புதன், 9 ஜனவரி, 2013

சிறிய கட்சிகளுடன், பெரிய கட்சிகள் தேர்தல் கூட்டணி கணக்கு !




பெரிய கட்சிகளால் தான் சிறிய கட்சிகள் இருக்கின்றன; என்று பல அரசியல் விஞ்ஜானிகள் கூறுகிறார்கள்; அந்த கூற்று முற்றிலும் பொய்யானது. சிறிய கட்சிகளின்  வாக்குகள் தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்; இவர்களின் தேர்தல் கூட்டணி என்பதற்கு வரைமுறை எதுவும் இருக்கிறதா? இல்லை கொள்கை இருக்கிறதா? என்றால் ஒரு வெங்காயமும் இல்லை! ஒரு பிரபல எழுத்தாளர் குழந்தைகளுக்கு கூறும் கதைகளை நாவலாக தொகுத்து எழுதி இருக்கிறார். அவர் பெயர் நினைவில்லை, அனேமாக காட்வின் என்றுதான் நினைக்கிறேன். அந்த தொகுப்பில் இருந்த ஒரு சிறுகதை நமது தேர்தல் அரசியல் கூட்டணிக்கு மிகச்சரியாக பொருந்துகிறது. அந்த கதை...

ஒரு சுறாமீன், சிறிய மீனிடம் கேட்டதாம் எனக்கு பசிக்கிறது; உனக்கு பசிக்கிறதா? என்று. அதற்க்கு சிறிய மீன் ஆமாம் என்றதாம். மீண்டும் சுறாமீன் சரி அப்படியானால் உன்னால் முடிந்தால் என்னை கொன்று சாப்பிட்டுக் கொள்; என்னால் முடிந்தால் உன்னை கொன்று சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றதாம் ! 

அப்படித்தான் இங்கே தேர்தல் கூட்டணி கணக்குகளும், பெரிய கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் ஏற்படும் அதிகாரப் பசியில், ஒருவித குறைந்தபட்ச உடன்படிக்கை மூலம் ஒருசேர கரம் சேர்க்கிறார்கள்; இறுதியில் சுறாமீன் சின்னமீனை கொன்று சாப்பிடுவதைப் போல, பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளை பசிக்கு  சாப்பிட்டுவிட்டு பின்பு அந்த சிறிய கட்சியை ரெண்டாக, மூன்றாக உடைத்து ஏப்பம் விட்டு விடுகின்றன; அதற்க்கு தமிழகத்தில் உதாரணங்கள் பல....

- அங்கனூர் தமிழன் வேலு

        

செவ்வாய், 8 ஜனவரி, 2013

திருமாவுக்கு ஓட்டு வாங்கும் அரசியல் தெரியவில்லை !

தமிழன் வேலு  : திருமாவளவனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பத்திரிக்கை கடைக்காரரின் பதில் : 50 ஆண்டுகளாக பத்திரிக்கை கடை நடத்துகிறேன்; அந்த வகையில் பல்வேறு அரசியல் தலைவர்களின் பேட்டிகள், அவர்களைப் பற்றிய செய்திகளை படித்திருக்கிறேன். நேற்றைக்கு கட்சி ஆரம்பித்தவன் எல்லாம் தன்னை மிகப்பெரிய தலைவன் என்றும், என் பின்னால் பல கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று நாக்கூசாமல் பொய் சொல்லும் இந்த அரசியல் களத்தில், இன்னமும் என்னை ஒரு கட்சியின் தலைவனாக அரசியல்வாதிகளே  கூட ஏற்றுக் கொள்ளவில்லையே, என்று மனம் திறந்து கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது; மேலும் என்னிடம் பத்திரிக்கை வாங்கும் பலரிடம்  அரசியல் குறித்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது,  திருமா அரசியலில் முதிர்ச்சியை, பக்குவத்தை வெளிக்காட்டுவதாக நான்கு, ஐந்து பேர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்; திருமா நினைத்து இருந்தால் தருமபுரி கலவரத்தை வைத்து அரசியல் செய்திருக்கலாம்; ஆனால் அவர் செய்யவில்லை, ராமதாஸ் பேசிவரும் பேச்சுக்கு திருமாவும் பதிலுக்குப் பதில் சவடால் விட்டு இருந்தால் நிச்சயம் பல கலவரங்கள் நிகழ்ந்து இருக்கும்; ராமதாஸ், திருமாவை ரவுடி என்று சொன்னப் பிறகும், நான் இன்னமும் சமூக நல்லிணக்கத்திற்கு அவரோடு கைகோர்க்க தயார் என்று சொல்லும் பக்குவம் அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டிய சிறந்த பண்பு. ஆனால் ஒன்று, திருமா நல்ல பேச்சாளர், நல்ல சிந்தனையாளர், இயல்பிலே போராடும் குணம் படைத்தவர்; ஓட்டு வாங்கும் அரசியல் மட்டும் அவருக்கு தெரியவில்லை...

(வழக்கமாக பத்திரிக்கை வாங்கும் கடைகாரரிடம் நேற்று இரவு பேசியதில் இருந்து.... நான் எந்த கட்சி என்று அவருக்கு தெரியாது )

தொண்டர்களுக்கு தலைவர்கள் சேர்க்கும் பெருமை இதுவல்லவா.... பெருமை கொள்கிறேன் !          

தமிழன் டா... டேய் தமிழன் டா...


2009 க்குப் பிறகு தமிழன் என்றும், ஈழம்  ன்றும் கூச்சல் போடும்
சிலரை காணும் போது கடுமையான கோபம் பீறிட்டுக் கொண்டு
வருவதை எம்மால் தவிர்க்க முடியவில்லை;

ஒருமுறை பாவலர் இன்குலாப் அவர்கள்...

"மனுசங்கடா....நாங்க  மனுசங்கடா
உன்னைப் போல, அவனைப் போல
எட்டுசாணு ஒசரமுள்ள
மனுசங்கடா - டேய் மனுசங்கடா

சதையும் எலும்பும் நீங்க வச்ச
தீயில்  வேகுதே உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதில் எண்ணெய் ஊத்துதே
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க
எரியும்போது எவன் மசுரைப் 
புடுங்க போனீங்க? "

என்று கோபமாக பாடினார் .... அதுபோல

தமிழன் டா... நாங்க தமிழன் டா
உன்னைப் போல, அவனைப் போல
வேட்டிகட்டி நல்ல தமிழைப் பேசும்
தமிழன் டா... டேய் தமிழன் டா...

நீங்க ஈழம் என்ற போதும், தமிழன்
என்றபோதும் உங்க பின்னாடி வந்த
தமிழன் டா... ஈழத்தமிழருக்கு
இன்னல் என்ற போது  தீ யில் எங்க உசுர
மாய்த்துக் கொண்ட  தமிழன் டா...

எங்க குடிசையெல்லாம் தமிழன்
வச்ச தீயில் வேகுதே; ஆண்ட சர்க்காரும்
ஆளும் சர்க்காரும் அதில் எண்ணெய் ஊத்துதே

நாங்க
எரியும் போதும்,
எங்க குடிசை எரியும் போதும்
எவன் மசுரைப் 
புடுங்க போனீங்க?

என்று கேட்கத்தான் எத்தனிக்கிறேன்

- அங்கனூர் தமிழன்வேலு

திங்கள், 7 ஜனவரி, 2013

ஆதிக்கவாதிகளால் எரிவது போதாதா?



தமிழ் நதி : நன்றி என்னை உங்கள் நன்பனாக ஏற்றுக் கொண்டதற்கு. தலித்துக்கள் என்பதை எரித்து விடுங்கள். தமிழ்ச்சிறுத்தையாக முழக்கமிடுங்கள்!

பதில் : ஏற்கனவே இங்கே ஆதிக்கவாதிகளால் எரிவது போதாதா? நானும் எரிக்கவேண்டுமா? நாட்டில் எத்தனைப் பிரச்சனை இருந்தாலும் எனக்கு முதல்ப் பிரச்சனை சாதி; கடைசி மனிதர்களின் கண்ணீரைக் கூட ஓட்டாக மாற்றத்துடிக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் நானும் தமிழ், தமிழ் என்று கூப்பாடுப் போட  எனக்கு உடன்பாடில்லை; தலித் விடுதலையே தமிழ்தேசிய விடுதலை( http://thamizhanvelu.blogspot.in/2012/07/blog-post_4258.html ) என்பதை நான் முழுமையாக நம்புகிறேன் ; அதுதான் உண்மையும் கூட தலித் விடுதலையின் மூலமே சாதியை ஒழிக்க முடியும்; சாதி ஒழிப்பின் மூலமே தமிழ் தேசியத்தை கட்டி எழுப்ப முடியும் !

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

முடி அரசும் ! குடி அரசும் !!



அன்றைக்கு மன்னர்களும் , குறுநில
மன்னர்களும் மக்களை ஆண்டனர்;
இன்றைக்கு பிரதமர்களும், முதல்வர்களும் 
மக்களை ஆள்கின்றனர் !

அன்றைக்கும்  ஒரு நாட்டை கைப்பற்ற 
படைவீரர்களை பயன்படுத்தினர்;
இன்றைக்கும்  ஒரு தொகுதியை 
கைப்பற்ற அடியாட்களை 
பயன்படுத்துகின்றனர் !

அன்றைக்கு படைவீரர்களை தெம்பூட்ட 
"கள்" கொடுத்தார்கள்; இன்றைக்கு 
வாக்காளர்களை கவர "சாராயம்" 
கொடுக்கிறார்கள்

அன்றைக்கு அரசசபையில் நாட்டியக்காரர்கள்
இருந்தார்கள்; இன்றைக்கு நாட்டியக்காரராக
இருப்பதுதான் நாட்டை ஆள்வதற்கான 
முதல் தகுதியே !      

அன்றைக்கும் மந்திரிகளை அரசர்களே 
தேர்வு செய்தனர்; இன்றைக்கும் மந்திரிகளை 
முதல்வர்களே தேர்வு செய்கின்றனர் !

அன்றைக்கு மந்திரிகளுக்கு மதியூகம் 
தகுதியாக கருதப்பட்டது; இன்றைக்கு 
மந்திரிகளுக்கு துதியூகம் தகுதியாக 
கருதப்படுகிறது !  

அன்றைக்கு மந்திரிகள் வரும்பொருள் 
உரைப்பவர்களாக  இருந்தார்கள்; இன்றைக்கு 
மந்திரிகள் வரும்பொருள் பறிப்பவர்களாக 
உள்ளனர் !

அன்றைக்கு மந்திரிகள் வேதங்களுக்கு 
உரை எழுதினர்;  இன்றைக்கு மந்திரிகள்
கட் அவுட்டுக்கு உரை எழுதுகின்றனர்!

அன்றைக்கு அரச சபையில் புலவர்கள் 
இருந்தார்கள்; இன்றைக்கு சட்டசபை 
உறுப்பினர் ஒவ்வொருவரும் புலவர்களாக 
இருக்கின்றனர் !

அன்றைக்கு அரசர்களைப் புகழ்ந்துப் 
பாடினால் பரிசு கிடைக்கும், இன்றைக்கு 
முதல்வர்களைப் புகழ்ந்துப் பாடினால் 
பதவி கிடைக்கும் !

அன்றைக்கும் அரசர்களை பெயர்சொல்லி 
அழைக்காமல்  ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, 
ராஜ மார்த்தாண்ட, ராஜ விக்கிரம சக்கரவர்த்தி 
என்று அழைத்தனர்; இன்றைக்கும் 
முதல்வர்களை  பெயர்சொல்லி அழைக்காமல் 
இதயதெய்வம், முத்தமிழ் அறிஞர், 
புரட்சி தலைவர், புரட்சி தலைவி 
என்றே அழைக்கின்றனர் !

அன்றைக்கும்  அரசசபையை எதிர்த்துப் 
பேசினால் கத்திப் பாயும்; இன்றைக்கும்  
சட்டசபையை எதிர்த்துப் பேசினால் 
குண்டாஸ் பாயும் ! 

அன்றைக்கும்  மன்னர்கள் ஓய்வெடுக்க 
அந்தபுரம் இருந்தது; இன்றைக்கும் 
முதல்வர்கள் ஓய்வெடுக்க கொடநாடுகள் 
இருக்கின்றன!

அன்றைக்கும் மன்னர்களின் புதல்வர்கள்
இளவரசர்களாக இருந்தார்கள்; இன்றைக்கும் 
முதல்வர்களின் புதல்வர்கள் துணை 
முதல்வர்களாக இருக்கிறார்கள் !

முடி அரசுக்கும், குடி அரசுக்கும் 
எனக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை;
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.....

(அடிப்படை : பாவலர் இன்குலாப் அவர்களின் 
"ஜனநாயகம் தூசு தட்டிய  போது... " 
கட்டுரைத் தொகுப்பு)

- அங்கனூர் தமிழன் வேலு 

சனி, 5 ஜனவரி, 2013

ஒரு உயிரை காக்க, உரிமைப் போராட்டம்

ஒரு உயிரை காக்க, உரிமைப் போராட்டம் என்ற வீரியமான முழக்கத்தோடு இன்று சென்னையில் (05.01.2013) இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாநிலை  அறப்போராட்டம் நடந்தது; இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தோழர் தடா.ஜெ.ரஹீம் அவர்கள் தலைமையில் கோவை சிறையில் 15 ஆண்டுகளாக வாடிவரும் அபுதாஹீரை விடுதலை செய்யக்கோரி நடந்த அறப்போராட்டத்தை  ஒரு உயிரைக் காக்கும் போராட்டமாக மட்டும் நான் கருதவில்லை, ஒரு உண்மையை உரத்து சொல்லும் கூட்டமாகத்தான் கருதினேன். அதாவது இசுலாமியர்களை தீவிரவாதிகள் என்று இந்துத்துவ சக்திகள் திட்டமிட்டு அவதூறு பரப்பிவரும் நிலையில் எங்களுக்கு அறவழியிலும் போராட தெரியும் என்பதை தெளிவாக இந்துத்துவ சக்திகளின் செவுட்டில் அறைந்து கூறியிருக்கிறார்கள். உண்ணாவிரதம் இருப்பது என்ன பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம், இசுலாமியர்கள் உண்ணாவிரதம் இருப்பது என்பது மிகப்பெரிய விஷயம் தான். இசுலாமிய மார்க்கப்படி ஏக இறைவன் அல்லாஹ் வை தவிர வேறு யாருக்காகவும் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்பது இசுலாமிய மார்க்க சட்டம். அந்த சட்டத்தையும் மீறி, தனது சமுதாய எதிர்ப்புகளையும் மீறி நாங்கள் அறவழியில் போராடுபவர்கள் ஆயுதம் ஏந்துபவர்கள் அல்ல என்பதை உணர்த்தி இருக்கிறார்கள். தம் சமூக மக்களின் மீது விழுந்துள்ள களங்கத்தை துடைக்க முனைந்திருக்கிறார்கள். மனிதநேயத்திற்காக மார்க்கத்தையும் மீறி வந்திருக்கிறார்கள். இதில் இன்னொரு உண்மையும் தெளிவாக புலப்பட்டது; அதாவது இசுலாமியர்கள் மார்க்க ரீதியாக ஒன்றுபடுவார்கள் ஆனால் அரசியல் ரீதியாக ஒன்றுபடமாட்டார்கள், அந்த உணர்வில் இருந்து இசுலாமியர்களை வெளிக்கொண்டு வரும் முயற்ச்சியில் தோழர் தடா.ஜெ.ரஹீம் அவர்கள் முன்வந்திருப்பது வரவேற்ககதக்கது; இது ஒரு தொடக்கம், இன்னமும் இதுபோன்ற நீண்ட நெடிய பயணங்களை தடா.ஜெ.ரஹீம் அவர்களும், இந்திய தேசிய லீக் கட்சியும் முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்...

- அங்கனூர் தமிழன் வேலு   

வெள்ளி, 4 ஜனவரி, 2013

காந்தியை விமர்சிக்கலாமா?


கேள்வி - பதில் !

குமார், சென்னை : காந்தியடிகள் இறந்துவிட்டப் பின்பும் அவரை விமர்சிப்பது நேரத்தை வீணடிக்கும்  செயல்தானே? ஏன் அவரை விமர்சிக்க வேண்டும்?

பதில் : இது நல்ல கேள்வி! பெரும்பாலான தலித் இயக்கங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை வெறும் அடையாகங்களாக மட்டுமே பயன்படுத்துகிறார்களே ஒழிய, ஆயுதமாக பயன்படுத்தவில்லை; ஆனால் இந்துத்துவ சக்திகள் காந்தி போன்றவர்களை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்! காந்தி இறந்துவிட்டாலும் அவரது சொற்கள், அவரது எண்ணங்கள் இன்னமும் உயிர்ப்போடு  இருக்கின்றன; உதாரணமாக அவர் ஆடை விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்; காந்தி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபோது விவசாயி ஒருவர் அணிந்திருந்த ஆடையைப் பார்த்து இந்த மக்கள் நல்ல ஆடை அணியும் வரை நானும் நல்ல ஆடை அணியமாட்டேன் என்று சொன்னாராம்; ஆனால் இரண்டு நாளுக்கு முன்னர் ஒரு தினசரி நாளிதழதில் படித்தேன், கேரளா, திருச்சூர் மாவட்டம், திப்பிலசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ்,என்ற மரம் வெட்டும் தொழிலாளி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தம் பெயரை இணைக்க ஆடை அணியாமல் சென்றுள்ளார், அவர் ஆடை அணியாமல் வந்ததால்  அதிகாரிகள் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்; பிறகு அவர் நான் வழக்கு தொடுப்பேன் என்று கூறியப் பிறகு அதிகாரிகள் அவரதுப் பெயரை இணைத்துள்ளனர்; அதன் பிறகு செய்தியாளர்களிடம் அந்த விவசாயி கூறியது தான் காந்தி எதிர்பார்த்தது, அதாவது அவர்  நான் பல ஆண்டுகளாக, காந்தியின் கொள்கைகளை பின்பற்றி, எளிமையாக வாழ்ந்து வருகிறேன். அவரைப் போலவே, பல ஆண்டுகளாக, மேல் சட்டை அணியாமல் உள்ளேன். வேஷ்டியும், மார்பை மறைக்க, காவி துண்டையும் பயன்படுத்தி வருகிறேன். என்று கூறியிருக்கிறார்.இதைதான் காந்தி எதிர்பார்த்தார்?

ஏழைமக்கள் ஆடையின்றி இருப்பது காந்திக்கு வேதனையை உண்டாக்கி இருந்திருந்தால், ஒரு சமூகத்தின் மீது அக்கறை உள்ள தலைவராக அவர் என்ன செய்திருக்க வேண்டும்? ஏழைககளை  ஆடை அணிய வலியுறுத்தி இருக்கவேண்டும்; எல்லோருக்கும் ஆடை கிடைக்க வழிவகை செய்திருக்க வேண்டும்;  மக்கள் அனைவரும் சமமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ தடையாக இருக்கும் சாதியை எதிர்த்து களமாடி இருந்திருக்கவேண்டும்; மாறாக அவர் மக்களை சாதி ரீதியாக பிரிக்கும் வர்ணாசிரமத்தை ஆதரித்தார் ! ஒரு தலைவன் நாட்டு மக்களுக்கு முன்னேக்கி வழிகாட்ட வேண்டுமே ஒழிய பின்னோக்கி வழிகாட்டக் கூடாது. காந்தியின் அரை நிர்வாணக் கோலம்  மக்களை பின்னோக்கி இழுக்கும்  செயல்.  மேலும் காந்தியம் இங்கே உயிர்ப்போடு இருப்பதால் காந்தியின் பெயரை சொல்லி இங்கே மக்களை ஏமாற்றும் கூட்டமும் நிறைய இருக்கிறது ஆகவே  காந்தி என்ற மாயையை உடைத்தெறியவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது; அதற்காக காந்தியை விமர்சிப்பதில் தவறில்லை.

- அங்கனூர் தமிழன் வேலு