திங்கள், 25 மார்ச், 2013

என்சாதி ..!


சாலையோர பூங்காவில் சிறிது நேரம் 
படித்துவிட்டு திரும்பி கொண்டிருந்தேன்
எதிரில் என் நண்பர் வந்தார்   

அவருக்கும் எனக்கும் ஆன நட்பு ஒரு 
வருடத்தை கடந்திருந்தது; தினமும் 
அவரோடு சிலவற்றை உரையாடுவதில் 
அலாதிப் பிரியம்; அதுபோலவே நேற்று இரவு
உரையாடிக் கொண்டிருந்தோம் - இத்தனை நாள்
கேட்காத ஒரு கேள்வியை கேட்டு விட்டார் !     

தம்பி, நீங்க என்ன சாதி என்று... 
அப்போது தான் பார்த்தேன் கையில் தவழ்ந்து 
கொண்டிருந்தது அண்ணலின் நூல் !
கோபம் வரவில்லை; சிரித்து கொண்டே
சொன்னேன் !

செல்வந்த பிராமிணர்களால் அப்பாவி
ஏழை பிராமிணர்கள் அடக்கப்படும் போது
நான் ஒரு பிராமிணராக இருக்க விரும்புகிறேன் !

ஆதிக்க வெறிப்பிடித்த பிராமணியத்தால்
இடைநிலை சாதியினர் நசுக்கப்படும் போது
நான் ஒரு தேவனாகவும், வன்னியனாகவும்
கவுண்டனாகவும் இருக்க விரும்புகிறேன் !

சாதி வெறிப்பிடித்த இடைநிலை சாதியினரால்
தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்படும்
போது பறையனாகவும், பள்ளனாகவும் இருக்க 
விரும்புகிறேன் !

சாதி மனோபாவம் கொண்ட மேட்டுக்குடி
பள்ளர்களும், பறையர்களும் அருந்ததியரை
அடக்கும் போது நான் ஒரு சக்கிலியாக இருக்க 
விரும்புகிறேன் !

அனைத்து சாதியினராலும் வெறுத்தொதுக்கும்
நரிக்குறவர்களை காணும் போது நான் ஒரு 
நரிக்குறவனாக இருக்க விரும்புகிறேன் !

நான் விரும்பும் சாதியில், 
என்னை சேர்த்து கொள்ள, எந்த சாதிக்கும்
விருப்பம் இல்லாத போது எனக்கு மட்டும்
எப்படி அந்த சாதி மீது விருப்பம் வரும்??
நான் சாதியற்றவன் ..!

அடக்கபடுபவர்களின் சாதியே 
என்சாதி ..! என்று கூறி பதிலுக்கு
காத்திராமல் நகர்ந்து கொண்டேன் ..!

- அங்கனூர் தமிழன் வேலு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக