செவ்வாய், 24 ஜூன், 2014

சில நினைவுகள் ... சில பதிவுகள் ...

10 ரூபாய் நோட்டு

இரவு நேரங்களில் கொஞ்சதூரம் தனிமையில் காலார நடப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. கிராமபுறங்களில் எல்லாம் மனிதர்கள் இரவு நேரங்களில் எந்த பதற்றமும், அவசரமும் இன்றி இருப்பதை பார்த்து பழகிய எனக்கு, சென்னை வந்த புதிதில் நள்ளிரவு நேரங்களில் கூட மனிதர்கள் வேக வேகமாக எங்கோ பயணித்து கொண்டிருப்பது புதுமையாக இருந்தது. அதுபோக இரவு எட்டு மணிக்கு மேல் நண்பர்கள் எல்லாம் கூடி காட்டிற்கு சென்று பாத்ரூம் சென்று வருவது வழக்கம். எப்படியும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடப்போம். அதனால் சென்னை வந்த பிறகு கூட இரவில் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். பெரும்பாலும் வேலை முடித்து வீட்டிற்கு நடந்தே சென்று விடுவேன். நேற்றிரவு அலுவலக பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். வில்லிவாக்கத்தில் இருந்து சென்று கொண்டிருந்தேன். பாடியில் இருக்கும் மேம்பாலம் மீது சென்று கொண்டிருக்கும் போது சாலை ஓரத்தில் பத்து ரூபாய் நோட்டு ஒன்று கிடந்தது. சென்னையில் கீழே கிடக்கும் காசு பணங்களை எடுப்பது என்றால் எனக்கு கொஞ்சம் பயம். பத்து ரூபாய் பணத்தை கீழே போட்டு, அதை நாம் எடுக்கும் போது நம் பர்சை பிக்பாக்கெட் அடித்து சென்றுவிடுவார்கள் என்ற திரைப்பட நகைச்சுவை காட்சி அதற்கு காரணம் என்றும் சொல்லலாம். அதுபோல ஒன்றிரண்டு சம்பவங்கள் நேரில் கண்டதும் உண்டு. சென்னை வந்த புதிதில் 2008 யின் துவக்கம் என்று நினைக்கிறேன் அப்போது நான் அம்பத்தூர் இண்டுஸ்ரியல் எஸ்டேட்டில் லேத் கம்பெனி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். டெலிபோன் எக்சேஞ்சில் தங்கியிருந்தேன். அந்த மேம்பாலம் அப்போது தான் கட்ட துவங்கியிருந்த நேரம். ரோடெல்லாம் குண்டும் குழியுமா கிடக்கும். பட்டறைவாக்கதில் இருந்து சைக்கிளில், ரூமிற்கு சென்று கொண்டிருந்த போது, எனக்கு முன்னாள் பல்சர் பைக்கில் ஒருவர் வேகமாக சென்றார். திடீரென அவர் பாக்கெட்டில் இருந்து அவருடைய மொபைல் போன் கீழே விழுந்து விட்டது. அது 3310 போன். அப்போதெல்லாம் நிறைய பேரிடம் அந்த போன் தான் இருக்கும். செங்கல் போன் என்று கூட அதற்கு பெயருண்டு. மாடியில் இருந்து கீழே விழுந்தாலும் உடையாது என்பதால் அப்படி சொல்வார்கள். என்னிடம் அப்போதெல்லாம் போன் கிடையாது. அன்றைய காலகட்டத்தில் ஒரு போன் வாங்க வேண்டும் என்பது தான் என் அதிகபட்ச லட்சியமாக இருந்தது என்றுகூட சொல்லலாம். போன் விழுந்த இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த போனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு சுத்திமுத்தி பார்த்து கொண்டிருக்கிறேன். போன் விழுந்தது தெரியாமல், போன்காரர் வேகமாக வண்டியில் சென்றுவிட்டார். போனை என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பின்னால் ஏரியா டான் ஒருவர், (அதாங்க அங்கயே ரொம்ப வருஷமா இருப்பவர்) வந்து கொண்டிருந்தார். நான் போனை எடுத்ததையும், முழித்துக் கொண்டிருப்பதையும் அவர் கவனித்து விட்டார் போல. 

அருகில் வந்து... அதட்டலாக 
டேய்..என்னடா பண்ற?...
ஒன்னும் இல்லீங்கண்ணா?... சும்மா நிக்கிறேன்...
டேய்.. நான் தான் எல்லாத்தையும் பாத்துண்ணே வர்றேன் ... என்கிட்டே டகால்டி விடுற பாத்தியா?
என்னென்னா சொல்றீங்க???
அந்த போன் எனக்கு தெரிஞ்சவர் தான்... குடு டா...
எந்த போனுன்னா? எனக்கு ஒன்னும் புரியல...
அப்டியா சொல்ற.. சொல்லிட்டே பேண்டுக்குள்ள கைய விட்டு போனை எடுத்துட்டார். இந்த போனுதாண்டா...

குடு .. நா அங்கதான் போறேன் நான் குடுத்துடுறேன். ன்னு சொல்லி போனை வாங்கிட்டு போய்ட்டார். போன்காரர் அம்பத்தூர் OT பக்கம் போனார். இவர் நேரா அத்திப்பட்டு பக்கம் போய்ட்டார். மனசுக்குள்ள திட்டுகிட்டே நானும் ரூம்க்கு போயிட்டேன். ரூம்ல போயி பசங்க கிட்டா சொன்னா, ஏமாளி ன்னு சொல்லி கிண்டல் பண்ணுனானுங்க... அப்புறம் மெரீனா பீச் ல ஒருமுறை 100 ரூபாய் பணம் கிடந்துச்சு. அதை குனிஞ்சி எடுக்கும் போது எதிர்ல வந்தவன், என் பணம் ன்னு புடுங்கிகிட்டு போய்ட்டான். நிச்சயமா தெரியும் அது அவனோட பணமில்லன்னு... பணம் கிடக்குற இடத்துக்கு கொஞ்ச தூரத்துல நான் வரும் போது அவன் ஜாலியா வேடிக்கை பாத்துக்கிட்டு வந்ததை நானும் பாத்தேன். சென்னைக்கு புதுசு என்பதால் பயத்துல போனா போகுத்துன்னு விட்டுட்டேன். புடுங்கிட்டு போனது மட்டுமில்லாம அடுத்தவன் பர்சை நாம திருடுன மாதிரி கேவலமான லுக் வேற...

பழைய சம்பவங்கள் நினைவுக்கு வர, பயமும் வந்துடுச்சி. சுத்திமுத்தி பார்த்தேன். யாருமில்ல, எல்லாரும் வண்டியில வேக வேகமா போய்கிட்டு தான் இருக்காங்க. அப்ப, பணத்துக்கு சொந்தகாரங்க இங்க யாருமில்லன்னு நெனைச்சிகிட்டேன். சரி என்ன ஆனாலும் பரவா இல்லன்னு நெனைச்சிகிட்டு பத்து ரூபா நோட்டை எடுத்து பேண்டுக்குள்ள வச்சிகிட்டு,போயிட்டேன்... அந்த பத்து ரூபாயை பாக்கும் போதெல்லாம் சிரிப்பு சிரிப்பா வருது... கண்டிப்பா அந்த பத்து ரூபாயை செலவு பண்ணாம வச்சிருக்கணும் ன்னு முடிவு பண்ணிட்டேன்...

*****

தள்ளுவண்டி உணவகம்

அம்பத்தூர் எஸ்டேட் போன்ற தொழில் நகரங்களில் மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் பேச்சுலர் பசங்களின் 5 ஸ்டார் ஹோட்டல்கள் பெரும்பாலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளாகவே இருக்கும். மார்க்கெட்டுகளில் மூட்டை தூக்குபவர்கள், ஆட்டோ ஓட்டுனர், கால் டாக்சி ஓட்டுனர்கள், ஏழை மக்கள், சமயங்களில் வசதியானவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களும் உண்ணும் உணவகம் அதுதான். 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஏழைக்கு இடமில்லை. ஆனால் தள்ளுவண்டி கடைகளில் ஏழையும் அங்கு சாப்பிடலாம், எவ்வளவு பெரிய வசதியானவன் கூட அங்கு சாப்பிடலாம் என்பது தான் அதன் தனி சிறப்பு. சாப்பிடும் இடத்தில் சுத்தம் கொஞ்சம் முன்னபின்ன இருக்குமே ஒழிய, கடை நடத்துபவர்களின் மனதில் எந்த அசுத்தமும் இருக்காது என்பது என் திடமான நம்பிக்கை. அண்ணா நகர் பகுதியில் கார்த்திக் டிபன் சென்டர் காரர்களே தள்ளுவண்டி கடை போட ஆரம்பித்து விட்டார்கள் என்பதிலிருந்து தள்ளுவண்டி கடையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். தள்ளுவண்டி கடைகளில் சாப்பிடுவதில், பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பிடுவதை விட அதிக சவுகரியம் உண்டு. அண்ணே ஒரு கல்தோசை கொடுங்க, அக்கா சாம்பார் ஊத்துங்க, அம்மா ரெண்டு இட்லி கொடுங்க, தம்பி தண்ணி கொடுப்பா, இப்படியாக உறவுமுறை சொல்லி அங்கு மட்டும் தான் சாப்பிட முடியும். உறவுமுறை சொல்லி சாப்பிடும் போது வீட்டில் சாப்பிடுவதை போல ஒரு உணர்வு ஏற்படும். பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்களில் கிடைக்காத ஆகப்பெரிய வசதி இது. ஒருவாரம் தொடர்ந்து ஒரு கடையில் சாப்பிட்டால், அவர்கள் வீட்டில் ஒருவரைப் போல நம்மை ஏற்றுக்கொள்வார்கள். அதன் பிறகு ஒரு நாள் சாப்பிட போகவில்லை என்றால் கூட ஏன்பா நேத்து வரல? நேத்து சாப்பிட்டியா இல்லையா? என்று கண்டிப்பாக விசாரிப்பார்கள். காசு இல்லை என்று யாரையும் பட்டினி போடமாட்டார்கள். காசில்லம்மா என்று சொன்னால், முதலில் சாப்பிடு என்று ஒரு தட்டில் நாலு இட்லியை போட்டு நீட்டுவார்கள். உடம்பு சரியில்ல கொஞ்சம் நைட்டுக்கு கஞ்சி வச்சி தர்றீங்களா? ன்னு தினமும் சாப்பிடும் கடையில் மத்தியானமே சொல்லிட்டா போதும், ராத்திரிக்கு கஞ்சி தூக்கு வாளியில் ரெடியா இருக்கும். இப்படியாக மனிதர்களை நேசிக்க தெரிந்தவர்கள் அவர்கள். கார்த்திக் டிபன் சென்டர் போன்றவர்கள் தங்கள் கிளையை சாலையோர தள்ளுவண்டி கடைகள் பக்கமும் விரித்ததாலும் மற்றும் அம்மா உணவகங்கள் வந்த பிறகு அவர்கள் வியாபாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான்.

வெயில் நாள் துவங்கிய பிறகு காலை டிபனுக்கு பதில் தினமும் காலையில் ஒரு சொம்பு கூழ் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டேன். அதில் சில வசதி இருக்கு. காசும் கம்மி, ஒரு சொம்பு குடித்தால் மத்தியானம் ஒரு மணிவரைக்கும் பசிக்காது. புதினா சட்னி, எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் பத்தை, வருத்த மிளகாய் இப்டி நாலுவகை ஷைடிஷ் வேற தருவாங்க. நான் தினமும் கூழ் கடுக்கிற கடை, ஒரு அம்மா அதை நடத்துறாங்க. 35 வருஷமா சென்னையில இருக்காங்களாம். 'இப்பதான் சொந்தமா ஒரு இடம் கால் கிரவுண்ட் வாங்கி போட்டுருக்கேன். எப்ப வீடு கட்டி குடி போக போறேன்னு தெரியலன்னு சொல்வாங்க'. ரெண்டு மூணு நாலு பழக்கத்திலே கூட நம்மிடம் மனம் விட்டு, அவர்கள் சொந்த விஷயங்களை கூட பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் மனிதர்களை நம்புகிறார்கள். வழக்கம் போல சனிக்கிழமை கூழ் குடிக்க போயிருந்தேன். ஒரு இளைஞர் ஒருவரும் கூழ் குடிக்க வந்தார். அவரும் வழக்கமாக அங்கு தான் கூழ் குடிப்பவர் என்று நினைக்கிறேன். "அம்மா காசில்ல,கூழ் குடுங்க, திங்ககிழமை காசு தர்றேன்". என்று கேட்டார். இப்டிதான்பா எத்தனையோ பேர் ஏமாத்திட்டு போய்டாங்க, நீயாச்சும் கரெக்டா காசு கொடுத்திடு ன்னு சொல்லிட்டு, அவங்க அந்த இளைஞருக்கு கூழ் கொடுத்தார்கள். அவர்கள் ஏமாற்றத்தை பொருட்படுத்தவில்லை, அந்த இளைஞனின் பசியை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டார்கள். "ஒரு சொம்பு 15 ரூவா தான், இவன் தரலன்னா கூட பரவாயில்ல, ஆனா மனுஷங்க பசி தாங்கமாட்டாங்க" ன்னு அந்த இளைஞர் சென்ற பிறகு என்னிடம் சொன்னார்கள். அதை ஆமோதித்தவனாக நானும் கூழ் குடித்துவிட்டு சென்றுவிட்டேன். ஞாயிறு அலுவலகம் விடுமுறை, இன்று வழக்கம்போல் திங்கள்கிழமை அலுவலகம் செல்லும் வழியில் கூழ் குடிக்க சென்றேன். என்னம்மா... அந்த பையன் காசு கொடுத்தாரா?ன்னு விசாரிச்சேன். ஆமா பா... கரெட்டா வந்து கொடுத்துட்டான் பா... "நான் அவன் பசியை ஆத்துனேன், அவன் என் மனசை ஆத்திட்டான்" என்றார்கள்.. பாவம், புள்ள எங்கயோ விழுந்து கால்ல வேற அடிபட்டு வந்திருந்தான். ஹாஸ்பத்திரிக்கு போக சொன்னேன், போறானா? என்னன்னு தெரியல என்று விசனப்பட்டார்...

இந்த நம்பிக்கையையும், மனிதநேயத்தையும் எந்த 5ஸ்டார் ஹோட்டல்களிலும் நிச்சயமாக பார்க்க முடியாது...

******

உழைக்கும் பெண்கள்

'இப்பல்லாம் பெண்களும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க' ன்னு கேட்கும்போது எப்பவெல்லாம் பெண்கள் வேலை செய்யாம இருந்தார்கள்? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. கடந்தவார நீயா?நானா? நிகழ்ச்சியில் கூட அப்படி ஒரு விவாதம் வந்தது. அதற்கு ஒரு பத்திரிக்கையாளர் மிக அழகாக பதில் சொன்னார். உழைக்கும் வர்க்கத்தில் பிறந்த பெண்கள் எப்போதும் வேலை செய்துகொண்டே தான் இருந்தார்கள். மன்னர்களின் மனைவிகள் தான் வேலைக்கு செல்லாமல் இருந்தார்கள் என்றார். மிக சரியான பதிலும் கூட அது. சுதந்திர இந்தியாவில் ஆண்டை சாதியினரே தங்களை மன்னர்களாக கருதி கோலோச்சி கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டுப் பெண்களும், மனைவிகளும், பண்ணையார்களின் மனைவிகளும், அவர்கள் வீட்டுப் பெண்களும் வேலைக்கு செல்லாமல் இருந்திருப்பார்கள். ஆனால் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகளோடு, நாற்று நடுவது, களை பறிப்பது, நெல் அறுக்க செல்வது, நெல் அடிக்க செல்வது உள்ளிட்ட காட்டு வேலைகளையும் செய்தே வந்திருக்கிறார்கள். மறுமணம் என்பது அருவருப்பாக கருதப்பட்ட காலத்தில் கணவனை இழந்த அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை கரை சேர்த்த வரலாறுகளை பார்த்தால் கண்ணீர் வரும். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் 'இப்பல்லாம் பெண்களும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க' என்று சொல்லி கேட்டதில்லை. அவர்களுக்கு தெரியும் பெண்களின் உழைப்பு எப்படிபட்டது என்று. பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் ஆணுக்கு நிகராக பெண்ணின் உழைப்பும் பொதிந்திருக்கும். நகரமயமாதலும், தனியார்மயமாதலும் முழுவீச்சில் நடந்தேறி வரும் சூழலில் அலுவலக பணிகள் மட்டுமே உழைப்பாக கருதப்படுகிறதோ? என்ற அச்சம் எழுகிறது. இன்றைய சமூகம் உழைக்கும் மக்களை, அவர்களின் உழைப்பை விரட்டியடிக்கிறது. அதனடிப்படையில் தான் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களை மாத்திரம் இவர்கள் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த பெண்களின் உழைப்பு என்னவானது? எங்கள் வீட்டின் ஒவ்வொரு மண்ணிலும் என் அம்மாவின், அக்காக்களின் உழைப்பு பொதிந்திருக்கிறது என்பதை நானறிவேன். '5 பெண்களை பெற்றால் அரசன் கூட ஆண்டியாவான்' என்று சொல்லாடல் உண்டு. 5 பெண்களை பெற்ற என் அப்பாவை ஆண்டியாக்காமல், என் அக்காக்களின் உழைப்பு காப்பாற்றியது எங்க அப்பாவும் அறிவார். என்னைவிட என் அக்காக்கள் மீதுதான் அவருக்கு கூடுதல் பிரியம் என்று கூட சொல்லலாம்.. ஆண்களுக்கு இணையாக சவக்குழி வெட்ட எங்க அம்மா சென்றது எனக்கு நல்ல நினைவில் இருக்கிறது.

சாலையோரங்களில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பாட்டியை அல்லது கீரை விற்றுக் கொண்டிருக்கும் பாட்டியை கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள் பத்து வயதில் தன் தோளில் களைக்காடு மாட்டிய கதைகளை சொல்வார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்னர் வரை கிராமபுரங்களில் "திருமணத்திற்கு பின்பு மனைவியை வேலைக்கு அனுப்ப மாட்டேன், வீட்டோடு இருந்து குடும்பத்தை பார்த்துக் கொண்டால் போதும்" என்று சொல்லும் ஆண்கள் தங்கமான மாப்பிள்ளைகளாக கருதப்பட்டார்கள். அதேபோல திருமணத்திற்கு பிறகு வேலைக்கு அனுப்பாத கணவன் தான் வேண்டும் என்று விரும்பிய கிராமத்து பெண்களின் எண்ணிக்கையும் ஏராளம். காரணம் அப்போதெல்லாம் பெண்கள் அதிகம் படிக்காத காலமது. பத்துவயது முதல் நாற்று நடவும், களைப் பறிக்கவும் சென்றவர்கள். திருமணத்திற்கு பிறகாவது தங்களின் கஷ்டத்திற்கு ஓய்வு கிடைக்குமா? என்ற ஏக்கம் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். அன்றைக்கு பெண்களின் வீட்டு வேலை என்பது காட்டு வேலையையும் உள்ளடக்கியதாக இருந்தது. பெண் பார்க்க செல்லும் போது பெண்ணுக்கு என்னென்ன வேலை தெரியும்? என்று விசாரிப்பது வழக்கமாக இருந்தது. பயிர் நட தெரிந்தால் அந்த பெண் சூப்பர் என்று சொல்வார்கள்.

எங்க ஊர்ப்பக்க பெண்களின் உழைப்பையே சான்றாக சொல்லலாம். காலையில் சோறு சமைத்தால் அவர்கள் கொஞ்சம் வசதியானவர்கள் என்பதாக கருதப்பட்ட காலம் அது. காலையில் சோறு சமைக்கும் வசதி உள்ளவர்கள், சோறு ஆக்கிவைத்து விட்டு காலை வேலைக்கு சென்றால் இரண்டு மணிக்கு வருவார்கள். மீண்டும் மத்தியானம் அந்தி வேலைக்கு செல்வார்கள். இரவு கட்டாயமாக சமைப்பார்கள் என்பதால் எல்லோர் வீட்டு வாசலிலும் சோறு ஆக்குவார்கள். பெரும்பாலும் அடுப்பு வீட்டு வாசலில் தரையோடு சேர்ந்து புதைத்திருப்பார்கள். அப்போது படித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட சனி ஞாயிறு விடுமுறை நாட்களிலும், தேர்வு விடுமுறை நாட்களிலும் வேலைக்கு செல்வார்கள். வானம் பார்த்த பூமி என்பதால் எங்க ஊர்ப் பக்கம் கரும்பு, கம்பு, சோளம், வேர்க்கடலை போன்ற மானாவரி பயிர்களின் விளைச்சல் அதிகம். அதிகளவில் கரும்பு தான் பயிரிடுவார்கள். கரும்பு பயிரிட ஏர் ஓட்டுவதும், கரும்பு நடுவதற்கு வசதியாக துண்டு துண்டாக வெட்டி வைப்பதும் ஆண்களின் வேலை. ஒவ்வொரு கணுவாக வெட்டுவார்கள். காரணம் ஒவ்வொரு கணுவிலும் கரும்பு சோலை முளைத்து வந்து, கரும்பு விளையும். கரும்பு நடுவதற்கு பெண்கள் தான் செல்வார்கள். . அதற்கு உரம் வைக்க ஆண்கள் செல்வார்கள். கரும்புகளில் காய்ந்த சோலைகளை கழிக்க பெண்கள் செல்வார்கள். கரும்பு வெட்ட ஆண்கள் செல்வார்கள், ஆண்களால் வெட்டிப் போடப்பட்ட கரும்புகளை நான்கைந்தாக வைத்து கட்டுவதற்கு பெண்கள் செல்வார்கள். கட்டப்பட்ட கரும்பு கட்டுகளை ஐந்தாறாக சேர்ந்தது தூக்கி கொண்டு ஓரிடத்தில் அடுக்குவது பெண்கள். சில பெண்கள் பத்து கட்டுகளை கூட தூக்குவார்கள். அடுக்கி வைக்கப்பட்ட கரும்பு கட்டுகளை டிராக்டரில் ஏற்றி சர்க்கரை ஆலைக்கு அனுப்புவது ஆண்கள். இப்படி கரும்பு பயிரிடப்பட்ட நாள்முதல், விளைந்த பிறகு அறுவடை செய்து, சர்க்கரை ஆலைக்கு அனுப்புவது வரை ஆண்களோடு பெண்களின் உழைப்பும் சரிபாதியாக இருக்கும். அதே போல விதை நெல் விதைப்பது முதல், அறுவடை செய்து அரிசியாக்குவது வரை ஆண்களோடு பெண்களும் சேர்ந்து உழைப்பார்கள். ஆண்களும், பெண்களுமாக சேர்ந்து நெல்லடிக்கும் காட்சி அவர்களின் உழைப்பை பறைசாற்றும் விதமாக இருக்கும். காலையில் கரும்பு வெட்ட சென்ற ஆண்கள் மாலையில் ஓய்வெடுப்பார்கள். ஆனால் காலையில் கரும்பு கட்ட சென்ற பெண்கள் மாலையில் களைப்பறிக்கவும் செல்வார்கள். அதை அந்திக்களை என்று சொல்வார்கள். மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வருவார்கள். மீண்டும் மூன்றரை மணிக்கு களைப் பறிக்க செல்வார்கள். வேர்க்கடலை பயிரிடுவதில் பெண்களின் உழைப்பு அதிகமானது. காலையில் கடலை பறிக்க சென்றால் மாலையில் தான் வருவார்கள். கடலை செடியை பிடுங்கி போட்டிருப்பார்கள். அதை இன்னொரு நாளில் சென்று செடியில் இருந்து கடலையை தனியாக ஆய வேண்டும். எங்க அம்மாவோடு நானும் பலமுறை சென்றிருக்கிறேன். அதற்கு கூலியாக பணம் கிடைக்காது, மாகாணி கணக்கில் கடலை தருவார்கள். எந்த வேலையுமே இல்லை என்றால் அடுப்பெரிக்க விறகு வெட்ட செல்வார்கள், வீடு மொழுக மண் அல்ல செல்வார்கள். ஆற்று மணலும், களிமண்ணும் சேர்ந்த கலவை போல் இருக்கும் அந்த மண். அதைக் கொண்டு மெழுகினால் சிமெண்ட் தரையைப் போன்று தரை மொழு மொழுவென்று இருக்கும். இப்படி நாள் முழுக்க வேலை செய்த அவர்கள் தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை உழைப்பிற்கே செலுத்தியவர்கள்...

ஆண்களும், பெண்களுமாக வெளியூர்களுக்கு கரும்பு வெட்ட செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் உளுந்து பொறுக்கவும், மாம்பழம் பொறுக்கவும் வெளியூர்களுக்கு பெண்கள் செல்வார்கள். அவர்களின் துணைக்கு மட்டும் ஒன்றிரண்டு ஆண்கள் செல்வார்கள். உளுந்து பொறுக்கவும், மாம்பழம் பொறுக்கவும் பெண்கள் செல்லும் காட்சி, ஆண்கள் சபரிமலைக்கு செல்ல இருமுடி கட்டும் காட்சியைப் போன்று இருக் கும். முன்பணம் வாங்கி கொண்டு செல்வதால் அதிக உழைப்பை சுரண்டுவதாக இப்போதெல்லாம் யாரும் வெளியூர் வேலைக்கு செல்வதில்லை. ஆண் செய்யும் வேலையை துணிந்து செய்யும் பெண்களும் உண்டு. ஏர் ஓட்டும் பெண்களும் உண்டு. கரும்பு வெட்டும் பெண்களும், உரம் போடும் பெண்களும் இருந்தார்கள். ஒன்றிரண்டு குடும்பத்தில் ஆண்கள் சென்னை போன்ற நகரத்தில் அல்லது கடன் வாங்கி வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து சம்பாரிச்சாலும், சொந்த ஊரில் பெண்கள் கூலி வேலைக்கு செல்வதை நிறுத்திக் கொண்டதே கிடையாது. அதுபோன்ற பெண்கள் சில நேரங்களில் " புருஷன் வெளிநாட்டில் வேலை செய்றான், இவ இங்க வேலை செய்றா அவளுக்கென்ன குறைச்சல்? என்ற எகத்தாளம் செய்யப்படுவதுண்டு. கட்டிடம் கட்டும் வேலைக்கு சித்தாள் வேலைக்கு செல்வார்கள். கலவை கலப்பது ஆண்களின் வேலை. ஆனால் சில பெண்கள் கலவை கலப்பார்கள். அவர்களை இவ பொம்பளையா? ஆம்பளையா? என்று வியப்போடு பார்ப்பார்கள். 

இப்படியாக உழைக்கும் வர்க்கத்தை பொருத்தமட்டில் பல நூற்றாண்டுகளாகவே பெண்களின் உழைப்பு என்பது பிரதானமாக இருந்து வந்துள்ளது. வேதங்களும், வரலாறுகளும் ஆண்களால் எழுதப்படுவதால், அதுவும் ஆண்டைகளால் எழுதப்படுவதால் உழைக்கும் வர்க்கத்தின் வரலாறு மட்டுமல்ல, உழைக்கும் பெண்களின் வரலாறுகளும் மறக்கடிக்க பட்டிருக்கின்றன என்பதே உண்மை ...

********

1 ரூபாய் இட்லியும்  - மலிவுவிலை உப்பும் 

ஒரு ரூபாய்க்கு இட்லியும், மலிவு விலையில் உப்பும் கொடுப்பதன் மூலம் இந்த அரசு என்ன சொல்ல வருகிறது? தாழ்த்தப்பட்ட உழைக்கும் ஏழைமக்களை, வசதி படைத்த உயர்சாதி பண்ணையார் ஒருவர் எப்படி நடுத்துவார் என்பதை புரிந்து கொண்டவர்களுக்கு, ஒரு ரூபாய் இட்லியின் நோக்கமும், மலிவு விலையில் உப்பு கொடுப்பதன் நோக்கமும் வெகு சுலபமாக புரியும் என்று நினைக்கிறேன். 

ஒரு சின்ன பிளாஷ்பேக்...

காலையில் பண்ணையார் வீட்டுக்கு சென்றதும் அங்குள்ள மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளி விட்டு, பிறகு அவங்க வீட்டுக்கு முன்னாடி குவிஞ்சி கிடக்கிற குப்பையெல்லாம் அள்ளி வெளியே கொட்டி முடிப்பதற்குள் மணி ஏழரை ஆகியிருக்கும். வீட்டு வேலையெல்லாம் செஞ்சி முடிச்சதும், பண்ணையார் பொண்டாட்டி முதநாள் நைட்டு மீந்துபோன சோத்துக்கஞ்சியை, ஒரு பழைய பாத்திரத்தில் கொண்டுவந்து கொடுப்பாங்க. பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கஞ்சி கொடுப்பதற்கென்றே தனி பாத்திரம் இருக்கும். அந்த கஞ்சியை வாங்கி குடிச்சதும், அவ்வளவு நேரம் உழைத்து கலைத்தவர் பரம திருப்தி அடைந்துவிடுவார். என்ன இருந்தாலும் பண்ணையார் வீட்டு கஞ்சி போல வருமா? என்ற புகழாரம் வேற... பிறகு கொல்லைக்கு போனா அங்கு களைப்பரிக்க பொம்பளைங்க வந்திருப்பாங்க. ஆம்பளைங்களுக்கு வாய்க்கால் வெட்டுவது, முள்ளு வெட்டுவது, தோப்புகளை சுத்தம் செய்வது, ஏர் ஓட்டுவது இப்படி ஏகப்பட்ட வேலை இருக்கும். அவர் ஏர் ஓட்ட போனவராக இருந்தாலும், 'முருகா அந்த தோப்புல நாலு கருவேலி மரம் இருக்கு.. அதை கொஞ்சம் வெட்டிப் போட்டுடு' ன்னு பண்ணையார் சொன்னா அதையும் செய்வார். மத்தியானத்துக்கு கஞ்சியும், ஊர்காயும் வரும். வருத்த மிளகாய் கூட வரும். சில நாட்களில் குழம்பு சோறு போடவும் செய்வார்கள். மறுபடியும் சாயந்திரம் வரை வேலை செய்யணும். வேலையை முடிச்சிட்டு சாயந்திரம் வீட்டுக்கு போக முடியாது. பண்ணையார் வீட்டுக்கு போயி மேய போயிருந்த மாடுகளை தொழுவத்தில் கட்டனும். நைட்டுக்கு பண்ணையார் வீட்டுல சாப்பிட்டு மீந்த சோத்தையும், ஒரு பாத்திரத்தில் கொடுப்பார்கள். அல்லது ஒரு இலையில் வைத்து துண்டில் கட்டிக் கொள்வார்கள். இப்படி எல்லா வேலையும் செஞ்சி முடிச்சாலும் கூலி என்பது மிக சொற்பமாக இருக்கும். வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு போனதும் கூலியைப் பத்தி கவலைப்படாமல், தன உழைப்பை பண்ணையார் உருஞ்சுகிறார் என்ற எந்த கோபமும் இல்லாமல் பண்ணையார் பொண்டாட்டி கொடுத்த கஞ்சியையும், மத்தியான சொத்துக்கு கொடுத்த ஊறுகாயைப் பற்றி பெருமை பேசுவார்கள். சில நாட்களில் எனக்கு காய் அதிகமா வெச்சாங்க, உனக்கு தான் கொழம்பு அதிகமா ஊத்துனாங்க என்று விவாதம் நடக்கும். சில நாட்களில் பண்ணையார் மிக கடுமையாக திட்டி இருப்பார். அதையும் பொருட்படுத்தாமல் 'சோறு போட்ட மனுஷன் நாலு வார்த்தை திட்டுனா என்ன தப்பு?' என்று தனக்குத் தானே சமாதனம் செய்து கொள்வார்கள்...

இப்படிப்பட்ட மனநிலையை உருவாக்கத் தான் இந்த அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. சோறு போட்டவர்களுக்கு விசுவாசமாக இருப்பதில் தமிழர்கள் கெட்டிக்காரர்கள். ஒரு ரூபாய் இட்லி சாப்பிடுபவர், இந்த அரசு செய்யும் அத்துனை மக்கள் விரோத செயல்களையும் மறந்துவிடுகிறார் என்பதே எதார்த்த உண்மையாக இருக்கிறது. உப்பு வாங்க கூட துப்பில்லாத மக்கள் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த அரசு. ஓட்டுப் போட்ட மக்களை இதைவிட வேறு யாரும் கேவலப்படுத்திவிட முடியாது... மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தாமல், அவர்களின் வாங்கும் சக்தியை கேலிப்படுத்துகிறது. ஒரு ரூபாய் இட்லிக்கும், உப்புக்கும், பேனுக்கும், மிகஷிக்கும் இன்னபிற மலிவுவிலை பொருட்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கொண்டு தொழில் நிறுவனங்களை துவங்கலாம், அதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கலாம். வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த முடியும். மின் தேவையை பூர்த்தி செய்து தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதே ஒரு அரசு செய்யும் மிகப்பெரிய நல்ல காரியாமாக இருக்குமே ஒழிய, ஒரு ரூபாய்க்கு இட்லியும், மலிவு விலையில் உப்பும் கொடுப்பதல்ல என்பதை இந்த ஆட்சியாளர்கள் என்றைக்கு புரிந்து கொள்ளப் போகிறார்களோ???

- தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக