முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்றைய சூழலில் தூக்குத்தண்டனைக்கு ஆதரவான, எதிரான கருத்துக்கள் வலுவாக இந்தியாவில் ஒலித்து வருகிறது. தூக்குதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும், தூக்குதண்டனை இந்தியாவில் எதற்காக வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது! உண்மையிலேயே தூக்குதண்டனை குற்றங்களை குறைப்பதற்காகவா? இல்லை உலக அளவில் இந்தியாவிற்கு என்று இருக்கும் போலியான கவுரவத்தை காப்பதற்காகவா? என்பதே எம் மனதில் திரும்ப, திரும்ப எழும் கேள்வி!
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16,2012) அன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்ப்பட்டுள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியிலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையோ? என்ற அச்சம் நமக்கெல்லாம் எழுந்திருக்கிறது. இப்பிரச்சனை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் முக்கியப் பிரச்சனையாக எடுத்து விவாதிக்கப்பட்டது. மனித உரிமைகள் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்; பெரும்பாலானோர் குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். குறிப்பாக பி.ஜே.பி.யின் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் பேசுகையில் 'தலைநகரில் நடக்கும் பாலியல் பலாத்காரங்களை தடுக்காமல் அரசு என்ன செய்கிறது? இது போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்' என்று பேசி இருக்கிறார். மேலும் சமாஜ்வாடி உறுப்பினர் ஜெயா பச்சன், 'பாலியல் பலாத்கார குற்றத்தை கொலை குற்றத்துக்கு சமமாகக் கருத வேண்டும். இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களை தூக்கில் போட வேண்டும். அதற்கான சட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். இந்த சம்பவத்தால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன்' என்று கூறி உள்ளார். மற்ற பல உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசி உள்ளனர். டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், குற்றவாளிகள் 6 பேரையும் தூக்கில் போட பரிந்துரைத்துள்ளார்.
இந்த கொடூர செயலுக்கு இத்தனைப் பேரும் கண்டனங்களை தெரிவிப்பது என்னவோ நியாயம் தான்; கண்டிக்கக் கூடியது தான்! ஆனால்....... இந்தியாவில் யாருக்கெல்லாம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? யாரெல்லாம் அதில் இருந்து தப்பிக்க வைக்கப்பட்டார்கள்? என்றால் நமக்கு தலையே சுத்தும்; இந்தியாவில் கடந்த 18 ஆண்டுகளில் இதுவரை மூன்று பேர் தான் தூக்கிலிடப்பட்டுள்ளனர். 1995ல் ஏப்ரல் 27, ஆட்டோ ஷங்கர், 2004ல் தனன்ஜய் சாட்டர்ஜி, 2012ல் கசாப். ஆட்டோ சங்கர் 6 பேரை கொலை செய்த குற்றத்திலும், தனன்ஜய் சாட்டர்ஜி, 14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கிலும், அஜ்மல் கசாப் 167 பேரை சுட்டுக் கொன்ற வழக்கிலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார்கள்; அதன் பிறகு டெல்லியில் நடந்த தற்போதைய கற்பழிப்பு சம்பவத்திற்கு நாடு முழுவதில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன; பலர் குற்றவாளிகளை தூக்கில் போட சொல்கிறார்கள்; குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவன் மன்றத்தில் என்னை தூக்கில் போடுங்கள் என்று கூறி உள்ளான், ஆகவே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தியாவையே வெட்கி தலைகுனியச் செய்த கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அதிலிருந்து தப்பிக்க வைக்கப்பட்டவர்களும் ஏராளம். விவசாயப் பெருமக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் ஆகியோர்களை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்து விட்டு இன்று ஏகபோக சுக வாழ்க்கையை வாழ்பவர்களும் ஏராளம். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு மராட்டிய மாநில முதல்வர் சவானின் சொந்த கிராமமான கராட்டில் தலித் பெண் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கி அடித்து விரட்டினார்கள். சில நாட்களுக்கு முன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் எம்.பி. ஒருவர் வீட்டிலே 16 வயது சிறுமியை கற்பழித்து, கொன்றுள்ளனர். 1968 ஆம் ஆண்டு கீழ் வெண்மணியில் 44 விவசாயிகளை துடிக்கத் துடிக்க உயிரோடு ஒரு குடிசையில் வைத்து தீவைத்து கொளுத்தினார்கள்.
தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான கிராமமான வாச்சாத்தி கிராமத்தில் 1992 சூன் 20ம் தேதி 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாகப் புகுந்து சோதனை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர். (Wikipedia) ஆனால் வாச்சாத்திக் கொடுமைக்கு தீர்ப்போ 19 ஆண்டுகள் கழித்துதான் வெளி வந்தது. 269 பேர்களுமே குற்றவாளிகள் , இந்த 269 பேர்களில் 54 பேர்கள் இந்தப் பத்தொன்பது ஆண்டு இடைவெளியில் இறந்து போயுள்ளனர். இறந்து போய்த் தப்பித்துக் கொண்டவர்களில் ஒரு ஐ.எஃப்.எஸ் அதிகாரியும் அடக்கம். மீதமுள்ள 215 பேர்களையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை வழங்கி உள்ளது நீதி மன்றம். தண்டனை பெற்றவர்களை விட தப்பித்தவர்களே அதிகம். கடந்த ஆண்டு 2011, நவம்பர் 22ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள மண்டபம் கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமி, கார்த்திகா, ராதிகா, மாதேஸ்வரி ஆகிய நான்கு பெண்களை காவல்துறையினர் விசாரணைக்கு என்று கூறி, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.
இந்தியாவில் 2009 ஆம் ஆண்டைய புள்ளி விவரப்படி 2007யில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3010, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2106, உத்தரப்பிரதேசத்தில் 1648, பீகாரில் 1555, டெல்லியில் 598, அஸ்ஸாம் தவிர வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 1555, நாகாலாந்தில் 13, மணிப்பூரில் 20, சிக்கிமில் 24, அருணாச்சலப்பிரதேசத்தில் 48, மேகாலயாவில் 82, தென் மாநிலங்களைப் பொருத்தமட்டில் ஆந்திர மாநிலத்தில் அதிகபட்சமாக 1070, தமிழகத்தில் 523 வழக்குகளும், கேரளாவில் 512 வழக்குகளும், கர்நாடகத்தில் 436 கற்பழிப்புகளும் நடந்துள்ளன. இவை வழக்கு பதிவு செய்யப்பட்டவை மட்டும்தான். வழக்குப் பதிவு செய்யப்படாதவை எத்தனையோ? அதிலும் தண்டனை வழங்கப்பட்டது எத்தனைப் பேருக்குத் தெரியுமா? 2007யில் மொத்தம் 20 ஆயிரத்து 737 வழக்குகள் பதிவானதில் 25 ஆயிரத்து 363 பேர் கைது செய்யப்பட்டு, வெறும் 5 ஆயிரத்து 22 பேருக்கு மட்டும் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டைப் பொருத்தவரை மொத்தம் 19 ஆயிரத்து 348 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 23 ஆயிரத்து 792 பேர் கைது செய்யப்பட்டு,வெறும் 5 ஆயிரத்து 310 பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. (தகவல் : நக்கீரன் : ஜூலை, 29, 2009).
அடுத்தபடியாக கொலைக் குற்றங்கள் என்று எடுத்துக் கொண்டால் அயோத்தி சென்றுவிட்டு திரும்பிய கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். குஜராத்தில் வாழும் இசுலாமியர்களை குறிவைத்து அவர்களைத் திட்டமிட்டு பழி வாங்குவதற்காகவே இந்த ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து, குஜராத் முழுவதும் ஏற்பட்ட கலவரத்தில் 1,200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 600 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், 400 குழந்தைகள் காணவில்லை, 500க்கும் மேற்ப்பட்ட சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய நரேந்திர மோடி இன்று வரை தண்டிக்கப்படவில்லை, மாறாக மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் அஜ்மல் கசாப்புக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இது போன்ற கடந்த கால சம்பவங்களைப் பார்க்கும் போது இந்தியாவின் தற்பெருமையைக் காத்துக்கொள்ளவே கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரிதும் அறியப்படாத ஒரு குக்கிராமத்திலோ, அல்லது உலகின் பார்வைக்குப் புலப்படாத இடத்தில் எவ்வளவு பெரிய மனித உரிமைகள் மீறல் நடந்தாலும் அல்லது மனிதன் வாயில் மனிதனே மலத்தைத் திணித்து கொடுமை நடந்ததாலும், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானாலும் எந்த மனித நேயவாதியும் வாய் திறப்பதில்லை என்பது தான் வேதனையின் உச்சம். இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்கூட இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் யாராலும் அறியப்படாத மலைவாழ் கிராமத்தில் ஏதோ ஒரு காம மிருகத்தால் யாரோ ஒரு இளம்பெண் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கலாம்; நரிக்குறவர் சமூகப் பெண்களை சர்வசாதாரணமாக பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். இதுவரை ஒரு வழக்காவது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக நான் அறிந்ததில்லை. அவர்களை காவல் நிலையத்துக்குள்ளே அனுமதிப்பதில்லையே பிறகு எப்படி புகார் கொடுப்பார்கள், வழக்கு பதிவார்கள்? நரிக்குறவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களுக்காக உங்கள் மனித நேயம் பொங்கி புரையோடாதா? டெல்லியில் நடந்தால் அது கொலை, அது மனித உரிமை மீறல், அதுவே இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் குக்கிராமத்தில் நடந்தால் நியாயமா? தமிழக சேரிகளில் காவல் துரையின் அட்டகாசங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை; அத்துமீறி உள்ளே நுழைந்து சேரிப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பெரும்பாலான சம்பவங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை; தலித் இயக்கங்கள் போராடி, வழக்குப் பதிவு செய்யத் தூண்டினால் சாதாரண வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களிலே பிணையில் வெளி வந்துவிடுகிறார்கள்.
டெல்லியில் மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவன் மன்றத்தில் என்னை தூக்கில் போடுங்கள் என்று கூறி உள்ளான்; பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள் இச்சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து குற்றவாளிகளை தூக்கில் இட வலியுறுத்தும் நிலையில், பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்களின் கருத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
"டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். ஆனால் அதுமட்டுமே நாட்டின் ஒரே பிரச்சனையைப்போல் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் விதர்பா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மட்டும் 2,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை சராசரியாகப் பார்த்தால் ஒரு நாளைக்கு 47 விவசாயிகள் ஆகும். இந்தக்கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. விவசாயிகள் தற்கொலையில் இது உலக சாதனை ஆகும். இதற்காக யாராவது வெடித்துக் கிளம்பிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? கண்ணீர் விட்டிருக்கிறார்களா? இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் 48 சதவீதம். இது ஆப்பிரிக்கவின் மிகவும் பின்தங்கிய நாடுகளான எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவை விட மிக அதிகம். அங்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் 33 சதவீதம் தான். நம் நாட்டில் இதற்காகக் குரல் கொடுப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே. மாபெரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஏழை மக்களுக்குப் போதிய மருத்துவ வசதியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு யாரும் குரல் எழுப்புவதில்லை.
இந்தியாவில் கல்வி, கசாப்புக்கடையைப் போல் உள்ளது. அரசின் பெரும்பாலான பணம் ஐஐடி-களுக்கும், ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மட்டுமே செலவிடப்படுகின்றது. அறிவுக்கு அடித்தளமிடும் தொடக்கப்பள்ளிகளுக்கு குறிப்பாக கிராமப்புறப் பள்ளிகளுக்கு இந்தப் பணம் செலவிடப்படுவதே இல்லை. விலைவாசியின் ராக்கெட் வேக உயர்வு. இன்னும் மிகப்பெரிய சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. இவைகளைப் பற்றிப் பேச, கேள்வியெழுப்ப, போராட, கண்ணீர் விட மக்களோ, ஊடகங்களோ ஏன் பாராளுமன்றமோ கூட தயாராக இல்லை நடந்த கற்பழிப்பு சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால் இந்த டெல்லி சம்பவம் தான் நாட்டின் ஒரே பிரச்சனை என்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்காதீர்கள். மேலும் இந்தக் குற்றத்திற்கு இந்திய தண்டனைச் சட்டம் 376 இன் படி அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படுகின்றது. ஆனால் இந்தக் குற்றத்திற்கு சட்டத்தில் இல்லாத மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூச்சலிடுவது எதற்காக என்று புரியவில்லை" என கட்ஜூ கருத்துத் தெரிவுத்துள்ளார்.
மரண தண்டனையே கூடாது என்பது தான் நம் நோக்கம், முழக்கம் எல்லாமே. ஆனால் மரண தண்டனை என்ற பேரில் மனிதநேயம் சாகடிக்கப்பட்டு, காவி வெறி கொண்ட இந்தியாவின் போலி கவுரவம் தான் நிலை நாட்டப்படுகிறது என்பதே கசப்பான, பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. டெல்லியில் நடந்த கொடூர செயலுக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு நின்றுவிடாமல், மேலும் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க குற்றங்கள் செய்யத்தூண்டும் காரணிகள் எவை என்பதை அறிந்து அரசு அதை களைய முன்வரவேண்டும். மேலும் இந்த சம்பவத்திற்காக அரசுக்கும் நீதித்துறைக்கும் காந்தியடிகள் பொன்மொழி ஒன்றை நினைவுப் படுத்துகிறேன், கண்ணுக்குக் கண் என்றால் கடைசியில் நமக்கு எஞ்சுவது குருடர்களின் உலகமாகத்தான் இருக்கும்.
- அங்கனூர் தமிழன் வேலு