வெள்ளி, 15 மார்ச், 2013

மதிப்பிற்குரிய இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களே !

மதிப்பிற்குரிய இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களே ! வணக்கம்...

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்; அதுவே எனது விருப்பமும் கூட. இந்த வார "தமிழக அரசியல்" இதழில் தாங்கள் எழுதி இருந்த கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. பொருள் ஈட்டி தரும் அளவுக்கு நல்ல அருமையான கட்டுரை அது. நல்ல உணர்வுள்ள (?) இயக்குனர் அல்லவா... அதனால் நீங்கள் நலிந்துவிடக்கூடாது ஆகவே பொருள் ஈட்டித்தான் ஆகவேண்டும். அதற்காக முதலில் என் வாழ்த்துக்கள். "தமிழக அரசியல் இதழ் தன்னுடைய இதழில் கலைஞரை திட்டுவதற்கே எப்பொழுதும் 3 பக்கங்களை ஒதுக்கும், அந்த பக்கங்களை நிரப்ப உங்களுக்கு முன் புலவர் புலமைபித்தன் இருந்தார். தற்போது அந்த இடத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். உங்கள் புலம்பல்களால் கலைஞர் மீதான மக்களின் மதிப்பு கூடிக் கொண்டே வருவதை கண்கூடாக காண்கிறேன். இன்றைக்கு தமிழக அரசியலில் கலைஞர் எவ்வளவு தவிர்க்க முடியாத ஆளுமை என்பதை உங்கள் புலம்பல்களும், எழுத்தக்களும் நிரூபிக்கின்றன. தமிழகத்தில் அரசியல் செய்யவேண்டுமானால் ஒன்று கலைஞரை ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் திட்டவேண்டும். எது எப்படியே கலைஞரை  நீங்கள் அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். கலைஞரை தாண்டி அரசியல் செய்ய எவனுக்கும் துப்பில்லை. என் காதுபடவே இருவர் பேசிக்கொண்டார்கள் அதாவது " டெசோ பொது வேலைநிறுத்த சுவரொட்டியை பார்த்தவர்களில் ஒருவர் சொன்னார் எல்லாம் முடிந்த பிறகு இப்போது ஏன் இவர் இப்படி நடிக்கிறார் என்றார். மற்றொருவர் சொன்னார் " டேய் மடையன்களா கலைஞர் தவறு செய்துவிட்டார் என்பதற்காகத்தான் அவரை ஆட்சியில் இருந்து தூக்கினோம்; குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவர் பதவிகூட கிடைக்கவில்லை, அப்படி இருக்க திரும்ப திரும்ப அவரையே திட்டுவது உங்கள் கையாலாகா தனம் தானே" அவர் செய்யாததை நீங்கள் செய்யுங்களேன் என்றார். எவ்வளவு பெரிய உண்மை அது. இதுதான் எதார்த்தம். இன்றைய மக்கள் மனதில் உள்ள எதார்த்தமான புரிதலும் இதுதான். சரி கலைஞருக்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கம் அல்ல; எங்கள் மீதான விமர்சனத்திற்கு பதில் சொல்லவே இந்த கடிதம். அதற்கு முன் சில கேள்விகள்...


மேடைப் பேச்சாளர்களில் முதல்தர பேச்சாளர், இரண்டாம் தர பேச்சாளர், மூன்றாம் தர பேச்சாளர், நான்காம் தர பேச்சாளர் என்ற வகைப்பாடு உண்டு. இது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். அதில் நீங்கள் மூன்றாம் தர எழுத்தாளரா? இல்லை நான்காம் தர எழுத்தாளரா? என்பது தான் எனக்குண்டான சந்தேகம். நிச்சயமாக நீங்கள் முதல்தர எழுத்தாளராகவோ  இரண்டாம் தர எழுத்தாளராகவோ இருக்க முடியாது. சில மாதங்களாக நீங்கள் "தமிழக அரசியல்" இதழில் தொடர் எழுதி வருகிறீர்கள். அதில் கலைஞரை திட்டுவதை தவிர வேறு ஈழத்துயருக்கு தீர்வாக எதையாவது எழுதி இருக்கிறீர்களா? என்பதை உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். தமிழ் ஈழம் மட்டும்  தான் உங்கள் நோக்கமாக இருக்குமானால் அதற்கான தீர்வு என்ன? இன்று கேள்விக்குள்ளாகி நிற்கும் தமிழ் ஈழத்தை அடைய நாம் என்ன செய்யவேண்டும்? என்பதை சொல்லி இருக்கிறீர்களா? அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக ஈழப்போரில் எல்லாவற்றையும் இழந்து பிச்சைக்காரர்களை விட கேவலமாக நிற்கும் நம் மக்களையாவது கவனத்தில் கொண்டு அவர்களுக்கான தற்காலிக வாழ்வாரத்திற்கு வழி என்ன என்பதை எழுதி இருக்கிறீர்களா? தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் தம் லட்சியத்திற்கே முழு நேரத்தையும் செலவிட்டார். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் விமர்சனத்திற்கு பதில் சொல்கிறேன்... 

1983 ஆம் ஆண்டு திருமாவளவன் என்ற ஒற்றை மனிதராக ( இந்த வார்த்தையை கவனமாக படியுங்கள், அதாவது பொய் வழக்கில் உள்ளே செல்ல ஆட்கள் இருக்கிறார்கள், தடியடி வாங்க தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றில்லாமல்) தொடங்கிய ஈழ ஆதரவு போராட்டம் இன்று தவிர்க்க முடியாத பெரிய இயக்கமாக உருவாகிய பின்பும் ஓயவில்லை; ஓயப்போவதும் இல்லை. திருமாவளவனுக்கோ, அல்லது அவரது தம்பிகளுக்கோ ஈழத்தை ஆதரிக்க என்ன அவசியம்? இல்லை அதற்கேது நேரம்? சாதியின் கோரப்பிடியில் நித்தமும் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் ஏன் ஈழத்தை ஆதரிக்க வேண்டும்? எளிமையான பதில் " அடிபட்டவனுக்குத்தான் அடியின் வலி புரியும்" 2 ஆயிரம் ஆண்டுகளாக வாங்கிய அடி, அவமதிப்பு, இழிசொல் இந்த வேதனைகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறோம். அந்த வலிகளை இன்னொருவர், அதுவும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும் நிகழ்கிறதே அதை தடுக்க நம்மால் என்ன செய்யமுடியும்? என்ற ஆதங்கத்தில் தான் ஆதரிக்கிறோம். அடக்குமுறையை எதிர்க்கவேண்டும்; ஆதிக்கத்தை வேரறுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அந்த அடிப்படையில் தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறோம்; விடுதலைப் புலிகளை கொண்டாடுகிறோம். 

"இனப்படுகொலை முடியும்வரை தமிழகம் பொங்கியெழுந்துவிடாதபடி பார்த்துக்கொண்ட கருணாநிதிக்கு திருமா பினாமி என்று சொல்கிறீர்களே " சமீபத்தில் தருமபுரியில் 300 குடிசைகளை தமிழர்களே கொள்ளையடித்துவிட்டு கொடுத்தினார்களே; அப்போது அது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. திருமாவளவன் போராடினாரே, பல்வேறு இயக்கங்களும் போராடினார்களே. சட்டக்கலூரி மாணவர்களும் போராடினார்களே, இசுலாமியர்கள் கூட களத்தில் குதித்தார்கள். அந்த துயரம், அந்த கொந்தளிப்பு தமிழர்களிடம் பரவிவிடாமல் தடுத்த காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் நீங்களும், தமிழ்தேசிய போராளிகளாக நீங்கள் நம்பும் புடுங்கிகளும் பினாமிகளாக இருந்தீர்களா? இல்லை எங்கே படுத்து உறங்கினீர்கள்? யாருக்கு சேவை செய்து கொண்டிருந்தீர்கள்? யாருக்கு பல்லக்கு தூக்கினீர்கள்?" என்று என்னாலும் கேட்க முடியும். நாகரிகம் கருதி கேட்காமல் விடுகிறேன். முதலில் தமிழர்கள் என்றால் யார்? தலித்துகள் தமிழர்கள் இல்லையா? என்பதை சொல்லிவிட்டு திருமாவை விமர்சிக்கவும். ஈழத்தமிழர்களின் நிலைமை நமக்கெல்லாம் பெரும் பிரச்சனை தான்; அதற்காக போராடத்தான் வேண்டும். ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனை மட்டும் தான் தமிழர்களின் ஒரே பிரச்சனை அல்ல என்பதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 300 குடிசைகளை கொளுத்திவிட்டு இன்று ஊர் ஊராய் கும்மாளம் அடிக்கும் ராமதாஸ், 2009 வரை மத்திய அமைச்சரைவையில் பங்கெடுத்து அத்துனை அதிகாரங்களையும் சுவைத்து விட்டு வெளியேறிய ராமதாஸ், உங்களுக்கு நண்பராகி விட்டார். ஆனால் அப்படிப்பட்ட துயரத்தில் தம் மக்கள் தவிக்கும் போதும் ஈழத்தமிழர்களுக்காக போராடும் திருமாவளவன் துரோகி ஆகிவிட்டாரா?

அடுத்தபடியாக, கலைஞருக்கு அபார நினைவு சக்தி என்று சொல்வார்கள்; உங்களுக்கோ அபார மறதி சக்தியோ? ஈழம் என்று நீங்கள் பேச துவங்கும் முன்னே 2009ஐ தாண்டி பேசமாட்டேன்  என்று யாருக்காவது எழுதி கொடுத்திருக்கிறீர்களா என்ன? புலிகளின் தளபதி கிட்டு மரணத்தின் பொது அவருக்கு இரங்கல் தெரிவித்த குற்றத்திற்காக பழ.நெடுமாறன், சுப.வீ, புலமைபித்தன் போன்றோரை பொடாவில் கைது செய்தது யார்? விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்டு கோவை ராமகிருஷ்ணன், ஆறுச்சாமி ஆகியோரை  பொடாவில் கைது செய்தது யார்? பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறி அவர்களை தடாக் கைதிகளாக்கியது யார்? எல்லாவற்றிற்கும் மேலாக பழ.நெடுமாறனை 18 மாதம் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் வைத்தது யார்? வைகோவை 10 மாதம் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது யார்? திருமாவை கலைஞரின் பினாமி என்று சொல்கிறீர்களே, திருமாவை விட யார் கலைஞருக்கு நெருக்கடியை கொடுத்தது? உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம்.

(1) அ.தி.மு.க. அணியில் இருக்கிற கம்யுனிஸ்ட் கட்சியோடு, அ.தி.மு.க. அணியில் இருக்கிற ம.தி.மு.க வோடு, அ.தி.மு.க. அணியில் சேர இருந்த பா.ம.க. வோடு, அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு அளித்து வந்த பழ.நெடுமாறனோடு, அ.தி.மு.க. வுக்கு எல்லா வேலைகளையும் செய்து வந்த எம். நடராசனோடு எதைப் பற்றியும் கவலைப்படாமல், கூட்டணியைப் பற்றி கவலைப் படாமல், அரசியல் ஆதாயத்தை பற்றி கவலைப் படாமல், தேர்தலைப் பற்றி கவலைப் படாமல் ஆறு மாதம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் கைகோர்த்து களப்பணியாற்றிய திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் துரோகி ஆகிவிட்டாரா?  எதிர்க் கூட்டணியில் உள்ளவர்களை நேருக்கு நேர் பார்ப்பதற்கே பயப்படுவார்கள்; ஆனால் திருமா அப்படி பயப்படவில்லையே.

(2) ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே, ஆளும் கட்சிக்கு நெருக்கடியை கொடுப்போம், ஆளும் கட்சியை எதிர்த்து களமாடுவோம் வாருங்கள் இணைந்து போராடுவோம், சேர்ந்து போராடுவோம் என்று கத்தி கதறி பார்த்து விட்டு தானே மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்தார்.அங்கு நீங்கள் தமிழ்தேசிய போராளிகளாக எண்ணும் எந்த புடுங்கிகளும் வரவில்லையே. அந்த போராட்டத்தில் 360 சிறுத்தைகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். இன்னமும் 36 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே இருக்கிறார்கள்... ஏன் அங்கு வந்து ஆதரவை பதிவு செய்தால் என்ன? அதை பயன்படுத்தி தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து இருக்கலாமே? அந்த மேடைக்கு வந்தால் ஜெயலலிதா உங்களை அரசியலை விட்டே விரட்டிவிடுவாரா? இல்லை உங்கள் சொத்தை எல்லாம் பிடுங்கி கொள்வாரா? என்று அந்த புடுங்கிகளிடம் கேட்டு விட்டு இங்கே வாருங்கள்.

(3) புலிகளால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்ன சொன்னவர் , பிரபாகரனை கைது பண்ணிவந்து இந்தியாவில் தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவர்,  போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவர், அய்யா நெடுமாறனை 18 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவர், அண்ணன் வைகோவை 10 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவர் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று தீர்மானம் நிரவேற்றியதாலே, கால்பந்து வீரர்களை விரட்டியதாலே தியாகி ஆகிவிட்டாரா? இல்லை இது போன்ற தீர்மானங்கள் கலைஞர் ஆட்சியிலும் நிறைவேற்றப்பட்டன என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். என்ன ஆகிவிட்டது? உடனே நீங்கள் கேட்கலாம் மத்தியில் அவருக்கு ஆளுமை இருந்தது, மத்திய அரசையும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வைத்திருக்கலாமே என்று. அப்படி சொல்லி அதற்கு மத்திய அரசு நிறைவேற்றாமல் இருக்கும்பட்சத்தில் கலைஞர் வெளியேறி இருந்தால் என்ன ஆகி இருக்கும் இதோ அம்மையாரின் அறிவிப்பு...." கம்யுனிஸ்ட் கட்சியை கூட்டணியில் வைத்துக் கொண்டே, வைகோவை கூட்டணியில் வைத்துக் கொண்டே, பழ நெடுமாறனோடு நட்பு பாராட்டிக் கொண்டே, காங்கிரசை விட்டு தி.மு.க விலகினால் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்தார் அம்மையார். காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தாரே. Mr.புகழேந்தி தங்கராஜ் இது உங்களுக்கு உடன்பாடா?

(4) தி .மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் என்றைக்கும் சிறுத்தைகள் வாய்மூடிக் கிடைக்கவில்லை, தொடர்வண்டி மறியல், சாலை மறியல், சாகும்வரை உண்ணாவிரதம், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, மாநாடு என்று தினம் ஒரு போராட்டத்தை முன்னெடுத்து கொண்டுதான் இருந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் (அதாவது 2006 - 2011) நீங்கள் நம்பும் தமிழ்தேசியவாதிகளின் போராட்டங்களை பட்டயலிட தயாரா?  

புதிய வரலாறு வேண்டாம் பழைய வரலாறு தான் வேண்டும் என்றால் இதோ....

1983 ஆம் ஆண்டு பிரபாகரன் தமிழக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது மாணவர் படையை கூட்டிக் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட சொன்னது யார்?

1983 ஆம் ஈழ விடுதலைக்கு ஆதரவாக மாணவர் போராட்டம்... விடுதலை புலி கையெழுத்து ஏடு நடத்தியது யார்?

எண்பதுகளின் நடுவில் ஆண்டு சரியாக நினைவில் இல்லை.. அண்ணன் வைகோவை வைத்து பச்சையப்பன் கல்லூரியில் "இந்திய அரசின் கொலைக் குற்றம்" என்ற கருத்தரங்கை நடத்தியது யார்? பின்பு அது கலைஞரின் அறிவுறுத்தலால் "குற்றவாளிக் கூண்டில் இந்திய அரசு" என்று பெயர் மாற்றப் பட்டது.... 

தமிழ் தேசியம் பேசினாலும் நெடுமாறனும் வைகோவும் கையில் எடுக்க அஞ்சிய பிரபாகரன் படத்தை இன்று சேரித்தமிழனும் துணிந்து கையில் எடுப்பதற்கு காரணம் யார்?

இதுவெல்லாம் சரி... ஏன் கலைஞர் அணிக்கு திருமா சென்றார் என்றால் பதில் இதோ...

அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஈழத்தை ஆதரித்தது, அதன் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. என்றைக்கும் மறந்து கூட ஈழத்தை ஆதரித்தது கிடையாது. அதோடு மட்டுமல்ல மக்கள் சாகடிக்கப் படும்போதும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் அறிக்கை. போரில் பொது மக்கள் சாவது சகஜம் என்று. அதையும் சகித்து கூட்டணி வைக்கலாம். ஆனால் "டெக்கான் கரோனிக்கல்" பத்திரிக்கையில் ஜெயலலிதா பேட்டிக் கொடுக்கிறார். விடுதலை சிறுத்தைகள் உங்கள் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா என்று நிருபர் கேள்வி கேட்கிறார் அதற்க்கு ஜெயலலிதா வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு எபபடி கூட்டணி சேர்வது? வைகோவை போல அவரது காலடியில் விழவா முடியும்?

எங்களின் வலியும், வரலாறும் பெரியது. எதோ உளறவேண்டும், யாரையோ திட்டவேண்டும் என்று நினைத்தால் சம்மந்தபட்டவரை நேரடியாக பேசலாம். சிறுத்தைகளை சீண்டினால் பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் Mr.புகழேந்தி தங்கராஜ்.

ஒரே ஒரு சின்ன உதாரணம் அய்யா....

ஒரு ஊருல ஒரு குடிகாரன் இருந்தான். அவன் ஊருல இருந்த எல்லோரையும் ஏக வசனத்துக்கும் ஒருமையில் பேசுவதும், ஏசுவதுமாய் இருப்பான். ஆனாலும் யாரும் அவனை எதிர்த்தோ, அவனுக்கு நிகராயோ பேசுவதில்லையாம். அதற்காக அந்த குடிகாரன் சொல்வது எல்லாம் உண்மையாகி விடாது. அவனைப் போல மற்றவர்கள் இழிவாக இழிவான நிலைக்கு செல்ல தயாராக இல்லை. இதுதான் உண்மை.

அப்படித்தான் இன்றைக்கு உங்களுடைய நிலையும். 

உங்கள் நோக்கம் இழி அரசியல்; எங்களின் நோக்கம் இன விடுதலை !!!

- தமிழன் வேலு                

    

1 கருத்து:

  1. jeyalalitha ethirithaan, karunanithi kooda irunthe kulithondura kulla nari, thuriyothanan, antha thuriyothananuku atharavaga purputta karnanaga nengal irunthaal thanga raj enna seivar, neengal karunanithiku vakkalathu vangamal irunthale pothum

    பதிலளிநீக்கு