புதன், 20 மார்ச், 2013

தனி தமிழ்நாடே தமிழீழத்திற்கு தீர்வு ..!


தமிழ் ஈழத்திற்காக 30 ஆண்டுகாலம் தந்தை செல்வா தலைமையில் அறவழிப் போராட்டம், அதன் பிறகு தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் 30 ஆண்டுகாலம் ஆயுதப்போராட்டம் நடைபெற்று ஓய்ந்து இருக்கிறது. ஆய்த போராட்டம் ஓய்ந்து இருக்கிறதே ஒழிய எம்மக்களின் போராட்டத்திற்கான கொள்கையோ, எம்மக்களின் விடுதலை தாகமோ இன்னமும் ஓயவில்லை. விடுதலை என்ற சுவர்க்கத்தை அடையாமல் அந்த தாகம் ஓயப்போவதும் இல்லை. ஆரம்பத்தில் தமிழ் ஈழ சிக்கல் சிங்களபேரினவாத அரசுக்கும்  - தமிழர்களுக்கும் இடையேயான பிரச்சனையில் இருந்து, பின்பு சிங்கள பேரினவாத அரசு + இந்தியாவுக்குமான, தமிழர்களுக்குமான பிரச்சனையாக உருமாறி, இன்று உலக அரங்கில் வெகுமக்களின் விடுதலை போராட்டமாக பரிணாமம் பெற்று நிற்கிறது.

30 ஆண்டுகாலமாக தொடர்ந்து நடைபெற்ற ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்ததாக சிங்கள பேரினவாத அரசு அறிவித்தது. அந்த நாள் அவ்வளவு சுலபமாகவோ, சுகமாகவோ கடந்து செல்லவில்லை. உலகில் எவை எல்லாம் தடை செய்யப்பட்டனவோ அவை எல்லாம் அங்கெ பயன்படுத்தப்பட்டன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர். உலகில் தடைசெய்யப்பட்ட கொத்துக் கொண்டுகளும், ஷெல் தாக்குதலும் தொடர்ந்து எம்மக்கள் மீது வீசப்பட்டன. ஷெல் தாக்குதலால் மூச்சு திணறி இறந்தவர்களே அதிகம் என சொல்லப்படுகிறது. போருக்குப் பின்னும்  அங்கு அப்பாவி மக்கள் மீதான அரசபயங்கரவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திட்டமிட்ட இனக்கலப்பு, கலாசார சீரழிவு, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், அப்பாவி இளைஞர்களை விடுதலைப் புலிகள் என்று கடத்தி சென்று படுகொலை செய்தல், போன்ற அத்துனை மனித உரிமை மீறல்களும், ஒரு இனத்தை எப்படி வஞ்சிக்க கூடாதோ அப்படி வஞ்சித்து வருகிறது சிங்களப் பேரினவாத அரசு. உலக ஐ.நா அவையின் அறிக்கைப்படி போரில் 80,000 பேர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. அனால் உண்மையில் ஒன்னரை லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக நம்பத்தகுந்தோர் சொல்கிறார்கள். மே 18, முள்ளிவாய்க்கால் பேரவலம், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மனித அவலத்தின் சாட்சியமாக நிற்கிறது.. ஒரு இனம் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது.. உலகில் மனிதநேயம் செத்துபோய்விட்டது என்பதை உரத்த சொல்லி நிற்கிறது. அங்கு நடந்தது போர்க் குற்றமோ, மனிதஉரிமை மீறலோ அல்ல; அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இனம் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் அழித்தொழிக்கும் அடையாள அழிப்பு இனப்படுகொலை.சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரன் பிடித்து வைக்கப்பட்டு மூன்று அடி தூரத்தில் நின்று சுட்ட புகைப்படம் சேனல் -4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டது. அது உலகம் முழுவதிலும் உள்ள மனித நெஞ்சங்களை கொதித்தெழ செய்திருக்கிறது. இந்த நிலையில் போர் உச்சத்தில் இருந்தபோது, அப்பாவி பொதுமக்கள் சர்வசாதாரணமாக சாகடிக்கப்பட்டபோது வாய்மூடி மவுனியாக இருந்த உலகம், இன்று அது ஒரு இன்னப்படுகொலை என்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், மனித உரிமை மீறல் என்ற அடிப்படையிலாவது இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க இருக்கும் வேளையில் இடையிலே இந்தியா குறுக்கே நிற்கிறது. பல்வேறு உலகநாடுகள் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை உற்றுநோக்குவதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், இந்தியா வாய்மூடி மவுனியாக இருக்கிறது. இலங்கைக்கு போரின் போது கனரக ஆயதங்கள் உட்பட அத்துனை உதவிகளையும் செய்த இந்தியா ஈழத்தமிழர்களுக்கு உதவும் என்பதை தமிழர்களாகிய நம்மால் எப்படி நம்பமுடியும்? இரண்டே வழி ஒன்று இந்தியாவுக்கு மனமாற்றம் செய்து அதன் மூலம் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது;  இல்லையேல் இந்தியாவில் இருந்து வெளியேறி ஈழத்திற்கு நேரடி உதவி செய்வது என்ன செய்யப்போகிறோம்?

ஏன் இந்தியாவை நம்ப முடியாது?

இந்தியாவை ஏன் நம்பமுடியாது என்று நீங்கள் கேட்டால், எப்படி நம்பமுடியும் என்றுதான் நான் கேட்பேன். ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் அங்கமான தமிழக தமிழர்களும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதை கடந்த கால வரலாற்றின் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இதற்கு காரணம் என்னவென்று தெளிவு பெறுவது சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய மாநிலங்களிலே பி.ஜே.பி யால் வேர் கூட விட முடியாத மாநிலம் என்றால் அது தமிழகம் தான். அது போலவே காங்கிரசும் இங்கே வேரடி மண்ணோடு பிடிங்கி எறியப்பட்டுவிட்டது. திராவிட கட்சிகள் தான் காங்கிரசை மாற்றி மாற்றி தூக்கு சுமக்கிறார்கள். ஏன் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது? இந்தியாவின் கட்டுமானம் என்பது இந்து, இந்துத்துவம், ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. இந்தியாவிலே இந்துத்துவத்தை வேரறுப்போம் என்றதும், இந்தியை எதிர்த்ததும், இந்திய சுதந்திரத்தை எதிர்த்ததும் தமிழகமே. ஆகவே இந்துத்துவ அடிப்படையில் தான் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. அது காங்கிரசு ஆனாலும் சரி, பி.ஜே.பி. ஆனாலும் சரி. 

இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை 1974 மற்றும் 1976ம் ஆண்டில் இந்திய அரசு தனக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் இலங்கை அரசிடம் அனுமதி பெறவேண்டியதில்லை என்பது விதியாகும். இந்த விதியை மீறி இலங்கை அரசு தமிழக மீனவர்களை சுட்டு கொன்று வருகிறது. 1960ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தமிழகத்தின் அனுமதி இன்றியே தாரைவார்க்கப்பட்டதன் (sorce : Wikipedia) மூலம் அன்றிலிருந்து இன்றுவரை  தினம் தினம் தமிழக மீனவர்கள், சிங்கள கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். பல்லாயிரத்துக்கும் மேலானோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். காயப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு பின், காங்கிரஸ், பி.ஜே.பி இரண்டு கட்சிகளும் ஆட்சி புரிந்துள்ளன. அனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் நின்றபாடில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் இந்தியா இந்துத்துவ மனப்பான்மையோடு தான் செயல்படுகிறது என்பதற்கு ஆதாரமாக கேரளாவில் கொல்லம் ஆலப்புழா அருகே கடந்த மாதம் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக, கேரள மீனவர்கள் 2 பேரை இத்தாலி கப்பல் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அதற்கு இந்திய தம்முடைய கடும் கண்டனத்தை பதிவு செய்தத்தோடு, சம்பந்தப்பட்ட இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களையும் ஒப்படைக்கும்படி வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை கடற்படையினால் 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் இதுவரை இந்தியா வாய் திறக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கு ஆதரவாகவும், காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் செயல்படுகிற மத்திய அரசு தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளையாகவே பாவித்து வருகிறது. 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை, தம்மால் எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தி இறுதியாக இப்போது தான் அரசிதழிலே வெளியிட்டு இருக்கிறது. இது இந்தியாவின் தமிழர் விரோத போக்கேயன்றி வேறேதும் கிடையாது.

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா முதன்முதலில் தலையிட்டது 1983 ஆம் ஆண்டுதான். ஆனால் அதற்கு முன்பிருந்தே அதாவது தந்தை செல்வா காலத்திலே தமிழ் ஈழ கோரிக்கை வலுபெற்று இருந்ததை இந்திய அரசு கவனிக்காமல் இல்லை. அன்றைக்கெல்லாம் இலங்கை இந்தியாவின் விருப்பபடியே செயல்பட்டு கொண்டிருந்தமையால் அதை ஒரு பொருட்டாக இந்தியா மதிக்க வில்லை என்பது குறிப்பிட தக்கது. அதன் பிறகு 1977 க்கு பிறகு ஜெ.ஆர். ஜெயவர்த்தனே ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்தார். ஜப்பான், அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகளுடன் நட்புறவை ஜெ.ஆர். ஜெயவர்த்தனே ஏற்ப்படுத்திக் கொண்டார். இந்தியாவுக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டிய இலங்கை மேற்குலக நாடுகளுடன் உறவை ஏற்ப்படுத்திக் கொண்டதில் ஆத்திரமடைந்த இந்திராகாந்தி இலங்கையை மிரட்ட, ஈழ போராட்ட இயக்கங்களை பயபடுத்திக் கொண்டது என்பதும், இலங்கையை மிரட்ட போராட்டக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சியும், ஆயுதங்களும் வாரி, வாரி வழங்கியது என்பதுதான் உண்மை. அதன் பிறகு இந்தியாகாந்தி இறப்புக்கு பின் ராஜிவ்காந்தி இந்திய பிரதமாராக பதவி ஏற்றபின்னும் இலங்கையை மிரட்டுவது தொடர்ந்தது. இதை அறிந்து கொண்ட இலங்கை இந்தியாவோடு இணக்கமாக போக முடிவெடுத்தமையால் திடீரென்று போராட்டக்குழுக்களை ஆயுதங்களை மவுனிக்க சொன்னது. அதில் எல்லாக் குழுக்களும் ஆயுதங்களை மவுனித்தார்கள் விடுதலைப் புலிகளை தவிர. தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மட்டும் " நாங்கள் உங்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல; விடுதலைப் புலிகள். எங்களின் விடுதலைக்காகவே நாங்கள் ஆயுதம் சுமக்கிறோம். என்பதை பிரகடனப் படுத்தினார். இதில் ஆத்திரமடைந்த இந்தியா மீண்டும் விடுதலைப் புலிகளை மிரட்ட அமைதிப்படை என்ற பேரில் ஒரு அரக்கப்படையை வன்னிக்கு அனுப்பியது. இப்படி இந்தியா தன் நலன் சார்ந்தே ஈழ விவகாரத்தில் தலையிட்டது என்பதும், ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற உள்ளன்போடு அது தலையிடவில்லை என்பதும் வரலாற்று உண்மை. இலங்கை இந்தியாவிற்கு நட்பு நாடாக தன்னை காட்டிக் கொண்ட பின்பு இந்தியாவின் நிலைப்பாடு தமிழ் ஈழமோ, ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரமோ அல்ல. விடுதலைப் புலிகள் அழிப்பு ஒன்றே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. காரணம் விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் ஈழக் கோரிக்கையில் கிஞ்சிற்றும் பின்வாங்காமல் நின்றார்கள். இன்றைக்கு உலக அரங்கில் ஈழத்தமிழர்களுக்கு நேரடி எதிரியாக இருக்கும் இந்தியா, ஈழத்தமிழர்களுக்கு நாங்கள் தான் பிரிதிநிதி என்ற போலி பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிராக புறப்படும் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், அதோடு மட்டுமில்லாமல் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான், அதற்கு சுயாதினமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்றும் தமிழர்கள் குறிப்பாக மாணவர்கள் போராடிவரும் நிலையில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளை மிரட்டும் வண்ணம் இலங்கையை பாராட்டி அறிக்கை ஒன்றை இந்தியா சமர்பித்து உள்ளது.  இந்தியாவை நம்பமுடியாது என்று தீர்க்கமாக நாம் வாதிடுகிறபோது, காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தால் தான் ஈழத்தமிழர்களுக்கு நன்மை என்று சிலர் பிரச்சாரம் செய்கிற போது, காங்கிரசுக்கு மாற்றாக கருதும் பி.ஜே.பி.யின் நிலைப்பாட்டையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. பி.ஜே.பி. யின் பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத் " ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கையை பி.ஜே.பி. ஏற்றுக் கொள்ளாது என்று வெளிப்படையாக அறிவித்து உள்ளார். பி.ஜே.பி. யின் நிலைப்பாடு இதுதான். தனி ஈழம் என்ற கோரிக்கையை கூட அவர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக சிங்களர்களோடு நல்லிணக்கமாக வாழ வழி செய்வார்களாம். "அடித்த கைகள் அணைக்காது" என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லை பி.ஜே.பி.க்கு. ஈழத்தமிழர்களின் லட்சியத்திற்கு காங்கிரசோ அல்லது பி.ஜே.பி.யோ சிறிதும் உதவ மாட்டார்கள்.ஆகவே வரலாற்று ரீதியாக பார்த்தாலும், எதார்த்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இந்தியாவை எந்த விதத்திலும் நம்ப முடியாது.

என்ன தீர்வு? :

ஈழத்தமிழர்களுக்கு நாங்கள் மட்டும் தான் உதவுகிறோம்; நாங்கள் தான் அவர்களின் பிரிதிநிதி என்ற போலி பாஸ்போர்ட் மூலம் உலகநாடுகளை மிரட்டிவரும் இந்தியா, ஐ.நா. அவையிலோ அல்லது இன்னபிற மனித உரிமைகள் அவையிலோ இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வரும்போதெல்லாம் அதை நீர்த்துப் போக வைப்பதோடு, இந்தியாவின் நிலைப்பாட்டை அல்லது ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் முடிவை உலக நாடுகள் எதிர்பார்க்கும் அளவுக்கு ஒரு சதிவலையை பின்னி வைத்திருக்கிறது. அதனாலே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை நடந்து ஆறு ஆண்டுகள் ஆனபின்னும் அதை இனப்படுகொலை என்றுகூட உலகநாடுகள் சொல்ல தயங்குகின்றன. ஈழத்தமிழர்களுக்கு நாங்கள் தான் உதவுகிறோம் என்று உலகநாடுகளுக்கு சொல்ல அவ்வப்போது 1000 கோடி என்றும், 500 கோடி என்றும் ராஜபக்சேவுக்கு தானம் செய்கிறார்கள். அந்த பணத்தில் இருந்து ஒத்தப் பைசாக்கூட ஈழத்தமிழகளுக்காக செலவழிக்கப்படவில்லை என்று மனித உரிமை ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் சொல்கிறார்கள்.இலங்கையை கண்டிக்க ஏதாவது ஒரு நாடு முன்வருமானால், இலங்கைக்கு முன் இந்தியா பதறுகிறது; தடுக்கிறது. அது காங்கிரஸ் ஆனாலும் சரி, பி.ஜே.பி. ஆனாலும் சரி.

தமிழக தமிழர்களாகிய நம்முடைய உணர்வையும், போராட்டங்களையும் உலகநாடுகளின் கவனத்திற்கு செல்லாமல் இந்திய தேசியம் தடுக்கிறது. இந்தியாவின் அங்கமாக இருந்து தமிழக தமிழர்களாகிய நம்மால் தன்னிச்சையாக என்ன செய்ய முடியும்? இங்கிருந்து கொண்டு பிரணாப் முகர்ஜியை கண்டித்துக்கொண்டே, சோனியாகாந்தியை கண்டித்துக்கொண்டே, பி.ஜே.பி.யை கண்டித்துக்கொண்டே மீண்டும் அவர்களிடம் தான் கோரிக்கை தான் வைக்க முடியும். அதற்கு காரணம் நாம் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்பது தான். இதுவரை உலகில் ஐ.நா. அவையியின்  பொது வாக்கெடுப்பு மூலம் தனி நாடாக பிரிந்திருக்கும் நாடுகளுக்கு ஆதரவாக ஏதாவது ஒரு நாடோ அல்லது பல நாடுகளோ இருந்திருக்கின்றன. அந்த அடிப்படையில் உலகில் எந்த ஒரு நாடும் இன்றைக்கு தமிழ் ஈழத்தை ஆதரிக்க தயாராக இல்லை. அங்கே நடந்தது மிகப்பெரிய இனப்படுகொலை என்று சொல்ல தயாராக இல்லை.காரணம் இந்தியாவின் தலையீடு. அடுத்ததாக ஈழத்தமிழர் விவகாரத்தில் உலகநாடுகள் ஏன் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்பார்க்கிறார்கள் என்றால் ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் தான் தமிழக தமிழர்களாகிய நாம். தமிழக தமிழர்களாகிய நாம் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதாலே. இந்தியாவின் அங்கமாக இருக்கும் நம்முடைய போராட்டங்களும், கோரிக்கைகளும் இயல்பாகவே இந்தியாவை நோக்கித்தான் இருக்குமே ஒழிய உலகநாடுகளை நோக்கி அமையாது. இனியும் இந்தியா மனம் மாறும் என்பதில் எவ்வித உத்திரவாதமும் இல்லை; அப்படி இந்தியா மனம் மாறும் என்று நம்புகிறவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்; இந்தியா  மனம் மாறும் என்பது செத்தப்பினம் உயிரோடு எழுந்து வரும் என்பதற்கு சமம் . ஆகவே என்னருமை தமிழ் உணர்வாளர்களே ஈழத்தமிழர்களுக்கு உள்ளன்போடு ஆதரவுக்கரம் நீட்டுபவர்கள் தமிழக தமிழர்களாகிய நாம் தான்; இன்றைக்கு மிச்சம் இருக்கும் ஈழத்தமிழர்கள் நம்புவதும் தமிழக தமிழர்களாகிய நம்மைத்தானே ஒழிய இந்தியாவை அல்ல; ஆனால் இதே தமிழக தமிழர்களாகிய நாம் எம்மக்களை காப்பாற்றுங்கள் என்று டெல்லியிடம் பிச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அங்கமாக இருந்துகொண்டே, இலங்கையோடு சேர்த்து இந்தியாவையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும் என்ற நம்முடைய கோரிக்கை; என்னையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்து என்பதற்கு சமம்; முதலில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையென்றால் நம்முடைய  முழக்கம், வெற்றுமுழக்கமாகவே வடிவு பெரும் . அது எந்த விதத்திலும் ஈழத்தமிழர்களுக்கு விடியலை தராது. தமிழ்நாடு இந்தியாவின் அங்கமாக இருக்கும் வரை, இந்தியாவின் தலையீடு அல்லது ஆதரவு இல்லாமல் தனி தமிழ் ஈழத்திற்கோ ஈழத்தமிழர்களின் வாழ்வாரத்திற்கோ சாத்தியமில்லை; அதேவேளையில்இந்தியாவை இனி எந்த விதத்திலும் நம்ப முடியாது; சொந்த நாட்டு மாக்களில் பெரும்பான்மை மக்களை சாதி ரீதியாக அடிமையாக வைத்திருக்கும் இந்தியா, ஈழத்தமிழர்களுக்கு உதவும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை; பல்லாயிரம் ஆண்டுகளாக நம்பி, நம்பி ஏமாற்றம் மட்டுமே மிச்சம் ! ஈழத்தமிழர்களுக்கு தனி தமிழீழம் ஒன்றே ஒரே தீர்வு; தனி தமிழ்நாடே தமிழ் ஈழத்திற்கு ஒரே தீர்வு ..! அதுதான் தமிழக தமிழர்களாகிய நம்முடைய வாழ்வாதாரத்திற்கும் நல்லது...

- அங்கனூர் தமிழன் வேலு

1 கருத்து: