சனி, 30 மார்ச், 2013

பச்சையான சந்தர்ப்பவாதி தமிழருவி மணியனுக்கு ..!


           
மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் அவர்களே வணக்கம் !
03.04.2013 தேதியிட்ட இந்த வார ஜூனியர் விகடன் இதழில் "இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது" என்ற தலைப்பில் வெளிவந்திருந்த தங்களது கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பை பெற்றேன். அவை வெற்று புலம்பல்களாக மட்டுமில்லாமல் உங்களது பார்ப்பன ஆதரவு மனநிலையை அப்படியே படம் பிடித்து காண்பித்தது. வருணாசிரம தத்துவத்தை ஏற்றுக்கொண்ட காந்தி பேசிய சாதி ஒழிப்பு எவ்வளவு முரண்பாடானதோ, எவ்வளவு பச்சையான சந்தர்ப்பவாதமானதோ   அதைவிட ஒருபடி மேலான முரண்பாடானது, பச்சையான சந்தர்ப்பவாதமானது  நீங்கள் பேசும் தமிழ்தேசியம். பெரியார் எதிர்ப்பு என்று சொல்ல துணிவில்லாத அரைவேக்காடுகள், அறிவுஜீவிகள் திராவிட எதிர்ப்பு என்று சொல்வதைப் போல அல்லது , கருணாநிதி - ஜெயலலிதா எதிர்ப்பை திராவிட எதிர்ப்பு என்று சொல்லும் அடி முட்டாள்களின் புலம்பல்கள்  போன்றது நீங்கள் பேசும் தமிழ் தேசியம். ... சரி கட்டுரைக்கான விஷயத்தை பற்றி பேசுவோம்...

(1) ராஜாஜி 1937 யில் கொண்டுவந்த இந்தியை எதிர்த்துப் பல்வேறு வடிவங்களில் படை நடத்திய பெரியார், 1965 யில் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. (2) பள்ளிகளில் இந்தியை புகுத்த தீவிரம் காட்டிய ராஜாஜி பின்னாளில் "இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் அரசமைப்பு  சட்டத்தின்  17 வது பகுதியை பசுபிக் கடலில் வீசி எறியுங்கள் என்று அறைகூவல் விடுத்தார்". (3) தி.மு.கழகத்தை 1967 க்குப் பிறகு பெரியாருக்கு பிடிக்கவில்லை அதனால் தி.மு. கழகத்தின் பின்புலத்தில் இயங்கிய மாணவர் போராட்டத்தை பெரியார் எதிர்த்தார். (4) ராஜாஜிக்கு நேருவையும் காமராஜரையும், காங்கிரசையும்  பிடிக்கவில்லை, அதனால் மாணவர் போராட்டத்தை ஆதரித்தார். (5) மாணவர்கள் போராட்டத்தை பயன்படுத்தி அண்ணா ஆட்சியை கைப்பற்றினார். (6) ராஜாஜி பழி தீர்த்து கொண்டார்.என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆகவே உங்கள் வரிகளில் இருந்து எனக்கு சில கேள்விகள் எழுகிறது. அதாவது...  

1965 யில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை பெரியார் ஆதரிக்கவில்லை என்றால் எதிர்த்தாரா? அதற்க்கு எதிராக இயக்கம் நடத்தி பிரச்சாரம் செய்தாரா? ஆதாரங்களோடு விளக்க முடியுமா? பள்ளிகளில் இந்தியை புகுத்த நினைத்த ராஜாஜி ஏன் இந்தி ஆட்சி மொழி என்ற அரசபைப்பு சட்டத்தை பசுபிக் கடலில் வீசுங்கள் என்று சொன்னார்? ராஜாஜிக்கு ஏன் நேருவையும், காமராஜரையும், காங்கிரசையும் பிடிக்கவில்லை? பெரியாருக்கு ஏன் தி.மு.க. வை பிடிக்கவில்லை? இதுதான் எமக்கு எழுந்த  கேள்விகள். இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டால் அங்கே தெரியும் ராஜாஜியின் வருணாசிரம பற்றும், பார்ப்பன மேலாதிக்கமும். ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்தார். அதாவது மலம் அள்ளியவன் பிள்ளை மலம் தான் அள்ள வேண்டும் என்பதுதான் குலக்கல்வியின் நோக்கம். அந்த குலக்கல்வி திட்டத்தை குழி தோண்டி புதைத்தவர் காமராஜர். அதனால் காமராஜரை ராஜாஜிக்கு பிடிக்காமல் போனதில் என்ன வியப்பு இருக்கப் போகிறது? அடுத்து 1967 க்குப் பிறகு பெரியாருக்கு தி.மு.கழகத்தை பிடிக்காமல் போனது என்பது விஷமத்தனமான பிரச்சாரம். அதாவது பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெரியாருக்கு தி.மு.கழகத்தை பிடிக்காமல் போனது என்பது போன்ற மாயையை உருவாக்க முயலாதீர்கள்.உங்களுக்கு  தி.மு.க. மீது காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, நம்பிக்கையின்மை  அல்லது பேரறிஞர் அண்ணா மீது  காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு இருக்கலாம். அதை நேரடியாக சொல்லாமல் ஒரு மக்கள் இயக்கம், மக்களுக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்ட இயக்கத்தை கொச்சைப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?  1949 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து பேரறிஞர் அண்ணா அவர்கள்  திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தவுடன் தி.மு.க. மீதான முதல் விமர்சனமே தந்தை பெரியாருடையது. "கண்ணீர் துளிகள்" என்று கடுமையாக விமர்சித்தார். 1967 மற்றும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வை எதிர்த்து, குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்தமைக்காகவே பச்சைத்தமிழர் காமராஜரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதுநாள் வரை தேர்தல் பிரச்சாரத்திற்கே செல்லாதவர்  தந்தை பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு ஆரியம் தன்னுடைய கோரமுகத்தை வெளிப்படுத்தி கொடி நாட்ட முயன்றமையால் அன்றைக்கு தி.மு.க.வை எதிர்த்து பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். 1967தேர்தலிலே வெற்றிபெற்றவுடன் நேராக அண்ணா பெரியாரை சந்திக்கப் புறப் பட்டார். அண்ணா, கலைஞர், நாவலர் ஆகியோர் ஒரு காரில் சென்னையிலிருந்து புறப்பட்டனர். அதில்கூட போகவேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு கருத்து வந்தது. இல்லை, கட்டாயம் பெரியாரிடம் செல்ல வேண்டும் என்று சொன்னார்.

அண்ணா அவர்கள் முதலில் எங்கே போகிறோம் என்று ஓட்டுநருக்குக்கூட சொல்லவில்லை. திருச்சிக்கு அன்பில்தர்மலிங்கம் அவர்களிடம் மட்டும் தகவல் சொல்லிவிட்டார்கள்.

அண்ணா, வேகமாக விடு காரை! என்றார். அண்ணா அவர்களுடைய ஓட்டுநர் சண்முகம் என்பது பலருக்குத் தெரியும். அவர் மன்னார்குடி உள்ளிக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர். அவரே பல தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.

அண்ணாதான் முதல்வர் என்று ஆகிவிட்டது. அப்பொழுது அரசு கார் இவருக்குக் கிடையாது. இன்னும் பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தச் சூழ்நிலையில் செங்கல்பட்டைத் தாண்டி வண்டி சென்று கொண்டிருக்கிறது. எங்கே போகிறோம் என்று டிரைவருக்குத் தெரியாது. அண்ணா திருச்சிக்குப் போய் சேருகிறவரையிலே அது யாருக்கும் தெரியாது. தன்னுடைய தொண்டரான அண்ணாவை பெரியார் சந்திக்கிறார். அண்ணா அவர்கள் வந்தவுடனே, வாங்க! வாங்க!! என்று அழைக்கின்றார். அய்யா அவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் சொல்லுவார். எழுந்து நின்று எல்லோரையும் வரவேற்றுவிட்டு உடனே உட்கார வைத்தார்.அண்ணா அய்யா அவர்களைப் பார்த்து, அய்யா எங்களை வழிநடத்த வேண்டும் என்று சொன்னார். அதற்கென்னங்க, அதற்கென்னங்க என்றே பெரியார் சொல்லுகிறார். வாயில்வேறு வார்த்தையே வரவில்லை. (Source - Viduthalai .in)

பெரியாருக்கும் - தி.மு.க வுக்குமான மனக்கசப்பு என்பது குடும்ப பிரச்சனை போன்றதே ஒழிய பரம்பரை சண்டை அல்ல; இதை பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக ஆன பின்பு தந்தை பெரியாரின் தலைமையில் நடந்த ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவில் பேசும் போது " நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தான்" என்று அப்பன் - பிள்ளை உறவை மிகதெளிவாக உணர்த்தினார். இதில் பெரியாருக்கு தி.மு.க.வை எங்கே பிடிக்காமல் போனது? ராஜாஜிக்கு காமராஜரையும், காங்கிரசையும் பிடிக்காமல் போனதற்கு வேண்டுமானால் பச்சை சந்தர்ப்பவாதமாக இருக்கலாம். ஆனால் பெரியாருக்கும், தி.மு.க. விற்குமான மனக்கசப்பு அப்படி பட்டதல்ல. பெரியாரை விமர்சிக்கும் முன்பாக, மாணவர்களின் இந்தி எதிர்ப்பில் ராஜாஜிக்கு பல்லக்கு தூக்குவதற்கு முன்பாக  "சிறையில் ஒழுங்காக சாப்பாடு கிடைக்கும் என்பதால் பல ஹரிசனங்கள் கைதாகியுள்ளார்கள்" என்று டாக்டர் சுப்புராயன் சட்டமன்றத்தில் தொல் தமிழர்களின் தமிழுணர்வைப் பகடி செய்தார் என்பதையும் . இதையே "அற்பக்கூலிகளுக்கு அமர்த்தப்பட்ட கூலிகள்" என முதலமைச்சர் இராசாசி கேவலப்படுத்தினார் என்பதையும்  நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ...தி.மு.க வின் பின்புலத்தில் மாணவர் போராட்டம் நடந்ததால் தந்தை பெரியார் அதை எதிர்த்தார் என்று அண்டப் புளுகை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறீர்களே... 1938 ஆம் தந்தை பெரியார் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தான், தி.மு.க.வின் இந்தி எதிர்ப்பு கொள்கைக்கு மூலம், 1938 ஆம் தந்தை பெரியார் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோர்களின் தியாகம்  தான் மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வித்து. தந்தை பெரியார் அவர்களை எதிர்க்க திராணி அற்றவர்கள், திராவிட எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு கொல்லைப் புறத்தில் பெரியாரை வசைபாடுகிறார்கள். இதன் நீட்சி தான் பெரியாரை தலித் விரோதி என்று சித்தரிக்கும் மனோபாவம். இது பெரியாரை எதிர்ப்பதன் மூலம் பார்ப்பான்களிடம் பொரிக்கி திங்க துடிக்கும் எச்ச புத்தியே. இதை தான் தந்தை பெரியார் சொன்ன விளக்கம்.  "இனப்பற்றோ, மொழியுணர்வோ சமூக பிரஞ்ஞையோ சிறிதுமின்றி பதவி பல்லக்கில் பவனி வருவதற்காகவே அரசியல் நடத்தும் காங்கிரஸ்காரர்கள் ஆதரிப்பாரின்றி அனாதையாகிவிட்டார்கள்" என்று சொல்லும் நீங்களும் அதே பல்லக்கில் தான் பவனி வந்தீர்கள் என்பது நினைவில்லையா? மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வானாளவில் புகழும் நீங்கள், பெரியாரை கொல்லைப்புறத்தில் நின்று வசைபாடும் நீங்கள், இந்தியை வலுக்கட்டாயமாக திணித்த ராஜாஜிக்கு பல்லக்கு தூக்கும் நீங்கள் மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப்பற்றி பேச தகுதி ஆனவர் தானா?

அடுத்து ... "தமிழீழ கோரிக்கையோடு தனி தமிழ்நாடு கோஷம் கலந்து விட மாணவர்கள் எந்த நிலையிலும் அனுமதிக்க கூடாது. இந்திய தமிழர்களாக இருப்பதே எல்லா வகையிலும் உயர்ந்தது" என்று கூறும் உங்களுக்கு கடைசி மனிதனின் கேள்வியாக சிலவற்றை கேட்கிறேன். எம் அப்பாவி தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசினால் சுட்டுக் கொள்ளப்படும் போதும்  வாய் மூடி மவுனியாக இருக்கும் இந்திய அரசின் அங்கமாக அதாவது இந்திய தமிழர்களாக இருப்பது தான் உயர்ந்ததா? முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வஞ்சிக்கப்பட்டும் இந்திய தமிழர்களாக இருப்பது தான் உயர்ந்ததா? காவிரி நீர் மறுக்கப்பட்டு 22 விவசாயிகளை  தற்கொலை செய்ய தூண்டிய இந்திய தமிழர்களாக இருப்பது தான் உயர்ந்ததா? ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் எவ்வளவு அவசியமோ, அப்படிப்பட்ட அவசியம் தமிழக தமிழர்களாகிய எங்களுக்கும் தனி தமிழ்நாடு வேண்டும் என்பதில் இருக்கிறது. அதற்கான அவசியத்தை எங்களை விட இந்தியாவே அதிகமாக உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இணைந்து வாழ விரும்பியதால் தான் நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொண்டோம். தமிழர்களுக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் செயல்படுகிறது என்றால், நரேந்திர மோடியை பிரதமராக்கிவிடுவோமா? மம்தா பானர்ஜியை பிரதமராக்கிவிடுவோமா? முலாயம் சிங்கை பிரதமராக்கிவிடுவோமா? ஏனெனில் அவர்கள் தான் தமிழீழத்தை தங்கத் தாம்புலத்தில் வைத்து வழங்கப் போகிறவர்கள் (?) தமிழக தமிழர்களாகிய எங்களை தங்கத் தட்டில் வைத்து தாங்கப் போகிறவர்கள் (?) ஆளும் காங்கிரஸ் மட்டுமல்ல, இதுவரை, இதற்கு முன்னர் ஆண்ட காங்கிரசும் தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டது என்பது அரசியல் அறிவுஜீவியான உங்களுக்கு தெரியாமல் போனது எப்படி? சேற்றில் பூத்த செந்தாமரையாக வாழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர். அவர் ஒருவரை நாங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம். நாங்கள் இனிமேலும்  இந்திய தமிழர்கள் என்று கூட தயாராக இல்லை.

காங்கிரஸ் கட்சி இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. 1983 ஆம் ஆண்டில் இருந்தே ஈழத்தமிழர்களுக்கு இரண்டகத்தை தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லையே. அப்போதெல்லாம் அதாவது 2009 பிப்ரவரி 23  ஆம் தேதி வரை காங்கிரசில் நீங்கள் சொன்னது போல "இனப்பற்றோ, மொழியுணர்வோ சமூக பிரஞ்ஞையோ சிறிதுமின்றி பதவி பல்லக்கில் பவனி வருவதற்காகவே அரசியல் நடத்தும் காங்கிரஸ்காரராக தானே இருந்தீர்கள். திடீர் என்று ஈழப்பற்று எங்கிருந்து வந்தது? இது குறித்து தமிழருவி மணியன் இப்படி எழுதி இருக்கிறாரே? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய சிந்தனையாளர் தோழர் வே.மதிமாறன் அவர்களிடத்தில் கேட்டேன். அவர் ஒற்றை வரியில் சொன்னார். " தமிழர்கள் உரிமை  போராட்டங்கள் குறித்து ஆதரிக்கவோ, எதிர்க்கவோ தமிழருவி மணியன் அவர்களுக்கு  சிறிதும் யோக்கிதை இல்லை; காங்கிரசில் இருக்கும் பிற்போக்கு கருத்து உடையவர்களை கூட விமர்சிக்க தகுதி அற்றவர். பச்சை சந்தர்ப்பவாதி" என்று கூறி முடித்து கொண்டார். தமிழீழத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ உங்களுக்கு தகுதி இருக்கிறதா? என்பதை சுய விமர்சனம் செய்து கொள்ளுங்கள். கடைசியாக " இன்று மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் அப்பழுக்கற்ற காந்திய போராட்டம் என்று இரண்டகம் செய்ய முனையாதீர்கள். ஏனெனில் எங்கள் அகராதியில் காந்தி என்றாலோ இரண்டகம் என்றுதான் பொருள்.

இன்று மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம்...
ஆதிக்கத்தை அதன் எதிரில் நின்று எதிர்த்த 
தந்தை பெரியாரின் போராட்டம்;
நடராசன் - தாளமுத்து அவர்கள் உயிர் தியாகம் செய்து 
ஊட்டிய விடுதலைப் போராட்டம் ..!

காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்;
காங்கிரசின் துரோகத்தை மன்னிக்கவும் மாட்டோம் ..!


நன்றி வணக்கம் !

- அங்கனூர் தமிழன் வேலு

திங்கள், 25 மார்ச், 2013

என்சாதி ..!


சாலையோர பூங்காவில் சிறிது நேரம் 
படித்துவிட்டு திரும்பி கொண்டிருந்தேன்
எதிரில் என் நண்பர் வந்தார்   

அவருக்கும் எனக்கும் ஆன நட்பு ஒரு 
வருடத்தை கடந்திருந்தது; தினமும் 
அவரோடு சிலவற்றை உரையாடுவதில் 
அலாதிப் பிரியம்; அதுபோலவே நேற்று இரவு
உரையாடிக் கொண்டிருந்தோம் - இத்தனை நாள்
கேட்காத ஒரு கேள்வியை கேட்டு விட்டார் !     

தம்பி, நீங்க என்ன சாதி என்று... 
அப்போது தான் பார்த்தேன் கையில் தவழ்ந்து 
கொண்டிருந்தது அண்ணலின் நூல் !
கோபம் வரவில்லை; சிரித்து கொண்டே
சொன்னேன் !

செல்வந்த பிராமிணர்களால் அப்பாவி
ஏழை பிராமிணர்கள் அடக்கப்படும் போது
நான் ஒரு பிராமிணராக இருக்க விரும்புகிறேன் !

ஆதிக்க வெறிப்பிடித்த பிராமணியத்தால்
இடைநிலை சாதியினர் நசுக்கப்படும் போது
நான் ஒரு தேவனாகவும், வன்னியனாகவும்
கவுண்டனாகவும் இருக்க விரும்புகிறேன் !

சாதி வெறிப்பிடித்த இடைநிலை சாதியினரால்
தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்படும்
போது பறையனாகவும், பள்ளனாகவும் இருக்க 
விரும்புகிறேன் !

சாதி மனோபாவம் கொண்ட மேட்டுக்குடி
பள்ளர்களும், பறையர்களும் அருந்ததியரை
அடக்கும் போது நான் ஒரு சக்கிலியாக இருக்க 
விரும்புகிறேன் !

அனைத்து சாதியினராலும் வெறுத்தொதுக்கும்
நரிக்குறவர்களை காணும் போது நான் ஒரு 
நரிக்குறவனாக இருக்க விரும்புகிறேன் !

நான் விரும்பும் சாதியில், 
என்னை சேர்த்து கொள்ள, எந்த சாதிக்கும்
விருப்பம் இல்லாத போது எனக்கு மட்டும்
எப்படி அந்த சாதி மீது விருப்பம் வரும்??
நான் சாதியற்றவன் ..!

அடக்கபடுபவர்களின் சாதியே 
என்சாதி ..! என்று கூறி பதிலுக்கு
காத்திராமல் நகர்ந்து கொண்டேன் ..!

- அங்கனூர் தமிழன் வேலு  

சனி, 23 மார்ச், 2013

ரஜினிகாந்தின் மனித நேயம் (?)


மிகப்பெரிய நடிகர் என்றும், சூப்பர் ஸ்டார் என்றும், பணம் வசதி இருந்தும் எளிமையாக வாழ்பவர் என்றும்  திரைப்பட பிரியர்கள் எல்லோராலும்  அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் உலகெங்கும் ரசிகர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையாகவே இருந்துவிட்டு போகட்டும். சமீபத்தில் ஜப்பானில் வந்த ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்து அது நாளிதழ்களில் எல்லாம் வெளிவந்தது. அது அப்படியே இருக்கட்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்துக்கு உடல்நிலை மோசமாகி அது சிறுநீரக அறுவைசிகிச்சை வரை சென்றது. அவர் உயிரோடு திரும்பி வருவாரா என்ற சந்தேக விவாதங்கள் எழுந்தன. அப்போது அவர் நலமுடன் வரவேண்டும் என்று துடித்தது,  அவருக்காக பிரார்த்தனை செய்தது அவரை வைத்து பணம் சம்பாதித்த இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ அல்லது அவரால் பயன்பெற்ற சக நடிகர்களோ அல்ல; அவ்வளவு ஏன் அவரை திருமணம் செய்து கொண்டு அவரோடு வாழ்ந்துவரும் அவரது மனைவியோ, அல்லது அவரது மகள்களோ, மருமகன்களோ அல்ல. உலகெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்கள் அல்ல. அவர் பிறந்த கன்னட மாநிலத்தில் இருந்துகூட குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரும் கவலை கொள்ளவில்லை. மாறாக அவர் நலமுடன் திரும்பி வரவேண்டும் மீண்டும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று விரும்பியது, துடித்தது எல்லாமே அவரை வாழவைத்து, வாழவைத்துக் கொண்டிருக்கும் என் அருமை தமிழர்களே. அங்க பிரதட்சணை செய்தார்கள், தேர் இழுத்தார்கள், அக்னி சட்டியை சுமந்தார்கள், தீ மிதித்தார்கள், யாகம் நடத்தினார்கள், மருத்துவமனை முன்பு தவம் கிடந்தார்கள், எல்லா வற்றுக்கும் மேலாக மண்சோறு தின்றார்கள். இவை அனைத்துமே ரஜினிகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காக அவரால் எந்த விதத்திலும் பயன் பெறாத என் அருமை தமிழர்கள் செய்த தியாகங்கள். இதை முட்டாள்தனம் என்றுகூட சொல்லலாம். ஒருவர் மீது அளவுகடந்த அன்பை வைக்கும் போது அவருக்காக எவ்வளவு பெரிய முட்டாள்தனத்தையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் பெரும்பாலான மனிதர்கள்.

ஒரு திரைப்படத்தில் தமிழர்களை பார்த்து வட இந்திய அதிகாரி ஒருவர் "செண்டிமெண்டல் இடியட்ஸ்" என்று சொல்வார். அதற்கு மற்றொரு நடிகர் திஸ் நாட் "செண்டிமெண்டல் இடியட்ஸ்" இங்க தொண்டர்களை ஏமாற்றிய தலைவர்கள் உண்டு. ஆனால் தலைவரை ஏமாற்றிய ஒரு தொண்டர்களும் கிடையாது. என்று சொல்வார். அது ரஜினிகாந்துக்கு முழுமையாக பொருந்துகிறது. தமிழர்களின் வாழ்வாதாரங்கள் முற்றாக நசுக்கப்படுகிறது. தமிழர்களின் வாழ்வாதாரங்கள் சீராக இருந்தால் தான் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் வாழ்க்கையே ஓடும் என்ற உண்மையை ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் உணர மறுக்கிறார்கள். சமீபத்தில் விஸ்வரூபம் திரைப்பட சிக்கலில் கமல்ஹாசன் "நான் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறேன்" என்று ஒற்றை வார்த்தையை தான் சொன்னார். அதற்காக துடித்த ரஜினிகாந்த் "கமல்ஹாசனை எனக்கு 40 ஆண்டுகளாகத் தெரியும். அவர் யாருடைய மனதையும் புண்படுத்தாதவர். அதனால் தான் முஸ்லிம் அமைப்பினர் பலருக்கு திரைப்படத்தை முன்னதாகவே திரையிட்டு காட்டியிருக்கிறார்.ரூ. 100 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் விஸ்வரூபம். இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்தால் கமல்ஹாசன் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது. தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்றவர் கமல்ஹாசன்.இத்திரைப்படம் தொடர்பாக இருதரப்பினரும் அமர்ந்து பேசி நல்லதொரு தீர்வு காண வேண்டும்." என்று கமலஹாசனின் மீதான தன் அன்பையும், தனி மனிதரின் தவிப்பையும் வெளிப்படுத்தினார். நண்பரின் துன்பத்தில் ரஜினிகாந்த் பங்கெடுத்தது மகிழ்ச்சி தான்.

நேற்று (22.03.2013) ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அதேவேளையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது. இந்த தண்டனையிலிருந்துஅவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதுவும் எந்த தவறும் இல்லை. சக மனிதன், அதோடு மட்டுமில்லாமல் சகநடிகர் என்ற அக்கரையில் ரஜினிகாந்த் இப்படி வேதனைப் பட்டிருப்பது எந்த விதத்திலும் தவறில்லை. இது முழுக்க, முழுக்க சரியே. ஆனால்...

கமலஹாசனுக்கு துடித்த ரஜினிகாந்தின் இதயம், சஞ்சய் தத் க்கு துடித்த ரஜினிகாந்தின் இதயம் அவரை வாழவைக்கும் தமிழர்களுக்காக துடிக்க மறுப்பதேன்? அப்படியானால் அவரின் துடிப்பு சரியானதா? வியாபார நோக்கமானதா? என்பதை அவர் நாட்டு மக்களுக்கு குறிப்பாக அவரது உயிரில் அக்கறை கொண்டுள்ள அவரது ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தியே ஆகவேண்டும்.

(1) 2009 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாத அரசின் இனப்படுகொலையில் ஒன்னரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது தெரியாத ஒன்றா?

(2) பால்மணம் மாறாத பச்சிளம் பிஞ்சு பாலச்சந்திரன் புகைப்படம் கண்டு உலகமே அதிர்ந்ததே. ரஜினிகாந்துக்கு தெரியாமல் போனது எப்படி?

(3) ரஜினிகாந்த் மீன் சாப்பிடுவார் என்று நினைக்கிறேன். அவர் சாப்பிடும் மீனுக்கு தன்னுடைய உயிரை பணயம் வைக்கும் தமிழக மீனவர்களின் அன்றாட இன்னல்கள் தெரியாமல் போனது எப்படி?

(4) ரஜினிகாந்த் போன்றவர்கள் குளிர்சாதன அறையில் சொகுசாக வாழ எம்மக்களின் உயிரில்  கூடங்குளம் ஒப்பந்தம் போட்ட மத்திய அரசின் துரோகம் ரஜினிகாந்துக்கு தெரியாமல் போனது எப்படி?

(5) தருமபுரியிலே எறிந்த 300 சேரிக்குடிசைகள் ரஜினிகாந்தின் கவனத்துக்கு செல்லாமலா இருந்திருக்கும்? அதில் எத்தனை தீவிர ரஜினி ரசிகர்களின் வீடாக இருக்கும் என்பதை உணாரமலா இருந்தார்?

(6) 23 ஆண்டுகளாக வாழ்வா? சாவா? என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டே செத்துக் கொண்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர்களின் விடுதலை குறித்து என்றைக்குமே தன் வேதனையை வெளிக்காட்டாத ரஜினிகாந்துக்கு உண்மையில் மனித நேயம் இருக்கிறதா?

எல்லாவற்றையும் விட்டுவிடுவோம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தில் தணலாய் கனன்று கொண்டிருக்க ரஜினிகாந்த் எங்கோ ஒரு குளிர்சாதன அறையில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தவர் திடீரென் கண்விழித்து சஞ்சய் தத் தை விடுவிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். இதில் என்ன வேடிக்கை என்றால் சஞ்சய் தத் தை தூக்கில் இடப் போவதில்லை; மாறாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டும் தான். எத்தனையோ சேரிகள் சிறைகளை விட கொடுமையாக இருக்கும் வேளையில், அந்த சேரியில் உழலும் தமிழன் தனக்கு கிடைக்கும் சொற்ப ஊதியத்தையும் ரஜினிகாந்த், விஜயகாந்த், கமலஹாசன் விஜய், அஜித் போன்றவர்களின் வயிறு நிரப்பி, தன் வயிறை பட்டினி போட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் அந்த நடிகர்கள் இவர்களுக்கு என்ன செய்தார்கள்... இவர்களுக்கு வாரி இறைக்க வேண்டாம், இவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழும் போது சக மனிதனாக கண்டிக்கவாது செய்யலாமே, இந்த மக்கள் நலமுடன் இருந்தால் தானே நாம் வயிறு பிழைக்க முடியும் என்ற சுயநலம் கூடவா இல்லாமல் போயிற்று?

சமீபத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் பார்த்தேன். "தலைவா கட்டளையிடுங்கள் காத்திருக்கிறோம்" என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அது. அப்போதும், இப்போதும் நினைக்கிறேன் மாணவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து இனத்தை காக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த தலைவர் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் இவரது கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கிறார்களே களத்தில் குதித்து இருக்க மாட்டார்களா என்ன? மண்சோறு தின்ற மானங்கெட்ட தமிழன்கள் தெருவில் இறங்கி போராடி இருக்கமாட்டார்களா? தீச்சட்டி ஏந்திய தன்மானமில்லா தமிழன்கள் தொடர் முழக்கம் செய்து இருக்கமாட்டார்களா? எதுவுமே நடக்கவில்லை, சிலம்பரசனுக்கு  இருக்கும் உணர்வு கூடவா? ரஜினிகாந்துக்கு இல்லாமல் போயிற்று? திரைப்படத்தில் நடிப்பதாக நினைத்து அவர் ஒருநாள் வந்திருந்தாள் அவரது ரசிகர்கள் வாழ்நாள் முழுக்க போராடி இருப்பார்களே; ஆதரவாக ஒரே ஒரு பக்க அறிக்கை கொடுக்க கூடவா நேரமில்லாமல் யாருக்கோ சே(வ்)வை  செய்து கொண்டிருந்தார்? தன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழர்கள் சாகும் போதுமா ரஜினிகாந்தின் மனிதநேயம் செத்துக்கிடந்தது? அதனால் தான் ரஜினிகாந்தின் மனிதநேயத்தை பார்த்து நான் வியக்கிறேன்... 

ஆனாலும் ரஜினிகாந்த் நிம்மதியாக வாழ்கிறார், வாழ்வார் மானங்கெட்ட அன்புள்ள ரஜினிகாந்தின்  ரசிகர்கள் இருக்கும் வரை...
ரஜினிகாந்த் ஆவலுடன் எதிர்பார்க்கும் கோச்ச்சடையான் படம் எப்படி ஓடுகிறது என்பதை பார்க்கத்தான் போகிறேன்...

- அங்கனூர் தமிழன் வேலு    

புதன், 20 மார்ச், 2013

தனி தமிழ்நாடே தமிழீழத்திற்கு தீர்வு ..!


தமிழ் ஈழத்திற்காக 30 ஆண்டுகாலம் தந்தை செல்வா தலைமையில் அறவழிப் போராட்டம், அதன் பிறகு தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் 30 ஆண்டுகாலம் ஆயுதப்போராட்டம் நடைபெற்று ஓய்ந்து இருக்கிறது. ஆய்த போராட்டம் ஓய்ந்து இருக்கிறதே ஒழிய எம்மக்களின் போராட்டத்திற்கான கொள்கையோ, எம்மக்களின் விடுதலை தாகமோ இன்னமும் ஓயவில்லை. விடுதலை என்ற சுவர்க்கத்தை அடையாமல் அந்த தாகம் ஓயப்போவதும் இல்லை. ஆரம்பத்தில் தமிழ் ஈழ சிக்கல் சிங்களபேரினவாத அரசுக்கும்  - தமிழர்களுக்கும் இடையேயான பிரச்சனையில் இருந்து, பின்பு சிங்கள பேரினவாத அரசு + இந்தியாவுக்குமான, தமிழர்களுக்குமான பிரச்சனையாக உருமாறி, இன்று உலக அரங்கில் வெகுமக்களின் விடுதலை போராட்டமாக பரிணாமம் பெற்று நிற்கிறது.

30 ஆண்டுகாலமாக தொடர்ந்து நடைபெற்ற ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்ததாக சிங்கள பேரினவாத அரசு அறிவித்தது. அந்த நாள் அவ்வளவு சுலபமாகவோ, சுகமாகவோ கடந்து செல்லவில்லை. உலகில் எவை எல்லாம் தடை செய்யப்பட்டனவோ அவை எல்லாம் அங்கெ பயன்படுத்தப்பட்டன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர். உலகில் தடைசெய்யப்பட்ட கொத்துக் கொண்டுகளும், ஷெல் தாக்குதலும் தொடர்ந்து எம்மக்கள் மீது வீசப்பட்டன. ஷெல் தாக்குதலால் மூச்சு திணறி இறந்தவர்களே அதிகம் என சொல்லப்படுகிறது. போருக்குப் பின்னும்  அங்கு அப்பாவி மக்கள் மீதான அரசபயங்கரவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திட்டமிட்ட இனக்கலப்பு, கலாசார சீரழிவு, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், அப்பாவி இளைஞர்களை விடுதலைப் புலிகள் என்று கடத்தி சென்று படுகொலை செய்தல், போன்ற அத்துனை மனித உரிமை மீறல்களும், ஒரு இனத்தை எப்படி வஞ்சிக்க கூடாதோ அப்படி வஞ்சித்து வருகிறது சிங்களப் பேரினவாத அரசு. உலக ஐ.நா அவையின் அறிக்கைப்படி போரில் 80,000 பேர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. அனால் உண்மையில் ஒன்னரை லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக நம்பத்தகுந்தோர் சொல்கிறார்கள். மே 18, முள்ளிவாய்க்கால் பேரவலம், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மனித அவலத்தின் சாட்சியமாக நிற்கிறது.. ஒரு இனம் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது.. உலகில் மனிதநேயம் செத்துபோய்விட்டது என்பதை உரத்த சொல்லி நிற்கிறது. அங்கு நடந்தது போர்க் குற்றமோ, மனிதஉரிமை மீறலோ அல்ல; அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இனம் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் அழித்தொழிக்கும் அடையாள அழிப்பு இனப்படுகொலை.சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரன் பிடித்து வைக்கப்பட்டு மூன்று அடி தூரத்தில் நின்று சுட்ட புகைப்படம் சேனல் -4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டது. அது உலகம் முழுவதிலும் உள்ள மனித நெஞ்சங்களை கொதித்தெழ செய்திருக்கிறது. இந்த நிலையில் போர் உச்சத்தில் இருந்தபோது, அப்பாவி பொதுமக்கள் சர்வசாதாரணமாக சாகடிக்கப்பட்டபோது வாய்மூடி மவுனியாக இருந்த உலகம், இன்று அது ஒரு இன்னப்படுகொலை என்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், மனித உரிமை மீறல் என்ற அடிப்படையிலாவது இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க இருக்கும் வேளையில் இடையிலே இந்தியா குறுக்கே நிற்கிறது. பல்வேறு உலகநாடுகள் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை உற்றுநோக்குவதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், இந்தியா வாய்மூடி மவுனியாக இருக்கிறது. இலங்கைக்கு போரின் போது கனரக ஆயதங்கள் உட்பட அத்துனை உதவிகளையும் செய்த இந்தியா ஈழத்தமிழர்களுக்கு உதவும் என்பதை தமிழர்களாகிய நம்மால் எப்படி நம்பமுடியும்? இரண்டே வழி ஒன்று இந்தியாவுக்கு மனமாற்றம் செய்து அதன் மூலம் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது;  இல்லையேல் இந்தியாவில் இருந்து வெளியேறி ஈழத்திற்கு நேரடி உதவி செய்வது என்ன செய்யப்போகிறோம்?

ஏன் இந்தியாவை நம்ப முடியாது?

இந்தியாவை ஏன் நம்பமுடியாது என்று நீங்கள் கேட்டால், எப்படி நம்பமுடியும் என்றுதான் நான் கேட்பேன். ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் அங்கமான தமிழக தமிழர்களும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதை கடந்த கால வரலாற்றின் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இதற்கு காரணம் என்னவென்று தெளிவு பெறுவது சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய மாநிலங்களிலே பி.ஜே.பி யால் வேர் கூட விட முடியாத மாநிலம் என்றால் அது தமிழகம் தான். அது போலவே காங்கிரசும் இங்கே வேரடி மண்ணோடு பிடிங்கி எறியப்பட்டுவிட்டது. திராவிட கட்சிகள் தான் காங்கிரசை மாற்றி மாற்றி தூக்கு சுமக்கிறார்கள். ஏன் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது? இந்தியாவின் கட்டுமானம் என்பது இந்து, இந்துத்துவம், ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. இந்தியாவிலே இந்துத்துவத்தை வேரறுப்போம் என்றதும், இந்தியை எதிர்த்ததும், இந்திய சுதந்திரத்தை எதிர்த்ததும் தமிழகமே. ஆகவே இந்துத்துவ அடிப்படையில் தான் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. அது காங்கிரசு ஆனாலும் சரி, பி.ஜே.பி. ஆனாலும் சரி. 

இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை 1974 மற்றும் 1976ம் ஆண்டில் இந்திய அரசு தனக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் இலங்கை அரசிடம் அனுமதி பெறவேண்டியதில்லை என்பது விதியாகும். இந்த விதியை மீறி இலங்கை அரசு தமிழக மீனவர்களை சுட்டு கொன்று வருகிறது. 1960ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தமிழகத்தின் அனுமதி இன்றியே தாரைவார்க்கப்பட்டதன் (sorce : Wikipedia) மூலம் அன்றிலிருந்து இன்றுவரை  தினம் தினம் தமிழக மீனவர்கள், சிங்கள கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். பல்லாயிரத்துக்கும் மேலானோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். காயப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு பின், காங்கிரஸ், பி.ஜே.பி இரண்டு கட்சிகளும் ஆட்சி புரிந்துள்ளன. அனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் நின்றபாடில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் இந்தியா இந்துத்துவ மனப்பான்மையோடு தான் செயல்படுகிறது என்பதற்கு ஆதாரமாக கேரளாவில் கொல்லம் ஆலப்புழா அருகே கடந்த மாதம் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக, கேரள மீனவர்கள் 2 பேரை இத்தாலி கப்பல் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அதற்கு இந்திய தம்முடைய கடும் கண்டனத்தை பதிவு செய்தத்தோடு, சம்பந்தப்பட்ட இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களையும் ஒப்படைக்கும்படி வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை கடற்படையினால் 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் இதுவரை இந்தியா வாய் திறக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கு ஆதரவாகவும், காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் செயல்படுகிற மத்திய அரசு தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளையாகவே பாவித்து வருகிறது. 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை, தம்மால் எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தி இறுதியாக இப்போது தான் அரசிதழிலே வெளியிட்டு இருக்கிறது. இது இந்தியாவின் தமிழர் விரோத போக்கேயன்றி வேறேதும் கிடையாது.

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா முதன்முதலில் தலையிட்டது 1983 ஆம் ஆண்டுதான். ஆனால் அதற்கு முன்பிருந்தே அதாவது தந்தை செல்வா காலத்திலே தமிழ் ஈழ கோரிக்கை வலுபெற்று இருந்ததை இந்திய அரசு கவனிக்காமல் இல்லை. அன்றைக்கெல்லாம் இலங்கை இந்தியாவின் விருப்பபடியே செயல்பட்டு கொண்டிருந்தமையால் அதை ஒரு பொருட்டாக இந்தியா மதிக்க வில்லை என்பது குறிப்பிட தக்கது. அதன் பிறகு 1977 க்கு பிறகு ஜெ.ஆர். ஜெயவர்த்தனே ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்தார். ஜப்பான், அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகளுடன் நட்புறவை ஜெ.ஆர். ஜெயவர்த்தனே ஏற்ப்படுத்திக் கொண்டார். இந்தியாவுக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டிய இலங்கை மேற்குலக நாடுகளுடன் உறவை ஏற்ப்படுத்திக் கொண்டதில் ஆத்திரமடைந்த இந்திராகாந்தி இலங்கையை மிரட்ட, ஈழ போராட்ட இயக்கங்களை பயபடுத்திக் கொண்டது என்பதும், இலங்கையை மிரட்ட போராட்டக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சியும், ஆயுதங்களும் வாரி, வாரி வழங்கியது என்பதுதான் உண்மை. அதன் பிறகு இந்தியாகாந்தி இறப்புக்கு பின் ராஜிவ்காந்தி இந்திய பிரதமாராக பதவி ஏற்றபின்னும் இலங்கையை மிரட்டுவது தொடர்ந்தது. இதை அறிந்து கொண்ட இலங்கை இந்தியாவோடு இணக்கமாக போக முடிவெடுத்தமையால் திடீரென்று போராட்டக்குழுக்களை ஆயுதங்களை மவுனிக்க சொன்னது. அதில் எல்லாக் குழுக்களும் ஆயுதங்களை மவுனித்தார்கள் விடுதலைப் புலிகளை தவிர. தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மட்டும் " நாங்கள் உங்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல; விடுதலைப் புலிகள். எங்களின் விடுதலைக்காகவே நாங்கள் ஆயுதம் சுமக்கிறோம். என்பதை பிரகடனப் படுத்தினார். இதில் ஆத்திரமடைந்த இந்தியா மீண்டும் விடுதலைப் புலிகளை மிரட்ட அமைதிப்படை என்ற பேரில் ஒரு அரக்கப்படையை வன்னிக்கு அனுப்பியது. இப்படி இந்தியா தன் நலன் சார்ந்தே ஈழ விவகாரத்தில் தலையிட்டது என்பதும், ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற உள்ளன்போடு அது தலையிடவில்லை என்பதும் வரலாற்று உண்மை. இலங்கை இந்தியாவிற்கு நட்பு நாடாக தன்னை காட்டிக் கொண்ட பின்பு இந்தியாவின் நிலைப்பாடு தமிழ் ஈழமோ, ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரமோ அல்ல. விடுதலைப் புலிகள் அழிப்பு ஒன்றே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. காரணம் விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் ஈழக் கோரிக்கையில் கிஞ்சிற்றும் பின்வாங்காமல் நின்றார்கள். இன்றைக்கு உலக அரங்கில் ஈழத்தமிழர்களுக்கு நேரடி எதிரியாக இருக்கும் இந்தியா, ஈழத்தமிழர்களுக்கு நாங்கள் தான் பிரிதிநிதி என்ற போலி பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிராக புறப்படும் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், அதோடு மட்டுமில்லாமல் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான், அதற்கு சுயாதினமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்றும் தமிழர்கள் குறிப்பாக மாணவர்கள் போராடிவரும் நிலையில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளை மிரட்டும் வண்ணம் இலங்கையை பாராட்டி அறிக்கை ஒன்றை இந்தியா சமர்பித்து உள்ளது.  இந்தியாவை நம்பமுடியாது என்று தீர்க்கமாக நாம் வாதிடுகிறபோது, காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தால் தான் ஈழத்தமிழர்களுக்கு நன்மை என்று சிலர் பிரச்சாரம் செய்கிற போது, காங்கிரசுக்கு மாற்றாக கருதும் பி.ஜே.பி.யின் நிலைப்பாட்டையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. பி.ஜே.பி. யின் பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத் " ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கையை பி.ஜே.பி. ஏற்றுக் கொள்ளாது என்று வெளிப்படையாக அறிவித்து உள்ளார். பி.ஜே.பி. யின் நிலைப்பாடு இதுதான். தனி ஈழம் என்ற கோரிக்கையை கூட அவர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக சிங்களர்களோடு நல்லிணக்கமாக வாழ வழி செய்வார்களாம். "அடித்த கைகள் அணைக்காது" என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லை பி.ஜே.பி.க்கு. ஈழத்தமிழர்களின் லட்சியத்திற்கு காங்கிரசோ அல்லது பி.ஜே.பி.யோ சிறிதும் உதவ மாட்டார்கள்.ஆகவே வரலாற்று ரீதியாக பார்த்தாலும், எதார்த்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இந்தியாவை எந்த விதத்திலும் நம்ப முடியாது.

என்ன தீர்வு? :

ஈழத்தமிழர்களுக்கு நாங்கள் மட்டும் தான் உதவுகிறோம்; நாங்கள் தான் அவர்களின் பிரிதிநிதி என்ற போலி பாஸ்போர்ட் மூலம் உலகநாடுகளை மிரட்டிவரும் இந்தியா, ஐ.நா. அவையிலோ அல்லது இன்னபிற மனித உரிமைகள் அவையிலோ இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வரும்போதெல்லாம் அதை நீர்த்துப் போக வைப்பதோடு, இந்தியாவின் நிலைப்பாட்டை அல்லது ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் முடிவை உலக நாடுகள் எதிர்பார்க்கும் அளவுக்கு ஒரு சதிவலையை பின்னி வைத்திருக்கிறது. அதனாலே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை நடந்து ஆறு ஆண்டுகள் ஆனபின்னும் அதை இனப்படுகொலை என்றுகூட உலகநாடுகள் சொல்ல தயங்குகின்றன. ஈழத்தமிழர்களுக்கு நாங்கள் தான் உதவுகிறோம் என்று உலகநாடுகளுக்கு சொல்ல அவ்வப்போது 1000 கோடி என்றும், 500 கோடி என்றும் ராஜபக்சேவுக்கு தானம் செய்கிறார்கள். அந்த பணத்தில் இருந்து ஒத்தப் பைசாக்கூட ஈழத்தமிழகளுக்காக செலவழிக்கப்படவில்லை என்று மனித உரிமை ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் சொல்கிறார்கள்.இலங்கையை கண்டிக்க ஏதாவது ஒரு நாடு முன்வருமானால், இலங்கைக்கு முன் இந்தியா பதறுகிறது; தடுக்கிறது. அது காங்கிரஸ் ஆனாலும் சரி, பி.ஜே.பி. ஆனாலும் சரி.

தமிழக தமிழர்களாகிய நம்முடைய உணர்வையும், போராட்டங்களையும் உலகநாடுகளின் கவனத்திற்கு செல்லாமல் இந்திய தேசியம் தடுக்கிறது. இந்தியாவின் அங்கமாக இருந்து தமிழக தமிழர்களாகிய நம்மால் தன்னிச்சையாக என்ன செய்ய முடியும்? இங்கிருந்து கொண்டு பிரணாப் முகர்ஜியை கண்டித்துக்கொண்டே, சோனியாகாந்தியை கண்டித்துக்கொண்டே, பி.ஜே.பி.யை கண்டித்துக்கொண்டே மீண்டும் அவர்களிடம் தான் கோரிக்கை தான் வைக்க முடியும். அதற்கு காரணம் நாம் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்பது தான். இதுவரை உலகில் ஐ.நா. அவையியின்  பொது வாக்கெடுப்பு மூலம் தனி நாடாக பிரிந்திருக்கும் நாடுகளுக்கு ஆதரவாக ஏதாவது ஒரு நாடோ அல்லது பல நாடுகளோ இருந்திருக்கின்றன. அந்த அடிப்படையில் உலகில் எந்த ஒரு நாடும் இன்றைக்கு தமிழ் ஈழத்தை ஆதரிக்க தயாராக இல்லை. அங்கே நடந்தது மிகப்பெரிய இனப்படுகொலை என்று சொல்ல தயாராக இல்லை.காரணம் இந்தியாவின் தலையீடு. அடுத்ததாக ஈழத்தமிழர் விவகாரத்தில் உலகநாடுகள் ஏன் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்பார்க்கிறார்கள் என்றால் ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் தான் தமிழக தமிழர்களாகிய நாம். தமிழக தமிழர்களாகிய நாம் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதாலே. இந்தியாவின் அங்கமாக இருக்கும் நம்முடைய போராட்டங்களும், கோரிக்கைகளும் இயல்பாகவே இந்தியாவை நோக்கித்தான் இருக்குமே ஒழிய உலகநாடுகளை நோக்கி அமையாது. இனியும் இந்தியா மனம் மாறும் என்பதில் எவ்வித உத்திரவாதமும் இல்லை; அப்படி இந்தியா மனம் மாறும் என்று நம்புகிறவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்; இந்தியா  மனம் மாறும் என்பது செத்தப்பினம் உயிரோடு எழுந்து வரும் என்பதற்கு சமம் . ஆகவே என்னருமை தமிழ் உணர்வாளர்களே ஈழத்தமிழர்களுக்கு உள்ளன்போடு ஆதரவுக்கரம் நீட்டுபவர்கள் தமிழக தமிழர்களாகிய நாம் தான்; இன்றைக்கு மிச்சம் இருக்கும் ஈழத்தமிழர்கள் நம்புவதும் தமிழக தமிழர்களாகிய நம்மைத்தானே ஒழிய இந்தியாவை அல்ல; ஆனால் இதே தமிழக தமிழர்களாகிய நாம் எம்மக்களை காப்பாற்றுங்கள் என்று டெல்லியிடம் பிச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அங்கமாக இருந்துகொண்டே, இலங்கையோடு சேர்த்து இந்தியாவையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும் என்ற நம்முடைய கோரிக்கை; என்னையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்து என்பதற்கு சமம்; முதலில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையென்றால் நம்முடைய  முழக்கம், வெற்றுமுழக்கமாகவே வடிவு பெரும் . அது எந்த விதத்திலும் ஈழத்தமிழர்களுக்கு விடியலை தராது. தமிழ்நாடு இந்தியாவின் அங்கமாக இருக்கும் வரை, இந்தியாவின் தலையீடு அல்லது ஆதரவு இல்லாமல் தனி தமிழ் ஈழத்திற்கோ ஈழத்தமிழர்களின் வாழ்வாரத்திற்கோ சாத்தியமில்லை; அதேவேளையில்இந்தியாவை இனி எந்த விதத்திலும் நம்ப முடியாது; சொந்த நாட்டு மாக்களில் பெரும்பான்மை மக்களை சாதி ரீதியாக அடிமையாக வைத்திருக்கும் இந்தியா, ஈழத்தமிழர்களுக்கு உதவும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை; பல்லாயிரம் ஆண்டுகளாக நம்பி, நம்பி ஏமாற்றம் மட்டுமே மிச்சம் ! ஈழத்தமிழர்களுக்கு தனி தமிழீழம் ஒன்றே ஒரே தீர்வு; தனி தமிழ்நாடே தமிழ் ஈழத்திற்கு ஒரே தீர்வு ..! அதுதான் தமிழக தமிழர்களாகிய நம்முடைய வாழ்வாதாரத்திற்கும் நல்லது...

- அங்கனூர் தமிழன் வேலு

வெள்ளி, 15 மார்ச், 2013

மதிப்பிற்குரிய இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களே !

மதிப்பிற்குரிய இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களே ! வணக்கம்...

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்; அதுவே எனது விருப்பமும் கூட. இந்த வார "தமிழக அரசியல்" இதழில் தாங்கள் எழுதி இருந்த கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. பொருள் ஈட்டி தரும் அளவுக்கு நல்ல அருமையான கட்டுரை அது. நல்ல உணர்வுள்ள (?) இயக்குனர் அல்லவா... அதனால் நீங்கள் நலிந்துவிடக்கூடாது ஆகவே பொருள் ஈட்டித்தான் ஆகவேண்டும். அதற்காக முதலில் என் வாழ்த்துக்கள். "தமிழக அரசியல் இதழ் தன்னுடைய இதழில் கலைஞரை திட்டுவதற்கே எப்பொழுதும் 3 பக்கங்களை ஒதுக்கும், அந்த பக்கங்களை நிரப்ப உங்களுக்கு முன் புலவர் புலமைபித்தன் இருந்தார். தற்போது அந்த இடத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். உங்கள் புலம்பல்களால் கலைஞர் மீதான மக்களின் மதிப்பு கூடிக் கொண்டே வருவதை கண்கூடாக காண்கிறேன். இன்றைக்கு தமிழக அரசியலில் கலைஞர் எவ்வளவு தவிர்க்க முடியாத ஆளுமை என்பதை உங்கள் புலம்பல்களும், எழுத்தக்களும் நிரூபிக்கின்றன. தமிழகத்தில் அரசியல் செய்யவேண்டுமானால் ஒன்று கலைஞரை ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் திட்டவேண்டும். எது எப்படியே கலைஞரை  நீங்கள் அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். கலைஞரை தாண்டி அரசியல் செய்ய எவனுக்கும் துப்பில்லை. என் காதுபடவே இருவர் பேசிக்கொண்டார்கள் அதாவது " டெசோ பொது வேலைநிறுத்த சுவரொட்டியை பார்த்தவர்களில் ஒருவர் சொன்னார் எல்லாம் முடிந்த பிறகு இப்போது ஏன் இவர் இப்படி நடிக்கிறார் என்றார். மற்றொருவர் சொன்னார் " டேய் மடையன்களா கலைஞர் தவறு செய்துவிட்டார் என்பதற்காகத்தான் அவரை ஆட்சியில் இருந்து தூக்கினோம்; குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவர் பதவிகூட கிடைக்கவில்லை, அப்படி இருக்க திரும்ப திரும்ப அவரையே திட்டுவது உங்கள் கையாலாகா தனம் தானே" அவர் செய்யாததை நீங்கள் செய்யுங்களேன் என்றார். எவ்வளவு பெரிய உண்மை அது. இதுதான் எதார்த்தம். இன்றைய மக்கள் மனதில் உள்ள எதார்த்தமான புரிதலும் இதுதான். சரி கலைஞருக்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கம் அல்ல; எங்கள் மீதான விமர்சனத்திற்கு பதில் சொல்லவே இந்த கடிதம். அதற்கு முன் சில கேள்விகள்...


மேடைப் பேச்சாளர்களில் முதல்தர பேச்சாளர், இரண்டாம் தர பேச்சாளர், மூன்றாம் தர பேச்சாளர், நான்காம் தர பேச்சாளர் என்ற வகைப்பாடு உண்டு. இது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். அதில் நீங்கள் மூன்றாம் தர எழுத்தாளரா? இல்லை நான்காம் தர எழுத்தாளரா? என்பது தான் எனக்குண்டான சந்தேகம். நிச்சயமாக நீங்கள் முதல்தர எழுத்தாளராகவோ  இரண்டாம் தர எழுத்தாளராகவோ இருக்க முடியாது. சில மாதங்களாக நீங்கள் "தமிழக அரசியல்" இதழில் தொடர் எழுதி வருகிறீர்கள். அதில் கலைஞரை திட்டுவதை தவிர வேறு ஈழத்துயருக்கு தீர்வாக எதையாவது எழுதி இருக்கிறீர்களா? என்பதை உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். தமிழ் ஈழம் மட்டும்  தான் உங்கள் நோக்கமாக இருக்குமானால் அதற்கான தீர்வு என்ன? இன்று கேள்விக்குள்ளாகி நிற்கும் தமிழ் ஈழத்தை அடைய நாம் என்ன செய்யவேண்டும்? என்பதை சொல்லி இருக்கிறீர்களா? அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக ஈழப்போரில் எல்லாவற்றையும் இழந்து பிச்சைக்காரர்களை விட கேவலமாக நிற்கும் நம் மக்களையாவது கவனத்தில் கொண்டு அவர்களுக்கான தற்காலிக வாழ்வாரத்திற்கு வழி என்ன என்பதை எழுதி இருக்கிறீர்களா? தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் தம் லட்சியத்திற்கே முழு நேரத்தையும் செலவிட்டார். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் விமர்சனத்திற்கு பதில் சொல்கிறேன்... 

1983 ஆம் ஆண்டு திருமாவளவன் என்ற ஒற்றை மனிதராக ( இந்த வார்த்தையை கவனமாக படியுங்கள், அதாவது பொய் வழக்கில் உள்ளே செல்ல ஆட்கள் இருக்கிறார்கள், தடியடி வாங்க தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றில்லாமல்) தொடங்கிய ஈழ ஆதரவு போராட்டம் இன்று தவிர்க்க முடியாத பெரிய இயக்கமாக உருவாகிய பின்பும் ஓயவில்லை; ஓயப்போவதும் இல்லை. திருமாவளவனுக்கோ, அல்லது அவரது தம்பிகளுக்கோ ஈழத்தை ஆதரிக்க என்ன அவசியம்? இல்லை அதற்கேது நேரம்? சாதியின் கோரப்பிடியில் நித்தமும் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் ஏன் ஈழத்தை ஆதரிக்க வேண்டும்? எளிமையான பதில் " அடிபட்டவனுக்குத்தான் அடியின் வலி புரியும்" 2 ஆயிரம் ஆண்டுகளாக வாங்கிய அடி, அவமதிப்பு, இழிசொல் இந்த வேதனைகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறோம். அந்த வலிகளை இன்னொருவர், அதுவும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும் நிகழ்கிறதே அதை தடுக்க நம்மால் என்ன செய்யமுடியும்? என்ற ஆதங்கத்தில் தான் ஆதரிக்கிறோம். அடக்குமுறையை எதிர்க்கவேண்டும்; ஆதிக்கத்தை வேரறுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அந்த அடிப்படையில் தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறோம்; விடுதலைப் புலிகளை கொண்டாடுகிறோம். 

"இனப்படுகொலை முடியும்வரை தமிழகம் பொங்கியெழுந்துவிடாதபடி பார்த்துக்கொண்ட கருணாநிதிக்கு திருமா பினாமி என்று சொல்கிறீர்களே " சமீபத்தில் தருமபுரியில் 300 குடிசைகளை தமிழர்களே கொள்ளையடித்துவிட்டு கொடுத்தினார்களே; அப்போது அது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. திருமாவளவன் போராடினாரே, பல்வேறு இயக்கங்களும் போராடினார்களே. சட்டக்கலூரி மாணவர்களும் போராடினார்களே, இசுலாமியர்கள் கூட களத்தில் குதித்தார்கள். அந்த துயரம், அந்த கொந்தளிப்பு தமிழர்களிடம் பரவிவிடாமல் தடுத்த காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் நீங்களும், தமிழ்தேசிய போராளிகளாக நீங்கள் நம்பும் புடுங்கிகளும் பினாமிகளாக இருந்தீர்களா? இல்லை எங்கே படுத்து உறங்கினீர்கள்? யாருக்கு சேவை செய்து கொண்டிருந்தீர்கள்? யாருக்கு பல்லக்கு தூக்கினீர்கள்?" என்று என்னாலும் கேட்க முடியும். நாகரிகம் கருதி கேட்காமல் விடுகிறேன். முதலில் தமிழர்கள் என்றால் யார்? தலித்துகள் தமிழர்கள் இல்லையா? என்பதை சொல்லிவிட்டு திருமாவை விமர்சிக்கவும். ஈழத்தமிழர்களின் நிலைமை நமக்கெல்லாம் பெரும் பிரச்சனை தான்; அதற்காக போராடத்தான் வேண்டும். ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனை மட்டும் தான் தமிழர்களின் ஒரே பிரச்சனை அல்ல என்பதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 300 குடிசைகளை கொளுத்திவிட்டு இன்று ஊர் ஊராய் கும்மாளம் அடிக்கும் ராமதாஸ், 2009 வரை மத்திய அமைச்சரைவையில் பங்கெடுத்து அத்துனை அதிகாரங்களையும் சுவைத்து விட்டு வெளியேறிய ராமதாஸ், உங்களுக்கு நண்பராகி விட்டார். ஆனால் அப்படிப்பட்ட துயரத்தில் தம் மக்கள் தவிக்கும் போதும் ஈழத்தமிழர்களுக்காக போராடும் திருமாவளவன் துரோகி ஆகிவிட்டாரா?

அடுத்தபடியாக, கலைஞருக்கு அபார நினைவு சக்தி என்று சொல்வார்கள்; உங்களுக்கோ அபார மறதி சக்தியோ? ஈழம் என்று நீங்கள் பேச துவங்கும் முன்னே 2009ஐ தாண்டி பேசமாட்டேன்  என்று யாருக்காவது எழுதி கொடுத்திருக்கிறீர்களா என்ன? புலிகளின் தளபதி கிட்டு மரணத்தின் பொது அவருக்கு இரங்கல் தெரிவித்த குற்றத்திற்காக பழ.நெடுமாறன், சுப.வீ, புலமைபித்தன் போன்றோரை பொடாவில் கைது செய்தது யார்? விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்டு கோவை ராமகிருஷ்ணன், ஆறுச்சாமி ஆகியோரை  பொடாவில் கைது செய்தது யார்? பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறி அவர்களை தடாக் கைதிகளாக்கியது யார்? எல்லாவற்றிற்கும் மேலாக பழ.நெடுமாறனை 18 மாதம் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் வைத்தது யார்? வைகோவை 10 மாதம் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது யார்? திருமாவை கலைஞரின் பினாமி என்று சொல்கிறீர்களே, திருமாவை விட யார் கலைஞருக்கு நெருக்கடியை கொடுத்தது? உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம்.

(1) அ.தி.மு.க. அணியில் இருக்கிற கம்யுனிஸ்ட் கட்சியோடு, அ.தி.மு.க. அணியில் இருக்கிற ம.தி.மு.க வோடு, அ.தி.மு.க. அணியில் சேர இருந்த பா.ம.க. வோடு, அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு அளித்து வந்த பழ.நெடுமாறனோடு, அ.தி.மு.க. வுக்கு எல்லா வேலைகளையும் செய்து வந்த எம். நடராசனோடு எதைப் பற்றியும் கவலைப்படாமல், கூட்டணியைப் பற்றி கவலைப் படாமல், அரசியல் ஆதாயத்தை பற்றி கவலைப் படாமல், தேர்தலைப் பற்றி கவலைப் படாமல் ஆறு மாதம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் கைகோர்த்து களப்பணியாற்றிய திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் துரோகி ஆகிவிட்டாரா?  எதிர்க் கூட்டணியில் உள்ளவர்களை நேருக்கு நேர் பார்ப்பதற்கே பயப்படுவார்கள்; ஆனால் திருமா அப்படி பயப்படவில்லையே.

(2) ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே, ஆளும் கட்சிக்கு நெருக்கடியை கொடுப்போம், ஆளும் கட்சியை எதிர்த்து களமாடுவோம் வாருங்கள் இணைந்து போராடுவோம், சேர்ந்து போராடுவோம் என்று கத்தி கதறி பார்த்து விட்டு தானே மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்தார்.அங்கு நீங்கள் தமிழ்தேசிய போராளிகளாக எண்ணும் எந்த புடுங்கிகளும் வரவில்லையே. அந்த போராட்டத்தில் 360 சிறுத்தைகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். இன்னமும் 36 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே இருக்கிறார்கள்... ஏன் அங்கு வந்து ஆதரவை பதிவு செய்தால் என்ன? அதை பயன்படுத்தி தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து இருக்கலாமே? அந்த மேடைக்கு வந்தால் ஜெயலலிதா உங்களை அரசியலை விட்டே விரட்டிவிடுவாரா? இல்லை உங்கள் சொத்தை எல்லாம் பிடுங்கி கொள்வாரா? என்று அந்த புடுங்கிகளிடம் கேட்டு விட்டு இங்கே வாருங்கள்.

(3) புலிகளால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்ன சொன்னவர் , பிரபாகரனை கைது பண்ணிவந்து இந்தியாவில் தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவர்,  போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவர், அய்யா நெடுமாறனை 18 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவர், அண்ணன் வைகோவை 10 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவர் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று தீர்மானம் நிரவேற்றியதாலே, கால்பந்து வீரர்களை விரட்டியதாலே தியாகி ஆகிவிட்டாரா? இல்லை இது போன்ற தீர்மானங்கள் கலைஞர் ஆட்சியிலும் நிறைவேற்றப்பட்டன என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். என்ன ஆகிவிட்டது? உடனே நீங்கள் கேட்கலாம் மத்தியில் அவருக்கு ஆளுமை இருந்தது, மத்திய அரசையும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வைத்திருக்கலாமே என்று. அப்படி சொல்லி அதற்கு மத்திய அரசு நிறைவேற்றாமல் இருக்கும்பட்சத்தில் கலைஞர் வெளியேறி இருந்தால் என்ன ஆகி இருக்கும் இதோ அம்மையாரின் அறிவிப்பு...." கம்யுனிஸ்ட் கட்சியை கூட்டணியில் வைத்துக் கொண்டே, வைகோவை கூட்டணியில் வைத்துக் கொண்டே, பழ நெடுமாறனோடு நட்பு பாராட்டிக் கொண்டே, காங்கிரசை விட்டு தி.மு.க விலகினால் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்தார் அம்மையார். காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தாரே. Mr.புகழேந்தி தங்கராஜ் இது உங்களுக்கு உடன்பாடா?

(4) தி .மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் என்றைக்கும் சிறுத்தைகள் வாய்மூடிக் கிடைக்கவில்லை, தொடர்வண்டி மறியல், சாலை மறியல், சாகும்வரை உண்ணாவிரதம், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, மாநாடு என்று தினம் ஒரு போராட்டத்தை முன்னெடுத்து கொண்டுதான் இருந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் (அதாவது 2006 - 2011) நீங்கள் நம்பும் தமிழ்தேசியவாதிகளின் போராட்டங்களை பட்டயலிட தயாரா?  

புதிய வரலாறு வேண்டாம் பழைய வரலாறு தான் வேண்டும் என்றால் இதோ....

1983 ஆம் ஆண்டு பிரபாகரன் தமிழக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது மாணவர் படையை கூட்டிக் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட சொன்னது யார்?

1983 ஆம் ஈழ விடுதலைக்கு ஆதரவாக மாணவர் போராட்டம்... விடுதலை புலி கையெழுத்து ஏடு நடத்தியது யார்?

எண்பதுகளின் நடுவில் ஆண்டு சரியாக நினைவில் இல்லை.. அண்ணன் வைகோவை வைத்து பச்சையப்பன் கல்லூரியில் "இந்திய அரசின் கொலைக் குற்றம்" என்ற கருத்தரங்கை நடத்தியது யார்? பின்பு அது கலைஞரின் அறிவுறுத்தலால் "குற்றவாளிக் கூண்டில் இந்திய அரசு" என்று பெயர் மாற்றப் பட்டது.... 

தமிழ் தேசியம் பேசினாலும் நெடுமாறனும் வைகோவும் கையில் எடுக்க அஞ்சிய பிரபாகரன் படத்தை இன்று சேரித்தமிழனும் துணிந்து கையில் எடுப்பதற்கு காரணம் யார்?

இதுவெல்லாம் சரி... ஏன் கலைஞர் அணிக்கு திருமா சென்றார் என்றால் பதில் இதோ...

அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஈழத்தை ஆதரித்தது, அதன் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. என்றைக்கும் மறந்து கூட ஈழத்தை ஆதரித்தது கிடையாது. அதோடு மட்டுமல்ல மக்கள் சாகடிக்கப் படும்போதும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் அறிக்கை. போரில் பொது மக்கள் சாவது சகஜம் என்று. அதையும் சகித்து கூட்டணி வைக்கலாம். ஆனால் "டெக்கான் கரோனிக்கல்" பத்திரிக்கையில் ஜெயலலிதா பேட்டிக் கொடுக்கிறார். விடுதலை சிறுத்தைகள் உங்கள் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா என்று நிருபர் கேள்வி கேட்கிறார் அதற்க்கு ஜெயலலிதா வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு எபபடி கூட்டணி சேர்வது? வைகோவை போல அவரது காலடியில் விழவா முடியும்?

எங்களின் வலியும், வரலாறும் பெரியது. எதோ உளறவேண்டும், யாரையோ திட்டவேண்டும் என்று நினைத்தால் சம்மந்தபட்டவரை நேரடியாக பேசலாம். சிறுத்தைகளை சீண்டினால் பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் Mr.புகழேந்தி தங்கராஜ்.

ஒரே ஒரு சின்ன உதாரணம் அய்யா....

ஒரு ஊருல ஒரு குடிகாரன் இருந்தான். அவன் ஊருல இருந்த எல்லோரையும் ஏக வசனத்துக்கும் ஒருமையில் பேசுவதும், ஏசுவதுமாய் இருப்பான். ஆனாலும் யாரும் அவனை எதிர்த்தோ, அவனுக்கு நிகராயோ பேசுவதில்லையாம். அதற்காக அந்த குடிகாரன் சொல்வது எல்லாம் உண்மையாகி விடாது. அவனைப் போல மற்றவர்கள் இழிவாக இழிவான நிலைக்கு செல்ல தயாராக இல்லை. இதுதான் உண்மை.

அப்படித்தான் இன்றைக்கு உங்களுடைய நிலையும். 

உங்கள் நோக்கம் இழி அரசியல்; எங்களின் நோக்கம் இன விடுதலை !!!

- தமிழன் வேலு                

    

சனி, 9 மார்ச், 2013

குற்றங்கள் குறைய மரணதண்டனை தீர்வல்ல


கூடு இயக்கம் நடத்திய மடியட்டும் மரண தண்டனை 

பொதுக்கூட்டத்தில் நான் பேசியது :-

* என் கண்ணை குத்தியவனுக்கு தண்டனையாக அவனது கண்ணைத்தான் குத்த வேண்டும் என்றால் அதை நானேசெய்து விடுவேனே? அதற்கு ஏன் அரசும்? சட்டமும்? நீதிமன்றமும்? 



* உலகில் பல்வேறு நாடுகள் மரணதண்டனையைமறு பரிசீலனை செய்கிறார்கள், ஆனால் இது காந்தி பூமிஎன்றும், காந்தியின் அஹிம்சா தான் இந்தியாவுக்கு பெருமை என்றும் சொல்கிற இந்திய அரசு மரணதண்டனை முறையை பின்பற்றலாமா? அப்படியானால் காந்தியின் அஹிம்சாவும் இப்படித்தான் மக்களை இம்சிக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

* காந்தி மரணதண்டனையை எதிர்த்ததாக சொல்கிறார்கள்.ஆனால் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற மாவீரர்களை தூக்கில் இடுவதற்கு முன்னர் காந்தியிடம் நிருபர்கள் "பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் 
போன்றவர்களின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையை குறைக்கப்படுமா? என்ற கேள்வி கேட்கிறார்கள் " அப்போது காந்தி இது பற்றி என்னிடம் கேட்காமல் இருப்பதே மேல் என்றும், நான் இது பற்றி பேச விரும்பவில்லை என்றும் கூறி இருக்கிறார். மேலும் "அவர்கள் வாழ விரும்பவில்லை" என்று அவர்கள் கூறியதாக கூறி இருக்கிறார். இதன் மூலம் மரணதண்டனைக்கு காந்தியும் உடைந்தையாக இருந்திருக்கிறார். 

* மரண தண்டனைக்கு தூக்கு கயிற்றை பயன்படுத்துகிறார்கள். அந்த தூக்கு கயிற்றின் முடிச்சு தான் பார்ப்பனியம், காந்தியம், இந்தியம். குற்றம் இழைத்ததாக கூறி நீதிமன்றம் கொடுக்கும் தண்டனைகளை மட்டும் மரணதண்டனையாக கருதவில்லை; சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் உண்டாகும் கலவரத்தில் அப்பாவி மக்கள் சாகடிக்கப்படுவதும், அவர்கள் வாழ்வாதாரம் சீரழிக்கப்படுவதும் மரணதண்டனை தான். இதை தடுக்க அரசுக்கு துப்பில்லை.

* கடந்த 18 ஆண்டுகளில் இதுவரை இந்தியாவில் 4 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். அவர்கள், 1 சீக்கியர், 2 இசுலாமியர்கள், 1 தமிழர், போதாக்குறைக்கு இப்போது 7 தமிழர்களை தூக்கிலிட துடிக்கிறார்கள். இது இந்தியாவின் இந்துத்துவ மனப்பான்மையை காட்டுகிறது. சீக்கியர்களும் இந்துத்துவத்தை எதிர்த்தார்கள், இசுலாமியர்களும் இந்துத்துவத்தை எதிர்த்தார்கள், தமிழர்களும் இந்துத்துவத்தை எதிர்த்தார்கள். இந்தியாவிலே இந்துத்துவத்தையும், இந்தியாவையும் இந்தி மொழியையும் கடுமையாக எதிர்த்தவர்கள் தமிழர்கள் அதனால் தான் 7 தமிழர்களை தூக்கிலிட துடிக்கிறார்கள். 

* இப்படியே இந்துத்துவ மனப்பான்மையோடு மரணதண்டனையை இந்தியா நிறைவேற்றுமானால் இந்தியா துண்டு துண்டாய் உடையும் என்பதை எச்சரிக்கிறேன். 

* குற்றங்கள் குறைய மரணதண்டனை தீர்வல்ல. ஏற்றத்தாழ்வுகளை களைந்தாலே குற்றங்கள் குறையும். ஏற்றத்தாழ்வுகளை சாதி, மதங்களை களைய வேண்டும்.

என்ன "மசுருக்குடா"... உங்களுக்கு கோபம் வரவேண்டும்?

ஒரே தேசத்தில் பிறந்திருந்தாலும்,
அருகருகே வாழ்ந்து வந்தாலும் நமக்குள்ளான 
நட்பு அவ்வளவு சுகமானதாக இருக்கவில்லை ! 

சுகமாக இல்லை என்றபோதும் வலியின் 
வேதனையை அது என்றைக்கும் மறைத்ததில்லை; 
அந்த பிளவுக்கும், வலி நிறைந்த வாழ்வுக்குமான 
காரணத்தை எண்ணி என்றைக்காவது ஒரு கணம் 
வருந்தியதுண்டா? 

நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களாய், ஊருக்கு
ஓரத்தில் சேரியில் இருக்கும் காட்சி என்றைக்காவது
உங்கள் மனசாட்சியை உறுத்தியிருக்கிறதா?

எம் பாட்டன்கள், தீண்டப்படாதவர்கள் என்று
உங்களை போன்றோராலே இழிக்கப்பட்டனர்;
அதை பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள்;
அதனால் உங்கள் நெஞ்சங்களில் கொஞ்சமாவது
சலனம் உண்டாகி இருக்கிறதா?

எம் தகப்பன்களுக்கு கசையடி கொடுத்த
உங்கள் தகப்பன்களை மனதிற்குள்ளாவது
எதிர்த்து பேசியிருக்கிறீர்களா? அல்லது
கனவிலாவது உங்கள் தகப்பன்களை
எதிர்த்து வாதம் செய்திருக்கிறீர்களா?

கசையடி என்கிறேனே, அதன் வலியை
உங்களால் உணரமுடிகிறதா? ஒருவேளை
உங்களைவிட வலியவர்கள் உங்களை வதைக்கும்
போது அந்த வலியில் எங்களை கண்டதுண்டா?

பொதுக்குளத்தில் நீர் அருந்திய குற்றத்திற்கு
உங்கள் கைகள் வெட்டப்ட்டதுண்டா? பொது
சாலையில் செருப்பு அணிந்து சென்றமைக்கு
உங்கள் கால்கள் துண்டிக்கபட்டதுண்டா?

கையளவு அறையில் கால்நீட்டி படுக்க
முடியாமல் அவதிப் பட்டதுண்டா? - பலரும்
சூழ்ந்து நிற்க, நீங்கள் அமர்ந்த நாற்காலியில் இருந்து
எழச்சொல்லி துன்புறுத்திய அவமதிப்பின் வலியை
உணர முடிகிறதா?

வயது முதிர்ந்த உங்கள் தந்தையை,
வயது இளைய சிறுவன் பெயர்சொல்லி
ஒருமையில் அழைக்கும்போது உண்டாகும்
வேதனையை எண்ணிப் பார்க்க முடிகிறதா?

சாணிப்பாலின் சுவையை எண்ணிப்பார்க்க
முடிகிறதா? - மனித மலத்தின் சுவையை
கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

மேற்சொன்ன எதிலும் நீங்கள் பங்கெடுக்கவில்லை;
எண்ணியதில்லை, வருத்தப்படவில்லை;
கோபப்படவில்லை; உணரவில்லை என்கிறபோது
இந்த இழிவுகளுக்கெல்லாம் பெயர்தான் சாதி
என்கிறபோது...

சாக்கடையிலும் அசுத்தமான சாதி அமைப்பினால்
நாங்கள் துன்பட்டிருக்கிறோம் என்கிறபோது,
அந்த அமைப்பை உடைத்தெறிவோம் என்று
சொல்லும் போது மட்டும் "என்ன மசுருக்குடா"...
உங்களுக்கு கோபம் வரவேண்டும்?

நல்லிணக்கம் என்பதே நச்சு சொல் ..!

எல்லாவற்றையும் மறந்து விடுவோம்;
சகோதரத்துவத்துடன் பழகுவோம்,
சமத்துவமாய் வாழ்வோம்,
நல்லிணக்கத்தைப் பேணுவோம் !

ஊர்த்தெருவில் இருந்து வந்து, 
வாய் இனிக்க இனிக்க இப்படித்தான்
பேசினான் அவன்...

என்னையாடா... நல்லிணக்கத்திற்கு
அழைத்தாய்; கொஞ்சம் பொறு...
அதற்கு முன்...

பாய்ந்து வந்த கல்லுக்கும்,
பட்டென்று சிதறிய கண்ணாடிக்கும்
நல்லிணக்கம் பேச முடியுமா?

அடித்த கைகளுக்கும்,
அழுது சிவந்த கண்களுக்கும்
நல்லிணக்கம் பேச முடியுமா?

கிழிந்த இதயத்துக்கும்
கிழித்த ஈட்டிக்கும்
நல்லிணக்கம் பேச முடியுமா?

கொளுத்தப்பட்ட சேரியில்
இன்னும் குழந்தை கூட
சிரிக்கவில்லை அதற்குள்
நல்லிணக்கமா?

எப்படி???

சிவந்த கண்களோடு
கிழிந்த இதயத்தோடு,
பசித்த உடல்களோடு
இரண்டகத்தின் வலிகளோடு
அவதூறுகளை நெஞ்சில்
சுமந்து கொண்டு, அவமானங்களால்
அனுதினமும் நொந்துகொண்டு...
அத்தனையும் மறந்துவிட்டு
உம்மோடு கரம் பற்றவேண்டுமா?

அழுகின்ற எங்கள் கண்களை
துடைக்க உன்னிடம் என்ன இருக்கு?
கிழிந்த இதயத்திற்கு மருந்திட
உன்னிடம் என்ன இருக்கு?

கொளுத்தப்பட்ட சேரியின் கோர
வடிவை கண்டு கதறி அழும் எங்களை
ஆற்றுப்படுத்த உன்னிடம் என்ன இருக்கு?
எல்ல்லாவற்றிற்கும் மேலாக சமத்துவம்
பேச உனக்கு என்ன யோக்கிதை இருக்கு?

இன்றைக்கு நல்லிணக்கம் என்பது
நாளைக்கு நயவஞ்சமாய் மாறாது
என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கு?

இன்றைக்கு புரிந்துணர்வு என்பது
நாளைக்கு பச்ச துரோகமாய் மாறாது
என்பதை உன்னால் எப்படி உறுதியாய்
சொல்ல முடியும்?

நம்பிக்கை என்பாயா?
காந்தியை நம்பினோம்; காந்தி
பூமி என்று சொல்லும் இந்த தேசத்தை
நம்பினோம்..இரண்டகத்தை தவிர வேறேதும்
மிஞ்சவில்லை; இழிவுகளை சுமந்து
அவமதிப்புகளில் உழன்று, உழன்று நம்பிக்கை
என்பதையே இழந்துவிட்டோம் !

நல்லிணக்கம் என்பதே நச்சு சொல்
என்பதை உணர்ந்துகொண்டோம் !

சாதிகளுக்குள் நல்லிணக்கம்
உண்டாக்க முடியாது; வேண்டுமானால்
மனிதர்களுக்குள் நல்லிணக்கம்
உண்டாகலாம்; அதற்கு நீங்கள்
மனிதர்களாய் மாற வேண்டும்;
எங்களை மனிதர்களாய் மதிக்க வேண்டும் !

சாதி உடையாமல்...
இங்கே நல்லிணக்கமும் இல்லை;
உங்களிடம் நல்ல மனமும் இல்லை !

சாதி உடையாமல்...
இங்கே சமத்துவமும் இல்லை;
எங்களிடம் சமாதானமும் இல்லை !