சாலை ஓரத்தில் பத்து ரூபாய் நோட்டு ஒன்று கிடந்தது. சென்னையில் கீழே கிடக்கும் காசு பணங்களை எடுப்பது என்றால் எனக்கு கொஞ்சம் பயம். பத்து ரூபாய் பணத்தை கீழே போட்டு, அதை நாம் எடுக்கும் போது நம் பர்சை பிக்பாக்கெட் அடித்து சென்றுவிடுவார்கள் என்ற திரைப்பட நகைச்சுவை காட்சி அதற்கு காரணம் என்றும் சொல்லலாம். அதுபோல ஒன்றிரண்டு சம்பவங்கள் நேரில் கண்டதும் உண்டு. சென்னை வந்த புதிதில் 2008 யின் துவக்கம் என்று நினைக்கிறேன் அப்போது நான் அம்பத்தூர் இண்டுஸ்ரியல் எஸ்டேட்டில் லேத் கம்பெனி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். டெலிபோன் எக்சேஞ்சில் தங்கியிருந்தேன். அந்த மேம்பாலம் அப்போது தான் கட்ட துவங்கியிருந்த நேரம். ரோடெல்லாம் குண்டும் குழியுமா கிடக்கும். பட்டறைவாக்கதில் இருந்து சைக்கிளில், ரூமிற்கு சென்று கொண்டிருந்த போது, எனக்கு முன்னாள் பல்சர் பைக்கில் ஒருவர் வேகமாக சென்றார். திடீரென அவர் பாக்கெட்டில் இருந்து அவருடைய மொபைல் போன் கீழே விழுந்து விட்டது. அது 3310 போன். அப்போதெல்லாம் நிறைய பேரிடம் அந்த போன் தான் இருக்கும். செங்கல் போன் என்று கூட அதற்கு பெயருண்டு. மாடியில் இருந்து கீழே விழுந்தாலும் உடையாது என்பதால் அப்படி சொல்வார்கள். என்னிடம் அப்போதெல்லாம் போன் கிடையாது. அன்றைய காலகட்டத்தில் ஒரு போன் வாங்க வேண்டும் என்பது தான் என் அதிகபட்ச லட்சியமாக இருந்தது என்றுகூட சொல்லலாம். போன் விழுந்த இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த போனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு சுத்திமுத்தி பார்த்து கொண்டிருக்கிறேன். போன் விழுந்தது தெரியாமல், போன்காரர் வேகமாக வண்டியில் சென்றுவிட்டார். போனை என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பின்னால் ஏரியா டான் ஒருவர், (அதாங்க அங்கயே ரொம்ப வருஷமா இருப்பவர்) வந்து கொண்டிருந்தார். நான் போனை எடுத்ததையும், முழித்துக் கொண்டிருப்பதையும் அவர் கவனித்து விட்டார் போல. 

அருகில் வந்து... அதட்டலாக 
டேய்..என்னடா பண்ற?...
ஒன்னும் இல்லீங்கண்ணா?... சும்மா நிக்கிறேன்...
டேய்.. நான் தான் எல்லாத்தையும் பாத்துண்ணே வர்றேன் ... என்கிட்டே டகால்டி விடுற பாத்தியா?
என்னென்னா சொல்றீங்க???
அந்த போன் எனக்கு தெரிஞ்சவர் தான்... குடு டா...
எந்த போனுன்னா? எனக்கு ஒன்னும் புரியல...
அப்டியா சொல்ற.. சொல்லிட்டே பேண்டுக்குள்ள கைய விட்டு போனை எடுத்துட்டார். இந்த போனுதாண்டா...

குடு .. நா அங்கதான் போறேன் நான் குடுத்துடுறேன். ன்னு சொல்லி போனை வாங்கிட்டு போய்ட்டார். போன்காரர் அம்பத்தூர் OT பக்கம் போனார். இவர் நேரா அத்திப்பட்டு பக்கம் போய்ட்டார். மனசுக்குள்ள திட்டுகிட்டே நானும் ரூம்க்கு போயிட்டேன். ரூம்ல போயி பசங்க கிட்டா சொன்னா, ஏமாளி ன்னு சொல்லி கிண்டல் பண்ணுனானுங்க... அப்புறம் மெரீனா பீச் ல ஒருமுறை 100 ரூபாய் பணம் கிடந்துச்சு. அதை குனிஞ்சி எடுக்கும் போது எதிர்ல வந்தவன், என் பணம் ன்னு புடுங்கிகிட்டு போய்ட்டான். நிச்சயமா தெரியும் அது அவனோட பணமில்லன்னு... பணம் கிடக்குற இடத்துக்கு கொஞ்ச தூரத்துல நான் வரும் போது அவன் ஜாலியா வேடிக்கை பாத்துக்கிட்டு வந்ததை நானும் பாத்தேன். சென்னைக்கு புதுசு என்பதால் பயத்துல போனா போகுத்துன்னு விட்டுட்டேன். புடுங்கிட்டு போனது மட்டுமில்லாம அடுத்தவன் பர்சை நாம திருடுன மாதிரி கேவலமான லுக் வேற...

பழைய சம்பவங்கள் நினைவுக்கு வர, பயமும் வந்துடுச்சி. சுத்திமுத்தி பார்த்தேன். யாருமில்ல, எல்லாரும் வண்டியில வேக வேகமா போய்கிட்டு தான் இருக்காங்க. அப்ப, பணத்துக்கு சொந்தகாரங்க இங்க யாருமில்லன்னு நெனைச்சிகிட்டேன். சரி என்ன ஆனாலும் பரவா இல்லன்னு நெனைச்சிகிட்டு பத்து ரூபா நோட்டை எடுத்து பேண்டுக்குள்ள வச்சிகிட்டு,போயிட்டேன்... அந்த பத்து ரூபாயை பாக்கும் போதெல்லாம் சிரிப்பு சிரிப்பா வருது... கண்டிப்பா அந்த பத்து ரூபாயை செலவு பண்ணாம வச்சிருக்கணும் ன்னு முடிவு பண்ணிட்டேன்...

*****

தள்ளுவண்டி உணவகம்

அம்பத்தூர் எஸ்டேட் போன்ற தொழில் நகரங்களில் மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் பேச்சுலர் பசங்களின் 5 ஸ்டார் ஹோட்டல்கள் பெரும்பாலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளாகவே இருக்கும். மார்க்கெட்டுகளில் மூட்டை தூக்குபவர்கள், ஆட்டோ ஓட்டுனர், கால் டாக்சி ஓட்டுனர்கள், ஏழை மக்கள், சமயங்களில் வசதியானவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களும் உண்ணும் உணவகம் அதுதான். 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஏழைக்கு இடமில்லை. ஆனால் தள்ளுவண்டி கடைகளில் ஏழையும் அங்கு சாப்பிடலாம், எவ்வளவு பெரிய வசதியானவன் கூட அங்கு சாப்பிடலாம் என்பது தான் அதன் தனி சிறப்பு. சாப்பிடும் இடத்தில் சுத்தம் கொஞ்சம் முன்னபின்ன இருக்குமே ஒழிய, கடை நடத்துபவர்களின் மனதில் எந்த அசுத்தமும் இருக்காது என்பது என் திடமான நம்பிக்கை. அண்ணா நகர் பகுதியில் கார்த்திக் டிபன் சென்டர் காரர்களே தள்ளுவண்டி கடை போட ஆரம்பித்து விட்டார்கள் என்பதிலிருந்து தள்ளுவண்டி கடையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். தள்ளுவண்டி கடைகளில் சாப்பிடுவதில், பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பிடுவதை விட அதிக சவுகரியம் உண்டு. அண்ணே ஒரு கல்தோசை கொடுங்க, அக்கா சாம்பார் ஊத்துங்க, அம்மா ரெண்டு இட்லி கொடுங்க, தம்பி தண்ணி கொடுப்பா, இப்படியாக உறவுமுறை சொல்லி அங்கு மட்டும் தான் சாப்பிட முடியும். உறவுமுறை சொல்லி சாப்பிடும் போது வீட்டில் சாப்பிடுவதை போல ஒரு உணர்வு ஏற்படும். பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்களில் கிடைக்காத ஆகப்பெரிய வசதி இது. ஒருவாரம் தொடர்ந்து ஒரு கடையில் சாப்பிட்டால், அவர்கள் வீட்டில் ஒருவரைப் போல நம்மை ஏற்றுக்கொள்வார்கள். அதன் பிறகு ஒரு நாள் சாப்பிட போகவில்லை என்றால் கூட ஏன்பா நேத்து வரல? நேத்து சாப்பிட்டியா இல்லையா? என்று கண்டிப்பாக விசாரிப்பார்கள். காசு இல்லை என்று யாரையும் பட்டினி போடமாட்டார்கள். காசில்லம்மா என்று சொன்னால், முதலில் சாப்பிடு என்று ஒரு தட்டில் நாலு இட்லியை போட்டு நீட்டுவார்கள். உடம்பு சரியில்ல கொஞ்சம் நைட்டுக்கு கஞ்சி வச்சி தர்றீங்களா? ன்னு தினமும் சாப்பிடும் கடையில் மத்தியானமே சொல்லிட்டா போதும், ராத்திரிக்கு கஞ்சி தூக்கு வாளியில் ரெடியா இருக்கும். இப்படியாக மனிதர்களை நேசிக்க தெரிந்தவர்கள் அவர்கள். கார்த்திக் டிபன் சென்டர் போன்றவர்கள் தங்கள் கிளையை சாலையோர தள்ளுவண்டி கடைகள் பக்கமும் விரித்ததாலும் மற்றும் அம்மா உணவகங்கள் வந்த பிறகு அவர்கள் வியாபாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான்.

வெயில் நாள் துவங்கிய பிறகு காலை டிபனுக்கு பதில் தினமும் காலையில் ஒரு சொம்பு கூழ் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டேன். அதில் சில வசதி இருக்கு. காசும் கம்மி, ஒரு சொம்பு குடித்தால் மத்தியானம் ஒரு மணிவரைக்கும் பசிக்காது. புதினா சட்னி, எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் பத்தை, வருத்த மிளகாய் இப்டி நாலுவகை ஷைடிஷ் வேற தருவாங்க. நான் தினமும் கூழ் கடுக்கிற கடை, ஒரு அம்மா அதை நடத்துறாங்க. 35 வருஷமா சென்னையில இருக்காங்களாம். 'இப்பதான் சொந்தமா ஒரு இடம் கால் கிரவுண்ட் வாங்கி போட்டுருக்கேன். எப்ப வீடு கட்டி குடி போக போறேன்னு தெரியலன்னு சொல்வாங்க'. ரெண்டு மூணு நாலு பழக்கத்திலே கூட நம்மிடம் மனம் விட்டு, அவர்கள் சொந்த விஷயங்களை கூட பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் மனிதர்களை நம்புகிறார்கள். வழக்கம் போல சனிக்கிழமை கூழ் குடிக்க போயிருந்தேன். ஒரு இளைஞர் ஒருவரும் கூழ் குடிக்க வந்தார். அவரும் வழக்கமாக அங்கு தான் கூழ் குடிப்பவர் என்று நினைக்கிறேன். "அம்மா காசில்ல,கூழ் குடுங்க, திங்ககிழமை காசு தர்றேன்". என்று கேட்டார். இப்டிதான்பா எத்தனையோ பேர் ஏமாத்திட்டு போய்டாங்க, நீயாச்சும் கரெக்டா காசு கொடுத்திடு ன்னு சொல்லிட்டு, அவங்க அந்த இளைஞருக்கு கூழ் கொடுத்தார்கள். அவர்கள் ஏமாற்றத்தை பொருட்படுத்தவில்லை, அந்த இளைஞனின் பசியை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டார்கள். "ஒரு சொம்பு 15 ரூவா தான், இவன் தரலன்னா கூட பரவாயில்ல, ஆனா மனுஷங்க பசி தாங்கமாட்டாங்க" ன்னு அந்த இளைஞர் சென்ற பிறகு என்னிடம் சொன்னார்கள். அதை ஆமோதித்தவனாக நானும் கூழ் குடித்துவிட்டு சென்றுவிட்டேன். ஞாயிறு அலுவலகம் விடுமுறை, இன்று வழக்கம்போல் திங்கள்கிழமை அலுவலகம் செல்லும் வழியில் கூழ் குடிக்க சென்றேன். என்னம்மா... அந்த பையன் காசு கொடுத்தாரா?ன்னு விசாரிச்சேன். ஆமா பா... கரெட்டா வந்து கொடுத்துட்டான் பா... "நான் அவன் பசியை ஆத்துனேன், அவன் என் மனசை ஆத்திட்டான்" என்றார்கள்.. பாவம், புள்ள எங்கயோ விழுந்து கால்ல வேற அடிபட்டு வந்திருந்தான். ஹாஸ்பத்திரிக்கு போக சொன்னேன், போறானா? என்னன்னு தெரியல என்று விசனப்பட்டார்...

இந்த நம்பிக்கையையும், மனிதநேயத்தையும் எந்த 5ஸ்டார் ஹோட்டல்களிலும் நிச்சயமாக பார்க்க முடியாது...

******

உழைக்கும் பெண்கள்

'இப்பல்லாம் பெண்களும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க' ன்னு கேட்கும்போது எப்பவெல்லாம் பெண்கள் வேலை செய்யாம இருந்தார்கள்? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. கடந்தவார நீயா?நானா? நிகழ்ச்சியில் கூட அப்படி ஒரு விவாதம் வந்தது. அதற்கு ஒரு பத்திரிக்கையாளர் மிக அழகாக பதில் சொன்னார். உழைக்கும் வர்க்கத்தில் பிறந்த பெண்கள் எப்போதும் வேலை செய்துகொண்டே தான் இருந்தார்கள். மன்னர்களின் மனைவிகள் தான் வேலைக்கு செல்லாமல் இருந்தார்கள் என்றார். மிக சரியான பதிலும் கூட அது. சுதந்திர இந்தியாவில் ஆண்டை சாதியினரே தங்களை மன்னர்களாக கருதி கோலோச்சி கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டுப் பெண்களும், மனைவிகளும், பண்ணையார்களின் மனைவிகளும், அவர்கள் வீட்டுப் பெண்களும் வேலைக்கு செல்லாமல் இருந்திருப்பார்கள். ஆனால் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகளோடு, நாற்று நடுவது, களை பறிப்பது, நெல் அறுக்க செல்வது, நெல் அடிக்க செல்வது உள்ளிட்ட காட்டு வேலைகளையும் செய்தே வந்திருக்கிறார்கள். மறுமணம் என்பது அருவருப்பாக கருதப்பட்ட காலத்தில் கணவனை இழந்த அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை கரை சேர்த்த வரலாறுகளை பார்த்தால் கண்ணீர் வரும். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் 'இப்பல்லாம் பெண்களும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க' என்று சொல்லி கேட்டதில்லை. அவர்களுக்கு தெரியும் பெண்களின் உழைப்பு எப்படிபட்டது என்று. பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் ஆணுக்கு நிகராக பெண்ணின் உழைப்பும் பொதிந்திருக்கும். நகரமயமாதலும், தனியார்மயமாதலும் முழுவீச்சில் நடந்தேறி வரும் சூழலில் அலுவலக பணிகள் மட்டுமே உழைப்பாக கருதப்படுகிறதோ? என்ற அச்சம் எழுகிறது. இன்றைய சமூகம் உழைக்கும் மக்களை, அவர்களின் உழைப்பை விரட்டியடிக்கிறது. அதனடிப்படையில் தான் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களை மாத்திரம் இவர்கள் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த பெண்களின் உழைப்பு என்னவானது? எங்கள் வீட்டின் ஒவ்வொரு மண்ணிலும் என் அம்மாவின், அக்காக்களின் உழைப்பு பொதிந்திருக்கிறது என்பதை நானறிவேன். '5 பெண்களை பெற்றால் அரசன் கூட ஆண்டியாவான்' என்று சொல்லாடல் உண்டு. 5 பெண்களை பெற்ற என் அப்பாவை ஆண்டியாக்காமல், என் அக்காக்களின் உழைப்பு காப்பாற்றியது எங்க அப்பாவும் அறிவார். என்னைவிட என் அக்காக்கள் மீதுதான் அவருக்கு கூடுதல் பிரியம் என்று கூட சொல்லலாம்.. ஆண்களுக்கு இணையாக சவக்குழி வெட்ட எங்க அம்மா சென்றது எனக்கு நல்ல நினைவில் இருக்கிறது.

சாலையோரங்களில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பாட்டியை அல்லது கீரை விற்றுக் கொண்டிருக்கும் பாட்டியை கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள் பத்து வயதில் தன் தோளில் களைக்காடு மாட்டிய கதைகளை சொல்வார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்னர் வரை கிராமபுரங்களில் "திருமணத்திற்கு பின்பு மனைவியை வேலைக்கு அனுப்ப மாட்டேன், வீட்டோடு இருந்து குடும்பத்தை பார்த்துக் கொண்டால் போதும்" என்று சொல்லும் ஆண்கள் தங்கமான மாப்பிள்ளைகளாக கருதப்பட்டார்கள். அதேபோல திருமணத்திற்கு பிறகு வேலைக்கு அனுப்பாத கணவன் தான் வேண்டும் என்று விரும்பிய கிராமத்து பெண்களின் எண்ணிக்கையும் ஏராளம். காரணம் அப்போதெல்லாம் பெண்கள் அதிகம் படிக்காத காலமது. பத்துவயது முதல் நாற்று நடவும், களைப் பறிக்கவும் சென்றவர்கள். திருமணத்திற்கு பிறகாவது தங்களின் கஷ்டத்திற்கு ஓய்வு கிடைக்குமா? என்ற ஏக்கம் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். அன்றைக்கு பெண்களின் வீட்டு வேலை என்பது காட்டு வேலையையும் உள்ளடக்கியதாக இருந்தது. பெண் பார்க்க செல்லும் போது பெண்ணுக்கு என்னென்ன வேலை தெரியும்? என்று விசாரிப்பது வழக்கமாக இருந்தது. பயிர் நட தெரிந்தால் அந்த பெண் சூப்பர் என்று சொல்வார்கள்.

எங்க ஊர்ப்பக்க பெண்களின் உழைப்பையே சான்றாக சொல்லலாம். காலையில் சோறு சமைத்தால் அவர்கள் கொஞ்சம் வசதியானவர்கள் என்பதாக கருதப்பட்ட காலம் அது. காலையில் சோறு சமைக்கும் வசதி உள்ளவர்கள், சோறு ஆக்கிவைத்து விட்டு காலை வேலைக்கு சென்றால் இரண்டு மணிக்கு வருவார்கள். மீண்டும் மத்தியானம் அந்தி வேலைக்கு செல்வார்கள். இரவு கட்டாயமாக சமைப்பார்கள் என்பதால் எல்லோர் வீட்டு வாசலிலும் சோறு ஆக்குவார்கள். பெரும்பாலும் அடுப்பு வீட்டு வாசலில் தரையோடு சேர்ந்து புதைத்திருப்பார்கள். அப்போது படித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட சனி ஞாயிறு விடுமுறை நாட்களிலும், தேர்வு விடுமுறை நாட்களிலும் வேலைக்கு செல்வார்கள். வானம் பார்த்த பூமி என்பதால் எங்க ஊர்ப் பக்கம் கரும்பு, கம்பு, சோளம், வேர்க்கடலை போன்ற மானாவரி பயிர்களின் விளைச்சல் அதிகம். அதிகளவில் கரும்பு தான் பயிரிடுவார்கள். கரும்பு பயிரிட ஏர் ஓட்டுவதும், கரும்பு நடுவதற்கு வசதியாக துண்டு துண்டாக வெட்டி வைப்பதும் ஆண்களின் வேலை. ஒவ்வொரு கணுவாக வெட்டுவார்கள். காரணம் ஒவ்வொரு கணுவிலும் கரும்பு சோலை முளைத்து வந்து, கரும்பு விளையும். கரும்பு நடுவதற்கு பெண்கள் தான் செல்வார்கள். . அதற்கு உரம் வைக்க ஆண்கள் செல்வார்கள். கரும்புகளில் காய்ந்த சோலைகளை கழிக்க பெண்கள் செல்வார்கள். கரும்பு வெட்ட ஆண்கள் செல்வார்கள், ஆண்களால் வெட்டிப் போடப்பட்ட கரும்புகளை நான்கைந்தாக வைத்து கட்டுவதற்கு பெண்கள் செல்வார்கள். கட்டப்பட்ட கரும்பு கட்டுகளை ஐந்தாறாக சேர்ந்தது தூக்கி கொண்டு ஓரிடத்தில் அடுக்குவது பெண்கள். சில பெண்கள் பத்து கட்டுகளை கூட தூக்குவார்கள். அடுக்கி வைக்கப்பட்ட கரும்பு கட்டுகளை டிராக்டரில் ஏற்றி சர்க்கரை ஆலைக்கு அனுப்புவது ஆண்கள். இப்படி கரும்பு பயிரிடப்பட்ட நாள்முதல், விளைந்த பிறகு அறுவடை செய்து, சர்க்கரை ஆலைக்கு அனுப்புவது வரை ஆண்களோடு பெண்களின் உழைப்பும் சரிபாதியாக இருக்கும். அதே போல விதை நெல் விதைப்பது முதல், அறுவடை செய்து அரிசியாக்குவது வரை ஆண்களோடு பெண்களும் சேர்ந்து உழைப்பார்கள். ஆண்களும், பெண்களுமாக சேர்ந்து நெல்லடிக்கும் காட்சி அவர்களின் உழைப்பை பறைசாற்றும் விதமாக இருக்கும். காலையில் கரும்பு வெட்ட சென்ற ஆண்கள் மாலையில் ஓய்வெடுப்பார்கள். ஆனால் காலையில் கரும்பு கட்ட சென்ற பெண்கள் மாலையில் களைப்பறிக்கவும் செல்வார்கள். அதை அந்திக்களை என்று சொல்வார்கள். மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வருவார்கள். மீண்டும் மூன்றரை மணிக்கு களைப் பறிக்க செல்வார்கள். வேர்க்கடலை பயிரிடுவதில் பெண்களின் உழைப்பு அதிகமானது. காலையில் கடலை பறிக்க சென்றால் மாலையில் தான் வருவார்கள். கடலை செடியை பிடுங்கி போட்டிருப்பார்கள். அதை இன்னொரு நாளில் சென்று செடியில் இருந்து கடலையை தனியாக ஆய வேண்டும். எங்க அம்மாவோடு நானும் பலமுறை சென்றிருக்கிறேன். அதற்கு கூலியாக பணம் கிடைக்காது, மாகாணி கணக்கில் கடலை தருவார்கள். எந்த வேலையுமே இல்லை என்றால் அடுப்பெரிக்க விறகு வெட்ட செல்வார்கள், வீடு மொழுக மண் அல்ல செல்வார்கள். ஆற்று மணலும், களிமண்ணும் சேர்ந்த கலவை போல் இருக்கும் அந்த மண். அதைக் கொண்டு மெழுகினால் சிமெண்ட் தரையைப் போன்று தரை மொழு மொழுவென்று இருக்கும். இப்படி நாள் முழுக்க வேலை செய்த அவர்கள் தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை உழைப்பிற்கே செலுத்தியவர்கள்...

ஆண்களும், பெண்களுமாக வெளியூர்களுக்கு கரும்பு வெட்ட செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் உளுந்து பொறுக்கவும், மாம்பழம் பொறுக்கவும் வெளியூர்களுக்கு பெண்கள் செல்வார்கள். அவர்களின் துணைக்கு மட்டும் ஒன்றிரண்டு ஆண்கள் செல்வார்கள். உளுந்து பொறுக்கவும், மாம்பழம் பொறுக்கவும் பெண்கள் செல்லும் காட்சி, ஆண்கள் சபரிமலைக்கு செல்ல இருமுடி கட்டும் காட்சியைப் போன்று இருக் கும். முன்பணம் வாங்கி கொண்டு செல்வதால் அதிக உழைப்பை சுரண்டுவதாக இப்போதெல்லாம் யாரும் வெளியூர் வேலைக்கு செல்வதில்லை. ஆண் செய்யும் வேலையை துணிந்து செய்யும் பெண்களும் உண்டு. ஏர் ஓட்டும் பெண்களும் உண்டு. கரும்பு வெட்டும் பெண்களும், உரம் போடும் பெண்களும் இருந்தார்கள். ஒன்றிரண்டு குடும்பத்தில் ஆண்கள் சென்னை போன்ற நகரத்தில் அல்லது கடன் வாங்கி வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து சம்பாரிச்சாலும், சொந்த ஊரில் பெண்கள் கூலி வேலைக்கு செல்வதை நிறுத்திக் கொண்டதே கிடையாது. அதுபோன்ற பெண்கள் சில நேரங்களில் " புருஷன் வெளிநாட்டில் வேலை செய்றான், இவ இங்க வேலை செய்றா அவளுக்கென்ன குறைச்சல்? என்ற எகத்தாளம் செய்யப்படுவதுண்டு. கட்டிடம் கட்டும் வேலைக்கு சித்தாள் வேலைக்கு செல்வார்கள். கலவை கலப்பது ஆண்களின் வேலை. ஆனால் சில பெண்கள் கலவை கலப்பார்கள். அவர்களை இவ பொம்பளையா? ஆம்பளையா? என்று வியப்போடு பார்ப்பார்கள். 

இப்படியாக உழைக்கும் வர்க்கத்தை பொருத்தமட்டில் பல நூற்றாண்டுகளாகவே பெண்களின் உழைப்பு என்பது பிரதானமாக இருந்து வந்துள்ளது. வேதங்களும், வரலாறுகளும் ஆண்களால் எழுதப்படுவதால், அதுவும் ஆண்டைகளால் எழுதப்படுவதால் உழைக்கும் வர்க்கத்தின் வரலாறு மட்டுமல்ல, உழைக்கும் பெண்களின் வரலாறுகளும் மறக்கடிக்க பட்டிருக்கின்றன என்பதே உண்மை ...

********

1 ரூபாய் இட்லியும்  - மலிவுவிலை உப்பும் 

ஒரு ரூபாய்க்கு இட்லியும், மலிவு விலையில் உப்பும் கொடுப்பதன் மூலம் இந்த அரசு என்ன சொல்ல வருகிறது? தாழ்த்தப்பட்ட உழைக்கும் ஏழைமக்களை, வசதி படைத்த உயர்சாதி பண்ணையார் ஒருவர் எப்படி நடுத்துவார் என்பதை புரிந்து கொண்டவர்களுக்கு, ஒரு ரூபாய் இட்லியின் நோக்கமும், மலிவு விலையில் உப்பு கொடுப்பதன் நோக்கமும் வெகு சுலபமாக புரியும் என்று நினைக்கிறேன். 

ஒரு சின்ன பிளாஷ்பேக்...

காலையில் பண்ணையார் வீட்டுக்கு சென்றதும் அங்குள்ள மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளி விட்டு, பிறகு அவங்க வீட்டுக்கு முன்னாடி குவிஞ்சி கிடக்கிற குப்பையெல்லாம் அள்ளி வெளியே கொட்டி முடிப்பதற்குள் மணி ஏழரை ஆகியிருக்கும். வீட்டு வேலையெல்லாம் செஞ்சி முடிச்சதும், பண்ணையார் பொண்டாட்டி முதநாள் நைட்டு மீந்துபோன சோத்துக்கஞ்சியை, ஒரு பழைய பாத்திரத்தில் கொண்டுவந்து கொடுப்பாங்க. பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கஞ்சி கொடுப்பதற்கென்றே தனி பாத்திரம் இருக்கும். அந்த கஞ்சியை வாங்கி குடிச்சதும், அவ்வளவு நேரம் உழைத்து கலைத்தவர் பரம திருப்தி அடைந்துவிடுவார். என்ன இருந்தாலும் பண்ணையார் வீட்டு கஞ்சி போல வருமா? என்ற புகழாரம் வேற... பிறகு கொல்லைக்கு போனா அங்கு களைப்பரிக்க பொம்பளைங்க வந்திருப்பாங்க. ஆம்பளைங்களுக்கு வாய்க்கால் வெட்டுவது, முள்ளு வெட்டுவது, தோப்புகளை சுத்தம் செய்வது, ஏர் ஓட்டுவது இப்படி ஏகப்பட்ட வேலை இருக்கும். அவர் ஏர் ஓட்ட போனவராக இருந்தாலும், 'முருகா அந்த தோப்புல நாலு கருவேலி மரம் இருக்கு.. அதை கொஞ்சம் வெட்டிப் போட்டுடு' ன்னு பண்ணையார் சொன்னா அதையும் செய்வார். மத்தியானத்துக்கு கஞ்சியும், ஊர்காயும் வரும். வருத்த மிளகாய் கூட வரும். சில நாட்களில் குழம்பு சோறு போடவும் செய்வார்கள். மறுபடியும் சாயந்திரம் வரை வேலை செய்யணும். வேலையை முடிச்சிட்டு சாயந்திரம் வீட்டுக்கு போக முடியாது. பண்ணையார் வீட்டுக்கு போயி மேய போயிருந்த மாடுகளை தொழுவத்தில் கட்டனும். நைட்டுக்கு பண்ணையார் வீட்டுல சாப்பிட்டு மீந்த சோத்தையும், ஒரு பாத்திரத்தில் கொடுப்பார்கள். அல்லது ஒரு இலையில் வைத்து துண்டில் கட்டிக் கொள்வார்கள். இப்படி எல்லா வேலையும் செஞ்சி முடிச்சாலும் கூலி என்பது மிக சொற்பமாக இருக்கும். வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு போனதும் கூலியைப் பத்தி கவலைப்படாமல், தன உழைப்பை பண்ணையார் உருஞ்சுகிறார் என்ற எந்த கோபமும் இல்லாமல் பண்ணையார் பொண்டாட்டி கொடுத்த கஞ்சியையும், மத்தியான சொத்துக்கு கொடுத்த ஊறுகாயைப் பற்றி பெருமை பேசுவார்கள். சில நாட்களில் எனக்கு காய் அதிகமா வெச்சாங்க, உனக்கு தான் கொழம்பு அதிகமா ஊத்துனாங்க என்று விவாதம் நடக்கும். சில நாட்களில் பண்ணையார் மிக கடுமையாக திட்டி இருப்பார். அதையும் பொருட்படுத்தாமல் 'சோறு போட்ட மனுஷன் நாலு வார்த்தை திட்டுனா என்ன தப்பு?' என்று தனக்குத் தானே சமாதனம் செய்து கொள்வார்கள்...

இப்படிப்பட்ட மனநிலையை உருவாக்கத் தான் இந்த அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. சோறு போட்டவர்களுக்கு விசுவாசமாக இருப்பதில் தமிழர்கள் கெட்டிக்காரர்கள். ஒரு ரூபாய் இட்லி சாப்பிடுபவர், இந்த அரசு செய்யும் அத்துனை மக்கள் விரோத செயல்களையும் மறந்துவிடுகிறார் என்பதே எதார்த்த உண்மையாக இருக்கிறது. உப்பு வாங்க கூட துப்பில்லாத மக்கள் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த அரசு. ஓட்டுப் போட்ட மக்களை இதைவிட வேறு யாரும் கேவலப்படுத்திவிட முடியாது... மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தாமல், அவர்களின் வாங்கும் சக்தியை கேலிப்படுத்துகிறது. ஒரு ரூபாய் இட்லிக்கும், உப்புக்கும், பேனுக்கும், மிகஷிக்கும் இன்னபிற மலிவுவிலை பொருட்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கொண்டு தொழில் நிறுவனங்களை துவங்கலாம், அதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கலாம். வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த முடியும். மின் தேவையை பூர்த்தி செய்து தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதே ஒரு அரசு செய்யும் மிகப்பெரிய நல்ல காரியாமாக இருக்குமே ஒழிய, ஒரு ரூபாய்க்கு இட்லியும், மலிவு விலையில் உப்பும் கொடுப்பதல்ல என்பதை இந்த ஆட்சியாளர்கள் என்றைக்கு புரிந்து கொள்ளப் போகிறார்களோ???

- தமிழன் வேலு

சனி, 31 மே, 2014

ஆண்டைகளுக்கு அம்மா கொடுத்த சாபம் (சிறுகதை)

செல்வா எப்போதும் கலகலப்பாக சிரித்துக் கொண்டே இருப்பவர். உணர்வுகளை மிக தத்ரூபமாக வெளிப்படுத்துவதில் வல்லவர். அன்பையும், கோபத்தையும் எவ்வித பாகுபாடுமின்றி முழுவதுமாக வெளிப்படுத்துபவர். பணம் மட்டுமே பிரதானமாக கொண்ட மனிதர்களிடையே மனிதர்களை, உறவுகளை தேடுபவர். தன் குடும்பத்தின் கடைக்குட்டி என்பதால் தனக்கு இளையவர்கள் யாவரையும் தம்பி தம்பி என்று அன்போடு பழக கூடியவர். ஆனால் நான் இப்போது உங்களுக்கு சொல்லப்போவது வெள்ளுடையில், புன்னகை தவழும் முகத்தோடு வலம்வரும் செல்வாவை அல்ல. ஒரு சாதாரண தீண்டப்படாதவளின் மகன் செல்வாவை. செல்வா, எப்போதும் தனிமையை விரும்பியதில்லை. தனிமை, தன் துயர்மிகுந்த வாழ்வின் நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்துவிடும் என்பதாலே அவர் தனிமையை வெறுப்பவர். தனிமையில் இருக்கும் போதெல்லாம் அவர் கண்கள் குளமாகி இருக்கும். நான் தனிமையில் இருக்கும் போதெல்லாம் தீண்டப்படாதவர்களின் வாழ்வில் ஆண்டைகள் நடத்திய ஊழிக்கூத்துகள் மனக்கண் முன் நிழலாடுவதாய் அவர் சொல்வார். தங்களை வளர்க்க தன் தாய் சந்தித்த அவமானங்களும், வலிகளும் எப்போதும் நெஞ்சில் இருந்து நீங்காத ரணங்கள் என்பார். இருப்பினும் அந்த வலிகளும், அவமானங்களுமே என் தலைமுறையை மீட்டது என்று ஆசுவாசப்படுத்திக் கொள்வார். எல்லோருக்கும் தாயைப் பிடிக்கும், அவர் மட்டும் அம்மா தான் என் தலைமுறையின் வெளிச்சம் என்பார். கருவறையில் இருளையும், வாழ்வில் வெளிச்சத்தையும் தந்த தெய்வம் என்பார். தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் தன் தாயின் வழிகாட்டல் இருப்பதாய், தான் அணிந்திருக்கும் ஒவ்வொரு உடையிலும்  தன் தாயின் தியாகமும், உழைப்பும் இருப்பதாய் சொல்லி சிரிப்பார். செல்வா பெருங்குரலெடுத்து பேசுவது அரிதிலும் அரிதாக இருக்கும். அவர் அப்படி பேசினார் எனில் அவரின் உணர்வுகள் வெகுவாக தூண்டப்பட்டிருப்பதாய் எண்ணிக் கொள்ளலாம். அவரின் குரலில் தன் ஆவேசமும், தன் முன்னோர்களின் ஆற்றாமையும் சேர்ந்து ஒரே நேர்க்கோட்டில் வெளிப்படும். ஆண்டைகளுக்கான எச்சரிக்கையாக அது இருக்கும். அப்போதெல்லாம் அவர் கண்கள் ஆவேசத்தில், ஆற்றாமையில், வஞ்சகத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோடு மிளிர்வதை காணலாம். இருள் சூழ்ந்த பொழுதில், ஒற்றை நிலவை சாட்சியாக வைத்து ஒரு சேரித் தெருவில் அவர் உரையாடும் போது அந்த காட்சியை காண நேர்ந்தது. அங்கு அவர் பேசுகையில் தான் அணிந்திருக்கும் வெள்ளுடைக்குப் பின்னால் தன் தாயின் கிழிந்த வாழ்வு இருப்பதாக சொன்னார். தன் தாயின் கிழிந்த வாழ்வுக்கு பின்னாலும், முன்னாலும் ஆண்டைகளின் சூழ்ச்சிகள் இருப்பதாக சொன்னார். எவ்வளவோ சொன்னார், ஏதோதோ சொன்னார். அத்தனையும் தீண்டப்படாதவர்களின் வாழ்வில் காலப்பேய் நிகழ்த்திய கோரதாண்டவம். எல்லோருக்கும் பகலும், இரவுமாய் நாட்கள் கழியும், ஆனால் தீண்டப்படாதவர்களுக்கு மட்டுமே இருளும், இருளுமாய் நாட்கள் கழியும் என்றார். இந்த ஒற்றை வாசகதிற்குள் தான் எத்தனை எதிர்க்குரல்கள், எத்தனை போராட்டங்கள், எத்தனை வலிகள், எத்தனை அழுகைகள் அடங்கியிருக்கின்றன.  

செல்வாவோடு பழகும் வாய்ப்பு கிட்டியிருந்தாலும், அவரோடு தனிமையில் உரையாடும் வாய்ப்பு மட்டுமே கிடைக்காமல் இருந்தது. மாலை மங்கும் நேரம், கன்னிப் பெண்ணுக்கு காதல் வந்ததை போல மேற்கு வானம் சிவந்திருக்கும் அந்த பொழுதில் அவரோடு தனிமையில் பயணிக்கும் அந்த வாய்ப்பும் ஒருநாள் கிடைத்தது. கார் எங்கயோ சென்றது. எங்கென்று மட்டும் தெரியவில்லை, எங்கு சென்றால் என்ன? இன்று எப்படியாவது அவர் மனதில் இருக்கும் அந்த சிறுவயது கதைகளை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற திட்டம் மனதிற்குள் உருவானது. கார் சென்றுக் கொண்டே இருந்தது. இருவருக்குள்ளும் பெருத்த மவுனம் மட்டுமே நீடித்திருந்தது. எங்களை அந்த மவுனம் மட்டுமே இணைத்திருந்தது. கதைகளை கேட்க எண்ணி, தயங்கி, மீண்டும் மீண்டும் அமைதி... காரின் வேகம் குறைந்தது. சாலையின் இருபுறத்திலும் நீண்ட தூரத்திற்கு மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன. அவ்வளவு பெரிய கானகத்தை அதற்குமுன்னால் நான் கண்டதில்லை. மனதிற்கு இதமான, ரம்மியமான சூழல், எங்கயோ ஆகாயத்தில் பறப்பதை போன்ற உணர்வை ஏற்ப்படுத்தி விட்டது. அவரிடம் கதை கேட்கவேண்டும் என்பதை மறந்து, அந்த சூழலை அனுபவிக்க துவங்கிவிட்டேன். பறவைகளின் ஓசையும், காற்றில் ஆடும் மரத்தின் சத்தமும் என்னை மெய் மறக்க செய்துவிட்டது. ஒரு மரத்தடியில் அவர் அமர்ந்துவிட்டார். அதுவரையில் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. மீண்டும் நினைவு வந்தவனாய் அருகில் சென்று, அன்றைக்கு அவர் பேசியதை நினைவுப்படுத்தினேன். மீண்டும் அவருக்குள் மவுனம். அந்த மவுனம் எதோ ஒரு பிரளயத்தை உண்டு செய்யப் போகிறது என்ற எண்ணம் எனக்குள் உருவானது. தொண்டையை செருமினார், பேசத் துவங்கினார். மீண்டும் அம்மாவைப் பற்றி பேசினார். சிறுவயதில் தன்னை நோக்கி வந்த அத்தனை அம்புகளையும் தன் அம்மாவே எதிர்கொண்டதாய் சொன்னார். அவர் வளர்ந்த சூழலை சொன்னார். இந்த காட்டிற்கு வந்ததன் காரணத்தை சொன்னார். மரங்கள் மீது அம்மாவுக்கு ரொம்பவே பிரியம் என்றார். அம்மா மரங்களோடு பேசியிருப்பதாகவும் சொன்னார். அந்த ஊரில் இவர்கள் குடும்பத்தை தவிர மற்ற வீடுகள் அனைத்தும் ஆண்டைகளின் வீடு என்றார். அப்போதெல்லாம் அம்மாவுக்கு தோழிகளாக, உறவுகளாக இந்த மரங்களே இருந்தனவாம். ஆண்டைகளுக்கு நடுவில் அடிமை சாதியில் பிறந்த தங்களை தனி மனுஷியாக நின்று தன் அம்மாவே வளர்ந்ததாக சொன்னார். நீளமாக அவரே பேசினார். ஒருமுறை இவரின் சிறுவயதில் பள்ளி நண்பர்களோடு பட்டம் விட்டுக் கொண்டிருந்த இவரின் பட்டம் அருகில் இருந்த தோப்பில் விழுந்துவிட்டது. அதை எடுக்க சென்ற போது "ஈன சாதி மவனே இங்க எங்கடா வந்த?" என்று தோப்புக்காரர் விரட்டினார். அழுத கண்களோடு தன் அம்மாவிடம் சென்றான். மகனின் அழுகையை தாங்காமல், ஆண்டையிடம் அம்மா போட்ட சண்டை இன்னும் நினைவில் இருப்பதாய் சொன்னார். 'யோவ்... உன் காட்டுல வேலை செய்ய நான் வரணும், என்புள்ள அவன் பொருள எடுக்க வரக்கூடாதா? இனிமே வேல கீலன்னு வீட்டுப் பக்கம் வந்துப் பாரு...' என்ற அம்மாவின் பெருங்கோவம் இன்னமும் தம் மனக்கண்முன் நிழலாடுவதாய் சொன்னார். தன் பிள்ளைகளுக்காக யாருடனும் போரிட தயங்காத அந்த தாய் ஒரு சந்ததி எழுச்சியின்  தொடக்கம். தன் நினைவுகள் வெறும் நினைவுகளே அல்ல என்பார் அவர். இதயத்தை இரண்டாய் பிளப்பது போன்ற ரணம். அந்த நினைவுகள் தன்னை ஆக்கிரமிக்கும் போதெல்லாம் வானமே உடைந்து விழும் போலிருக்கும். கண்ணீர் கடலலை போல் திரண்டு ஓடும் என்பார். தீண்டப்படாதவர்களின் நினைவுகளுக்கு வயதேன்பதே இல்லை என்பார். நேற்றும், இன்றும் என்றுமாய் நிகழும்  அன்றாட சங்கதிகளில் ஒன்று. தான் அமர்ந்திருக்கும் காடு, எத்தனையோ பெரும் கொடூரங்களுக்கான சாட்சி என்று அதன் வராலாற்றை விவரிக்க தொடங்கும் முன்னரே அவர் கண்களில் கலவரம் வெடிக்க தொடங்கியிருந்தது. இந்த காட்டில் சாதியற்ற மனிதர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். ஆம்... எந்த விலங்கும், மற்றொரு விலங்கை அடிமை கொள்வது இல்லை, அப்படியானால் அவை மனிதர்களை விட மேன்மையானவர்களே என்று சொல்லி சிரிக்கிறார். அந்த சிரிப்பில்  தன் வலிகளுக்கான மருந்தை அவர் தேடுகிறார். தன் மக்களின் விடுதலைக்கு வழி எங்கேனும் உண்டா என்று அலசுகிறார். 'தன் மக்களுக்கான உரிமைகள் சிலைகள் குடியிருக்கும் சன்னதியில் இல்லை, அதிகாரம் குடிகொண்டிருக்கும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உள்ளதாக சொல்வார்'. செல்வாவின் முன்னோர்கள் ஆண்டைகளின் ஊழிக்கூத்தில் அடித்து விரட்டப்பட்டார்கள். ஆனால் அவரது அம்மா மட்டும், தன் சொந்த மண்ணை விட்டு விலகாது, தன் பிள்ளைகளின் நலனுக்காக எந்த இழப்பையும் தாங்கி கொள்ள வல்லவராய் இருந்தார். தன்னுடைய அம்மா எத்தனை அற்புதமானவள், என்று அவர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வதுண்டு. எந்த வாசனை திரவியங்களாலும், என் அம்மாவின் முந்தானை வாசனையை மறக்கடிக்க செய்ய இயலாது என்பார். ஆண்டைகளின் சாதிக் கொடூரத்தில் இருந்து தன்னை காத்தது என் அம்மாவின் அரவணைப்பே என்பார்.

மற்றொரு நாள் விளைநில காட்டிற்குள் அழைத்து சென்றார். "இதோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருக்கும் எந்த நிலமும் எங்களுக்கு சொந்தமில்லை, ஆனால் என் அம்மாவின் வியர்வை சிந்தாத துளி நிலமும் பாக்கியில்லை" என்று சிரித்துக் கொண்டே அந்த உழைப்பின் தியாகத்தை விவரிக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு சூரியன் கிழக்கை நோக்கி நகர, இரவுப் பணிக்கு நிலவு தயாராகிக் கொண்டிருந்தது. இரை தேடி சென்ற பறவைகள் கூட்டிற்கு திரும்பி கொண்டிருக்கின்றன. அறுவடை முடிந்த நெல்வயல்கள் மஞ்சள் நிறத்தில் பரந்து விரிந்து கிடக்கின்றன. நெற்கதிர்கள் குவித்து வைக்கப்பட்ட களத்துமேடு. நெல்லடிக்க வந்த மனிதர்கள் வீடு சென்று வெகுநேரம் ஆகியிருக்கும். யாருமற்ற அந்த களத்துமேட்டில் ஒற்றைப் பெண்மணியாய் துயர்மிகுந்த தன் வாழ்வின் அத்தனை சோகங்களையும் எண்ணி, வேதனைக் குரலில் பாடிக் கொண்டு, களத்தில் சிந்திய நெல்மணிகளை பக்குவமாக தன் முந்தானையில் சேகரித்துக் கொண்டிருக்கிறார் அம்மா. சில சேரிக் கிராமங்களில் களத்துமேட்டில் சிந்திய நெல்மணிகளை பொறுக்குவதற்கு கூட சேரிப் பெண்களிடையே சண்டை மூளும். அதை ரசித்துப் பார்க்கும் ஆண்டைகள் தான் அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைப்பார்கள். சிலசமயங்களில் ஆண்டைகள் அசிங்கமான வார்த்தைகளில் கூட திட்டுவார்கள். களத்துமேட்டில் சிந்திய நெல்மணிகளில் மட்டுமல்ல, ஆண்டை வீட்டு குதிரில் பதுக்கி வைக்கப்படும் நெல்மணிகளிலும் அவர்களுக்கு பங்குள்ளது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்பது பரிதாபம். அதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்ட துயரங்கள் எல்லாம் எங்களுக்கு இல்லை, காரணம் ஆண்டைகள் மட்டுமே வாழ்ந்த அந்த கிராமத்தில் ஒற்றை அடிமைக் குடும்பமாய் நாங்கள் மட்டுமே இருந்தோம். அம்மா நன்றாக பாடுவார்கள். நாற்று நடும்போதும், அறுவடை செய்யும் போதும், கூலிவேலை செய்யும்போதும் தன் வாழ்வின் துயரங்களை பாட்டாக பெருங்குரலெடுத்து பாடுவார். முதல் மனுஷியாக வேலைக்கு செல்வார், கடைசி மனுஷியாக வீடு திரும்புவார். இரவெல்லாம் என்னை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்வார். பேசுவார் பேசிக்கொண்டே அழுவார். அந்த அழுகையில் தன் பெண் பிள்ளைகளை பங்கமில்லாமல் கரை சேர்த்துவிட வேண்டும் என்ற தவிப்பு இருக்கும். வேதனை கலந்திருக்கும். சமூகத்தின் மீதான கோபம் கலந்திருக்கும். அவர் கதை சொல்ல துவங்கியதும் நான் தூங்கியிருப்பேன். அம்மாவின் கண்ணீர்த் துளிகள் தான் என்னை உசுப்பிவிடும். மீண்டும் தாலாட்டுப் பாடி என்னை தூங்க வைப்பார்.

ஊரில் அம்மன் கோவில் திருவிழா தொடங்கியிருந்த அந்த நாட்கள் தான் என் வாழ்வில் அத்தனை திருப்பங்களை உருவாக்கப் போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. கரகம் எடுத்துக் கொண்டு வீதி வீதியாக, பட்டு அலங்காரத்தில் அம்மன் வலம் வரும். ஒவ்வொரு வீட்டிலும் ஆரத்தி எடுப்பார்கள். தீபாராதனை காட்டுவார்கள். கரகமெடுத்து வரும் நபரின் காலில் தண்ணீர் ஊற்றி கழுவி, அவரிடம் எல்லோரும் ஆசி வாங்குவார்கள். அவர்களுக்கு அந்த நபர் திருநீறு பூசிவிடுவார். அப்போது நான் ஐந்து வயது சிறுவன். அந்த சாமி தீண்டப்படாதவர்களுக்கு ஆசி வழங்காது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. சாமிகளுக்கு அருகிலே சாதியும் இருக்கும் என்பது எனக்கு அப்போது தெரியாது. என் ஆசைக்காக என்று சொல்வதை விட என் நச்சரிப்பால் நாமும் ஆரத்தி எடுப்போம் என்று ஒப்புக் கொண்டார். ஒவ்வொரு வீதியாக, வீட்டுக்கு வீடு நின்று அம்மன் உலா வருகிறது. கரகம் சுமக்கும் நபர் மட்டும் முன்னே வருவார். அவருக்கு  முன்பாக இருவர் லைட் சுமந்து கொண்டு வந்தார்கள். சந்தனக் கலர் பட்டுடையில் அம்மனை அலங்காரம் செய்திருந்தனர். அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து அலங்காரம் செய்திருந்தனர். வண்டியை வாலிப பசங்க இழுந்துக் கொண்டு வர, ஊர்ப் பெரியவங்க சிலரும் வண்டியுடன் வந்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் விதவிதமான படையல்கள் சாமிக்கு படைப்பார்கள். சாமிக்கு படைத்ததும், தட்டிலிருந்து கொஞ்சம் எடுத்து வண்டி இழுக்கும் பசங்களுக்கும், அருகில் இருப்பவர்களுக்கும் பூசாரி கொடுப்பார். சமயங்களில் வடை கூட சாமிக்கு படைப்பார்கள். இதற்கு ஆசைப்பட்டே வாலிப பசங்க வண்டி இழுக்க முந்திக் கொண்டு நிற்பார்கள். எங்கள் வீட்டிலுந்து நான்கைந்து வீடுகளுக்கு முன்னாள் சாமி வந்துவிட்டது. ஆனந்தத்தில் நான் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தேன். ஒரு பித்தளை குடம் நிறைய தண்ணீரும், ஒரு சில்வர் தட்டில் இரண்டு வாழைப்பழம், பொறி பொட்டலம் ஒன்று, கற்பூரம், ஊழுவத்தியோடு அம்மாவும் காத்திருக்கிறார். நிச்சயம் இன்று எதோ கலவரம் நடக்கப் போகிறது என்பதை அம்மா அறிந்தே வைத்திருந்தார். அடிமை சாதிக்காரர்கள் சாமிக்கு ஆரத்தி எடுப்பதை, ஆண்டைகள் விரும்பமாட்டார்கள் என்பது அம்மாவுக்கு தெரியும். நான் ஏமாறக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே அம்மா இதற்கு சம்மதித்தார். எங்கள் வீட்டருகில் கரகம் சுமக்கும் மனிதர் வந்தார். அவருக்கு தண்ணீர் ஊற்ற அம்மா சென்றார்கள். என் கையில் தட்டு வைத்திருந்தேன். நான் கனவில் கூட நினைத்துப் பார்க்காத அந்த சம்பவம் கண் இமைப்பதற்குள் நடந்தேறிவிட்டது. ஆம்... தண்ணீர் குடத்தை எட்டி உதைத்தவர், சாமிக்கு படைக்க என் கையில் வைத்திருந்த படையல் தட்டையும் தட்டிவிட்டார். இத்தனையும் அம்மன் கண்முன்னாலே நிகழ்ந்துவிட்டது. "பாவிப் பயலே... பச்சப்புள்ள கண்ணு முன்னாலேயே இப்பிடி பன்றியே.. நீ நல்லா இருப்பியா? நாசமா போவ" என்று அம்மா மண்ணள்ளி சாபம் விட்டு கதறிக் கொண்டிருந்தார். அம்மன் சாட்சியாக ஆண்டைகளுக்கு அம்மா விட்ட சாபம் இன்னமும் அப்படியே இருக்கு. அம்மாவின் அந்த கோபமும், சாபமும்  ஒரு தலைமுறைக்கான கேள்வி என்று செல்வா முடிக்கையில் அனிச்சையாகவே அவர் கண்கள் நீரால் நிரம்பி இருந்தன.

- தமிழன் வேலு